வாக்கை மீறினார்…வந்தது சோகம்!

கா பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்த காலத்தில் அந்த மகானைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

நம் முன்னோர்களிடம் இருந்த பக்தி சிரத்தை இந்தக் காலத்தில் நம்மிடம் இருக்கிறதா? சந்தேகமே!

இப்போதெல்லாம் ஒரு கோயிலையோ, மகானின் ஜீவ சமாதியையோ தரிசிக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்கிறோம்?

கணவனும் மனைவியும் அரை நாள் லீவு போட்டு வீட்டை விட்டுக் காலையில் கிளம்புகிறார்கள். போகிற வழியில் பர்ஸனல் வேலைகள் (மளிகைக் கடை லிஸ்ட் தருவது, மின்சார பில், டெலிபோன் பில் கட்டுவது, ரேஷன் பொருள் வாங்குவது இத்யாதிகள்) இருந்தால் முடித்துக் கொள்கிறார்கள். வழிபாட்டு நிலையம் செல்வதற்கு முன் நல்ல ஓட்டலாகப் பார்த்து ஒரு பிடி பிடிக்கிறார்கள். போகிற வழியில் இருக்கவே இருக்கிறது அலுவலகம் மற்றும் பர்சனல் மொபைல் அழைப்புகள்எல்லாவற்றையும் ஓரளவு முடிக்கின்ற நேரத்தில் செல்ல வேண்டிய வழிபாட்டுத் தலம் வந்து விடும்.

உள்ளே நுழையும்போது, ‘அரை மணி நேரத்தில் வெளியே வர வேண்டும். மதியம் ஆபீஸுக்குப் போக வேண்டும்என்று கணவனும் மனைவியுமாகப் பேசித் தீர்மானித்து விட்டு அவசரம் அவசரமாக வழிபாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்புகிறார்கள்.

வீட்டுக்குத் திரும்புகிற வழியில் வாழைத்தண்டு, வாழைப்பூ, பிஞ்சு வெண்டைக்காய் என்று நகரத்தில் நன்றாகக் கிடைக்காத காய்கறி மற்றும் சாமான்களை வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் நொறுக்குத் தீனியையும், ஒரு வாய் காபியையும் குடித்து விட்டு ஆபீஸுக்கு ஓடி விடுகிறார்கள்.

இதுதானே இன்றைய நடைமுறை! இதை நம்மால் மறுக்க முடியுமா?!

ஆனால், மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் அந்த மகானைத் தரிசிக்க வேண்டும் என்றால், குடும்பத்தோடு பயணிப்பார்கள்.

தரிசனத்துக்குச் செல்கின்ற பக்தர்கள் தங்கள் வீட்டில் இருக்கின்ற குழந்தைகள், முதியோர் என்று அனைவரையும் கூட்டிக் கொண்டு பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணித்துக் காஞ்சிபுரத்தை அடைவார்கள். ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சம் ஏழெட்டு பேர் இருப்பார்கள்.

மாலையில் புறப்பட்டுக் காஞ்சியை அடைந்த பின் அங்குள்ள காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தைத் தரிசித்து விட்டு இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வார்கள். காஞ்சி மடத்துக்கு அருகில் உள்ள திருமண மண்டபங்களிலேயோ அல்லது காஞ்சியில் வசிக்கும் சிலர் வீட்டுத் திண்ணைகளிலோ (இன்னிக்குத் திண்ணைகளைத் தேடித்தான் பிடிக்க வேண்டும்) படுத்து உறங்குவர். அப்போது காஞ்சி மடத்தில் கணவன் மனைவியும் இரவில் தங்க அனுமதி கிடையாது.

அதிகாலை மூன்று மணி ஆனதும் அனைவரும் விழித்தெழுந்து குளித்து விட்டு, ஆசார சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு மகா பெரியவா ஓய்வெடுக்கும் இடத்தின் அருகேஅதாவது பல்லக்கின் அருகிலேயோ அல்லது மகான் வாசம் செய்யும் அறையின் வாசலிலேயோ வந்து கைகளைக் கூப்பிக் கொண்டு நிற்பார்கள்.

பல்லக்கில் இருந்தால், மூடி இருக்கும் அந்தத் திரை எப்போது விலகும் என்று ஆர்வத்துடன் மகா பெரியவா சரணங்களை முழங்கிக் கொண்டே இருப்பார்கள்.

ஓய்வெடுக்கும் அறைக்குள் இருந்தால் அதன் கதவுகள் திறக்கப் போகும் நேரத்தையே பக்தி சிரத்தையுடன் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

திரை விலகியோ, கதவு திறந்தோமகா பெரியவாளின் தரிசனம் கிடைத்த கணத்தில் பரவசத்துடன் பக்தர்கள் தங்களின் கன்னத்தில் மடார் மடாரென்று அறைந்து கொண்டுஹர ஹர சங்கர ஜய ஜய சங்கரகோஷத்தை முழங்கியவாறு உடலின் சர்வ அங்கங்களும் தரையில் படுமாறு நமஸ்காரம் செய்வார்கள்.

மகா பெரியவாளின் இந்த தரிசனத்தினால் தங்களின் ஜன்மமே அன்றைய தினத்தில் பூர்த்தி ஆனதுபோல் மகிழ்வார்கள்.

காஞ்சி மகா பெரியவாளின் இந்த அதிகாலை தரிசனத்தைவிஸ்வரூப தரிசனம்என்பார்கள்.

மகா பெரியவா காஞ்சியில் இருந்தால்தான் என்றில்லைஎந்த கிராமத்தில், எந்த நகரத்தில், எந்த மாநிலத்தில் இருந்தாலும் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தைக் கண்டே ஆக வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் பயணித்துக் கொண்டே இருப்பார்கள்.

காஞ்சி மகா பெரியவாளைநடமாடும் தெய்வம்‘, ‘கலியுக தெய்வம்என்றே போற்றி வணங்கி வந்தார்கள்.

