அட்சதையை ஏன் தரையில் போட்டார்?

சேலத்தில் பிரபலமான வக்கீலாக இருந்தவர் ஆர்.வி. ராமசாமி ஐயர். காஞ்சி மடத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவராகவும், காஞ்சி மகானைத் தன் கண் கண்ட தெய்வமாகவும் எண்ணி வாழ்ந்தவர். மகா பெரியவாளை அடிக்கடி தரிசித்து பேரின்பம் பெற்றவர்.

மகா பெரியவாளோடு தான் சந்தித்த தருணங்களில் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்கூடாகக் கண்டவர். சமூகத்தில் தான் இந்த அளவுக்கு ஓர் உயரிய அந்தஸ்தோடு இருப்பதற்கு அந்தக் கருணை தெய்வத்தின் ஆசியே காரணம் என்று எப்போதும் தன் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்லிச் சொல்லிப் பூரிப்பார். 1930-ஆம் வருடத்தில் இருந்து இவருக்கும் பெரியவாளுக்குமான சந்திப்பு துவங்கியது.

உத்தியோகத் திறமையும் மகா பெரியவாளின் ஆசியுமாகச் சேர்ந்து கைகொடுக்க, 1964-ஆம் வருடம் புதிதாக கார் ஒன்று வாங்கினார் ராமசாமி ஐயர். தன் வாழ்வில் எத்தகைய ஒரு நல்மாற்றம் வந்தாலும், அதை உடனுக்குடன் பெரியவாளுக்குத் தெரிவித்து, அவரது ஆசியைப் பெறுவது இவரது வழக்கம். அதன்படி, தான் புதிதாக வாங்கிய காரில் காஞ்சிக்குச் சென்று பெரியவாளிடம் ஆசி பெற விரும்பினார் ராமசாமி ஐயர். எனவே, புது காரில் தன் நண்பர்கள் சிலருடன் சேலத்தில் இருந்து காஞ்சிக்குப் பயணப்பட்டார்.

பயணத்தின்போது தன் நண்பர்களிடம், “பெரியவா எப்போதும் நடை யாத்திரையாகத்தான் பல இடங்களுக்குப் பயணப்படுகிறார். அவருக்கு இது போன்ற ஒரு கார் இருந்தால், காஞ்சி நகரத்தில் பல இடங்களுக்குச் சென்று வரலாம். ஆனால், போகத்தை விடுத்த துறவிகள் இது போன்ற சொகுசான வாழ்வை விரும்ப மாட்டார்கள் என்றவர், “போகட்டும். அட்லீஸ்ட் இந்த காரில் அவர் ஏறி அமர்ந்தாலே அதைப் பெரும் பாக்கியமாக நினைப்பேன் என்றார் ராமசாமி ஐயர், விளையாட்டாக.

நண்பர்கள் சிரித்தனர். “ஏம்ப்பாமுற்றும் துறந்த முனிவர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்று நீயே சொல்கிறாய்அப்படி இருக்க உன் காரில் அவர் ஏறி அமர்வது எப்படிப்பா சாத்தியம்? என்று எதிர்க் கேள்வி கேட்டனர்.

அதற்கு ராமசாமி ஐயரால் பதில் சொல்ல முடியவில்லை. “நீங்கள் சொல்வது சரிதான். அவரிடம் நாம் அப்படிக் கேட்பதே தவறு. ஆனாலும், என் மனம் ஏனோ இப்படி விருப்பப்பட்டு விட்டது. என்னுடைய இந்த ஆசையே அடித்தளம் இல்லாத ஒன்றுதான். சரி.. என்றவர், மகா பெரியவாளுடனான தன் அனுபவங்கள் சிலவற்றை நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே வந்தார்.

மதியம் இரண்டு மணி வாக்கில் அந்த கார்

காஞ்சிபுரத்தை வந்தடைந்தது.

