பிரஹலாதன் சரித்திரம், கஜேந்திர மோக்ஷம், பாற்கடல்
கடையப்பட்டபோது நிகழ்ந்த சம்பவங்கள், வாமனாவதார நிகழ்ச்சிகள்… என்று பல விவரங்களைக் கூறிய ஸுதர், அம்பரீஷன் என்ற மன்னனைப் பற்றிய வரலாற்றை, ரிஷிகளுக்கு எடுத் துரைத்தார்.
அம்பரீஷன், தன்னுடைய அரசு பதவி, படைகள், செல்வம் போன்றவற்றை எல்லாம் துச்சமாக எண்ணினான். இவை யாவும் நிரந்தரமற்றவை என்ற உணர்வு அவன் மனதை விட்டு அகல வில்லையாதலால், அவன் எப்போதும் பகவானையே நினைத் திருந்தான். தான் செய்கிற காரியங்கள் அனைத்தும், பகவானுக்கே அர்ப்பணம் என்று நினைத்து அரசு காரியங்களை கவனித்தான்.
இந்த நிலையில், அம்பரீஷன், துவாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்தான். அப்போது துர்வாஸ முனிவர் அவனுக்கு விருந்தாளியாக வந்தார். அவரை முறையாக உபசரித்த அம்பரீஷனின் வேண்டு கோளுக்கு இணங்க, அவனுடைய அரண்மனையிலேயே சாப் பிடுவதற்கு அவர் இசைந்தார். தான் செய்ய வேண்டிய பிற்பகல் கடமைகளை செய்வதற்காக, யமுனை நதிக்கரைக்குச் சென்று வருவதாகவும், திரும்பி வந்த பிறகு, உணவு உட்கொள்வதாகவும் கூறி, துர்வாஸர் புறப்பட்டுச் சென்றார். அரண்மனையில், துவாதசி விரதத்தை முறையாக முடிக்க வேண்டிய நேரம். நெருங்கி வருவதைப் பார்த்த மன்னன், மனக்குழப்பம் அடைந்தான். முறையாக ஏதாவது உட்கொண்டு, விரதத்தை உரிய நேரத்தில் முடிக்கவில்லை என்றால், தோஷம் நேரிடும் என்பதை பண்டிதர்கள் அவனுக்குச் சுட்டிக் காட்டி னார்கள். ஆனால் விருந்தாளியாக வந்து, உணவு உட்கொள்ள சம்மதித்து, நதிக்கரைக்குச் சென்றிருந்த துர்வாஸர் உணவு உட் கொள்வதற்கு முன்பாக, தான் சாப்பிட்டால், அது அதிதியை அவ மதித்த குற்றமாகுமே – என்று நினைத்து அம்பரீஷன் குழம்பினான்.
அப்போது, தண்ணீர் குடிப்பதை ஆகாரம் உட்கொள்வதாகவும் நினைக்கலாம்; தண்ணீர் ஒரு ஆகாரமாகாது என்றும் கூறலாம். ஆகையால், இப்போது மன்னன் தண்ணீர் குடித்து விட்டால், துவாதசி விரதத்தை முடித்ததாகவும் இருக்கும்; அதிதியாகிய துர்வாஸர் சாப்பிடுவதற்கு முன்பாக, மன்னர் சாப்பிட்டு விட்ட தாகவும் ஆகாது‘ என்ற யோசனை கூறப்பட்டது. இதை ஏற்று மன்னன் நீர் அருந்திவிட்டு, துர்வாஸரின் வருகைக்காக காத் திருந்தான்.
தனது சடங்குகளை முடித்து விட்டு திரும்பிய துர்வாஸர். நடந்ததை யாரும் கூறாமலே, அறிந்து கொண்டார். அவர் முகம் கோபத்தினால் சிவந்தது. புருவங்கள் நெறிந்தன. ‘தனது செல் வத்தினாலும், ஆட்சியினாலும் மமதை கொண்ட இந்த மன்னனின் தர்ம விரோதமான செயலை எல்லோரும் பாருங்கள்! வீட்டிற்கு வந்த அதிதியை (விருந்தாளியை) முதலில் வரவேற்று, உணவு உட்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுவிட்டு – பின்னர், அந்த அதிதிக்கு முன்பாகவே தான் சாப்பிட்டு விட்டு நிற்கிற இவர், தர்மத்திற்கு விரோதமான இந்த செயலின் பலனை இப்போது அனுபவிக்கட்டும்‘ என்று கூறி துர்வாஸர், தனது தவ வலிமை யினால், ஒரு பூதத்தை உருவாக்கினார். பயங்கரமான அந்த பூதம், கையில் ஒரு பெரிய கத்தியை ஏந்தி, அரசனை நோக்கி பாய்ந்து வந்தது. ஆனால் மன்னன் அம்பரீஷனோ, அசையாமல் அமர்ந் திருந்தான். அம்பரீஷனுக்கு, அவனுடைய பக்தியை மெச்சி ஏற்கெனவே மஹாவிஷ்ணு, தனது சக்ராயுதத்தை அளித்திருந்தார். இப்போது அந்த சக்ராயுதம், துர்வாஸரால் சிருஷ்டிக்கப்பட்ட பூதத்தை எரித்து விட்டது. அதோடு நில்லாமல், சக்ராயுதம் துர்வாஸரையே நோக்கி பாய்ந்தது. அவர் அச்சமுற்று ஓடத் தொடங்கினார். சக்ராயுதம் அவரைத் துரத்தியது. போகுமிடம் தெரியாமல் பல களை துர்வாஸர் கடந்து சென்றாலும், சக்ராயுதம் அவரை விடாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. வேறு வழியின்றி, துர்வாசர் ப்ரும்மதேவனை சென்றடைந்து, ‘என்னைக் காப்பாற்று‘ என்று வேண்டிக் கொண்டார்.