மகான்கள், தெய்வங்கள் எல்லோரும் ஜாதி, மதம் போன்ற அனைத்தையும் கடந்தவர்கள்.

இவர்களுக்கு அண்ணாமலை, அப்துல்லா, ஆபிரஹாம் எல்லோருமே ஒன்றுதான்.

அந்நியர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அப்போது சித்தூர் கலெக்டராக இருந்த கிறிஸ்தவர் சர் தாமஸ் மன்றோவுக்கு அருளியவர் திருப்பதி ஏழுமலையான்.

ஷீர்டி பாபா சந்நிதியில் இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு என்றைக்குமே கிடையாது. பாபா வாழ்ந்த காலத்தில் இஸ்லாமியர்களின் உரூஸ் திருவிழாவும் (சந்தனக் கூடு ஊர்வலம்) உண்டு; ஸ்ரீராமநவமி திருவிழாவும் உண்டு.

மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத் திருக்குளம் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்காடு நவாப்பால் ஆலயத்துக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கும் ஆண்டுதோறும் முகரம் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் இந்தக் குளத்தைப் பயன்படுத்தலாம் என்று ஒரு விதி உள்ளது.

அதுபோல் காஞ்சி மகா பெரியவா, மதங்களைக் கடந்த மகான்.

எத்தனையோ இஸ்லாமியப் பெரியவர்கள் காஞ்சி மடத்துக்கு வந்து மகா பெரியவாளை சந்தித்திருக்கிறார்கள்.

எத்தனையோ கிறிஸ்தவப் பிரபலங்கள் மடத்துக்கு வந்து மகா பெரியவாளிடம் அளவளாவி இருக்கிறார்கள்.

நாத்திகத்தில் ஊறிய பலரும் மகா பெரியவாளின் எளிமை, கருணை போன்ற குணங்களைப் பார்த்து வியந்து, இவரை நேரில் வந்து சந்திக்கவில்லை என்றாலும், தங்களது விசாரிப்புகளைப் பலர் மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கிறிஸ்தவ அன்பர் மகா பெரியவா சந்நிதிக்குள் நுழையும்படி ஆகி விட்டது.

வேறு வழியே இல்லாமல் பெரும் தயக்கத்துடன் அந்த தெய்வத்தின் சந்நிதியில் நுழைந்தார்.

அங்கிருந்து திரும்பும்போது அவர் அடைந்த ஆனந்த அதிர்ச்சிஅவராலேயே வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை.

அந்த அற்புத நிகழ்வைத்தான் பார்ப்போமே!

இந்த சம்பவம் நடந்த காலத்தில் பிரபல பைக் தயாரிக்கும் நிறுவனமான சென்னை ராயல் என்ஃபீல்டில் மகாலிங்கம் என்பவர் சர்வீஸ் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

தெய்வ பக்தி நிரம்பிய இவருக்கு, காஞ்சி மகா பெரியவா மேலும் அபரிமித பக்தி உண்டு. அந்த மகானை எப்போது பார்த்தாலும் அந்த தரிசனத்தில் உருகி விடுவார்.

காஞ்சி மகா பெரியவா காஞ்சிபுரத்தில் இல்லாத காலங்களில் அவர் எங்கு இருக்கிறார் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு அந்த ஊருக்கே போய் அவரை தரிசிப்பது மகாலிங்கத்துக்குக் கொள்ளை ஆனந்தம்.

உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பல வெளியூர்களுக்கும் செல்ல வேண்டிய பொறுப்பு மகாலிங்கத்துக்கு உண்டு.

ஒரு முறை மகா பெரியவா மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார். பூனேவுக்கு அருகில் உள்ளது சதாரா.

அப்போது தற்செயலாக சதாராவுக்கு அருகில் உள்ள ஒரு ஊருக்குப் பணி நிமித்தம் சென்றிருந்தார் மகாலிங்கம். அன்றைய தினம் பகல் பொழுதில் தன் பணியில் அவர் மூழ்கி இருந்தபோது அங்கே வந்த சென்னைக்கார அன்பர் ஒருவர்காஞ்சிபுரத்தில் இருந்து மகா பெரியவா சதாரா வந்து முகாமிட்டிருக்கிறாரேஉங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

காஞ்சிபுரம்என்ற வார்த்தையைக் கேட்டதும், மகாலிங்கத்தின் முகம் பிரகாசமானது. ”அப்படியா!” என்று அவரைப் பார்த்து ஏகத்துக்கும் வியந்தவர், தன் பணிகளை முடித்த பிறகு யாரேனும் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு மதியத்துக்கு மேல் சதாரா போய் மகா பெரியவாளை தரிசனம் செய்து விட வேண்டும் என்று தீர்மானித்தார்.

இந்த ஊரில் இருந்து சதாரா எவ்வளவு தொலைவில் இருக்கிறது? எந்த வழியாகப் போக வேண்டும்? மீண்டும் இந்த ஊர் திரும்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்…’ என்றெல்லாம் விசாரித்து, தோதான உள்ளூர் நண்பரைஅதுவும் என்ஃபீல்டு அலுவலகத்தில் பணி புரியும் ஒருவரையே தேடினார்.

இறுதியில் அப்படி ஒருவர் அமைந்தார்.

ஆனால், அவர் ஒரு கிறிஸ்துவ நண்பர்!

காஞ்சி பெரியவரின் மகிமை பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லி விட்டு, ”அவர் எங்களுக்கு குரு போன்றவர். தெய்வமாக மதிக்கிறோம். அவரை தரிசிக்க சதாரா போக வேண்டும். உங்களைத்தான் அனைவரும் சிபாரிசு செய்தார்கள். என்னுடன் துணைக்கு வருகிறீர்களா?” என்று மகாலிங்கம் கேட்டதும், வெகு உற்சாகமாக சம்மதம் தெரிவித்தார் கிறிஸ்தவ நண்பர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் தொடங்கியது. வழித் தடம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், கிறிஸ்துவ நண்பர் பைக்கை ஓட்டமகாலிங்கம் பின்னால் அமர்ந்து கொண்டார்.

