பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது.
தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், ‘இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல… ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்‘ என்கிற நேர்மறை எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், ‘இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!’ என்கிற எதிர்மறை எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.
நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!
பரிபூரண சரணாகதிதான் பக்தி.
ஆலயத்தினுள் இருக்கும்போது மட்டும் பக்தி கூடாது.
வீட்டில், அலுவலகத்தில், பயணத்தில், யாத்திரையில் – இப்படி எங்கு இருந்தாலும், பக்தி சிந்தனை நம் மனதில் முழுமையாக இருந்தால்தான், இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.
இன்றைக்குப் பலரது பிரார்த்தனைகள் ஏன் பலிக்க மாட்டேன் என்கிறது என்றால், கோயிலுக்குள் சென்று பிரார்த்தனையைச் சொல்லி விட்டு வெளியே வந்தவுடன், அடுத்த நிமிடமே இதை நிறைவேற வேண்டும் என்று எதிர்பாக்கிறார்கள். இது பிரார்த்தனை அல்ல. பேராசை.
ஒரு தென்னங்கன்றை நடும்போது ‘இது எதிர்காலத்தில் நன்றாக வளர்ந்து நமக்கு தேங்காய்களைத் தரும்‘ என்ற நம்பிக்கையில் நடுகிறோம்.
நட்டு விட்டால் மட்டும் போதாது.
அதற்கு எப்போது நீர் விட வேண்டும்… என்ன உரம் வைக்க வேண்டும் என்பனவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும்.
குழந்தை பெற்றால் தானாகவே வளர்ந்து விடும். ஆனால், அந்தக் குழந்தை எதிர்காலத்தில் நல்லவனாக இருக்குமா, துஷ்டனாக மாறி விடுமா என்பது சம்பந்தப்பட்டவர் வளர்ப்பில் இருக்கிறது.
ஆக, தென்னையை வளர்ப்பதிலும் பிள்ளையை வளர்ப்பதிலும் போதிய கவனம் காட்டாவிட்டால், இரண்டுமே பாழாகி விடும்.
அதுபோல் நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனமும் பாழாகி விடும்.
ஷீர்டி பாபா, பகவான் ரமணர், காஞ்சி பெரியவா போன்ற மகான்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அவதாரம் செய்து பக்தி மார்க்கத்தின் அவசியம் குறித்து விளக்குவதற்காக நம்முள் நல்ல விதைகளை விதைத்திருக்கிறார்கள்.
அதுதான் ‘பக்தி சிந்தனை‘ என்கிற மாபெரும் விருட்சமாக இன்றைக்கு ஒவ்வொருவருக்குள்ளும் வளர்ந்திருக்கிறது.
‘உன் நண்பன் யாரெனச் சொல். நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்‘ என்பது போல், ‘உன் மனம் எப்படிப்பட்டது என்று சொல். உன் பிரார்த்தனை பலிக்குமா என்று சொல்கிறேன்‘ என்கிற அளவுக்கு பக்தியிலும் நம்பிக்கையிலும் இந்த மனமானது பக்குவப்பட வேண்டும்.
ஆத்திகவாதியின் மனதைக்கூட அசைத்துப் பார்த்து விட முடியும். ஆனால், நாத்திகவாதியின் மனதை மாற்றுவது என்பது சிரமம். அவர்கள் எப்போதும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நாத்திகவாதிதான் பாலன். இவருக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. கம்யூனிஸ்ட்வாதி.
அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நாத்திக எண்ணங்கள் இவருக்குள் பலமாக வேரூன்றி இருந்தன.
வாலிப வயதில் பாலன் சென்னை தி.நகர் ராமானுஜம் தெருவில் தனது மூத்த சகோதரி ராஜம்மாள் (இப்போது உயிருடன் இல்லை) இல்லத்தில் வசித்து வந்தார்.
பாலன் கோயிலுக்குப் போக மாட்டார். மகான்களை தரிசிக்க மாட்டார். அதான் நாத்திகவாதி ஆயிற்றே!
குடும்பத்தில் மூத்தவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். திருத்தப் பார்த்தார்கள். ஒன்றும் பலன் கொடுக்கவில்லை. ‘சரி, இனிமே தானா திருந்தினால்தான் உண்டு‘ என்று அனைவரும் விட்டு விட்டார்கள்.
