இப்போது நீங்கள் படிக்கப் போகிற இந்த சுவையான அனுபவத்தின் நாயகருக்கு அப்போது வயது ஆறு இருக்கும். தஞ்சை மாவட்டப் பகுதிகளில் «க்ஷத்ராடனம் சென்ற மகா பெரியவா அப்போது குத்தாலத்துக்கு அருகில் முருகமங்கலம் என்கிற கிராமத்தில் முகாம் இருந்தார்.
இனி அந்த அன்பரே தன் அனுபவத்தைச் சொல்வதைக் கேட்போம்.
“எங்க குடும்பத்துக்கு மகா பெரியவாதான் எல்லாம். அவர்மேல் எல்லோருக்கும் அப்படி ஒரு அத்யந்த பக்தி காலாகாலத்துக்கும் இருந்து வந்தது.
அப்போது எனக்கு ஆறு வயது. குத்தாலத்துக்குப் பக்கத்துல முருகமங்கலம் என்கிற கிராமத்தில் மகா பெரியவா முகாம்.
பொதுவா, மகா பெரியவா எங்கே யாத்திரை போனாலும் கூடிய மட்டும் எங்க குடும்பத்தில் இருந்து போய் கிராமம் கிராமமா தரிசனம் பண்ணுவோம். எங்க வீட்டில் இருந்து மகா பெரியவா தரிசனத்துக்கு யார் போனாலும் அவா கூட நானும் ஒட்டிண்டு போயிடுவேன். அந்த சின்ன வயசுல அப்படி ஒரு பெரியவா பக்தி எனக்கு எப்படி வந்ததுன்னு காரணம் சொல்லத் தெரியலை. காரணம் பெரியவாகிட்ட இருந்த ஆகர்ஷண சக்தின்னு சொல்லலாம்.
அந்த வகையில் என் வீட்டுப் பெரியோர்களுடன் நானும் முருகமங்கலம் போயிருந்தேன். என் அத்தையோட பெண் வீடு அங்கேதான் இருக்கு. அன்னிக்கு அவா கிரஹத்துல பெரியவாளுக்கு பிக்ஷ£வந்தனம் பண்றதா ஏற்பாடு ஆகி இருந்தது. அதனால், அந்த மகானை தரிசித்து ஆசி பெறுவதற்காக சொந்த பந்தம் எல்லாரும் அங்கே குவிஞ்சிருந்தோம். பிக்ஷ£வந்தனமும் வெகு சிறப்பா முடிஞ்சுது.
அந்த முகாமின்போது ஒரு நாள் காலை ஏழு மணி இருக்கும். மகா பெரியவா அமர்ந்திருந்த இடத்தின் குறுக்கே எங்கோ ஓடிக் கொண்டிருந்த என்னை ஒரு சொடக்குப் போட்டு என்னைக் கூப்பிட்டார். ‘உம்மாச்சி தாத்தா கூப்பிடறாரே‘ என்று ஓடிப் போய் அவர் அருகில் பவ்யமாக நின்றேன்.
‘ஒன்னை அடிக்கடி இங்கே பாக்கறேனே… நீ யாரு? இங்கே எப்படி வந்தே?’ என்று மகா பெரியவா கேட்டார்.
அதற்கு, ‘இது என் சொந்தக்கார ஊர்‘ என்று சொல்லி, என்ன சொந்தம் என்பதை ஓரளவு எனக்குத் தெரிந்த அளவுக்குச் சொன்னேன்.
எல்லாவற்றையும் கேட்ட பெரியவா என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தார். பிறகு, ‘ஒனக்குப் பூணூல் போட்டாச்சா?’ என்று கேட்டார்.
‘இன்னும் போடல… இனிமேதான் போடப் போறா.’
‘ஸ்லோகமெல்லாம் சொல்லுவியா?’
‘ஓ… விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லுவேன்.’
‘என்னை ஒனக்குப் புடிக்கும்தானே…?’
‘ஆமா…’ – புருவம் உயர்த்தி அழகாகச் சொன்னேன்.
‘நான் ஒண்ணு சொன்னா நீ செய்வியா?’
‘ம்ம்..’ என்று சொல்லி உற்சாகமாகத் தலை ஆட்டினேன்.
‘தோ, அங்க ஒத்தன் ஒக்காந்துண்டு இருக்கான் பாரு…’ என்று பெரியவா எனக்கு யாரையோ சுட்டிக் காட்டினார்.
பெரியவா காட்டிய திசையில் என் பார்வையை ஓட விட்டேன். அங்கே – என்னைவிட நாலைந்து வயது அதிகம் இருந்த ஒரு பையன் பெரியவா பூஜைக்குத் தேவையான விளக்கு இத்யாதிகளை எல்லாம் சிரத்தையாகத் துடைத்துக் கொண்டிருந்தான். இடுப்பில் ஒரு வேஷ்டி. தோளில் கசங்கிக் போன ஒரு மேல்துண்டு. அவனுக்கு உபவீதம் ஆகி இருந்தது. அதாவது, பூணூல் போட்டிருந்தான். அவனைப் பார்த்தபடியே, ‘ஆமா… சிரத்தையா வேலை செஞ்சிண்டிருக்கான் பெரியவா. நான் என்ன பண்ணணும்?’ என்று கேட்டேன்.
