விபத்தும் அருளாசியும்

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மார்க்கமாக திருத்தணி, திருப்பதி பயணம் செல்லும் போது  திருவள்ளூர் என்கிற ரயில் நிறுத்தம் வரும். ஒரு காலத்தில் சாதாரண ஊராக இருந்த திருவள்ளூர், இன்று தனி மாவட்டமாக அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீவீரராகவ பெருமாள் ஆலயம் வெகு பிரசித்தம்.

சுமார் 70, 75 ஆண்டுகளுக்கு முன்னே திருவள்ளூரில் ராமசந்திர ஐயர் என்பவர் வசித்து வந்தார். மிகவும் பிரபலமான வக்கீல். நேர்மை ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வக்கீல் தொழிலை அமோகமாக நடத்தியவர். இதனால், நீதிபதிகளாலும் சக வக்கீல்களாலுமே மிகவும் மதிக்கப்பட்டார் ராமசந்திர ஐயர்.

பூஜைபுனஸ்காரம், ஆசாரம் போன்ற எல்லாவற்றிலும் தேர்ந்தவர் ராமசந்திர ஐயர். மகா பெரியவா மீது அலாதியான பக்தி கொண்டவர். திருவள்ளூரில் இவருடைய கிரஹத்துக்கு மகா பெரியவா விஜயம் செய்து, தொடந்து தங்கி, பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கி இருக்கிறார். ‘நீதி தவறாத சத்தியவான் என்று பெரியவாளின் திருவாயாலேயே அருளப்பட்டவர் ராமசந்திர ஐயர்.

ராமசந்திர ஐயரது பேத்தியின் கணவர்சீனிவாச ஐயர். அதாவது திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் மாப்பிள்ளை சீனிவாச ஐயர். சீனிவாச ஐயருக்கு ஐந்து மகன். இரண்டு மகள். இவர்களில் மூத்த மகன் சுந்தர்ராமன், தற்போது பெரம்பூரில் வசித்து வருகிறார். எழுபதைக் கடந்தவர்.

1960-களின் துவக்கத்தில் சீனிவாச ஐயரின் குடும்பம் பழைய மாம்பலத்தில் வசித்து வந்தது. இரண்டு மாடிகள் கொண்டது அந்தக் குடியிருப்பு. ஒரு நாள் அதன் மூன்றாவது மொட்டைமாடியில் துணிகள் உலர்த்துவதென்று சீனிவாச ஐயரின் மகன்களான சிவகுமாரும், விசாகனும் ஈரத் துணிகளை எடுத்துக் கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றனர். விசாகனுக்கு அப்போது மூன்றரை வயது.

சிவகுமார் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது குழந்தையான விசாகன், அப்போது மொட்டைமாடி கைப்பிடிச் சுவருக்கு அருகே நின்று, கால்களால் எம்பி எம்பி, வேடிக்கை பார்த்திருக்கிறான். அந்த வேளையில் சீனிவாச ஐயரின் சகோதரியும், விசாகனின் அத்தையும் ஆனவர் ஒரு காரில் வந்திருக்கிறார். ‘அத்தே கார்ல வர்றாஅத்தே கார்ல வர்றா என்று சந்தோஷப்பட்டு கைகளைத் தட்டி மொட்டைமாடியில் கைப்பிடிச் சுவர் அருகே எகிறிக் குதித்த விசாகன் சட்டென்று நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டான்.

