‘பற்றை வளர்த்துக் கொள்ளாமல், என்னிடம் மனதால் சரணடைந்து, உன் கடமைகளைச் செய்‘ என்று தொடங்கிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் பல உபதேசங்களை உத்தவருக்குக் கூறினார்.
‘எந்த காரியம் செய்தாலும், சுயநலத்தை முற்றிலும் அகற்றி அதைச் செய்ய வேண்டும். சுயநலம், விஷயங்களில் பற்றை உண்டாக்குகிறது; அதனால் பிணைப்பு ஏற்படுகிறது. சுயநலமில் லாமை, சுதந்திரத்தைத் தருகிறது.
‘எல்லோருக்கும் பொதுவான தர்மங்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். பிறருக்கு தீங்கு இழைக்காமல் இருப் பது; பிறர் பொருளின் மீது ஆசை வைக்காமல் இருப்பது; தூய்மை யான பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது; கிடைத்ததில் திருப்தி அடைவது; நல்ல விஷயங்களை கற்பது என்கிற தர்மங்களை ஒரு போதும் கைவிடக் கூடாது.
‘என்னை உணர்ந்த ஒரு ஆச்சார்யாரை அடைந்து, அவரை குருவாக ஏற்று, அவருக்கு பணிவிடை செய்து வந்தால், அதுவே நற்கதி அளிக்கும்.
‘தான் என்கிற அகந்தையையும், பொறாமையையும் விட்டுவிட வேண்டும். என்னுடையது, நான், என்கிற எண்ணங்களை அறுக்க வேண்டும். குருவை நாடி, உண்மையை உணர்ந்து கொள்ள இடைவிடாது முயற்சிக்க வேண்டும்.
‘எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பார்க்க வேண்டும். மற்ற உயிர்களில் எல்லாம் தன்னைக் காண வேண்டும். மனைவி, மக்கள், வீடு, செல்வம் போன்றவற்றில் பற்று கொள்ளக் கூடாது.
‘சரீரத்தை பாதிக்கும் விஷயங்கள் எதுவும் ஆன்மாவை அண்டாது. அக்னி எந்தப் பொருளைத் தீண்டியிருக்கிறதோ, அந்தப் பொருளின் அளவே கொண்டது போல காட்சி அளிக்கிறது; சிறிய பொருள் மீது தீ பற்றினால், அப்போது அக்னி சிறிதாகவும், பெரிய பொருள் மீது பற்றினால், இப்போது பெரிதாகவும் தோற்ற மளிக்கிறது. ஆனால் உண்மையில் அக்னிக்கு சிறிது பெரிது என்ற பேதம் கிடையாது. இதேபோலத்தான் ஆன்மாவும்.
‘சரீரத்தின் மீது கொள்ளப்படும் அபிமானம்தான், பல பந்தங் களுக்கும், துன்பங்களுக்கும் தொடக்கமாகி விடுகிறது. அம்மாதிரி சரீரத்தின் மீது பற்றுக் கொள்வது அறிவீனம். அதை அகற் றினால்தான், அதனால் திரையிடப்பட்டிருக்கிற உண்மை புலப் படும். ஆன்மா தூய்மையானது, சுதந்திரமானது, முழுமையானது என்பது அப்போதுதான் புரியும்.
‘ஞானமே இன்பம். இந்த உலகத்தில் ஜீவராசிகள் சுதந்திரமாக இயங்குகின்றது என்றும், ஈஸ்வரன் அவர்களை ஆட்டி வைப்ப தில்லை என்றும் சிலர் கூறுவார்கள். அதுதான் உண்மையென் றால், மனிதர்கள் சுதந்திரமாக இயங்குகிறபோது, தங்களுக்குத் துன்பத்தைத் தரக்கூடிய காரியங்களை அவர்கள் ஏன் செய்கிறார் கள்? இதிலிருந்து, மனிதர்கள் சுதந்திரமாக இயங்குபவர்கள் அல்ல என்றுதானே ஆகிறது?
