ஸ்ரீமத் பாகவதம் – 9

அஜாமிளன் என்ற ஒரு அந்தணன் பற்றிய வரலாற்றை, பாகவதம் அடுத்து கூறுகிறது.

சுகர் கூறினார்: ‘ஒருவன், தான் செய்த பாவங்களை இந்த ஜன்மத்தில் கழிக்கா விட்டால், அடுத்த பிறவியில் அதன் விளைவு கள் அவனை வந்தடையும். ஆகையால் தன் பாவங்களை நினைத்து வருந்தி, தன்னை திருத்திக் கொண்டு வாழ இந்த ஜன்மத்திலேயே ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும். அறியாமையினால் தான் தீய எண்ணங்கள் தோன்றுகின்றன; தீய செயல்கள் விளை கின்றன. ஞானமே தீ போன்றது; அந்த ஞானத் தீ, அறியாமை யையும், அதன் விளைவுகளான தீமைகளையும் பொசுக்க வல்லது. மனதைக் கட்டுப்படுத்தி, உண்மை பிசகாமல் வாழ்வதுதான், ஞானத்தை அடைவதற்கு வழி.

தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள ஒருவனுக்கு இருக்கிற வழிபகவானிடம் பக்தி செலுத்துவது. பகவானிடம் பக்தி செலுத்தத் தொடங்கினால் அது சூரியன் போல பிரகாசிக் கிறது; பாவங்களும், தீமைகளும், அறியாமையும் அதன் முன் பனித் துளிகள் போல் மறைகின்றன. ஒருவன் பாபியாக இருந்தாலும் கூட, பகவானை சரணடைகிறபோது, அவன் தூய்மையடைகிறான்‘.

இவ்வாறு கூறிய சுகர், இந்த உண்மையை விளக்குகிற அஜாமிளன் கதையை விவரித்தார் அஜாமிளன் ஒரு அந்தணன். இவன் நல்லவனாகவும், பக்தியுடையவனாகவும் திகழ்ந்தான். சாத்திரங்களைக் கற்றறிந்தான்; தன்னை அடக்கி வாழ்ந்தான்; உண்மை தவறாதவனாகத் திகழ்ந் தான்; எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனாக விளங்கினான்.

இப்படி நற்குணங்கள் பலவற்றைப் பெற்றிருந்த அஜாமிளன், ஒருமுறை, பூஜைக்கான மலர்களையும் இலைகளையும் எடுத்து வரும் நோக்கத்துடன் காட்டிற்குச் சென்றான். அங்கே ஒரு பெண்ணைக் கண்டான். அவன் சித்தம் கலங்கியது. தன் மனைவியை மறந்து, அந்தப் பெண்ணின் பின்னால் சென்று, அவளைத் திருப்தி செய்வதே லட்சியம் எனக் கொண்டு, காம வெறி பிடித்து, வீடு, மகன்கள், சொத்து எல்லாவற்றையும் நாசம் செய்தான்.

செல்வம் பறிபோன நிலையில், நேர்மையற்ற வழிகளை நாடி பணம் சம்பாதிக்கவும் அவன் முற்பட்டான். பாவங்களைப் புரிந்து, உண்மையைப் புறக்கணித்து, தீய வழிகளில் சென்று, இறுதி யில் மரணப் படுக்கையில் அவன் வீழ்ந்தான். அப்போது, எமதர்மனின் கிங்கரர்கள் மூவர் அவன் உயிரைப் பறிக்க வந்தனர். அவர்களுடைய தோற்றம், அஜாமிளனுக்குத் தெரியவே, அவன் பயந்து போய் அலறினான்.

தன்னுடைய கடைசி மகன் நாராயணன் நினைவு அவனுக்கு வரவே, ‘நாராயணாஎன்று கதறி அவனை அழைத்தான். (அப்படி அழைத்தபோது, அவனுக்கு பகவான் நாராயணன் நினைவு வந்தது; அவருடைய பாதத்தில் அவன் மனம் லயித்ததுஎன்று ஒரு சில விளக்கங்கள் கூறுகின்றன.)

