கிருஷ்ணாவதாரத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், பலவித விமர்சனங்களுக்கு இடமளித்திருப்பது – கோபிகைகளின் வரலாறு. கோபிகைகள் கிருஷ்ணரையே ஸர்வமுமாக நினைத்து விட்ட நிலையில், அவர்கள் மேன்மையுறுவதற்காகவும், அவர்கள் இறை தத்துவத்தை முழுமையாக உணர்வதற்காகவும், கிருஷ்ணர் தோற்று வித்த நிகழ்ச்சிகள்தான், இப்படி விவாதத்திற்குரியவை ஆகியிருக் கின்றன.
கோபிகைகள் நதியில் குளிக்கிறபோது, அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து, அவர்கள் வேண்டிக் கொண்ட பின்னர் ஆடைகளைத் திருப்பிக் கொடுத்த சிறுவன் கிருஷ்ணனின் விளையாட்டில் இந்நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன; பின்னர் ஒரு கட்டத்தில் கோபிகைகள் அனைவரும், ‘கிருஷ்ணரே தங்கள் கணவன்‘ என்று நினைத்து மனம் உருகும் அளவிற்குச் சென்றனர். இறுதியில் கிருஷ்ணர், அவர்களுக்கு ஞான உபதேசம் செய்தார்.
இதையெல்லாம் சுகர் விவரித்த போது, பரீக்ஷித் மன்னன், ‘பிற விஷயங்களினால் அடைய வேண்டிய இன்பம் எதுவும் அற்றவ ரான கிருஷ்ணர், இப்படி நடந்து கொண்டது தர்மத்திற்கு விரோதமில்லையா?’ என்று கேட்டான்.
சுகர் விளக்கம் அளித்தார்: ‘தனது முடிவின்படி, தானாகவே பகவான் எடுத்துக் கொண்ட சரீரத்தைத்தான் நாம் ‘கிருஷ்ணர்‘ என்று அழைக்கின்றோம். அப்படி தானாகவே அவர் எடுத்துக் கொண்ட பிறப்பிற்கு, கர்மத்தின் தொடர்பான பந்தங்களோ, பாதிப்புகளோ கிடையாது. அவருடைய லீலைகளை மனதால் நினைத்து, நினைத்து, அவரிடம் ஈடுபாடு கொள்பவர்கள் மேன்மையுறு கிறார்கள். அவரிடம் ஈடுபாடு கொண்ட கோகுலவாசிகள், தங்க ளுடைய மனைவிகள் கிருஷ்ணர் பின் போய்விட்டதாக நினைக்க வில்லை; தங்கள் வீட்டில் தங்களுடன் கூடவே தங்கள் மனைவி கள் இருப்பதாகவே அவர்கள் உணர்ந்தார்கள். அது கிருஷ்ணனின் மாயை; அதே மாயைதான், அவர் கோபிகைகளிடத்தில் பழகியதும். எனும்போது, அதில் குற்றம் காண என்ன இருக்கிறது?
ஈஸ்வரர்களான பெரியவர்கள், எதையும் பொசுக்கி விடுகின்ற நெருப்பு போன்றவர்கள். அவர்களுடைய செயல்கள், சாகஸங்கள்; அவை அவர்கள் மீது பற்றாது. தவசீலர்களும், ஈஸ்வரர்களும் ஆன அவர்களைப் போலவே தானும் செய்யலாம் என்று நினைத்து, மேன்மையுறாத ஒரு மனிதன், அந்த சாகஸங்களை தானும் புரிய முனைந்தால், அவன் நாசத்தைத்தான் அடைவான்.
‘புண்யம் என்கிறதை அளிக்கக் கூடிய செயல்கள் அவர்களுக்கு எதுவும் கிடையாது; அதே போல பாவச் சுமையை ஏற்படுத்தக் கூடிய செயல்களும் அவர்களுக்குக் கிடையாது; அவர்கள் இதற் கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.
‘சாதாரண மனிதன் பின்பற்ற வேண்டியது, அவர்களுடைய உபதேசத்தைத்தான். அவர்களுடைய செயல்பாடுகள், சாத்திர விரோதமற்றவையாக இருக்கும்போது, அவற்றைப் பின்பற்ற லாம்; அவர்கள் உபதேசத்தின்படி அமைகிற செயல்களைப் பின் பற்றலாம்; ஆனால் பற்றற்ற அவர்கள் செய்கிற எல்லாவற்றையும், தானும் செய்து விடலாம் என்று எண்ணுகிற மனிதன், வீழ்ச்சி அடைவான்‘.
(இவ்வாறு சுகர் கூறிய தத்துவத்தையே வலியுறுத்துகிற ஒரு நிகழ்ச்சி உண்டு. அதைத் தெரிந்து கொள்கிறபோது, சுகர் அளித்த விளக்கத்தில் அடங்கியிருக்கிற உண்மை நன்கு விளங்கும். அந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்: நதியில் பெருவெள்ளம் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. நதியின் ஒரு கரையில் இருந்த கிருஷ்ணர், தனது மனைவி ருக்மிணியிடம் பலகாரத்தைக் கொடுத்து, ‘நதியின் மறுகரையில், துர்வாஸ முனிவர் இருக்கிறார். அவரிடம் சென்று, ‘கிருஷ்ணர் அனுப்பிய பிரஸாதம்‘ என்று சொல்லி, இதைக் கொடுத்துவிட்டு வா‘ என்றார்.