ஓரளவுக்கு விவரம் அறிந்த சிவகுமார் பதறிப் போய் விட்டான். கீழே வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த விசாகனின் தாயார், அலறிப் புடைத்துக் கொண்டு சமையல்கட்டில் இருந்து வெளியே ஓடோடி வந்தார். மூன்றாவது மாடியில் இருந்த விழுந்த விசாகன், விழுகிற வேகத்தில் அங்கிருந்த எலுமிச்சை மரத்தின் கிளைகளில் உடல் பட்டு, ஆங்காங்கே அதன் முட்கள் கிழித்து, ரத்தக் காயங்களுடன் கீழே கிடந்தான். அக்கம் பக்கத்தில் வசித்து வந்த அனைவரும்ஐயையோகுழந்தைக்கு என்ன ஆச்சோ என்கிற பீதியில் விசாகனின் தாயாருக்கு உதவ வந்தனர். கீழே விழுந்த பிறகு விசாகனின் நினைவு தவறிப் போய் விட்டது. அவனிடம் இருந்து ஒரு பேச்சும் இல்லை. தாயாருக்கு இது இன்னமும் கவலையைக் கூட்டியது.

அங்கு இருந்தவர்கள் சட்டென்று விசாகனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போக ஏற்பாடு செய்தார்கள். அங்கே .சி.யூவில் விசாகனை அனுமதித்தனர். எக்ஸ்ரே போன்ற சோதனைகள் மளமளவென்று நடந்தன. விசாகனின் அப்பாவுக்கு போனில் தகவல் போய் அவரும் ஆஸ்பத்திரிக்குக் கண்ணீரும் கம்பலையுமாக ஓடி வந்தார். ‘மகனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது. அவன் உயிர் பிழைச்சுடணும் என்று மகா ஸ்வாமிகளை ஆஸ்பத்திரியில் ருந்தபடியே பிரார்த்தித்துக் கொண்டனர் சீனிவாச ஐயரும் அவரது மனைவியும்.

அப்போது மணி சுமார் காலை பதினொன்று இருக்கும். விசாகனுக்கு சிகிச்சை மேற்கொண்டிருக்கும் மருத்துவர்களும் நர்ஸுகளும் திரைப்படத்தில் வருவது போல் குறுக்கும் நெடுக்கும் பதறியபடி ஓடிக் கொண்டிருந்தார்களே தவிர, எந்த ஒரு நல்ல தகவலையும் சொல்லவில்லை. ‘விசாகனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்பதே அவர்கள் கடைசியாகச் சொன்ன தகவல்.

இதே வேளையில் காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீமகா பெரியவா சந்நிதியில் நடந்த அதிசயத்தைப் பார்ப்போம்.

சீனிவாச ஐயர் வசிக்கும் அதே பழைய மாம்பலம் தெருவிலேயே அவரது வீட்டுக்கு ஓரிரு வீடுகள் தள்ளி ஹரிஹர ஐயர் என்பவர் வசித்து வந்தார். இவரும் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர். அடிக்கடி காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போய் பெரியவாளை ஏகாந்தமாக தரிசனம் செய்து விட்டு, அவர் நடத்தும் ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் பூஜைகளைப் பார்த்து விட்டு வருவது வழக்கம்.

அதே போல் அன்றைய தினமும் பெரியவா தரிசனம் முடிந்த பின், சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையைப் பார்த்து தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலில் ஸ்ரீமடத்தில் அமர்ந்திருந்தார் ஹரிஹர ஐயர். அப்போது திடுமென ஹரிஹர ஐயரிடம் வந்த ஒரு சிஷ்யன், “மாமாபெரியவா ஒங்களைக் கையோட கூட்டிண்டு வரச் சொல்றா என்றான்ஆஹா… பாக்கியம் என்றபடி எழுந்து பெரியவா அருகே சென்றார் ஹரிஹர ஐயர்பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு அவரது உத்தரவுக்காகக் காத்திருந்தார்.

திருவள்ளூர் ராமச்சந்திர ஐயரோட மாப்பிள்ளை சீனிவாச ஐயர் உங்காத்துக்குப் பக்கத்துலதானே இருக்கார்?

