தற்போது திருச்சி கே.கே. நகரில் வசித்து வருபவர் மு. முருகேசன். 1970-ஆம் ஆண்டில் இவர் சென்னையில் பணியில் இருந்தார். மகா பெரியவாளைப் பற்றி நிறைய கேள்விப்பட்ட இவர், அந்த மகானை நேரில் கண்டு தரிசித்து, ஆசி பெறவேண்டும் என்று விரும்பினார். அதற்குரிய வேளையும் வந்தது.
ஒரு சனிக்கிழமை தினத்தில் தன் குடும்பத்தோடு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார் முருகேசன். காஞ்சியில் முருகேசனின் உறவுக்காரர்கள் சிலர் இருந்தனர். எனவே, தனது காஞ்சி விசிட் பற்றி அவர்களுக்குத் தகவல் சொன்னபோது, ‘முதலில் காஞ்சி மாநகரத்தில் உள்ள முக்கியமான திருக்கோயில்களை தரிசியுங்கள். அதன்பின் மாலை வேளையில் மகா பெரியவாளை தரிசியுங்கள். மனதுக்கு நிறைவான நாளாக அமையும். இதுதான் கச்சிதமான திட்டம்‘ என்று சொன்னார்கள். முருகேசனும் அதையே பின்பற்றினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான திருக்கோயில்களைப் பகல் வேளையில் தரிசித்துவிட்டு, மாலை ஐந்து மணி வாக்கில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார் முருகேசன். அவரது குடும்பத்தினர் புகழ் பெற்ற காஞ்சி காமாட்சியை தரிசிக்கும் மும்முரத்தில் இருந்தனர். ஆனால், முருகேசனின் மனமோ காஞ்சி மகா பெரியவாளிடமே இருந்தது. ‘அந்த மகானை தரிசிக்க வேண்டி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தேன். எத்தனையோ ஆலயங்களுக்குச் சென்று வந்துவிட்டேன். இனி மகா பெரியவாளின் தரிசனம் சுபமாக அமைய வேண்டும். இரவே சென்னைக்குக் கிளம்பிப் போயாகவேண்டும்‘ என்று அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
முருகேசனும் அவரது குடும்பத்தினரும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்துவிட்டு ஆலயத்தை விட்டு வெளியே வரும்போது மணி ஆறேகால். ‘ஸ்ரீமடத்துக் குப் போனால் மகா பெரியவாளை தரிசிக்க முடி யுமா என்று எவரிடமாவது கேட்டுத் தெரிந்து–கொள்ளலாம்‘ என்று தோன்றியது முருகேசனுக்கு. அப்போது காமாட்சி ஆலய குருக்கள் ஒருவர் எதிரில் தென்பட்டார். அவரை அணுகிய முருகேசன், “மகா பெரியவாளை இப்போது தரிசிக்க முடியுமா?“ என்று கேட்டார்.
முருகேசனையும் அவரது குடும்பத்தினரையும் ஏற இறங்கப் பார்த்த குருக்கள், “ஆஹா… இப்ப மணி ஆறேகால் தாண்டிடுத்தே… இன்னிக்கு மடத்துக்கு ஆறு மணிக்குள்ள போனாத்தான் தரிசனம் பண்ண முடியும். இனிமே இன்னிக்கு பெரியவா தரிசனம் கிடைக்காது. என்ன பண்ணுங்கோ… இன்னிக்கு இங்கயே தங்கிடுங்கோ. நாளைக்குக் கார்த்தால பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் பொறப்படுங்கோ“ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
முருகேசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படியும் இன்றே மகா பெரியவாளை தரிசித்துவிட்டு ஊருக்குப் போயாக வேண்டும். மறுநாள் அவருக்கு வேறு பணிகள் சென்னையில் காத்துக்கொண்டிருந்தன. என்ன செய்வதென்று தவித்தார்.
இப்படிப்பட்ட குழப்பத்தில் அவர் தவித்துக் கொண்டிருந்தபோது அவரின் நண்பர் ஒருவர் யதேச்சையாக அந்த ஆலய வளாகத்தில் தென்பட்டார். முருகேசனை அணுகி அடையாளம் கண்டுகொண்டு, “என்னப்பா முருகேசா… எப்படி இருக்கே? ஏன் முகம் சோகமா இருக்கு?“ என்று கேட்டவுடன், மளமளவென்று எல்லாவற்றையும் ஒப்புவித்தார் முருகேசன்.
