ஸத்ராஜித்தினுடைய மகளும், எல்லா நற்குணங்களும் பொருந்தியவளுமாகிய சத்யபாமாவை கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்ட விவரத்தை பரீக்ஷித் மன்னனுக்கு, சுகர் கூறினார். மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிற, பாண்டவர்கள் சம்பந்தப் பட்ட சில நிகழ்ச்சிகளில் கிருஷ்ணர் வகித்த பங்கு, பின்னர் சுக ரால் எடுத்துச் சொல்லப்பட்டது. மிகவும் ஏழையான குசேல ரிடம் கிருஷ்ணர் அன்புகாட்டி, அவருக்கு அருள் புரிந்ததும், அவரால் விவரிக்கப்பட்டது.
பிறகு, உத்தவருக்கு, கிருஷ்ணர் செய்த உபதேசத்தை, பரீக்ஷித் மன்னனுக்கு சுகர் எடுத்துரைத்தார். (உத்தவர்,யாதவர்களில் ஒரு வர்; கிருஷ்ணருக்கு மந்திரி போலவும், தூதுவராகவும் பணி புரிந்தவர்; கிருஷ்ணரிடம் மாறாத பக்தி கொண்டிருந்தவர். இவ ருக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம், ஸ்ரீமத் பாகவதத்தின் சிறப் பம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதி ‘உத்தவ கீதை என்றும் குறிப்பிடப்படுகிறது.)
துவாரகை, கடலில் மூழ்கி, யாதவர்களில் பெரும்பாலோரும் அழியப் போகிற நிலை. அப்போது ப்ரும்மதேவன், பரமசிவன், இந்திரன், பல தேவர்கள், ரிஷிகள், ஆகிய பலரும் கிருஷ் ணரை தரிசிக்க துவாரகைக்குச் சென்றனர். பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதாரம் செய்த உமது காரியம் முடிந்து விட்டது. நீர் மீண்டும் உமது ஸ்தானத்தை அடைய வேண்டும்‘ என்று ப்ரும்மதேவன், அனைவர் சார்பி லும் கேட்டுக் கொண்டார். தேவர்களும் ரிஷிகளும் கிருஷ்ணரை துதித்து நின்றனர்.
‘யாதவர்களுக்கு கர்வம் அதிகமாகி விட்டது. அவர்களும் நாசம் அடைய வேண்டும். அது நடந்தபின் நான் வைகுண்டம் திரும்பு வேன்‘ என்று கூறி கிருஷ்ணர் அவர்களுக்கு விடையளித்தார்.
அதன் பின்னர் தோன்றிய உத்பாதங்களைக் கண்டும், கிருஷ்ணர் கூறியதை ஆலோசித்தும், ஒரு முடிவிற்கு வந்தவராக உத்தவர், ‘யது குல நாசத்திற்குப் பின் நீங்கள் வைகுண்டம் செல்லப் போகிறீர்கள். உங்களுடைய பாதங்களை விட்டு சிறிது நேரமும் பிரிந்திருக்க நான் விரும்பியதில்லை. என்னையும் உங்களுடன் அழைத்துப் போக வேண்டும்‘ என்று கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டார்.
கிருஷ்ணர், ‘ப்ரும்மதேவன் வேண்டிக் கொண்டபடி, பூமியில் அவதரித்து, தேவர்களுடைய காரியத்தை முடித்து விட்டேன். ரிஷிகளிடம் பெற்ற சாபத்தின்படி, யாதவர்கள் இனி ஒரு வருக்கொருவர் யுத்தம் செய்து மடிவார்கள். இன்று முதல் ஏழாவது தினத்தில், துவாரகை கடலில் மூழ்கி விடும்‘ என்று கூறி விட்டு மேலும் தொடர்ந்தார்: ‘விரைவில் கலி, உலகில் வியாபிப்பான். அதன் பின்னர் மக்கள் அதர்மத்தில் மூழ்குவார்கள். நீர் என்னிடத் தில் மனதை செலுத்தி, சமப் பார்வையுடையவராக, இந்த பூமியில் வாழ்ந்து, ஆன்மாவை உணர்ந்து, பின்னர் என்னை அடைவீர்!
