அன்றைய தினம் தன் அனுஷ்டானங்களை எல்லாம் பூர்த்தி செய்து விட்டு வழக்கமாகத் தான் அமரும் திருச்சந்நிதியில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார் மகா பெரியவா.
தரிசனத்துக்காக வந்திருந்த ஒரு சில பக்தர்களும் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் பிரார்த்தனைகளையும் அந்தப் பரமேஸ்வர சொரூபத்திடம் கொட்டி விட்டு அவரிடம் இருந்து ஆறுதலையும், பிரசாதத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டிருந்தனர்.
ஆக, மகா பெரியவா இருந்த இடத்தில் அவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஓரிரு சிஷ்யர்களைத் தவிர வேறு எவரும் தென்படவில்லை. அந்த நேரத்து சூழ்நிலையே மனதுக்கு மிகவும் இதம் தரும் வகையில் அருமையாகவும் அமைதியாகவும் இருந்தது.
திடீரென மகா பெரியவாளுக்கு முன்னால் பத்து வயதுப் பையன் ஒருவன் வந்து பவ்யமாக நின்றான். பக்தர்கள் கூட்டம் இல்லை என்பதால், அவனைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலோ, அல்லது அவனைக் கவனிக்கின்ற முயற்சியிலோ எந்த ஒரு சிஷ்யரும் ஈடுபடவில்லை.
அதே சமயம் அந்த சிறுவன் முகத்தில் ஒரு படபடப்பு தெரிந்தது. அவனுடன் வேறு எவரும் தென்படவில்லை. ஒருவேளை அவனுடன் வந்தவர்கள் ஸ்ரீமடத்திலேயே வேறு எங்கேனும் இருக்கிறார்கள் போலிருக்கிறது.
சிறுவனின் நெற்றியில் திருநீறும், முகத்தில் பிரகாசமும் பளிச்சிட்டன. கைகள் இரண்டையும் கூப்பிக் கொண்டு பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தான். எழுந்தான். பெரியவாளின் தேஜஸான முகத்தைப் பார்த்துக் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டான். ‘இந்த வயசில் இப்படி ஒரு பக்தியா?’ என்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். பெரியவா பக்தியில் வெகுவாகவே திளைக்கின்ற குடும்பம் போலிருக்கிறது.
முகத்தில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொப்பளிக்க குறுகுறுப்புடன் பெரியவாளுக்கு முன்னால் நின்றிருந்தான். இந்த சிறுவன் ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் நின்றிருந்த கோலத்தைப் பார்த்த பெரியவா, தன்னிடம் ஏதோ கேட்க வேண்டும் என்ற துறுதுறுப்பு அவன் முகத்தில் தென்படுவதைப் புரிந்து கொண்டார். ‘இவனது சந்தேகத்தை நாமே கேட்டுத் தெளிவுபடுத்தி அனுப்ப வேண்டும்‘ என்று சிறுவனுக்கு அருள அந்தப் பரப்பிரம்மம் தீர்மானித்தது.
சிறுவனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார். அவனைப் பார்த்து, “கேளு… தைரியமா கேளு… என்கிட்ட ஏதோ கேள்வி கேக்கணும்னு ஒனக்குத் தோன்றதா?” என்று மகா பெரியவாளே ஜாடைமாடையாக ஆரம்பித்துக் கொடுத்தார்.
அவ்வளவுதான்! தன் மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்கலாமா, வேண்டாமா என்று அதுவரை தயங்கி நின்று கொண்டிருந்த சிறுவனின் முகத்தில் ஆனந்தம் தாங்க முடியவில்லை. பெரியவாளே தன்னைப் பார்த்துக் கேட்டு விட்டார்… ‘இனி எதற்குத் தயக்கம்?’ என்று தீர்மானித்தவன் தன் மனதில் தோன்றிய சந்தேகத்தைப் பெரியவாளிடமே கேட்க முற்பட்டான். அவனுக்குள் அதுவரை இருந்து வந்த கொஞ்ச நஞ்ச பயமும் பெரியவா கொடுத்த தைரியத்தால் முற்றிலும் விலகி விட்டது.
மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரத்தை செய்து விட்டு, “பெரியவா… எனக்கு ஒரே ஒரு கேள்விதான். இதுக்கு மட்டும் பதில் தெரிஞ்சா போதும். இத்தனாம் பெரிய மடத்துல யானை, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகள் எல்லாம் பல பக்தர்கள் பார்க்க நடமாடிண்டு இருக்கே… பொதுவா இது போன்ற விலங்குகளை சர்க்கஸ் கம்பெனிலதானே நாங்க பாக்கறது வழக்கம்?! இதுகளை மடத்துல வெச்சுண்டு வளர்க்கறேளே… இதெல்லாம் சாத்தியமா? அதான் என் சந்தேகம்” என்று பட்டென்று கேட்டு விட்டான்.
அவ்வளவுதான்! இப்படி ஒரு ஏடாகூடமான கேள்வியை இவன் கேட்டதும், அங்கிருந்தவர்கள் ஆடிப் போனார்கள். அப்போது மகா பெரியவாளைச் சுற்றி இருந்த காரியஸ்தர்கள், கைங்கர்யதாரர்கள் மற்றும் பக்தர்கள் போன்றோருக்கு ஒரு பதட்டம் வந்து விட்டது. சாதாரணமாக இந்த சிறுவன் போன்ற அரைகுறை வயதுள்ள பசங்கள் பொசுக்கென்று ஸ்ரீமடத்துக்குள் புகுந்து, ஆர்வக் கோளாறில் மகா பெரியவாளிடம் ஏதாவது கேட்டு விடுகிறார்கள்… எல்லோருக்கும் பெரியவா உரிய பதிலைத் தருவார் என்றாலும்,
இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் பெரியவாளே பதில் தர வேண்டுமா? ஸ்ரீமடத்து ஊழியர் எவரேனும் பதில் கொடுத்தால் போதுமே என்கிற எண்ணம்தான் ஸ்ரீமடத்துக் காரியஸ்தர்களுக்கு மேலோங்கி இருந்தது!
இந்தச் சிறுவனை சட்டென்று நெருங்கி அவனை அதட்டி வெளியே கூப்பிட வழி இல்லை. அப்படி அது போன்ற எண்ணத்துடன் சிறுவனை நெருங்கிய ஒரு சில அன்பர்களும் பெரியவாளின் சைகையைப் பார்த்து அங்கிருந்து அகன்றனர். அடுத்து பெரியவா இந்த சிறுவனுக்கு என்ன பதில் தரப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள்.
மகா பெரியவா ஆரம்பித்தார்: “டேய் குழந்தே… இதெல்லாம் காசு குடுத்து விலைக்கு வாங்கின விலங்குகள் கிடையாது. காஞ்சி ஸ்ரீமடத்துக்கு யார் யாரோ தனவந்தர்கள்லாம் காணிக்கையா பல பொருட்களை மடத்துக்குக் குடுத்துட்டுப் போவா…. நீதான் நிறைய ராஜா கதைகளைப் படிச்சிருப்பியே… நம்மூர்ல வாழ்ந்த அத்தகைய ராஜாக்களும் எனக்கு முந்தைய ஆச்சார்ய புருஷர்களை தரிசிக்க வர்றப்ப தங்களால் இயன்ற காணிக்கைகளை மடத்துக்குக் கொடுப்பா.
அது போன்ற காணிக்கைகளோட யானை, குதிரை, ஒட்டகம், பசுமாடு, அம்பாரி – இப்படிப் பல தினுசு வகையறாக்களையும் சந்தோஷமா குடுப்பா. அதுபோல் குடுத்ததுதான் இன்னிக்கு மடத்துல சேர்ந்திருக்கு. அந்தக் காலத்துல வந்து சேர்ந்த இதுகள்தான் இப்ப வம்சம் வம்சமா ஸ்ரீமடத்து வாசமா இங்கயே இருந்துண்டு இருக்கு. இதுகளுக்குச் சாப்பாடு போடறது, பராமரிக்கறது எல்லாம் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள். எங்க முகாம் போனாலும் இதுகளும் வந்துடும்.
