ஒரு நாள் விடிகாலை வேளை… காஞ்சி மடம் மெள்ள விழிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. மடத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு பெரியவாளைத் தரிசித்தவர்கள், மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் முடிந்து, ஏகாந்தமாக அமர்ந்து காலை அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர்.
அப்போது தன்னுடன் இருக்கும் அணுக்கத் தொண்டர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அடிக்கடி இதுபோல் ஏதாவது விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுவார் பெரியவா.
அப்போது, பெரியவா ஆரம்பித்தார்: “ஏண்டா… நம்மூர்ல எத்தனையோ கோயில் இருக்கு. ஆயிரக்கணக்குல கோயில் இருக்கும். ஆனா, எல்லா கோயில்ல இருக்கிற அர்ச்சகாளும் மூணு வேளை நிம்மதியா சாப்பிடறாளா? மதுரை வீரனுக்கு ஏதோ கிடைச்சதை வெச்சு நைவேத்தியம் பண்ற கிராமத்துப் பூசாரிங்க எல்லோரும் சந்தோஷமா இருக்காளா? பெருமாளுக்குப் பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்தியம் பண்ற பட்டாச்சார்யா குடும்பம் எல்லாம், வயத்துக்கு மூணு வேளை சாப்பிட்டுண்டு இருக்காளா? இதை எல்லாம் யாராவது அப்பப்ப விசாரிக்கிறேளா?“
அங்கு இருந்தவர்கள் ஆடிப் போய்விட்டனர். பெரியவா இது போல் ஏதாவது ஒரு விஷயத்தைப் பீடிகையுடன் துவங்கினால், அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
பொத்தாம்பொதுவாக, இந்தக் கோயில் பூசாரிக்கு மகா பெரியவா ஏதோ கொடுக்கச் சொன்னாரே… அந்தக் கோயில் பட்டாச்சார்யருக்கு ஒரு தொகையை அனுப்பச் சொன்னாரே என்று அணுக்கத் தொண்டர்கள் செயல்படுவார்களே தவிர, இப்படி ஒட்டுமொத்த பூசாரிகளையும் அர்ச்சகர்களையும் பட்டாச்சார்யர்களையும் பற்றி ஒரே நேரத்தில் அவர்கள் சிந்தித்ததில்லை; அப்படிச் சிந்திக்கவும் தோன்றவில்லை.
அணுக்கத் தொண்டர்களின் பேரமைதிக்குப் பிறகு பெரியவாளே தொடர்ந்தார்: “ஏதோ மூணு கோயில்ல – நாலு கோயில்ல இருக்கிற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும். யோசிங்கோ“ என்று சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார். அவர் பெயர் – ராமலிங்க பட். குஜராத்தி பிராமணர். தமிழ்நாட்டில் செட்டில் ஆனவர். ஆசாரம், அனுஷ்டானம் என்றால், அப்படி ஒரு கட்டுப்பாடு ராமலிங்க பட்டிடம் இருக்கும். சென்னை ஐ.ஐ.டி–யில் அசிஸ்டெண்ட் ப்ரொபஸராகப் பணியில் இருந்தார்.
மகா பெரியவாளைத் தரிசிக்கச் செல்வது என்றால், கொள்ளை இஷ்டம். ‘என் கண் கண்ட தெய்வமே… கலியுகக் கடவுளே‘ என்று பொசுக்கென்று அவரது திருவடிகளில் பணிந்து கிடப்பார். மகான் தன்னிடம் ஏதாவது கட்டளை இட மாட்டாரா என்று ஏங்கித் தவிப்பார்.
இத்தகைய ஒரு இறை ஈடுபாட்டை இறைவன் எல்லோருக்கும் கொடுத்துவிட மாட்டான். சிலருக்கு மட்டுமே கொடுப்பான். அந்த சிலருள் ராமலிங்க பட்டும் ஒருவர்.
பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து முடித்துவிட்டு, அந்தக் கலியுக தெய்வத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தோ, என்னவோ… ‘ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர‘ என்கிற மந்திர வார்த்தைகளை மட்டும் மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தார் ராமலிங்க பட்.
அப்போது, வலக் கையில் நடுவிரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து பெரியவா ஒரு சொடுக்கு போட்டாரே, பார்க்கணும்..! பேரமைதியுடன் இருந்த அந்த ஹால் முழுதும்
சொடுக்குச் சத்தம் துல்லியமாகக் கேட்டது.
பெரியவா சொடுக்குப் போடுகிற விதத்தை, அவருடன் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சொடுக்குப் போடுகிற விதமும் அதன் பின் எழுகிற ஓசையும் அலாதியானது.
பெரியவாளின் சொடுக்குப் பற்றி அறிந்தவர் ராமலிங்க பட். நெடுநாள் பக்தர் அல்லவா? ஹாலில் பட்டு எதிரொலித்த அந்த சொடுக்குச் சத்தம் பெரியவாளுக்கு மட்டுமே சொந்தம் என்பதை அறிந்த அவர், பயபக்தியுடன் சட்டென்று திரும்பிப் பார்த்தார்.
இப்போது வலது புறங் கையை ராமலிங்க பட்டின் பக்கம் காண்பித்து, ஆட்காட்டி விரலை மட்டும் தான் இருக்கும் பக்கமாக அசைத்து, ‘அருகே வா‘ என்பது போல் சைகை காண்பித்தார் பெரியவா.
காலை வேளையில் கருணைத் தெய்வம் தன்னைக் கை நீட்டி அழைக்கிறதே என்று பரவசப்பட்டு, அவர் அருகே வந்தார் ராமலிங்க பட். பவ்யமாக நின்று, பெரியவாளின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பெரியவாளுக்கு ராமலிங்க பட்டை நன்றாகத் தெரியும்.
எடுத்த எடுப்பிலேயே பெரியவா ராமலிங்க பட்டைப் பார்த்துக் கேட்டார்: “உன்னோட ஒரு மாச சம்பளத்தை எனக்குத் தருவியா?“
நெக்குருகிப் போனார் ராமலிங்க பட். சகலருக்கும் கேட்ட வரங்களை அள்ளித் தருகிற கடவுள், என்னைப் பார்த்து ஒரு மாச சம்பளம் தருவியா என்று கேட்கிறதே என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இந்த திடீர் அதிர்ச்சியில் அவருக்குப் பேச வார்த்தைகள் எழவில்லை.
“என்ன, யோசிக்கறே போலிருக்கு… எதோ, இன்னிக்குக் கார்த்தால வேளையில உன்னைப் பார்த்தோன்ன கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். கொடுப்பியா?“
வேரறுந்த மரம் போல் பெரியவாளின் திருவடியில் வீழ்ந்தார் ராமலிங்க பட். “பெரியவா ஆக்ஞைப்பட்டா என்கிட்டேர்ந்து என்ன வேணும்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு அதைத் தவிர வேறென்ன சந்தோஷம் நிலைக்கப் போறது“ என்று மெய் சிலிர்த்தார்.
அப்போது ராமலிங்க பட்டுக்கு மாத சம்பளம் சுமார் நாலாயிரம் ரூபாய். அவரிடம் இருந்து பணம் வாங்கப்பட்ட பிறகுதான், ‘கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்‘ துவங்கியது. (வருமானம் குறைந்த பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு உதவிகளை இன்றும் செய்து வருகிறது இந்த டிரஸ்ட்.)