உத்தவர், ‘நான், எனது என்ற எண்ணங்களை எப்படி அழிப் பது? அந்த மார்க்கத்தை எனக்கு நீங்கள் போதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணர், ‘முன்பு யதுவிற்கும், ஞானியாகிய ஒரு அந்த ணருக்கும் இடையே நடந்த உரையாடலை, உங்களுக்கு நான் கூறுகிறேன். அதுவே உமக்கு பல உண்மைகளை விளக்கும்‘ என்று கூறிவிட்டு, அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேச ஆரம்பித்தார். தர்மங்களை அறிந்த யது, விவேகியாகிய அந்த அந்தணரைப் பார்த்து “தர்மங்கள் என்று எதையும் செய்து கொண்டிராத நீங்கள் ஞானத்தை அடைந்தது எப்படி? நீங்கள் எதையும் செய்வ தில்லை; எதையும் விரும்புவதுமில்லை. மூடன் போலவும், பைத்தியம் போலவும் அலைகிறீர். அதே சமயத்தில் பெரும் வல்லமை படைத்தவர் போலவும் காட்சியளிக்கிறீர். பந்துக்கள், மனைவி, செல்வம், நண்பர்கள்… என்று எதையும் அனுபவிக்கா மல், நீங்கள் ஆனந்தத்தில் திளைத்திருப்பது எவ்வாறு? எனக்கு நீங்கள் இதை விளக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அந்த அந்தணர் யதுவைப் பார்த்து, ‘நான் இருபத்திநான்கு பேர்களை எனது ஆச்சார்யர்களாக என் மனதில் ஏற்றுக் கொண்டேன். அவர்களிடமிருந்து பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். அதைச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, தான் பெற்ற அனுபவத்தையும், அதன் மூலம் கற்ற பாடத்தையும் விவரித்தார்:
பூமி; காற்று; ஆகாயம்; நீர் ; அக்னி; சந்திரன்; ஸுர்யன்; மாடப்புறா; மலைப்பாம்பு; கடல்; விளக்கு – விட்டில் பூச்சி; தேனீ; யானை; வேடன்; மான் ; மீன்; பிங்களை என்ற பெயருடைய தேவதாசி; குராரம் என்ற பெயருடைய பறவை; ஒரு சிறுவன்; ஒரு சிறுமி: அம்பு செய்கிற ஒரு கொல்லன்; பாம்பு; பட்டுப்பூச்சி; குளவி ஆகிய ஆச்சார்யர்களே அந்த 24 பேர். இவற்றின் குணங்கள், மற்றும் நடத்தையிலிருந்து, எதை கிரஹித்துக் கொள்ள வேண் டுமோ, அதை நான் கிரஹித்தேன்.
எல்லா பிராணிகளினாலும் மிதிக்கப்பட்டு, மற்றும் பல வகைகளில் துன்புறுத்தப்படுகிற பூமி, அந்த ஹிம்சையை எப்படி சகித்துக் கொள்கிறதோ–அதே போல, மற்றவர்களால் பாதிக்கப் படுகிறபோது, விதியினால் தூண்டப்பட்டே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நினைத்து, அந்த உபத்திரவங்களை நாம் ஏற்க வேண்டும். பூமியில் உள்ள மலை, அருவி போன் றவை பிறருக்குத்தான் உபயோகப்படுகிறது; அது போலவே பூமியில் இருக்கும் மரங்கள், பிறருக்கே பயன்படுகின்றன. இதைப் போல பிறருக்கு பயன்படுகிற வகையில் வாழ வேண்டும்‘ என் பதை பூமியிடமிருந்தும், அதைச் சார்ந்த மலை, மரம் போன்ற வற்றிலிருந்தும் மனிதன் கற்க வேண்டும்.
காற்று, காட்டுத் தீயின் போது வீசினாலும், அது, தீயினுடன் கலப்பதில்லை; அதே போல பல்வகைப்பட்ட குணங்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும் மனிதன், அவற்றில் கலக்கக் கூடாது. வாஸனை போன்றவற்றுடன் காற்று கலந்து விடுவதில்லை. இதிலிருந்து ஆன்மா, ஒரு உடலில் பிரவேசித்தாலும், அந்த உடலுக்கு ஏற்படுகிற குழந்தைப் பருவம், இளமை, முதுமை போன்றவை, ஆத்மாவுக்கு ஏற்படுவதில்லை என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.
‘ஆகாயம், எங்கும் வியாபித்திருக்கிறது; அது அளவிட முடியாதது; ஆனால் எதனுடனும் அதற்குத் தொடர்பு இல்லை. ஆன்மாவும் இது போலவே எல்லா ஜீவராசிகளிடமும் மறைந் திருந்தாலும், அது எதிலும் சேர்ந்து விடுவதில்லை என்பதை மனிதன் உணர வேண்டும்.
