பிரும்மாண்ட புராணம்

ப்ரும்மாண்ட புராணம், வாயு தேவனால், நைமிசாரண்யத்தில் பல ரிஷிகளுக்குக் கூறப்பட்ட புராணம். இதை வியாசரிடமிருந்து அறிந்த லோமஹர்ஷணர், த்ருஷத்வதி நதிக்கரையில் ஒரு யாகத் திற்காக கூடியிருந்த ரிஷிகளுக்குக் கூறினார்.

மற்ற புராணங்களைப் போல் ப்ரும்மாண்ட புராணமும் படைப்பு பற்றி விவரமாகக் கூறுகிறது. யுக தர்மங்கள், யோகம் போன்றவையும் எடுத்துச் சொல்லப்படுகின்றன. இது தவிர, இறப்பைக் குறித்துக் காட்டுகிற சகுனங்களும் சுட்டிக்காட்டப் படுகின்றன. சூரிய கிரணங்களை பார்க்க முடியாதது; மணலில் பதிக்கப்படுகிற கால்சுவடு முழுமையாக இல்லாதது; வானத்தில் மேகங்கள் இல்லாதபோது, தென் திசையில் வானவில்லையோ, மின்னலையோ காண்பது; தலை இல்லாத பிரதிபிம்பத்தை பார்ப்பது; மணலில் கழுத்தளவிற்கு புதைந்து விட்டது போல் காண்பது; எண்ணெய் விளக்கு அணைகிறபோது உண்டாகிற வாசனையை உணராமல் போவது; கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருப்பது; நாக்கு கருப்பு நிறமாகிக் கொண்டு வருவது; ஆடிப்பாடிக் கொண்டு, தென்திசையை நோக்கிச் சொல்வது போலக் கனவு காண்பதுபோன்றவை, சம்பந்தப்பட்டவனுக்கு விரை வில் மரணம் சம்பவிக்கும் என்பதைக் காட்டுகிற அறிகுறிகள். வெவ்வேறு தேவர்கள் வசிக்கிற இடங்களை இப்புராணம் பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் கைலாசம் சிறப்பான ஒரு இடத்தைப் பெறுகிறது. இது தவிர பூகோளத்தில், பாரதவர்ஷம் பற்றிய சிறப்பு எடுத்துச் சொல்லப்படுகிறது. (‘வர்ஷஎன்ற சொல்லிற்கு, பல அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ஒன்று : ‘உலகின் ஒரு பகுதி அல்லதுகண்டம்‘. பாரதவர்ஷம் என்றால் பாரத தேசம். இது பரத மன்னனின் சிறப்புக்களை ஒட்டி வந்த பெயர்.)

பாரதவர்ஷம் பற்றி ரிஷிகளுக்கு விவரித்த லோமஹர்ஷணர், அதற்கு வடக்கில் இமயமலையும், தெற்கில் கடலும் எல்லைகள் என்று குறிப்பிட்டார். இதில் வாழ்கிற மக்கள்பாரதிகள். மற்ற பகுதிகளில் இதுதான் மனிதன் செய்ய வேண்டிய தேவ, பித்ரு காரியங்கள் என்ற கர்மம் (செயல்பாடு) விதிக்கப்படவில்லை. ஆனால் பாரதவர்ஷத்திற்கு இந்த செயல்பாடு விதிக்கப் பட்டிருக்கிறது. அதனால்தான் இது கர்ம பூமியாகிறது; இது இன்பங்களை நுகரும் போகபூமி அல்ல; கர்மங்களை நிறை வேற்றுகிற கர்ம பூமி. அதனால் இது புண்ணிய பூமியாகிறது. நற்கரு மங்களைச் செய்வதற்கு இந்த பூமியே அருகதை பெற்றிருக்கிறது.

இந்த பாரதவர்ஷம், ஒன்பது பகுதிகளைக் கொண்டது. பாரத வர்ஷத்திற்கு அப்பால் இருக்கிறவர்கள், வேதங்களை நம்பாத வர்கள்.

அறம்,பொருள், இன்பம்,வீடு (தர்மஅர்த்தகாமமோக்ஷ பாதைகள்) ஆகிய பாதைகளில் செல்வதை லட்சியமாகக் கொண் டுள்ள மக்கள், பாரதவர்ஷத்தில் வாழ்கிறார்கள். பாரதவர்ஷத்தின் ஒன்பது பிரதேசங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிற அரசன், ‘சாம்ராட்என்று அழைக்கப்படுகிறான்.

பாரதவர்ஷத்தில் ஏழு முக்கியமான மலைத் தொடர்கள் இருக்கின்றன. இந்த தேசத்தில் பல நதிகள் பாய்ந்தோடுகின்றன. (பல நதிகள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அவற்றில் கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகியவையும் இடம் பெறு கின்றன.) இந்த நதிகள் எல்லாமே புனிதமானவை. கங்கை மட்டுமல்லாமல், வை எல்லாமே பாபத்தைப் போக்கக்

கூடியவை. இந்த தேசத்தில் பல அரசர்கள் ஆள்கிற பிரதேசங்கள் இருக் கின்றன.(அதாவது தேசம் பிரிக்கப்பட்டது ஒன்பது பகுதியானா லும், அதில் ஆள்கின்ற அரசர்களுக்குட்பட்டவை என்று குறிப் பிடப்படுகிற பிரதேசங்கள் அதிகமானவை. இந்த அரசுகளின் பட்டியலில் பாண்டிய மன்னனால் ஆளப்படுகிற பிரதேசமும் குறிப்பிடப்படுகிறது.)

இவ்வாறு பாரத தேசத்தை வர்ணித்து விட்டு, இப்புராணம், பூமிக்குக் கீழே உள்ள இடங்களின் பெயர்களைக் கூறுகிறது. அதல், ஸுதல, நிதல, கபஸ்தல, மஹாதல, சீதல, பாதாளம் ஆகியவை பூமிக்குக் கீழே இருக்கிற ஏழு உலகங்கள்; இவற்றிற்கு மொத்த மாக பாதாளம் என்ற பெயர் வழங்குகிறது. பூமிக்கு மேலே இருப்பவை : புவர் லோகம்; ஸுவர் லோகம்; மஹர் லோகம்; ஜன லோகம்; தப லோகம்; ஸத்ய லோகம் ஆகியவை.

இது போன்ற விவரங்களையும், காலக் கணக்குகளையும்,வான சாஸ்திர விளக்கங்களையும் கூறுகிற ப்ரும்மாண்ட புராணம் மற்ற பல புராணங்களில் காணப்படுகிற நிகழ்ச்சிகள் பலவற்றையும் வர்ணிக்கிறது. சிவனின் மேன்மையை விஷ்ணுவிடமிருந்து ப்ரும்ம தேவன் உணர்ந்து கொண்டது; தக்ஷனின் யாகத்தை சிவன் அழித்தது; பாற்கடல் கடையப்பட்டபோது தோன்றிய விஷத்தை அருந்தி, நீல நிறமாகி விட்ட கழுத்துடன், சிவன் நீலகண்டன் என்ற பெயரைப் பெற்றதுபோன்றவையெல்லாம், இப்புராணத் திலும் இடம் பெறுகின்றன.

இவற்றைச் சொல்லி, ப்ருது மன்னனின் வரலாற்றையும், அவன் பூமியை செழிக்கச் செய்த விவரத்தையும் கூறி, முற்றுப் பெறுகிறது ப்ரும்மாண்ட புராணம்.