ஒரு பக்தனுக்கு அருள் வழங்க வேண்டும் என்பது உறுதியானால் – தீர்மானமானால், அந்த அருளைப் பக்தனுக்கு வழங்குவதில் தெய்வங்களுக்கும் மகான்களுக்கும் எந்த ஒரு பேதமும் கிடையாது. இது தொடர்பான ஏராளமான கதைகளை புராணங்களில் நாம் படிக்கலாம்.
பகவானுக்கும் மகானுக்கும் பக்தன் தன் மீது எந்த அளவு பக்தி கொண்டுள்ளான் என்பதைத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் சேர்த்துள்ள சொத்தையோ, கல்வி அறிவையோ, சமுதாயத்தில் உள்ள அந்தஸ்தையோ பார்ப்பதில்லை.
காஞ்சி மகா பெரியவாளுக்கு எல்லோர் மேலும் பரிவு, கருணை, அன்பு உண்டு.
ஏழை, பணக்காரன்; படித்தவன், படிக்காதவன்; நகரத்து ஆசாமி, கிராமத்து ஆசாமி என்கிற வித்தியாசம் ஏதும் அவரிடம் கிடையாது. சொல்லப்போனால் படிப்பறிவு இல்லாத கிராமத்து மக்களிடமும், அன்னை பராசக்தியின் அம்சம் என்று போற்றப்படும் பெண்டிர்களிடமும் மகா பெரியவா கொண்டிருந்த அன்பும் கருணையும் அளவிடற்கரியது.
காஞ்சி ஸ்ரீமடத்தில் அப்போது ஒரு பணியாளர் ஊழியம் புரிந்து கொண்டிருந்தார். ஸ்ரீமடத்தின் பகுதிகளைக் கூட்டிச் சுத்தம் செய்வது அவருடைய பிரதான வேலை. அவருக்கு உதவியாக அவரது மனைவியும் அங்கேயே பணி புரிந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இந்த இரண்டு குழந்தைகளுடன் இவர்கள் குடும்பமே ஸ்ரீமடத்தில் தங்கி பணி புரிந்து வந்தது.
தங்களது தந்தையும் தாயும் ஸ்ரீமடத்தில் துப்புரவுப் பணிகளில் மும்முரமாக இருக்கும்போது குழந்தைகள் இருவரும் ஸ்ரீமடத்துக்குள் சுற்றுச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும். குழந்தைகள் இப்படி ஓடியாடி விளையாடுவது தங்களின் துப்புரவுப் பணிக்கு இடைஞ்சலாகவோ, அல்லது ஸ்ரீமடத்தில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடைஞ்சலாகவோ, இதர சிப்பந்திகளுக்குத் தொந்தரவாகவோ இருந்தால், ஒரு அதட்டல் போட்டு அவர்களைக் கண்டித்து விடும் கறார் பழக்கம் தந்தைக்கு இருந்து வந்தது. சில வேளைகளில் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்.
ஒரு நாள் துப்புரவுப் பணியில் இருக்கும் அந்தத் தந்தை ஸ்ரீமடத்தைக் கூட்டிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவனுடைய பெண் குழந்தை ஒன்று வழக்கம்போல் அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. இன்னொரு குழந்தை வேறு ஏதோ ஒரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது.
ஓரிரு முறை கண்டித்தும் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் ஓடியாடி விளையாடியதைப் பார்த்துக் கோபமான தந்தை, “தொடப்பக் கட்டை… ஒரு தடவை சொன்னா கேக்க மாட்டியா?” என்று லேசாகக் கையை ஓங்கி அடிக்கிற பாவனையில் திட்டி விட்டார்.
குழந்தை மிரண்டு ஓர் ஓரத்தில் பதுங்கி நின்றது. அந்த நேரம் பார்த்து மகா பெரியவா தன் சிஷ்யர்களுடன் இந்த ஊழியரைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்.
‘தொடப்பக்கட்டை‘ என்ற வார்த்தை தன் காதில் விழுந்தவுடன் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தவர் அப்படியே நின்று விட்டார். திரும்பிப் பார்த்தார். ஒரு சிப்பந்தியை விட்டு அந்தப் பணியாளரைத் தன்னிடம் அழைத்து வரச் சொன்னார்.
‘தன் மகளைத் தான் திட்டியதை மகா பெரியவா கவனித்து விட்டார். இது விஷயமாகத் தன்னைக் கண்டிக்கவே அழைக்கிறார்‘ என்று பயந்த பணியாளர் குனிந்த தலையுடன் மகா பெரியவா அருகில் வந்தார். எதுவும் பேசாமல் மரியாதையை வெளிப்படுத்தும் வண்ணம் வாயைப் பொத்திய நிலையில் நின்று கொண்டிருந்தார்.
மகா பெரியவா அந்தப் பணியாளரைப் பார்த்துக் கேட்டார்: “இப்ப திட்டினியே… அந்தப் பொண்ணுக்கு என்ன பேரு?”
“லட்சுமிங்க சாமீ…”
“இப்படி அழகான ஒரு பேரை வெச்சுட்டு அந்தக் குழந்தையை இப்படிக் கூப்பிடறியே… இது நன்னாருக்கா? ஒரு தெய்வத்தோட பேரை உம் பொண்ணுக்கு வெச்சிருக்கே… என்ன அழகான பேரு… அதை விட்டுட்டுத் தொடப்பக்கட்டைங்கறியே… ஒரு பொண் குழந்தையை அப்படிச் சொல்லலாமா?
தொடப்பக்கட்டைன்னா ஏதோ வேண்டாத பொருள், அசூயைப்படற பொருள்ங்கிற மாதிரி அவளை அப்படித் திட்டறியே… எத்தனை பெரிய பங்களாவா இருந்தாலும் துடைப்பக்கட்டை இல்லேன்னா அந்த வீடே நாறிப் போயிடும் தெரியுமா?
ஏழை, பணக்காரர் – யார் வீடா இருந்தாலும் சரி… துடைப்பக்கட்டை இல்லேன்னா வீடு பாழாயிடும். எனவே, இதுபோல வார்த்தை சொல்லித் திட்டாதே… குழந்தைங்ககிட்ட சிடுசிடுக்காதே… வாய்க்கு அழகா லட்சுமின்னு கூப்பிடு. உம் பொண்ணும் உங்கிட்ட வருவா… அந்த லட்சுமிதேவியும் உங்கிட்ட வருவா” என்று சொல்ல… பணியாளர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
அதன் பின் மகா பெரியவா அந்த இடத்தை விட்டு ஒரு புயல் போல் நகர்ந்தார்.