ஆமா பெரியவா

அவாகிட்ட சேர்ப்பிக்க வேண்டிய பிரசாதத்தை ஒம் மூலமா கொடுக்கறேன். ஒடனே அவாகிட்ட சேரணும் என்ற பெரியவா, ஒரு ருத்திராட்ச மாலையையும், ஒரு காகிதத்தில் விபூதியும் கொடுத்தார். அதைத் தன் கையில் வாங்கிக் கொண்ட ஹரிஹர ஐயர், “கண்டிப்பா சேத்துடறேன் பெரியவா. ஆனா, சந்த்ரமௌலீஸ்வர பூஜை முடிஞ்சப்புறம் நான் பொறப்படலாமோல்லியோ? என்று கேட்டார்.

இல்லையில்லை. ஒடனே சேரணும். இந்தா, தீர்த்தம் வாங்கிண்டு நீ இப்பவே மெட்ராஸ் பொறப்படு என்று உத்தரவாகச் சொன்னார் பெரியவா.

வெளியே வந்த ஹரிஹர ஐயருக்கு என்னென்னவோ சிந்தனை. ‘ஏன் இந்தப் பிரசாதத்தை இவ்வளவு அவசரம் அவசரமாகக் கொடுக்க வேண்டும். பூஜையை முழுசாக என்னைப் பார்க்க விடவில்லையே? சரி, பெரியவா சொன்னால், எதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றபடி மனதைத் தேற்றிக் கொண்டவர, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தார். சென்னை செல்ல இருக்கும் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார். மதியம் மணி பன்னிரண்டரையைத் தாண்டி இருந்தது. அலுப்பின் காரணமாகவும் பயண சுகத்தின் காரணமாகவும் லேசான உறக்கத்தில் ஆழ்ந்தார் ஹரிஹர ஐயர்.

சென்னைக்கு வரும் பேருந்தில் ஹரிஹர ஐயர் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராயப்பேட்டை மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோமா? குழந்தை விசாகன் பாவம் இல்லையா!

.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்தான் விசாகன். சீனிவாச ஐயரின் குடும்பமே பதைபதைப்புடன் ஆஸ்பத்திரியில் காத்திருந்தது. எவருடைய முகத்திலும் சுரத்து இல்லை. கவலையாலும் அழுகையாலும் பலரது கண்கள் சிவந்திருந்தன.

மருத்துவர்கள் குழு பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டது ஒரு குழந்தை என்பதால், மருத்துவர் குழு கூடுதல் கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டு அவரச சிகிச்சையில் இறங்கி இருந்தனர். எக்ஸ்ரே உட்பட சில அவசர பரிசோதனைகளை எடுத்து முடித்த மருத்துவர் குழு, அதன் முடிவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தது. சீனிவாச ஐயரையும் அவர் குடும்பத்தில் உள்ள முக்கியமான ஓரிருவரை மட்டும் தன் அறைக்கு அழைத்த அந்தத் தலைமை மருத்துவர், “பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. எவரும் கவலைப்படத் தேவை இல்லை. மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்திருந்தாலும், குழந்தைக்கு எந்த விதமான உள்காயமோ, ஒரு சின்ன எலும்பு முறிவோகூட இல்லை. இது எப்படி என்றுதான் எங்களது குழுவினருடன் மிகுந்த ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். சாதாரணமாக இது போன்ற உயரத்தில் இருந்து விழுந்தால், ஒரு குழந்தை உயிர் பிழைப்பதே அரிது. அப்படி இருக்கும்போது உங்களது குழந்தை எந்த விதமான காயமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது, ஏதோ ஒரு அபூர்வ சக்தியால்தான் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் என்றார். அவர் முகத்தில் இருந்த ஆச்சரியம் இன்னும் விலகவில்லை என்பதை முகம் உணர்த்தியது.

உடன் இருந்த பிற மருத்துவர்களும் தலைமை டாக்டரின் இந்தக் கருத்தை ஆமோதித்தனர்.

சீனிவாச ஐயரும் உடன் இருந்தவர்களும் விசாகனைக் காப்பாற்றிய அந்த தெய்வ சக்திக்கு மனதார நன்றி சொன்னார்கள்.