மகா பெரியவா மடத்தில் இருக்கும் தினம் என்பதால், அங்கே திரளான கூட்டம் காணப்பட்டது. ஆந்திராவில் இருந்து சில பேருந்துகளில் எண்ணற்ற பக்தர்கள் வேறு வந்திருந்தனர். ‘ஜய ஜய சங்கரஹர ஹர சங்கர என்கிற கோஷம் மடத்தின் நாலாத் திக்குகளிலும் மந்திரம் போல் ஒலித்துக் கொண்டிருந்ததுபஞ்ச கச்ச வேஷ்டிகளும் பட்டுப்புடவைகளும் சரசரத்துக் கொண்டிருந்தனமடத்தின் வாசலில் பூமாலைகள் விற்பவர்களும் பழங்கள் விற்பவர்களும் பிஸியாக இருந்தனர்.

ராமசாமி ஐயர் தான் வந்த காரை மடத்தின் முகப்பு அருகே பாதுகாப்பாக நிறுத்தினார். தன்னுடன் வந்தவர்களைக் கூட்டிக்கொண்டு மடத்தினுள் நுழைந்தார். மகா பெரியவாளின் பாதார விந்தங்களில் சமர்ப்பிப்பதற்காக பழங்கள், பூமாலைகள், கல்கண்டு, திராட்சை போன்றவற்றை மூங்கில்தட்டுகளில் வைத்து எடுத்துக்கொண்டு அவரைத் தரிசிப்பதற்காகச் சென்றார்.

மகா பெரியவாளின் திருச்சந்நிதி அருகே வந்துவிட்டார் ராமசாமி ஐயர். மடத்துக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டவர் என்பதால், மகானின் சந்நிதி அருகே சுலபத்தில் சென்று விட்டார். அப்போது மகா பெரியவா, தன்னைத் தரிசிக்க வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். சட்டென்று மகா பெரியவாளின் பார்வை தன் மேல் பதிவதைக் கண்ட ராமசாமி ஐயர், அவருக்கு நமஸ்காரம் தெரிவித்தார். தான் கொண்டுவந்த பழத் தட்டுகளையும் பூமாலைகள் அடங்கிய தட்டுகளையும் அவருக்கு சமர்ப்பித்தார்.

வாப்பா ராமசாமீசேலத்துலேர்ந்து வரயா?

பக்திப் பரவசத்துடன் தலையாட்டினார் ராமசாமி.

என்னஉன்னோட புது கார்லயே வந்துட்டே போலிருக்கு? – மகா பெரியவா கேட்ட அடுத்த கணம், ஆடிப் போனார் ராமசாமி. தான் புது கார் வாங்கிய விஷயம், அதற்குள் இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்று யோசனை செய்தவர், “ஆமா பெரியவாபுது கார் ஒண்ணு வாங்கி இருக்கேன். அதான் என் நண்பர்களோட பொறப்பட்டு வந்துட்டேன். பெரியவா ஆசி வேணும் என்று வாய் பொத்தி, மிகுந்த பவ்யமாகத் தெரிவித்தார்.

அதற்குள் பக்தர்கள் கூட்டம் கொஞ்சம் பெருகிவிட்டதால், ‘கொஞ்சம் இரு என்பதுபோல் சைகை காட்டிவிட்டு, வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதில் மும்முரமானார் பெரியவா.

அதற்குள், மடத்தில் சேர்ப்பிப்பதற்காக சேலத்தில் இருந்து தான் கொண்டுவந்த பொருட்களை வண்டியில் இருந்து இறக்கி விடலாம் என்பதற்காகத் தன் நண்பர்களுடன் மீண்டும் காருக்கு வந்தார்.

அந்தப் பொருட்களை ராமசாமி ஐயர் இறக்கிக் கொண்டிருக்கும்போதே மடத்தின் உள்ளிருந்து ஒரு சிஷ்யர் இவரிடம் ஓடோடி வந்தார். மூச்சிரைக்க ராமசாமி ஐயரிடம் சொன்னார்:

உங்களோட புது காரை மடத்துக்கு உள்ளே கொண்டுவரச் சொல்லி பெரியவா சொன்னா. உடனே வண்டியோட வாங்கோ.

ராமசாமி ஐயர் திகைத்துப் போனார்.

