இதிஹாஸங்கள் – 10

இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடிய பல விஷயங்

களைப் பற்றி ஆராய்ந்திருப்பது, மஹாபாரதத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. வெவ்வேறு பாத்திரங்களிடையே நடக்கும் விவாதங்கள், கற்றறிந்தவர்கள் சிலர் கூறுகிற உபதேசங்கள், மன்னர்களின் கருத்துக்கள் போன்ற பல வகைகளில், வாழ்க்கையின் பல அம் சங்கள் விரிவாக அலசப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் விவரமாகப் பார்ப்பது இந்தத் தொகுப்பின் நோக்கமல்ல; மஹா பாரதம் தெளிவாக்குகிற இம்மாதிரி கருத்துக்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

சூதாட்டத்தில் தோற்று, பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது ஒருமுறை,கோபம், பொறுமை ஆகியவற்றின் பலன்களைப் பற்றி பாண்டவ சகோதரர்களும், திரௌபதியும் பேசிக் கொண்டிருந் தார்கள். திரௌபதியும், பீமனும் கோபத்தின் அவசியத்தை வற்புறுத்திப் பேச, தர்மபுத்திரர் பொறுமையின் மேன்மையை விவரித்தார். அந்த விவாதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இன் றைய உலகிற்கும் கூட பொருந்துகிறவையாக அமைந்துள்ளன.

எப்போதுமே பொறுமையைக் கடைப்பிடிப்பவனை அவ னுடைய எதிரிகள் மட்டுமல்லாமல், அவனுடைய வேலைக் காரர்களே கூட அவமதிப்பார்கள்; அதனால்தான் கற்றவர்கள் கூட எப்போதுமே பொறுமையை மட்டுமே கடைப்பிடிப்பதில்லை. எந்த எஜமானன், எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக் கிறானோஅவனுடைய வேலையாட்கள், அவனுடைய பொறு மையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவனுடைய வாகனம், அவர்களுடைய வாகனம் ஆகிவிடும்; அவனுடைய இருப்பிடம், அவர்களுடைய இருப்பிடம் ஆகி விடும். மனைவி, மகன் உட்பட எல்லோருமே அவனை அவ மதிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒருவனால் ஒரு தொல்லையும் ல்லை என்றால், அவனை யாரும் மதிப்பதில்லைஎன்று திரௌபதி சொல்லி, இதற்கு ஆதாரமாக பிரஹலாதன் கூறிய கருத்துக்களை எடுத்துக்காட்டுகிறாள்.

அதே சமயத்தில் பிரஹலாதனே கூறிய ஒருஎச்சரிக்கைக் கருத்தும் திரௌபதியினாலேயே விவரிக்கப்படுகிறது. ‘எப் போதுமே கோபத்தையே கடைப்பிடிப்பது என்பதும் தவறுதான். கோபமுள்ளவன் தனது நண்பனையும் இழக்கிறான். எல்லோருக் குமே அவன் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அவனுக்கு ஆதரவின்மை என்கிற நிலை உண்டாகி, அதுவே பொருள் நஷ்டம் என்பதில் முடிகிறது. உறவினர்கள், தான் ஈட்டிய பொருள், மன நிம்மதி ஆகிய மூன்றையும் கோபக்காரன் இழந்து விடுகிறான்‘.

இவ்வாறு கூறிய திரௌபதி, கோபிக்க வேண்டிய சமயத்தில் கோபத்தையும், நிதானிக்க வேண்டிய நேரத்தில் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதிடுகிறாள். யாரிடத்தில் எந்த நேரத்தில் கோபம் காட்டப்பட வேண்டும் என்பதையும் திரௌபதி குறிப்பிடுகிறாள்.

