ஏழையின் திருமணத்துக்கு உதவச் சொன்ன மகான்

தேனம்பாக்கத்தில் பெரியவா சந்நிதியில் நடந்த இன்னொரு நெகிழ்வான சம்பவத்தைமேலே சொன்ன நிகழ்வோடு தொடர்புடைய ஆடிட்டர் சங்கரனின் துணைவியார் கமலா சங்கரன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கடந்த 1970-களின் இறுதியில் நிகழ்ந்தது இது. ஆடிட்டர் சங்கரனும் அவர் துணைவியாரும் தங்கள் குழந்தையோடு மகானின் ஆசியையும் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து இவர்கள் கிளம்பலாம் என்று தீர்மானித்து, பெரியவாளிடம் உத்தரவு கேட்டபோதுசற்றே இரும் என்பதாக பெரியவா சைகை காண்பித்தார.

அப்போது தொலைவில் நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவரைக் கை நீட்டி பெரியவா ஜாடையால் அழைத்தார். தன்னைத்தான் கூப்பிடுகிறாரா என்று ஆளாளுக் குக் குழம்பினாலும், உண்மையில் யாரை அழைத்தாரோ, அவர் இதைப் புரிந்துகொண்டு பெரியவாளின் முன்னால் வந்து பவ்யமாக நின்றார்.

பெரியவா ஜாடை காட்டி அழைத்தவர், கும்பகோணத்தில் இருக்கும் ஒரு சமையற்காரர். அவர் மனைவியும் அருகே நின்றிருந்தார். ஏழ்மையின் கோலம் இருவரின் முகங்களிலும் எழுதப்பட்டிருந்தது.

சமையற்காரரைப் பார்த்து, ‘என்ன விஷயம்? என்பதாக ஜாடை மூலம் கேட்டார் பெரியவா.

பதில் சொல்லத் துவங்கும் முன், சமையற்காரர் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகியது. அவருடன் இருந்த மனைவியும் கேவ ஆரம்பித்தார்.

சங்கரன் குடும்பத்தினர் உட்பட அங்கு இருந்த அனைத்து பக்தர்களும் தர்மசங்கடப்பட்டனர்.

பசு மாடுகள் கட்டப்பட்டிருந்த கொட்டடிக்குப் பக்கத்தில் ஒரு கீற்றுக் கொட்டகைக்குள் சிவ ஸ்வரூபமாக அமர்ந்திருந்தார் பெரியவா. வெகு சாதாரணமான மண்தரை.

பரப்பிரம்மம் குடி இருக்கும் அந்தமண்தரை மாளிகை ஆன்மிக மணத்தை அற்புதமாகப் பரப்பிக் கொண்டிருந்தது.

காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சென்றிருந்த பக்தர்கள் பலரும், பெரியவா தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருப்பது அறிந்து, அங்கிருந்து இங்கு பயணப்பட்டு வந்து குவிந்துவிட்டார்கள். அந்தக் கருணை தெய்வத்தின் சந்நிதி முன் நின்றுகொண்டு, கண்களால் அவரை தரிசித்து தங்கள் பிரார்த்தனைகளை மனதுக்குள் துதித்து வேண்டியபடி அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

சமையற்காரத் தம்பதியரின் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் குடிகொண்டிருந்தது. ‘இந்த பகவானின் சந்நிதியில் தங்களது பிரார்த்தனை நிறைவேறுமா? என்கிற சுயநலம் கலந்த எதிர்பார்ப்பு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

கூடி இருந்த பல பக்தர்களின் உதடுகளோ, ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்தை விடாமல் எழுப்பிக்கொண்டே இருந்தனஅந்த சங்கர சொரூபத்தைத் தங்களுக்குள் உள்வாங்கி, அந்த ஆனந்த தரிசனத்தில் திளைத்துக்கொண்டிருந்தனர்.

பெரியவாளின் மிக அருகே சென்ற பின் அந்த மகானுக்கு முன்னால் உடல் குறுகி பவ்யமாக நின்றார்கள் கும்பகோணம் தம்பதியர். ‘என்ன? என்பதுபோல் ஒரு மந்தகாசமான புன்னகையுடன் அவர்களைச் சற்றே குனிந்து பார்த்தார் அந்த மகான்.

அழைத்தவருக்குத் தெரியாதா என்ன அருளவேண்டும் என்று? இதெல்லாம் அவருடைய லீலைகள்தானே!