கூடவே, அந்தத் தலைமை டாக்டர் இறுதியாகச் சொன்ன ஒரு தகவல் சீனிவாச ஐயரையும், அவரது குடும்பத்தினரையும் கவலைப்பட வைத்தது. “எல்லாம் ஓகே என்றாலும், குழந்தை இன்னும் கண் திறக்கவில்லை. சுய நினைவை இன்னும் அவன் எட்டவில்லை. அவன் கண் விழித்தால்தான், அடுத்த கட்டம் என்ன என்று தீர்மானிக்க முடியும். தெளிவாக எதையும் சொல்ல முடியும் என்றார்.

டாக்டர்எங்க குடும்பத்துக்கே தெய்வ பக்தி அதிகம் உண்டு. அதைவிட, காஞ்சி மகா பெரியவாளோட அனுக்ரஹம் எங்க குடும்பத்துக்கு பரிபூரணமா இருக்கு. குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதுன்னு நம்பறோம். அவன் சீக்கிரம் கண் திறந்து எங்களை எல்லாம் பார்க்கணும்னு உங்ககிட்ட ரொம்ப வேண்டிக்கிறோம் என்று கண்ணீர் விட்டார் சீனிவாச ஐயர்.

கூல் கூல்தெய்வ சக்தியால முடியாதது எதுவுமே இல்லைதான். இருந்தாலும், உங்க பையன் கண் திறந்து பார்க்கிற வரை நாங்க எதுவும் சொல்ல முடியாது. வெயிட் பண்ணுவோம். நீங்க எல்லாருமே அமைதியா இருங்க என்று சொல்லி, தன் அடுத்த பணியில் இறங்க ஆரம்பித்து விட்டார் அந்த டாக்டர்.

காஞ்சிபுரத்தில் புறப்பட்ட பேருந்து சென்னையை அடைந்தது. பேருந்தில் இருந்து இறங்கி பழைய மாம்பலத்தில் உள்ள தன் வீட்டை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஹரிஹர ஐயர்.

தன் வீட்டுக்குச் செல்வதற்கு முன் மகா பெரியவா கொடுத்த பிரசாதத்தை சீனிவாச ஐயரின் வீட்டில் கொடுத்து விடலாமே என்று அவர் வீடு இருக்கும் காம்பௌண்டுக்குள் நுழைந்தார். அழைப்புமணியை அழுத்தலாம் என்று போனவர் அப்போதுதான் கவனித்தார்வீடு பூட்டப்பட்டிருந்தது.

அதான், எல்லோரும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களே! இது ஹரிஹர ஐயருக்குத் தெரியாது அல்லவா?

சாதாரணமாக இந்த நேரத்தில் வீடு பூட்டப்பட்டிருக்காதே என்று யோசித்த ஹரிஹர ஐயர், பக்கத்து வீட்டில் விசாரித்தபோதுதான் விவரம் அறிந்தார். துணுக்குற்றுப் போனார். அவசரம் அவசரமாக மகா பெரியவா ஏன் தன்னிடம் பிரசாதம் தந்து அனுப்பினார் என்று நீண்ட நேரமாக அவரது மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு இப்போது ஓரளவு விடை தெரிந்து விட்டது.

கிடைத்த ஏதோ ஒரு வாகனத்தில் தன் அவசரம் சொல்லி, ராயப்பேட்டைக்கு விட்டார் சவாரி!

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணி இருக்கும். பரபரவென்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார் ஹரிஹர ஐயர். விசாகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு எது என்பதை விசாரித்தறிந்தார். நேராக சீனிவாச ஐயரிடம் சென்றார் ஹரிஹரன்.

தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இவர், தகவல் தெரிந்து குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறார் போலிருக்கிறது என்றுதான் சீனிவாச ஐயரின் குடும்பம் முதலில் நினைத்தது. பிறகுதான், காஞ்சிபுரம் சென்ற விவரத்தையும், தரிசனம் பூர்த்தி பெறாத நிலையில் பாதியிலேயே தன்னை அழைத்து மகா பெரியவா பிரசாதம் கொடுத்து அனுப்பியதையும் சுருக்கமாகச் சொன்னார் ஹரிஹரன்.