டிரஸ்ட் துவங்கப் போவது சம்பந்தமாக ‘ஹிண்டு‘ ஆங்கில நாளிதழில் விரிவான ஒரு செய்தி வரவேண்டும் என்று பெரியவா விருப்பப்பட்டார். டிரஸ்ட் பணிகளுக்காகத் தன்னுடன் இருக்கும் தொண்டரும், காஞ்சி மடம் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிக ஈடுபாடு உள்ளவருமான வேதமூர்த்தி என்பவரிடம் இதற்கான ஆயத்தத்தை மேற்கொள்ளச் சொன்னார் பெரியவா. அடுத்த ஓரிரு நாட்களிலேயே ‘ஹிண்டு‘ நாளிதழில் இதைப் பற்றி விரிவாகச் செய்தி வந்திருந்தது. இதை எழுதியவர் – வேதமூர்த்தி.
பெரியவா அதைப் படித்துப் பெரிதும் மகிழ்ந்தார். அப்போது மடத்துக்கு வந்தார் சென்னை அடையாறைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டான ராகவன் என்பவர். பெரியவாளின் அத்யந்த பக்தர். அந்த ‘ஹிண்டு‘ பேப்பர் கட்டிங்கை அவரிடம் கொடுத்து, “இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தர்றியா?“ என்று சிறு குழந்தையைப் போல் கேட்டார் பெரியவா.
பெரிதும் மகிழ்ந்த ராகவன், பெரியவாளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, அதை ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் எடுத்து அடுத்த நாளே காஞ்சிபுரத்தில் பெரியவாளிடம் சேர்த்தார். “ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் கொண்டு வந்தியோ?“ என்று ராகவனைப் பார்த்துக் கேட்டார் பெரியவா.
ன்ன பதில் சொல்வதென்று ராகவன் திகைத்தபோது, “மெட்ராஸ் ஐ.ஐ.டி–ல ராமலிங்க பட்னு ஒருத்தன் இருப்பான். அந்த பில்லைக் கொண்டுபோய் அவன்கிட்ட கொடுத்துக் காசு வாங்கிக்கோ. ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்ததே உனக்குப் பெரிய கைங்கர்யம்“ என்றார் பெரியவா.
காஞ்சி பெரியவா என்றால், அவரோடு அதிகம் தொடர்பு வைத்திருந்த பிரதோஷம் மாமா என்றழைக்கப்படுகிற பிரதோஷம் வெங்கட்ராமய்யரை அனைவரும் அறிவார்கள்.
ஆச்சார்யர்கள் என்றாலே, பாதுகை தரிசனத்துக்கும் பாதுகை வழிபாட்டுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவர்களின் திருவடி அந்தப் பாதுகைகளில் பட்டிருக்கலாம். அல்லது தன் கைப்பட அதை ஆசிர்வதித்துத் தந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், ஆச்சார்யர்களின் பாதுகைகள் என்றாலே அவை போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவை. பாதுகைகளைத் தரிசிக்கும் பேறும், அவை நமக்கே நமக்கு உரித்தானதாகக் கிடைக்கும் சந்தர்ப்பமும் எளிதில் வாய்க்காது.
இத்தகைய அதிர்ஷ்டமும் வாய்ப்பும் பெற்ற பாக்கியசாலி பக்தர்கள், இன்றளவும் தங்களது இல்லத்தில் காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகளின் பாதுகைகளை வைத்து பூஜித்து வருகிறார்கள். மகா பெரியவா தங்களது கிரஹத்திலேயே இருந்து என்றென்றும் ஆசிர்வதித்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படி மகா பெரியவாளால் – அதுவும் அவர் உடல்நலம் குன்றி இருந்த காலத்தில் ஆசிர்வதிக்கப்பட்டுத் தந்த பாதுகைகளுக்கு ஒரு கூடுதல் சிறப்பு இருக்கிறது. இந்தப் பாதுகைகளைத் தன் இரண்டு திருப்பாதங்களிலும் அணிந்து கொண்டு, ஸ்ரீநடராஜ பெருமானைப் போல் – தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே கால்களை மாற்றி மாற்றிப் போட்டு அனுக்கிரஹித்துக் கொடுத்த பாதுகைகள் இவை. இந்தத் திருப்பாதுகைகள், தற்போது திருப்பணிகள் நடந்து வரும் ஓரிருக்கைப் பெருங்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றன.
காஞ்சிபுரத்துக்கு அருகே திருப்பணி வேலைகள் நடந்து வரும் இந்த ஓரிருக்கைப் பெருங்கோயில், ‘மீளா அடிமை‘ என்றும், ‘பிரதோஷம் மாமா‘ என்றும் அழைக்கப்படுகிற ஸ்ரீவெங்கட்ராம ஐயரின் பிறவி ஆசை. மகா பெரியவா பக்தர்களின் தீராக் கனவு. இந்தப் பெருங்கோயில் உருவாகி வருகிற கதையையும், அதன் ஆரம்ப கால சிலிர்ப்பூட்டும் சம்பவங்களையும் சொல்ல ஆரம்பித்தால், அது நீண்டுகொண்டே இருக்கும். அதைப் பற்றி வாய்ப்பு ஏற்படும்போது பின்னர் பார்க்கலாம்.
ஓரிருக்கைப் பெருங்கோயிலில் ‘பாதுகா மண்டப‘த்தில் இடம் பெற இருக்கின்ற இந்தப் பாதுகைகள், பெரும் பேறு பெற்றவை. தினமும் இந்தப் பாதுகைகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பாதுகைகள் பிரதிஷ்டை ஆகி, ஓரிருக்கையில் இதைத் தரிசிக்கும் ஒவ்வொருவருக்கும் மகா பெரியவாளின் ஆசி உண்டு என்றே சொல்லலாம்.
இந்தப் பாதுகைகளுக்குப் பின்னால் இருக்கும் கதை, சுவாரஸ்யமான ஒன்று.
இப்போது சொல்லப் போகும் சம்பவம் பிரதோஷம் மாமா என்றழைக்கப்படும் வெங்கட்ராமய்யருடன் சம்பந்தப்பட்டது. பெரியவாளின் அனுக்ரஹத்துடன் தன்னிடம் வந்து சேர்ந்த இந்தப் பாதுகைகளுக்கு பூர்ணகும்ப மரியாதை கொடுத்து, தலை மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
அது 1992-ஆம் வருடம்… மகா பெரியவா உடல்நலம் குன்றி இருந்த காலம். காஞ்சி மடத்தை விட்டு அவர் எங்குமே நகரவில்லை. மகா பெரியவா நிச்சயம் காஞ்சியில்தான் இருப்பார் என்பதால், அந்தக் கருணை தெய்வத்தைத் தரிசிக்க வந்த பக்தர்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. தமிழகம் தவிர ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, வெளிநாடுகள் போன்ற பற்பல இடங்களில் இருந்தெல்லாம் திரளாக வரும் பக்தர்கள் தினமும் காஞ்சியில் குவிவது வழக்கம். எங்கெங்கிருந்தோ வரும் பக்தர்களுக்குத் தன் தீட்சண்யப் பார்வையால் ஆசி வழங்குவார். முக்கியமாக, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு ஸ்ரீமடம் சம்ஸ்தானத்தில் பத்திரிகை வைத்து ஆசி கோருபவர்களுக்குக் கொஞ்சம் கல்கண்டும் குங்குமமும் அந்த மஞ்சள் பத்திரிகையில் போட்டுத் தருவார் பெரியவா. உடல்நலம் குன்றி இருந்தாலும், தன் நித்திய அனுஷ்டானங்களிலும் செயல்பாடுகளிலும் பெரிய அளவில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை அவர்.
அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க பெருமளவில் பக்தர்கள் கூடி இருந்தார்கள். மகானின் திருப்பார்வை தங்கள் மேல் படாதா என்கிற ஏக்கத்துடனும், எந்த ஒரு பிரார்த்தனையுடன் ஸ்ரீமடத்துக்கு வந்திருக்கிறோமோ அது நிறைவேறாதா என்கிற பேராசையுடனும் எண்ணற்ற பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் ராமலிங்க பட் என்பவரும் தன் துணைவியாருடன் காஞ்சி சங்கர மடத்துக்கு பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார். அவரை அடுத்து பெரியவாளின் அபிமானத்தைப் பெற்ற அன்பர் வேதமூர்த்தியும் தன் துணைவியாருடன் நின்று கொண்டிருந்தார்.
எப்போதுமே மகா பெரியவா தரிசனத்துக்காகச் செல்லும் பக்தர்கள் பலரும் வரிசையில் நின்றுதான் அவரை தரிசிப்பார்கள். அவர் எத்தனை பெரிய ஆசாமியாக இருந்தாலும் இதில் இருந்து விதிவிலக்கு இல்லை. மகா பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்துக்கு பாத்தியதைப்பட்ட எந்த பக்தரும் இப்படி வரிசையில் சென்று அவரைத் தரிசிப்பதைத்தான் விரும்புவார்கள். சலுகைகளை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏதோ அவசர காரியமாக உடன் புறப்பட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருந்தால் மட்டுமே, சிஷ்யர்கள் மற்றும் ஊழியர்களிடம் சொல்லிவிட்டு ஸ்பெஷலாகத் தரிசித்துவிட்டுப் புறப்படுவார்கள்.
மடத்து ஊழியர்கள் பலரைத் தெரிந்து வைத்திருந்தாலும் ராமலிங்க பட்டும், வேதமூர்த்தியும் வரிசையிலேயே மெள்ள நகர்ந்து கொண்டிருந்தார்கள். ராமலிங்க பட்டின் கையில் பட்டுத் துணியால் மூடப்பட்ட ஒரு பார்சல் இருந்தது. மிகவும் பய பக்தியுடன் அதைத் தன் வலக் கரத்தில் ஏந்தி இருந்தார் பட். ஒவ்வொரு பக்தரும் தங்கள் கையில் ஏதோ ஒன்றை பெரியவாளுக்கு சமர்ப்பிப்பதற்காக வைத்திருந்தார்கள். பழங்கள், பூ வகைகள், திருமணப் பத்திரிகைகள், தங்கள் வாரிசுகளின் இன்டர்வியூ லெட்டர்கள், தேர்வு மார்க் ஷீட்கள் – இப்படி அந்தப் பட்டியல் நீளும்.
தங்கள் கையில் இருப்பதை விட, அடுத்தவர் கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதுதானே மனிதனின் இயல்பு? இந்த இயல்பு கொஞ்சம் அதிகமாக உந்தப்பட… ராமலிங்க பட் பலரின் கவனத்துக்கும் உள்ளானார். காரணம் – அவர் கையில் இருந்த பட்டுத் துணி சமாசாரம். ‘உள்ளே என்ன இருக்கும்? பழங்கள், புஷ்பங்கள், பத்திரிகைகள் – இப்படி ஏதாவது இருந்தால் இதுபோல் மூடிவைத்துக் கொண்டுசெல்ல மாட்டார்களே? இதில் ஏதோ விசேஷம் இருக்கிறது‘ என்று வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் ஆளாளுக்குக் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.
‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷமும், ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து பஜனைப் பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த விதமும், வேத பண்டிதர்கள் ஓரிடத்தில் அமர்ந்து பாராயணம் செய்து கொண்டிருந்த சூழலும் அந்த ஸ்ரீமடத்தின் சூழ்நிலையை தெய்வீகமாக மாற்றி இருந்தது. கயிலாயத்தில் எம்பெருமான் சிவனார் கயிலாயமூர்த்தியாகக் காட்சி அளிப்பதைப் போல் காஞ்சி ஸ்ரீமடத்தில் அந்த சங்கர சொரூபம் பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருந்தது.
பிரத்யட்ச தெய்வத்தைக் கண்களுக்கு நேராகத் தரிசித்து விட்ட பரவசத்தில் பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள். மகானது திருவடியில் வீழ்ந்து பணிந்தார்கள். கண நேரத்தில் அந்தப் பரப்பிரம்மம் தரும் தீட்சண்ய ஆசிக்காக சரீர சிரமத்தையும் பொருட்படுத்தாமல் எத்தனையோ முதியவர்கள் பொறுமை காத்து வரிசையில் வந்து கொண்டிருந்தனர்.
ராமலிங்க பட்டிடம் வருவோம். பெரியவாளின் அத்யந்த பக்தரான பட்டின் முகத்தில் அன்றைய தினம் ஏனோ அலாதியான ஒரு சந்தோஷம் இருந்தது. இருக்காதா பின்னே… காலா காலத்துக்கும் அவரது பெயருக்கும், பெரியவாளின் பக்திக்கும் நற்பெயர் சேர்க்க இருக்கும் ஒரு மகத்தான செயலை அல்லவா அவர் செய்யப் போகிறார்?
அந்த நீண்ட வரிசையில் தன் பின்னே இருக்கும் அன்பர் வேதமூர்த்தியிடம் திரும்பி மெள்ளக் கேட்டார் பட்: “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?“
இருவருமே ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள்தான் என்கிற விவரத்தைக் கடந்த இதழில் சொல்லி இருந்தோம்.
“சொல்லுங்கோ பட்… என்ன ஆகணும்?“ – வேதமூர்த்தி கேட்டார்.
“மகா பெரியவா கைங்கர்யத்துல இப்ப அவர் பக்கத்துல இருக்கறவா யாரையும் சட்டுன்னு என்னால அடையாளம் கண்டுக்க முடியல. ரொம்ப நேரமா இதைக் கையில் வெச்சுண்டு நிக்கறேன். மகா பெரியவாளை உடனே பார்க்கணும். இதை அவர்கிட்ட கொடுக்கணும். ஆசி வாங்கணும். எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?“ என்று கேட்டார்.
“ரொம்ப கூட்டமாத்தான் இருக்கு. சட்டுன்னு தெரிஞ்சவா யாரும் கண்ணுக்குப் படலே. சரி… பட்டுத் துணி போட்டு மூடி வெச்சுருக்கேளே… உள்ள என்ன இருக்கு?“ என்று நிதானமாகக் கேட்டார் வேதமூர்த்தி.
“பெரியவாளுக்கு பாதுகைகள் பண்ணிக் கொண்டு வந்திருக்கேன். ஓரிருக்கையில மகா ஸ்வாமிகளுக்குப் பெருங்கோயில் கட்டப் போகிறதில்லியா…? வாழ்ந்து வரும் அந்த மகானின் ஆசிர்வாதத்துடன் அங்கே அவரது திருப்பாதுகைகள் பிரதிஷ்டை ஆகணும்னு எனக்கு ஆசை“ என்று சொல்லும்போதே ராமலிங்க பட்டின் கண்கள் பனித்தன.
வேதமூர்த்திக்கு ஒருபுறம் ‘இப்படியும் ஒரு பக்தரா?‘ என்று பெருமிதம் இருந்தாலும், மறுபுறம் துணுக்குற்றார். “ஓரிருக்கைப் பெருங்கோயில் டிரஸ்ட்ல இருக்கிற யாரிடமாவது பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்தப் பாதுகைகளைக் கொண்டு வர்றேள்?“ என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.
“பர்மிஷனா? அது மாதிரி யார்கிட்டேயும் எதுவும் நான் கேக்கலியே. அப்படிக் கேக்கணும்னு என் மனசுல தோணவே இல்லியே“ என்று சற்றே பீதி ஆனார் ராமலிங்க பட்.