மூத்த சகோதரி ராஜம்மாளுக்கும் அவரது கணவரது குடும்பத்தினருக்கும் இறை நம்பிக்கை உண்டு; காஞ்சி மகா பெரியவா பக்தியும் உண்டு.
அப்போது காஞ்சி மகா பெரியவா சென்னையில் முகாமிட்டிருந்தார். இந்த மகான் சென்னையில் எங்கு முகாமிட்டிருந்தாலும், அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் சொல்லி மாளாது. அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என்று இவரை தரிசித்து ஆசி பெற, வி.வி.ஐ.க்கள் திரள்வர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு யாத்திரையாக நடந்து சென்று ஆங்காங்கு தங்கி, பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவா
அன்றைய தினம் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே ஒரு பிரமாண்டமான மைதானத்தில் முகாமிட்டிருந்தார்.
இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் ராஜம்மாள் மிகவும் சந்தோஷப்பட்டார். ‘ஆகா… காஞ்சி மகா பெரியவா நாம் வசிக்கும் இடத்துக்கு அருகே வந்து முகாம் இருக்கிறார்… அவரைப் போய் தரிசனம் செய்ய வேண்டும்…’ என்று தீர்மானித்தார்.
மகா பெரியவா தன் இல்லம் அருகே முகாமிட்டிருந்த அன்று ராஜம்மாளால் செல்ல முடியவில்லை. ஆனால், இவரது மகள் சுசீலா (இப்போது உயிருடன் இல்லை), ”அம்மா… மகா பெரியவா நாம் இருக்கின்ற இடத்துக்கு அருகே வந்திருக்கார். நான் இன்று மகா பெரியவாளை தரிசிக்கணும்னு ஆசைப்படறேன். துணைக்கு நீயும் வாயேன்” என்றாள்.
மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்று தன் பெண் பக்தி சிரத்தையுடன் சொல்கிறாளே என்று மிகவும் சந்தோஷப்பட்ட ராஜம்மாள், ”சுசீலா… இன்னிக்கு என்னால வர முடியாது. மகா பெரியவா இன்னும் சில நாள் சென்னையிலதான் தங்கி இருக்கப் போறா… நான் அப்புறமா ஒரு நாள் தரிசனம் பண்ணிக்கறேன்.
இருந்தாலும், நீ தாராளமா போய் தரிசனம் பண்ணிட்டு வா. உனக்குத் துணையா நான் வர முடியலேன்னாலும், மாமாவை (பாலன்) உன்னோடு அனுப்பறேன். அவஸ்யம் போய் தரிசனம் பண்ணிட்டு வா… அந்த மகானோட பார்வை உன் மேல பட்டு உன் வாழ்க்கை ஆனந்தமா இருக்கணும்டியம்மா” என்று நெகிழ்ந்தார்.
அம்மா உத்தரவு கொடுத்து விட்டாளே… துணைக்கு மாமாவையும் அனுப்புவதாகச் சொல்லி இருக்கிறாளே என்று மகள் சுசீலாவுக்கு ஆனந்தம்.
இதை அடுத்து, தன் தம்பி பாலனை அழைத்து இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக ”பாலா… பாலா” என்று அவர் தங்கி இருந்த அறையைப் பார்த்து உரக்கக் குரல் கொடுத்தார் ராஜம்மாள்.
பாலனுக்கு நாத்திக எண்ணங்கள் பெருமளவில் குடி கொண்டிருந்தாலும், தன் அக்கா ராஜம்மாள் மீது அப்படி ஒரு பயம். மரியாதை உண்டு. அக்காவின் வார்த்தைகளுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மறுப்பு சொல்வதில்லை.
ராஜம்மாளின் குரல் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வந்து அவர் முன் நின்றார் பாலன்.
விஷயத்தைச் சொன்னார் ராஜம்மாள்.
‘ஏதுடாது… நான் செல்ல விரும்பாத ஒரு இடத்துக்கு அக்கா என்னை அனுப்புகிறாரே‘ என்று கொஞ்சமும் யோசிக்காமல் முகம் சுளிக்காமல், ”சரிக்கா… நான் பத்திரமா கூட்டிண்டு போயிட்டு வந்துடறேன்” என்று புன்னகைத்த முகத்துடன் சொல்லி விட்டுத் தன் அறைக்குப் போய் விட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சுசீலா தயாராகி, மாமா பாலன் முன் வந்து நின்றார். ”மாமா… நான் தயார். நீங்க தயாரா?” என்றாள்.
