தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கி இருந்த நேரம்…
தேனம்பாக்கம். தேன் போன்ற தித்திப்பான வேத கோஷங்கள் ஒரு காலத்தில் எந்நேரமும் முழங்கிக் கொண்டிருக்கும் இடம் என்பதால் அதை தேனம்பாக்கம் என அழைத்தார்களாம். காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் பணி புரிந்த பெரும்பாலான அர்ச்சகர்கள் இங்கே குடி இருந்தார்கள். இந்த இடம் மகா பெரியவாளுக்கு மிகவும் இஷ்டமானது. இங்கே தங்குவதை அவர் பெரிதும் விரும்புவார். ஒரு குடில் அமைத்து கிணறு மற்றும் தோட்டம் போன்ற அமைதியான சூழ்நிலையில் தேனம்பாக்கத்தில் தங்கி இருப்பது அவருக்கு சுகமோ சுகம். இன்றைக்கும் மகா பெரியவாளின் சாந்நித்தியம் அதிகம் துலங்கும் பூமி இது.
அப்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த எல்.என். மிஸ்ரா (லலித் நாராயண மிஸ்ரா) காஞ்சிப் பெரியவாளைத் தரிசிப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்து விட்டு, அங்கிருந்து காவலர்கள் புடை சூழ, தேனம்பாக்கம் வந்தார். பழ வகைகள் இத்யாதிகளை வாங்கிக் கொண்டு வந்து அவற்றை எல்லாம் பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். மத்திய அமைச்சரிடம் ஸ்வாமிகளும் அரை மணி நேரத்துக்கு மேல் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்த பின், மத்திய அமைச்சர் புறப்படும் வேளை வந்தது.
அப்போது பிரமாதமான ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை மிஸ்ராவுக்கு அணிவிக்கச் சொன்னார் பெரியவா. மடத்தின் சார்பாகத் தனக்குக் கிடைத்த இந்த மரியாதையை பெரிய அங்கீகாரமாகக் கருதினார் மிஸ்ரா. “தன் வாழ்நாளில் இது போன்ற ஒரு பாக்கியம் கிடைத்ததே இல்லை. எல்லாமே மகா பெரியவாளின் அருள்தான்“ என்று அங்கு கூடி இருந்த பக்தர்களிடத்தில் பெருமிதத்துடன் கூறி சந்தோஷமாகப் புறப்பட்டார்.
அதே மத்திய அமைச்சர் சரியாக ஒரு மாதம் கழித்து மகா ஸ்வாமிகளைத் தரிசிக்கத் தேனம்பாக்கம் வந்தார். இந்த முறையும் ஏராளமான பழ வகைகளைக் கொண்டு வந்திருந்தார். பெரியவாளைத் தான் தரிசிக்கப் போகும் அந்தப் புனிதமான நேரத்துக்காகக் காத்திருந்தார்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. இத்தனைக்கும் முக்கியமான பிரமுகர்கள் எவரும் உள்ளே இல்லை. மகா ஸ்வாமிகள் மட்டும்தான் இருக்கிறார்.
‘ஏன் இன்னும் தன்னை அழைக்கவில்லை‘ என்று குழம்பினார் மிஸ்ரா.
அதற்கான காரணம் மிஸ்ராவுக்குத் தெரிந்தால் என்ன ஆவது? அப்படியே இருந்தாலும், அந்தக் காரணத்தைச் சொல்லத்தான் முடியுமா?
முதல் முறை தன்னிடம் கனிவுடன் இந்தியில் அரை மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்த பெரியவா, இந்த முறை ஏன் தன்னைக் காக்க வைத்திருக்கிறார் என்பது புரியாமல் மிஸ்ரா குழம்பிக் கொண்டிருந்தார். ‘ஒரு மத்திய அமைச்சரை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரே‘ என்கிற சிறு சலிப்பும் மிஸ்ராவுக்கு வந்தது. இருந்தாலும், மகானின் தரிசனத்துக்காக மவுனம் காத்து அமர்ந்திருந்தார்.
அரை மணி நேரம் ஓடியது. திடீரென பெரியவாளின் அறைக்கு வெளியே பரபரப்பு கூடியது. அறைக்குள் இருந்து வேக வேகமாக வந்த ஒரு சிஷ்யர், “பெரியவா வந்து கொண்டிருக்கிறார். ஒதுங்கி நில்லுங்கள்“ என்று அங்கே குறுக்கும் நெடுக்குமாகக் கூடி நின்றிருந்த பக்தர்களிடம் வலக் கையை ஆட்டி சைகை செய்தார்.
தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து மிஸ்ராவும் எழுந்து நின்றார். தான் வந்திருப்பது முறையாக அறிவிக்கப்பட்டும் ஏன் தன்னை அறைக்குள் அழைத்து ஆசிர்வதிக்காமல் வெளியே வருகிறார்? ஏதாவது அவசர காரியமாக வெளியே எங்கேனும் கிளம்புகிறாரோ என்கிற சந்தேகத்தில் சைகை காட்டி அறிவிப்பு செய்த அந்த சிஷ்யரிடம் கேட்டார்: “பெரியவா எங்கேயும் வெளியே போகிறாரா?“
சிஷ்யனும், “இல்லையில்லை. எங்கும் போகவில்லை. அவர் திடீரென ஏன் தன் ஆசனத்தை விட்டு எழுந்தார் என்பது எங்களுக்கும் புரியவில்லை. சில நேரங்களில் மகான்களின் வித்தியாசமான செயல்பாடுகளை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ளவும் கூடாது“ என்று இந்தியிலேயே மிகவும் மரியாதையுடன் மிஸ்ராவிடம் தெரிவித்தான்.