பிறகு, லேசாக உடைந்த குரலில், “எம் மனசுக்குப் பட்டதை செஞ்சிருக்கேன். என் அம்மா சமீபத்துல சுமங்கலியா காலமாயிட்டா. அவரோட சொத்தா கடைசி வரை காப்பாத்திண்டு வந்த எட்டு பவுன் நகைகளை, இந்தப் பாதுகைகளோடு மகா பெரியவா கைங்கர்யத்துக்கு அர்ப்பணிக்கணும்னு முடிவு பண்ணேன். மைசூர்ல உசந்த இடத்துல சந்தனக் கட்டை வாங்கி, தேர்ந்த ஆசாரிகிட்ட கொடுத்து, சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகை பண்ணிக் கொண்டு வந்திருக்கேன்“ என்றார் பட் (ஒரு செட் தன் குடும்பத்துக்காக என்றார்).
“சுவாமி… ஒருவேளை மடத்துல இதை ஏத்துக்கலேன்னா நீங்க என்ன பண்ணுவேள்?“ என்று இயல்பாக எழக்கூடிய ஒரு கேள்வியை ராமலிங்க பட்டைப் பார்த்துக் கேட்டார் வேதமூர்த்தி.
அவ்வளவுதான்… ராமலிங்க பட் அந்தக் கணமே நொறுங்கிப் போனார். ‘சம்பந்தப்பட்ட டிரஸ்ட்டிகளிடம் விஷயத்தைச் சொல்லி அனுமதி வாங்கி இருக்க வேண்டுமோ? இவர் சொல்கிறபடி ஒருவேளை இந்தத் திருப்பாதுகைகள் முன்அனுமதி இன்றி தயார் செய்யப்பட்டதால், நிராகரித்து விடுவார்களோ‘ என்றெல்லாம் பயப்பட ஆரம்பித்தார்.
ஓரிருக்கையில் மகா ஸ்வாமிகளுக்காகக் கட்டப்பட இருக்கும் பெருங்கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் அற்புதமான சந்தனப் பாதுகைகளைத் தயார் செய்து, அதைப் பெரியவாளின் பாத கமலங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்… அதன் பின் அவரது அருளாசியுடன் அந்தத் திருப்பாதுகைகளை, சம்பந்தப்பட்ட டிரஸ்ட் அன்பர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதே பெரியவா பக்தரான ராமலிங்க பட்டின் விருப்பம்.
மகா பெரியவாளிடம் ராமலிங்க பட்டுக்கு இருக்கும் பக்தி மிகவும் உயர்ந்தது. அவருக்குக் கண் கண்ட ஒரே தெய்வம் – பெரியவாதான்! அந்த மகானுக்கு ஏதேனும் தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்தால், அதைத் தனது பூர்வ ஜன்ம புண்ணியம் என்று ஆனந்தப்பட்டார். மகா பெரியவாளின் சிறு விரல் அசைவே அவரிடம் எண்ணற்ற மாறுதல்களை உண்டாக்கக் கூடிய சக்தி கொண்டதாக இருந்தது.
அந்த அன்பின் – பக்தியின் வெளிப்பாடாகத்தான் புதிதாகத் தயார் செய்த புனிதப் பாதுகைகளைச் சுமந்து, மகா பெரியவாளின் ஆசி வேண்டி அன்றைய தினம் அவரைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டத்தில் மிகுந்த பவ்யத்துடன் நின்றிருந்தார்.
அமைதியான சூழ்நிலையில் பெரியவாளிடம் இதைக் கொடுத்து ஆசி வாங்கலாம் என்றுதான் ஆர்வத்தோடு வந்திருந்தார். ஆனால், பட் வந்த நேரமோ என்னவோ… அன்றைக்கென்று பார்த்து ஸ்ரீமடத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், பட்டின் மனம் சற்று வாட்டமுற்றாலும், மெள்ளத் தன்னைத் தேற்றிக் கொண்டார். காரணம் – ‘பெரியவாளுக்குத் தான் ஒருவர் மட்டும் பக்தர் இல்லையே… பலருக்கும் பெரியவாளின் அருளாசி கிடைக்க வேண்டுமே‘ என்கிற எண்ணம்தான். எப்படி இருந்தாலும் இன்னும் சில மணி நேரத்துக்குள் பெரியவாளின் ஆசி தனக்குப் பரிபூரணமாகக் கிடைத்துவிடும் என்று மனப்பூர்வமாக நம்பினார்.
இருந்தாலும், ‘ஓரிருக்கைப் பெருங்கோயில் சம்பந்தப்பட்ட டிரஸ்ட்டிகளிடம் முன் அனுமதி பெற்றுத்தானே இதைத் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறீர்கள்?‘ என்று மடத்தின் அபிமானத்தைப் பெற்ற அன்பர் வேதமூர்த்தி கேட்டபோது பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினார் பட்.
‘பெரியவா திருவுளம் எப்படி நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ, அப்படியே நடக்கும்‘ என்று ஒரு கணம் பிரார்த்தித்துக் கொண்ட வேதமூர்த்தி, “சித்த பொறுங்கோ… உங்களோட அவசரமும் எனக்குப் புரியறது. பெரியவா கைங்கர்யத்துல யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு பார்க்கறேன்“ என்று சொல்லிவிட்டு, வரிசையில் இருந்து பக்கவாட்டில் சற்று விலகி நின்று, மகா பெரியவாளின் சந்நிதி நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினார்.
நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க… ராமலிங்க பட்டிடம் பரபரப்பு கூடிக்கொண்டே போனது. வேதமூர்த்தியையே பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென வேதமூர்த்தியின் முகத்தில் ஒரு பரவசம். அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சந்திரா என்பவர் வேதமூர்த்தியின் பார்வையில் பட்டுவிட்டார்.
அவரை ‘தெலுங்கு சந்திரா‘ என்றுதான் மடத்து அன்பர்கள் அழைப்பார்கள்.
தெலுங்கு சந்திராவை வேதமூர்த்திக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. பெரியவா தரிசனத்துக்கு அவ்வப்போது ஸ்ரீமடத்துக்கு வருகிற நேரங்களில் அவரைச் சந்தித்திருக்கிறார்; பேசியும் இருக்கிறார்.
பக்தர்கள் காத்து நிற்கும் இந்த நீண்ட வரிசையில் வெகு நேரம் பாதுகைகளைச் சுமந்து நின்று கொண்டிருக்கும் ராமலிங்க பட்டின் அவசரத்துக்கு தெலுங்கு சந்திரா நிச்சயம் உதவுவார் என்று தீர்மானித்தார் வேதமூர்த்தி.
பெரியவா கைங்கர்யத்தில் இருந்தபடியே அங்கும் இங்கும் பார்வையைச் சுழல விடும் தெலுங்கு சந்திரா ஏதேனும் ஒரு கணத்தில் தன்னைக் கவனிக்கிறாரா என்று அறிந்து கொள்ளும் விதமாக வரிசையில் நின்றவாறே அவ்வப்போது தலையை எட்டி எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தார் வேதமூர்த்தி.
இந்த யுக்தியும் வேதமூர்த்திக்கு ஓரளவு கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். பெரியவாளுக்குப் பக்கத்தில் நின்று அவருக்குக் கைங்கர்யம் செய்தவர். வேதமூர்த்தியின் ஜாடையைப் பார்த்ததும் அவர்கள் அருகே தெலுங்கு சந்திரா வந்துவிட்டார்.