பாலனும் தயாராக இருந்தார். எழுந்தார்.
”தோ பார்… ஒரு முக்கியமான விஷயம்… இது போன்ற இடங்களுக்கு நான் வர மாட்டேன்னு உனக்கும் தெரியும். ஒங்க அக்காவுக்கும் தெரியும். அதையும் மீறி அவ என்கிட்ட இதை சொல்லி இருக்காள்னா ஒன்னைப் பத்திரமா கூட்டிண்டு போய் கூட்டுண்டு வரணும். ஜஸ்ட் ஒரு எஸ்கார்டு வேலை, அவ்வளவுதான்.
அங்கு உன் கூட நான் துணையா வந்துண்டே இருப்பேன். எல்லோரு மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ற மாதிரி நான் மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ண மாட்டேன். அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட மாட்டேன். வலது கையால வாயப் பொத்திண்டு எல்லோரும் பண்றாப்ல என்னால பண்ண முடியாது. நன்னா புரிஞ்சுக்கோ. இது மாதிரி பண்ணச் சொல்லி என்னை நீ வற்புறுத்தக் கூடாது.
எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பின்னாடி ஒங்க அம்மாகிட்ட, ‘மகா பெரியவாளுக்கு மாமா மரியாதையே கொடுக்கலை அப்படி இப்படின்னு எல்லாம் புகார் பட்டியலெல்லாம் வாசிக்கக் கூடாது. சரியா?” என்று மிக நீளமான ஒரு கண்டிஷன் போட்டார் பாலன்.
தலையை மேலும் கீழுமாக அசைத்து, ‘அப்படியே ஆகட்டும் மாமா‘ என்பதாக ஆமோதித்தாள் சுசீலா.
இருவருமாக வெளியே வந்தனர். வீட்டை விட்டுக் கிளம்பினர்.
அடுத்த அரை மணி நேரத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்த தி.நகர் ரங்கநாதன் தெரு மைதானத்தில் இருந்தனர்.
மகா பெரியவாளைத் தரிசிக்க அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்களைப் பார்த்துப் பிரமித்துப் போனார்கள் இருவரும். மிக நீண்ட வரிசையில் பக்தர்கள் மெள்ள மெள்ள நகர்ந்து கொண்டிருந்தனர்.
பாலனும் சுசீலாவும் இந்த வரிசையில் கடைசி நபர் நின்று கொண்டிருக்கும் இடத்தில் போய் சேர்ந்து கொண்டனர்.
வரிசையில் நின்று கொண்டிருப்பவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப அந்த மகானுக்கு சமர்ப்பிப்பதற்காக பழங்கள், பூக்கள், உலர் வகை பழங்கள், சிறு சிறு பாத்திரங்கள் போன்றவற்றை வைத்த வண்ணம் காணப்பட்டனர்.
தான் நின்றிருந்த இடத்தில் இருந்தபடி மகா பெரியவா அமர்ந்திருக்கும் இடத்தைத் தேடினார் பாலன். இவர் இருந்த இடத்தில் இருந்து சுமார் இருநூறு அடி தள்ளி ஒரு மேடையில் மகான் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அவருக்கு அருகே ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் சிலர் சேவை புரிந்து கொண்டிருந்தனர்.
மகா பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே சில அடிகள் தள்ளி ஒரு சில பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெரியவாளைப் பார்த்துக் கைகளைக் கூப்பியபடி அமர்ந்திருந்தனர்.
மகா பெரியவாளுக்கு சமர்ப்பிப்பதற்காக ஒரு சில பழங்களைத் தன் கையில் வைத்திருந்தாள் சுசீலா.
தனக்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களை மெள்ள கழுத்தைத் திருப்பி எட்டிப் பார்த்தார் பாலன். ‘இவர்கள் அனைவரும் தரிசித்த பிறகுதான் என் முறை‘ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார்.
மெள்ளத் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தார். ஒரு சில நிமிடங்களுக்கு இவருக்குப் பின்னால் சுமார் இருநூறு முந்நூறு பேர் சேர்ந்து விட்டிருந்தார்கள்.
தனக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத ஓர் இடத்தில் – வேண்டா வெறுப்பாக தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து தன்னையே நொந்து கொண்டார் பாலன்.
தன் அக்காவின் வார்த்தைகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு இந்த வரிசையில் கொஞ்சமும் உணர்ச்சி இல்லாமல் – பக்தி இல்லாமல் நின்றிருந்தார் பாலன்.