மகா பெரியவாளின் பெயர் உச்சரித்த மாத்திரத்தில், அதுவரை அந்தக் குடும்பத்தினரிடம் இருந்த கவலை எப்படித்தான் ஓடி மறைந்தது என்று தெரியவில்லை. தன் மகன் இருக்கும் சோகமான நிலையை மறந்து, ஹரிஹர ஐயரிடம், “என்ன சொன்னார் மகா பெரியவா? என்று மீண்டும் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தார் சீனிவாச ஐயர்.

ஒண்ணும் கவலை வேண்டாம். அந்தப் பரப்பிரம்மம் எல்லாம் தெரிஞ்சுதான் எங்கிட்ட பிரசாதம் கொடுத்து அனுப்பி இருக்கார். பெரியவா கொடுத்த விபூதியை அவன் நெத்தியில் இட்டு விடணும். இந்த ருத்திராட்சத்தை அவன் தலைமாட்டுல வெச்சுடுவோம். மிச்சதை பெரியவாளே பாத்துப் பார் என்றார் ஹரிஹர ஐயர். அனைவருக்கும் இதைக் கேட்பதற்கே சந்தோஷமாக இருந்தது.

தலைமை மருத்துவர் அறைக்கு ஓடினார் சீனிவாச ஐயர். காஞ்சி மடத்தில் இருந்து பிரசாதம் வந்திருக்கும் விவரத்தைச் சொன் னார். “நாங்க தெய்வமா மதிக்கிற குருநாதர்கிட்டேர்ந்து பிரசாதம் வந்திருக்கு. இதை உடனே அவனுக்கு இட்டு விடணும். அதுக்காக எங்களை .சி.யூவுக்குள்ளே அனுமதிக்கணும் என்று வேண்டினார்மருத்துவம் சம்பந்தப்பட்ட சில காரணங்களை முன்னிலைப்படுத்தி, இதற்கு அனுமதி மறுத்தார் அந்தத் தலைமை மருத்துவர். பிறகு, இவர்களது பிடிவாதம் தளராமல் இருக்கவே, ஹரிஹர ஐயரையும், சீனிவாச ஐயரையும் மட்டும் சில நிபந்தனைகளுடன் உள்ளே அனுமதித்தார்.

ஜய ஜய சங்கர ஸ்லோகத்தை மனதுக்குள் துதித்துக் கொண்டே இருவரும் மிகுந்த ஜாக்கிரதையாக .சி.யூவுக்குள் நுழைந்தனர்குழந்தை விசாகன் துவண்டு போய், ‘பெட்டில் படுத்திருந்த விதம் தந்தையார சீனிவாச ஐயருக்கும், ஹரிஹர ஐயருக்கும் கண்ணீரையே வரவழைத்தது.

அதிக நேரம் இங்கே இருக்கக் கூடாது என்று அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் சொன்னதன்பேரில், தன் கையில் வைத்திருந்த விபூதியை, மகா பெரியவாளை துதித்துக் கொண்டே விசாகனின் நெற்றியில் இட்டு விட்டார். அந்த ருத்திராட்சத்தை அவன் தலைமாட்டில்தலைகாணிக்கு அடியே வைத்தார். இருவரும் வெளியே வந்தனர்.

என்னே ஆச்சரியம்! இவர்கள் இருவரும் வெளியே வந்த அடுத்த விநாடி, அந்த அற்புதம் நடந்தது. நீண்ட நேரமாக சுய நினைவு திரும்பாமலே இருந்த விசாகன் பொசுக்கென்று கண் விழித்து விட்டான். இதைப் பார்த்த மறுகணம், பணியில் இருந்த செவிலியர்கள் ஓடிப் போய் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர்.