‘அறிவுள்ளவர்கள், நல்ல காரியங்களைச் செய்து, இன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும், மூடர்கள்தான் தவறான காரியங்களைச் செய்து, துன்பத்தில் வீழ்வார்கள் என்றும் – இதற்கு பதில் சொல்ல முடியாது. ஏனெனில், அறிவுள்ளவன் இன்பத்தையே அடைகிறான் என்றோ, மூடர்கள் மட்டுமே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றோ சொல்ல முடியுமா? அறிவுள்ளவனும் துன்பத்தில் வீழ் கிறான்; மூடனும் இன்பத்தை அடைகிறான். ஆகையால் நாம் நற்காரியம் செய்து, அதன் பலனாக சுகமாக இருக்கிறோம் என்று ஒருவன் நினைத்தால், அது அகம்பாவமே தவிர வேறில்லை.
‘தவிர, மனிதன் சுதந்திரமாக இயங்குபவன் என்றால், மரணத் தைத் தடுக்கும் வழியும் அவனுக்குத் தெரிந்திருக்கலாமே? கொலைக் களத்திற்குப் போகிற மனிதனுக்கு எப்படி நிம்மதி இருக்காதோ, அதே போல, சாகத்தான் போகிறோம் என்பது புரிந்த ஜீவராசிகளுக்கு ஏது நிம்மதி? அதாவது இது சுகம், இது இன்பம் என்று மனிதன் நினைப்பது, அறிவுடைய செயல் அல்ல. ஸ்வர்க்கத்திலாவது சுகம் கிட்டுமே என்று கூறினால் அதுவும் முழு உண்மை அல்ல. அங்கும் கூட, பிறர் அடைந்திருக்கும் இன்பம், ஒருவனை வாட்டக் கூடும்; பல யாகங்களையும் தவங்களை யும் செய்து ஸ்வர்க்கத்தையே அடைந்தாலும், அது தாற்காலிக மானதே. ஸ்வர்க்கத்தை அடைந்த மனிதன், செய்த புண்ணியம் குறைவை அடையும் போது, மீண்டும் பிறப்பெய்துகிறான். ஆக, அதுவும் கூட நிரந்தரமான அமைதி அல்ல.
‘ஞானமுள்ளவன், நான் இன்புறுகிறேன்; நான் துன்புறுகிறேன் என்றெல்லாம் நினைக்க மாட்டான். ஆகையால் அவனுக்கு ஆசையும் கிடையாது; ஏமாற்றமும் கிடையாது; வெறுப்பும் கிடையாது. சூரியன், நீரில் பிரதிபலித்தாலும், நீரின் குணத்தை அவன் அடைந்து விடுவதில்லை. காற்று பல இடங்களில் வீசினாலும், அந்த இடங்களின் தன்மையை அது பெற்று விடுவ தில்லை; அதே போல ஞானியானவன், தான் சம்பந்தப்படுகிற விஷயங்களில் ஒட்டுதலை ஏற்படுத்திக் கொள்ள மாட்டான்.
பரப்ரம்ஹத்தையே மனதில் நிறுத்தி, சலனமில்லாமல் அந்த தத்துவத்தையே நினைப்பது இயலவில்லை என்றால் – எந்தச் செயலை செய்தாலும், அதன் பலனை என்னிடம் அர்ப்பணம் செய்து, பற்றின்றி காரியங்களைச் செய்ய வேண்டும். என்னுடைய அவதாரக் கதைகளைக் கேட்டு, என் சரித்திரத்தை நினைத்து வந் தால், என்னிடம் உறுதியான பக்தி ஏற்படும். அப்படிப்பட்டவன், ஸாதுக்கள் சுட்டிக்காட்டுகிற என் இடத்தை அடைவான். ஆகையால் ஸாதுக்களின் சேர்க்கையை நாட வேண்டும்‘
இவ்வாறு கிருஷ்ணர் கூறியவுடன், உத்தவர் ‘ஸாதுக்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?’ என்று கேட்டார். அதற்கு பதில் உரைத்த கிருஷ்ணர், ஸாது என்பவனின் குண விசேஷங்களை விவரித்தார்.
