கிருஷ்ணாவதாரத்தின் விவரங்களை எல்லாம் மிகவும் விரிவாக, பரீட்சித்திற்கு சுகர் எடுத்துரைத்தார்.
பூபாரத்தைத் தாங்க முடியாத நிலையில், பூமாதேவி, ப்ரும்மதேவனை சரண் அடைந்தாள். ப்ரும்மதேவன், மஹா விஷ்ணுவை வேண்டிக் கொள்ள, அவர் ‘வஸுதேவரின் இல்லத் தில், ஆதிசேஷனுடன், நானும் பிறவி எடுக்கப் போகிறேன். அதன் பின்னர் பூமாதேவியின் கஷ்டம் நீங்கும்‘ என்று கூறினார்.
ஆதிசேஷன், பலராமனாகவும், மஹாவிஷ்ணு கிருஷ்ணனாக வும் அவதரித்தனர். இருவருமே வஸுதேவன் புதல்வர்களாக அவதரித்தனர். வஸுதேவரின் மனைவி தேவகிக்கு கிருஷ்ண னும், அவருடைய மற்றொரு மனைவி ரோஹிணிக்கு பலராமரும் மகன்களாகப் பிறந்தனர். மற்ற பல தேவர்களை, யாதவர்களாகப் பிறக்குமாறு ப்ரும்மதேவன் ஆணையிட்டிருந்தான்; அதன்படியே யாதவ குலத்தில் பல தேவர்கள் பிறந்தனர். இவை பற்றிய விவ ரங்களை சுகர் கூறினார்.
சூரஸேனன் என்ற யாதவர் குலத் தலைவனின் மகனாகிய வஸுதேவருக்கும், தேவகிக்கும் திருமணம் நடந்து முடிந்தவுடன், தேவகியுடன் வஸுதேவர் தனது இருப்பிடத்திற்கு தேரில் புறப்பட்டார்; அப்போது தேவகியின் அண்ணனாகிய கம்ஸன் தேரோட்டினான். தேர் செல்லும் வழியில், ஓர் அசரீரி ஒலித்தது: முட்டாள் கம்ஸனே! நீ இப்போது எவளுக்குத் தேரோட்டிச் செல்கிறாயோ, அவளது எட்டாவது கர்ப்பத்தில் உதிப்பவன் உன்னைக் கொல்வான்‘
‘உடனேயே, தனது தங்கையைக் கொன்றுவிட தீர்மானித்த கம்ஸன், தனது வாளை ஓங்கினான். அவனைத் தடுத்த வஸுதேவர், தனக்கு மகன்கள் பிறக்கிறபோது, அக்குழந்தைகளை கம்ஸனிடமே கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தார். அதை ஏற்ற கம்ஸன், தேவகியையும் வஸுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகி யின் முதல் ஆறு குழந்தைகள், கம்ஸனிடம் ஒப்படைக்கப்பட்டு, அவனால் கொல்லப்பட்டன. இப்படியிருக்கையில், தேவகி ஏழாவது முறையாக கர்ப்பமுற்றாள்; அந்த கர்ப்பம், வஸு தேவரின் மற்றொரு மனைவியான ரோஹிணியை அடையும்படி செய்ய, பகவான் மாயையைப் பணித்தார். இவ்வாறு ரோஹிணிக் குப் பிறந்தவர்தான் பலராமன்; ஆதிசேஷனின் அம்சம்.
மேலும் மஹாவிஷ்ணு, யோக மாயையைப் பார்த்து, ‘நீ நந்தகோபனின் மனைவியாகிய யசோதைக்கு பிறக்கப் போகிறாய். மக்கட்பேறு, செல்வம் போன்றவற்றை விரும்புகிறவர்களுக்கு நீ ஈஸ்வரியாகத் திகழ்வாய். உன்னை மானிடர்கள் துர்க்கை, காளி, சண்டி, நாராயணி, சாரதா, அம்பிகை, பத்ரகாளி, மாயை என் றெல்லாம் அழைப்பார்கள்‘ என்றும் கூறினார்.
‘தேவகி ஏழாவது கர்ப்பமுற்று, அது ரோஹிணியிடம் மாற்றப் பட்டபோது, எல்லோரும் தேவகியின் கர்ப்பம் கலைந்து விட்டது என்றே நினைத்தனர். இந்த வகையில் கர்ப்பமுற்ற ரோஹிணி பலராமனைப் (ஆதிசேஷனின் அம்சம்) பெற்றெடுத்தாள். அதா வது, பலராமன், கிருஷ்ணருக்கு முன்பாக, வஸுதேவருக்குப் பிறந்தவர்; மூத்தவர்.