உடனே அந்த உள்ளூர் நண்பரும், “வந்ததுதான் வந்துட்டே… இன்னிக்கு ஒரு நாள் தங்கிட்டு, நாளை காலையில் பார்த்துவிட்டுக் கௌம்பேன்“ என்று காஷுவலாகச் சொன்னார். இன்று இரவு தான் இங்கு தங்க இயலாத நிலையில் உள்ளதாக முருகேசன் சங்கடப்பட்டுச் சொன்னார். “சரிப்பா… உன் இஷ்டம். எப்படி சவுகரியமோ அப்படிப் பாத்துக்கோ“ என்று சொல்லிப் போய் விட்டார் நண்பர்.
மகா பெரியவாளை தரிசிக்காமல் சென்னைக்குப் புறப்படலாமா… அவரை தரிசிக்கத்தானே திட்டம் போட்டு இங்கே வந்தோம்… ஏன் இப்படி எல்லாம் நம்மை சோதிக்கிறார் பெரியவா என்று அந்த நடமாடும் தெய்வத்தை மனமார பிரார்த்தித்துக் கொண்டார் முருகேசன்.
குழப்பம் நிறைந்த மனதுடன், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கோயிலை விட்டு வெளியே நடந்தார். குடும்பத்தினரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். சுமார் நூறடி தொலைவு நடந்து வந்திருப்பார்.
முருகேசனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத அன்பர் ஒருவர் இவரிடம் ஓடி வந்து நின்றார்.
‘யார் இவர்? தன் முன் ஏன் இப்படி வேக வேகமாக வந்து நிற்கிறார்?‘ என்று முருகேசன் அவரைத் தயக்கத்துடனும் காரணம் புரியாமலும் பார்த்தார்.
முருகேசனுடைய தயக்கத்துக்கும் குழப்பத்துக்கும் விடை சொல்வதுபோல், ‘அவசரப்படாதீங்கோ… கொஞ்சம் பொறுங்கோ. ஸ்ரீகாமாட்சி அம்மனை தரிசிப்பதற்காக மகா பெரியவா இந்த ஆலயத்துக்கு வந்துண்டிருக்கா. இன்னும் ஒரு சில நிமிடங்கள்ல இங்கே வந்துடுவார்‘ என்று சொல்லிவிட்டு, முருகேசனிடமிருந்து பதிலைக்கூட எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று கோயிலுக்குள் ஓடினார், சில முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்கு.
முருகேசனுக்குத் தாங்க முடியாத இன்ப அதிர்ச்சி. இன்னும் ஒரு பத்தடி தொலைவு நடந்திருந்தால் அங்கிருந்து வாகனம் ஏறி, சென்னைக்குப் புறப்பட ஆயத்தமாகி இருப்பார். அப்படிப் புறப்பட்டுப் போயிருந்தால், ‘மகா பெரியவா ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய தரிசனத்துக்கு இன்னும் ஓரிரு நிமிடங்களில் வரப் போகிறார்‘ என்கிற தகவல் முருகேசனை எட்டாமலேயே போய்விடும். ஆனாலும், பாருங்கள்… காமாட்சி அம்மன் கோயிலுக்குத் தான் வரப் போகிற தகவலை எப்படியோ முருகேசனை அடையவும் வைத்துவிட்டது அந்தப் பரப்பிரம்மம்.
அவ்வளவுதான். முருகேசனுக்கு அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏதோ அந்த மகானே தன்னுள் இருந்து ஆட்கொண்டு, இப்படி ஒரு தரிசனம் தரப் போகிறார் என்று நம்பினார். மீண்டும் குடும்பத்தினருடன் ஆலயத்துக்குள் நுழைந்து ஓர் ஓரமாக நின்றுகொண்டார்.
