பெரியவாளின் அருள் மயமான தரிசனத்தால் கவரப்பட்டவர்கள் நம்மவர்கள் மட்டுமல்ல… எத்தனையோ வெளிநாட்டு – அந்நிய மதத்தைச் சேர்ந்த அறிஞர்களும் கவரப்பட்டிருக்கிறார்கள். பெரியவாளின் முகத்தில் ஒளிரும் அந்த தீட்சண்யத் தையும் தேஜஸையும் கண்டு பிரமித்திருக்கிறார்கள். வாய் விட்டுப் புகழ்ந்திருக்கிறார்கள். பெரியவாளின் தரிசனத்துக்குப் பிறகு, தங்களது வாழ்வு ஒரு நல்திசைக்குச் சென்றிருப்பதாகப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், தங்கள் நாட்டுக்குச் சென்ற பிறகு, இந்த மகான் அருமை பெருமைகளைப் பற்றி தங்கள் தேசத்து இதழ்களில் கட்டுரையும் எழுதி இருக்கிறார்கள்.
இப்படி பெரியவாளின் தரிசனம் பெற்ற வெளிநாட்டு அன்பர்களில் முதன்மையானவர் என்று பால் பிரண்டனைச் சொல்ல லாம். இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய வரான பால் பிரண்டனுக்கு ஒரு விநோத ஆசை வந்தது. புராணங்கள் புகழும் புண்ணியபூமி என்று இந்தியாவைப் புகழ்கிறார் களே… அந்த அளவுக்கு ஆன்மிகம் அங்கே எப்படி செழித்தோங்கிக் காணப் படுகிறது என்பதை அறிய ஆவல் கொண்டார். முதல் கட்டமாகத் தனக்கு வேண் டிய ஒரு நண்பர் மூலம் இந்திய நாட்டு யோகிகளைப் பற்றி விசாரித்து அறிந்தார். அதன் பின் இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். முதல் கட்டமாக வடநாட்டில் பல பகுதிகளில் சுற்றித் திரிந்து பல யோகிகளை சந்தித்தார். பிறகு, தென்னகம் வந்தார். இங்கேதான் மகா பெரியவாளைத் தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.
1931-ஆம் வருடம் ஜனவரி மாத ஆரம்பத்தில் பெரியவா செங்கல்பட்டுக்கு விஜயம் செய்தார். மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு பெரியவாளை அங்கே சந்தித்தார் பால் பிரண்டன். பேட்டி கண்டார். பின்னாளில் பெரியவா பற்றிச் சொல்லும்போது, “எனது விஸ்தாரமான நினைவுச் சித்திரசாலையில் அந்த உன்னதமான முகம் ஒரு மதிப்புக்குரிய இடத்தை எடுத்துக் கொண்டு விட்டது. மத்திய சகாப்தம் எனப்படும் காலத்தை அணி செய்த கிறிஸ்துவ மகான்களுக்கு அத்தகைய முகம் இருந்திருக்கக் கூடும். ஒரே ஒரு வித்தியாசம் – இந்த முகத்தில் கூடுதலாக அறிவுத் திறனும் பிரகாசித்தது“ என்கிறார் பால் பிரண்டன்.
மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு மகானைப் பாராட்டக் கூடிய மனோபாவம் பால் பிரண்டனுக்கு வந்தது என்றால், அது சும்மா இல்லை. இது ஆன்மிகத்தின் உயர்ந்த ஒரு வெளிப்பாடு. அனுபவத்தினால் பல அற்புதங்களை அவர் உணர்ந்ததன் பலன்.
பால் பிரண்டன் மட்டும் இல்லை. இன்னும் ஏராளமானோர் மகா பெரியவாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். 1955-ல் பெரியவாளைச் சந்தித்த சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் மில்டன் ஸிங்கர், “இந்தியாவுக்கு நான் செல்லும் முன் அந்த நாட்டு மகான்களின் ஆத்ம சக்தி பற்றி நிறைய படித்திருக்கிறேன். ஏராளமான விஷயங்களைக் கேள்விப்பட்டும் இருக்கிறேன். ஆனாலும், இவற்றை எல்லாம் நான் முழுமையாக நம்பவில்லை. ஏதோ அதிசயங்களையும் அற்புதங்களையும் சொல்கிறார்கள்… இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்கிற நம்பிக்கையின்மையுடன்தான் இருந்தேன். இதெல்லாம் சங்கராச்சார்யர் என்று சொல்லக் கூடிய மகா பெரியவாளைச் சந்திக்கும் வரைதான். அவரைச் சந்தித்த பிறகுதான் இந்த ஆத்ம சக்தி இன்றும் இந்து மதத்தில் ஜீவ சக்தியாக அங்கம் வகிக்கிறது என்பதை உணர்ந்தேன்“ என்கிறார் சிலிர்ப்போடு. சுவிட்சர்லாந்தில் யோக போதகராக இருந்தவர் ராபர்ட் வால்ஸர் என்பவர். 1961-ஆம் ஆண்டு இறுதியில் மகா பெரியவரை இவர் சந்தித்தார்.
