இந்த காரியத்துக்கு என்ன தண்டனை?

மகா பெரியவா அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார்.

பொதுவாக மகா பெரியவா எப்போது கும்பகோணத்துக்கு வந்து முகாமிட்டிருந்தாலும் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது. காரணம்தான் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற காலத்தில் கும்பகோணத்தில் சிறிது காலம் தங்கி இந்த ஊர் மக்களுக்கு தினமும் தரிசனம் கொடுத்து அவர்களை பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் மகா பெரியவா. அந்த வகையில் காஞ்சி மகான் கும்பகோணம் வரும்போதெல்லாம், காவிரியின் மைந்தர்கள் ஒன்று திரண்டு, பிரமாண்டமான வரவேற்பைக் கொடுத்து, தங்களின் அன்பையும் பண்பையும் பொழிந்து பிரமாதப்படுத்தி விடுவார்கள். அதுபோன்றதொரு வரவேற்பு எல்லாம் முடிந்து, அடுத்து வந்த ஒரு நாளில் நடந்தது இந்த நிகழ்வு.

அன்றைய தினம் கும்பகோணம் நகரில் உள்ள ஓர் ஆலயத்தைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக அந்த நகரின் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தார் மகா பெரியவா. தெருவில் நடந்து செல்லும் மகானைப் பார்த்து ஆரத்தி எடுத்தும், கன்னத்தில் போட்டுக் கொண்டும் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் அந்தத் தெருவாசிகள்.

ஸ்ரீமடத்து காரியதரிசிகள் வெகு சிலர் மட்டும் மகா பெரியவாளின் பின்னே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்படி, ஆள் அரவமற்ற குறிப்பிட்ட ஒரு தெருவின் வழியே மகா பெரியவா நடந்து சென்று கொண்டிருந்தார். விடுமுறை நாள் என்பதால், விசாலமான அந்தத் தெருவில் ஏழெட்டுச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டு மும்முரத்தில் தெருவில் என்ன நடக்கிறது, யார் வருகிறார்கள்போகிறார்கள் என்பது கூடத் தெரியாமல் இருந்தது அந்தப் பருவத்துக்கே உண்டான இயல்பு.

தற்போது இருப்பது போல் கிரிக்கெட்டும், டென்னிஸுமா அப்போது?! அப்போது இருந்த விளையாட்டெல்லாம் ஒளிஞ்சான்குண்டு எனப்படும் கண்ணாமூச்சி, கிட்டிப்புல், ஓடிப் பிடித்து விளையாடுதல் போன்றவைதான்.

மகா பெரியவா நடந்து சென்று கொண்டிருந்த தெருவில் இந்தச் சிறுவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டு களை கட்டி இருந்தது. சிறு வயதுப் பையன்கள் என்பதால், அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த மகா பெரியவாளை இவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒரு பொருட்டாக நினைக்கவும் இல்லை. அவர்கள் பாட்டுக்குத் தங்கள் விளையாட்டைத் தொடர்ந்தபடி இருந்தார்கள்.

ஒரு துணியால் தன் கண்களை இறுகக் கட்டிக் கொண்ட அந்தச் சிறுவன் தெருவில் ஒளிந்து கொண்டிருந்த தன் சகாக்களைக் கண்டுபிடிக்கும் விதமாக, இரு கைகளையும் நீட்டியபடி தெருவின் மையத்தில் நடந்து கொண்டிருந்தான்.

மகா பெரியவா ஏதோ நாமத்தை ஜபித்துக் கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகள் பெரியவாளின் நடைக்கு ஈடு கொடுத்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.

தன் நண்பர்கள் ஓரிருவரைக் கண்டுபிடித்து முடித்த அந்தச் சிறுவன் அடுத்து ஒளிந்திருக்கும் தனது மற்ற நண்பர்களையும் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்பதற்காகத் தெருவில் நடந்து கொண்டிருந்தான்.

அந்த வேளையில்தான் எதிர்பாராதநடக்கவே கூடாத இந்த சம்பவம் நடந்து விட்டது.

தெருவின் மையத்தில் வேகமாக நடந்து வந்த காஞ்சி மகா பெரியவாளின் காலடி சத்தத்தைக் கேட்டுயாரோ தன் சகாக்களில் ஒருவன்தான் என்று நினைத்து, “கண்டுபிடிச்சுட்டேன்என்று அலறி அந்தப் பரப்பிரம்மத்தைக் கட்டிக் கொண்டு விட்டான். தன் பிடி இறுகுகிற வேளையில்தான்அடடாநம் சகா போல் இல்லையேயாரோ, எவரோஎன்று பதறிப் போய்த் தன் கண்கட்டை அவிழ்த்தான். மூச்சடைத்து நின்றான்.