ராமசாமியின் மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது. ‘இந்த புது காரில் பெரியவா உட்கார்ந்து போனா எப்படி இருக்கும் என்று வண்டியில் வந்து கொண்டிருந்தபோது விபரீதமாக ஆசைப்பட்டேன்அந்த ஆசையை உடன் வந்த நண்பர்களிடமும் கொஞ்சமும் யோசிக்காமல் பகிர்ந்துகொண்டேன். எனக்குள் ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை வந்தது? காஷாயத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட உண்மையான துறவிகள், கார் போன்ற சொகுசு வகையறாக்களை எப்படி ஏற்பார்கள்? எளிமையை விரும்பும் மகா பெரியவா, காசி யாத்திரைக்குக்கூட நடந்தேதானே சென்றார்? என் மனதில் ஏற்பட்ட ஆசையைத் தன் ஞான திருஷ்டியால் மகா பெரியவா என்கிற அந்தக் கருணை தெய்வம் உணர்ந்துகொண்டு விட்டதோ? அதுவும் தவிர, மடத்து வாசலில் எத்தனையோ விலை உயர்ந்தசொகுசான பல கார்கள் நின்று கொண்டிருக்கும்போது என் காரை மட்டும் ஏன் எடுத்து வரச் சொன்னார்? என்றெல்லாம் சிந்தித்த ராமசாமி ஐயர் ஒரு கணம் மெய் சிலிர்த்தார்.

மாமாசீக்கிரம் வாங்கோ. பெரியவா காத்துண்டிருப்பா என்றான் அந்த சிஷ்யன், ராமசாமி ஐயரின் மன ஓட்டத்தைச் சற்றும் அறியாமல்.

இதோஇதோ என்று தன் மன ஓட்டத்தில் இருந்து சற்றே மீண்ட ராமசாமி ஐயர், ஸ்ரீமடத்துக்குச் சேர்க்கவேண்டிய பொருட்களை உரியவரிடம் முறையாக ஒப்படைத்த பிறகு, மடத்தின் பக்கவாட்டு வாசல் வழியாகத் தனது புதிய காரை உள்ளே கொண்டு சென்றார், டிரைவரின் உதவியுடன்.

ராமசாமி ஐயரின் கார் டிரைவர், பளபளக்கும் புது வண்டியை உள்ளே நிறுத்திய இடத்தின் அருகே பெரியவா புன்னகையோடு இருந்தார்.

என்னப்பா ராமசாமிஉன்னோட புது காரைக் கொஞ்ச நேரம் என் வேலைக்குப் பயன்படுத்திக்கிறேன் என்று அவரது பதிலை எதிர்பார்க்காத பெரியவா, ஒரு சிப்பந்தியை அருகே அழைத்தார். காஞ்சிபுரத்தில் வசிக்கும் உயர் கல்வி அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லி, “அவரது வீட்டுக்கு இந்தப் புது காரில் உடனே போய் அவரைக் கூட்டிண்டு வா என்று உத்தரவிட்டார்.

உத்தரவு பெரியவா என்றபடி அங்கிருந்து நகர்ந்த அந்தச் சிப்பந்தி, காரின் முன் ஸீட்டில் ஏறி அமர்ந்தார். ராமசாமியின் டிரைவர் வண்டியை சீறலுடன் கிளப்பினார்.

ராமசாமி ஐயருக்குக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது மாதிரி இருந்தது. நடப்பதெல்லாம் கனவா, நனவா என்பது போன்ற திகைப்பு, அவரது முகத்தில். தான் எண்ணியபடியே அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் சம்பவங்களை அவரால் நம்பவே முடியவில்லை.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் காஞ்சிபுரம் உயர் கல்வி அதிகாரி, பெரியவாளின் முன்னால் பவ்யமாக நின்றார். “ஒரு முக்கியமான விஷயமாத்தான் உங்களை இங்கே வரவழைச்சேன். அதான் ராமசாமி ஐயரோட புது காரை அனுப்பிச்சேன் என்ற பெரியவா, கல்வி அதிகாரியை அருகே அமரச் சொன்னார்.

மகானே அழைத்துப் பேசும் பாக்கியம் எல்லாருக்குமா வாய்க்கும்? அந்தக் கல்வி அதிகாரியும், பெரியவாளின் திருப்பாதங்களை நமஸ்கரித்த பின்னர், தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார்.