நீர், எல்லாவற்றையும் சுத்தப்படுத்துவது போல, ஞானமுடைய வன் தன்னுடன் தொடர்பு உள்ளவர்களை தூய்மையாக்குகிறான்.
‘அக்னி, எல்லாவற்றையும் எரித்தாலும் அதற்கு ஒரு பாதிப்பும் ல்லை; அது போல எல்லாவற்றையும் உட்கொண்டாலும் யோகிக்கு எந்தப் பாவமும் வந்து சேராது. ஒரு கட்டையில் பற்றுகிற போது, அந்தக் கட்டையின் வடிவமே உடையது போல அக்னி காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் அது அக்னியின வடிவம் அல்ல. இதைப் போல், இந்த உலகத்தில் பிரவேசித்து பல வகை யில் செயல்பட்டாலும், ஆன்மாவிற்கு வெவ்வேறு தன்மை என்பது கிடையாது. அது ஒன்றே.
‘சந்திரன் வளர்வதையும், தேய்வதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் சந்திரன் வளர்வதும் இல்லை; குன்றுவதும் இல்லை. அம்மாதிரியே, பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனிடம் நாம் காண்கிற மாறுதல்கள் எல்லாம், சரீரத்திற்குத்தானே ஒழிய, ஆன்மாவுக்கு இல்லை. ஆன்மா வளர்வதோ, குன்றுவதோ கிடை யாது. வளர்பிறையையும், தேய்பிறையையும் காட்டுகிற சந்திரன் இதை நமக்கு உணர்த்துகிறது.
சூரியன், தன்னுடைய கிரணங்களினால் நீரை இழுத்து, தகுந்த நேரத்தில் அதையே மழையாகப் பொழிய வைக்கிறது. மனிதனும் தான் பெற்றதை, பிறருக்குக் கொடுக்க வேண்டும். சூரியன் போலவே, தன்னால் பெறப்பட்டது என்ற அகந்தையோ, தன்னால் கொடுக்கப்படுகிறது என்ற மமதையோ இன்றி இதைச் செய்ய வேண்டும்.
‘மாடப்புறா ஒன்று, தன் மனைவியுடன் பெரிதும் களித்திருந்தது. பெண் புறா முட்டையிட்டு, குஞ்சுகளைப் பெற்ற போது, ஆண் புறா மகிழ்ந்தது. குஞ்சுகளை தாய்ப்பறவையும், ஆண் பறவையும் கண்ணிமை போல் காத்தன. ஒருநாள் ஒரு வேடனின் வலையில் குஞ்சுகள் வீழ்ந்தன. பதறிப் போன தாய்ப் பறவை, வலை இருப்பதையும் சிந்திக்காமல், குஞ்சுகளைக் காப்பாற்ற முனைந்து, தானும் வலையில் சிக்கியது. ஆண் பறவை, மனைவியையும், குழந்தைகளையும் காப்பாற்ற முயற்சித்து, தானும் வலையில் சிக்கிக் கொண்டது. வேடன் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டான். இல்லறத்தில் இருக்கிறவனும் இது போலத்தான் தனது குடும்பம் என்ற எண்ணத்தில் திளைத்து, துன்பம் எய்துகிறான். மோட்சத்தை அடைவதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய மனித சரீரத்தைப் பெற்றும், அதை அவ்வாறு பயன்படுத்தி மேன்மையுறாமல், தன் மனைவி, தன் மக்கள் என்ற ஆசைகளை வளர்த்துக் கொள்பவன், வேடனின் வலையில் விழுந்த பறவை போல் ஆகிவிடுகிறான்.
‘மலைப் பாம்பு, இரையைத் தேடி அலைவதில்லை. அருகில் வருவதை உண்டு அது திருப்தியுறுகிறது. அதைப் போல ஞானி யானவன், கிடைத்ததில் திருப்தி கொள்ள வேண்டும்.