தெலுங்கு சந்திராவும், வேதமூர்த்தியும் அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறே ஏதேதோ ஜாடை காட்டிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராமலிங்க பட்டின் முகத்தில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. எப்படியும் இன்னும் சில நிமிடங்களுக்குள் பெரியவாளின் சந்நிதானத்தை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை அவருக்குள் பிறந்தது.
விதம் விதமான பழங்கள் அடங்கிய மூங்கில் தட்டுகளும், மணக்கும் வண்ண வண்ண மலர்மாலைகளும், பாக்கெட் பாக்கெட்டாக டிரை ஃப்ரூட்ஸ் வகைகளும் மகா பெரியவாளுக்குக் காணிக்கையாக அவர் முன்னால் மலை போல் சேர்ந்து கொண்டே இருந்தன.
காணிக்கை என்பது அன்பின் வெளிப்பாடு. நாம் விருப்பப்பட்டுக் கொண்டு செல்லும் அத்தனையும் உரிய சந்நிதியில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற பக்தியே உயர்ந்து நிற்க வேண்டும். ‘இத்தனை பழங்களையும் பெரியவா சாப்பிடுவாரா?‘ என்று தத்துப்பித்தென்று நினைக்கக் கூடாது. ஒரு பக்தர் கொண்டு செல்லும் பொருட்கள் மீது – அது பழமானாலும் சரி… என்னவாக இருந்தாலும் சரி… அதன் மேல் அவரது திருப்பார்வை விழுந்துவிட்டாலே போதும். நம்முடையதை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார் என்றே திருப்திப்பட வேண்டும்.
அந்தக் கருணைத் தெய்வம் தங்கள் பக்கம் பார்வையைத் திருப்பி, கையை உயர்த்தி ஆசிர்வதிக்காதா… தனது திருக்கண் அசைவால் சேதி ஏதும் சொல்ல மாட்டாரா… பழங்களையோ, பூக்களையோ தன் திருக்கையால் எடுத்துக் கொடுத்து ஆசி வழங்க மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பு அங்கு காத்திருந்த பெரும்பாலான பக்தர்கள் முகத்தில் தெரிந்தது. யாருக்குத்தான் இருக்காது?!
வியர்வை வடிய நெடுநேரம் காத்திருந்தும், தரிசனம் முடிந்த பின்னாலும்கூட சில பக்தர்களுக்கு அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு மனம் இல்லை. ‘ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர‘ என்று இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராக வைத்துத் தட்டி, ராகத்துடன் ஜபித்து பெரியவாளின் திருநாமத்தை உச்சரித்தபடியே காணப்பட்டார்கள்.
தெலுங்கு சந்திராவும் இன்னும் சில சீடர்களும், “பெரியவாளைத் தரிசனம் செய்தவா எல்லாம் வேகமா நகருங்கோ… உங்களுக்குப் பின்னாடி நிறைய பேர் காத்துண்டிருக்கா. எல்லாருக்கும் பெரியவா தரிசனம் கிடைக்கணும். பிரசாதம் வாங்கிண்டவால்லாம் நகர்ந்து போயிண்டே இருங்கோ“ என்று சத்தம் போட்டுச் சொல்லி, அவ்வப்போது கூட்டத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
தெலுங்கு சந்திராவுக்கு அப்படி ஒரு ஓங்கிய குரல். பேச்சு, செயல் எல்லாம் டமார், டுமீர் என்றுதான் இருக்கும். இவரிடம் எந்த ஒரு ஆசாமியும் ரகசியம் சொல்ல முடியாது. அதாவது எந்த ஒரு ஆசாமியும் அவரிடம் மெதுவாகப் பேசிவிட முடியாது. சத்தம் போட்டுத்தான் பேச வேண்டும். அதுபோல் சந்திராவுக்கும் மெதுவாகப் பேச வராது.
மகா பெரியவாளின் உடல்நிலை அவ்வளவு சுகமாக இல்லாத நேரம் அது… பார்வையும் அந்த அளவுக்கு இல்லை. தெரிந்தவர்கள் என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு எவராவது வந்து நின்றால், கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்க்கும் அந்தப் பரப்பிரம்மம். கேட்கும் சக்தியும் சற்றுக் குறைந்திருந்தது. மெள்ள பிரசாதத்தை எடுத்து வழங்கும். கயிலையில் அமர்ந்திருக்கும் அந்த சாட்சாத் ஈஸ்வரனே அளித்த பிரசாதம் போல், அதை நெக்குருகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.
கூட்டமோ, திமிலோகப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராமலிங்க பட் கொண்டு வந்திருக்கும் பாதுகைகளுக்கு விளக்கத்தைச் சொல்லி அதைப் பெரியவாளுக்கு எப்படிப் புரிய வைப்பது? கிட்டத்தட்ட இந்தக் குழப்பத்தில் இருந்தார் வேதமூர்த்தி.
‘முதலில் தெலுங்கு சந்திராவுக்கு விஷயத்தைப் புரிய வைத்து விடுவோம். அதன் பின், அவரே விஷயத்தைப் பெரியவா காதில் போட்டுவிடுவார்‘ என்று முடிவு செய்த வேதமூர்த்தி, தெலுங்கு சந்திராவைத் தன் அருகே வரவழைத்தார்.
“சொல்லுங்கோ மாமா“ என்று தன் அருகில் வந்த தெலுங்கு சந்திராவிடம், “தோ பாருங்கோ… சாரு பேரு ராமலிங்க பட். மடத்துக்கு அப்பப்ப வருவார். பெரியவாள்னா அவ்ளோ ப்ரீதி…“ என்று வேதமூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சந்திரா குறுக்கிட்டு, “நன்னா தெரியும் மாமா. இந்த மடத்துல இவரை நான் பார்த்திருக்கேன். விஷயத்தைச் சொல்லுங்கோ“ என்று படபடத்தார்.
பாதுகைகளை பட் கொண்டு வந்திருக்கும் விஷயத்தையும், அதை எப்படியாவது பெரியவாளின் அனுக்ரஹத்துடன் அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும், ஓரிருக்கையில் இது பிரதிஷ்டை ஆக வேண்டும் என்று அவர் விருப்பப்படுவதாகவும் – சுருக்கமாக – அதே நேரம் தெளிவாகச் சொல்லி முடித்தார் வேதமூர்த்தி.
“இதானா விஷயம் மாமா… கொடுங்கோ, அந்தப் பாதுகைகளை“ என்று, ராமலிங்க பட் தன் கையில் பத்திரமாக வைத்துக் கொண்டிருந்த திருப்பாதுகைகளை வாங்கிக் கொண்டார்.
சந்திராவுக்கும் அதன் முக்கியத்துவம் புரியும். பாதுகைகளை பட்டிடம் இருந்து வாங்கியவர், அவற்றைத் தன் தலையில் பவ்யமாகச் சுமந்து, பெரியவாளின் அருகே சென்றார்.
ராமலிங்க பட்டின் கண்களில் நீர் சுரந்தது. அதில் ஆனந்தம் தெரிந்தது.
எதிர்பார்ப்பது நடக்கப் போகிறது என்று தெரிந்தால், கிடைக்கிற ஆனந்தமே தனி.
படிப்பு, வேலை, திருமணம் என்று இதெல்லாம் நாம் எதிர்பார்த்த மாதிரி கிடைத்துவிட்டால், நம் மனம் எவ்வளவு குதூகலப்படும்! எத்தனை சந்தோஷப்படும்!
ராமலிங்க பட்டுக்குத் தற்போது இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு – இந்தப் பாதுகைகளுக்குப் பெரியவாளின் ஆசி கிடைக்க வேண்டும்… பின்னர், அது ஓரிருக்கையில் பிரதிஷ்டை ஆக வேண்டும்.