காஞ்சிபுரம் உட்பட வெளியூர் பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவச் செல்வங்கள் அன்றைய தினம் ஸ்ரீமடத்தில் குவிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் தன் முன்னே அமரச் சொல்லி, கல்வியின் அவசியத்தைப் பற்றியும், அதன் சிறப்பியல்புகளைப் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினார் பெரியவா. அதன் பின் பெரியவாளின் உத்தரவுப்படி, மாணவர்களிடம் நீண்ட உரை நிகழ்த்தினார் அந்தக் கல்வி அதிகாரி. உரை முடிந்த பிறகு, மாணவர்கள் தங்களுக்கு உள்ள ஐயப்பாடுகள் குறித்துக் கல்வி அதிகாரியிடம் ஆர்வமாகக் கேள்விகள் கேட்டனர். ஒவ்வொன்றுக்கும் நிதானமாகதெளிவாக விளக்கம் தந்து, அவர்களின் சந்தேகங்களைக் களைந்தார் அந்த அதிகாரி.

இதற்கிடையே இந்தக் கல்வி விவாதம் தனக்குத் தேவை இல்லாதது என்பதால், மடத்தின் வேறு பகுதியில் அமர்ந்து இறை ஜபத்தில் மூழ்கினார் ராமசாமி ஐயர்.

மணி மாலை ஐந்தரையைத் தாண்டியது. தான் வந்த வேலை நல்லபடியாகப் பூர்த்தி ஆகிவிட்டது என்கிற திருப்தியுடன், புறப்படுவதற்கு உத்தரவு வேண்டி பெரியவாளிடம் நின்றிருந்தார் கல்வி அதிகாரி. பிரசாதத்தை அவரிடம் தந்த பெரியவா, “ஒரு நிமிஷம் இருங்கோ என்று சொல்லி, ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார். ராமசாமி ஐயரைக் கூட்டி வரச் சொன்னார். அடுத்த இரண்டு நிமிடத்தில் தன் முன்னே இருந்த ராமசாமி ஐயரிடம், “உங்க காரிலேயே இவரை விட்டுட்டு வரச் சொல்லுங்கோ என்றார்.

உத்தரவு பெரியவா. இது என் பாக்கியம் என்று புளகாங்கிதமடைந்த ராமசாமி, தன் டிரைவரை அழைத்து, கல்வி அதிகாரியை அவரது இருப்பிடத்தில் பத்திரமாக விட்டு வருமாறு சொன்னார்.

நேரமானபடியால், பெரியவாளின் ஆணைப்படி அன்றிரவு ஸ்ரீமடத்திலேயே தங்கினார்கள் ராமசாமி ஐயரும் அவரது நண்பர்களும்.

ஸ்ரீமடத்தில் இரவு வழிபாடெல்லாம் முடிந்தது. இரவு மணி பதினொன்று இருக்கும். ராமசாமி ஐயரைத் தன் இடத்துக்கு வரவழைத்தார் மகா பெரியவா. மேலுடம்பில் இருந்த வஸ்திரத்தை மரியாதையுடன் இடுப்பில் சுற்றிக்கொண்டு பெரியவா முன்னே ஆஜரானார் ராமசாமி.

உட்கார் ராமசாமிதரிசனம், ஆகாரம் எல்லாம் ஆச்சா?

பெரியவா ஆசிர்வாதத்துல எல்லாம் பூர்த்தி ஆச்சு என்ற ராமசாமி, அவரை விழுந்து நமஸ்கரித்தார்.

அது சரிஇத்தனை வருஷமா நீ என்கிட்ட வந்துண்டிருக்கேஎன் யாத்திரைலயும் அடிக்கடி கலந்துண்டிருக்கேஎன்னைப் பத்தி உனக்கு நன்னா தெரியும்எங்காவது நான் காரில் போய் நீ பார்த்திருக்கியோ?