‘எட்டாவது கர்ப்பமுற்ற தேவகிக்கு சிறையில் பிறந்த கிருஷ் ணனை, வஸுதேவர் கண்டு மெய்சிலிர்த்தார். பகவான், தான் யார் என்பதை அவருக்குக் காண்பித்து, அருள்புரிந்து, ஞானத்தை உபதேசித்து, பின்னர் மீண்டும் குழந்தையாகவே மாறினார். பகவான் தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை வஸுதேவ ருக்குக் காட்டியபோது, சில கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். அதன்படி, வஸுதேவர் அந்தக் குழந்தையை (கிருஷ்ணரை) நந்தகோபனின் மனைவியாகிய யசோதைக்கு அருகில் வைத்து விட்டு, அவளுக்கு அப்போதுதான் பிறந்திருந்த பெண் சிசுவை எடுத்துக் கொண்டு சிறைக்குத் திரும்பினார். சிறைக் கதவுகள் திறப்பது முதற்கொண்டு, நதி வழிவிடுவது வரை, எல்லாம் இறைவன் ஆக்ஞைப்படி நடக்க, வஸுதேவருக்கு ஒரு இடைஞ்ச லும் இல்லாமல், குழந்தைகள் மாற்றம் நிறைவேறியது.
சிறையில், தேவகி எட்டாவதாக ஒரு பெண் குழந்தையைப் (யசோதைக்குப் பிறந்தது) பெற்றெடுத்தாள் என்ற செய்தி கம்ஸனை எட்டியது. இதுதான் தனக்கு யமன் என்று நினைத்த கம்ஸன், அதை உடனே கொன்றுவிடும் எண்ணத்துடன் சிறைச்சாலையை அடைந் தான். அவனுடைய கோபத்தைப் பார்த்த தேவகி, அவனிடம் மன் றாடினாள். எனக்குப் பிறந்த ஆண் குழந்தைகள், உன்னால் கொல்லப்பட்டன. இதுவோ பெண் குழந்தை. நானோ உனது தங்கை. இந்தக் குழந்தை பெண்ணானதால், உனக்கு ஒரு தீங்கையும் செய்யாது. எனக்கு இதை விட்டுக் கொடுத்து விடு‘ என்று அவள் பரிதாபமாகக் கெஞ்சினாள்.
கம்ஸன் சற்றும் மனமிறங்காமல், அந்தக் குழந்தையை, தேவகியிடமிருந்து பிடுங்கி, அதன் கால்களைப் பிடித்துக் கொண்டு, பாறையின் மீது அதை மோதுவதற்காக கையை ஓங்கினான். விஷ்ணுவின் சகோதரி என்று சொல்லக் கூடிய அந்த யோக மாயை, அவன் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பாய்ந்து சென்று ஆகாயத்தை அடைந்தது. அங்கே எட்டு கைகளை உடைய காளியாக அது காட்சியளித்தது. ‘அறிவற்றவனே! என்னைக் கொல்வதால் உனக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? உனக்கு அழிவைத் தரப் போகிறவன், வேறு இடத்தில் பிறந்து விட்டான்! அவ்வாறிருக்க, ஒன்றுமறியாதவர்களைக் கொன்று குவித்து, நீ காணப் போகிற பலன் எதுவுமில்லை‘ என்று கூறினாள். அவளே பூமியில் பல புண்ணிய க்ஷேத்ரங்களில் பல பெயர்களைக் கொண்ட அம்பிகையாக விளங்குகிறாள். பின்னர் சிறையிலிருந்து தேவகியும், வஸுதேவரும் விடு விக்கப்பட்டனர். மந்திரிகளின் ஆலோசனைப்படி, கம்ஸன், யாதவர்களிடையே இருக்கிற குழந்தைகள் எல்லாவற்றையும் கொன்று விடுவது என்று தீர்மானித்தான். அதே போல யாகங் களுக்கு இடையூறு செய்து, யாகங்களை செய்பவர்களையும் ஹிம்ஸிக்கத் தொடங்கினான்.
பூதனை (பூதகி) என்ற அரக்கி கம்ஸனால் ஏவப்பட்டு, பட்டினங்கள், கிராமங்கள், எல்லாவற்றிலும் அலைந்து திரிந்து, குழந்தைகளைக் கொன்று கொண்டிருந்தாள்‘.