சுய நலம் இல்லாத ஆசைகள் தோற்றுப் போனதாக சரித்திரம் இருக்கிறதா?
எண்ணற்ற பக்தர்கள் பலன் பெற வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையோடு செய்யப்படும் ஒரு காரியம், விழலுக்கு நீர் இறைத்த கதையாகப் போனதுண்டா?
மகா பெரியவா என்கிற அந்த மாமுனியை நெருங்கினார் தெலுங்கு சந்திரா.
வேதமூர்த்தியும் ராமலிங்க பட்டும் மகா பெரியவாளின் உத்தரவுக்காகவும் அனுக்ரஹத்துக்காகவும் கண்கள் பனிக்கக் காத்துக் கொண்டிருந்தனர்.
ராமலிங்க பட் வைத்திருந்த திருப்பாதுகைகளைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டார் தெலுங்கு சந்திரா. அதோடு ஓரிருக்கைத் திருப்பணிகளுக்கு உதவும் விதமாகத் தன் தாயார் இறக்கும் வரை அணிந்திருந்த எட்டு சவரன் தங்க நகைகளையும் பெரியவாளிடம் சமர்ப்பித்துத் தருமாறு வேண்டினார். அனைத்தையும் தன் மார்புப் பகுதியில் அணைத்து வைத்தவாறு பெரியவாளின் சந்நிதி நோக்கிச் சென்றார் தெலுங்கு சந்திரா.
திரளான பக்தர்கள் கூட்டம் கசகசவென்று இருந்ததாலும், அவர்களுக்குப் பிரசாதத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்ததாலும் பெரியவாளிடம் நெருங்கி பாதுகைகள் குறித்து உடனடியாக எதுவும் பேச முடியவில்லை சந்திராவால். அந்தத் திருப்பாதுகைகளையும் நகைகளையும் காட்டி பெரிய வாளுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால், தெலுங்கு சந்திராவுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நிமிடமாவது தேவை. ஒரு சந்தர்ப்பம் வரட்டும் என்று அந்த மகானின் அருகே சில நிமிடங்கள் காத்து நின்றார் சந்திரா.
தான் கொண்டுவந்த திருப் பாதுகைகள் மகா பெரிய வாளின் சந்நிதி அருகே சென்ற டைந்துவிட்டன என்பதைப் பார்க்கும்போதே ராமலிங்க பட்டின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் கீழே நின்றிருந்தபடியே கவனிக்கும் மும்முரத்தில் வேத மூர்த்தியும் ராமலிங்க பட்டும் ஆர்வமாக இருந்தனர்.
பக்தர்களில் ஒரு பிரிவினர் பிரசாதம் பெற்றுக்கொண்டு நகர்ந்தவுடன், அடுத்த பிரிவு பக்தர்கள் மகா பெரியவாளை நெருங்குவதற்குள் ஒரு சிறு இடைவெளி கிடைத்தது.
சட்டென்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அடுத்து பிரசாதம் வாங்க வருபவர்களைச் சிறிது நேரம் காத்திருக்குமாறு சொல்லி விட்டு அந்த பரப்பிரம்மத்தை நெருங்கினார் சந்திரா. ‘ஏதோ சொல்ல வருகிறானே‘ என்பதாக, பெரியவாளும் – ‘என்ன‘ என்பது போல் அவனைப் பார்த்தார்.
வலக் கையால் தன் வாயைப் பொத்திக்கொண்டு ஒரு சில விநாடிகளுக்கு பெரியவா காதில் பவ்யமாக மூச்சு விடாமல் சொன்னார் சந்திரா. சொல்லி முடித்ததும், நிமிர்ந்தார் சந்திரா. பெரியவாளின் முகத்தையே கவனித்தார். அந்த முகத்தில் ஒரு புன்னகை.
‘பெரியவாளிடம் இதற்கு உத்தரவு கிடைத்துவிட்டது‘ என்பதை உணர்ந்துகொண்ட தெலுங்கு சந்திரா, அங்கே திரளாகக் கூடி இருந்த பக்தர்களைப் பார்த்தார். “அமைதி… அமைதி… பெரியவா காரியம் தொடர்பா அவரோட அனுக்ரஹத்தோட ஒரு சேதி சொல்லப் போறேன். பக்தாளுக்கு ரொம்ப முக்கியமானது. சித்த கவனிக்கணும்“ என்று சொல்ல ஆரம்பிக்க… விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, கூட்டம் அமைதி ஆனது. மகா பெரியவாளின் சந்நிதியில் நின்று கொண்டிருக்கும் தெலுங்கு சந்திரா என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அனைவரின் முகத்திலும் இருந்தது.
தெலுங்கு சந்திரா ஆரம்பித்தார்: “தோ பாருங்கோ… மகா ஸ்வாமிகளுக்கு ஓரிருக்கைல பெருங்கோயில் கட்ற பணியில் பிரதோஷம் வெங்கட்ராம மாமாவும், இன்னும் சில பக்தர்களும் முனைப்பா இருக்கா. பெரிய அளவுல பேசப்படற மாதிரி அந்த வேலைகள் ஆரம்பமாகப் போறது. அந்தப் பெருங்கோயில்ல பிரதிஷ்டை ஆகணும்னு பிரயாசைப்பட்டு இங்கே ரெண்டு ஜோடி பாதுகைகளைத் தயார் பண்ணிண்டு வந்திருக்கார் ராமலிங்க பட். மடத்தோட அபிமானி. கூடவே, அவா அம்மா காலமாற வரைக்கும் கழுத்துல போட்டுண்டிருந்த எட்டு பவுன் செயினையும் இந்தப் பெருங்கோயில் பணிக்கே கொடுத்துடறதா இருக்கார். பெரியவாளோட ஆசி இந்த பாதுகைகளுக்கும் நகைகளுக்கும் பரிபூரணமாக கிடைக்கணும்கறதுக்காக இங்கே கொண்டு வந்திருக்கார் பட். இது எல்லாத்தையும் பெரியவா சந்நிதியிலே சமர்ப்பிக்கிறேன்…“ – பெருங்குரலில் சொல்லி முடித்ததும், பாதுகைகளையும் நகைகளையும் பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.
அவ்வளவுதான். பெரியவா சம்பந்தப்பட்ட பெருங்கோயில் திருப்பணிக்காக பக்தர் ஒருவர் உதவ வந்திருக்கிறார் என்பதைக் கேட்டதும், அந்தத் திருப்பாதுகைகளை எட்டி எட்டிப் பார்த்து, இருந்த இடத்தில் இருந்தபடியே தங்களின் கன்னத்தில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர் பல பக்தர்கள். இன்னும் சிலர், ராமலிங்க பட் என்பவர் யார் என்பதை விசாரித்து அறிந்து கொண்டு அவருக்கு மானசீகமாக வாழ்த்துத் தெரிவித்து நன்றிப் பெருக்குடன் பார்த்துக் கொண்டி–ருந்தனர்.
ராமலிங்க பட்டின் கண்களில் இருந்து நீர் கசிய ஆரம்பித்தது. அந்த சந்நிதியில் பாதுகைகள் வைக்கப்பட்டதுமே பெரியவாளின் ஆசி, அதற்குப் பரிபூரணமாகக் கிடைத்து விட்டதாகப் பெருமிதம் கொண்டார்.