ருக்மிணி திகைத்தாள். ‘நதியில் பெருவெள்ளம். நான் எப்படி இந்த நதியைக் கடந்து, மறு கரைக்குப் போவது?’ என்று அவள் கிருஷ்ணரைக் கேட்டாள்.
கிருஷ்ணர், “நதியின் சமீபம் சென்று, ‘நதியே! கிருஷ்ணர் நித்ய பிரும்மச்சாரி என்பது உண்மையானால், நீ விலகி எனக்கு வழி விடு!’ என்று சொல். உனக்கு நதி வழிவிடும்” என்று கூறினார்.
ருக்மிணிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், கிருஷ்ண ரின் சொல்லைத் தட்ட முடியாமல், அவர் சொன்னவாறே செய்தாள். நதி உடனே அவளுக்கு வழிவிட்டது. பிரமித்துப் போன ருக்மிணி, துர்வாஸரை அடைந்து கிருஷ்ணர் அளித்த பிரஸாதத்தைக் கொடுத்தாள். துர்வாஸர் அதைப் பெற்று, உண்டார். அவர் உண்ட பிறகு, அவரிடம் விடைபெற்ற ருக்மிணி, நதி மீண்டும் பிரவாகம் எடுத்துப் பாய்வதைக் கண்டாள்.
எப்படி திரும்பிப் போவது என்று புரியாமல் தவித்த ருக்மிணி யைப் பார்த்து துர்வாஸர், ‘ருக்மிணி! நதியிடம் சென்று நான் சொல்வதைச் சொல். ‘நதியே! துர்வாஸர் நித்ய உபவாஸி என்பது உண்மையானால், நீ விலகி, எனக்கு வழிவிடு‘ என்று சொல். உனக்கு வழி கிடைக்கும்” – என்று கூறினார்.
ருக்மிணிக்கு மீண்டும் திகைப்பு. முனிவர் சொன்னதைச் செய்தாள். நதி அவருக்கு மீண்டும் வழி விட்டது. கிருஷ்ணரை வந்தடைந்த ருக்மிணி, தன் மனதில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டாள் : “நீங்கள் என்னோடு குடும்பம் நடத்துகிறீர்கள். அப் படிப்பட்ட நீங்கள் ஒரு நித்ய பிரும்மச்சாரி என்று ஒப்புக் கொண்டு, நதி வழிவிடுகிறது. அந்தக் கரையில், துர்வாஸர் நீங்கள் அனுப்பி யதை உட்கொண்டு விட்டு, நித்ய உபவாஸி என்று கூறுகிறார். அதையும் ஏற்று நதி வழிவிடுகிறது! இது என்ன? குடும்பம் நடத்துகிற நீர், பிரும்மச்சாரியா? பிரஸாதத்தை உண்ட துர்வாஸர் உபவாஸியா?”
இவ்வாறு கேட்ட ருக்மிணிக்கு பசுவான் கிருஷ்ணர் பதில் அளித்தார்: ‘நானோ, துர்வாஸரோ, எதன் மீதும் பற்று கொண்டு எதையும் செய்யவில்லை. நாங்கள் பற்றற்றவர்கள் என்பதால், எங்களுடைய எந்தச் செயலும், எங்களைப் பாதிக்காது. ஆசை, கோபம், பொறுமை, துவேஷம், வெறுப்பு, மகிழ்ச்சி, வெறி போன்ற எந்த ஒரு உணர்ச்சியினாலும் உந்தப்பட்டு, நாங்கள் எதையும் செய்வதில்லை. ஆகையால், உன்னோடு குடும்பம் நடத்தினாலும் நான் பிரும்மச்சாரியே! நீ கொண்டுபோய் கொடுத் ததை உட்கொண்டாலும் துர்வாஸர் உபவாஸியே!”
இதே போலத்தான், கோபிகைகள் தொடர்பான நிகழ்ச்சிகளை யும் பார்க்க வேண்டும். அவர்கள் இறை தத்துவத்தை உணர்வதற்காக பகவான் செய்த லீலைகள் அவை என்பதால்தான் –ஒவ்வொரு கோபிகையும், தன் அருகில் கிருஷ்ணர் இருப்பதைப் பார்த்தனர்; அதே காரணத்தினால்தான் அவர்களுடைய கணவன்மார்கள் எல்லாம் தங்கள் அருகில் தங்கள் மனைவிமார்கள் இருப்பதைப் பார்த்தார்கள்.