குழம்பிய மன நிலையில் காணப்பட்டாலும், வெளியே வரப் போகின்ற அந்தக் கலியுக தெய்வத்தை உளமார வணங்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தன் இரு கைகளையும் கூப்பிய நிலையில் அந்த அறையின் வாசலையே பார்த்த வண்ணம் இருந்தார்.
இதோ, அந்தப் பரப்பிரம்மம் தண்டம் ஏந்தி வெளியே வருகிறது. எப்போதும் புன்னகைப் பொலிவுடன் தேஜஸாக இருக்கும் அந்த முகம் அன்று சற்றே வித்தியாசமாக இருப்பதை க்ஷண நேரத்தில் மிஸ்ரா உட்பட – அங்கிருந்த அனைவருமே உணர்ந்தனர்.
மகானின் தரிசனத்தைக் கண்ட பல பக்தர்களும், அவரது பாதார விந்தங்களில் விழுந்து தொழுதனர். தங்களது பிரார்த்த னைகளை அந்தக் கருணைத் தெய்வத்திடம் கொட்டி விடலாமா என்று பலரும் ஏங்கினர். பிறகு, பெரியவாளின் நிலை அறிந்து அதைத் தவிர்த்து, உளமார தரிசித்தனர்.
மிஸ்ராவின் அருகே பெரியவா நெருங் கினார். புன்னகைத்த முகத்துடன் அந்த மகானை வணங்கிய மிஸ்ராவைப் பார்த்து, “உன் சம்பந்தப்பட்ட வேலைகளை வெகு சீக்கிரமே முடித்துக் கொள்“ என்று அவருக்கு பதில் சொல்லி விட்டு, எவரும் எதிர்பாரா வண்ணம் மீண்டும் தன் அறைக் குள் சென்று விட்டார் பெரியவாள்.
மிஸ்ரா குழம்பினார். ‘இந்த முறை பெரியவாளின் தரிசனம் இவ்வளவுதான் போலிருக்கு‘ என்று மனதைத் தேற்றிக் கொண்டார். அதோடு, ‘பெரியவா ஏன் என்னை ஆசிர்வதிக்கவில்லை. நமக்கும் முன்னால் இருந்த சிலருக்கு ஆசி வழங்கினாரே‘ என்று ஒரு சின்னக் குழந்தை போல் உள்ளுக்குள் தேம்பினார். மனிதர்கள் என்றால் அவர்களின் வித்தியாசமான செயல்பாடுகளுக்கு விளக்கம் கேட்கலாம். மகான்களிடம் அப்படிக் கேட்க முடியுமா?
ஒருவாறு தேனம்பாக்கத்தில் இருந்து வண்டியில் பயணித்து, விமானம் பிடித்து டெல்லி திரும்பினார் மிஸ்ரா. அடுத்தடுத்து வந்த நாட்களில் அலுவலக வேலை காரணமாகத் தனது தேனம்பாக்கம் விஜயத்தையே மறந்தாலும், பெரியவா ஏன் ‘உன் சம்பந்தப்பட்ட வேலைகளை வெகு சீக்கிரமே முடித்துக் கொள் என்று எனக்கு உத்தரவிட்டார்? நான் எங்கே போகப் போகிறேன்? எதற்காக என் வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டும்? அரசாங்கத்தில் – நான் சார்ந்திருக்கும் ரயில்வே துறையில் இன்னும் எத்தனையோ புதுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டு வருகிறேனே? ஒருவேளை அரசியலில் ஏதாவது மாற்றம் வரப் போகிறது என்பதை சூசகமாக பெரியவா சொன்னாரா?‘ என்றெல்லாம் ஓய்வான நேரங்களில் அவரது சிந்தனை தாறுமாறாக ஓடியது. ஒரு வாரம் ஓடிற்று. அப்போது தான் அந்த துர்சம்பவம் நடந்தது. வடக்கே சமஷ்டிப்பூ ரில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்தார் மிஸ்ரா.
மிஸ்ராவின் ஆயுள் கூடிய விரைவில் முடியப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியில் உணர்ந்ததால் தான், அவர் தேனம்பாக்கத்துக்கு வந்தபோது ‘உன் சம்பந்தப்பட்ட வேலைகளை வெகு சீக்கிரமே முடித்துக் கொள்‘ என்று இறுக்கமான முகத்துடன் சொன்னார் பெரியவா.
விதி வலியது அல்லவா? அதனால்தான், பெரியவா சொன்னதன் பொருளை மிஸ்ராவால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. மகான்கள் எதையும் குறிப்பால்தான் உணர்த்துவார்கள். அதற்கு உண்டான விளக்கங்கள் நமக்குப் புரிய நேர்ந்தால், எதிர்காலம் நம் கையில். புரியவில்லை என்றால், நிகழ்காலமே நம்மிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.