மஹாபாரதம், தனது தொடக்கத்திலேயே ராமாயணத்தி லிருந்து மாறுபடுகிறது. பல உன்னதமான குணாதிசயங்களைக் கொண்ட மனிதன் யாராவது இருக்கிறானா என்று வால்மீகி சிந்தித்த போது, நாரதர் அவருக்கு ராமரின் சரிதையை (அதுவரை நடந்தபடி) சுருக்கமாகச் சொல்கிறார்.
அதன் பின்னர், வேடுவனால் அடிக்கப்பட்ட பறவையை நினைத்து துயருற்ற வால்மீகி முனிவர், அந்த வேடுவனை சபிக்கிற போது, ஒரு உணர்ச்சிகரமான கவிதை பிறக்கிறது. பிறகு ப்ரும்ம தேவன் அருள் பெற்று, வால்மீகி ராமாயண காவியம் இயற்றி, ராமரின் மகன்கள் மூலமாகவே, அதை ராம சபையில் இசைக்க வைக்கிறார்.
மஹாபாரதம் என்கிற இதிஹாஸமோ, முற்றிலும் வேறு விதமான ஆரம்பத்தை உடையது. வியாசர், மஹாபாரத நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கு பெற்றவர். அவர் மஹாபாரதத்தை இயற்றி இருக்கிறார். (எழுத்தில் கொண்டு வரவில்லை) அப்போதுதான் ப்ரும்மதேவர், விநாயகரின் உதவிப் பெற்று அதை எழுத்தில் கொண்டு வருமாறு வியாசரிடம் கூறுகிறார். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் மஹாபாரதத்தை எழுதுகிறார்.
ராமாயணத்தின் தொடக்கமே, உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது; மஹாபாரதத்தின் தொடக்கமோ சிந்தனையை அடிப் படையாகக் கொண்டது. தொடக்கத்திலேயே தெரிகிற இந்த வித்தியாசம், இரண்டு இதிஹாஸங்களின் பல கட்டங்களில் வெளியாகிறது. ராமர் முன்னிலையில், அவர் கண்கலங்க கேட்டுக் கொண்டிருக்க, அவருடைய மகன்கள் வால்மீகியின் காவியத்தை பாடுகிறார்கள். இது ராமாயண அரங்கேற்றம்.
வியாசர் தான் படைத்த மஹாபாரதத்தை தன் மகனும், பெரும் ஞானியுமாகிய சுகருக்கு உபதேசிக்கிறார். மேலும் பல சீடர்களும் அவரிடமிருந்து மஹாபாரதத்தை தெரிந்து கொண்டார்கள். அவர் களில் ஒருவரான வைசம்பாயனர் – பாம்புகளை எல்லாம் கொன்று விடுகிற யாகத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஜனமேஜயனுக்கு, மஹாபாரதத்தைக் கூறினார். அதன் பின்னர், பல ரிஷிகளுக்கு ஸுதர் இதை எடுத்துச் சொல்கிறார்.
ராமாயணத்தில் உள்ள ஏகபத்தினி விரதம், மஹாபாரதத்தில் சிறப்பிடம் பெறவில்லை. தந்தை சொல் மிக்கதொருமந்திரமில்லை என்ற உபதேசத்தைக் காப்பாற்றி வாழ்கிற முக்கிய கதாபாத்திரம் எதுவுமில்லை. சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற ராமரின் உறுதியைக் காட்டுகிற பாத்திரமும் பாரதத்தில் இல்லை. ஆனால் ராமாயணத்தில் இல்லாத அளவிற்கு, கடுமையான ராஜநீதி பற்றிய கருத்துக்கள் மஹாபாரதத்தில் இருக்கின்றன. யுத்த தர்மம் என்பது பல இடங்களில் மீறப்படுகிற நிகழ்ச்சிகள் பாரதத்தில் இருக்கின்றன. ராஜநீதி, சாதாரண மனிதர்களுக்குரிய நீதியிலிருந்து மாறுபட்டது என்பதை உணர்த்துகிற நிகழ்ச்சிகளும், கருத்துக் களும் மஹாபாரதத்தில் பல டங்களில் வருகின்றன.