இதன் பின்னர், நந்தகோபன் வசிக்கும் இடத்துக்கு பூதனை சென்றது; அங்கே கிருஷ்ணரைக் கொல்ல அவள் முனைந்தபோது, அவரால் வதைக்கப்பட்டது – ஆகிய விவரங்களை சுகர் கூறினார்.
இதையடுத்து, கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் பல அவரால் விளக்கப்பட்டன. சகடாஸுரன் வதம்; கிருஷ்ணர் தனது வாயைத் திறந்து, யசோதைக்கு அண்ட சராசரங்களையும் காட்டியது; கிருஷ்ணரின் விஷமங்களைப் பொறுக்க மாட்டாமல் யசோதை அவரை உரலில் கட்டியது; கிருஷ்ணர் உரலோடு நகர்ந்து சென்று இரண்டு மருத மரங்களை முறித்து, இரு தேவர்களுக்கு விமோசனம் அளித்தது; ப்ரும்மதேவனுக்கு பாடம் புகட்டியது; காளியமர்த்தனம், இந்திரன் பெய்வித்த பெருமழையிலிருந்து மக்களைக் காப் பாற்ற, கோவர்த்தனம் என்ற மலையையே அவர் குடையாகப் பிடித்தது… போன்ற பல சம்பவங்கள் சுகரால் வர்ணிக்கப்பட்டன.
கூ
மேலும் தொடர்ந்து, பல நிகழ்ச்சிகளைக் கூறிவிட்டு, கம்ஸ னையும் அவனுடைய சகோதரர்கள் எட்டு பேர்களையும், கிருஷ்ணர் வதம் செய்த விவரத்தையும் சுகர் கூறினார். கம்ஸன் அழிந்த பிறகு, அவனுடைய தந்தையாகிய உக்ரஸேனரே, யாதவர் களுக்கு அரசனாக்கப்பட்டார். இதன் பின்னர், பலராமனும், கிருஷ் ணரும், ஸாந்தீபனி என்கிறவரிடம் குருகுலவாசம் செய்வதற்காக அனுப்பப்பட்டனர். உபநிஷத்துக்களுடன் கூடிய வேதங்களை ஸாந்தீபனி, அவர்களுக்குக் கற்பித்தார். தனுர் வேதம் (யுத்த சாஸ்திரம்); மனுஸ்ம்ருதி; பல தர்ம சாஸ்திரங்கள்; தர்க்க சாஸ்திரம்; ராஜநீதி போன்றவையும் அவரால் கிருஷ்ணருக்கும், பலராமருக் கும் கற்பிக்கப்பட்டன.
அறுபத்தி நான்கு தினங்களில், அவர்கள் இருவரும், அறுபத்தி நான்கு கலைகளையும் கற்றனர். (இந்த அறுபத்தி நான்கு கலைகள் பற்றிய விவரங்களை வேறு நூல்கள் கூறுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பாகவத விளக்க நூல்கள் சில, அந்தப் பட்டியலைத் தருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.)
பாடுதல்; பல வகை வாத்யங்களை இசைத்தல்; தாண்டவம்; அபிநயம்; ஓவியம்; ரஸாயனப் பொருட்களைக் கொண்டு உருவங்களை தீட்டுவது; அரிசி, மலர்கள் போன்றவற்றைக் கொண்டு பூஜைக்குரியவாறு அமைப்பது; மலர் படுக்கை தயா ரிப்பது; பற்களுக்கும், உடலுக்கும் நல்ல நிறத்தை ஏற்படுத்துகிற வழிமுறை; மணிகளைக் கொண்டு, தரை மீது விசித்திரமான வேலைப்பாடுகளைச் செய்வது; அவரவர்க்கு ஏற்றபடி மெத்தை கள், தலையணைகளைத் தயார் செய்வது; தண்ணீரில் படுத்தபடி மிதப்பது, மற்றும் தண்ணீர் மீது நடப்பது; பல அற்புதங்களைச் செய்து காட்டுவது; மலர்களைக் கொண்டு பல வகை மாலை களையும், அங்கிகளையும் தயாரித்தல்; மலர்களினால் தலைக்குரிய பல அலங்காரங்களைத் தயாரித்தல்; பொதுவாகவே இல்லங்களை அலங்கரிக்க மலர்களைப் பயன்படுத்துதல்; காதுகளில் பல அழகுகளைச் செய்தல்; வாசனைப் பொடி போன்றவற்றைத் தயா ரித்தல்; தட்டார்கள் கலை; மண்ணைப் பொன்னாகக் காட்டுவது; அழகற்றவனை அழகுள்ளவனாக மாற்றுவது; அஸ்திரங்களை பிரயோகிக்கும் லாவகம்; பலவித உணவுகளைத் தயாரித்தல்;