ஆகையால், இதை ஈஸ்வர மாயை என்றுணராமல், ஏதோ குற்றம் நடந்ததுபோல கருதிவிடக் கூடாது. கோபிகைகளுடன் கிருஷ்ணர் நடத்திய நிகழ்ச்சிகள், பாகவதத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, பண்டிதர்களால் கூறப்படுவதும் இதனால்தான்.
சுவாமி விவேகானந்தர், இந்த நிகழ்ச்சிகளை இப்படி வர்ணிக் கிறார்:
‘கிருஷ்ண சரித்திரத்தின் இந்த மகோன்னதமான பகுதி, புரிந்து கொள்வதற்குக் கடினமானது. தூய்மை அடைந்த நிலையில், ஒருவன் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பக வானிடத்தில் அன்பு வைத்து, அதிலேயே மூழ்கி விட்டவனுக்குத் தான், இந்தப் பகுதியின் மேன்மை புரியும்.
கோபிகைகள், கிருஷ்ணரிடத்தில் வைத்த அன்பு, எதையும் எதிர்பார்க்காதது; ஸ்வர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசை கூட அவர்களுக்கு இல்லை. இவ்வுலகிலோ, மேல் உலகிலோ, எதையும் வேண்டாமல், அவர்கள் கிருஷ்ணரிடம் அன்பு வைத்தனர்.
‘முதலில் நீ, செல்வத்தின் மீது வைத்திருக்கும் ஆசையை ஒழி! புகழின் மீது வைத்திருக்கும் பற்றை ஒழி! இவ்வுலகின் மீது வைத்திருக்கும் பந்தத்தை ஒழி! அப்போதுதான் உன்னால் கோபிகை கள், கிருஷ்ணர் மீது கொண்ட அன்பைப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றையும் துறக்காமல், இந்த புனிதமான அன்பை, இந்த தூய்மையான அன்பை, புரிந்து கொள்ள முடியாது.
ஒவ்வொரு கணமும் பணத்தின் மீதும், புகழின் மீதும், அந்தஸ் தின் மீதும், காம இன்பத்தின் மீதும் பற்று கொண்டு திரிகிற சாதாரண மனிதன், கோபிகைகளின் தூய்மையான அன்பை விமர்சிப்பது, விந்தையிலும் விந்தை! மனதில் சுயநலம் இருக்கிறவரையில், பகவானிடத்தில் செலுத்துவதாகச் சொல்கிற அன்பு வர்த்தகம் செய்வது போலத்தான். அப்படிப்பட்டவர்கள் கோபிகைகளிடம் குறை காண்பது விநோதமானது‘.
இவ்வாறு விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
வேறு ஒரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். கோபிகை களுடன் கிருஷ்ணர் நடத்திய நிகழ்ச்சிகளை, இந்த உலகிற்கு அளித்தது யார்? இந்த வரலாற்றைப் பதித்தவர் பிறவியிலேயே தூய்மையானவராகிய சுகர். மரம், செடி, கொடிகள் கூட, அவரிடம் தங்களைக் கண்டன; காமம், ஆசை, விருப்பு, வெறுப்பு எல்லா வற்றையும் துறந்து நின்றவர் அவர். அவருடைய தகப்பனாரோ பெரும் சீலராகிய வியாஸ மஹரிஷி. இப்பேர்ப்பட்டவர்கள் பதித்த இந்த வரலாற்றைக் கேட்டது யார்? பரீக்ஷித் மன்னன். இன்னும் சில தினங்களில் வாழ்வு முடியப் போகிறது என்று அறிந்து, அந்த நாட்களில், பெரும் புண்ணியத்தைத் தரக் கூடிய வரலாற்றைக் கேட்க வேண்டும் என்று முனைந்தவன். சொன்னவர்களும், கேட்டவரும் இவ்வளவு மேன்மையானவர்களாக இருக்கிறபோது, சொல்லப்பட்ட விஷயம், சாதாரணமானதாக இருக்க முடியுமா? ஆகையால், சுகர் கூறிய விளக்கங்கள்; கோபிகைகள் ஒவ் வொருவரும் கிருஷ்ணர் தன் அருகிலேயே இருப்பதாகப் பார்த்தது; அவர்களுடைய கணவன்மார்கள், தங்கள் தங்கள் மனைவி தன் னுடன் இருப்பதாகவே பார்த்தது; கிருஷ்ணர் கோபிகைகளுக்கு உபதேசம் செய்து அவர்களை தங்கள் இல்லங்களுக்கு அனுப் பியது… போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி சிந்தித்தால், நாம் இவ் விஷயத்தை ஓரளவாவது புரிந்து கொள்வோம். இந்தப் பகுதி, பகவானிடம் வைக்கும் பக்தியைப் போற்றுவதே தவிர, தவறு நடந்தது என்று சொல்வது அல்ல).
கிருஷ்ணாவதாரத்தில் நடந்த மற்ற பல நிகழ்ச்சிகளை சுகர், பரீக்ஷித்திற்கு எடுத்துரைத்தார். அவற்றில் ருக்மிணியை கிருஷ்ணர் மணந்த நிகழ்ச்சியும் ஒன்று.