ஒரு சில மணி நேரப் பயணத்துக்குப் பின் சதாராவில் மகா பெரியவா முகாம் இருந்த இடத்தை இவர்கள் அடைந்தபோது மாலை மணி ஐந்து!

காஞ்சி மகா பெரியவா முகாம் இருந்த இடத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

தரிசனம் முடிந்த பக்தர்கள் வெளியே வருவதும், புதிய பக்தர்கள் தரிசனத்துக்காக உள்ளே செல்வதுமாய் இருந்தனர்.

வண்டியில் இருந்து மகாலிங்கம் இறங்கிக் கொண்ட பின், அவர் மனதில் ஒரு புத்துணர்ச்சி.

தான் வணங்கி வரும் நடமாடும் தெய்வத்தை இன்னும் ஒரு சில நிமிடங்களில் நேருக்கு நேராக தரிசிக்கப் போகிறோம் என்கிற பரவசம் அவரது உடலெங்கும் பரவியது.

வண்டி ஓட்டிக் கொண்டு வந்த கிறிஸ்தவ நண்பரிடம், ”நீங்க டயர்டா இருப்பீங்க. இங்கயே ஓய்வெடுங்கநான் உள்ளே போய் எங்க ஸ்வாமிகளை தரிசனம் பண்ணிட்டு வந்துடறேன். உங்களுக்கு டீ, காபி எதாவது குடிக்கணும்னா பக்கத்துல போய் சாப்டுட்டு வாங்கஎன்று சொன்னார்.

அதற்கு அந்த நண்பரும், ”போயிட்டு வாங்கஎனக்கு எதுவும் தேவை இல்லை. நான் இங்கயே இருக்கேன்என்று சொல்லி விட்டு ஸ்டாண்ட் போடப்பட்ட பைக்கிலேயே வாகாக அமர்ந்து கொண்டு அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

மகா பெரியவா முகாம் இருந்த இடத்துக்குள் மகாலிங்கம் உள்ளே நுழைந்தார். பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

பயபக்தியுடன் மெள்ள மெள்ள நடந்து மகா பெரியவா அருகில் சென்றார்.

வந்திருப்பது யார்?’ என்பது போல் மகாலிங்கத்தை அண்ணாந்து பார்த்தார் மகா பெரியவா.

மிக பவ்யமாக தன் வாயை விரல்களால் பொத்திக் கொண்டு தான் யார் என்பதை சுருக்கமாகப் பெரியவாளுக்குச் சொல்லி விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார் மகாலிங்கம்.

பெரியவாளிடம் இருந்து ஒரு புன்னகை.

அடுத்த விநாடி, ”ஒன்னோட வந்தவனை வெளிலயே நிறுத்தி வெச்சுட்டு நீ மட்டும் உள்ள வந்திருக்கியேநீ போய் வண்டிக்குக் காவலா நின்னுட்டு ஒன்னோட சிநேகிதனை உள்ளே அனுப்புஎன்று மகா பெரியவா சொல்லமகாலிங்கம் விதிர்விதிர்த்துப் போனார்.

நான் எனது நண்பனுடன் வந்தேன் என்பது எப்படி பெரியவாளுக்குத் தெரியும்…?

நாம் வந்த வண்டி நிறுத்தப்பட்டிருப்பதோ, இங்கு பல அடிகள் தள்ளி! இந்த தெய்வம் எப்படி இதை ஞான திருஷ்டியால் உணர்ந்தது?!

தவிர, வந்திருப்பது ஒரு கிறிஸ்தவ நண்பர் ஆச்சேஅவர் எப்படி பெரியவாளை தரிசனம் செய்வார்?’ என்றெல்லாம் மகாலிங்கம் மனதில் அடுக்கடுக்காகக் கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்க… ”நீ வெளில போயிட்டு அவனை முதல்ல உள்ளே அனுப்புஎன்றார் மகா பெரியவா மீண்டும்.

உத்தரவு பெரியவா…” என்று சொல்லி விட்டு, ஓடாத குறையாக வெளியே வந்தார் மகாலிங்கம்.

புதிய நண்பரிடம் எப்படிச் சொல்வது? ‘எங்களது குருநாதர் உன்னைக் கூப்பிடுகிறார்என்று அவரிடம் சொன்னால், ‘நான் உங்களது துணைக்கு மட்டும்தான் வந்திருக்கிறேன். என்னால் அவரைப் பார்க்க முடியாதுஎன்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் மகாலிங்கத்துக்குள் யோசனைகள் ஓடிக் கொண்டே இருந்தன.

சரி, இது மகா பெரியவா இட்ட உத்தரவு ஆயிற்றேஅதைப் பற்றி நாம் எதுவும் கவலைப்பட வேண்டாம். மகான் சொன்ன விஷயத்தை மட்டும் நண்பரிடம் சொல்வோம்என்று தீர்மானித்த மகாலிங்கம் நேராக கிறிஸ்தவ நண்பரிடம் வந்தார். விஷயத்தைச் சொன்னார்.

முகாமுக்கு வெளியே சில அடிகள் தள்ளிபைக்கில் அமர்ந்திருந்த தனது கிறிஸ்தவ நண்பனிடம், ”உள்ளே இருக்கிற எங்களது குரு உங்களைக் கூப்பிடுகிறார். உடனே புறப்படுங்கள்என்றார் மகாலிங்கம்.

கிறிஸ்தவ நண்பருக்கு அதிர்ச்சி மற்றும் வியப்பு. ”என்ன சொல்கிறீர்கள்? என்னையா கூப்பிடுகிறார்?!”