நீதான் கோபூஜை, கஜ பூஜைல்லாம் கேள்விப்பட்டிருப்பியே. ஸ்ரீமடத்துல தெனமும் இந்த ரெண்டு பூஜையும் நடக்கும். தவிர, விசேஷ நாட்கள்ல விசேஷமான வழிபாடு நடக்கும்.
நோக்கு ஒண்ணு தெரியுமா… இதோ, இவ்ளோ மிருகங்க இங்கே இருக்கே… இதுகளுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடுத்தாலே போதும்… நாம என்ன சொல்றோமோ, அதை அப்படியே கேக்கறதுகள். ஆனா, என்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்ளோ ட்ரெயினிங் கொடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டேங்கறா…” என்று சொன்ன மகா பெரியவா சத்தம் போட்டுச் சிரித்தார்.
இதைக் கேட்ட சிறுவனும் பெரியவா சொன்னதன் பொருள் புரிந்து தானும் சிரித்தான். அதோடு, தான் கேட்ட கேள்விக்குப் பெரியவாளிடம் இருந்து பதில் வந்து விட்டது என்கிற திருப்தியில் அடுத்த கணமே அங்கிருந்து ஓடி விட்டான். அவனுக்கு எது வேண்டியதோ, அது கிடைத்து விட்டது.
ஆனால், மகா பெரியவா சொன்ன அந்தப் பதில், ஸ்ரீமடத்தில் இருந்த ஒரு சில ஊழியர்களை நெளிய வைத்து விட்டது என்பது உண்மை.
இது அந்த ஸ்ரீமடத்துக்கு ஊழியர்களுக்கு மட்டும் என்று நாம் நினைத்து விடக் கூடாது. இது நம் அனைவருக்கும் மகா பெரியவா சொன்ன ஒரு பதில்.
காஞ்சி மகா பெரியவா போன்ற மகான்கள் எந்த ஒரு அறிவுரையை, நற்கருத்துகளைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்று நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு முறை ஸ்ரீமடத்துக்குக் காரியஸ்தரான கண்ணன் என்பவரை மகா பெரியவா அழைத்தார். “கண்ணா… நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ?” என்று ஆரம்பித்தார்.
மகா பெரியவா எதை மனதில் வைத்துக் கொண்டு என்ன விஷயத்தைச் சொல்ல வருகிறார் என்பது யாருக்குத் தெரியும்? எனவே, அந்தக் கண்ணனும், “சொல்லுங்கோ பெரியவா… என்ன விஷயம் சொல்ல வர்றேள்னு பிடிபடலை…” என்று வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.
“ஏண்டா… மடத்துக்கு இத்தனை கூட்டம் வருதே… இவாள்லாம் எதுக்காக இங்கே திரண்டு வர்றா?”
“இதென்ன கேள்வி பெரியவா… எல்லாரும் சாட்சாத் பரமேஸ்வரரான தங்களை தரிசிக்கத்தான் வர்றா… தங்களோட ஆசிர்வாதம் கெடச்சுட்டா, ஜன்ம சாபல்யமே அடைஞ்ச மாதிரி சந்தோஷத்துடன் திரும்பிப் போறா” என்றார் கண்ணன்.
“வாஸ்தவம்தாண்டா… பாதிப் பேர் அந்த மாதிரி எண்ணத்துல என்னை தரிசனம் பண்ண வர்றா… மீதிப் பேர் எதுக்காக வர்றா தெரியுமா?” – மகா பெரியவா ஒரு கொக்கி வைத்துக் கேட்டார்.
“தெரியாது பெரியவா…” – கண்ணன் முகத்தில் கேள்விக்குறி!
“மீதி பேரு இங்கே மடத்துல இருக்கிற அபூர்வமான யானை, ஒட்டகத்தைத்தான் பாக்கத்தான் வர்றா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் பெரியவா.
பெரியவாளின் நகைச்சுவையான இந்தப் பதிலைக் கேட்டதும் உடன் இருந்த சிஷ்யர்களும் பக்தர்களும் ‘கொல்‘லென்று சிரித்து விட்டனர்.
அதன் பின் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பினார் மகா பெரியவா!