அது சாதாரண சந்திப்பு இல்லை. அவ்வளவு எளிதில் இது நிகழ்ந்து விடவில்லை. எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும் சந்தித்த பிறகுதான் பெரியவாளின் தரிசனம் ராபர்ட் வால்ஸருக்குக் கிடைத்தது.
சுவிட்சர்லாந்தில் யோக வல்லுநராக இருந்த ராபர்ட் வால்ஸர், 1961-ஆம் வருட இறுதியில் மகா பெரியவாளைச் சந்தித்த அனுபவம் அற்புதமானது; மிகவும் சுவாரஸ்யமானது. அந்தப் பரம்பிரம்மம் சகலத்தையும் உணர்ந்தவர் என்பதைப் பலருக்கும் உணர்த்திய உளபூர்வமான நிகழ்வு.
எங்கேயோ – எத்தனையோ மைல்களுக்கு அப்பால் – சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அதை அவருக்கே பிரகடனப்படுத்திய பேராற்றல் அது.
‘யோகமும் தேக ஆரோக்கியமும்‘ என்கிற பிரசித்தி பெற்ற ஆங்கில நூலை எழுதிய எஸுடியன் மற்றும் எலிசபெத் ஹெய்ச் ஆகியோருடன் பணி புரிந்த சாதாரண ஊழியர்தான் ராபர்ட் வால்ஸர். இளம் வயதில் இருந்தே யோகம் சம்பந்தமான பல கலைகளில் நாட்டத்தைச் செலுத்தினார். தனது 18-வது வயதில் இருந்து யோக சாதனைகள் புரிவதில் தீவிர அக்கறை காட்டினார். எங்கேயோ பிறந்து, எப்படியோ வளர்ந்த இவருக்கு காஞ்சி மகா பெரியவாளின் அருளும் ஆசியும் கிடைத்தது என்றால், அந்த அற்புதத்தை என்னவென்று சொல்வது? தன் வாழ்நாள் லட்சியத்தை சில மணித் துளிகளிலேயே ராபர்ட் வால்ஸர் அடைந்த அந்த பாக்கியத்தை எப்படிச் சொல்வது?
இனி, ராபர்ட் வால்ஸர் வாயிலாகவே அந்த அற்புத நிகழ்வைப் பார்ப்போம். இதோ, அவரே பேசுகிறார்:
“ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு என் இதய பூர்வமான வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தரங்க சுத்தமுள்ள ஆத்ம சாதகர்கள் அனைவரின் நலனுக்காகவும், அவரை நித்தமும் தரிசித்துப் பலன் பெறும் அடியார்களின் பூரண நலனுக்காகவும் மகா பெரியவா என்கிற அந்த ஜீவனை நீண்ட நாட்களுக்கு நம்மிடையே வைத்திருக்க ஆண்டவன் அருள் புரிய வேண்டும். காரணம்– மகா பெரியவாளின் அனுக்கிரஹம் இந்த உலகத்துக்குத் தேவை. இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பரம உத்தமமான பாரத ஜோதி அவர்.
