காஞ்சி மகானின் அருள் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மகா பெரியவாளை அதுவரை தரிசித்ததே இல்லை, கல்லூரி மாணவியான அந்த இளம்பெண். அதே சமயம் அந்த மாணவியின் கனவில் வந்து அவரை ஆட்கொண்டார் மகா பெரியவா. சுவாரஸ்யமான அந்த நிகழ்வைப் பார்ப்போமா?
அந்த மாணவி அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பைத் தவிர வேறு எதிலும் சிந்தனை இல்லை என்பதால், அதில் கூடுதல் கவனம் செலுத்தி மிக நன்றாகவே படித்து வந்தார்.
வீட்டில் உள்ள பெற்றோருக்கும் வயதில் மூத்தவர்களுக்கும் அதிக மரியாதை தருவார். அதே சமயம், ஆன்மிகத்தில் இவருக்கு அவ்வளவாக நாட்டம் உண்டு என்றும் சொல்ல முடியாது; இறை பக்தி சுத்தமாக இல்லை என்று ஒதுக்கவும் முடியாது. இப்படியும் அப்படியும் என்று வைத்துக் கொள்ளுங்கள்!
கடவுளை வணங்க வேண்டும் என்று தன் மனதில் தோன்றினால், ஆத்மார்த்தமான உள்ளத்துடன் கடவுளை வணங்குவார். இல்லை என்றால், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருந்து விடுவார்.
காஞ்சியில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த – நடமாடும் தெய்வமான மகா பெரியவா பற்றி இந்த மாணவி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர, அவரை நேரில் தரிசித்ததில்லை. அவரது அருட் கருணைக்குப் பாத்திரம் ஆனதில்லை. ஏனோ, அந்த மகானை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதுவரை அவருக்குள் உதித்ததில்லை.
இது போன்ற இயல்பைப் பலரிடமும் பார்க்க முடியும். ஏன் தெய்வத்தை வணங்காமலே இருக்கிறார் என்று காரணம் தேட முடியாது. திடீரென்று ஏன் பக்தியில் திளைக்கிறார் என்று ஆராயவும் முடியாது. பொதுவாக, சிலவற்றுக்கு ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் காரணம் தேட முடியாது. அது அப்படித்தான்!
இதெல்லாம் யார் கையில் இருக்கிறது? எதுவுமே நிரந்தரம் இல்லை. எந்த வேளையில் எப்படி ஒரு மாற்றத்தை – யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் யார் கண்டது? இறைவனையே அறியும் வல்லமை மனிதனுக்குக் கிடையாது.
அதே நேரம் ஒரு தெய்வம் ஒருவரை ஆட்கொள்ள வேண்டிய வேளை என்று வந்து விட்டால், அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஒரு மகானின் இன்னருள் நம்மீது பொழிந்தே ஆக வேண்டும் என்கிற வேளை வந்து விட்டால், எவர் தடுத்தாலும், எவர் நினைத்தாலும் அதை நிறுத்த முடியாது.
அது போல் கல்லூரியில் படித்து வந்த இந்த யுவதிக்கும் நடந்தது. மகா பெரியவா தன் இன்னருளைப் பொழிய வேண்டிய வேளை வந்தது.
கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு மகா பெரியவா ஒரு நாள் இரவு அவரது கனவில் தோன்றி திவ்ய தரிசனம் கொடுத்தார். எவருக்கும் கிடைக்காத அற்புத பாக்கியம்.
அடுத்த நாள் காலை கண் விழித்த மாணவிக்கு இந்தக் கனவு குறித்த நினைவு இருந்தாலும், ஏனோ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘ஒருவேளை முந்தைய தினம் இரவு படுக்கப் போகும்போது ஏதேனும் புத்தகம் படித்திருப்பேன். அதில் அந்த மகானின் படம் யதேச்சையாக என் கண்களில் பட்டிருக்கும் போலும். அதனால்தான் கனவில் அவர் தோன்றி இருக்கிறார்‘ என்று சாதாரணமாக விட்டு விட்டார். போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆனால், மகா பெரியவா சாதாரணப்பட்டவரா? இந்த மாணவி விட்டு விட்டால், அவரும் அப்படியே விட்டு விடுவாரா, என்ன? இந்த மாணவிக்குத் தரிசனம் தந்து ஆட்கொள்ள வேண்டும் என்பது மகானின் திருவுள்ளம் ஆயிற்றே!