மகா பெரியவாளும் அப்படியேஅந்த இடத்திலேயே நின்று விட்டார்.

க்ஷண நேரத்தில் நடந்து முடிந்த இந்தக் காட்சியைப் பார்த்த ஸ்ரீமடத்துக் காரியதரிசிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

ஸ்ரீமடத்துக் கார்யதரிசிகளும் அந்தத் தெருவில் அப்போது நடமாடிக் கொண்டிருந்த ஜனங்களும் சம்பந்தப்பட்ட சிறுவனை ஆத்திரத்தின் மிகுதியால் அடித்து துவம்சம் செய்வதற்குத் தயாரானார்கள். அவனை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரையும் கை நீட்டிஅமைதியாக இருக்குமாறுஉத்தரவிட்டார் மகா பெரியவா.

அந்தச் சிறுவனின் முகம் சுரத்து இழந்து காணப்பட்டது. இதை அடுத்து தனக்கு என்ன ஆகுமோ என்கிற பீதியில் தவிப்புடன் காணப்பட்டான். அதுவரை தன்னுடன் விளையாடிய சகாக்கள் உடன் இருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று எண்ணி அவர்களைச் சுற்றும்முற்றும் தேடினான். கண்களைக் கட்டிக் கொண்டு தன் சகாக்களைத் தேடி விளையாடிய சிறுவன் இவர்களிடம் வசமாகச் சிக்கிய பிறகு, துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டிருந்தார்கள் போலும். எவருக்குமே கண்களில் படவில்லை. அவர்கள் அங்கே இருந்தால்தானே? எப்போது இப்படி ஒரு களேபரம் துவங்கியதோ, அப்போதே அவனது சகாக்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, தங்கள் இல்லங்களுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டு விட்டார்கள். இது வேறு அவனுக்குள் கலவரத்தை அதிகப்படுத்தி இருந்தது. மனதில் பயமும், குரலில் நடுக்கமும் சேர்ந்து கொண்டது. எதைப் பேச நினைத்தாலும், வார்த்தைகள் அவனுக்குக் கோவையாக வரவில்லை.

மகா பெரியவாளையும் மற்றவர்களையும் நேருக்கு நேர் பார்க்கத் திராணி இல்லாமல், தலை குனிந்தபடியே கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தான் அவன்.

விஷயம் கேள்விப்பட்டுத் தெருவில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.

மகா பெரியவா சற்று நேரத்துக்கு எதுவுமே பேசவில்லை.

தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்கிற கவலையுடன் அந்தப் பையன் அழாத குறையாக அங்கே நின்று கொண்டிருந்தான். அவ்வப்போது மகா பெரியவாளைக் கெஞ்சுவது போல் பார்த்துக் கொண்டும் இருந்தான்.

மகா பெரியவா அந்த சிறுவனைத் தன் அருகே வருமாறு சொன்னார். அவனைப் பார்த்துக் கேட்டார்: “ஒம் பேர் என்ன?”

போலீஸ் ஸ்டேஷனில் எஃப்..ஆர். பதிவு செய்வதற்கு முன் பெயர் கேட்பார்களேஅந்த சூழ்நிலையில் இருப்பது போன்ற பயத்தில், “சிராமன்…” என்றான் ஈனஸ்வரத்தில்.

நீ என்ன கார்யம் பண்ணினேன்னு தெரியுமோ?”

தெர்யும்கண்ணாமூச்சி விளையாடும்போது தெரியாத்தனமா ஒங்களைக் கட்டிண்டுட்டேன்.”

ஆச்சார்யாளைத் தொடறதெல்லாம் பாவம்னு நோக்கு தெரியுமோல்லியோ?”

தெரியும்…”

இப்ப நீ பண்ணி இருக்கிற இந்தக் கார்யத்துக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு தெரியுமா?”

தெரியாது…” என்று சொல்லும்போதே அழத் துவங்குவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான் சிறுவன்.

பயப்படாதஒனக்குக் கொடுக்கப் போற தண்டனை ரொம்ப ஒசந்தது…” – பெரியவா சொன்னார்.

