ஒரே தாரில் 1,008 பழம்
இந்த சம்பவம் நடந்து சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். கிருஷ்ணமூர்த்தி என்பவர் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்திலேயே தங்கி கைங்கர்யம் செய்து வந்தார். அவரது மனைவி ருக்மணிக்கும் ஸ்ரீமடத்தில் நல்ல ஈடுபாடு உண்டு.
கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமடத்திலேயே வளர்ந்தவர். மகா பெரியவாளுடன் இணக்கமாக இருந்து அவர் இடும் உத்தரவுகளை நிறைவேற்றுவது இவரது பணியாக இருந்து வந்தது. இன்னும் சொல்லப்போனால், மகா பெரியவாளின் குறிப்பறிந்து எதையும் செய்வது கிருஷ்ணமூர்த்தியின் பாணி என்று சொல்லலாம்.
அது ஸ்ரீராமநவமி உத்ஸவ காலம். எனவே, காஞ்சிபுரத்துக்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் ஸ்ரீமடத்துக்கும் வந்து பெரியவா தரிசனம் பெற்று அந்த ஆனந்தத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சென்னையில் இருந்து ஒரு முக்கியஸ்தர் அன்றைக்கு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவாளின் திருச்சந்நிதிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகத் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார் வாழைப்பழங்களைத் தன்னுடன் கொண்டு வந்திருந்தார். பெரியவாளுக்கு வாழைத்தார்களைச் சமர்ப்பித்து விட்டு, அவருக்கு நமஸ்காரம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
ஓரளவு கூட்டம் குறைந்த பிறகு கிருஷ்ணமூர்த்தியை சைகை காண்பித்து அழைத்தார் மகா பெரியவா. பவ்யமாக வந்து நின்றார்.
சற்று முன் சென்னையில் இருந்து வந்த முக்கியஸ்தர் வைத்து விட்டுப் போன இரண்டு வாழைத்தார்களைக் காண்பித்து, ‘இந்த ஒவ்வொரு தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு‘ என்றார் மகா பெரியவா.
அவ்வளவுதான். பரப்பிரம்மம் ஒரு உத்தரவைப் போட்டு விட்டதென்றால், அதை நிறைவேற்றிவிட்டுத்தானே மறு வேலை? வேஷ்டியை வாகாக மடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து வாழைப்பழங்களை எண்ணும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார் கிருஷ்ணமூர்த்தி.
பெரியவா சொல்லி விட்டு, ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்தார். அவ்வப்போது ஒரு சில பக்தர்கள் வந்து மகா பெரியவாளை தரிசிப்பதும், பிரசாதம் வாங்கிச் செல்வதுமாக இருந்தனர். ஒரு பதினைந்து நிமிடம் ஓடி இருக்கும்.
கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்தார். பெரியவாளிடம், “எண்ணிட்டேன் பெரியவா… ஒரு தார்ல 275 பழம். இன்னொரு தார்ல 375 பழம் இருக்கு” என்றார்.
மேலும் கீழும் தலையை ஆட்டி அசைத்த பெரியவா, “சபாஷ்… சரி…” என்று இழுத்தவர், “ஒரே தார்ல 1,008 பழம் இருக்கறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ…” என்று கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.
கிருஷ்ணமூர்த்திக்கும் அங்கு கூடி இருந்த ஒரு சில சிஷ்யர்களுக்கும் ஆச்சரியம் தொற்றிக் கொண்டது. 375 பழங்கள் இருக்கக் கூடிய தாரே இத்தனை பெரிதாக இருக்கிறது. இதில், 1008 பழங்கள் இருக்கக் கூடிய தாரா? அது எப்படி இருக்கும் என்று கற்பனையில் எண்ணிப் பார்த்து தங்களுக்குள் வியந்தனர்.
ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி, “இல்லே பெரியவா… இதுவரை நான் கேள்விப்பட்டதில்லே… பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி ஒரு தார் எங்கே இருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்” என்று தயாரானார்.
பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள கிருஷ்ணமூர்த்தி மிகவும் ஆவலாக இருக்கிறார் என்பதை அவரது முகம் தெளிவாகவே சொல்லியது.
“ஓ… இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில் சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியையே பாத்துண்டிருக்கியா?” என்று புன்னகையுடன் கேட்ட பெரியவா, “இதுக்கு நா பதில் சொல்ல வேணாம். இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு. அங்கே போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு. ஒனக்கு எல்லா வெவரமும் தானா கிடைக்கும்” என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.
பெரியவா இப்படிச் சொன்னது, கிருஷ்ணமூர்த்திக்கு சப்பென்று இருந்தாலும், இது குறித்தான விவரங்களை இளையாற்றங்குடிக்குப் போய்த் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கூடியது. பெரியவாளின் சந்நிதிக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்து விட்டு அவரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.
இளையாற்றங்குடி அல்லது இளையாத்தங்குடி என்று அழைக்கப்படும் சிற்றூர், நகரத்தார் மக்கள் அதிகம் வசித்து வரும் இடம். நகரத்தார் வணங்கும் பிரதானமான ஒன்பது சிவாலயங்கள் அமைந்த ஊர்களுள் இளையாற்றங்குடியும் ஒன்று. காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு.