நெக்குருகிப் போனார்கள் சமையற்காரத் தம்பதியர். சந்நிதானத்துக்கு வந்த பின், இங்குள்ள பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்த பிறகு தாங்கள் வந்த காரியம் நிறைவேறாது போலிருக்கிறதுஆகவே, அந்த தெய்வத்தின் திருமுக தரிசனத்தை எங்கேனும் ஒரு மூலையில் நின்று பார்த்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டுப் போய்விடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், கிடைத்திராத அருட்பார்வை கிடைத்துவிட்டது. பட்டுப்புடவைகளும் பள பளா நெக்லஸ்களுமாகத் திரண்டு நிற்கும் கூட்டத்தில் பெரியவாளின் அருகே சென்று மனம் குளிர அவரை தரிசனம் செய்யமாட்டோமா என்று அந்த ஏழைத் தம்பதியர் அப்போதுதான் வாய் விட்டுத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பேச்சு முற்றுப் பெறுவதற்குள் பெரியவாளிடமிருந்து அழைப்பே வந்துவிட்டது. இந்த ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்த அந்த ஏழைத் தம்பதியரால் எந்த ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. நா குழறியது. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருகியது.

பேசுங்கோ. பெரியவா உங்களை இங்கே வரவழைச்சிருக்காரேஉங்க கோரிக்கை என்னன்னு அவர்கிட்ட சொல்லுங்கோ என்று பெரியவாளுக்கு உதவியாக இருந்த சீடன் ஒருவன், தம்பதியரைப் பார்த்து உத்தரவாகச் சொன்னான்.

பெரியவாளை இவ்வளவு அருகில் நின்று இதயம் குளிர தரிசித்துவிட்ட எங்களுக்கு என்ன குறை இருக்க முடியும்? அந்த மகானின் தீட்சண்யப் பார்வை எங்கள் மேல் விழுந்துவிட்டது. இனி எங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்று அந்த சமையற்காரரின் முகம் சொல்லாமல் சொல்லியதுபிறகு, தான் கையில் வைத்திருந்த ஒரு மஞ்சள் பைக்குள் கை விட்டு, நான்கு மூலைகளில் மஞ்சள் தடவியிருந்த திருமணப் பத்திரிகை ஒன்றை எடுத்துப் பெரியவா சந்நிதானத்தில் சமர்ப்பித்தார். கூடவே, கஷ்டப்பட்டுத் தான் வாங்கிய அரை டஜன் வாழைப்பழத்தையும் இரண்டு சாத்துக்குடிகளையும் எடுத்து பத்திரிகையின் மேல் வைத்தார். பிறகு, கையெடுத்துக் கும்பிட்டனர் அந்த ஏழைத் தம்பதியர். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர். ஆசி வேண்டி அந்தப் பரப்பிரம்மத்தின் திருக்கண்களையே ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தனர்.

என்னவோ கேட்க வேண்டும்தன் தேவையைச் சொல்ல வேண்டும் என்று அந்த வேளையில் சமையற்காரத் தம்பதியரின் மனதில் தோன்றினாலும், இந்த திவ்ய தரிசனம் கிடைத்த சந்தோஷத்தில் தங்கள் மனதில் உள்ளதை வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை; வெளிக்காட்டவும் முடியவில்லை. மகானை நோக்கிக் கூப்பிய கரங்கள் அப்படியே இருக்கின்றன.

அந்தத் திருமணப் பத்திரிகையின் மேல் பிடியளவு மஞ்சள் தூளை அள்ளிப் போட்டு, எடுத்துக்கொள்ளச் சொன்னார் பெரியவா. பிறகு, தனக்கு வலப் பக்கம் திரும்பிய பெரியவா, அருகே நின்றிருந்த ஆடிட்டர் சங்கரனை அழைத்தார். இதற்காகத்தானே பெரியவா அவருக்கு உத்தரவு தராமல் காத்திருக்க வைத்திருக்கிறார்!

சிறு வயதிலேயே பெரியவாளின் அருட் கடாட்சம் பெற்றவர் ஆயிற்றே சங்கரன்! “உத்தரவு பெரியவா என்று மிகுந்த விநயத்துடன் அவருக்கு முன்னால் வந்து நின்றார் அந்தப் பரம பக்தர்.

நான் ஒரு காரியம் சொன்னா, உபகாரம் பண்ணுவியா?

இதற்குத்தானே எத்தனையோ பக்தர்கள் இந்தத் திருச்சந்நிதிக்கு வந்து ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். பெரியவா சொல்லும் கைங்கர்யத்தைத் தாங்கள் செய்யும் பேறு கிடைக்காதா என்றுதானே பலரும் ஏங்குகிறார்கள். இந்த நிலையில், ‘உபகாரம் பண்ணுவியா? என்று பெரியவா தன்னிடம் கேட்டதைக் கண்டு உச்சி குளிர்ந்து போனார் சங்கரன். பரவசம் அடைந்தார். “அது என் பாக்கியம் பெரியவா என்று ெரியவா சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார் சங்கரன். அவரின் துணைவியார் கமலாவும் பெரியவாளின் உத்தரவை செவி மடுப்பதற்காக பயபக்தியுடன் காத்திருந்தார்.