1961-ஆம் வருடம் நவம்பர் மாத இறுதியில் மகா பெரியவா எனும் புனிதமான மகானை முதன் முதலாக நான் சந்தித்தேன். அது என்னுடைய மூன்றாவது இந்திய யாத்திரை. ஆன்ம ஒளியையும், அருள் வெள்ளத்தையும் வழங்கக் கூடிய உண்மையான ஆச்சார்ய புருஷரை இதற்கு முந்தைய எனது இரு பயணங்களின்போதும் இந்தியாவின் பல இடங்களிலும் தேடி இருக்கிறேன். கிட்டத்தட்ட பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் காடு, மலை என்று பாராமல் சுற்றி இருக்கிறேன். ஒரு சில மகான்களையும் சந்தித்திருக்கிறேன்; அவர்களோடு பேசியும் இருக்கிறேன். அவர்களில் பலர் மேலைநாடுகளில் பிரசித்தி பெற்றவர்களும்கூட. ஆனாலும், அவர்களுடனான சந்திப்பின்போது எனக்குள் ஒரு தெளிவு ஏற்படவில்லை. இதயம் நிறைவு கொள்ளவில்லை. என் மனம் எதிர்பார்க்கும் இன்பம் கிடைக்கவில்லை.
காரணம் – பாரத தேசத்தின் ஆன்மிகப் பரவசம் பற்றி நான் படித்து அறிந்த பல அற்புதங்களை இவர்களிடம் என்னால் காண முடியவில்லை. எனக்குள் ஒரு இறை மாற்றம் நிகழவில்லை. ‘தெய்வீக புருஷர்‘ என்று இந்திய மகான்களைப் பற்றி ஒப்புயர்வற்ற ஒரு கருத்தை என் மனதில் கொண்டிருந்தேன். நான் சந்தித்த மகான்களிடம் இதை எல்லாம் காண முடியவில்லை. இதை எல்லாம் பார்த்தபோது, நூல்களில் நான் படித்ததெல்லாம் பொய்யோ… இந்திய தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு தெய்வீக புருஷரைக் காண முடியாதோ என்றெல்லாம் சந்தேகப்பட ஆரம்பித்தேன். இருந்தாலும், எனது மூன்றாவது பயணத்தின்போது இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.
மூன்றாவது பயணத்தின்போது வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தேன். அதாவது, ‘ஆசார்ய புருஷர்கள்‘ என்று பிறரால் அடையாளம் சொல்லப்பட்ட நபர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, விசாரணைகள் செய்து என் பொழுதுகளையும், அவர்களது நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை. ஆசார்ய புருஷர்களை அதிகம் சோதித்துப் பார்ப்பது என்பது மனிதர்களுக்குக் கூடாது. எனவே, ஆண்டவனிடமே சரணாகதி அடைந்து விட்டேன். பாரத தேசத்தில் இறங்கிய அடுத்த கணமே, மனதை ஒருமுகப்படுத்தி, ‘ஆண்டவா… என் தேடுதல் வேட்டைக்கு நீதான் முழுமையாக வழிகாட்ட வேண்டும். என் எண்ணம் ஈடேற வேண்டும்‘ என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.
முதல் இரண்டு முறை பயணங்களின்போதும் மகான்களைத் தேடி இந்தியாவின் வட பகுதிகளில் அதிகம் அலைந்தேன். ஆனால், இந்த மூன்றாவது முறை பயணத்தின்போது சென்னையில் இருந்து தேடுதல் வேட்டை துவங்க வேண்டும் என்று விரும்பினேன். ஏன் சென்னையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணம் எனக்கு இன்றைக்கு வரை தெரியவில்லை. எனது விருப்பம் சரிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போன்ற ஒரு சம்பவம் வட நாட்டில் இருந்தபோது நடந்தது.
சுவிட்சர்லாந்தில் இருந்து அப்போதுதான் மூன்றாவது முறைப் பயணமாக வட நாட்டுக்கு வந்தேன். ‘சென்னைக்குப் பயணப்பட வேண்டும்‘ என்பதை என் மனம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அன்றைய தினம் காலை வேளையில் ‘வாக்கிங்‘ செல்லலாம் என்று தீர்மானித்து நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளிப்பட்டு கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு தென்னிந்தியர் என்னிடம் வந்து, ‘நீங்கள் சந்திக்க விரும்பும் குருநாதர் இங்கு இல்லை. அவர் தென்னிந்தியாவில் ஒரு மூலையில் குக்கிராமத்தில் இருக்கிறார். காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போதைய சங்கராச்சார்யராக இருக்கிறார் அவர். ‘மகா பெரியவா‘ என்று நாங்கள் எல்லாம் சொல்லுவோம்‘ என்று சொல்லி விட்டுப் போனார். நன்றாகக் கவனியுங்கள்… ‘காஞ்சி மகா பெரியவா‘ என்கிற பெயரை முதன் முறையாக இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.