இரு இதிஹாஸங்களுக்கிடையே இருக்கிற இந்த வித்தியாசங் கள், அவை நடைபெற்ற யுக தர்மங்களைக் குறிப்பதாகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்தது. மஹாபாரதமோ துவாபர யுகத்தின் இறுதிப் பகுதியில் – அதாவது கலியுகம் தொடங்க இருக்கிற சமயத்தில் –நடந்தது. தர்மம், யுகந்தோறும் க்ஷுணமடைகிறது என்பதை, இந்த இரண்டு இதி ஹாஸங்களிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பாரதத்தில் இடம் பெறுகிற ‘கணிகர் வாக்கியம்‘ சற்றும் தாட் சண்யமற்ற ராஜநீதி. திருதராஷ்டிரனுக்கு கணிகர் என்பவரால் உரைக்கப்படுகிற இந்த நீதி, தர்ம நியாயங்களைப் பற்றி கவலை யற்று, இலக்கை நோக்கிச் செல்கிற வழிமுறையை விவரிப்பது. விதுர நீதியும், திருதராஷ்டிரனுக்கு உரைக்கப்படுவதுதான். இதை விவரிக்கிற விதுரன், தர்மதேவதை அம்சம். அவருடைய கருத்துக் களில், தர்மத்தின் சிறப்பைக் காணலாம். சாந்தி பர்வம் என்ற பகுதியில் பீஷ்மரின் உபதேசங்கள் இடம் பெறுகின்றன. இது, அம்புப் படுக்கையில் இருக்கிற பீஷ்மர், தர்மபுத்திரருக்கு விளக்கிச் சொல்கிற பல அறிவுரைகளை உள்ளடக்கியது. இதில் நடைமுறை அரசியலையும் காணலாம்; உயர்ந்த லட்சியமாகக் கொள்ள வேண் டிய ஆட்சி முறைமையையும் காணலாம்.
இப்படி ராஜநீதியை பல கோணங்களிலிருந்து அணுகுகிற ஒரு நூல், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக இயற்றப்பட்டது என்பது பிரமிக்கத்தக்க விஷயம். இன்றைய ஆட்சியாளர்கள் கூட ஏற்றுக் கொண்டு, நடைமுறைப்படுத்தக் கூடிய பல அரசியல் வழிமுறைகள் இவற்றில் கொட்டிக் கிடக்கின்றன.
பாண்டவர்களுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை துரியோதனன் இன்னமும் எடுக்காத நேரம். திருதராஷ்டிரனே கூட அந்த சமயத்திலேயே, பாண்டவர்களின் புகழ் ஓங்கி வருவது கண்டு, கவலை கொள்ள ஆரம்பித்திருந்தான். அப்போது அவ னுடைய மந்திரிகளில் ஒருவனாகிய கணிகர் என்கிற அந்தணரை அவன் அழைத்தான். (இந்த கணிகர், சகுனியின் மந்திரி என்று சில நூல்கள் கூறுகின்றன.)
‘என் மகன்களை விட, பாண்டவர்களின் புகழ்தான் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கணிகா! இது என் மனதை கவலைக்குள் ளாக்குகிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். என்பதை எனக்குச் சொல்வாயாக!’ என்று கூறினார் திருதராஷ்டிர
மன்னர்.
இதற்கு பதில் அளித்த கணிகர் எடுத்துரைத்த வழிமுறைகள் தான் ‘கணிக வாக்கியம்‘. கணிகர் கூறியது, தர்ம நியாயங்களின் அடிப்படையில் அமைந்த கருத்துக்கள் அல்ல. வைசம்பாயனர் பாரத நிகழ்ச்சிகளை, ஜனமேஜய மன்னனுக்கு எடுத்துரைத்த போது, கணிக வாக்கியத்தை அவர் விவரிக்கக் கேட்ட மன்னன், ‘கணிகர் கூறிய தீய உபதேசத்தைக் கேட்ட திருதராஷ்டிர மன்னர், பின்னர் என்ன செய்தார்?’ என்று கேட்கிறான். இவ்வாறு, கணிக வாக்கியம் – கெட்ட உபதேசம் என்ற விமர்சனம், பாரதத்திலேயே இடம் பெறுகிறது.
ஆனால் கணிகர் கூறிய கருத்துக்கள் மாதிரியே, சில, பீஷ்மர் விவரிக்கிற ராஜ தர்மத்தில் இடம் பெறுகின்றன. அதே சமயத்தில், அம்மாதிரி வழிமுறைகள் ஆபத்துக் காலத்தில் மட்டுமே ஒரு அரசனால் கடைபிடிக்கத் தக்கவை என்றும் பீஷ்மர் கூறுகிறார்.