ஈஸ் இட்? என்று புருவம் உயர்த்திய அந்தத் தலைமை மருத்துவர், தன் புடை சூழ .சி.யூவுக்குள் விரைந்தார். இந்த சந்தோஷமான விஷயத்தைக் கேள்விப்பட்ட சீனிவாச ஐயர், “பார்த்தேளா, பெரியவா கொடுத்த விபூதியோட மகிமையை என்று குரல் தழுதழுக்க எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இயல்பான நிலையில் இருக்கும் விசாகனை எல்லோரும் வந்து பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது. குடும்பத்தினர் உட்பட அனைவரும் ஒன்று திரண்டு உள்ளே நுழைந்தனர்.

தலைமை மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை வைத்து, அவனைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எல்லோரையும் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தது குழந்தை.

அப்பா.. என்றான், சீனிவாச ஐயரைப் பார்த்து. உருகிப் போய் விட்டார் அந்தத் தந்தை.

எந்தப் பழுதும் இல்லாமல் மகன் தனக்கு முழுமையாகக் கிடைத்து விட்டானே என்கிற சந்தோஷம் அவருக்கு!

விசாகனைப் பார்த்து தலைமை மருத்துவர் கேட்டார்:

விசாகாமாடியில் இருந்து கீழ விழுந்தியேஅப்ப என்ன நடந்தது?

தலைமை மருத்துவரின் இந்தக் கேள்விக்கு விசாகன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள சீனிவாச ஐயர், ஹரிஹர ஐயர் உட்பட அனைவரும் ஆர்வமாக இருந்தனர். அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது தளத்தில் இருந்து தரையில் விழுந்த விசாகனுக்கு, விபத்துக்கு முன் நடந்தது என்ன என்பது ஸ்மரணையில் இருக்கிறதாதவிர, பழைய நினைவுகள் அப்படியே அவனுக்குள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமாகவும் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டார் தலைமை மருத்துவர்.

சீனிவாச ஐயர், அவரது மனைவி கிரிஜா, ஹரிஹர ஐயர் உட்பட அனைவரும் விசாகனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்என்ன பதில் சொல்லப் போகிறான் என்று. தலைமை மருத்துவரும் அவரது குழுவினரும்கூட இந்தக் கேள்விக்கான பதிலை அவனிடம் இருந்து பெறுவதில் ஆர்வமாக இருந்தனர்.

தன்னைச் சுற்றி ஓர் அரை வட்டம் போல் சூழ்ந்திருக்கும் அனைவரையும் ஒரு முறை மலங்க மலங்கப் பார்த்தான் விசாகன். பிறகு, தலைமை மருத்துவரைப் பார்த்து, “மாடிலேர்ந்து விழுந்தேனா என்று குழந்தைத்தனமாக விசாகன் இயல்பாகப் பேச ஆரம்பிக்க… ம்ம்… சொல்லுமேலே என்ன நடந்ததுன்னு சொல்லு என்று பூரிப்பானார் தலைமை மருத்துவர்.

நான் கீழே விழும்போது காஞ்சிபுரம் உம்மாச்சி தாத்தா என்னை ரெண்டு கையாலயும் அப்படியே தாங்கிப் பிடிச்சுண்டார். பிறகு எறக்கி விட்டுட்டுப் போயிட்டார் என்றான்.

தலைமை மருத்துவர் அதிசயப்பட்டார். சீனிவாச ஐயர் உட்பட விசாகனது குடும்பத்தினர் அனைவரும் பிரமித்துப் போய் நின்றனர். அப்போது சீனிவாச ஐயர் தன் கைப்பையில் இருந்த மகா பெரியவா படம் ஒன்றை எடுத்து, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் விசாகனிடம் நீட்ட, “ஆமாம்ப்பாஇந்த தாத்தாதான் என்னைப் பிடிச்சுண்டார் என்று பலரது குழப்பத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