அப்போது இந்தப் பிரமாண்ட இல்லத்தில் வாசலில் படகு போன்ற ஒரு கார் வந்து நின்றது.
பொசுக்கென்று மைதானத்தின் வாசல் வரை வந்து நின்ற இந்த கார் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
வரிசையில் நின்றிருந்தவர்கள் – பாலன் உட்பட – அனைவரும் காரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உள்ளிருந்து யார் இறங்கப் போகிறார்கள்?
வண்டிகளும், வாகனங்களும் நிறுத்துகிற இடம் இந்த மைதானத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, மகா பெரியவா தரிசனத்துக்கு வருகின்ற அன்பர்கள் எவராக இருந்தாலும் வாகனங்களை அங்கு ‘பார்க்‘ செய்து விட்டு, சிறிது தொலைவு காலாற நடந்துதான் மைதானத்துக்குள் வர வேண்டும். இதுதான் அப்போதைக்கு அங்கே இருக்கின்ற நடைமுறை!
வருகின்ற பிரபலங்கள் பலரும் அப்படித்தான் நிறுத்தி விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இவர் மட்டும் எப்படி அதில் இருந்து தப்பி உள்ளே வந்தார்? ஒருவேளை தான் யார் என்பதைப் பற்றிச் சொல்லி விதிவிலக்கு பெற்றுக் கொண்டு விட்டாரா?
ஆனால், மகா பெரியவா தங்கி இருக்கிற இடத்துக்கு இவ்வளவு அருகில் வந்து வண்டியை நிறுத்தி, ஒருவர் இறங்கினால் ஒன்று – அவர் உடல் நிலை கருதி இப்படி வர வேண்டும். இரண்டு – தன் பகட்டைப் பறை சாற்றிக் கொள்வதற்காக இப்படி வந்து இறங்கலாம்.
படகு போன்ற கார் நின்றதும், அந்த வண்டியின் டிரைவர் தன் இருக்கையில் இருந்து அவசரம் அவசரமாக இறங்கி, காரை ஒரு அரை வலம் வந்து பின்பக்க இருக்கைக் கதவை மிகவும் பவ்யமாகத் திறந்து விட்டார்.
வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களின் பார்வை இன்னும் கூரானது. காரில் இருந்து இறங்கப் போகிறவர் யார் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினர்.
பஞ்சக்கச்சம் அணிந்து, துண்டை இடுப்பில் சுற்றிக் கட்டியபடி, உடல் முழுக்கத் திருநீறு பூசிய கோலத்தில் ஒருவர் இறங்கினார். வயது சுமார் 50 இருக்கலாம். அன்றைக்கு சென்னையில் வசித்து வந்த ஒரு பிரபலம் அவர்.
ஓ… இவர்தானா?’ வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள், தங்களின் சந்தேகத்துக்கு பதில் கிடைத்ததும், ஒரு வித சலிப்புடன் வேறு பக்கம் திரும்பினர்.
இறங்கியவர் காருக்குள் இருந்து பிரமாண்டமான ஒரு வெள்ளிக் குடத்தை எடுத்துக் கொண்டார்.
குடத்தைத் தானே சுமந்தபடி மகா பெரியவா இருந்த திக்கை நோக்கி நடந்தார். ஸ்ரீமடத்துக் காரியதரிசிகள் சிலர் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவிப்பது, புன்னகையைப் பரிமாறுவது என்று தங்கள் அந்நியோன்னியத்தைக் காண்பித்தனர்.
மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக கால் கடுக்க வெகு நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளிக் குடத்துடன் நடந்து செல்லும் இந்த பிரபலத்தைப் பார்த்தனர். ‘என்னடாது… தெய்வத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்று சொல்வார்கள்… இந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிப்பதற்காக அனைத்து ஜாதியினரும் ஏழை – பணக்காரர் என்கிற வித்தியாசம் இல்லாமல் இங்கே அமைதியாக நின்று கொண்டிருக்கிறோம். இவர் மட்டும் இப்படி ஒரு தனி பாதை வகுத்துக் கொண்டு மகா பெரியவாளை நோக்கிச் செல்கிறாரே… இதைத் தடுத்து அவரை வரிசையில் அனுப்ப வேண்டிய ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும் ஒரு வார்த்தை சொல்லாமல் அவரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுப் போகிறார்களே…’ என்று ஒரு சிலர் தங்களுக்குள் பொருமித் தீர்த்து விட்டார்கள்.