அந்த நிலையில், மஹாவிஷ்ணுவின் தூதர்கள் அவன் கண் களுக்குக் காட்சியளித்தனர். எமதர்மனின் கிங்கரர்களை இவர்கள் தடுக்கவே, அந்த கிங்கரர்கள், ‘விதி தனது பாதையில் செல்கிறது; அதை ஏன் தடுக்க முற்படுகிறீர்கள்? வினை விதைத்தவன் வினை அறுப்பான். ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களில், ஒவ் வொரு மனிதனிடம், ஒவ்வொரு குணம் மேலோங்கி நிற்கிறது. ஆகையால் உலகில், மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஸத்வ குணம் மேலோங்கியிருப்பவர்கள்அமைதியும், நிதானமும் உடையவர்களாகவும்; ரஜோ குணம் மேலோங்கி இருப் பவர்கள்அகங்காரமும், சக்தியும் உடையவர்களாகவும்; தமோ குணம் மேலோங்கியவர்கள்மூடர்களாகவும், சோம்பல் மிக்க வர்களாகவும் விளங்குகிறார்கள். இப்படி முவ்வகைப்பட்ட மனிதர் கள், தங்கள் செய்கைகளுக்கேற்ப அடுத்த பிறவியை அடைகிறார். கள். ஆக, இந்தப் பிறவியிலேயே, முற்பிறவியின் லட்சணமும், அடுத்த பிறவியின் நிலையும் தெளிவாகத் தெரிந்து விடும்.’

எம கிங்கரர்கள் தொடர்ந்தார்கள் : ‘அறியாமையினால் சூழப்பட்டவன், இப்பிறவியை மட்டுமே காண்கிறான். முற்பிறவி பற்றியோ, அடுத்த பிறவி பற்றியோ அவன் சிந்திப்பதில்லை. ஆனால் மனிதன் வெறும் சரீரம் மட்டும் அல்ல; அவனுடைய செயல்கள் அனைத்தும், அவனுடைய ஜீவன் மீது பதிகின்றன; இவை அவனுடைய செயல்களை பாதிக்கின்றன; அந்த செயல்கள், அவனுடைய அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றன….

நாங்கள் எமதூதர்கள். தர்மராஜனாகிய எமன், எல்லா ஜீவராசி களின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்தவர். தர்மராஜனின் சட்டம், இறைவனால்தான் நிர்ணயிக்கப் படுகிறது. அந்த சட்டத்தை நிறைவேற்ற வந்தவர்கள் நாங்கள். இங்கே உள்ள இந்த மனிதன், அந்த விதிக்கு உட்பட்டு, தனக்கு நேர்வதை ஏற்க வேண்டியவனாகிறான்

இந்த அஜாமிளன் முதலில் நற்குணம் நிரம்பியவனாகவும், நற்செயல்கள் புரிபவனாகவும் இருந்தான். பின்னர் தீய வழிகளை மேற்கொண்டான். இந்த தீய பாதையில், பல வருடங்களை கழித்து விட்ட இவன், தர்மராஜனின் முன் நிறுத்தப்பட்டு, அவரால் தண் டிக்கப்படுவான். அதுவே இவனுடைய பாவச் சுமையைக் குறைக்கும்.

இவ்வாறு கூறிய எமதூதர்களைப் பார்த்து, மஹாவிஷ்ணுவின் தூதர்கள் பேசத் தொடங்கினார்கள்: ‘இவன் இப்போது சாகும் தருவாயில், பகவானின் நாமத்தை உச்சரித்ததால், இவனுடைய பாவங்கள் அகன்று விட்டன. மிகப் பெரிய பாவமானாலும் கூட, பகவான் நாம உச்சரிப்பு, அந்த பாவத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றி விடும். மனம் தீய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தீச்செயல்களுக்கான பிராயச்சித்தம் எந்தப் பலனையும் தராது. ஆனால் பகவானின் நாம உச்சரிப்போ, எல்லா பாவங்களையும் அழிக்க வல்லது. இந்த மனிதன், பகவானின் நாமத்தை உச்சரித்து, தனது பாவங்களிலிருந்து விடுபட்டவனாகத் திகழ்கிறான். ஆகை யால், உங்களுக்கு அவனிடம் எந்த அதிகாரமும் இல்லை