ஆமாம்அவருக்கு நமஸ்காரம் செய்து விட்டு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முற்பட்டபோது, முதலில் உங்களை வரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.”

உங்களுடன் நான் வந்திருப்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் இருக்கும் இடத்தில் இருந்து பல அடிகள் தள்ளித்தானே நான் இப்போது அமர்ந்திருக்கின்றேன்?”

அதுதான் நாங்கள் வணங்கக் கூடிய மகானின் மகிமை. அவர் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகின் எந்த மூலையிலும் நடக்கிற செயல்பாட்டையும் உணர்ந்து கொள்வார். கட்டுப்படுத்துவார். பரந்து விரிந்த இந்த உலகில் தனது பக்தர்களுக்கு ஏதேனும் ஒரு இடர் என்றால், ஏதோ ஒரு வடிவத்தில் வந்து அவர் காப்பாற்றி விடுவார். இதனால்தான் அவரை நடமாடும் தெய்வம் என்போம்.”

சரிஉங்களது வார்த்தைகளை நான் மதிக்கிறேன். ஆனால், நான் ஒரு கிறிஸ்துவன்உங்களது குருவோ இந்துஒரு கிறிஸ்தவனான என்னிடம் அவர் என்ன எதிர்பார்க்க முடியும்? அவரிடம் நான் என்ன பேச முடியும்? நாங்கள் வணங்கக் கூடிய ஜீசஸைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போனார் கிறிஸ்தவ நண்பர்.

மகான்களுக்கு எல்லா மதமும் சம்மதம். காஞ்சி மகா பெரியவரைப் பொறுத்தவரை எல்லா தெய்வமும் ஒன்றுதான். எத்தனையோ இஸ்லாமியர்களும், கிறிஸ்தவ அன்பர்களும் அவரை சந்திக்க வருகிறார்கள். தங்களது சந்தேகங்களுக்குத் தீர்வு பெற்றுச் செல்கிறார்கள். அந்த வகையில் என்னுடன் வந்த நண்பனான நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதைத் தனது ஞான திருஷ்டியால் அறிந்து, ஆவலுடன் அழைத்திருக்கலாம்!”

இதற்கு மேல் அந்த கிறிஸ்தவ நண்பர் எதுவும் பேசவில்லை. காஞ்சி மகா பெரியவா எங்கே இருக்கிறாரோ, அந்தத் திசையை நோக்கி இரண்டு மூன்று அடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

அப்போது முகாமின் உள்ளிருந்து மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த ஒரு சிப்பந்தி பரபரவென்று வெளியே வந்தார். கிறிஸ்தவ நண்பரை நெருங்கி, ”வாங்கோஉங்களுக்காகத்தான் மகா பெரியவா காத்திண்டிருக்காஎன்றார்.

தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதற்காக, கிறிஸ்தவ அன்பரின் அடையாளம் சொல்லி மகா பெரியவாளே அனுப்பி விட்டார் போலிருக்கிறதுஎன்று மகாலிங்கம் இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

மகாலிங்கத்தைத் திரும்பிப் பார்த்து விட்டு, ஆச்சரியம் விலகாமல் காஞ்சி மடத்து சிப்பந்தியைப் பின்தொடர்ந்து நடந்தார் கிறிஸ்தவ நண்பர்.

இவரை உள்ளே அழைத்துக் கொண்டு போய் மகா பெரியவா முன் நிறுத்தினார்.

மகா பெரியவா யாரோ ஓர் அன்பருக்கு பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்.

கசகசவென்று பக்தர்கள் ஒரு ஒழுங்கே இல்லாமல் அமர்ந்திருந்த அந்த இடத்தைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டார் கிறிஸ்தவ அன்பர்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரகோஷத்தை மிகவும் மென்மையாககைகளைத் தட்டி ராகம் போட்டு முழங்கிக் கொண்டிருந்தனர் நாலைந்து பேர்.

மிகவும் ஆசாரமான வேளைகளில் ஆண்கள் அணியும் பஞ்சகச்ச வேஷ்டி, நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்திராட்சம் என்று மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி வாங்குவதற்காக பத்துப் பதினைந்து பேர் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

நெற்றி நிறைய குங்குமத்துடனும், தலை நிறைய மல்லிகைப்பூவுடனும் பெண்கள் காணப்பட்டனர்.

மகா பெரியவா இருந்த சந்நிதியில் தீபமானது சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ஒரு மூலையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகள் அந்த இடம் முழுக்க நறுமணம் எழுப்பிக் கொண்டிருந்தன.

புதிய சூழலில் மகானுக்கு முன் நின்றிருந்த கிறிஸ்தவ நண்பருக்கு உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவரை உள்ளே அழைத்துச் சென்ற மடத்துச் சிப்பந்தி, மகா பெரியவா அருகே இவரைக் கொண்டு விட்டு விட்டு, அந்த மகானின் அருகே போய் வாயைப் பொத்திக் கொண்டு பவ்யமாகக் குனிந்து விஷயத்தைச் சொன்னார்.

அப்படியே திரும்பியது அந்த நடமாடும் தெய்வம்.

இவரது பார்வை ஏதேனும் ஒரு வேளையில் நம்மீது திரும்பாதாஅவரது அருளுக்குப் பாத்திரமாக மாட்டோமா என்று பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்ற வேளையில்ஜாக்பாட்அடித்தது மாதிரி மகா பெரியவாளே கூப்பிட்டு வைத்து, கிறிஸ்தவ அன்பர் மேல் ஒரு தெய்வீகப் பார்வை!

அந்தப் பார்வையின் தீட்சண்யத்தால் கட்டுண்டு போனார் கிறிஸ்தவ அன்பர்.