ஒரு கூரைப்புடவையும் ஒரு திருமாங்கல்யமும் இவாகிட்ட சேரணும். உடனே வாங்கித் தர்றது சட்டுன்னு முடியாத காரியம். என்ன பண்றேஅதுக்கு எவ்வளவு ஆகுமோ, அதுக்குண்டான தொகையை இந்த பிராமணர்கிட்ட கொடுத்துடு. தாமதம் கூடாது. அவர்கிட்ட கொடுத்துட்டு, நீங்க மெட்ராஸ் பொறப்படுங்கோ என்று சங்கரனுக்கு உத்தரவு கொடுத்து, ஒரு ஆப்பிளை எடுத்து அவரிடம் கொடுத்தார் பெரியவா. தம்பதி சமேதராகத் தன் குழந்தையுடன் பெரியவாளை நமஸ்கரித்து, அங்கிருந்து நகர்ந்தார் சங்கரன்.

பெரியவாளின் பணிவிடைகளில் உடன் இருந்த ஒரு சிப்பந்தி, சமையற்காரத் தம்பதியரைப் பார்த்து, “நீங்க இவா கூடப் போங்கோ. பெரியவா சொன்னபடி செய்வார் என்று அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

மீண்டும் ஒரு முறை கண்ணீருடன் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, பிரசாதமாக அவர் கொடுத்த மஞ்சள் பொடியைக் கண்களில் ஒற்றி, மஞ்சள் பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டு, சங்கரன் பின்னே நடந்தனர் சமையற்காரத் தம்பதியர்.

கூட்டம் குறைவான ஓரிடத்துக்கு வந்ததும், தன் சட்டைப்பைக்குள் கைவிட்டு, பத்து நூறு ரூபாய்களை எடுத்து அந்தச் சமையற்காரரிடம் கொடுத்தார் சங்கரன். “உங்க கிரஹத்துல நடக்கப் போற கல்யாணத்துக்குப் பெரியவா அனுக்ரஹப்படி இந்த ஆயிரம் ரூபாயை நான் சந்தோஷமா கொடுக்கறேன். உங்க குடும்பம் அமோகமா இருக்கணும் என்று கண்கள் னிக்கச் சொன்னார் சங்கரன்.

அவ்வளவுதான். அதுவரை ஏதும் பேசாமல் இருந்த கும்பகோணம் சமையற்காரர், “பெரியவா சத்தியமான தெய்வம்கண்கண்ட தெய்வம். இல்லேன்னா எங்க மனசுல இருக்கறதைப் புரிஞ்சுண்டு உங்க மூலமா இப்படி ஒரு ஒத்தாசையை அவர் பண்ணியிருப்பாரா? என்று உடைந்த குரலில் சங்கரனிடம் சொன்னார். சமையற்காரரின் மனைவியும், இந்த உதவியைக் கண்டு பூரித்த மனதுடன் குரல் உடைந்தார்.

இந்த இருவரையும் அப்போதைக்குத் தேற்றுவது என்பது சங்கரனுக்கும் அவர் மனைவிக்கும் பெரும் பாடாகப் போயிற்று.

ஒருவாறு நிதானித்த பின் தன் கதையை சங்கரனிடம் சொல்லத் தொடங்கினார் அந்தச் சமையற்காரர்.

எனக்குச் சொந்த ஊரு கும்பகோணம். நள பாகம்தான் என் தொழில். என் வேலைகளுக்கு இவளும் (மனைவியைக் காட்டி) கூடமாட ஒத்தாசை பண்ணுவா. எனக்கு நாலு பொண்ணுங்க. பகவான் ஏன்தான் எங்களுக்கு இப்படி ஒரு சோதனையைக் கொடுத்தான்னே தெரியல. எவ்வளவோ சிரமப்பட்டு ஒழைச்சாலும் கைக்கு வர்ற காசு வாய்க்குத்தான் சரியா போறது. இந்த நிலைமையில பெரிய பொண்ணுக்குக் கல்யாணம் பண்ண வேண்டிய வயசு வந்துடுத்து. ஒரு வரனும் இவளுக்கு தோதா வந்தது. பையன் வைதீகம் பாத்துண்டு இருக்கான். பேசியதில், ரெண்டு குடும்பத்துக்குமே பிடிச்சுப் போச்சு.