பாவங்களைப் பொறுத்தவரையில்அறிந்தோ அறியாமலோ சொல்லப்படுகிற பகவானின் நாமம், நெருப்பு போன்றது; தெரியாமல் பட்டாலும், தெரிந்து பட்டாலும் தீ பொசுக்குவது போல, பகவானின் நாம உச்சரிப்பு, பாவங்களைப் பொசுக்கும். முனைப்பு இல்லாமல் உட்கொண்டாலும், சக்தி வாய்ந்த மருந்து, அதன் வலிமையை உணராதவனுக்குக் கூட வியாதியை குணப் படுத்துவது போல, பகவானின் நாம உச்சரிப்பு, அதன் பெரு மையை முழுமையாக உணராதவனுக்குக் கூட நன்மையைச் செய்கிறது. ஆகையால் உங்கள் அதிகாரம் இவனிடம் செல்லாது‘.

இவ்விதம் சொல்லி மஹாவிஷ்ணுவின் தூதர்களினால் தடுக்கப் பட்ட தர்மராஜனாகிய எமதர்மனின் தூதர்கள், அஜாமிளனை விட்டு அகன்றனர்.

பின்னர் அஜாமிளன், தனது வாழ்க்கை தவறான பாதையில் சென்றது என்பதை உணர்ந்து, மனம் வருந்தி, எல்லாவற்றையும் துறந்து, இந்த்ரியங்களை வென்று தவம் செய்து, இறைவனடி சேர்ந்தான்.

(இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு கேள்வி எழலாம்: சாகும் தருவாயில்நாராயணாஎன்றால், எல்லா பாவங்களும் அகலும் என்றால்சாகும் தருவாயை நெருங்குகிற வரையில் இஷ்டப்படி மனம் போன போக்கில் வாழ்ந்து, பாவம் அது இது என்று பார்க்காமல், பல சுகங்களை அனுபவித்து, பின்னர் சாகும் தருவாயில்நாரா யணாஎன்று சொல்லி, எல்லா பாவத்தையும் பொசுக்கிக் கொண்டு விடலாமே?

இந்தக் கேள்வி, நம்பிக்கை உடையவர்களை வாட்ட வேண்டிய அவசியம் இல்லை. அஜாமிளன் எப்போதுமே தீயவனாக இருக்கவில்லை; நற்காரியங்கள் செய்து, சாத்திரங்களை அறிந்து, தன்னை அடக்கி, உண்மையைக் கடைப்பிடித்து, எல்லோரையும் சமமாக மதித்து வாழ்ந்தவன்தான் அவன்; பின்னர் அவன் பாதை மாறினாலும், முதலில் அவன் சென்றது சரியான பாதையே. அதனால்தான் இறுதி காலத்தில் அவன் வாய்நாராயணாஎன்ற நாமத்தை, அவனையும் அறியாமல் கூறியது.

அவனுடைய முந்தைய வாழ்க்கை சரியாக அமைந்திருக்க வில்லை என்றால், இறுதி நேரத்தில் அவன் வாயில் இந்தச் சொல் வந்திருக்குமோ, வந்திருக்காதோ! கடைசி மகனின் நினைவு வரா மல், அதற்கு முன் பிறந்த மகன்களில் ஒருவன் பெயரை அவன் சொல்லி இருக்கலாம். அதுகூட இல்லையென்றால், பயத்தில்ஐயோஎன்று கூறியிருக்கலாம். இப்படியெல்லாம் நேராமல், ”நாராயணாஎன்று அவன் அழைக்க நேர்ந்ததற்குக் காரணமே கூட, அவன் முதலில் வாழ்ந்த நல்வாழ்க்கையும், அவன் செய்த நற் காரியங்களும்தான்.

இது தவிர, பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிற மருந்து உதா ரணத்தை கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். அதன் வலிமையை உணராதவனுக்கும் கூட, மருந்து நன்மை செய்யும்; வியாதி குணமாகும். ஆனால் ஒருவன் தனது உடலை மிகவும் பாழ்படுத்தி வைத்திருந்தால், அவனுக்கு எந்த மருந்தும், ஒரு நன்மையும் செய்யாது அல்லவா? அவனுடையசிஸ்டம்அந்த மருந்தைரிஜக்ட்செய்து விடும். அதே போல, நல்லதை எல்லாம் அறவே ஒதுக்கி, தீய வாழ்க்கை மட்டுமே வாழ்ந்தவனுக்கும்பகவானின் நாம உச்சரிப்பு, வாயில் வரவே செய்யாது!

