காஞ்சி மகா பெரியவாளை தரிசிப்பதற்குத் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அடிக்கடி வந்த வண்ணம் இருப்பார்கள்.
ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வருபவர்களிடம் அவரவர்களது பாஷையிலேயே குசலமெல்லாம் விசாரித்து, பதில் சொல்லி, ஆசி வழங்கி மகான் அனுப்புவது அதி அற்புதம்! தங்கள் பாஷையிலேயே பேசி ஆசி வழங்குகிறாரே என்று பலரும் பிரமித்து நிற்பார்கள்.
மகா ஸ்வாமிகளுக்கு பதினெட்டு பாஷைகள் தெரியும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள்.
இப்படித்தான் ஒரு முறை கேரளாவில் இருந்து ஒரு பெண்மணி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் பெரியவாளைத் தரிசிப்பதற்காகக் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். இந்தப் பெண்மணியைப் பார்த்தால், எவரது கண்களும் கலங்கத்தான் செய்யும். காரணம் – அந்தக் கேரளப் பெண்மணிக்குப் பார்வை இல்லை. தன் கணவனின் உதவியுடன் ஸ்ரீமடத்துக்குள் நுழைந்த அந்தப் பெண்மணி தான் கொண்டு வந்திருந்த பழங்கள் போன்ற காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் தன் கணவர் உதவியுடன் வைத்தார். பிறகு, அவரே பெண்மணியின் கையைப் பிடித்து மகா பெரியவா அமர்ந்திருந்த திருச்சந்நிதியின் முன்னால் அவரது பார்வை படும்படியான இடத்தில் சம்மணமிட்டு அமர வைத்தார்.
இந்தப் பெண்மணிக்கு எப்படிப் பார்வை போனது?
யார் சொல்லி இங்கே வந்திருக்கிறார்கள்?
இந்தப் பெண்மணிக்கு என்ன பிரார்த்தனை?
– இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றன அல்லவா?
தற்போது ஒரு கைக்குழந்தையுடன் இங்கு வந்திருக்கிறாரே, கேரளப் பெண்மணி..! இந்தக் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்திருந்தபோது ஒரு நாள் வீட்டுக்குள் புழங்கிக் கொண்டிருந்தபோது தரையில் தடுக்கி விழுந்து விட்டாள். அப்படி விழுந்தபோது இவரது தலையில் பலமாக அடி பட்டு விட்டது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அப்போதைக்கு ஓரளவு சரியானார்.
ஆனால், இந்தத் துயர சம்பவத்தில் இருந்து ஒரு விதமான இழுப்பு நோய்க்கு ஆளாகி விட்டார். அது மட்டுமல்ல… இதன் காரணமாக இவரது கண் பார்வையும் திடீரென பாதிக்கப்பட்டு விட்டது.
எத்தனையோ மருத்துவமனைகள் போய், பல வித சோதனைகள் செய்தாகி விட்டது. பணமும் நேரமும் செலவானதே தவிர, பலன் ஒன்றும் விளையவில்லை. திடீரென வந்த இழுப்பு நோயாவது ஓரளவு கட்டுக்குள் வந்தது. அதாவது, இழுப்பு வருவது குறைந்து போனது. ஆனால், இழந்த பார்வை திரும்ப வரவே இல்லை.
உரிய காலத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெய்வத்தின் அனுக்ரஹத்தால் அழகான குழந்தை பிறந்தது. ஆனால், என்ன ஒரு துயரம்… பெற்றெடுத்த தாயாரால் தன் சிசுவைப் பார்க்க முடியவில்லை. யோசித்துப் பாருங்கள்… அந்தத் தாய்க்கு எப்படிப்பட்ட ஒரு வேதனை அடைந்திருப்பாள்! இப்பேர்ப்பட்ட ஒரு துயரம் எவருக்குமே வரக் கூடாது.
மருகிப் போனார் அந்தப் பெண்மணி. நாட்கள் ஓடின. ‘பார்வை மீண்டும் பெறுவதற்காக மருத்துவத் துறையில் ஆன மட்டும் போராடி விட்டோம். பலன் இல்லை. ஆன்மிக ரீதியில் ஏதாவது பலன் கிடைக்குமா, பார்ப்போம்‘ என்று அந்தப் பெண்மணியில் கணவர் தீர்மானித்தார். உடனே தன் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு நம்பூதிரியை வீட்டுக்கு அழைத்து பிரஸ்னம் பார்த்திருக்கிறார்.