பாலனும் இந்தக் காட்சியைக் காணத் தவறவில்லை. கம்யூனிஸ எண்ணங்கள் மட்டுமே நிறைந்திருக்கக் கூடிய அவரது மனம், ‘ஒரு மகானைத் தரிசிக்க வந்த இடத்திலும் இப்படி வேறுபாடா? தன்னை நோக்கி வருகின்றவர் பணக்காரர் என்பதால், மகா பெரியவாளும் அவரை வரவேற்பாரோ?!’ என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தது.
மகா பெரியவா அமர்ந்திருந்த மேடை நோக்கி வெள்ளிக் குடத்துடன் செல்லும் பணக்காரரை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் பாலன். ஒரு கட்டத்தில் தன் பார்வையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டார்.
அதன் பின் தனக்கு முன்னாலும் பின்னாலும் நின்று கொண்டிருந்த பக்தர்களைத் திரும்பிப் பார்த்து நோட்டமிட்டார். யாரிடமும் எந்த விதமான ரியாக்ஷனும் இல்லை.
‘இங்கு கூடி இருக்கும் பக்தகோடிகள் யாருமே வெள்ளிக் குட பணக்காரரின் இந்தப் போக்கைத் தட்டிக் கேட்க மாட்டார்களா? அந்தப் பணக்காரரை அழைத்து, ‘ஐயா… நாங்களும் பெரியவா தரிசனத்துக்குத்தான் வந்திருக்கிறோம். வாருங்கள் வரிசைக்கு. இந்த இடத்தில் அதுதான் நாகரிகம்‘ என்று சொல்லலாமே… யாருக்குமே தைரியம் இல்லையா? ஒருவேளை பணக்காரர் மேல் ஏதாவது பழிச் சொல் சொல்லப் போய் மடத்தின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு விடுவோமோ‘ என்று பயப்படுகிறார்களோ?’ – இப்படி எல்லாம் யோசித்தார் பாலன்.
அருகில் இருந்த சுசீலாவிடம் மிகவும் குசுகுசுப்பாக – அவள் காதில் மட்டும் விழும்படி, ”பாத்தியா… இதுக்குத்தான் நான் இது போன்ற இடங்களுக்கு வருவதே இல்லை… இத்தனை பேர் வரிசைல நிக்கறோம். மகா பெரியவாளுக்குக் காணிக்கையா ஒரு பெரிய வெள்ளிக் குடம் குடுக்கப் போறார்ங்கிறதுக்காக இந்த வரிசைல நிக்காம எவ்ளோ செருக்கோட போறார் பாத்தியா… இந்த மடத்துக்கு யார் யார் பொன்னும் பொருளும் கொண்டு வந்து சேர்க்கிறார்களோ, அவாளுத்தான் மரியாதை போலிருக்கு…
வரிசைல வர்றவாளுக்கு மரியாதை இல்லை… ‘வரிசை‘யோடு (ஏதேனும் காணிக்கைப் பொருட்கள்) வர்றவாளுக்குத்தான் மரியாதை” என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ”மாமா… சத்தம் போடாம இருக்கியா… நீ மெதுவாத்தான் பேசறே, இல்லேங்கலை. இருந்தாலும், மகா பெரியவா நமக்கெல்லாம் கண் கண்ட தெய்வம். அவர் இருக்கக் கூடிய இடத்துல அவரைப் பத்தி அபசாரமா, அவரைக் குறை சொல்லி எதுவும் பேசக் கூடாது” என்று உதட்டில் வலது ஆள்காட்டி விரலை வைத்து ‘உஸ்ஸ்…’ என்றாள் கோபமாக.
பாலன் அடங்கவில்லை. உதடுகள் சொல்லத் துடிக்கும் அத்தனை வார்த்தைகளையும் அவரது முகம் வெளிப்படுத்தியது. ”இப்ப தெரியறதா… என்னை மாதிரி ஆட்கள் ஏன் கோயிலுக்குப் போறதில்லே… மகான்களைத் தரிசிக்கப் போறதிலேனு… எல்லா வழிபாட்டு இடத்திலும் இது போல ஒரு பாரபட்சம்தான் இன்னிக்குத் தலை விரித்தாடுது. பணக்காரனா இருந்தா தனி வழி… ஒண்ணும் இல்லாதவனா இருந்தா பொது வழி…” என்று பாலன் நீட்டி முழக்கியபோது ‘எதுவும் பேசக் கூடாது‘ என்பது போல் மீண்டும் எச்சரித்தாள் சுசீலா.