ஒரு தாய் தன் குழந்தையை அன்போடு பார்க்கும்போது தத்தித் தத்தி அது அம்மாவிடம் சென்று ஒட்டிக் கொள்கிறது அல்லவா? அது போன்ற ஒரு தாய்ப் பார்வை.

இவரை நான் எப்படி வணங்க வேண்டும்?

குட் ஈவினிங்சொல்ல வேண்டுமா?

கைகளைக் கூப்பி வணங்க வேண்டுமா?

அவரைப் பார்த்துப் புன்னகைக்க வேண்டுமா?’

இப்படி எண்ணற்ற குழப்பத்துடன்தயக்கத்துடன் இருந்த கிறிஸ்தவ அன்பரைப் பார்த்து, மகா பெரியவாளே புன்னகைத்தார்.

பிறகு, தான் அமர்ந்திருக்கின்ற இடத்தின் அருகே வந்து அமருமாறு சைகையால் கிறிஸ்தவ அன்பருக்கு உத்தரவிட்டார் மகா பெரியவா.

கிறிஸ்தவ அன்பர் ஆச்சரியப்பட்டார். காரணம்மகா பெரியவாளுக்கு அவ்வளவு அருகில் (சிப்பந்திகளைத் தவிர) வேறு எந்த ஒரு பக்தரும் அப்போது இல்லை.

வெறுமனே கைகளை மட்டும் கூப்பி வணங்கி விட்டு, வேறு என்ன செய்வது என்று புரியாமல் அந்த இடத்தில் அமர்ந்தார்.

யார் இந்த புது பக்தர்? இப்போதுதானே வந்திருக்கிறார்நாமெல்லாம் ஓரிரண்டு நாட்களாக இங்கு இருந்தும், இவ்வளவு அருகில் அமர ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையேஇவர் கொடுத்து வைத்த பக்தர்தான்என்று அன்றைய தினம் மகா பெரியவா தரிசனத்துக்காக அங்கே குழுமி இருந்த அன்பர்கள் அனைவரும் கிறிஸ்தவ அன்பரை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.

விநாடிகள் மெள்ள மெள்ளக் கரையகிறிஸ்தவ அன்பருக்கே அந்த சூழல் ஒட்டாதது போல் இருந்தது. என்ன செய்யலாம் என்று தவித்தபோதுமகா பெரியவா தன் வலக்கை விரல்களால் ஒரு சொடக்கு போட்டு அவரது பார்வையைத் தன் பக்கம் திருப்பினார்.

திடுக்கிட்டவர் மகா பெரியவாளைப் பார்த்தார்.

என் கண்களை மட்டும் உத்துப் பார்என்று மகா பெரியவா தன் இரு விழிகளையும் காண்பித்து அந்த கிறிஸ்தவ அன்பருக்கு உத்தரவிட்டார்.

கிறிஸ்தவ அன்பரும் இந்த உத்தரவுக்குக் கட்டுண்டு இமை கொட்டாமல் மகா பெரியவாளின் கண்களையே பார்க்க ஆரம்பித்தார்.

எவருக்குமே கிடைக்காத நயன தீட்சை அவருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

ஒரு சில விநாடிகள் கடந்திருக்கும். திடீரென்று கிறிஸ்தவ அன்பரின் உடல் ஏகத்துக்கும் சிலிர்த்தது. தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்தார்.

மகா பெரியவாளின் இரு விழிகளில் இருந்தும் மிகப் பெரிய ஒளி வெள்ளம் தன்னை நோக்கிப் பாய்வதை உணர்ந்தார். அந்த சூழலே மிகவும் வித்தியாசமாக மாறியது

அவருக்கு. இதை அடுத்து, தனக்கு நேரே அமர்ந்திருந்த மகா பெரியவா, நித்தமும் தான் வணங்கும் ஜீசஸாகக் காட்சி தருவதைக் கண்டார்.

எல்லாம் ஒரு சில விநாடிகள்தான்!

மீண்டும் எல்லாமே இயல்பு நிலைக்கு வந்தாயிற்று.

கிறிஸ்தவ அன்பர் ஏகத்துக்கும் பிரமித்துப் போனார். இப்போது தன் கண்களுக்கு முன்னால் காட்சி தரும் மகா பெரியவாளை ஆனந்தமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை.

தன் அருகில் இருந்த ஒரு சாத்துக்குடி பழத்தை எடுத்து அவரிடம் பிரசாதமாகக் கொடுத்தார். ‘தாங்கள் கிளம்பலாம்என்பது போன்ற ஒரு பார்வை.

கிடைக்கவே கிடைக்காத பேரின்பம் தனக்குக் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார். அவரது உடல் முழுக்க ஒரு பரவசம்.

பைக்கின் அருகே மகாலிங்கம் நின்று கொண்டிருந்தார். மெள்ள நடந்து போய் மகாலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவரது கையைக் குலுக்கினார் கிறிஸ்தவ அன்பர். பிறகு சொன்னார்: ”நண்பனேஇன்றைய பொழுது மிக அற்புதமான பொழுதுஉங்கள் குரு என்னை அழைத்ததாகச் சொன்னீர்களேஅவர் எனக்கு அருள் புரிவதற்காக அழைத்திருக்கிறார். தனது கண்களால் எனக்கு அருள் வழங்கினார். அது மட்டுமல்லஅவரிடம் நான் வணங்கும் ஜீசஸைப் பார்த்தேன். ஜீசஸ் அவரிடம் தெரிந்தார். இந்த வாய்ப்பு எனக்கு நீங்கள் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.”

மகாலிங்கம் பேந்த பேந்த விழித்தபோது, உள்ளே நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒன்று விடாமல் மீண்டும் சொன்னார் கிறிஸ்தவ அன்பர். சந்தோஷத்தின் உச்சத்தில் அவர் இருப்பதை மகாலிங்கத்தால் உணர முடிந்தது.

சரிநான் காத்திருக்கிறேன். நீங்கள் போய் உங்கள் குருவை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்என்றார், கிறிஸ்தவ அன்பர்.