அந்தத் திருப்பாது–கைகளை ஏற்றுக் கொண்டு பெரியவா எப்படி ஆசிர்–வாதம் செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள கூடி இருந்தவர்கள் ஆவலாக இருந்தார்கள். அதற்கேற்றாற்போல் பெரியவா ஏதோ சைகை காண்பித்த பின், அந்தத் திருப்பாதுகைகளை அவரின் திருப்பாதம் அருகே வைத்தார் சந்திரா. ராமலிங்க பட்டின் தாயார் அணிந்திருந்த நகைகளை சுத்தமான நீரில் நனைத்துவிட்டு, பெரியவாளுக்கு அருகே இருந்த ஒரு மூங்கில் தட்டில் வைத்தார்.
ராமலிங்க பட்டை அடையாளம் கண்டுகொண்டு அவரைத் தன் அருகே வருமாறு விரல் நீட்டி அழைத்தார் பெரியவா. உடனே பட்டும், அவருடன் இருந்த வேதமூர்த்தியும் பெரியவாளை நெருங்கினர். தன் பார்வையால் ஆசிகளை வழங்கினார். பிறகு, பட்டின் தாயார் அணிந்த தங்க நகைகளை எடுத்துத் தன் வயிற்றின் மீது வைத்துக் கொண்டார் பெரியவா. திருப்பாதுகைகளில் ஒரு ஜோடியை அணிந்து கொண்டார்.
அதன் பின் அந்தப் பாதுகைகளை ஏனோ ஒரு முறை குனிந்து பார்த்து சந்தோஷப்பட்டார். அப்போது பெரியவா அமர்ந்திருந்த ஆசனம், நாற்காலி மாதிரியான ஓர் உயர்ந்த ஆசனம். எனவே, திருப்பாதுகைகளைக் கால்களில் அணிந்து கொண்ட பிறகு, இடக் காலைத் தூக்கி வலக் காலின் மீது போட்டுக் கொண்டும், வலக் காலைத் தூக்கி இடக் காலின் மீது போட்டுக் கொண்டும் ஸ்ரீநடராஜப் பெருமான் மாதிரி திருக்காட்சி கொடுத்தார். இந்தத் திருப்பாதுகைகளை அணிந்து கொண்ட பின் பெரியவாளின் முகத்தில் ஒரு குஷி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்படி நான்கு முறை கால்களை மாற்றி மாற்றிப் போட்டு அனுக்ரஹித்தாராம்.
உடல் நிலை சரி இல்லாத நிலையில், மிகவும் தளர்வான தேகத்துடன் அப்போது இருந்த மகா பெரியவா, திடீரென ஒரு குழந்தையின் துள்ளலோடு கால்களை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு ஏன் தரிசனம் தருவானேன் என்று அதிசயித்த பக்தர்கள் அந்தத் திருக்காட்சியில் மகிழ்ந்தனர். கன்னத்தில் போட்டுக்கொண்டு ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ என்று முழங்கினர்.
திருப்பாதுகைகளை அணிந்துகொண்டு இடக் காலை வலக் காலின் மேல் போட்டுக் கொண்டும், வலக் காலை இடக் காலின் மேல் போட்டுக் கொண்டும் பெரியவா இப்படிக் காட்சி தரும் கோலத்தைப் பார்த்த பட் பரவசமானார். சந்தோஷம் கண்ணீராக மாறி, அவரது கண்களை நனைத்தது. பெரியவாளின் இந்த அபூர்வத் திருக்கோலத்தைப் பார்த்த வேதமூர்த்தியும் பூரித்துப் போனார்.
இரண்டாவது செட் பாதுகைகளை ஒரு கணம் தன் கால்களில் அணிந்துகொண்டு, பிறகு அதைக் கழற்றிவிட்டார். நான்கு முறை போட்டுக்கொண்டு பெரியவா ஆசிர்வாதம் செய்து கொடுத்த திருப்பாதுகைகள் ஓரிருக்கைப் பெருங்கோயிலில் பிரதிஷ்டை ஆக இருக்கின்றன. தன் கால்களில் அணிந்து கழற்றிக் கொடுத்த திருப்பாதுகைகள், ராமலிங்க பட்டின் வீட்டு பூஜையறைக்குச் சென்றன.
பெரியவா முதலில் கழற்றிய திருப்பாதுகைகள் – அதாவது ஓரிருக்கையில் பிரதிஷ்டை ஆகும் பாக்கியம் பெற்ற அந்தத் திருப்பாதுகைகளின் மீது அட்சதை போட்டு, மலர்களைத் தூவி ஆசி புரிந்து பட்டிடம் சேர்ப்பித்தார் மகா பெரியவா. இரண்டாவது ஜோடி பாதுகைகளுக்கும் இது மாதிரியே நடந்தது.
எல்லாம் திருப்தியாக முடிந்தவுடன், தெலுங்கு சந்திராவின் முகமே பிரகாசமானது. தன்னை நம்பிக் கொடுத்த ஒரு காரியத்தை நல்ல விதமாக முடித்துக் கொடுத்த சந்தோஷம்தான் அது. ராமலிங்க பட் தெலுங்கு சந்திராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர்ப் பெருக்குடன் நன்றி சொன்னார்.
ஓரிருக்கையில் பிரதிஷ்டை செய்வதற்கென்று காஞ்சி ஸ்ரீமடத்தில் மகா பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த திருப்பாதுகைகளைச் சுமந்துகொண்டு அந்த சந்நிதானத்தில் இருந்து வெளியே வந்தார் ராமலிங்க பட். உடன் வேதமூர்த்தியும் வந்து கொண்டிருந்தார். ‘இந்தத் திருப்பாதுகைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை உடனே ஓரிருக்கை டிரஸ்ட் சம்பந்தப்பட்ட அன்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக பிரதோஷம் வெங்கட்ராம மாமாவிடம் தெரிவிக்க வேண்டும்‘ என்று தீர்மானித்தார் வேதமூர்த்தி.
காஞ்சி ஸ்ரீமடத்துக்கு அருகிலேயே பிரதோஷம் மாமா வசித்து வந்த இல்லம் இருந்தது. பெரியவா ஆசிர்வதித்துத் தந்த திருப்பாதுகைகளுடன் அவரது இல்லத்துக்கு வரப் போவதாக முன்கூட்டியே தகவல் அனுப்பிவிட்டு, ஸ்ரீமடத்தில் இருந்து புறப்பட்டார்கள் ராமலிங்க பட்டும் வேதமூர்த்தியும்.
பிரதோஷம் மாமா, அந்தத் திருப்பாதுகைகளை எப்படி வரவேற்றார் என்பதுதான் இந்த நிகழ்வின் உச்சகட்டம்!
பெரியவா ஆசிர்வதித்துத் தந்த பாதுகைகளைச் சுமந்து கொண்டு, காஞ்சிபுரத்திலேயே அமைந்துள்ள பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குப் பயணித்தார் ராமலிங்க பட். கலெக்டர் ஆபீஸ் எதிரில் உள்ள பங்காரு அம்மன் தோட்டத்தில் பிரதோஷம் மாமாவின் வீடு அமைந்திருந்தது.
காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்த சில பக்தர்களும் பக்தி சிரத்தையாக இந்த பாதுகை யாத்திரையில் ராமலிங்க பட்டுடன் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக, மடத்தில் இருந்து ஒரு பக்தர் மூலமாக ‘ஓரிருக்கையில் பிரதிஷ்டை ஆவதற்கு உண்டான பாதுகைகளை மகா பெரியவா ஆசிர்வாதத்துடன் ராமலிங்க பட் கொண்டு வருகிறார்‘ என்கிற தகவல் பிரதோஷம் மாமாவுக்குப் போனது. தகவல் கேள்விப்பட்டதும், அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மகா பெரியவாளுக்காகக் கட்டப்படும் ஓரிருக்கைப் பெருங்கோயிலில், இந்தப் பாதுகைகள்தானே பிரதானம்! அதுவும் மகா பெரியவாளின் பரிபூரண ஆசியுடன் இந்தப் பாதுகைகள் தன்னைத் தேடி வருகின்றன என்று நினைத்தபோது, இருந்த இடத்தில் இருந்தவாறே அந்த காஞ்சி சங்கரனை இரு கரம் கூப்பித் தொழுதார்.
