கோயிலுக்கு ஏன் போக வேண்டும்?

இன்றைக்குக் கோயிலுக்குப் போகிற வழக்கமே பலரிடம் குறைந்து போய் விட்டது. ஏதோ திருவிழா, பண்டிகை நாள் என்றால் மட்டுமே சிலர் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். தவிர, வீட்டில் யாருக்கேனும் பிறந்த நாள்திருமண நாள் என்றாலோ, அல்லது தங்களுக்கு ஏதாவது காரியம் நிறைவேற வேண்டும் என்றாலோ, அது குறித்தான பிரார்த்தனையை தெய்வத்திடம் சமர்ப்பிப்பதற்குக் கோயிலுக்குப் போகிறார்கள்.

தினமும் கோயிலுக்குப் போக வேண்டியதன் அவசியம் என்ன?’ என்று மகா பெரியவா 1957 -58 வாக்கில் ஒரு சொற்பொழிவில் கூறி இருக்கிறார்.

அந்த அருமையான செய்தி என்ன என்று பார்ப்போமா?

பெரியவா அருளிய திருவாக்கு:

ஆலயங்களுக்கு நாம் தினமும் போக வேண்டுமா, வேண்டாமா என்று பலருக்குச் சந்தேகம் இருந்து வருகிறது. ஆலயத்துக்குப் போக வேண்டியது மிகவும் அவசியம்.

அந்தக் காலத்தில் கோயிலில் ஒலிக்கும் உச்சிகால மணி ஓசையையோ, அர்த்தஜாம மணி ஓசையையோ கேட்ட பிறகுதான் மத்தியான சாப்பாடோ, இரவுச் சாப்பாடோ சாப்பிடுவார்கள்.

நாமெல்லாம் சாப்பிடுகிறோம். ஈஸ்வரனுக்கும் நைவேத்தியம் சரியாக நடக்க வேண்டாமா? நாம் எல்லோரும் கோயிலுக்குப் போகவில்லை என்றால் அங்கே எதுவும் சரியாக நடக்காது. பூஜை, நைவேத்தியம் போன்ற எல்லாம் சரிவர நடந்து வருகின்றன என்று தெரிந்தால் கோயிலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை.

நான் கோயிலுக்குப் போகிறேன் என்றால் எனக்காகவாவது கொஞ்சம் மெனக்கெட்டுக் கோயிலைச் சுத்தமாக வைக்கிறார்கள். அழுக்கேறிப் போன விளக்குகளை நன்றாகத் துடைத்து அதில் தீபம் ஏற்றுகிறார்கள். அன்றைய தினம் நைவேத்தியம் ஜோராகச் செய்கிறார்கள். இதற்காகவாவது கோயிலுக்குப் போக வேண்டி இருக்கிறது.

நம் ஊரில் இருக்கிற கோயிலில் பூஜை, நைவேத்தியம் சரிவர செய்கிறார்களா என்று கவனிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கோபுர தரிசனம் தினப்படி செய்தாலே போதும், வாஸ்தவம்தான். ஆனால், கோயிலின் பணிகள் சரியாக நடக்கின்றனவா என்று நேரில் சென்று பார்ப்பது நம் எல்லாருடைய முதல் கடமை.

மிகவும் சூட்சுமமான தர்மங்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம். ஈஸ்வரனுக்கு அழுக்குத் துணி கட்டக் கூடாது. சுத்தமான துணியாக இருக்கிறதா என்று நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். இது மிக அவசியம். இப்போது ஒவ்வொரு ஊரிலும் மிகுந்த அழுக்குத் துணியைக் கட்டிக் கொண்டிருக்கிறவர் யார் என்று பார்த்தால் அது நம் ஸ்வாமியாகத்தான் இருக்கும்!

இந்த ஒரு தர்மத்தையாவது பக்தர்கள் செய்தால்அதாவது நல்ல தூய ஆடையை ஈஸ்வரனுக்குச் சாத்தும்படியாகச் செய்தால்அது மிகவும் விசேஷம். புண்ணியம்.

அநேக தர்மங்கள் இருக்கின்றன. கஞ்சி வார்ப்பது, பண உதவி செய்வது, அன்ன தானம் செய்வதுஎல்லாம் தர்மம்தான். ஆனால், ஆலய பூஜை குறையாமல் இருக்கிறதா என்று கவனிப்பது மிகவும் விசேஷமான தர்மம்.

ஆலயம் சுத்தமாக இருக்க வேண்டும். விளக்கு இருக்க வேண்டும். தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஊர் ஜனங்கள் கவனிக்க வேண்டும்.

இப்படி எல்லாம் நிறைவாக இருந்தாலே போதும்ஏராளமான ஆஸ்பத்திரி ஏற்படுத்துவதனால் நமக்கு என்ன சௌகரியம் உண்டாகிறதோ, அது உண்டாகும்.

இந்தக் கடமைகளை நாம் மறக்கக் கூடாது. ஆலயத்தைத் தொழுதாக வேண்டும். தினமும் பக்தி ஸ்லோகங்களை நாம் பாராயணம் செய்வது என்று வைத்துக் கொண்டால் சாஸ்வதமான நன்மைகள் எல்லாம் உண்டாகும்.”

இது மகா பெரியவா அருளிய திருவாக்கு.

இதை சிரமேற்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் தீபமே ஏற்ற முடியாமல் இருக்கின்ற ஆலயத்துக்கும், திருப்பணிகள் தடைபட்டுப் போய்க் கிடக்கும் ஆலயத்துக்கும் நம்மால் ஆன உதவிகளைச் செய்தால், மகா பெரியவாளின் திருவாக்கை நாம் பின்பற்றி நடக்கிறோம் என்று ஆகி விடும். அந்த மகானது அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரர் ஆகிறோம்.