சென்னையிலிருந்து அந்தக் குடும்பத்தினர் மகா பெரியவாளை தரிசிப்பதற்காக வந்திருந்தனர். மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மடத்துக்குள் அவர்கள் நுழையும்போது கல்கண்டு, முந்திரி, திராட்சை, பாதாம் என வித விதமான பொருட்கள் அடங்கிய தட்டுகளை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், பெரியவா சந்நிதானத்துக்குள் கொண்டுவந்து வைத்தனர்.
ஆனால், பெரியவா இவர்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
பெரியவா இவர்களுக்கு ஏன் தரிசனம் தரவில்லை? என்ன தவறு? எங்கே நடந்தது?
மகா பெரியவா தரிசனத்துக்காகச் சென்னையில் இருந்து விலை உயர்ந்த காரில் ஸ்ரீமடத்தை வந்து சேர்ந்தது அந்தக் குடும்பம். மொத்தம் மூன்று பேர் இருந்தார்கள். ஐம்பதுகளின் இறுதியில் தோற்றமளித்த ஒரு ஆடவர்; கூடவே, இரு பெண்கள்.
அந்த ஆண், ஏனோ தெரியவில்லை… மகா பெரியவாளை தரிசிக்கச் செல்லவில்லை. அந்த சந்நிதானத்திலேயே – ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மூலையில் கண்களை மூடி அமர்ந்து கொண்டார். அவருடன் வந்த இரு பெண்களும் பெரியவா அமர்ந்திருக்கும் இடத்தின் அருகே செல்வதற்காக மெள்ள நடந்துகொண்டிருந்தனர். மகா பெரியவாளின் சந்நிதானத்தில் சமர்ப்பிக்க வேண்டி அவர்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைப் பொருட்களை ஒரு சிலர் கையில் ஏந்தியபடி முன்னால் சென்றனர். இவர்களின் கோரிக்கைக்கு இணங்கி, மடத்துக்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களே இவற்றை ஏந்திச் சென்றார்கள்.
பித்தளை மற்றும் எவர்சில்வர் தட்டுகளில் கல்கண்டு, முந்திரி, உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம், பாதாம் என வித விதமான காஸ்ட்லி பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. அனைத்துமே உயர் ரகம். தட்டுகள் அனைத்தும் பெரியவா சந்நிதானத்துக்குள் – அவருக்கு முன்னால் கொண்டுவந்து தரையில் வைக்கப்பட்டன.
அதற்கு அடுத்த நாள் ஸ்ரீமடத்தில் ஏதோ ஒரு விசேஷ தினம். இதனால், ஏராளமான பக்தர்கள் முதல் நாளில் இருந்தே திரளாகக் கூட ஆரம்பித்தனர். உள்ளூர், வெளியூர் என்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டிருந்தனர். மடமே கலகலப்பாக இருந்தது.
மடத்துக்குள் காலடி எடுத்து வைத்ததிலிருந்தே, இந்த இரு பெண்மணிகளை அங்கிருந்த பக்தர்கள் கூட்டம் வாயைப் பிளந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. காரணம், பணக்காரக் களையும் உடலில் ஜொலித்த நகைகளின் அதீத பிரகாசிப்பும்தான்.
அந்த இரண்டு பெண்களில் சற்றே வயது முதிர்ந்த நிலையில் காணப்பட்ட ஒருவர் வைரத் தோடு, வைர மூக்குத்தி, தங்க அட்டிகை, கலகலக்கும் தடிமனான தங்க வளையல்கள் என்று இன்னும் பல விதமான ஆபரணங்களை அணிந்திருந்தார். ஒன்பது கஜத்தில் பட்டு ரகத்தைச் சாராத – ஆனால் அதே சாயலில் மெரூன் கலரில் ஒரு புடவை அணிந்திருந்தார்.
இன்னொரு பெண்மணி, மேலே சொன்னவரை விட வயதில் சற்று இளையவராக இருந்தார். இவரிடம் தங்க நகைகளின் ஆக்கிரமிப்பு அதிகம் இல்லை என்றாலும், பணக்காரச் செழிப்பு முகத்திலும் நடவடிக்கையிலும் ஏகமாக இழையோடியது. நவநாகரிகமான உடை ஒன்றை அணிந்திருந்தார்.
இந்த இரு பெண்மணிகளையும் அடையாளம் கண்டுகொண்ட ஸ்ரீமடத்தின் முக்கிய காரியஸ்தர்கள் சிலர், அவர்களை முறையாக உபசரித்து, பட்டுக் கம்பளம் விரிக்காத குறையாக பெரியவா சந்நிதானத்தை நோக்கி மரியாதையுடன் அழைத்துச் சென்றார்கள்.