இந்த மாணவியை அப்படியே விட்டு விடவில்லை. அதன் பின் அடிக்கடி இந்த மாணவியின் கனவில் அவ்வப்போது வந்து தரிசனம் தந்தார். இப்படி கனவில் மகான் வர வர… அந்த மாணவி கொஞ்சம் யோசித்தாள். மகானைப் பற்றிய எண்ணங்கள் அவரது மனதை மெள்ள மெள்ள ஆக்கிரமிக்கத் துவங்கின. ‘அந்த மகான் நம் கனவில் அடிக்கடி வந்து போகிறார். ஆனால், நாம் இதை அலட்சியமாக இதுவரை விட்டு விட்டோமே‘ என்று சிந்தித்தார். தன்னை ஆட்கொள்ளும் அந்த மகானுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று தீர்மானித்தார்.
காஞ்சி மகானின் அருளுக்குப் பாத்திரம் ஆக வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று பலரிடமும் கேட்டார். ஸ்ரீமடத்துக்கு வேண்டிய ஒரு அன்பர் சொன்னதன்பேரில் வாராவாரம் குருவார தினத்தன்று (வியாழக்கிழமை) அந்த மகானை மனதில் நிறுத்தி, விரதம் இருக்க ஆரம்பித்தார்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையில் ஸ்நானம் முடித்து விட்டுக் கல்லூரி புறப்படும் முன், காஞ்சி மகா பெரியவாளை நினைத்து விரதம் இருக்க ஆரம்பித்தார். பூஜையறையில் அந்த மகானின் படம் ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்தார். அந்த மகானும் இவரது திடீர் பக்தியில் திளைத்து, மகிழ்ந்து இவரது கனவில் அவ்வப்போது வர ஆரம்பித்தார். ஒரு சில வாரங்களுக்கு இது தொடர்ந்தது. பிறகு வந்தது ஒரு சோதனை!
ஒரு கட்டத்தில் இந்த மாணவியின் கனவில் வருவதை நிறுத்திக் கொண்டார் மகா பெரியவா. மாணவிக்குக் குழப்பம். ‘நடமாடும் தெய்வமே… தங்களுக்கு நான் என்ன தவறு செய்து விட்டேன்? ஒரு சில நாட்களாக என் கனவில் வருவதில்லையே…’ என்று மனமுருகி வேண்டினார்.
அன்றைய தினம் வியாழக்கிழமை. வழக்கம்போல் விரதம் இருந்து மகா பெரியவாளை வழிபட்டுக் கல்லூரிக்குப் போனார். இரவு படுக்கப் போகும்போது, ‘இன்றைக்காவது என் கனவில் தாங்கள் தரிசனம் தர வேண்டும்‘ என்று கண்களை மூடி பிரார்த்தித்துப் படுத்தார். ஆனால், பெரியவா அவ்வளவு லேசில் மனம் இரங்கவில்லை. கனவில் தோன்றவில்லை.
அடுத்த நாள் கண் விழித்ததும், தவித்துப் போனார். ‘திடீரென்று ஏன் என் கனவில் தொடர்ந்து வர வேண்டும்? அதேபோல் ஒரு சில நாட்களிலேயே தன் வருகையை ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும்?’ என்று தவித்துப் போனார். இரண்டு நாட்கள் இப்படியே போயிற்று.