தனது நண்பனான கிறிஸ்தவ அன்பரை, தான் அருள் புரிகின்ற இடத்துக்கே வரவழைத்து, அவருக்கு ஆசியும் திருக்காட்சியும் வழங்கிய மகா பெரியவாளின் மகா கருணையை நினைத்து உடலும் உள்ளமும் பரவசமாகி, நண்பனைப் பெருமிதத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தார் மகாலிங்கம்.

மகா பெரியவாளின் திருச்சந்நிதி முன்னால் போய், அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். காஞ்சி மகானும் மகாலிங்கத்துக்கு ஆசி வழங்கி, பிரசாதம் தந்தார். பிறகு, ”ரெண்டு பேரும்பைக் வந்திருக்கேளோ?” என்று கேட்டார்.

ஆமா பெரியவா. பைக்ல வந்தோம். உங்களோட தரிசனம் பரிபூரணமா ஆயிடுத்து. நாங்க திரும்பணும்.”

ஒடனே திரும்ப வேண்டாம். இன்னிக்கு ராத்திரி இங்க தங்கிட்டு நாளைக்குக் கார்த்தால போகலாம்.”

மகானிடம் இருந்து ஒரு வாக்கு வந்து விட்டால், அது வேத வாக்கு. தெய்வத்தின் திருவாக்கு.

உத்தரவு பெரியவாஎன்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே வந்தார் மகாலிங்கம்.

கிறிஸ்தவ அன்பரோ மிகவும் உற்சாகமாகக் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகக் காணப்பட்டது.

அவரை நெருங்கிய மகாலிங்கம், ”என் குருவை நானும் தரிசித்து விட்டேன். அவரை ஒவ்வொரு முறை தரிசிக்கும்போதும் தெய்வத்துடன் சில நிமிடங்கள் இருந்ததாக உணர்வேன். அதுபோன்ற ஒரு அனுபவம் இன்றைக்கும் எனக்குக் கிடைத்தது. ஆனால், என்னை விட நீங்கள்தான் இன்றைக்கு பாக்கியசாலிஎன்றார்.

ஆமாம்ஆமாம்என் வாழ்நாளில் இந்த தரிசனத்தை மறக்கவே முடியாது. இந்த அனுபவத்தை உடனே என் குடும்பத்தாருடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதைக் கேட்டால் அவர்கள் அனைவரும் பிரமித்துப் போய் விடுவார்கள். வாருங்கள், புறப்படலாம்என்றார் கிறிஸ்தவ அன்பர்.

இல்லையப்பாமகா பெரியவா நமக்கு உத்தரவு வழங்கவில்லை. இன்றைய தினம் இரவு தங்கி விட்டு, நாளை காலையில் கிளம்பச் சொல்லி இருக்கிறார்என்றார் மகாலிங்கம்.

ஆனால், கிறிஸ்தவ நண்பருக்கு அவசரம்தான் பெற்ற தரிசன நிகழ்வையே உடனேயே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று.

பரவாயில்லை மிஸ்டர் மகாலிங்கம்நாம் இப்போதே கிளம்பி விடலாம். நானே வண்டி ஓட்டுகிறேன். தைரியமாக வாருங்கள்என்று மகாலிங்கத்தின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவசரப்படுத்தினார் கிறிஸ்தவ நண்பர்.

எவ்வளவோ முறை மகானின் திருவாக்கு பற்றி எடுத்துச் சொல்லியும், கிறிஸ்தவ அன்பர் கேட்கவில்லை. ”பைக்குல உக்காருங்க பிரதர்நான்தானே ஓட்டப் போறேன். கவலையே படாதீங்கஎன்று வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

முழு மனம் இல்லாமல் அமர்ந்தார் மகாலிங்கம்.

தட தடவெனை இருளில் அந்த பைக் கிளம்பியது.

மகாலிங்கம் பின் ஸீட்டில் அமர்ந்திருந்தார். இங்கிருந்து புறப்படுவதற்கு அவருக்கு மனமே இல்லை. உள்ளத்தில் இருக்கின்ற வார்த்தைகளை உதட்டுக்குக் கொண்டு வந்து கிறிஸ்தவ நண்பரிடம் மீண்டும் வலியுறுத்தத் தயங்கினார்.

உத்தியோக நிமித்தமாக வந்த இடத்தில் மகா பெரியவாளின் தரிசனம் கிடைத்தது. இது எதிர்பார்க்க முடியாத ஆச்சரியம். இந்த தெய்வம் நம்மிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசுமா என்று பல்லாயிரக்கணக்கானோர் ஏங்கியபடி இந்த சந்நிதியின் முன் வந்து கண்ணீர் மல்க அமர்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடமாடும் தெய்வமான மகா பெரியவா இட்ட உத்தரவை மறுத்து நான் இங்கிருந்து புறப்படும்படியான ஒரு சூழ்நிலை அமைந்து விட்டதேஎந்தக் காலத்திலும் எவரும் மகா பெரியவா உத்தரவை மறுத்ததில்லையேஆனால், இன்று எனக்கு அவர் இட்ட உத்தரவை மதிக்காமல் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேனேகிறிஸ்தவ நண்பரிடம் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் புறப்படுவதிலேயே குறியாக இருந்து சாதித்து விட்டாரே?’ என்று மனம் முழுக்க மகா பெரியவாளையே சுற்றிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் பைக்கை ஸ்டார்ட் செய்து முகாமில் இருந்து சில நூறு அடிகள் தள்ளி வந்திருந்த கிறிஸ்தவ நண்பரின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாக இருந்தது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வீட்டுக்குப் போய் விடுவோம்வீட்டுக்குப் போனதும் தூங்கிக் கொண்டிருக்கும் உறவினர்களை உடனே எழுப்ப வேண்டும்மகா பெரியவா என்கிற இந்து மகானைத் தான் சந்தித்தது பற்றியும், அவர் தனக்கு ஜீசஸாக தரிசனம் கொடுத்தது பற்றியும் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் ஆக்ஸிலேட்டரை முடுக்கி, கொஞ்சம் வேகம் கூட்ட முற்பட்டபோது

அடுத்த விநாடி

அந்த சோகம் நிகழ்ந்தே விட்டது.