”இல்லே சுசீலா… உன் அக்காவோட வார்த்தையைத் தட்ட முடியாதுங்கற ஒரு காரணத்துக்காகத்தான் உன்கூட வந்திருக்கேன். இப்ப ஒன் கையிலயும் இது போல பெரிய வெள்ளிக் குடம் இருந்தா, மடத்து ஆட்கள் ரெண்டு பேர் வந்து, ‘வாங்கோ…’னு ஒன்னையும் தனியா கூட்டிண்டு போயிடுவா” என்று அதே நிதானத்துடன் – மெதுவாக – அருகில் இருப்பவர்கள் காதில்கூட விழாதவாறு சொன்னார் பாலன்.
”மாமா… சொன்னா புரிஞ்சுக்கோங்கோ… இவர் நாம வணங்குற குரு. அவருக்குத் தெரியும் எல்லாம்” என்று மெதுவாக பாலன் காதில் மட்டும் கேட்குமாறு சொல்லி, தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
மகா பெரியவாளின் அருகே கைங்கர்யத்துக்காக நின்றிருந்த ஒரு சிலர் கூடுதல் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததால், வரிசை கடகடவென்று போய்க் கொண்டிருந்தது.
மகா பெரியவாளின் தவத்துக்கும் பக்திக்கும் கட்டுப்பட்டு வரிசையில் வந்து கொண்டிருக்கும் பக்தகோடிகள் ஒரு சின்ன சத்தம் இல்லாமல், சச்சரவு இல்லாமல் அமைதியாக தரிசித்து விட்டு நகர்ந்து கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட மகா பெரியவாளை நெருங்குகிற வேளை வந்தது – பாலனுக்கும், சுசீலாவுக்கும்.
சுசீலாவின் உதடுகள், ‘மகா பெரியவா… மகா பெரியவா… மகா பெரியவா…’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன. பார்வை அந்த மகானின் மீதே பதிந்திருந்தது. கைகள் இரண்டு அவரை நோக்கிக் கூப்பிய வண்ணம் காணப்பட்டன. மனம் முழுக்க மகா பெரியவாளை சுமந்து கொண்டு அடி மேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்தாள்.
மகா பெரியவாளை நெருங்கக் காத்திருக்கும் பக்தகோடிகள் அனைவருமே அநேகமாக சுசீலாவின் மன நிலையில்தான் இருந்தனர். அவர்கள் முகத்தில் அத்தனை பக்தி. அத்தனை மரியாதை. அத்தனை நெகிழ்ச்சி.
இந்த சூழ்நிலையில் மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டவர் – பாலன் மட்டுமே!
உலகமே போற்றி வியக்கின்ற ஒரு மகானை இன்னும் சில விநாடிகளில் தரிசிக்கப் போகிறோம் என்கிற பரவசம் இல்லை.
முகத்தில் பக்தி இல்லை.
நெற்றியில் திருநீறு இல்லை.
கைகளில் காணிக்கை இல்லை.
தெய்வத்தின் திருச்சந்நிதியை நெருங்குகின்ற வரையிலும் அவரிடம் எந்த ஒரு மாறுதலும் ஏற்படவில்லை.
ஆயிற்று!
பாலனுக்கும் சுசீலாவுக்கும் முன்னால் இரண்டே இரண்டு நபர்கள் மட்டும் இருக்கின்றனர்.
இன்னும் ஓரிரு நிமிடங்களுக்குள் தரிசனம்.
ஆயிற்று. இவர்கள் முறை வந்தாயிற்று!
சுசீலாவும், பாலனும் மகா பெரியவாளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர்.
தான் கையில் வைத்திருந்த பழங்களை, மகா பெரியவாளுக்கு முன்னால் இருந்த மூங்கில் தட்டில் வைத்தாள் சுசீலா.
பின், பெரியவாளை நமஸ்கரித்தாள். எழுந்து கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்தாள்.
பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்திகள் சுசீலாவுடன் நின்றிருந்த பாலனைப் பார்த்து, இவரும் மகா பெரியவா தரிசனத்துக்குத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி, ‘நீங்களும் நமஸ்காரம் பண்ணுங்கோ‘ என்று சைகை காட்ட யத்தனிக்கும் நேரத்தில்… அந்த சிப்பந்திகளைப் பார்த்து, ‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். பேசாம இரு‘ என்பது போல் அவர்களை கையமர்த்தினார் மகா பெரியவா.
மிகவும் பவ்யமாக, மகா பெரியவா திருச்சந்நிதி முன் நின்றிருந்த சுசீலா, பிரசாதம் வேண்டி தன் வலது உள்ளங்கையை இடது உள்ளங்கை மேல் குறுக்காக வைத்தபடி நீட்டினாள்.
குங்குமத்தையும், மஞ்சள் மசேலென்று இருந்த ஆரஞ்சு பழம் ஒன்றையும் பிரசாதமாகக் கொடுத்தார் மகா பெரியவா.
வாங்கிக் கொண்டு நகர முற்பட்ட சுசீலா, தன் அருகே தேமே என்று நின்றிருந்த பாலனைப் பார்த்து, ‘வாங்கோ… பொறப்படலாம்‘ என்பதாக சைகை காட்டினாள்.
பாலன் அந்த இடத்தில் இருந்து நகர முற்படும் விதமாக சுசீலாவைத் தொடர்ந்து இரண்டு அடிகளை எடுத்து வைத்தார்.
அந்தப் பரப்பிரம்மம், இவர்கள் செல்கிற வலப்பக்கம் பார்த்தது.
பாலனைப் பார்த்து ஒரு சொடக்குப் போட்டது.
அந்த சொடக்கு சத்தத்தில் கவரப்பட்ட பாலன் திரும்பினார். மகா பெரியவாளைப் பார்த்தார்.
‘கிட்டக்க வா‘ என்பது போல் அந்த தெய்வம் சைகை செய்தது. ஒரு குழந்தைகூடப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த சைகை இருந்தது.
மகா பெரியவா ஒரு புன்னகையுடன் தன்னைப் பார்த்து ‘வா‘ என்று அழைப்பது போல் பட்டது.
மகானுக்கு அருகில் இருந்து அவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்திகளும், தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த பாலனுக்கு ஜாடை காட்டி, மகா பெரியவா அழைப்பதாகச் சொன்னார்கள்.
காஞ்சி மகா பெரியவாளை மிக நீண்ட வரிசையில் வந்து தரிசித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்குத் தற்காலிகமாக ஒரு ‘பிரேக்‘ போடப்பட்டது.
‘பல மணி நேரம் இந்த வரிசையில் நின்று மெள்ள ஊர்ந்து நடமாடும் தெய்வத்தின் அருகில் வந்து விட்டோம்… இந்த தெய்வத்தை இதோ, இன்னும் ஒரு சில நிமிடங்களில் தரிசிக்கப் போகிறோம்‘ என்கிற ஆவலில் முகம் முழுக்கப் பரவசத்தோடு நெருங்கி இருந்த பக்தர்கள், அவர்கள் நின்ற இடத்தில் இருந்து அதற்கு மேல் ஓரடி எடுத்து வைக்க முடியாதபடி ஒரு சில சிப்பந்திகள் அணை போல் நின்று கொண்டார்கள்.
அப்படி மகா பெரியவாளின் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பக்தகோடிகள் அனைவருக்கும், ‘யார் இந்த ஆசாமி? தரிசனம் முடிந்து சென்று விட்ட பிறகு மகா பெரியவா மீண்டும் அழைக்கின்றாரே? மடத்துக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட குடும்பமோ?’ என்று பாலனை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்தனர்.
பாலன் ஒரு நாத்திகவாதி என்பதும், அவர் மகா பெரியவாளைத் தரிசிக்க வரவில்லை என்பதும் அந்த பக்தர்களுக்குத் தெரியாது.
சுசீலாவும் திகைத்துப் போய் நின்றாள். மாமா பாலனையும், மகா பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்தாள். ‘ஒருவேளை மாமா என் காதில் சொன்ன ‘வெள்ளிக் குடம்‘ விஷயத்தை மகா பெரியவா தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு விட்டாரோ?’ என்று பதறினாள்.
‘மகா பெரியவா தன்னை ஏன் அழைக்க வேண்டும்… அதுவும் சிப்பந்திகளும் வேறு இந்த அழைப்பை ஊர்ஜிதப்படுத்தி என்னைக் கூப்பிடுகிறார்களே‘ என்று குழம்பி, அப்படியே ‘ரிவர்ஸ்‘ எடுத்து மகா பெரியவா அருகே சென்று பட்டும் படாமல் நின்றார் பாலன்.