இடங்
ப்ரும்மதேவன் கூறினான்: ‘என்னுடைய இந்த ஸ்தானம், மஹாவிஷ்ணுவின் புருவம் நெறிகிறபோது மறைந்து விடும். நானும் சரி, மஹாதேவனும் சரி, அவருடைய உத்திரவுக்குக் கீழ்ப் படிந்துதான், உலகத்திற்கு வேண்டிய காரியங்களைச் செய்து வருகிறோம். அப்படியிருக்க, விஷ்ணு பக்தனுக்கு எதிராக நின்று, உம்மைக் காப்பாற்றக் கூடிய சக்தி எனக்கில்லை‘.
இவ்வாறு ப்ரும்மதேவன் கைவிரித்தவுடன், துர்வாஸர், சிவனை சரணடைந்தார். ‘விஷ்ணுவின் மாயையை, நானோ, ப்ரும்மதேவனோ அறிந்தவர்கள் அல்ல. அவருடைய சக்கரம், எங்க ளால் தடுக்கப்படக் கூடியதும் அல்ல. ஆகவே நீர் விஷ்ணுவிடம் சென்று, அவரை சரணடையுங்கள். அவர் உமக்கு நன்மையைச் செய்வார்‘ என்று கூறி சிவன், துர்வாஸரை மஹாவிஷ்ணு விடம் அனுப்பினார்.
–
துர்வாஸர் விஷ்ணுவை சரணடைந்து ‘என்னால் உ உங்களுடைய பக்தனுக்கு துக்கம் நேரிட்டது. அந்தத் தவறைச் செய்ததற்காக என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ, அதைச் செய்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்‘ என்று வேண்டிக் கொண்டார்.
மஹாவிஷ்ணு, பக்தர்களின் வசமாகி விட்ட மனதை உடைய வன் நான். ஆகையால் பக்தர்கள் விஷயத்தில் நான் சுதந்திரமாக இயங்கக் கூடியவன் அல்ல. மேலும், எந்த பக்தர்கள் தன்னுடைய மனைவி, மக்கள், செல்வம், மற்ற பல சுகங்கள் எல்லாவற்றையும் அலட்சியமாக எண்ணி, என்னை சரண் எய்துகிறார்களோ, அவர்களை விட்டு நான் விலகுவதில்லை. அவர்கள், என்னை தங்களுடைய வசமாக்கிக் கொண்டவர்கள்.
ஒருவன் செய்த தவமும், பெற்ற கல்வியும், அவன் தன் னடக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறபோது, அவனுக்கே தீங்கு இழைக்கின்றன. ஸாதுவான ஒரு மனிதன் மீது செலுத்தப்படுகிற தவ ஒளி, செலுத்தியவனையே வந்து பீடிக்கும். இந்த நிலையில், உமக்கு நான் காட்டக் கூடியது, ஒரே ஒரு வழிதான். யாரிடமிருந்து உமக்கு இந்த சோதனை உண்டாகியிருக்கிறதோ, அவனையே நாடுங்கள்.
‘ஆம்! நீங்கள் இந்த ஆபத்திலிருந்து உம்மைக் காப்பாற்றிக் கொள்ள, அம்பரீஷனையே தான் நாட வேண்டும். அவன் உங்க ளுக்கு நன்மையைச் செய்வான்‘ என்று கூறினார்.
துர்வாஸர், மஹாவிஷ்ணுவின் சொல்லை ஏற்று, அம்பரீஷ மன்னனிடம் வந்து, அவன் காலைப் பிடித்துக் கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார். இதைக் கண்ட அம்பரீஷன் மிகவும் தர்மசங்கடத்திற்குள்ளானான். துர்வாஸரைப் போன்ற ஒரு தபஸ்வி, தன்னிடம் இப்படி பணிந்து நின்று, தன்னுடைய தய வைக் கோருவது, அவனுக்கு கூச்சத்தை உண்டாக்கியது. பதறிப் போன அவன், சக்ராயுதத்தை வேண்டிக் கொண்டான்.