மூன்றாம் நாள் இரவு பரமேஸ்வர சொரூபமாக மகா பெரியவா அந்த மாணவியின் கனவில் திடீரென்று காட்சி அளித்தார். மாணவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கனவிலேயே, ‘ஏன் என் பிரார்த்தனையை பெரியவா ஏற்றுக் கொள்ளவில்லை? ஏன் என் கனவில் வரவே இல்லை? என் பக்தியில் நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்?’ என்றெல்லாம் மருகித் தீர்த்தாள்.
மகா பெரியவா மெள்ள புன்னகைத்தார். ‘குழந்தே… நான் என்ன ஒன்னை மாதிரி சிறு வயசா? நினைச்சா பொசுக்குன்னு வந்துட்டுப் போறதுக்கு…. எனக்கும் வயசு ஆயிடுத்தோன்னோ… என்னால் அவ்வளவு தூரம் பயணப்பட்டு ஒன் கனவுல வர முடியல (இதெல்லாம் மகா பெரியவாளின் ஒரு திருவிளையாடல்). அதனால, இனிமே நீதான் என்னைப் பாக்க காஞ்சிபுரம் வரணும். வருவியா?’ என்று கேட்டார்.
மாணவியின் முகத்தில் சந்தோஷக் களை. ‘நிச்சயம் வருவேன் பெரியவா… ஒங்க அனுக்ரஹம் மட்டும் எனக்கு இருந்தா போதும். நானே உங்க சந்நிதி தேடி வந்து தரிசனம் பண்றேன்‘ என்றாள்.
‘வர்றதுதான் வரே… உத்ஸவத்துக்கு வரியா?’ என்று கேட்டார் பெரியவா.
உத்ஸவம் என்று பெரியவா சொல்கிறாரே… அது என்ன உத்ஸவம் என்றெல்லாம் கேட்கத் தோன்றாமல், ‘பெரியவா ஆசியோடு நிச்சயம் உத்ஸவத்துக்கு வரேன்‘ என்று பதிலளித்தாள் பட்டென்று.
வலது கரத்தை ஆசி கூறுவது போல் உயர்த்தி விட்டு, அந்தப் பரப்பிரம்மம் வந்த சுவட்டிலேயே மறைந்து போனது.
சட்டென்று கண் விழித்த மாணவிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. ‘மீண்டும் பெரியவா நம் கனவில் வந்து இந்த அளவுக்கு ஆட்கொள்கிறாரே… உத்ஸவத்துக்கு வரச் சொல்கிறாரே?’ என்றெல்லாம் குதூகலித்தாள்.
சட்டென்று ஒரு கணம் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது – ‘ஆமாம்… உத்ஸவம் என்று சொன்னாரே? அது என்ன உத்ஸவம்?
காஞ்சியில் உத்ஸவம் இல்லாத நாள் ஏது? பெரியவாளும் விளக்கமாகச் சொல்லவில்லை… நானும் கனவில் விவரம் கேட்காமல் போய் விட்டேனே?’ என்று குழம்பினாள். பிறகு, ‘சரி… கனவில் வந்து நம்மை ஆட்கொண்ட மகானுக்குத் தெரியாதா, எந்த வேளையில் என்னைக் காஞ்சிபுரத்துக்கு அழைக்க வேண்டும்‘ என்று தெளிந்தாள்.
அடுத்த நாளே இந்த சந்தேகத்துக்கான விடை கிடைத்தது. அனைத்தையும் நிகழ்த்துபவர் அந்தக் காருண்யமூர்த்திதானே!
அந்த மாணவியின் பெரியம்மா திடீரென்று இவர் வீட்டுக்கு வந்தார். “ஏண்டீ… மெட்ராஸ்ல ஒரு கல்யாணத்துக்குப் போகணும்… கார்லதான் போகப் போறேன். நீயும் எங்கூடத் துணைக்கு வாயேன். போற வழியில் காஞ்சிபுரம் போயிட்டு, மகா பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாம்னு இருக்கேன்” என்று மிகவும் இயல்பாகப் பேச… மாணவி வியந்து போனார். ‘பெரியம்மா செல்கிற ஒரு திருமணத்துக்கு என்னை ஏன் அழைக்க வேண்டும்? அதுவும் போகிற வழியில் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைத் தரிசிக்கலாம் என்று ஏன் சொல்ல வேண்டும்? இதுதான் கலியுக தெய்வத்தின் அழைப்பா?’ என்று பூரித்துப் போனார் மாணவி.