‘ஸாதுக்களின் குணங்களைச் சொல்கிறேன். பிறர் துக்கத்தை ஸகிக்காமல் இருப்பது; ஒருவருக்கும் துரோகம் செய்யாமல் இருப்பது; பொறுமையைக் கடைப்பிடிப்பது; ஸுகம், துக்கம் இரண்டையும் சமமாகப் பாவிப்பது; எல்லோருக்கும் தன்னால் இயன்ற உதவியைச் செய்வது; ஆசை, காமம் ஆகியவற்றால் பீடிக்கப்படாமல் இருப்பது; இந்த்ரியங்களை அடக்குவது; கல் நெஞ்சம் உடையவனாகத் திகழாமல் இருப்பது; நல்லொழுக்கம் உடையவனாக இருப்பது; எதிலும் பற்று கொண்டு விடாமல் இருப்பது; குறைவாக உண்பது; மனத்தை அடக்குவது; தனக்குரிய தர்மத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பது; ஆபத்து காலம் என்று நினைக்கப்படக் கூடிய நேரத்திலும் தைரியத்தை கைவிடாமல் இருப்பது; பசி, தாகம், மோகம், கோபம் போன்றவற்றையெல்லாம் வென்ற நிலையில் இருப்பது; பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை உடையவனாக இருப்பது; கபடம் இல்லாமல் இருப்பது; கருணை நிரம்பியவனாக இருப்பது – ஆகியவை ஒரு ஸாதுவின் குணங்கள். என்னை கால தேசங்களைக் கடந்தவன்‘ என்று எவன் உணர் கிறானோ அவன் ஸாது.
எனக்கு பூஜை செய்வது; என்னுடைய விக்ரஹத்தை வணங்கு வது; என்னை துதிப்பது; கிடைப்பதைக் கொண்டு என்னை அர்ச்சிப்பது; என்னுடைய ஆலயத்தை சுத்தமாக வைக்க உதவுவது; அஹங்காரம், இறுமாப்பு போன்றவற்றைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் பக்தியுடையவன் கடைப்பிடிக்கக் கூடியவை.
–
ஸூர்யன், அக்னி, அதிதி, பசு, விஷ்ணு பக்தர்கள், ஆகாயம், வாயு,நீர்,பூமி,ஆன்மா, ஸகல ஜீவராசிகள்… ஆகியவற்றில் என்னை பூஜிக்கலாம். ஸூர்யனிடத்தில் வேதம் ஓதி என்னை பூஜிக்கலாம்; அக்னியில் ஹோமம் செய்து என்னை பூஜிக்கலாம்; உணவினால் திருப்தி செய்து அதிதியிடம் என்னை பூஜிக்கலாம்; புல் முதலியவற்றை உணவாகக் கொடுத்து, பசுக்களிடம் என்னை பூஜிக்கலாம்; பந்துக்களைப் போல ஆதரித்து, விஷ்ணு பக்தர் களிடம் என்னை பூஜிக்கலாம்; ப்ராணனாக பாவித்து ஆகாயத்தில் என்னை பூஜிக்கலாம்; நீரில் தர்ப்பணம் முதலியவை செய்து என்னை பூஜிக்கலாம்; பூமியில், யந்த்ரங்கள் முதலியவற்றை எழுதி வைத்து என்னை பூஜிக்கலாம்; யோக முறைகளைக் கடைப்பிடித்து ஆன்மாவில் என்னை பூஜிக்கலாம்; கருணை காட்டி யும், சமமாகப் பாவித்தும், ஸகல ஜீவராசிகளிடத்திலும் என்னை பூஜிக்கலாம்.
ஊர் மக்களின் நன்மைக்காக கிணறு தோண்டுவது, குளம் வெட்டுவது போன்ற தர்மங்களினால் என்னை ஒருவன் பூஜித்தால், அவனுக்கு என்னிடம் மாறாத பக்தி உண்டாகும். இந்த மாதிரி பழக்கம் எல்லாம் ஸாதுக்களுடன் சேர்வதால் உண்டாகும். ஸாதுக்களின் சேர்க்கையே, ஒருவனை ஸம்ஸாரக் கடலிலிருந்து மீட்கும். அனைவரும் கடைப்பிடிக்கக் கூடியதாக இதைவிட வேறு ஒரு வழியில்லை.