ஸுதர்ஸனரே உமக்கு நமஸ்காரம்! மூவுலகங்களை காப்பவர் நீங்களே! எல்லா தர்மங்களுக்கும் உறைவிடம் நீங்களே! நீரே ஸத்யம். நீரே தர்மம். நீரே யாகம். உலகங்களைக் காப்பவர் நீரே…’ என்று பலவாறாக அவன் ஸுதர்ஸன சக்ரத்தை, விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு துதித்தான். இறுதியில் ‘பகவானுக்கு என் மீது அன்பு உள்ளதென்பது உண்மையானால், இந்த தபஸ்வியை பீடித்த சக்ராயுதம், இவரை விட்டு விலகட்டும்‘ என்றும் வேண்டிக் கொண்டான்.
ஸுதர்ஸன சக்கரம் ஓய்வடைந்தது. துர்வாஸர் அம்பரீஷனைப் புகழ்ந்தார். ‘பகவானிடம் பக்தி செலுத்துபவர்கள், எப்பேர்ப்பட்ட மஹிமை பொருந்தியவர்கள் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். உம்மைப் போன்ற பக்தர்களுக்கு, பகவானே அடிமையானவன் என்றால், உம்மால் செய்ய முடியாதது என்று ஏதாவது இருக்க முடியுமா?’
இவ்வாறு துர்வாஸர் கூறிய பிறகு, அவரை மேலும் உபசரித்து, முதலில் கூறியபடியே, தன் அரண்மனையில் அவர் உணவு உட்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, துர்வாஸரும் அதற்கு இணங்கி, அரசனையும் உணவு உட்கொள்ளுமாறு கூற, விருந்து விமரிசையாக நடந்தேறியது.
இவ்வளவு தீவிரமான பக்தியை உடைய அம்பரீஷன், ஒரு கட்டத்தில் தனது மகன்களிடத்தில் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு, வனத்திற்குச் சென்று, தவமிருந்து, நற்கதி அடைந்தான்‘.
(அம்பரீஷன் சரித்திரத்தில் முக்கியமாகப் பார்க்க வேண் டியது உண்மையான பக்தனுக்கு, இறைவன் எவ்வளவு மேன்மையைத் தருகிறார் என்பதுதான். இதை எல்லோரும் உணருமாறு செய்வதற்குத்தான், துர்வாஸர், பகவானால் பயன்படுத்தப்பட்டார். துர்வாஸர் போன்ற ஸர்வ வல்லமை களைப் பெற்ற தபஸ்வி கூட, ஒரு பக்தன் எதிரில் சக்தியற்றுப் போகிறார் எனும் போது, பக்தர்களின் சிறப்பு எப்பேர்ப் பட்டது என்பது எல்லோருக்குமே தெளிவாகும்.)
அம்பரீஷன் சரித்திரத்திற்குப் பின்னர், ராம சரித்திரம் கூறப் படுகிறது. அம்பரீஷன் வம்சத்தில் உதித்தவர்களைப் பற்றி சுகர், பரீக்ஷித்திற்குக் கூறுகிறபோது, த்ரிசங்கு, ஹரிச்சந்திரன், ஸகரன், திலீபன் போன்றவர்களைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். கங்கை நதியை திலீபனின் மகனாகிய பகீரதன் பூமிக்குக் கொண்டு வந்ததையும் அவர் விவரித்தார்.
இந்த வம்சத்தில் கட்வாங்கன், தீர்க்கபாகு, அவன் மகன் ரகு ஆகியோர் தோன்றியதைச் சொல்லி, ரகு வம்சம் பற்றி விவ ரங்களைச் சொன்னார். தசரதன், அவர் மகன் ராமன் என்று வம்ச விவரங்களைத் தொடர்ந்தபோது, ராமாயண நிகழ்ச்சிகளையும் சுகர் சுருக்கமாகச் சொன்னார். லவ, குசர்களை ஸீதை பெற்றெடுத்த விவரமும் சுகரால் கூறப்பட்டது. அதன் பின்னரும் கூட, அந்த பரம்பரையில் யார் யார் தோன்றி ஆட்சி புரிந்தனர் என்பதையும் சுகர் வரிசையாக விவரித்தார். இது சூரிய வம்சம்.
சந்திர வம்ச விவரங்களையும் சுகர் சொன்னார். இதில் நகுஷன், யயாதி, பூரு, துஷ்யந்தன், பரதன் என்ற பலருக்கு பின்னர் சந்தனு தோன்றியதையும், பாண்டவர்கள், துரியோதனாதிகள் ஆகியவர் களின் சரித்திரத்தையும், அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
இவற்றையெல்லாம் அடுத்து, கிருஷ்ணாவதாரம் பற்றிய விவரங்களை சுகர் சொல்லத் தொடங்கினார்.