பானங்களில் செயற்கையான மதம் போன்ற சக்தியை உண்டாக்குமாறு செய்வது; ஊசியைப் பயன்படுத்தி, அதைக் கொண்டு மலர் அலங்காரம் செய்வது; ஒரு நூலில் ஒரு பொம்மை தானாக ஏறுமாறு செய்வது, சிறு கயிற்றைக் கட்டி அதன் மீது நடப்பது போன்ற வித்தைகள்; வீணை வாசித்தல்; புதிர் போடுவது; பொருள் கண்டுபிடிப்பது கடினம் என்கிற வகையில், ஸ்லோகம் அமைப்பது; ஒரு நூலில் உள்ளதை படிக்கும் போதே, அதை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உணர்ச்சியோடு படிப்பது; ஒரு பாடல் முடிகிற இடத்தையே ஆரம்பமாகக் கொண்டு பாட்டமைத்தல்; நாடக அமைப்பு பற்றிய அறிவு; ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதி கூறப்பட்டால்; அதை முழுமையாகக் கூறல்; பாணங்களைத் தயாரிப்பது; சாஸ்திரங்கள் விதித்துள்ள முறைகளின்படி காரியங் களைச் செய்தல்;
தச்சுக்கலை; வீடு கட்டும் முறைகள்; பொன், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றின் தன்மையை அறிதல்; இரும்பைப் பொன்னாக்குவது; ரத்தினங்களிடையே உள்ள நிற வித்தியாசங் களை அறிவது; தங்கம் உள்ள இடங்களை அறிதல்; மரங்கள் rணமடைந்தால் அவற்றை துளிர்க்கச் செய்வது; ஆடு, கோழி முதலியவற்றின் சண்டை முறைகளைப் புரிந்து கொள்வது; கிளியை மனிதன் போல பேச வைப்பது; உடல் பிடித்து விடுதல் – மசாஜ், அதன் மூலம் உடலை சீர் செய்வது (அதாவது ஃபிஸியோதெரபி); தலை வாரிப் பின்னல்களைப் போடுகிற முறைகள்; ஒரு நீண்ட வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்துக் களைக் கொண்டே, அந்த விஷயத்தைச் சொல்பவனின் எண்ணத்தை அறிவது; தெளிவாக இல்லாத சப்தங்களைக் கொண்டே, சொல்லப் படுகிற விஷயத்தை அறிவது; பல தேசங்களில் வழங்குகிற மொழிகளை அறிவது; மலர்களைக் கொண்டும், அவற்றின் நிறங்களில் ஏற்படுகிற மாறுதல்களைக் கொண்டும், நடக்கப் போகிற நிகழ்ச்சிகளின் தன்மையை முன்கூட்டியே அறிதல்; யந்திரங்களைத் தயாரிக்கும் முறைகளை அறிதல்; பலர் கூடியிருக் கிற போது, தான் படித்ததை அல்லது கேட்டதை ஒருவன் சொன்னால், அவன் சொல்லாமல் விட்டதையும் கூட சொல்லி விடுகிற முறையை அறிவது; பிறர் மனதிலுள்ள எண்ணத்தை அறிந்து கொள்வது; காவ்ய ஞானம்; அகராதிகளை நன்கு அறிதல்; சாத்திரங்களை முழுமையாக அறிவது; அனுஷ்டிக்கப்பட வேண் டிய சடங்குகளின் விவரங்களை அறிதல்; மாறுவேஷம் போடும் வழியை அறிவது; பருத்தி நூலினால் ஆன துணியை, பட்டுத் துணியாக்கிக் காட்டுவது; சூதாட்ட வழிமுறைகளை அறிவது; குழந்தைகள் விளை யாடுவதற்குரிய பொருட்களைத் தயாரித்தல்; யானை, குதிரை, முதலியவற்றைப் பழக்குதல்; அஸுரர்களையும் வெல்வதற்குரிய வழிகளை அறிதல்; தேகத்தை சீராக வைப்பதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை அறிதல்… ஆகிய விஷயங்கள்தான் அறுபத்தி நான்கு கலைகளாக கூறப்படுகின்றன என்று விளக்கப்பட்டிருக்கிறது.)
கிருஷ்ணாவதாரம் பற்றி பாகவதம் கூறுகிற இன்னும் சில விஷயங்களைப் பார்ப்போம்.