மகா பெரியவா ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்துக்கு இந்த வேளையில் வரப்போகிற தகவல் அதற்குள் பலரையும் அடைந்து விட்டது போலும்! அனைவரும் பெரியவா தரிசனத்துக்காக ஆலயத்தின் ஓர் ஓரமாக – குழுக்களாகவும் தனி நபராகவும் நின்றுகொண்டிருந்தனர்.
ஐந்தில் இருந்து சுமார் பத்து நிமிடம்தான் கடந்திருக்கும். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் முழங்க அடியார்கள் குழாமுடன் மகா பெரியவா ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குள் வந்துகொண்டிருந்தார். ஆலயத்தின் முகப்பில் ஒரு யானை நின்றுகொண்டிருந்தது. மகா பெரியவாளைப் பார்த்தவுடன் வாஞ்சையுடன் அது தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியது. உடலையும் கால்களையும் அசைத்து ஆடியது. அதன் அருகே சென்று நின்ற மகா பெரியவா, ஸ்ரீமடத்து சிப்பந்தியிடம் சைகை காட்ட எண்ணற்ற வாழைப்பழ சீப்புகளை அடுத்த ஓரிரு விநாடிகளில் எடுத்து வந்தார். அந்த சீப்புகளை ஒவ்வொன்றாக வாங்கி யானையிடம் கொடுக்க… துதிக்கையால் சந்தோஷத்துடன் வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டே இருந்தது.
தரிசனத்துக்காக அங்கே நின்றுகொண்டிருந்த பக்தர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார் மகா பெரியவா. எல்லோரையும் ஆசிர்வதித்தார். பிறகு, முருகேசனையும் பார்த்தார். ஒரு புன்னகை பூத்தார். “என்ன, இப்ப உனக்கு திருப்திதானே?“ என்று நேரடியாகக் கேட்க… நெகிழ்ச்சியின் உச்சகட்டமாகக் கண்கலங்கிவிட்டார் முருகேசன்.
பெரியவாளுக்கு அங்கேயே சாஷ்டாங்கமாக விழுந்து ஒரு நமஸ்காரம் செய்தார். குடும்பத்தினர் அனைவரையும் நமஸ்கரிக்கச் சொன்னார். பெரியவாளின் முன்னால் தேம்பித் தேம்பி அழுதார். ஏதோ பேச அவர் வாயைத் திறந்தாலும், வார்த்தைகள் வரவில்லை.
ஒரே ஒரு விநாடி தாமதமாக – அந்த அன்பர் வந்து தகவல் சொல்லி இருந்தாலும், காமாட்சி அம்மன் ஆலயத்தை விட்டு முருகேசன் சென்றிருப்பார். காஞ்சி மகா ஸ்வாமிகளின் பேரருளால், இன்றைக்கு முருகேசனுக்கு தரிசனம் கிடைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதனால்தான், யாரோ ஒருவரை முன்கூட்டி அனுப்பி, முருகேசனுக்குத் தகவல் சொல்கிறாற்போல் அமைந்து, இன்றைக்கு அவருக்கு பெரியவா தரிசனமும் வாய்த்திருக்கிறது.
நிறைவான மனதுடன் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தை விட்டு முருகேசன் வெளியே வந்ததும், யாரோ இரு பக்தர்கள் இவரது காதுகளில் விழுகிறாற்போல் பேசிக்கொண்டே சென்றனர். ‘சாதாரணமா இந்த வேளைல பெரியவா காமாட்சி அம்மன் கோயிலுக்கு வர மாட்டா. ஆனா, இன்னிக்கு என்ன விசேஷம்னு தெரியல. வந்திருக்கா. யாரோட புண்ணியமோ‘ என்று பேசிக்கொண்டே மறைந்தனர்.
இதைக் கேட்க நேர்ந்த முருகேசனுக்குக் கண்கள் குளமாயின. ‘இப்ப உனக்கு திருப்திதானே?‘ என்று மகா பெரியவா தன்னிடம் கேட்டது, அவரது மனக் கண் முன் நிழலாடியது. ஒருவேளை தான் ஏமாந்து போகாமல் சென்னை செல்லவேண்டும் என்பதற்காக, காமாட்சி அம்மன் ஆலயத்தில் இந்த தரிசனக் காட்சி அமைந்தது போலும் என்று புளகாங்கிதப்பட்டுக் கொண்டார்.