துணுக்குற்றார் ராமசாமி ஐயர். பெரியவா தன் அற்புதத்தை வெளிக்காட்டப் போகிறார் என்பதைப் புரிந்துகொண்டவர், அந்த மகானே திருவாய் மலர்வதற்காக, எதுவும் பேசாமல்பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

அந்த இடமே பேரமைதியுடன் விளங்கியது. பெரியவா, ராமசாமி ஐயர், ஒரே ஒரு சிஷ்யர் தவிர, வேறு எவரும் அங்கே இல்லை. குண்டூசி போட்டால்கூட, டப்பென்று சத்தம் ஏற்படும் அந்த இரவு வேளையில் இடி இடியெனச் சிரித்தார் பெரியவா. கயிலையில் குடி கொண்டிருக்கும் சாட்சாத் அந்த மகேஸ்வரனையே தரிசிப்பது போல் அந்த வேளையில் உணர்ந்தார் ராமசாமி. பிறகு பெரியவா, “உன்னோட புது காரில் நான் பயணிக்கணும்னு ஆசைப்பட்டேஉன்னோட ஆசை நிராசையா போயிடக் கூடாதுங்கறதுக்காக, உன் காரை நான் பயன்படுத்திண்டுட்டேன். இப்ப உனக்கு சந்தோஷம்தானே? என்று அவர் கேட்டது, ராமசாமி ஐயரை ஏகத்துக்கும் நெகிழ வைத்தது.

என் கண் கண்ட தெய்வமேஎன்னோட ஆசை அற்பமானதுன்னாலும், அதையும் பரிபூரணமா நிறைவேத்தி, என் ஆன்மாவுக்கு வெளிச்சத்தையும் சந்தோஷத்தையும் தந்த தெய்வமே என்று பெருங்குரல் எடுத்துக் கதறி, அவரது திருப்பாதங்களைப் பணிந்து, தன் நன்றியைக் கண்ணீரால் காணிக்கை ஆக்கினார்.

சரி ராமசாமி. போய் ரெஸ்ட் எடு. கார்த்தால தரிசனம் முடிஞ்சு, ஊருக்குப் பொறப்படு என்று அவருக்கு உத்தரவு கொடுத்தார் பெரியவா.

அந்த சந்நிதியில் இருந்து புறப்பட மனம் இல்லாமல், பெரியவாளின் திருநாமத்தை உச்சரித்தபடியே கிளம்பி, தான் தங்கி இருந்த அறையை அடைந்தார்.

இதே ராமசாமி ஐயருக்கு, மகா பெரியவாளுடன் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அவற்றுள், இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வையும் பார்ப்போம்.

ஒரு முறை விழுப்புரத்துக்கு அருகே வெங்கடாத்திரிஅகரம் என்கிற கிராமத்தில் முகாமிட்டி ருந்தார் பெரியவா. சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம் போன்ற பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள், பெரியவா தரிசனத்துக்காக அங்கே குவிந்தனர்.

இந்தக் கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருப்பது அறிந்து, அவரைத் தரிசனம் செய்வதற்காகத் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சேலத்தில் இருந்து பயணமானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவாளை உள்ளம் குளிரத் தரிசித்துவிட்டு, சேலம் புறப்படுவதற்காக உத்தரவு கேட்டார் ராமசாமி. பெரியவாளும் புன்னகையுடன் அவரை ஆசிர்வதித்து, உத்தரவு கொடுத்தார். அப்போது, மேனாவில் (யாத்திரையின் போது பயன்படுத்தப்படும் பல்லக்கு) இருந்தபடியே பக்தர்கள் எல்லோருக்கும் அட்சதையை அவரவர் வஸ்திரத்தில் ஆசிர்வாதமாகப் போட்டுக் கொண்டிருந்தார் பெரியவா. கருணைத் தெய்வத்தின் திருக்கரங்களால் அட்சதை பெறும் பாக்கியத்தைப் பெரும் பேறாக எண்ணிய பலரும், தங்களது மேல்வேஷ்டியை மற்றும் புடவைத் தலைப்பை அவருக்கு முன் நீட்டி, அதில் விழும் அட்சதையைத் தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டு பத்திரப்படுத்தினர்.

இப்படி அட்சதை பெற்றுக்கொள்ள விரும்பி நின்றிருந்தவர்களின் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார் ராமசாமி. பெரியவாளின் அட்சதையுடன் பயணப்படலாமே என்பது அவரது எண்ணம். ராமசாமியின் மனைவியும் ஓர் ஓரமாக நின்றபடி பெரியவா தரிசனத்தில் மெய்மறந்து காணப்பட்டார்.