பார்வையை இழந்த அந்தப் பெண்மணியின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, வேறு சில வழிபாடுகளையும் செய்து விட்டு, “இறைவனோட அருள் இந்தப் பெண்மணிக்கு இருக்கு. எப்படி ஒரு விபத்துல இந்தப் பார்வை பறி போச்சோ, அதே மாதிரி ஒரு அனுக்ரஹத்துல திரும்பக் கிடைச்சிடும். யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று சொன்ன நம்பூதிரி,
“தெய்வ பலம் அவசியம் தேவைப்படுது. அதனால, நிறைய கோயில்களுக்குப் போகணும். குருவாயூர் கோயில்ல உங்க யாத்திரையை ஆரம்பியுங்க. அப்படியே தமிழ்நாட்டுக்குள்ள போய் பழநி, திருச்சி, கும்பகோணம், வைத்தீஸ்வரன்கோவில்னு எவ்வளவு கோயில்களை தரிசிக்க முடியுமோ, அத்தனை கோயில்களையும் தரிசியுங்க. எல்லா கோயில்லயும் நல்லா வேண்டிக்குங்க. எங்கெங்கு முடியுமோ, அந்தந்தக் கோயில்ல இருக்கிற புனித தீர்த்தத்துல நீராடுங்க. அது ஒரு பரிகாரமா அமையும்” என்று நீளமான விளக்கத்தைச் சொன்னார்.
நம்பூதிரி சொன்னது அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதன் பின் ஒரு சுப தினத்தில் கணவன், மனைவி இருவரும் தங்கள் கைக்குழந்தையுடன் யாத்திரையைத் துவங்கினர். நம்பூதிரி சொன்னபடி குருவாயூரில் துவங்கியது யாத்திரை. அங்கு குடி கொண்ட ஸ்ரீகிருஷ்ணனிடம் தங்கள் பிரார்த்தனையை வைத்து ஒவ்வொரு ஊராகக் கிளம்பினார்கள்.
பழநியில் தரிசனத்தை முடித்து சோழ நாட்டில் உள்ள முக்கிய «க்ஷத்திரங்களை ஆத்மார்த்தமாகத் தரிசித்து வந்தவர்கள், ஒரு சுப தினத்தில் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வந்தார்கள்.
அங்கு குடி கொண்ட ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமியிடம் கணவனும் மனைவியும் தங்கள் பிரார்த்தனையை வைத்து மனமுருகக் கும்பிட்டார்கள். ஈசன் சந்நிதியில் ஆரத்தி காண்பித்து விட்டு, அந்தத் தட்டை எடுத்து வந்து கேரளப் பெண்மணியின் முன்னால் நீட்டினார் அர்ச்சகர்.
தனக்கு முன் நீட்டியவுடன், கையைத் துழாவி கற்பூர ஜோதியை ஒற்றிக் கொண்டு, அந்தத் தட்டில் ஒரு நூறு ரூபாய் தாளைக் காணிக்கையாகப் போட்டார் கேரளப் பெண்மணி.
அந்தக் காலத்தில் முழு நூறு ரூபாயை ஆரத்தித் தட்டில் இடுபவர்கள் குறைவு என்பதால், இதைப் பார்த்த அர்ச்சகர் பிரமித்தார். ‘ஒருவேளை பத்து ரூபாயைப் போடுவதற்குப் பதில் நூறு ரூபாயைப் போட்டு விட்டாரோ… பாவம் பார்வை வேறு தெரியாத பெண்மணியாக இருக்கிறார்‘ என்று தீர்மானித்து, அவரைப் பார்த்து, “அம்மா… இந்தாருங்கள்… தாங்கள் பத்து ரூபாய் என்று தவறுதலாக நூறு ரூபாயைப் போட்டு விட்டீர்கள் போலிருக்கிறது” என்று நீட்டினார்.
அவரது நற்குணத்தை அறிந்து வியந்த அந்தப் பெண்மணி, “இல்லை குருக்களே… இந்த வைத்தீஸ்வர பெருமானிடம் மனமுருகி பிரார்த்தித்த மகிழ்ச்சியில் – தெரிந்துதான் போட்டேன். காலம் முழுக்க சிவ கைங்கர்யம் செய்யும் தங்களுக்கு எனது காணிக்கை என்பது ஒரு சொற்ப தொகைதான்” என்று உணர்ச்சிபூர்வமாகச் சொல்ல… அர்ச்சகர் நெக்குருகிப் போனார். பிறகு, அவருக்கு எதனால் பார்வை பறி போனது என்பது போன்ற விவரங்களைக் கேட்டார். அந்தப் பெண்மணியும் இது தொடர்பான அனைத்து சமாசாரங்களையும் விரிவாகச் சொன்னார்.