கடல், தாண்ட முடியாதது; பெரும் ஆழமுள்ளது; நடுக் கடலிலோ அலைகள் இல்லாமல் அசைவற்று இருக்கிறது. இதைப் போல, யோகி என்பவன், பிறரால் கடக்க முடியாதவனாகவும் இவன் இன்ன தன்மையுடையவன் என்று அளந்துவிட முடியாத வனாகவும் இருக்க வேண்டும். மழை காலத்தில், பல நதிகள் சமுத்திரத்தில் கலக்கின்றன; ஆனால் கடல் அதனால் நிரம்பி வழிவதில்லை. கோடை காலத்தில் நதிகள் மூலமான நீர் வரவு, சமுத்திரத்திற்குக் கிடையாது; ஆனால் கடல் அதனால் வற்றி விடுவதில்லை. அம்மாதிரி, ஞானியானவன், சுகங்கள் என்று கருதப்படுகிறவை எவ்வளவு அவனை வந்தடைந்தாலும், அதில் மகிழக் கூடாது; அம்மாதிரி சுகங்களோ, இன்பங்களோ, அவனை அடையாதபோது, அவன் வருந்தவும் கூடாது.
விட்டில் பூச்சி, விளக்கை ஒரு பழமென்று நினைத்து, அதில் வீழ்ந்து மரணமடைகிறது. இதைப் போலத்தான் பெண்ணினால் கவரப்பட்ட மனிதன், ஸம்ஸாரத்தில் சிக்கி விடுகிறான். உண் மையை உணர்ந்த மனிதன், விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல, பெண்களினால் வீழ்ச்சியடைய மாட்டான்.
‘யானையைப் பிடிப்பவர்கள், காட்டில் பள்ளம் வெட்டி, அதை செடி, கொடிகளால் மறைத்து, பெண் யானையைக் காட்டி, அதன் பின்னே ஆண் யானையை நடந்து வரச் செய்து, பள்ளத்தில் வீழ்த்தி, அதைப் பிடித்து விடுகிறார்கள். விவேகம் உள்ளவன், பெண்ணை, எமன் என்று கருதி அவள் பின் செல்லாமல் இருக்க வேண்டும்.
தேனீ, தான் சேகரித்த தேனை தானே முழுமையாக உண்டுவிடுவதில்லை; பிறருக்கும் தந்துவிடுவதில்லை; சேகரித்து வைக்கிறது. அதை மனிதன் எடுத்துக் கொண்டு போய் விடு கிறான். பல மனிதர்கள், இது மாதிரியாக, தாங்களும் அனு பவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் செல்வத்தைச் சேர்த்து வைக்கிறார்கள். இறுதியில், அதை வேறொருவன் எடுத்துப் போய்விடுகிறான். தானும் அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் உதவாமல் சேர்த்து வைப்பது பயனற்றது என்பதை தேனீயைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
‘வேடன் எழுப்புகிற குரலைக் கேட்டு மான் அசையாது நிற்கிறது; அப்போது அது வேடனால் கொல்லப்படுகிறது. காட்டில் வாழ்கிற ஸந்யாஸி, பாடல்கள் முதலியவற்றைக் கேட்டுக் கொண்டு, அதில் இன்பம் பெற்று காலத்தை கழிக்க முனைந்தால், வேடனின் குரலைக் கேட்டு பிரமித்து நிற்கிற மானுக்கு ஏற்படு வது போன்ற நாசம்தான் ஏற்படும்.
மீன், தூண்டிலில் உள்ள புழுவை ருசிக்க ஆவல் கொண்டு, சிக்கி, மரணம் அடைகிறது. நாக்கைக் கட்டுப்படுத்தாதவன் ருசி யில் விருப்பம் கொண்டு, அதனால் கேட்டை அனுபவிப்பான். இந்த்ரியங்களை வென்றுவிட முயல்கிற விவேகிகள், உணவைப் பெரிதாக நினைப்பதில்லை. நாக்கை அடக்கி, மற்ற இந்த்ரியங் களையும் வென்று விட முயல்கிற விவேகிகள், உணவைப் பெரிதாக நினைப்பதில்லை. நாக்கை அடக்காமல், மற்ற இந்த்ரியங் களை வென்றுவிட நினைக்கிறவன் தோல்வியைத்தான் அடை வான். நாக்கைக் கட்டுப்படுத்தினாலே, மற்ற இந்த்ரியங்களை வெல்வது எளிதாகி விடும்’.
யதுவிற்கு பல விஷயங்களிலிருந்து, தான் கற்ற பாடத்தை விவரித்துக் கொண்டிருந்த அந்தணர், தனது அனுபவத்தைத் தொடர்ந்து விவரித்தார்.