மகா பெரியவாளின் முகாம் இருக்கிற தெருவைக்கூடத் தாண்டவில்லைஅதற்குள் இப்படி!

சாலையின் குறுக்கே தாறுமாறாகக் கிடந்த பெரிய கல் ஒன்றுஇருள் வேளை என்பதாலும், கவனம் வேறு எங்கோ பயணித்துக் கொண்டிருந்ததாலும்கிறிஸ்தவ அன்பரின் கண்களில் படவில்லை.

அந்தக் கல் தடுக்கி, பைக் சறுக்கி, நிலைகுலைந்து கீழே விழுந்தது.

மகாலிங்கமும், கிறிஸ்தவ அன்பரும் அவரவர் தெய்வத்தை அழைத்தபடி ஆளுக்கு ஒரு பக்கமாக விழுந்தனர்.

சாலையோரம் பெட்டிக் கடைகளிலும், இரவு நேர சாப்பாட்டுக் கடைகளிலும் இருந்த உள்ளூர்வாசிகள் வேகமாக ஓடி வந்து, இவர்களைத் தூக்கி ஓரமாக உட்கார்த்தி வைத்தார்கள். ஆசுவாசப்படுத்தினார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். பைக்கைத் தூக்கி நிறுத்தினார்கள்.

மகா பெரியவாமகா பெரியவாநீங்க சொன்னதைக் கேக்காம புறப்பட்டதுக்கு இந்த தண்டனை எனக்குத் தேவைதான்என்று மகாலிங்கம் வாய் விட்டுப் புலம்பிக் கொண்டே இருந்தார். அவருக்குக் கையிலும் காலிலும் லேசான காயம்.

கிறிஸ்தவ அன்பருக்கும் லேசான சிராய்ப்புகள்.

நல்லவேளையாக இருவருக்கும் பலத்த சேதாரம் இல்லை.

என்னை மன்னிச்சிடுங்க சார். நான் வற்புறுத்திச் சொன்னதாலதான் நீங்களும் பொறப்பட்டு வந்தீங்கஉங்க குருவோட வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து நாளைக்குக் காலைல போகலாம்னு நீங்க சொன்னீங்கஆனா, என்னோட அவசரத்துக்கும், ஒரு குருவின் உத்தரவை மதிக்காமல் கிளம்பியதற்கும் நல்ல தண்டனை கிடைத்து விட்டது. இதில், உங்களையும் சிரமப்படுத்தி உடலில் காயங்களை ஏற்படுத்தி விட்டேனே…” என்று மகாலிங்கத்தின் இரு கைகளையும் உருக்கமாகப் பிடித்துக் கொண்டு கிறிஸ்தவ அன்பர் குரலில் பிசிறோடு தேம்ப ஆரம்பித்தார்.

அவரை மெள்ளத் தேற்றினார் மகாலிங்கம். அடுத்து என்ன செய்யலாம் என்பதையும் கிறிஸ்தவ நண்பரின் முடிவுக்கே விட்டு விடலாம் என்று தீர்மானித்து, ‘அடுத்தது என்ன?’ என்பதுபோல் அவரை ஒரு பார்வை பார்த்தார் மகாலிங்கம்.

இப்போது விழித்துக் கொண்டார் கிறிஸ்தவ அன்பர். ”இனிமேலும் இங்கிருந்து நாம புறப்பட்டுப் போறது அவ்வளவு நல்லது இல்லேன்னு எனக்குத் தோன்றுகிறது. அதனால், மகான் சொன்ன வார்த்தைகளை மதித்து, நாளை காலை புறப்படுவோம். இன்று இரவு இங்கேயே தங்கி விடுவோம்என்று அவரே தீர்மானமாகச் சொன்னார்.

இந்த வார்த்தைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால், இப்படி இரண்டு பேரும் காயங்களுடனும், வலியுனுடனும் அவஸ்தைப் பட்டிருக்க வேண்டாமேஎன்பதுபோல் ஏக்கமாக அவரைப் பார்த்தார் மகாலிங்கம்.

அங்கிருந்த ஒரு சில உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இரண்டு பேரும் விந்தி விந்தி நடந்து மகா பெரியவா இருந்த முகாமுக்கே திரும்பி வந்தனர்.

பெரியவா ஓய்வுக்குச் சென்று விட்டதாக அங்கிருந்த பக்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

மகா பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்த வெளியூர் அன்பர்கள் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

மகாலிங்கமும், கிறிஸ்தவ அன்பரும் தோதான இடம் பார்த்துப் படுத்தனர்.

அடுத்த ஒரு சில விநாடிகளிலே தூக்கமும் அவர்களைத் தழுவிக் கொண்டது.

பொழுது மெள்ள மெள்ள விடிய ஆரம்பித்தது.

அதிகாலை மகா பெரியவாளைத் தரிசித்து விட்டுத் தங்கள் ஊருக்குப் புறப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் குளித்து முடித்து விட்டு, அந்த மகானைத் தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

அரக்கப் பரக்க எழுந்தார்கள் மகாலிங்கமும் கிறிஸ்தவ அன்பரும்.

முதல் நாள் இரவு பட்ட அடி, நீண்ட தூக்கத்தை வரவழைத்து விட்டது போலும்.

பல் துலக்கினார்கள்.

அவசரம் அவசரமாக நீராடினார்கள்.

ஒரு இடத்தில் சூடான காபி விநியோகம் நடந்து கொண்டிருந்தது. குடித்தார்கள்.