தர்மபுத்திரரோ, பொறுமையின் சிறப்பை பெரிதும் வலியுறுத்து கிறார். ‘கோபத்தை அடக்காதவனுக்கு, எது சொல்லத் தக்கது, எது சொல்லத் தகாதது என்று பாகுபாடே இல்லாமற் போகும். சொல்லத் தகாதது, செய்யத் தகாததுஎன்று எதுவுமே அவனுக்கு இல்லாமற் போய்விடுகிறது. இதன் காரணமாக, அவன் பெரி யோரையும் அவமதிக்கிறான். சக்தியுள்ளவன் கோபப்பட்டால், அவனுடைய எதிரிகளையும் அவன் அழிக்கிறான்ஆனால் அவ னுக்கும் அதே போன்ற அழிவு பின்னர் ஏற்படுகிறது; சக்தியற்றவன் கோபப்பட்டாலோ, அவனுக்கு பெரும் இழப்போ, மரணமோதான் நேரிடுகிறது. ஆகையால் வலிமை இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, ஒருவன் கோபப்படக் கூடாது; அது இறுதியில் அழிவையே தரும். தீர ஆலோசித்து ஒரு செயலைச் செய்து முடிப்பது என்பது, கோபக்காரனுக்கு முடியாமற் போகிற காரியம்; அதனால் கோபம் தவிர்க்கப்பட வேண்டும். பொறுமைதான் சிறந்த தர்மம்‘.

இப்படி இரு தரப்பு வாதங்கள், இன்னமும் விவரமாக பாரதத் தில் இடம் பெறுகின்றன. மனித வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி சிந்தித்து, எது நல்லது எது நல்லதல்ல என்று கூறுகிற இது போன்ற பகுதிகள், பாரதத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

நகுஷன் என்கிற மன்னன் ஒரு சாபத்தின் காரணமாக மலைப் பாம்பாக உருவெடுக்கிறான். காட்டில் ஒருநாள் பீமன் வேட்டை யாடச் சென்ற போது, இந்த மலைப்பாம்பு அவனை பிடித்து விடுகிறது. பெரும் பலசாலியான பீமனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. பிறகு அங்கே வருகிற தர்மபுத்திரரிடம், சில கேள்விகளை மலைப்பாம்பு கேட்க, அவர் அதற்கு சரியான விடைகளை அளிக்க, சாப விமோசனம் பெற்ற நகுஷன் தனது பழைய உருவத்தை அடைகிறான். நகுஷனுக்கும், தர்மபுத்திரருக் கும் இடையே நடந்த உரையாடலில், ஒரு முக்கிய அம்சம்,வர் ணங்கள் பற்றிய கேள்வி.

எவன் பிராம்மணன் என்று கருதப்படுகிறான்? என்பது நகுஷன் கேட்ட கேள்விகளில் ஒன்று.

தர்மபுத்திரர், ‘எவனிடம் உண்மை, பொறுமை, இரக்கம், நல் லொழுக்கம், தவம் ஆகியவை இருக்கின்றனவோ, அவனே பிராம்மணன் என்று கருதப்படுகிறான். ஒரு பிராம்மணனுக்குப் பிறந்ததால், ஒருவன் பிராம்மணனாகி விட மாட்டான். மேலே சொன்ன குணங்கள் உடையவனே பிராம்மணன்என்று பதில் அளிக்கிறார்.

அடுத்து நகுஷன், ‘ஒழுக்கமான நடத்தையினால்தான் ஒருவன் பிராம்மணன் ஆகிறான் என்றால் மற்ற வர்ணங்களைச் சார்ந்தவர்களும், குணத்தைப் பொறுத்தே குறிப்பிட்ட வர்ணத்தைப் பெறுகிறார்களா?’ என்று கேட்டான்.

தர்மபுத்திரர் பதில் அளித்தார்: ‘வர்ணக் கலப்பு என்பது தவிர்க்க முடியாதது; அதனால் பிறப்பின் மூலம் இன்ன வர்ணம் என்று நிர்ணயிக்க முடியாது. இது பிறப்பை வைத்துக் கூற முடியாத விஷயம் என்பதற்கு வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது. ‘நாங் கள் எந்த வர்ணத்தவர்களாக இருக்கிறோம் என்பது தெரியாது; இருந்தாலும் இந்த யாகத்தைச் செய்கிறோம்என்பது அந்த மந்திரம். அதாவது, பிறப்பின் மூலம் நிச்சயிக்கப்படத் தக்கதல்ல, வர்ணம். அதனால்தான் கற்றறிந்தவர்கள், அவரவர்களுடைய நடத்தையையும் குணத்தையும் வைத்தே, வர்ணத்தை நிச்சயிக் கிறார்கள்‘.