இதற்கு மகா பெரியவா, ‘அவன்கிட்ட போயி ‘வெவ்வவ்வெவ்வே‘னு அழகு காமிச்சுட்டு வா‘ என்று என்னிடம் மழலைத்தனமாகச் சொல்லி, எப்படி அழகு காண்பிக்க வேண்டும் என்பதைப் பெரியவாளே ஸ்பஷ்டமாக செய்து காண்பித்தார்.
சிறுவனான எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம் – அடுத்தவர் வம்புக்கு நான் போவதே இல்லை. அப்படிப் போனால், வீணான பிரச்னைகள் வந்து சிக்கலில் மாட்டிக் கொள்வேன் என்று வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லிக் கொடுத்த பாடம்தான் இது. ஆனால், ஜகத்குருவான மகா பெரியவா மெனக்கெட்டு என்னைக் கூப்பிட்டு, அழகு காட்டிவிட்டு வரும்படி சொல்கிறார்.
மகா பெரியவா என்ன சொன்னாலும், அவர் சொல்வதை சிரமேற்கொண்டு செய்யலாம்தான். இருந்தாலும், குழந்தைத்தனமான ஒரு பயம் என்னைத் தடுத்தது. தயங்கினேன்.
பெரியவாளே என்னிடம், ‘என்ன… பயமா?’ என்பது மாதிரி சைகையில் கேட்டார்.
அதற்கு நான், ‘பெரியவா… நான் இந்த அண்ணாவைப் பார்த்து எப்படி அழகு காட்டுவேன்? அவன் என்னைவிட வயதில் பெரியவன். அவனுக்குப் பூணூல்லாம் போட்டாச்சு. வேணாம் பெரியவா‘ என்று பதில் சொன்னேன்.
பெரியவா விடுகிற மாதிரி தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து என்னை விட வயதில் குறைந்த ஒரு குழந்தை அந்தப் பக்கமாகத் தட்டுத்தடுமாறி நடந்து போய்க் கொண்டிருந்தது. ‘சரி… விளக்கு தொடைச்சிண்டு இருக்கிறவனை ‘அண்ணா‘ன்னு சொல்லி பயப்படறே… தோ, போறான் பாரு… அவன் ஒன்னைவிட சின்னக் குழந்தை. ஒடனே ஓடிப் போய் அவனுக்கு அழகு காட்டிட்டு வா‘ என்றார் சட்டென்று.
கடந்து போகிற அந்தக் குழந்தையைப் பார்த்தேன். பாவம், விழிகளை உருட்டிக் கொண்டு எங்கோ யாரையோ தேடியபடி (இதுவரை) அழாமல் போய்க் கொண்டிருந்தது. எனக்கு மனம் வரவில்லை. ‘வேணாம் பெரியவா… இது சின்னக் குழந்தையா இருக்கு. திடீர்னு அதுக்கு முன்னாடி போய் நின்னு அழகு காமிச்சா, அது ‘ஓ‘ன்னு அழ ஆரம்பிச்சுடும்‘ என்று முதலில் மறுத்த அதே பதிலை வேறு விதமாகச் சொன்னேன். தவிர, வேறு யாராவது அந்த வேளையில் என்னைப் பார்த்து விட்டால், சிறு குழந்தையிடம் ஏதோ சில்மிஷம் செய்கிறான் என்று வசைபாடப் போகிறார்களே என்கிற பயம் வேறு.
மகா பெரியவாளுக்கு இருந்த நகைச்சுவை உணர்வு அப்போது எனக்குத் தெரியவும் புரியவும் வாய்ப்பில்லை. பின்னாளில்தான், அவர் இப்படிப் பலரிடமும் விளையாடுவார் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் படித்தும், கேட்டும் அறிந்து கொண்டேன். அப்படி அருமையாக ஹாஸ்யம் பண்ணுவார் பெரியவா.
விஷயத்துக்கு வருகிறேன். மகா பெரியவா விளையாட்டு இன்னும் முடியவில்லை.
அப்போது மூன்றாவதாக யாரை எனக்குக் கைகாண்பிக்கலாம் என்று மகா பெரியவா தேடிக் கொண்டிருந்தார் போலிருக்கிறது.
ஸ்ரீமடத்து முகாமின் பாராக்காரர் அப்போது அங்கே தற்செயலாகக் கடந்து போனார். மீசை வைத்துக் கொண்டு, பிறரை மிரட்டுகிற வகையில் தோளில் துப்பாக்கியை வேறு தொங்க விட்டபடி போய்க் கொண்டிருந்தார்.