‘என்னிடம் வலிய வந்து சொல்லி விட்டுப் போகும் இந்தத் தென்னிந்தியர் யார்? உண்மையான ஓர் ஆச்சார்ய புருஷரை நான் தேடிக் கொண்டிருப்பது இவருக்கு எப்படித் தெரியும்? தானாகவே முன்வந்து என்னிடம் எப்படிச் சொன்னார்?‘ என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அப்போது விடை இல்லை. ‘சரி, ஆண்டவன் நமக்கு ஒரு வழியைக் காட்டத் தொடங்கி உள்ளார்‘ என்று மகிழ்ந்து, தென்னிந்தியாவில் இருக்கும் அந்த ஆசார்ய புருஷரைப் பற்றி அக்கம்பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தேன். பெயரை மட்டும் அறிந்திருந்தார்களே தவிர, அவர் எங்கே தங்கி இருப்பார் என்பது போன்ற பயனுள்ள குறிப்புகளை எவராலும் தர முடியவில்லை. ஆனாலும், ‘வாக்கிங்‘ போகும்போது வலிய வந்து அந்தத் தென்னிந்தியர் கொடுத்த குறிப்பு, என் மனதில் ஒரு தைரிய விதையை விதைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
மனம் தளர விடாமல், ஏதோ ஒரு தைரியத்தில் சென்னைக்கு வந்து அங்கிருந்து திருச்சிராப்பள்ளியை அடைந்தேன். ‘எனது விருப்பம் இங்காவது நிறைவேற வேண்டும்‘ என்று ஆண்டவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். ரயில் நிலையத்திலேயே ஓய்வறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கே தங்கினேன். புழுக்கமான அறை. உடல் அசதியாக இருந்ததால், மெள்ளப் படுத்தேன். எப்போது தூங்க ஆரம்பித்தேன் என்று எனக்குத் தெரியாது. அது நள்ளிரவு நேரம்… யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. ‘இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது?‘ என்கிற யோசனையுடனே எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.
வெளியே இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரது தேகம் அத்தனை சுத்தமாக இல்லை. தன்னை ஒரு டாக்ஸி டிரைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘எதற்கு என்னைத் தேடி வந்தீர்கள்?‘ என்று சந்தேகமாகவே அவரைக் கேட்டேன். அதற்கு அவர், ‘காஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர் இப்போது திருச்சிக்கு அருகில்தான் முகாமிட்டிருக்கிறார். நீங்கள் சம்மதம் சொன்னால் புறப்பட்டு விடலாம். ஸ்வாமிகளைத் தரிசிக்க உங்களுக்கு இது ஒரு பாக்கியம். ஜங்ஷனுக்கு வெளியேதான் என் கார் காத்திருக்கிறது‘ என்றார்.
‘இந்த வேளையில் இவரை எப்படி நம்புவது? நான் சங்கராச்சார்ய ஸ்வாமிகளைத் தேடி வந்திருக்கிறேன் என்று இவருக்கு எப்படித் தெரியும்?‘ என்று எனக்குள் பல சந்தேகங்கள் ஓடின. இருந்தாலும், எனது ஆன்மத் தேடலுக்கு விடை தருவதற்காகத்தான் இப்படிக் காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கின்றனவோ என்றும் உள்ளூர மகிழ்ந்தேன். பதிலை எதிர் பார்த்து, என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் டாக்ஸி டிரைவர். பிறகு ஒரு தைரியத்தில், ‘நிச்சயம் புறப்படுவோம். ஆனால், அதிகாலையில் கிளம்பலாம். அதுவரை காத்திருங்கள்‘ என்று சொல்லி, அவரை அனுப்பி விட்டுத் தாழ் போட்டுப் படுத்தேன். எனது இத்தனை நாளைய லட்சியம், மறுநாள் அதிகாலையில் நிறைவேறப் போகிறது என்கிற சந்தோஷத்தின் காரணமாக எனக்கு அதன் பின் தூக்கம் வரவில்லை. படுக்கையில் சும்மா புரண்டு புரண்டு படுத்தேன். பொழுது புலர்வதற்கான அறிகுறிகள் ஜன்னல் வழியே வெளியே தெரிந்தன.
திருச்சி ஜங்ஷனில் இருந்து கார் பயணம் தொடங்கியது. தார்ச் சாலைகள் தாண்டி, மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போன அதிகாலைப் பயணம் சுகமாகத்தான் இருந்தது.
