எம். எம். இஸ்மாயிலுக்கு என்ன பிரசாதம்?

ண்மையான பக்திக்கு ஜாதி, மதம் என்ற பேதம் எதுவும் இல்லை. நாகூர் தர்காவிற்கும் வேளாங்கண்ணி சர்ச்சுக்கும் எத்தனையோ இந்துக்கள் பயணமாகி பிரார்த்திப்பதை இன்றும் காணலாம். திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் கங்கா ஸ்நான வருடாந்திர வைபவத்தின்போது முஸ்லிம் பெண்கள் பலரும் வந்து புனிதக் கிணற்று நீரில் நீராடி விட்டுச் செல்வதைப் பார்க்கலாம்.

இது போல் பிரபலங்கள் பலரும் தாங்கள் சார்ந்திருப்பது எந்த மதமாக இருந்தாலும், மாற்று மதத்தின் மேல் அபரிமிதமான அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். இது கண்கூடு. இதற்கு உதாரணமாக சமீப காலத்தில் திகழ்ந்த ஓர் அன்பர்தான் நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்கள். கம்பன் கழகத்தின் தலைவராக இருந்து வருடா வருடம் சிறப்பான முறையில் விழா எடுப்பார்.

கம்பராமாயணம் உட்பட பல ராமாயணங்கள் இவருக்கு அத்துப்படி. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் திறன் பற்றியும் அழகாக விளக்குவார்; அலசுவார். தமிழ் மட்டுமல்லசமஸ்கிருதத்திலும் அபார ஞானம்.

நீதிமன்றப் பணிகளில் தான் பிஸியாக இருந்த காலத்திலும், அவ்வப்போது காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போய் மகா பெரியவாளைச் சந்தித்து அவருடன் அளவளாவி வருவது இஸ்மாயிலின் வழக்கம். கோர்ட்டில் இருந்து நீதியரசர் வருகிறார் என்றால், பெரியவாளுக்கு அவ்வளவு உற்சாகம். நேரம் ஓடுவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார் பெரியவா.

நீதியரசருடன் பல விவாதங்களை நடத்துவார் இந்த புவியரசர்.

இவர்களது இந்த விவாதப் பேச்சுகளில் ராமாயணம், சாஸ்திர சம்பிரதாயங்கள், கலிகால தர்மங்கள் போன்றவை பெரும் பங்கு வகிக்கும்.

ஒருமுறை இந்த இருவருக்கும் இடையே வாதபிரதிவாதங்கள் ரொம்ப நேரம் நடந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் விரிவாக எடுத்துக்கொண்டு மகா பெரியவா அலசி ஆராய்ந்துநிதானமாகப் பேசும் பாங்கைப் பார்த்து வியந்து கேட்டுக் கொண்டிருந்தார் இஸ்மாயில்.

அப்போது, ‘மகா பெரியவாளின் ஆசார அனுஷ்டானங்களுக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை அவரது சீடர்கள் வாயை பவ்யமாகப் பொத்திக்கொண்டு அருகே சென்று சன்னமாகச் சொன்னார்கள்.

அவ்ளோ நேரம் ஓடிடுத்தா? என்ற பெரியவா, “இவருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பணுமே? என்றார், சீடர்களைப் பார்த்து.

சீடர்கள் திகைத்தனர். பிரசாதமா?

ஒரு இந்து என்றால், விபூதியோ, குங்குமமோ கொடுக்கலாம். இவருக்கு எதைப் பிரசாதமாக மகா பெரியவா தரப்போகிறார் என்று சீடர்கள் குழம்பினார்கள். ஒருவேளை கல்கண்டு தருவாரோ? பழங்கள் தருவாரோ என்றெல்லாம் சிந்தித்தார்கள்.

சீடர்களுக்கு மட்டுமா?

உங்களுக்கும் அந்தக் குழப்பம் இருக்கிறதுதானே?!

நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் மனம் குளிரும்படி அப்படி என்ன பிரசாதத்தை அவருக்குத் தந்தார் மகா பெரியவா? விபூதியும் இல்லை; குங்குமமும் இல்லை என்றால், வேறென்ன பிரசாதமாக இருக்க முடியும்?