யார் பிராம்மணன்? – என்பது பற்றிய விளக்கம், பாரதத்தில் வேறு இடங்களிலும் வருகிறது. வனத்தில் வசித்தபோது, ஒரு சமயம், நீர் நிலையைப் பாண்டவர்கள் தேடினார்கள்; முதலில் நகுலன் ஒரு குளத்தைக் கண்டான். அவன் அதில் இறங்கி, நீர் அருந்த முனைந்த போது, ‘என் கேள்விகளுக்கு பதில் அளித்தால், நீ நீர் அருந்தலாம்என்று ஒரு குரல் கேட்டது. சுற்றுமுற்றும் யாரும் கண்ணில் படாததால், நகுலன், இந்தக் குரலை அலட்சியம் செய்து, தண்ணீரைக் குடித்தான். சாய்ந்தான். இதே கதி, பின்னர் ஒவ் வொருவராக வந்த சகாதேவன், அர்ஜுனன், பீமன் ஆகியோருக்கும் நேர்ந்தது. இறுதியில் தர்மபுத்திரர் அங்கு வந்தார். குரல் அதே எச்ச ரிக்கையை ஒலித்தது.

நீ யார்?’ என்று கேட்டார் தர்மபுத்திரர். அப்போது, பயங்கர உருவத்துடன் தோற்றம் அளித்து, தர்மபுத்திரரின் முன் நின்ற யக்ஷன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கேள்விகளை அடுக்க ஆரம் பித்தான். ‘யக்ஷப் பிரச்னம்என்ற பிரபலமான பகுதி இது. (யக்ஷர் கள் தேவர்களில் ஒரு பிரிவினர்). பிரச்னம் என்றால் கேள்வி. யக்ஷர் களின் கேள்விகள்யக்ஷ பிரச்னம். யக்ஷனின் கேள்விகளுக்கு தர்மபுத்திரர் பதில்கள் அளித்த பின்னர், அந்த யக்ஷன் தனது சுய உருவை எடுத்துக் கொண்டு, அவர் முன்பாக நின்றான். அவர்தான் தர்மதேவன். அவருடைய அருளினால்தான் குந்தி, தர்மபுத்திரரைப் பெற்றாள். தர்மபுத்திரர் தந்த பதில்களால் திருப்தியுற்ற தர்மதேவன் அவரை ஆசீர்வதித்து, மறைந்தார்.

இந்த யக்ஷப் பிரச்னத்தில், பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று இது : ‘பிறப்பு; வேதம் ஓதுவது; தர்ம சாஸ்திரங் களைப் பற்றிய அறிவு; ஒழுக்கம்இவற்றில் எதன் மூலம், ஒருவன் பிராம்மணத்துவத்தை அடைகிறான்?’

தர்மபுத்திரர் சொன்னார் : ‘பிராம்மணத்துவம் உண்டாவதற்குக் காரணம் வேதம் ஓதுவதோ, தர்ம சாஸ்திர அறிவோ, பிறப்போ அல்ல. ஒழுக்கம்தான் பிராம்மணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்க மற்றவன் பாழானவன்; கல்வியும், சாஸ்திர அறிவுமே பய னுள்ளவை என்று தீர்மானித்து, அதையே பற்றுகிறவன் மூடன். தான் கற்ற சாஸ்திரப்படி நடப்பவன்; ஒழுக்கம் தவறாதவன்; யாகத் தில் பற்றுள்ளவன்; இந்த்ரியங்களை அடக்கியவன் எவனோ, அவனே பிராம்மணன் ஆகிறான்‘.

தே கருத்து, சாந்தி பர்வதத்திலும் கூறப்படுகிறது. அம்புப் படுக்கையில் படுத்திருந்த நிலையில் அறிவுரைகளை நாடி வருகிற தர்மபுத்திரருக்கு, பீஷ்மர் பல உபதேசங்களைச் செய்கிறார். அதை விளக்குகிற பகுதிதான் சாந்தி பர்வம். பீஷ்மரும், ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட மாதிரி, பிறப்பினால் மட்டும் ஒருவன் பிராம்மணன் ஆகிவிட மாட்டான் என்று கூறுகிறார்.