தன் வீட்டு வாசலில் புதிதாக தண்ணீர் தெளித்து, கோலம் போடச் செய்தார் பிரதோஷம் மாமா. பாதுகைகள் தன் வீட்டுக்கு வந்தவுடன் வாசலில் இருந்தே அதற்குப் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து, ‘பெரியவா கல்யாணம் வைபோகமே‘ (கௌரி கல்யாணம் வைபோகமே பாடுவது போல், சுப நிகழ்வுகளின்போது ‘பெரியவா கல்யாணம் வைபோகமே‘ என்று பாடுவது பிரதோஷம் மாமாவின் வழக்கமாம்) என்று பாடி, தடபுடல் வரவேற்பு கொடுத்துத் தன் வீட்டு பூஜையறையில் அந்தத் திருப்பாதுகைகளை வைத்துக் கொண்டாராம். ராமலிங்க பட்டுக்குத் தன் நன்றியைக் கண்ணீராகவும், கைகுலுக்கிக் கொண்டு தெரிவித்தாராம்.
தனக்கென்று உருவாகப் போகும் அந்த ஓரிருக்கைப் பெருங்கோயிலுக்கு எதை எதை எப்படி எப்படி வாங்க வேண்டும் என்று மகா ஸ்வாமிகளுக்குத்தானே தெரியும்?! அந்த வகையில் ராமலிங்க பட்டிடம் இருந்து பாதுகைகளைப் பெற்றுக் கொண்டார் மகா பெரியவா என்றே எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
வாழ்வில் தன் அவதாரத்துக்கான ஏதோ முக்கியமான ஒரு வேலை பூர்த்தி ஆன திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் ராமலிங்க பட்.
தினமும் இந்தப் பாதுகைகளுக்கு உண்டான வழிபாட்டை வேளை தவறாமல் கர்ம சிரத்தையாகச் செய்து வந்தார் பிரதோஷம் மாமா. அதன் பின், தற்போது சென்னையில் ஒரு பக்தர் வீட்டில் இருந்து வந்தன. ஓரிருக்கைப் பெருங்கோயிலில் பிரதிஷ்டை ஆன பாக்கியம் பெற்றவை இந்தப் பாதுகைகள்.
பிரதோஷம் வெங்கட்ராமய்யர் என்கிற பிரதோஷம் மாமாவைத் தெரியாத காஞ்சி பக்தர்கள் இருக்க முடியாது. மகா பெரியவாளின் மீது அப்படி ஒரு பக்தி. ஒவ்வொரு பிரதோஷ காலத்தின்போதும் சிவன் கோயிலுக்குப் போய் சிவ தரிசனம் பெறுவோம். ஆனால், இந்த பிரதோஷம் மாமா, பிரதோஷத்தன்று மகா பெரியவா எந்த ஊரில் முகாமிட்டிருந்தாலும், அங்கே போய் பிரதோஷ காலத்தில் அவரைத் தரிசனம் செய்வது வழக்கம்.
‘சாட்சாத் சிவ சொரூபமாக பிரத்யட்ச தரிசனம் தரும் மகானை வணங்குவதும், சிவன் கோயிலுக்குப் போய் லிங்கத் திருமேனியைத் தரிசிப்பதும் ஒன்றுதானே?!‘ என்பது பிரதோஷம் மாமாவின் கருத்து. பிரதோஷ காலத்தின்போது மகா பெரியவா எந்த ஊரில் இருந்தாலும், சாயங்கால வேளையில், “என்ன, பிரதோஷம் இன்னும் வரலியா?“ என்று கரிசனமாக விசாரிப்பது வழக்கமாம். அந்த அளவுக்கு பிரதோஷம் என்றால், வெங்கட்ராமய்யர்தான் என்கிற நினைப்பைப் பலருக்கும் உண்டுபண்ணி இருந்தார் இவர்.
ரயில்வே துறையில் பணி புரிந்தவர் பிரதோஷம் மாமா. தனக்கென எதையும் சேர்க்காமல், பெரியவா கைங்கர்யத்துக்கே அத்தனையையும் அர்ப்பணித்து வந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் பணியில் இருந்தார் பிரதோஷம் மாமா. தனக்குச் சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல் பிரதோஷம் மாமா வாழ்ந்து வருவது பற்றி அறிந்திருந்தார் மகா பெரியவா. அந்த வேளையில் ஒரு நாள் பெரியவா தரிசனத்துக்காகக் காஞ்சி ஸ்ரீமடம் வந்தார் பிரதோஷம் மாமா. அதிகாலை ஐந்து மணிக்கு பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் கண்டார்.
அதன் பிறகு ஓதுவார்கள் தேவாரம் பாடினார்கள். தேவாரம் கேட்பதென்றால், பெரியவாளுக்குக் கொள்ளைப் பிரியமாம். பெரியவாளே தேவாரம் நன்றாகப் பாடுவாராம். எல்லாம் முடிந்ததும், பிரதோஷம் மாமாவை அருகே அழைத்து, “ரயில்வே உத்யோகத்தில் இருந்து எப்ப ஒனக்கு ஓய்வு?“ என்று கேட்டார்.
“1984-ஆம் வருடத்திலிருந்து ரிடயர்மெண்ட்“ என்றார் மாமா.
“ஜாகை எங்க இருக்கப் போறதா உத்தேசம்?“ – காஞ்சி மகான்.
“பெரியவா அனுக்ரஹம். எனக்கு எதுவும் தோணலை.“
“மடத்துக்கே வந்துடேன். காஞ்சியிலயே ஒரு ஜாகை வெச்சுடலாம்.“
“இப்ப எதுவும் சொல்லத் தோணலை எனக்கு. பெரியவா உத்தரவு எப்படியோ அப்படியே நடந்துக்கறேன்.“
“இதோ, பங்காரு அம்மன் தோட்டத்துல மடத்துக்கு வேண்டிய வீடுகள் இருக்கு. அதுல ஒண்ணை ஒனக்குக் கொடுத்துடச் சொல்றேன்“ என்றார் மகா பெரியவா.
சொன்னதோடு மட்டும் அல்லாமல், சில நாட்கள் கழித்து எழுத்துபூர்வமாகவே பங்காரு அம்மன் தோட்டத்தில் ஒரு வீட்டை, பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட பிரதோஷம் மாமாவுக்குக் கொடுக்கச் செய்தார் மகா பெரியவா. அப்போது ஒரு நாள் மாலை வேளையில் பெரியவாளைத் தரிசித்த பிரதோஷம் மாமா சொன்னாராம்:
“நான் பெரியவாகிட்ட எதிர்பார்ப்பது இந்த வீடு இல்ல… இந்த வீட்டைக் கொடுத்து என்னை ஏமாத்தப் பாக்கறேள்.“
பெரியவா புன்னகைத்த பின் சொன்னாராம்: “ஒனக்கு அந்த வீடும் உண்டு.“
அதாவது, ‘இந்த வீடு எனக்கு வேண்டாம்… பெரியவா அளிக்கும் வீடுபேறுதான் (முக்தி) வேண்டும்‘ என்கிற பொருளில் பிரதோஷம் மாமா கேட்க… வேளை வரும்போது அதையும் அருளினார் கலியுக தெய்வமான காஞ்சி மகான்.