‘காஞ்சி ஸ்வாமிகள் எங்கே இருக்கிறார்?‘ என்று டிரைவரிடம் மெள்ளக் கேட்டேன்.
சாலையில் இருந்து கண்களை எடுக்காமல், ‘புதுக்கோட்டை தாண்டி இளையாற்றங்குடி என்கிற ஊரில் ஸ்வாமிகள் இருக்கிறார். அங்குதான் இப்போது நாம் போய்க் கொண்டிருக்கிறோம்‘ என்றார்
டிரைவர்.
பகல் சுமார் பத்து மணி அளவில் டிரைவர் சொன்ன இளையாற்றங்குடி என்கிற ஊரை அடைந்தோம். அங்குள்ள ஓர் ஆலயத்தின் முன்னால் வண்டியை நிறுத்தினார் டிரைவர். ஸ்வாமிகள் முகாமுக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றதையும், அதில் இருந்து வெளிநாட்டினரான நான் இறங்கி நின்றதையும் எவரும் வித்தியாசமாகப் பார்க்காதது எனக்கு வியப்பைத் தந்தது. அந்தணர்கள் சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். மலர் களின் வாசமும், வேத கோஷமுமாக அந்த இடத்திலேயே ஒரு பக்தி மணம் கமழ்ந்தது.
முகத்தில் பல கேள்விக் குறிகளுடன் அங்கே சுற்றும்முற்றும் பார்த்தபடி நின்று கொண்டிருந்த என்னிடம் அந்தணர் ஒருவர் நெருங்கி வந்தார். அவர் ஏதும் பேசுவதற்கு முன்னால் நானே முந்திக் கொண்டு, ‘வெகு தொலை வில் இருந்து ஸ்வாமிகளைக் காண வந்திருக்கிறேன்‘ என்றேன் பவ்யமாக.
‘ஆமாமாம். ஸ்வாமி களும் உங்களது வருகையைத் தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள் என் பின்னால்‘ என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எண்ணற்ற பக்தர்கள் ஸ்வாமிகளின் திருமுக தரிசனத்துக்காக – இதய சுத்தியோடு காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கு கூடி இருக்கும் பக்தர்களின் முகத்தைப் பார்த்தாலே, அதில் ஒரு தேஜஸ் கூடி இருந்ததைப் போல் உணர்ந்தேன். இத்தனை கூட்டத்துக்கு மத்தியில், பலருக்கும் ஆசி வழங்குவதையும் அருட் பிரசாதம் கொடுப்பதையும் விட்டு விட்டு எனக்காக ஒரு மகான் காத்துக் கொண்டிருக்கிறாரா? நம்ப முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை.
திருச்சிக்கு வருவதற்கு முன், வட நாட்டுக் கடற்கரையில் தென்னிந்தியர் ஒருவர் ‘காஞ்சி ஸ்வாமிகளைச் சந்தியுங்கள்‘ என்று தானே முன்வந்து வலியச் சொன்னதாகக் கூறி இருந்தேனே… அதன் பிறகு என் நாட்டு நண்பர்களுடன் போனில் தொடர்பு கொண்டு இந்த யதேச்சையான சந்திப்பு குறித்து தகவல் தெரிவித்துப் பேசினேன். அதற்கு, ‘வெளிநாட்டு நபர் ஒருவர் ஸ்வாமிகளை சந்திப்பது சுலபமான காரியமல்ல… கூட்டத்தோடு கூட்டமாக நீ அவரைத் தரிசிக்கலாம். ஆனால், அவரை சந்தித்துப் பேசுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதற்கு நீ பல காலம் காத்திருக்க வேண்டும்‘ என்றெல்லாம் சில நண்பர்கள் என்னிடம் அப்போது பேசி இருந்தார்கள். ஆனால், நடக்கின்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பே வந்தது. இதோ, ஸ்வாமிகளை நான் சந்திக்கக் கூடிய அந்தத் தருணம் நெருங்கியே விட்டது.