ஐயோ.. முடியலையேஎன்றாவது, ஏதாவது முனகலையாவது வெளிப்படுத்த நேருமே தவிர, பகவானின் நாமத்தை உச்சரிக்க மாட்டோம். அதைச் சொல்வதற்கு, ஏற்கெனவே அந்தப் பாதையில் நாம் சென்றிருக்க வேண்டும். அஜாமிளன் கதையை இப்படித்தான் அணுக வேண்டும் என்பது என் கருத்து.)

மஹாவிஷ்ணுவின் தூதர்களால் தங்களுடைய காரியம் தடுக்கப்பட்டபோது, எமதூதர்கள் தர்மராஜனை அணுகி, நடந்த விவரங்களை அவனிடம் தெரிவித்தனர். செயலுக்கேற்ற தண் டனையை ஒவ்வொரு மனிதனுக்கும் அளிப்பது எமதர்மனே எனும்போது, மஹாவிஷ்ணுவின் தூதர்கள் அதில் குறுக்கிட்டது, எமதூதர்களின் மனதைக் குழப்பியிருந்தது.

பூவுலகில், தான் செய்த காரியங்களுக்கு ஏற்ற வினைகளை ஒரு மனிதன் சந்திக்குமாறு செய்யும் அதிகாரம் எத்தனை பேரிடம் இருக்கிறது? தண்டனையை அளிப்பவர்கள் பலர் இருந்தால், அவர்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் தன் செயலுக்கேற்ற தண்டனையை எந்த மனிதனும் சந்திக்காத நிலை ஏற்பட்டுவிடக் கூடுமே?’ என்று அந்த கிங்கரர்கள், எமதர்மனிடம்

கேட்டனர்.

தர்மராஜன் விளக்கம் அளித்தான்: ‘மூக்கணாங்கயிறு போடப் பட்ட காளை, அதனுடைய சொந்தக்காரனுக்கு அடங்கி நடப்பது போல, இவ்வுலகம் பகவானுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. அவருடைய அம்சங்களாகிய ப்ரும்மதேவன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோர் படைப்பது, காப்பது, அழிப்பது ஆகியவற்றை செய் கிறார்கள். ப்ரும்மதேவன், நாரதர், மஹாதேவன், ஸனத்குமாரர், கபிலர், மனு, ப்ரஹலாதர், ஜனகர், பீஷ்மர், பலி, சுகர், மற்றும் நான் ஆகிய பன்னிரண்டு பேர் மட்டுமே அந்த நாராயணன் பற்றி, பாகவத தர்மம், பற்றி முழுமையாக அறிவோம். அவருடைய நாம உச்சரிப்பே, பூ உலகில் மனிதர்களுக்கு மிகவும் மேலான தர்மம்.

தர்மராஜன் மேலும் கூறினான்: ‘பகவான் நாராயணனின் நாமத்தைச் சொல்பவர்கள், அவரைச் சரணம் அடைந்தவர்கள், எல்லோரிடமும் சமப்பார்வை உடையவர்கள்ஆகியோரிடம் நீங்கள் செல்லாதீர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்க, நமக்கு சக்தியில்லை. எவர்கள், பகவானின் நாமத்தைக் கூறுவதில்லையோ, எவர்களுடைய தலைகள் பகவானை வணங்கவில்லையோ, அவர் களை தண்டனைக்காக இங்கே கொண்டு வாருங்கள்.

இவ்வாறு எமதர்மன் கூறியதைக் கேட்ட எமதூதர்கள்,நாராய ணனை வணங்கி நிற்பவர்களிடம் இனி அண்டுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டனர்.

இந்த வரலாற்றை, அகஸ்தியர் மூலமாக நான் அறிந்து கொண்டேன்என்று கூறி முடித்து, பரீக்ஷித்திற்கு, நாம உச்சரிப்பின் மேன்மையை விளக்கி சுகர் சொன்னதை பல மஹரிஷிகளுக்கு ஸுதர் எடுத்துரைத்தார்.