தலைமை மருத்துவரைப் பார்த்து சீனிவாச ஐயர், “டாக்டர் சார்அவன் சொல்றது வாஸ்தவமாத்தான் இருக்கும். எங்க குடும்பத்துக்கே கண் கண்ட தெய்வம் அந்த காஞ்சி ஸ்வாமிகள்தான். அவரோட அனுக்ரஹம்தான் விசாகனைக் காப்பாத்தி இருக்கு. இல்லேன்னா மூணாவது மாடிலேர்ந்து விழுந்த ஒரு குழந்தை, உடம்புல ஒரு அடிகூட படாம இருக்குமா? எங்கேயானும் இது சாத்தியமா? நீங்க எத்தனை கேஸ் பார்த்திருப்பேள்?! என்று கேட்கும்போது, மகா பெரியவா மீது கொண்ட பக்தியின் வெளிப்பாட்டால் அவரது கண்களில் இருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.

விசாகனின் மிருதுவான கன்னத்தைச் செல்லமாகத் தடவிக் கொடுத்து விட்டு, “லக்கி பாய் என்று சுருக்கமாகச் ொல்லி விட்டு நிதானமாக நடந்து வெளியேறினார் தலைமை மருத்துவர். அவரது மருத்துவக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அவனைப் பிரமிப்புடன் பார்த்து விட்டுத் தலைமை மருத்துவரைப் பின்தொடர்ந்தார்கள்.

தன் அருமை மகனைக் காப்பாற்றிய காஞ்சி மகா ஸ்வாமிகளை இருந்த இடத்தில் இருந்தபடியே கைகூப்பி வணங்கினார் சீனிவாச ஐயர். இதை அடுத்து வந்த ஓரிரு நாட்களில் விசாகன்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

நாட்கள் ஓடின. இயல்பு நிலைக்கு மகன் விசாகன் திரும்பிய பிறகு காஞ்சிபுரம் மகா பெரியவாளிடம் ஆசி வாங்கி வருவதற்காக ஒரு நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போனார் சீனிவாச ஐயர்.

பெரியவா தரிசனத்துக்காக அன்றைய தினம் கூட்டம் அதிகம் இருந்தது. ‘திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்தில் இருந்து பெரியவாளை தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள் என்கிற தகவல் வந்ததும், மிகவும் வாஞ்சையுடன் சீனிவாச ஐயர் குடும்பத்தினரைத் தன் அருகே வரவழைத்து அமர வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அப்போது, விசாகன் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததையும், பெரியவா வந்து அவனைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய சம்பவத்தையும் தழுதழுக்கும் குரலில் சொன்னார் சீனிவாச ஐயர். அங்கு கூடி இருந்த பரமாச்சார்யாளின் பக்தர்கள் பலரும் இந்த சம்பவத்தைக் கேட்டு மெய் சிலிர்த்தனர். நடமாடும் அந்தத் தெய்வத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு பரவசப்பட்டனர்.

ஆனால், இதற்கு பதிலாக பெரியவா என்ன சொன்னார் தெரியுமா?

தன் எதிரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீமடத்துக் காரியதரிசிகளையும், முக்கியஸ்தர்களையும் பார்த்து, “என்னமோ சொல்றான் பாருமாடிலேர்ந்து இந்தப் புள்ளையாண்டன் விழுந்தானாம்நான் அவனைப் பிடிச்சேனாம் என்று குரல் உயர்த்திச் சொல்லி, இடி இடியெனச் சிரித்தார்.

எத்தனையோ பேருக்கு எத்தனையோ நன்மைகளைப் பல ரூபங்களில் தோன்றி மகா பெரியவா செய்திருக்கிறார். அந்த மகானோடு நெருங்கிய தொடர்புடைய அன்பர்களுக்கு மட்டும்தான் இது தெரியும். ஆனால், என்றைக்கும் அதை பிரபல்யப்படுத்திப் பேசவே மாட்டார் மகான். அதுதான் பெரியவா!