மனசு பிடிச்சுப் போச்சு. அடுத்து பணம் வேணுமே? எதையானும் உருட்டிப் புரட்டிக் கல்யாணத்தை நடத்தி ஆகணுமே! மாப்பிள்ளை வீட்டுக்காரா என்ன கண்டிஷன் சொல்லப் போறாளோன்னு கவலையோட இருந்தேன். அப்ப மாப்பிள்ளையோட தகப்பனார், ‘உங்களைப் பத்தி நாலு இடத்துல விசாரிச்சேன். கஷ்டப்பட்டாலும், ரொம்ப கண்ணியமா வாழ்ந்து வர்ற குடும்பம்னு எல்லாரும் சொன்னா. உங்க பொண்ணை சந்தோஷமா எங்க கிரஹத்துக்கு அனுப்புங்கோ. உங்க சார்பா ஒரே ஒரு கூரைப்புடவையும், திருமாங்கல்யமும் மட்டும் வாங்கிக் கொடுங்கோ. மத்தபடி கல்யாணத்துக்கு உண்டான எந்தச் செலவைப் பத்தியும் கவலைப்படாதீங்கோ. பொண்ணை மட்டும் கூட்டிண்டு வாங்கோ. எல்லாத்தையும் நானே பார்த்துக்கறேன்னு நெகிழ்ச்சியா சொன்னார்சடார்னு அவரோட கால்லயே விழப் போயிட்டேன்அவர் கோபப்பட்டு, ‘இந்த மாதிரி எல்லாம் நீங்க பண்ணக் கூடாது. தெய்வத்தோட கால்ல விழுங்கோ. முடிஞ்சா காஞ்சிபுரம் போயி பெரியவா கால்ல விழுங்கோ. உங்க சம்பந்தம் அமைஞ்சோன்ன இதுதான் எனக்குத் தோணித்து. என் மனசுல உள்ளதை அப்படியே சொன்னேன் அப்படீன்னார்.

சரி, எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு கூரைப்புடவையும் திருமாங்கல்யமும் வாங்கலாம்னா அதுகூட எனக்கு வக்கில்லை. என்னை நம்பி யாரும் கடன் தரலை. மொத பொண்ணு கல்யாணத்துக்கே இப்படிக் கஷ்டப்படறோமேஇன்னும் அடுத்தடுத்து மூணு பொண்ணுங்க இருக்காளேனு தவிச்சுப் போயிட்டேன். இந்த நேரத்துலதான் காஞ்சிபுரம் போயிட்டு, பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு, கூரைப்புடவைக்கும் திருமாங்கல்யத்துக்கும் ஒரு விக்ஞாபனம் வெச்சுட்டு வரலாம்னு முடிவெடுத்தோம். கும்பகோணத்துல இருந்து பஸ் ஏறி, விழுப்புரம் வந்து, அங்கேர்ந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தோம். பெரியவா ஸ்ரீமடத்துல இல்லேதேனம்பாக்கத்துல இருக்கார்னு தகவல் சொன்னா. ஒடனே இங்கே வந்துட்டோம்.

என்னோட சம்பந்தி என்கிட்ட கும்பகோணத்துல சொன்ன விஷயத்தை மகா பெரியவா இங்கே உங்க மூலமா அனுக்ரஹம் பண்ணின உடனே என்னால தாள முடியல. அந்தக் கருணை தெய்வத்தோட அருள் விளையாடலை நினைச்சு, உருகிட்டேன். தன்னோட ஒரு பக்தனுக்கு என்ன தேவை, அவன் எதுக்காக இந்தச் சந்நிதியைத் தேடி வந்திருக்கானு தன் ஞான திருஷ்டியால தெரிஞ்சுண்டு, எங்களோட கவலையைப் போக்கி, எம் பொண்ணோட கல்யாணத்தை நடத்திக் கொடுத்திருக்காளே பெரியவா என்று சொல்லி முடித்தபோது, அந்தச் சமையற்காரர் கண்ணீரை அடக்க முடியாமல், உடல் சரிந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிவிட்டு, கும்பகோணம் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தார் ஆடிட்டர் சங்கரன். ஒரு ஏழையின் திருமணத்துக்குத் தன்னை உதவ வைத்திருக்கிறாரே என்று பரப்பிரம்மத்தின் சந்நிதியை இருந்த இடத்தில் இருந்தே வணங்கி விட்டு, சென்னைக்குப் புறப்பட்டார்.

ஒரு ஏழையின் திருமணத்துக்கு நம்மால் முடிந்த அளவு உதவுவதே பெரும் பாக்கியம். அதுவும் மகா பெரியவா சொல்லி, உதவி செய்யும் பேறு கிடைத்ததென்றால், அது எப்பேர்ப்பட்ட சுகம்! இது ஆடிட்டர் சங்கரன் குடும்பத்தினருக்கு அல்லவா கிடைத்திருக்கிறது.