மகாலிங்கம் விபூதி தரித்துக் கொண்டு, ”என் குருவிடம் சொல்லி விட்டு வருகிறேன். நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்க… ”அவசியம்என்று கிறிஸ்தவ நண்பரும் வந்து அவருடன் ஒட்டிக் கொண்டார்.

விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் கயிலாசபதியாக காஞ்சி மகா பெரியவா தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பக்தர்கள்மடார் மடார்என்று தங்கள் கன்னத்தில் அறைந்து கொண்டு மகானுக்கு முன்னால் விழுந்து வணங்கி, கண்ணீரால் பிரார்த்தனைகளைச் சொல்லி, பிரசாதம் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள்.

மகாலிங்கத்தின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். கிறிஸ்தவ அன்பர், தன் கைகளைக் குவித்து அவருக்கு வணக்கம் சொன்னார்.

அவ்வளவுதான்….

இவர்கள் இருவரும் எதிர்பார்க்காத விஷயத்தைஅந்த கலியுக தெய்வம் சொன்னது.

மகாலிங்கத்தைப் பார்த்து, ”ஏண்டாநான்தான் இன்னிக்கு இங்க தங்கிட்டுக் கார்த்தால போகலாம்னு நேத்திக்குச் சொன்னேனேஒன் நண்பன் சொல்லிட்டானேன்னு மறுக்க முடியாம நீயும் கௌம்பிட்டியோஎன்று கிறிஸ்தவ அன்பரையும் ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் மகாலிங்கத்தின் மீது பார்வையைத் திருப்பி, ”நல்லவேளைதலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுத்து. பெருசா நடக்க இருந்த விபத்தை ஒன் நண்பனோட கடவுள் (ஜீசஸ்) காப்பாத்திட்டார். இனிமே, தைரியமா போங்கோஎன்று பிரசாதம் கொடுத்து பெரியவா சொன்னபோது, இருவரின் கண்களிலும் நீர் பனித்தது.

என்னே ஒரு தன்னடக்கம்

உங்களைக் காப்பாற்றியது நான்தான்என்று சொல்லாத அடக்கம் எந்த மகானுக்கு வரும்!

இப்படியும் ஒரு மகானாகாப்பாற்றியது இவர். ஆனால், என் தெய்வம் என்னைக் காப்பாற்றியதாக அடக்கத்துடன் தன்னை காட்டிக் கொள்கிறாரேஎன்று கிறிஸ்தவ

அன்பர் மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளைப் பார்த்து கைகூப்பினார்.

மகானின் சந்நிதியை விட்டு வெளிவர மனம் இல்லாமல் இருவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்.

பொழுது புலர ஆரம்பித்தது. பயணமும் ஆரம்பமானது.

அதன் பின் வந்த நாட்களில், மகாராஷ்டிரத்தின் எந்த மூலைக்கு மகா பெரியவா வந்தாலும், அவரைச் சென்று தரிசிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார் அந்த கிறிஸ்தவ அன்பர்.

காஞ்சி பீடாதிபதியான மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவரது பார்வை நம் மீது விழ வேண்டும்அவரிடம் இருந்து ஒரு பிரசாதம் பெற வேண்டும்அவரிடம் ஏதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேச வேண்டும்நம் பிரச்னைகளை அந்த மகான் தீர்க்க வேண்டும்

இப்படி பல்வேறு ஆசைகளுடன் எத்தனையோ பக்தர்கள் அவர் சென்ற இடத்துக்கெல்லாம் பயணப்பட்டார்கள். அவரது பார்வை தங்கள் மீது விழும்படி போலித்தனமான பக்தியுடன் நடந்து கொண்டார்கள்.

இவர்கள் ஒரு வகை. இவர்களுக்கு முழுக்க முழுக்க எதிர்பார்ப்பு.

இன்னொரு வகை பக்தர்களும் மகா பெரியவாளுடன் இருந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

காஞ்சி பெரியவா ஒரு நடமாடும் தெய்வம்சாட்சாத் சர்வேஸ்வரனின் மறு அவதாரம்இந்த தெய்வம் நடக்கின்ற பாதையில் நாமும் நடக்க வேண்டும். இவருக்கு நம்மால் முடிந்த பணிவிடைகளைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட எளிமையான ஒரு சந்நியாசியை இனி வரும் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாதுஎன்று எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘நடமாடும் தெய்வத்துடன் நானும் நடந்தேன். அந்த சந்தோஷம் ஒன்றே காலாகாலத்துக்கும் என் மனதில் நிலைத்து நிற்கும்என்கிற பெருமிதத்தோடு அந்த மகானுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்கள்.

இத்தகையவர்களுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவில்லை. ஆனால், அதை விட மிகவும் உயர்ந்த பொக்கிஷமான மகா பெரியவாளின் அருகே வசிக்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது.

சுய லாபம் எதிர்பார்த்து வந்தவர்களால் மகா பெரியவாளை நெருங்க முடியவில்லை.

எதுவும் வேண்டாம்மகான் அருகில் இருக்கின்ற பேறு போதும்என்று வந்தவர்கள், எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் பெற்றார்கள்.

இது வேண்டும்என்று ஆசைப்படுவதல்ல ஆன்மிகம்.

இது போதும்என்று திருப்திப்படுவதே ஆன்மிகம்.

ஆசைக்கு அளவில்லை. அது பல துஷ்ட குணங்களை நம்முள் விதைக்கும்.

திருப்திக்கு அளவுண்டு. அது மனிதப் பண்புகளை நம்முள் வளர்க்கும்.

மகானுடன் பழகியவர்கள், மகானுடன் வாழ்ந்தவர்கள், மகானுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லோருமே ஆனந்தமாக வாழ்ந்தார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகா பெரியவா சொல்லாமல் புரிய வைத்த மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவம் இது.