உணவும் கட்டுப்பாடும்

ணவுக்கு அதிகமாக மயங்கிவிடக் கூடாது என்பதற்காகநாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள்ஆனால், நம்மால் முடியுமா? அப்போதைக்கு சரி என்போம். அடுத்த வேளையில், சப்புக் கொட்ட வைக்கும் பதார்த்தத்தைக் கண்டு விட்டால், எங்கே நாக்கைக் கட்டுப்படுத்துவது?

கிட்டத்தட்ட இதே செய்தியைச் சொல்லும்படி மகா பெரியவாளின் வாழ்க்கையிலும் ஒரு நிகழ்வு சொல்லப்படுவதுண்டு.

காஞ்சி ஸ்ரீமடத்தில் பிக்ஷை எடுத்துதான் உண்பார்கள் ஆச்சார்யர்கள். இதுதான் மரபு. அதன்படி பிக்ஷை எடுத்துக் கிடைத்த பொருட்களை வைத்து மகா பெரியவாளுக்கு சீடன் ஒருவன் தினமும் சமைத்து மதிய வேளையில் உணவளிப்பான். இது வழக்கம்.

அப்படி ஒரு நாள் கீரையை சமைத்துப் பெரியவாளுக்குப் பரிமாறினான் சீடன். பெரியவாளும் இலையில் கொஞ்சமும் மீதி வைக்காமல் சாப்பிட்டுவிட்டார். இதைப் பார்த்த அந்த சீடனுக்கு பெரியவாளுக்குக் கீரை என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கு என்று எண்ணி, தினமும் பிக்ஷையில் கிடைத்த கீரையைச் சமைத்து, பெரியவாளுக்கு ரொம்பவும் ஆர்வமாகப் பரிமாறினான்.

இரண்டாவது நாள், மூன்றாவது நாள் என்று கீரைச் சமையல் ஜோராகப் போய்க் கொண்டிருந்தது. பெரியவாளும்சீடன் ஆசைப்பட்டு வைக்கிறானே என்று தினமும் சாப்பிட்டு வந்தார்.

நான்காம் நாளும் பெரியவா இலையில் கீரை வந்தது. சீடனைத் தன் அருகே அழைத்தார் பெரியவா. “ஏன்டாப்பா அம்பீதெனமும் கீரையைச் சமைச்சுப் போடறியேஎப்படி? என்று சாவதானமாகக் கேட்டார்.

அதற்கு, “பெரியவா ரொம்ப விரும்பிச் சாப்பிடறேளேனு தினமும் சமையல்ல இதைச் சேத்துடறேன் என்றான், வாய் பொத்தி பவ்யமாக.

பெரியவா ஏதும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்து எழுந்து போய்விட்டார். இதன் பின்விளைவுகளை எவரும் அறியவில்லை.

அடுத்த நாளில் இருந்து பிக்ஷை எடுக்க பெரியவா செல்லவில்லை. அன்ன ஆகாரமும் உட்கொள்ளவில்லை. தன் பல்லில் பச்சைத் தண்ணீர்கூடப் படாமல் பார்த்துக் கொண்டார். மதிய வேளையில் ஆகாரம் உண்பதற்கு எவராவது வந்து நினைவூட்டினாலும், அதை ஏற்கவில்லை பெரியவா.

இந்த நிலைமை இரண்டு மூன்று நாட்கள் நீடித்தன. ‘பெரியவா அன்ன ஆகாரம் இல்லாமல்பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்காமல் உபவாசம் இருந்து வருகிறார். ஏனென்றே தெரியவில்லை என்பதே காஞ்சி மடத்தில் பேச்சாக இருந்தது.

பெரியவாளின் இந்த விரதத்துக்கு என்ன காரணம் இருக்கும்? என்று மடத்து முக்கியஸ்தர்கள் குழம்பியும் விடை கிடைக்கவில்லை. பெரியவாளும் பிறருடன் அதிகம் பேசவில்லை. தான் உண்டு, தன் பூஜை உண்டு, பக்தர்களுக்கு தரிசனம் உண்டு என்கிற ரீதியிலேயே இருந்தார்.

அப்போதுதான் மகா பெரியவாளுக்கு சமைத்துப் போடும் சீடனுக்கு அந்த விஷயம் உறைத்தது. ‘தினமும் எப்படிக் கீரை சமையல்? என்று ஒரு நாள் அவர் கேட்டதன் தொடர்ச்சிதான் இந்த உபவாசத்துக்குக் காரணம் என்பதை சட்டென்று உணர்ந்தான்.

தன்னிடம்தான் தவறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன், அடுத்த கணமே ஓடோடிச் சென்று, தியானத்தில் இருந்த மகா ஸ்வாமிகளின் திருப்பாதத்தில் வீழ்ந்தான். கண்ணீர் விட்டுக் கதறினான். “என்னை மன்னிச்சிடுங்கோ பெரியவாநாலு நாளா நீங்க உபவாசம் இருப்பதற்கான காரணம் இப்பதான் எனக்கு தோனித்து. கீரையை நீங்க விரும்பிச் சாப்பிடறதா நினைச்சுண்டு நானும் தினமும் அதை சமையல்ல சேர்த்துண்டிருந்தேன். அது தப்போன்னு எனக்குப் படறது. பெரியவா உபவாசத்தைக் கை விடணும் என்று தேம்பலுடன் கூறினான்அவனது முகம் அழுதழுது சிவந்திருந்தது.

பெரியவா அந்தச் சீடனை ஆசுவாசப்படுத்தினார். “சந்நியாசிகள் எதற்கும் அடிமை ஆகக் கூடாது. புலன்களைக் கட்டுப்படுத்தினால்தான் சந்நியாசம். கீரையை நான் விரும்பிச் சாப்பிடறதா நீ நினைச்சுண்டிருக்கேஇலையில் இருக்கிற பண்டம் வீணா போயிடக் கூடாதேனு நான் சாப்பிடறேன். எந்த ஒரு பதார்த்தத்துக்கும் எவரும் அடிமை ஆகக் கூடாது.

நீ பாட்டுக்கும் தெனமும் கீரையைச் சமைச்சுப் போட்டுண்டிருப்பே. ‘பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கறதேனு நினைச்சுண்டு நீ சமையல் பண்றேஒரு நாள் உனக்குக் கீரையே கிடைக்கலேன்னா, எங்கேயாவது போய்பெரியவாளுக்குக் கீரைன்னா ரொம்ப பிரியம். ரெண்டு கட்டு கொடுங்கோனு கேட்டா, கேக்கறவா என்ன நினைப்பா. சந்நியாசிக்கு அப்படி என்ன நாக்குனு என்னைப் பத்திதானே பேசுவா?

சரி. போ போஉன் மேல ஒரு குத்தமும் இல்லேஆனாலும், இதை ஒரு பாடமா எடுத்துக்கோ என்று நீளமாகச் சொல்லி அந்தச் சீடனை ஒரு புன்முறுவலுடன் அனுப்பினார் பெரியவா.

எப்படிப்பட்ட எளிய வாழ்க்கையை மகா பெரியவா வாழ்ந்திருந்தார் என்பதை அவரது பக்தர்கள் இப்போது சொல்லக் கேட்டாலும், மெய் சிலிர்ப்பதில் வியப்பில்லைதான்!