வைர மூக்குத்தியும் தோடும் அணிந்த பெண்மணியின் செயல்பாடுகளைப் பார்த்தால், மகா பெரியவாளின் தரிசனத்துக்காக அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர்போல் தெரிந்தது. அப்போது கும்பலில் இருந்த வயதான ஒருவர் மற்றவரிடம் சொன்னார்: “தெரியுமா ஓய்? இவா கிரஹத்துக்குப் பல வருடங்களுக்கு முன்னாலே மகா பெரியவா போயிருக்கா. அப்போ தடபுடல் வரவேற்பு கொடுத்தா. எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. இந்த மாமியைப் பார்த்தா பக்தியை விட பகட்டுதான் ஜாஸ்தி இருக்கும் போலிருக்கு.“
‘மகா பெரியவாளை தரிசித்து ஆசி வாங்க வேண்டும்‘ என்கிற எண்ணத்தில் – அந்த மகானை முன்பின் பார்த்திராத எவர் வேண்டுமானாலும் காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டு வரலாம். ஆனால், அன்றைய தினத்தில் எவர் எவருக்குப் பெரியவாளின் ஆசி கிடைக்க வேண்டும் என்கிற பிராப்தம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே அந்தப் பாக்கியம் கிடைக்கும். தவிர, இதெல்லாம் அந்தக் கருணை தெய்வத்தைத் தவிர வேறு எவருக்குத் தெரியும்?!
பெரியவாளின் பரிபூரண ஆசியும் அருட்பார்வையும் நமக்குக் கிடைக்கிற வரை அந்த சந்நிதானத்தில் எதுவும் உறுதி இல்லை. இதற்காக எத்தனை மணி நேரம் அந்த சந்நிதானத்தில் காத்துக் கிடந்தோம் என்பது முக்கியம் இல்லை.
உடல் நலம் முடியாத நிலையில் பூரண ஓய்வில் இருந்தபோதும், குறிப்பிட்ட சில பக்தர்கள் தன் தரிசனம் வேண்டி வந்திருக்கிறார்கள் என்பதை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு, ‘வாசலில் இன்னார் – இந்த இடத்தில் நிற்கிறார். அவரை உடனே அழைத்து வா‘ என்று தன் சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது அந்தப் பரப்பிரம்மம். அதே நேரத்தில், பெரியவா ஃப்ரீயாக இருந்த வேளைகளில்கூட, சந்திப்புக்கு அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பப்பட்ட வி.ஐ.பி. ஆசாமிகளும் உண்டு.
பெரியவா தரிசனத்துக்காக வெகு நேரமாகக் காத்திருந்த, பக்தர்களின் பார்வையால் பெரிதும் கவரப்பட்ட அந்த இரு பெண்களும் பெரியவா சந்நிதானத்தை நோக்கி மெள்ள முன்னேறிக்கொண்டிருந்தனர். மகா பெரியவாளை இவர்கள் நெருங்குவதற்குச் சில அடி தொலைவுதான்.
அந்த நேரம் பார்த்து விருட்டென்று தண்டத்துடன் எழுந்தார் மகா பெரியவா. உள் அறையை நோக்கி வேக வேகமாக நடந்தார். பெரியவாளின் இந்தத் திடீர் நடவடிக்கைக்குப் பலருக்கும் காரணம் புரியவில்லை. மகான்களின் செயல்பாடுகளுக்கு மனிதர்களுக்குப் புரியுமா என்ன?
இன்னும் சில அடி நடந்து வந்திருந்தால், அந்த இரு பெண்களும் பெரியவாளின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு நெருங்கி வந்து விட்டார்கள். ஆனால், இவர்கள் இருவரும் தன்னை நெருங்கி வரும் வேளையில் அவர்கள் இருவரையும் தவிர்ப்பதுபோல், சட்டென்று எழுந்து உள்ளே போனார் பெரியவா.
சந்நிதானத்தை நெருங்கும் வேளையில், மகா பெரியவா இப்படி உள்பக்கம் திரும்பி விறுவிறுவென்று நடந்து சென்றதை – வெகு அருகில் இருந்து பார்த்த – அந்த இரு பெண்களின் முகங்களும் களை இழந்தன. அதுவும் வயதான பெண்மணியின் முகத்தில் கூடுதலாகவே கவலை ரேகைகள் இழையோடின. இருந்தாலும், தன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘சரி… அவரை தரிசிப்பதற்கு உண்டான வேளை இன்னும் வரவில்லை போலும்‘ என்று எண்ணியபடி, அங்கேயே காத்திருந்தார்.
மகா பெரியவா விறுவிறுவென்று உள்ளே போனார் அல்லவா? அப்படிப் போனவர் ஸ்ரீமடத்தின் பிரதான ஆசாமி ஒருவரை அழைத்தார்.
“பெரியவா உத்தரவு…“ என்று சொல்லி, வாய் பொத்திய நிலையில், அவரிடமிருந்து வரப்போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார் அந்த ஆசாமி.
“வெளியே ஜொலிக்கிற மாதிரி நகைங்களை எல்லாம் போட்டுண்டு ஒரு மாமி இருப்பா. அவாகிட்ட போயி, ‘பெரியவா இன்னிக்குப் பார்க்க விரும்பலை. இன்னொரு நாளைக்கு உங்களைப் பார்ப்பா‘னு சொல்லி அனுப்பிடு.“ சொல்லிவிட்டு, ஸ்நானம் செய்யப் போய்விட்டார் பெரியவா.