‘1,008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப் பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ‘ என்று கிருஷ்ணமூர்த்திக்குப் பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 65 –வது பீடாதிபதியாக விளங்கிய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (பீடாதிபதி காலம் கி.பி. 1851 – 1890) இந்த சிற்றூரில்தான் அதிஷ்டானம் கொண்டுள்ளார்.
காஞ்சி மகா பெரியவாளுக்கு இளையாற்றங்குடியில் முகாம் இடுவதென்றால், அத்தனை சந்தோஷம். புதுக்கோட்டைப் பக்கம் «க்ஷத்ராடனம் வந்தால், இளையாற்றங்குடிக்கும் வந்து 65 –வது ஆச்சார்யரின் அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவார். அங்கே உள்ள வில்வ மரத்தில் இருந்து இலைகளைத் தன் கையால் பறித்து, ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை ஆத்மார்த்தமாக பூஜிப்பாராம். 1925 –ல் இளையாற்றங்குடியில் வியாஸ பூஜை நடத்தி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார் மகா பெரியவா.
1,008 வாழைப்பழங்கள் கொண்ட தாரைப் பற்றிய விவரம் அறிந்து கொள்வதற்கு கிருஷ்ணமூர்த்தியை மகா பெரியவா விரட்டியதும் இந்த இளையாற்றங்குடிக்குத்தான்.
மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார். அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர் வாழைத்தார்களைப் பற்றித் திடீரெனப் பேசிக் கொண்டிருந்தனர். சட்டென்று இவர்களின் பேச்சு கிருஷ்ணமூர்த்தியின் காதுகளில் விழ… ஆச்சரியப்பட்டு இந்த சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருந்த திசை நோக்கித் திரும்பினார். ‘பெரியவாளின் திருவாக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போலும்‘ என்று நெகிழ்ந்த கிருஷ்ணமூர்த்தி, வாழைத்தாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஆசாமிகளின் அருகே சென்றார்.
அவர்களிடம், “ஐயா… 1,008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி ஒரு நல்ல வாழைத்தார் வேணும். இந்த ஊர்ல எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தியை ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை நீட்டி, “தோ… தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத் தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம் ஒண்ணு வரும். அங்கே இருக்கிறவர்கிட்ட கேட்டுப் பாருங்க” என்று சொன்னார்.
மாரியம்மனின் பிரசாதம் வாங்கிக் கொண்டு கொஞ்சமும் தாமதிக்காமல், தெற்குத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. கொஞ்சம் கரடுமுரடாக இருந்தது பாதை. மாரியம்மன் கோயிலில் இருந்த ஆசாமி சொன்ன குறிப்புப்படி வாழைமரங்கள் அடர்ந்த அந்தத் தோட்டத்தைக் கண்டுபிடித்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி.
தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு விசாரிக்க… 1,008 வாழைப்பழங்கள் அடங்கிய தார் ஒன்று வேண்டும் என்று சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. சற்று முன் வாழைமரத்தில் இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து வந்தார் அவர். “இதான் சாமீ நீங்க கேட்ட 1,008 பழத்தாரு..” என்று கிருஷ்ணமூர்த்தியின் முன்பாக வைத்தார்.
கிருஷ்ணமூர்த்திக்கு உடலெங்கும் புல்லரித்து விட்டது. மகா பெரியவாளின் தீர்க்க தரிசனத்தை நினைத்துப் பரவசப்பட்டார். தோட்டத்துக்காரர் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக் கொடுத்து விட்டு, ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் அந்த தாரை சுமந்து வரச் சொன்னார்.
அன்றைய தினம் நள்ளிரவே காஞ்சிபுரம் திரும்பி விட்டார் கிருஷ்ணமூர்த்தி. அடுத்த நாள் அதிகாலை பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக் கொண்டு போய் வைத்தார்.
அதைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார்.
“1,008 பழம் இருக்கற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே போலிருக்கு?” என்று பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.
“ஆமா பெரியவா. இந்தப் பிரமாண்டமான தாரை பெரியவா சந்நிதிக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஜாக்கிரதையா கொண்டு வந்திருக்கேன். நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்துது. பெரியவா சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து” என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.
“விஷு (மலையாளப் புத்தாண்டு) வரப் போறது. இந்த தாரை ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிடு” என்றார் பெரியவா தடாலென்று.
அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள், “விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே… அதுக்குள்ள இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே” என்று கிருஷ்ணமூர்த்தியின் காதருகே வந்து குசுகுசுத்தனர்.
அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: “இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு போட்டுட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே… பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது. அப்படியே அன்னிக்குப் பழுத்த பழம் போல பொலிவோட – பிரகாசமா இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது” என்று சொல்லி, பெரியவா திருச்சந்நிதிக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, தாரை உள்ளே பத்திரப்படுத்துமாறு ஒரு சிஷ்யரிடம் சொன்னார்.
விஷு நெருங்கும் நேரத்தில் அந்தத் தார் குருவாயூரப்பனுக்கு அர்ப்பணிப்பதற்கு என்று காஞ்சிபுரத்தில் இருந்து பயணமானது. கிருஷ்ணமூர்த்தியே கிளம்பிப் போனார்.
குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1,008 பழத்தில் ஒரு பழம்கூட தாரில் இருந்து நழுவி கீழே விழவில்லை. முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல், புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்!