மகா பெரியவா சொன்னதைக் கேட்டதும் சிறுவன் கொஞ்சம் தெம்பானான். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவன் அடுத்து மகா பெரியவா என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்பதற்கு அந்தப் பரப்பிரம்மத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் முகத்தில் ஒரு ஆர்வம் கூடியது.

பெரியவா சொன்னார்: “தைரியமா இருஎன்னை மாதிரி சந்நியாசிகளோட ஸ்பரிசம் யார் மேலயும் படக் கூடாது. தெரிஞ்சோ தெரியாமலோ என்னை நீ கட்டிண்டுட்டேஅதனால்…..” என்று சொல்லி, ஒரு சிறு இடைவெளி விட்ட மகா பெரியவா, “நிரந்தரமா நீ எங்கூட மடத்துலயே தங்கிடு. அதுதான் ஒனக்குத் தண்டனைஎன்று சொல்லிச் சிரித்தார்.

அந்தச் சிறுவன் உட்பட அங்கிருந்த அனைவரும் இந்த வார்த்தைகளைக் கேட்டு பிரமித்து நின்றார்கள்.

மகா பெரியவா சொன்ன தீர்ப்பைக் கேட்டு அங்கிருந்த பக்தர்கள் ஒரு சிலர் தங்களது கன்னத்தில் போட்டுக் கொண்டு, “சங்கரா சங்கரா…” என்று ஆனந்தப்பட்டனர்.

ஆனால், அந்தச் சிறுவனின் மன நிலை எப்படி இருந்தது? காஞ்சி ஸ்ரீமடத்திலேயே நிரந்தரமாகத் தங்கி, பெரியவாளுக்கு சேவை செய்வதைப் பற்றி யோசிக்கிற வயதா அது?

என்றாலும், அதற்குள் தகவல் அவனது கிரஹம் வரை எட்டி, அவனுடைய பெற்றோர் உட்பட பலரும் அங்கே வந்து விட்டனர். அங்கு நடந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன் இறுதியில் மகா பெரியவா சொன்ன தீர்ப்பையும் கேட்டுப் பரவசப்பட்டார்கள்.

மகா பெரியவா திருவாக்குப்படி அதை அடுத்து வந்த நாட்களில் காஞ்சி ஸ்ரீமடத்துப் பணியாளர்களில் ஒருவராகவே ஆகி விட்டார் சிவராமன்.

மகா பெரியவாளை அண்டி, அவருக்குத் திருத்தொண்டு புரிய வேண்டும் என்று விருப்பப்பட்டு சொத்து, சுகம் போன்ற அனைத்தையும் நிரந்தரமாகத் துறந்து விட்டு காஞ்சி ஸ்ரீமடத்தை சரணடைந்தவர்கள் பலர் உண்டு.

அதே வேளையில், சிவராமனுக்குக் கிடைத்தது போன்ற பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்? ‘எனக்குப் பணி செய்ய வாஎன்னுடன் இருஎன்று மகா பெரியவாளே திருவாய் அருளி, அவருக்குக் காலம் முழுக்கச் சேவை செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதா? எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது?!

அதுதான் சிறுவனான சிவராமனுக்கு வாய்த்தது. எப்போதும் மகா பெரியவாளின் உடன் இருந்து அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பெரும் பேறு கிடைத்தது.

மகா பெரியவாளுடன் இருந்து அந்தக் கருணைக் கடலின் அமுதத்தைப் பருக வேண்டும் என்று சிவராமனின் தலையில் எழுதி பிரம்மன் அனுப்பி இருக்கிறான் போலும்! அதன்படி பெறற்கரிய பாக்கியம் பெற்றார்.

தனது காசி யாத்திரையின்போது சிவராமனை உடன் அழைத்துக் கொண்டு போனார் மகா ஸ்வாமிகள். அடுத்தடுத்து வந்த காலத்தில் பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் மிகப் பெரிய பொறுப்பு சிவராமனை வந்தடைந்தது. அன்னபூரணிக்கே அன்னம் அளிப்பது எத்தனை கோடி தவத்தால் வந்த பலன்?

அந்த மகானை அண்டினால், அனைத்தும் சுகமே. அடுத்த ஜன்மமே கிடையாது. தங்கத்தைப் புடம் போடுவது மாதிரி நம்மிடம் இருக்கும் துர் குணங்களை துரத்தி விட்டு, மாசு மருவற்ற மனதை நமக்குத் தருபவர்தான் மகா பெரியவா!