மடத்தில் அப்போது இருந்த சீடர்களும் சிப்பந்திகளுமே இதை அறிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருந்தனர். மகா பெரியவா அடுத்து என்ன உத்தரவிடப் போகிறார் என்பதை எதிர்பார்த்து அனைவரும் அமைதியுடன் காத்திருந்தனர். பெரும் அமைதி.

மகா பெரியவாளின் பார்வை அப்போது மெள்ளத் திரும்பியது. சற்றுத் தள்ளி நின்றிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை சைகை காட்டித் தன்னருகே வருமாறு அழைத்தார் பெரியவா.

துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ஓட்டமாக வந்த அந்தச் சிப்பந்தி, “பெரியவா என்று அவருக்கு அருகே மடிந்து நின்று, வாய் பொத்தி, அவர் இடும் கட்டளையை நிறைவேற்றுவதற்காக பவ்யத்துடன் இருந்தார்.

சைகை மொழியில் அவருக்கு ஏதோ சொன்னார் பெரியவா.

அதைச் செவிமடுத்தவர், “உத்தரவு பெரியவா என்று சொல்லி மடத்தின் ஏதோ ஓர் அறைக்கு ஓடினார். அவர் திரும்ப வரும்போதுஎன்ன கொண்டுவரப் போகிறார்? என்பதை அறிய ஒட்டுமொத்த மடமே ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

போன வேகத்திலேயே கையில் ஏதோ ஒரு பொருளுடன் திரும்பி வந்தார் அந்தச் சிப்பந்தி.

அவரது கையில்அழகான ஒரு சிறு வெள்ளிப் பேழை.

வெறும் வெள்ளிப் பேழை மட்டும் பிரசாதமாக இருக்க முடியாதேஅப்படி என்றால் இதற்குள் என்னவோ இருக்கிறது என்று ஆளாளுக்குக் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர்.

மகா ஸ்வாமிகளின் பார்வை படும்படி அவர் இருந்த பீடத்துக்கு முன் அந்த வெள்ளிப் பேழையை வைத்துவிட்டு, சற்றே பின்னுக்கு நகர்ந்தார் சிப்பந்தி. பிறகு நீதியரசரைப் பார்த்து, “இதற்குள் பிரசாதம் இருக்கு. எடுத்துக்கோங்கோ என்றார் பெரியவா.

நீதியரசரும் மிகுந்த பயபக்தியுடன் அந்தப் பேழையைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு, ஆர்வ மிகுதியின் காரணமாக அதன் மூடியைத் திறந்தார்.

உள்ளேசந்தனம்! மூடியைத் திறந்த அடுத்த கணம் குப்பென்று மணம் வீசியது. எங்கும் சூழ்ந்தது. மகா பெரியவாளின் அருள் பெற்ற சந்தனம் அல்லவா?

மகா பெரியவா புன்னகைத்தார். ‘இப்ப எல்லாருக்கும் சந்தேகம் தீர்ந்துடுத்தோல்யோ? என்பது மாதிரி, அனைவரையும் பார்த்தார். பிறகு நீதியரசர் பக்கம் திரும்பி, “உங்களுக்கு சந்தனம் பிரசாதம் கொடுத்திருக்கேன். விசேஷமான சந்தனம். இதை வெச்சுண்டு சவுக்கியமா இருங்கோ.

நீதியரசர் இஸ்மாயில் அந்தச் சந்தனத்தைத் தன் இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டார்.

பிறகு, பெரியவா சொன்னார்: “இது நம் இருவரோட மதத்துக்கும் பொதுவான பிரசாதம். உங்க மதத்துல சந்தனக் கூடு வைபவம் உண்டு. எங்க மதத்துல அபிஷேக காலங்கள்லயும் பிரசாதம் கொடுக்கறதுக்கும் சந்தனத்தைப் பயன்படுத்துவோம். அதான் என்று சொல்லி இடிஇடியென்று சிரிக்க… நீதியரசர் மெய் சிலிர்த்துப் போனார்.

மீண்டும் ஒரு முறை பெரியவாளிடம் இருந்து ஆசி பெற்றுக் கொண்டு, அவரிடம் விடைபெற்று மடத்தில் இருந்து கிளம்பினார் எம்.எம். இஸ்மாயில் அவர்கள்.