“என்னடீ நான் கேட்டுட்டே இருக்கேன்… நீ பதில் சொல்லாமலே இருக்கே?” என்று பெரியம்மா மீண்டும் கேட்கவும்தான், மாணவி நிதானத்துக்கு வந்து, “நானும் வர்றேன் பெரியம்மா” என்றார் உற்சாகமாக.
அடுத்த நாள் காலை அந்த மாணவியும், பெரியம்மாவும் காஞ்சிபுரத்தை அடைந்து ஸ்ரீமடத்துக்குப் போனார்கள். ‘மகா பெரியவாளைத் தரிசிக்கப் போகிறேன்‘ என்ற சந்தோஷம் மாணவியின் மனதில் ஆனந்த அலைகளை எழுப்பி இருந்தது.
கூட்டம் அவ்வளவாக இருக்காது… மகா பெரியவாளை நிதானமாக தரிசிக்கலாம் என்ற எண்ணத்தில் ஸ்ரீமடத்தின் வாசலை இவர்கள் அடைந்தபோது, அங்கே சற்றும் எதிர்பாராமல் ஏகக் கூட்டம். ஸ்ரீமடத்தின் வாசலில் அம்பாள் காமாட்சி திருவீதி உலாவில் இருந்தாள். மேளமும் தாளமும் அமர்க்களப்பட… அந்த வேளையில் அலங்கார பூஷிதையாக அன்னை காமாட்சியைப் பார்த்தவுடன் மாணவியின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
இதை அடுத்து மாணவி தன் பார்வையைத் திருப்ப… அங்கே மகா பெரியவா தரிசனம் தந்து கொண்டிருந்தார். மகானுடன் ஸ்ரீமடத்தின் மற்ற இரண்டு ஆச்சார்யர்களும் உடன் இருந்தனர்.
‘ஆஹா… என்ன விசேஷம் இன்றைய தினம்? மகா பெரியவாளைத் தரிசிக்க வந்தால், அம்பிகையும் சேர்ந்து தரிசனம் தருகிறாளே?’ என்று நெகிழ்ந்து, அருகில் இருந்த ஒரு பெண்மணியிடம், “இன்னிக்கு என்ன ஸ்பெஷல் மாமி? காமாட்சி வீதி வலம் வர்றாளே?” என்று கேட்டாள்.
“ஏண்டீயம்மா… தெரியாதா நோக்கு? காமாட்சி கோயில்ல உத்ஸவம் ஆரம்பிச்சிருக்கே… அதான் அம்பாள் வலம் வர்றா” என்று சொன்னாரே பார்க்கணும்!
மாணவி பிரமித்துப் போனார்.
சட்டென்று காமாட்சியைத் தரிசித்து, மகா பெரியவா இருந்த இடத்தைப் பார்த்தார்.
‘உத்ஸவத்க்கு வரியா?’ என்று அவர் கனவில் கேட்டது, அவள் மனதில் மீண்டும் ரீங்காரமிட்டது.
இதுதானே தெய்வத்தின் அருள். சங்கல்பம்!
எந்த வேளையில் வர வேண்டும் என்று மகா பெரியவா சொன்னாரோ, அதே வேளையில் வந்தாயிற்றே!
பொங்கிய கண்ணீரையும் கட்டுப்படுத்தாமல், கூடி இருந்த கூட்டத்தினரையும் பொருட்படுத்தாமல் அந்த வீதியிலேயே விழுந்து நமஸ்கரித்து வணங்கினாள் மாணவி!
ஒரே வேளையில் உத்ஸவ காமாட்சியையும் உலகமே போற்றும் மகானையும் சேர்த்து வணங்கும் பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்?!