கூ
கணிகர் கூறிய நீண்ட உபதேசத்தில், ஒரு சிறு பகுதியைப் பார்ப்போம். அது முழுமையாக, தீமையான உபதேசம் அல்ல. நடைமுறைக்கு மிக அவசியமானதும், உதவியானதுமாக அமைகிற பல அறிவுரைகள் கணிக வாக்கியத்தில் இடம் பெறுகின்றன. என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதே மாதிரி கருத்துக்கள், வேறு பல இடங்களில், வேறு நூல்களில் கூட இடம் பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. கணிகர் சொல்கிறார்:
‘ஒரு காரியம் செய்ய முற்பட்டால், அதை முழுமையாக செய்து முடித்து விட வேண்டும்; காலில் குத்திய முள்ளைக் கூட முழுமையாக வெளியே எடுத்து எறியவில்லையென்றால், அதுவே பின்னர் ரணம் ஆகிவிடுகிறது. ஆகையால் எதிரியை அடக்கும் போது, அவனை முழுமையாக நாசம் செய்துவிட வேண்டும்…
சில நேரங்களில், அரசன் ஒரு குருடன் போலவும், ஒரு செவிடன் போலவும் நடந்து கொள்ள வேண்டும். தண்டிக்கப்பட வேண்டிய ஒருவனை, தண்டிக்க இயலாத சூழ்நிலை உண்டாகி விட்டால் – அப்போது, அவனை தண்டிக்க இயலவில்லை என் பதை அரசன் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. தண்டனைக்குரிய தாக எதுவுமே நடந்து விடவில்லை என்பது போல், அரசன் பாவனை செய்ய வேண்டும். தண்டனைக்குரிய காரியம் நடந்ததைப் பாராத குருடன் போலவும், அது பற்றி எதுவுமே கேள்விப்படாத செவிடன் போலவும் அரசன் இருந்துவிட வேண்டும். பின்னர் சரி யான சந்தர்ப்பம் கிட்டும்போது, தண்டனையை வழங்கலாம்…
‘எதிரிகளின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் ஓநாய் போல பாய்ந்து அவர்களைக் கொன்றுவிட வேண்டும். ஆசை காட்டுவது, செல்வத்தை விநியோகிப்பது, பகை மூட்டி விடுவது போன்ற வழிமுறைகளினால் எதிரியின் கூட்டாளிகளைப் பிளக்க வேண் டும்; தேவை ஏற்படுகிற போது, அவர்கள் மீது பலத்தையும் பிரயோகிக்கலாம்…
‘எதிரி கோபம் அடைகிறபோதும் கூட, அவனிடம் மகிழ்ச்சி யுடன் இருப்பது போல அரசன் நடந்து கொள்ள வேண்டும்; சிரித்துக் கொண்டே பேச வேண்டும்; அரசனின் மனதில் உள்ள கோபம் எதிரிக்குத் தெரியக் கூடாது; தனக்கு வேண்டியவர்கள், எதிரியை கடுமையாகப் பேசினால் கூட அதைத் தடுக்க வேண்டும். இப்படி நடந்து கொண்டு, சரியான தருணம் பார்த்து எதிரியை அடித்து வீழ்த்தி விட வேண்டும். அப்படி வீழ்த்திய பிறகு, எதிரிக்கு நிகழ்ந்த துன்பத்திற்கு, மிகவும் வருந்துவது போல் நடிக்க வேண் டும். அப்படிச் செய்தால் அவனிடம் அன்பு உள்ளவர்கள் கூட, உங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள்…’
அழிக்கிற காலம் வருகிற வரையில், எதிரியை உமது தோளில் சுமந்து நீர் சென்றாலும், தவறில்லை. சரியான சந்தர்ப்பம் கிட்டியவுடன், பாறாங்கல்லின் மீது மண்பாண்டத்தை வீசியெறிந்து உடைப்பது போல, அந்த எதிரியைக் கொன்று போட வேண்டும்…
‘எதிரிகளை நாசம் செய்யாமல் – அவர்களிடம் வன்முறையைக் கடைப்பிடிக்காமல், ஒரு அரசன் வளர்ந்து விட முடியாது. மீன்களைப் பிடிக்காமலும், அவற்றை சாகடிக்காமலும், மீன வர்கள் ஜீவிக்க முடியுமா? அதே போல்தான் அரசன் நிலையும்…