அப்போது மகா பெரியவா, ‘தோ போறானே… மடத்து பாராக்காரன்… குடுகுடுன்னு ஓடி அவன்கிட்ட போய் அவனுக்கு அழகு காமிச்சுட்டு வா‘ என்றார் கொஞ்சமும் அசராமல்.
மகா பெரியவா விடறதா இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். இருந்தாலும், நானும் சளைக்காமல், ‘வேண்டாம் பெரியவா… அவர் பெரிய துப்பாக்கி வெச்சிண்டிருக்கார். நான் அழகு காமிச்சா துப்பாக்கியை எடுத்து என்னை சுட்டுடப் போறார். எனக்குப் பயமா இருக்கு‘ என்று தப்ப முயன்றேன்.
மகா பெரியவா விடுவாளா? ‘நானும் சொல்லிண்டே இருக்கேன். நீ யாருக்கும் அழகு காமிக்க மாட்டேங்கறே… போகட்டும். இப்ப நான் சொல்லப் போறதை நீ தட்டவே கூடாது‘ என்று கறாராகச் சொன்னார்.
முகத்தில் ஒரு வித பயம் – இப்ப யாரைக் கைநீட்டிக் காணபிக்கப் போகிறாரோ என்று. இருந்தாலும், ‘சொல்லுங்கோ பெரியவா‘ என்றேன்.
நீ வேற யாரைப் பாத்தும் அழகு காட்ட வேண்டாம். என் முகத்தைப் பாத்து எனக்கு அழகு காட்டு‘ என்று சொன்னாரே பார்க்கணும்!
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘அது பெரிய தப்பு பெரியவா. நீங்க லோகத்துக்கே குரு. ஒங்களை தரிசனம் பண்றதுக்காக எப்பேர்ப்பட்டவாள்லாம் மணிக்கணக்கா, நாட்கணக்கா காத்துண்டு இருக்கா. ஒங்களைப் பார்த்து நான் அழகு காட்டறதாவது‘ என்று சமாளிக்க… பெரியவா ஒரு சர்ப்பம் மாதிரி எழுந்து ஸ்நானம் செய்யப் போய் விட்டார்.
தனது ஸ்நானம் முடித்து சிவ சொரூபமாக பெரியவா வந்ததும், அவர் கண்களில் நான்தான் பட்டேன்.
மீண்டும் என்னைத் தன் அருகே அழைத்தார்.
‘வேற என்ன பண்றே நீ?’ என்று பெரியவா கேட்டார் என்னைப் பார்த்து.
‘ஸ்ரீராமஜயம் எழுதுவேன் பெரியவா‘ என்றேன் குதூகலமாக.
‘அப்படியா…’ என்று பிரகாசமானவர், ‘அந்த நோட்டைக் கைவசம் வெச்சுண்டிருக்கியா இங்க?’ என்று கேட்டார். ‘இருக்கு பெரியவா‘ என்று சொல்லி ஓடிப் போய் ஸ்ரீராமஜயம் எழுதிய நோட்டுகளை எடுத்துக் கொண்டு என் அக்காவையும் துணைக்குக் கூட்டி வந்து பெரியவா முன் நின்றேன்.
அந்த நோட்டுகளை வாங்கிப் பிரித்துப் பார்த்து விட்டு என்னை ஆசிர்வதித்தவர், கையோடு இரு வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொடுத்தார்.
அதன் பின் என்னை அருகே உட்கார வைத்து, சிறுவனான எனக்குப் பல அறிவுரைகளை வழங்கினார்.
‘சாஸ்திரம் என்ன சொல்றதோ, அதுபடி நட… ஆத்துல பெரியவா சொன்னா எதையும் தட்டாத… சோப்பு போட்டுக் குளிக்காத…’ என்று பெரியவா சொன்ன விஷயங்கள் அனைத்தும் இன்றும் தெளிவாக என் நினைவில் நிற்கின்றன.
அன்று பெரியவா சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் மதித்து நடந்த காரணத்தால், அவரது ஆசியும் எனக்குப் பரிபூரணமாக இருந்தது என்றுதான் சொல்வேன்.
அதோடு, மகா பெரியவா அருளால் என் வாழ்க்கையில் எனக்கு ஒரு நல்ல குருஜி கிடைத்தார். மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் பக்தன் நான். இதெல்லாம் மகா பெரியவாளை வணங்கி, அவரது அறிவுரைகளைக் கேட்டு நடந்ததால் அந்த ஜகத்குரு எனக்குக் கொடுத்த பிச்சையாக நினைத்து வாழ்ந்து வருகிறேன்” என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார் அந்த பக்தர்.
நம் வாழ்வில் கலியுக தெய்வமாக – கண் கண்ட தெய்வமாக இருந்து நம்மை எல்லாம் ஆசிர்வதித்து அருள்பவர் காஞ்சி மகா பெரியவா. அவரது திருப்பாதங்களை சரண் புகுந்து, வாழ்வில் பல வளங்களைப் பெறுவோம். வாழ்வாங்கு வாழ்வோம்