இளையாற்றங்குடியில் வந்து இறங்கிய ஐந்தாவது நிமிடமே ஸ்வாமிகளின் முன்னால் நான் நிறுத்தப்பட்டேன். அந்த மகானின் சந்நிதி முன்னால் அடக்கமாக நின்று கொண்டிருக்கிறேன். அந்த மகானின் முகத்தில்தான் எத்தனை எளிமை; எத்தனை அமைதி. மாபெரும் பக்திப் பேரலை ஒன்று என் இதயத்துக்குள் புறப்பட்டுப் பொங்கி எழுவதாக உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகளாக – மூன்று முறையாக இந்தியாவுக்கு வந்து நான் எதைத் தேடி அலைந்தேனோ – அந்தப் பாக்கியத்தை இன்னும் சற்று நேரத்தில் பெறப் போகிறேன். ஆண்டவன் என்னைக் கைவிடவில்லை. எனக்கு அருள் புரிந்து விட்டான். இப்போதும் எனக்கு இருக்கிற ஒரே ஆச்சரியம் – என் வருகை ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்?
காஞ்சி ஸ்வாமிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ‘சுவிட்சர்லாந்து தேசத்தைச் சார்ந்த இந்த ராபர்ட் வால்ஸர், ஒரு யோக சாதனை விற்பன்னன்‘ என்று அவருக்குத் தெரிய சத்தியமாக வாய்ப்பு இல்லை. ஆனாலும், என்னைப் பற்றி சகலமும் அறிந்திருப்பதாகத் தெரிகிறதே… இதைத்தான் மகான்களின் ஆற்றல் என்று இந்திய தேசத்தில் சொல்கிறார்களா? இந்த அற்புதம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
இதற்கு முன் பல மகான்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களை நான் சந்தித்த மாத்திரத்தில் அவர்கள் கேட்கும் கேள்விகள் – ‘எங்கிருந்து வருகிறாய்? இந்தியாவில் என்ன செய்யப் போகிறாய்? எதைத் தேடி இந்தியாவுக்கு வந்தாய்? இப்படித்தான் அடுக்குவார்கள். தகவல்களைத் தேடி நாம் இவர்களிடம் வந்தால், இவர்களே ஒரு பத்திரிகை நிருபர்கள் போல் இப்படிக் கேள்விகளால் துளைக்கிறார்களே என்று பல நேரங்களில் நான் நினைத்ததுண்டு. ஆனால், இந்தக் காஞ்சி ஸ்வாமிகள் மட்டும் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல், தன் ஞான திருஷ்டியால் அனைத்தையும் உணர்ந்து கொண்டு, என்னையே ஆழ்ந்த உள்ளர்த்தத்துடன் ஊடுருவிப் பார்க்கிறாரே? ஒரு கேள்வி கூடக் கேட்காமல், திறந்து வைத்த ஒரு புத்தகத்தைப் படிப்பது போல் என்னுடைய மனதில் இருந்து எல்லாவற்றையும் படிக்கிறாரே?
காஞ்சி ஸ்வாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் என் மனதினுள் சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்தது. அமைதி பெருகியது. என் மனதில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் அந்த மகா புருஷர் விடைகளைச் சொல்லிக் கொண்டே போனார். நான் புத்திபூர்வமாக அறிந்த ஐயப்பாடுகளுக்கு மட்டுமன்றி, என் வெளி மனதில் உள்ளடுங்கி இருந்த ஐயப்பாடுகளுக்கும் புன்னகையோடு விளக்கம் தந்தார். அவருடைய அற்புத திருவாக்குகளை மௌனமாக நான் கேட்கக் கேட்க, அவர் மேல் எனக்கு அளவுகடந்த நன்றி உணர்ச்சி பெருகியது. அந்தத் தருணத்தை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். என் வாழ்வில் அது ஒரு திருநாள்.
அவரிடம் இருந்து விடை பெறும் முன் எனக்கு ஆசி அளித்தார். ‘இன்றைக்கு இரவு எட்டு மணிக்கு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு என்னை நினைத்துக் கொள்‘ என்றார்.
வெளியே வந்தேன். நெற்றியில் திருநீறு துலங்க டிரைவர் காத்திருந்தார்.
மகா பெரியவா சொன்ன அந்த எட்டு மணிக்கு நான் திருச்சியில் இருப்பேன். மனதை ஒருமுகப்படுத்தி அந்த உத்தம புருஷனை நினைந்து தியானத்தில் இருப்பேன்!“
– இதுதான் ராபர்ட் வால்ஸரின் அனுபவம்.
கடல் கடந்த தேசத்தவரையும் வியக்க வைத்த ஞானிதான் – மகா பெரியவா.