இந்த விளக்கங்கள் பற்றி நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். முதலில் சொல்லப்பட்ட நகுஷன் தர்ம சாஸ்திரங்களை பரிபூர்ணமாக அறிந்து, ஞானி என்று ஏற்கப்பட்ட வன். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட யக்ஷனோ, தர்மதேவன். மூன்றாவதாக நாம் பார்த்த பீஷ்மரோ, கிருஷ்ணராலேயே போற்றப் பட்டவர். ‘பீஷ்மர், நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்த வர்; கல்விக்கெல்லாம் இருப்பிடமானவர்; மனிதர்களில் உயர்ந்த வரான அந்த பீஷ்மர் மறைகிறபோது, இவ்வுலகில் நிலவுகிற கல்வியின் தரமும் குறைவை எய்தும். ஆகையால் இப்போதே அவரை அணுகி, க்ஷத்ரிய தர்மம், வைதிக தர்மம், ராஜ நீதி போன்ற எல்லாவற்றைப் பற்றியும், சரியான விளக்கங்களைப் பெறு வாயாக!’ என்று தர்மபுத்திரரிடம் கூறுகிறார் கிருஷ்ணர்.

இப்படிப்பட்ட மூவர் – நகுஷன், தர்மதேவன், பீஷ்மர் ஆகி யோர் மூலமாக மஹாபாரதத்தில், வர்ணங்கள் என்பதை, பிறப்பை வைத்து நிச்சயிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஏன் இந்த அவசியம் வந்தது? யுக தர்மம்தான் காரணம். கலியுகம் நெருங்கிக் கொண்டிருந்ததால், தர்மங்கள் rணித்தக் கொண்டிருந்தன. பிறப் பினாலேயே வர்ணங்கள் என்ற நிலை தோன்ற ஆரம்பித்ததால் – அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டது. நடத்தை, குணம், வாழும் வகை, ஆகியவற்றை வைத்துத்தான் ஒருவனுடைய வர்ணம் நிச்சயிக்கப்பட முடியும் என்று மஹாபாரதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளமைக்கு இதுதான் காரணம்.

இன்னொரு விஷயத்தையும், மஹாபாரதம் தெளிவாக்குகிறது. பிராம்மணன் (உண்மையிலேயே அப்படி வாழ்ந்தவன்) வணங்கு தற்குரியவன். ஆனால் பிராம்மண, வைசிய, சூத்ர – வர்ணங்கள், க்ஷத்ரிய வர்ணத்தை சார்ந்து நிற்பவையே.

பீஷ்மர் சொல்கிறார்: ‘பிராம்மண தர்மம் எவ்வளவுதான் போற்றுதலுக்குரியதாக இருந்தாலும், வைசிய, சூத்ர தர்மங்களில் எவ்வளவு சிறப்பு இருந்தாலும் – அவை எல்லாமே, க்ஷத்ரி யனின் ராஜதர்மத்தை சார்ந்து நிற்பவையே. ஒரு யானையின் பாதச்சுவட்டில், மற்ற மிருகங்களின் பாதச்சுவடுகள் அடங்கிவிடும். அதுபோல, அரசனின் தர்மத்தில், மற்ற மூன்று வர்ணத்தாரின் தர்மங்கள் அடங்கி விடுகின்றன. ராஜதர்மம் அழிவுற்றால், அழி யாத வேதங்கள் கூட அழியும். எல்லா துறவு நிலைகளும், அனைத்து கல்விகளும், ராஜ தர்மத்தைச் சார்ந்து நிற்பவையே என்பதால், அதைவிட சிறந்த தர்மம் இல்லை

இப்படி பரந்த, ஆழ்ந்து, விரிந்த சிந்தனை உடையவர்களாகத் திகழ்ந்த முன்னோர்களைத்தான், இன்றைய விமர்சகர்கள், ‘பிறப் பில் பேதம் கற்பித்தவர்கள்’ என்று வர்ணிக்கிறார்கள். இதனால் ஏற்படக் கூடிய நஷ்டம், அந்தப் பெரியவர்களுக்கு அல்ல.