பெரியவாளின் அருகே நின்று கைங்கர்யம் செய்து வரும் தொண்டர்களுக்கும், வைரத் தோடு பெண்மணி குடும்பத்தினரை ராஜ உபசாரத்துடன் சந்நிதானத்துக்குள் கூட்டி வந்த மடத்து முக்கியஸ்தர்களுக்கும் பெரியவாளின் இந்தத் திடீர்ச் செயலுக்கு என்ன விளக்கம் என்பது புரியவில்லை. அவரிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய தைரியம் எவருக்கு வரும்?
பெரியவா சொல்லி அனுப்பிய தகவல், அந்தக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான்… அதைக் கேட்டதும் வைரத் தோடு பெண்மணியின் முகம் வெளிறியது. வேறு எதுவும் பேசவில்லை. உடன் இருந்த இளம்பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு அடுத்த நிமிடமே மடத்தை விட்டு வெளியேறினார். இவர்கள் இருவரும் வெளியே வருவதைப் பார்த்த அந்த ஆடவரும் எழுந்தார். நடந்தார். அடுத்த ஐந்து நிமிடத்தில் இவர்கள் வந்த சொகுசு கார், ஸ்ரீமடத்தை விட்டுப் புறப்பட்டு சாலையில் கலந்து சென்னையை நோக்கிப் பயணித்தது.
பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். மகா பெரியவாளின் சந்நிதானம் பரபரப்படைந்தது. காத்திருந்த பக்தர்கள் முகத்தில் பிரகாசம். நெற்றியில் திருநீறு துலங்க… மிகுந்த தேஜஸுடன் அந்த சங்கர சொரூபம் மீண்டும் தன் சந்நிதானத்தில் வந்து அமர்ந்தது. வழக்கமான புன்னகை. வந்திருந்த பக்தர்களிடம் மூதாதையர்கள் பற்றிய விசாரிப்புகள்… பிரசாதம் வழங்குதல் என்று பிஸி ஆனார். எல்லாம் சரி… அந்த வைரத் தோடு பெண்மணியைப் பார்த்ததும், தான் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்து மகா பெரியவா ஏன் உள்ளே போனார்? சம்பந்தமே இல்லாத அந்த நேரத்தில் ஏன் ஸ்நானம் செய்யவேண்டும்?
பலருக்கு இருக்கும் இதே சந்தேகத்தை மகா பெரியவாளிடம் ரொம்பவும் பவ்யமாகக் கேட்டார் மடத்தின் உயர் அதிகாரி ஒருவர்.
அதற்குப் பெரியவா சொன்னார்: “டேய்… அவா கிரஹத்துல ஒரு துக்கம் நடந்து ஒரு மாசம்கூட முடியல. இன்னமும் அந்தக் குடும்பத்துக்குத் தீட்டு இருக்கு. ஆனா, அதையும் மீறி யாரோ சொல்பேச்சைக் கேட்டுத் திடுதிப்புன்னு மடத்துக்குப் பொறப்பட்டு வந்துட்டா. அவா தெரியாம தப்பு செஞ்சாலும் ஆச்சார்யாள்தானே அதைத் திருத்தணும்? அதான் அவா மனசும் கோணக்கூடாதுங்கறதுனால ‘இன்னொரு நாள் பாக்கறேன்‘னு சுருக்கமா சொல்லி அனுப்பிச்சுட்டேன். என்ன, புரியறதா?“
மகா பெரியவாளின் தீர்க்க தரிசனத்தை எண்ணி, பெருமூச்சு விட்டார் மடத்தின் அந்த அதிகாரி.
தேர்வு எழுதச் செல்வதற்கு முன் ஒரு ஏழைச் சிறுவன் கொண்டுவந்த சாதாரண துளசி மாலையை வைத்துக் கொண்டு பெரியவா எந்த அளவுக்குக் கொண்டாடினார் என்பதை இந்த அத்தியாயத்துக்கு முன் எழுதி இருந்தேன்.
பணமும் செல்வாக்கும் நிறைந்த கோடீஸ்வரக் குடும்பத்தினரை இப்போது பார்க்கக் கூடாது என்பதால், அவர்கள் முகத்தையேகூட நேருக்கு நேர் பார்க்காமல் ‘இன்னொரு முறை பார்க்கிறேன்‘ என்று திருப்பி அனுப்பிய சம்பவத்தையும் இப்போது படித்தீர்கள்.
மகா பெரியவா சந்நிதியில் காசு, பணம், பதவிக்கு மரியாதை இல்லை. அவரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு தூய பக்தியும் நல்ல உள்ளமும் இருந்தாலே போதும்… அதை அடையாளம் கண்டு, அத்தகையோர் எங்கிருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டனுப்பி ஆசிர்வதித்து அனுப்பி விடுவார். இது எத்தனையோ சம்பவங்களில் வெளிப்பட்டுள்ளது.