வரிசையில் நின்றிருந்தவர்கள், ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டிருந்தனர். இப்போது ராமசாமி ஐயரின் முறை வந்தது. மிகுந்த பயபக்தியுடன் தனது மேல்வஸ்திரத்தை அகலமாகப் பிரித்து, பெரியவாளின் முன்னே ராமசாமி நீட்டினார். ஆனால், நிகழ்ந்தது வேறு விதமாக இருந்தது.

தன் ஆசிர்வாதமான அட்சதையை அவரது வஸ்திரத்தில் போடாமல் தரையில் மண்ணோடு மண்ணாகப் போட்டார் பெரியவா.

இது கண்டு மிகவும் கலக்கமுற்றார் ராமசாமி. அருகே இருந்த அவரது மனைவியும் ஏகத்துக்கும் வருத்தமுற்றார். தரையில் விழுந்த அட்சதையை எடுக்கலாமா, வேண்டாமா என்கிற தயக்கத்தில் இருந்தனர் இருவரும். அப்போது முகம் நிறைய பிரகாசத்தோடு, “என்ன ராமசாமிஅட்சதை தரைல விழுந்துடுதேனு பாக்கறியாமண்ணோடு மண்ணாக அந்த அட்சதையை அப்படியே எடுத்து, நீயும் உன் பார்யாளும் மடில முடிஞ்சு வெச்சுக்கோங்கோ என்றார் பெரியவா நிதானத்துடன்.

இந்த நிகழ்வைக் கண்டு சுற்றி நின்றவர்களும் ஒரு கணம் திகைத்தனர். ‘எல்லோருக்கும் அவரவரது மேல்வஸ்திரத்திலோ, புடவையிலோ அட்சதையை ஆசிர்வாதத்தோடு தெளித்த மகா பெரியவா, இவரது முறை வரும்போது மட்டும் ஏன் மணலில்அதாவது தரையில் அட்சதையைப் போட்டார்? இதற்கு என்ன அர்த்தம்? என்று குழம்பினார்கள்.

மகா பெரியவா என்கிற கருணைத் தெய்வம் மனம் கனிந்து சொல்கிறதே என்பதற்காக, தரையில் குனிந்து, மணலோடு மணலாகச் சிதறிக் கிடந்த அட்சதையை ஒருவிதமான உணர்ச்சியுடன் பொறுக்கி எடுத்து, மடியில் முடிந்து கொண்டனர் இருவரும்.

போயிட்டு வாப்பா ராமசாமிஅதான் உனக்கு உத்தரவு அப்பவே கொடுத்துட்டேனே! என்று அவரை புன்சிரிப்புடன் வழியனுப்பினார் பெரியவா.

ராமசாமிக்கு அடுத்து வரிசையில் வந்தவர்களுக்கு, வழக்கம்போல் மேல்வஸ்திரத்திலேயே அட்சதை போட்டு ஆசிர்வதித்து அனுப்பிக் கொண்டிருந்தார் மகான்.

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு, வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார். சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

சேலத்துக்கு வண்டியில் போகும்போது ராமசாமியும் அவரது மனைவியும் இயல்பான நிலையில் இல்லை. அட்சதையை பெரியவா மணல் மேல் போட்ட நினைவே ஃப்ளாஷ்பேக் போல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஏன் மணலில் அட்சதையைப் போட்டு அதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்? மற்றவர்கள் போல் நமக்கு வஸ்திரத்தில் போடவில்லையேஇந்த நிகழ்வு எதை உணர்த்துகிறது?

சேலத்தை நோக்கி வண்டி வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும், ராமசாமியின் மனதில் வெறுமையே இருந்தது.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ, புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும், யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம்வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக்கொண்டு பிரித்தார்.

உள்ளேரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர், பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்துவிட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்குஉங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக்கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம். இருக்காதா பின்னே! எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்துஅதுவும் நல்ல நன்செய் நிலம்தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா, அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினார் ராமசாமி ஐயர்ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார். அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து, அரிசி அரைத்துக்கொண்டு, அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர். அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

வாப்பா ராமசாமிசேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா? – மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்: “இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து, “ஆமா பெரியவா. வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே, என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுப்பிச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.

எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமிஇன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டுவர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா? என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவாஅன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும் என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போடவேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்துகொள்ள முடியும்?