அனைத்தையும் கேட்ட அர்ச்சகர், “காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துல மகா பெரியவா இருப்பார். நடமாடும் செய்வம். கலியுக தெய்வம். ஒரு எட்டு அங்கயும் போயி, அவரை தரிசனம் பண்ணுங்கோ” என்று பேச்சோடு பேச்சாகச் சொல்லி இருக்கிறார். அதோடு, மகா பெரியவா யார் என்பது அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அவரது தோற்றம் மற்றும் மகிமைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
வைத்தீஸ்வரன்கோவில் தரிசனம் முடிந்த பின் அங்கிருந்து சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்கி, காஞ்சிபுரம் சென்றனர் கேரளத் தம்பதியர்.
இந்தப் பெண்மணி ஸ்ரீமடம் சென்ற வேளையில் அதிக பக்தர்கள் அங்கே இல்லை. பெரியவாளுக்காகத் தான் வாங்கி வந்திருந்த பழங்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு கணவரின் உதவியுடன் எதிரே ஓரிடத்தில் அமர்ந்தார் என்று கட்டுரையின் துவக்கத்தில் சொல்லி இருந்தேன் இல்லையா?
தரிசனத்துக்காக வந்திருந்த ஒரு சில பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டு, இந்தப் பெண்மணியிடன் யார், என்ன என்கிற விவரங்களைக் கேட்டார் மகா பெரியவா.
தனது பார்வை பறி போன பின் «க்ஷத்ராடனம் சென்று கொண்டிருக்கும் விவரம் பற்றியும், வைத்தீஸ்வரன்கோவில் அர்ச்சகர் சொன்னதன்படி மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தையும் சொன்னார் கேரளப் பெண்மணி. அந்தப் பரப்பிரம்மத்தின் முன்னால் அமர்ந்து தன் நிலையைப் பற்றி விவரித்துச் சொல்லும்போது அவரையும் அறியாமல் கண்கள் கலங்கி விட்டன.
நம்பி வந்தவர்களை மகான் கைவிட்டது உண்டா? இந்தப் பெண்மணிக்குத் தன் இன்னருளைப் பொழிய மகான் தீர்மானித்து விட்டார்.
மகா பெரியவா அப்போது ஓர் அற்புதம் நிகழ்த்தினார். அருகில் இருந்த ஒரு டார்ச் லைட்டைத் தன் கையில் எடுத்துக் கொண்டார் பெரியவா. கேரளப் பெண்மணியின் கணவரை அழைத்து, “ஒங்க பார்யாளை (மனைவியை) என்னைப் பார்க்கச் சொல்லுங்கோ… நான் தெரியறேனான்னு கேளுங்கோ” என்று சொல்லிக் கொண்டே, தன் முகத்தில் டார்ச் லைட் ஒளியைப் பாய்ச்சினார்.
இந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிய மறுகணம் அந்தக் கேரளப் பெண்மணியின் முகம் பிரகாசம் அடைந்தது. கண்களில் இருந்து பொலபொலவென நீர் சிந்தியது. கைகள் இரண்டையும் கூப்பி மகா பெரியவாளைப் பார்த்தபடி, “இதோ… மகா பெரியவா என் கண்களுக்குத் தெரியறேளே… வைத்தீஸ்வரன்கோவில் குருக்கள் உங்களைப் பத்தி என்ன அடையாளம் சொன்னாரோ, அதை நான் என் கண்களால தரிசிக்கிறேனே…” என்று சொன்னபடி அந்த மகானைப் பார்த்துக் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டார். பரவசம் பொங்கக் கேவினாள். போதும் போதும் என்கிற வரை பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தாள்.
ஆம்! அந்த கேரளப் பெண்மணிக்கு மகா பெரியவா திருச்சந்நிதி முன்னால் – எப்போதோ இழந்த பார்வை திரும்பி விட்டது. கணவரை ஆதுரத்துடன் பார்த்து இருவரும் சேர்ந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தனர். குழந்தையை எடுத்துக் கொஞ்சினாள். தன் கையால் பெரியவாளுக்கு முன்னால் கிடத்தினாள்.
வைத்தீஸ்வரன்கோவில் குருக்களுக்கும் மகா பெரியவாளுக்கும் அந்த வேளையில் நன்றி சொன்னார். கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் பரவசப்பட்டு ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் எழுப்பினார்கள். பெரியவா மகிமையைக் கண்களுக்கு நேராகப் பார்த்த ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
அப்போது இந்தக் கேரளப் பெண்மணியைப் பார்த்து பெரியவா என்ன சொன்னார் தெரியுமா?
“என்கிட்ட ஒண்ணும் இல்லேம்மா. எல்லாம் ஒன் பூர்வ ஜன்ம பலன். ஒன்னோட நம்பிக்கை வீண் போகலை. நான் தினம் தினம் தியானம் பண்ற அம்பாள் காமாட்சியோட அருள்தான் இது” என்று அடக்கமாகச் சொன்னாராம்!
அந்தத் தம்பதியருக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார். அதுதான் மகா பெரியவா மகிமை!