‘எதிரியுடன் சமாதானம் செய்து கொண்டு விட்டோம் என்று நினைத்து, அவனிடம் அரசன், நம்பிக்கை கொண்டு, நிம்மதியை இழந்துவிடக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும்…
இல்லாதவர்கள், இருப்பவர்களை நாடி உதவி கோருவது இயற்கை. அவர்கள், அரசனை அப்படி நாடி வருவது தேவையின் காரணமாகத்தானே தவிர, அன்பின் காரணமாக அல்ல. தேவை நீங்கி விட்டால், இல்லாதவனும், இருப்பவனைத் தேடி வர மாட்டான். ஆகையால், ஒருவர் மூலமாக, அரசனுக்கு சில காரியங்கள் நடக்க வேண்டியிருந்தால், அவனுடைய தேவைகளை, அரசன் முழுமை யாக நிறைவு செய்து விடக் கூடாது. தேவை பூர்த்தியாகி விட்டால், அரசனின் காரியம் பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அதே சமயத்தில், ஒருவனை திருப்தி செய்தால்தான், அவன் நமக்கு வேண்டிய காரியத்தைச் செய்வான்; ஆகையால் அவனுக்குத் திருப்தி தோன்றுமாறு அரசன் அவனுக்கு உதவ வேண்டும்; ஆனால் அவனுக்கு முழுத் திருப்தி தோன்றுகிற அளவுக்கு உதவிவிடக் கூடாது.’
இப்படி கணிகர் கூறிய மாதிரி ராஜ நீதி
ராமாயணத்தில் யாராலும் சொல்லப்படவில்லை. யுக மாறுதல், இப்படியெல்லாம் சிந்தனையைத் தூண்டியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஆனால், கணிகர் வாக்கியத்தில் கூட ‘எதிரிகளிடம் அரசன் நடந்து கொள்ள வேண்டிய வழி’ என்பதை விவரிக்கிற போதுதான், இம் மாதிரி தயை, தாட்சண்யமற்ற, நியாயத்திற்கு அப்பாற்பட்ட, வழிமுறைகள் வற்புறுத்தப்படுகின்றன. எதிரிகளிடம் காட்டப்பட வேண்டிய இந்த அணுகுமுறை, மக்களிடம் பிரயோகிக்கத் தக்கவை
அல்ல.
இது மிகத் தெளிவாகவே பாரதத்திலும் கூறப்படுகிறது. மக்க ளுக்கு நன்மையே செய்ய வேண்டுமென்றும், தேசத்தை நிர்வகிப் பதில் சற்றும் நீதி தவறக் கூடாது என்றும், ராஜநீதியின் பல வகை விளக்கங்களும் வற்புறுத்துகின்றன. ‘மக்களைப் பொறுத்தவரை யில் நீதிமான்; எதிரிகளைப் பொறுத்தவரையில் கருணையற்றவன்
என்பதே அரசனின் நிலையாக இருக்க வேண்டும். கணிக வாக்கியம் கூட, மக்களுக்கு நல்லதையே செய்து, அவர்களுடைய அன்பைப் பெறுவது அரசனின் கடமை என்று வலியுறுத்துகிறது.
இதையெல்லாம் பார்க்கிறபோது, நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் – இவற்றின் பழமை. மஹாபாரத நிகழ்ச்சிகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவை. அப்போதே கூட, அரசியல் சிந்தனை எவ்வளவு தீவிரமாக இயங்கியிருக்கிறது என்பதை கவனித்தால், வியப்புதான் ஏற்படுகிறது. மோட்ச மார்க்கம் பற்றி மட்டும் அன்றைய சிந்தனை செயல்பட்டு நின்றுவிட்டது என்று சொல்ல முடியாது; மேல் உலக நற்கதிக்காக, இவ்வுலக காரியங்களை அன்றைய சிந்தனை அறவே புறக்கணித்தது என் றும் கூற முடியாது.
அன்றைய சிந்தனையாளர்கள், ஆராயாத விஷயம் இல்லை என்று கூறுகிற அளவிற்கு, அவர்களுடைய சிந்தனை பரந்து விரிந்து கிடந்தது. அதுவும் அரசியல் பற்றி, நாட்டு நிர்வாகம் பற்றி, அன் றைய சிந்தனையாளர்கள் நிறையவே கவனம் செலுத்தியிருக் கிறார்கள். இந்த உண்மை, மஹாபாரதத்தில் நடக்கிற நிகழ்ச்சிகள் மூலமாகவும் நமக்குத் தெரிய வருகிறது.