அஸுரர்களும், ராட்சஸர்களும் கூட ஸாதுக்களின் சேர்க்கை யால் மேன்மை அடைந்திருக்கிறார்கள். இப்படி ஸாதுக்களின் சேர்க்கையினால், நல்வழிகளை மேற்கொண்டு, என்னையே சரணடைந்து விடுவது பயமற்றவனாகத் திகழும் வழி.
‘உத்தவா! அவரவர்களுடைய கர்மத்திற்குத் தக்கவாறு, வெவ் வேறு மனிதர்கள், புத்தி மயக்கத்தினால் வெவ்வேறு அபிப்ராயம் கொண்டு, நன்மையை அடைவதற்கு வெவ்வேறு வழிகளைக் கூறுகிறார்கள். வேதத்தை அறியா விட்டாலும் கூட, பிறர் சொல் வதைக் கேட்டு, அரைகுறையாகத் தெரிந்து கொண்டு, அதுவே மேன்மைக்கு வழி என்று கூறுபவர்கள் உண்டு. நித்ய கர்மங் களையும், யாகம் போன்றவற்றையும் அனுஷ்டிப்பதே மேன்மை யுறும் வழி என்று வேறு சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர், புகழ் பெறுவதே மேன்மையுறும் வழி என்கிறார்கள். வேறு சிலரோ, செல்வமே பெரும் நன்மை என்று சொல்கிறார்கள். பிறருக்குக் கொடுத்து, தானும் அனுபவிப்பதே சிறந்த மார்க்கம் என்று சிலர் சொல்கிறார்கள். இப்படி அவரவர்கள், தங்கள் வினைப்பயனின்படி ஏற்பட்ட புத்தி பேதலிப்பால், பலவித கருத்துக்களைச் சொல் கிறார்கள். ஆனால் இந்த மார்க்கங்கள் எல்லாமே சிறிய பயன் தரக் கூடியவையே; இவை துக்கத்தை இறுதியாக அழிப்பவை அல்ல.
‘என்னிடத்தில் மனதை செலுத்தி, மற்றவற்றின் மீது பற்றில்லா மல் திகழ்பவனுக்குக் கிட்டுகிற அமைதிக்கு ஈடு கிடையாது. எல்லா ஜீவராசிகளையும் தனக்கு சமமாக நினைத்து, மற்ற எந்தப் பற்றினாலும் மனதை அலைபாயவிடாமல், என்னையே பற்றிக் கொள்பவன் என்னை அடைவான்’.
இவ்வாறு கூறிய கிருஷ்ணர், ப்ரும்மச்சாரி, இல்லறத்தில் இருப்பவன், வானப்ரஸ்தன் (வனத்தில் வசிப்பவன்) ஆகியோர் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களையும் எடுத்துரைத்தார். மேலும் பகவத் கீதையில் அர்ஜுனனுக்குக் கூறிய மாதிரி, ஒவ்வொன்றிலும் மேன்மையானவனாக, பல விஷயங்களிலும்தான் இருப்பதையும் அவர் உத்தவருக்குக் கூறினார்.
ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் ஆகியவற்றையும் கிருஷ்ணர் விளக்கினார். ‘கர்மங்கள் துக்கத்தையே தரும் என் றுணர்ந்து, அவற்றின் பயனிலும் ஆசை கொள்ளாமல் இருப்பவர் களுக்கு, உரிய மார்க்கம் – ஞான யோகம்; கர்மங்களைப் பற்றி மனதில் வைராக்கியம் ஏற்படாத நிலையில், கர்மங்களின் பலன் மீது ஆசை கொண்டிருப்பவர்களுக்கு – கர்ம யோகம் பலன் தரும்; கர்மங்களில் அதிகப் பிடிப்பில்லாமல், அவற்றின் பலனிலும் பெரும் பற்றில்லாமல், என்னுடைய சரித்திரத்தின் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருப்பவனுக்கு – பக்தி யோகம் உகந்தது’ என்பதை கிருஷ்ணர் விவரித்தார்.
உத்தவருக்கு கிருஷ்ணர் அளித்த விளக்கங்கள் மேலும் தொடர்ந்தன.