சுசீலாவும் ஒன்றும் புரியாமல் மாமா பாலனை ஒட்டியபடி நின்றாள்.
பாலனைப் பார்த்து மீண்டும் ஒரு புன்னகை பூத்தார் மகா பெரியவா. பிறகு, நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தன் வலது ஆட்காட்டி விரலால் அடையாளம் காண்பித்து, ”தோ, அங்கே பார்” என்றார் மகா பெரியவா.
‘இவர் சுட்டிக் காட்டும் இடத்தில் யார் இருக்கிறார், புறப்பட்டுப் போன என்னை எதற்காக அழைத்துப் பார்க்கச் சொல்கிறார்?’ என்று குழம்பிய பாலன் மகா பெரியவா காட்டிய திசையில் பார்வையைத் திருப்பினார்.
ஆனால், இவருக்கு ஒன்றும் புரியவில்லை. மகா பெரியவாளையும், அந்த வரிசையையும் மாறி மாறிப் பார்த்தார் பாலன். மகா பெரியவா யாரை அடையாளம் காட்டுகிறார் என்பது சரியாகப் புரியவில்லை பாலனுக்கு. சுசீலாவுக்கும்தான்!
பிறகு மகா பெரியவா, மீண்டும் தன் வலது ஆட்காட்டி விரலை நீட்ட… அது சுட்டும் இலக்கைக் கூர்ந்து கவனித்த பாலன், அதிர்ந்து போனார்.
அந்த வரிசையில் – மகா பெரியவா காட்டிய திசையில் நின்று கொண்டிருந்தவரைப் பார்த்த பாலனுக்குப் பேரதிர்ச்சி!
சற்று முன் எந்த ஒரு பணக்கார அன்பர் படகு போன்ற காரில் இருந்து இறங்கி, பஞ்சக்கச்சம் அணிந்து, உடல் முழுக்கத் திருநீற்றுடன் ஒரு வெள்ளிக் குடத்தைச் சுமந்து, வரிசையில் நின்று கொண்டிருக்கக் கூடிய பக்தர்களைக் கடந்து சென்றாரோ, அவர் அந்த இடத்தில் – அதே கோலத்தில் – வெள்ளிக் குடத்தை சுமந்தபடி பக்தர்களோடு பக்தராக வரிசையில் நின்று கொண்டிருந்தார். சுசீலாவும் இந்தப் பணக்கார பக்தரைப் பார்த்து அதிர்ச்சி ஆனாள்.
சாதாரண ஒரு பக்தராக வரிசையில் நின்று கொண்டிருக்கும் அந்தப் பணக்காரரையும், மகா பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்தார் பாலன்.
குழம்பித் தவித்தார். ‘இவர் எப்படி இந்த பக்தகோடிகள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்? இந்த வரிசையில் நிற்காமல் மகா பெரியவாளை நோக்கி வெள்ளிக் குடத்துடன் நடந்து செல்வதை நானும் சுசீலாவும் இரு கண்களால் பார்த்தோமே… இதைப் பார்த்து விட்டுத்தானே என் அதிருப்தியைப் பிறர் எவரும் அறியா வண்ணம் சுசீலாவிடம் வெளிப்படுத்தினேன்? அப்படி என்றால், மகா பெரியவா இவரைக் கண்டித்து, வரிசையில் அனுப்பி வைத்து விட்டாரோ? அதைத்தான் எனக்கு உணர்த்த விரும்புகிறாரோ?’ என்கிற ஏராளமான கேள்விக்கணைகளுடன் கண்கள் பனிக்க பாலன் மகா பெரியவாளைப் பார்த்தபோது, ”இப்ப ஒனக்கு திருப்திதானே?!” என்று அந்தப் பரப்பிரம்மம் வாய் விட்டும் கேட்டு விட்டது, பாலனைப் பார்த்து.
தன்னையும் அறியாமல் பாலனின் கண்கள் கரகரவென்று கண்ணீரை சொரிந்தன. கைவிரல்கள் நடுங்கின. மகா பெரியவாளைப் பார்த்து ஏதோ சொல்ல முற்பட்டவரின், நா தழுதழுத்தது. குளறியது.
மகா பெரியவா புன்னகை விலகாமல் இன்னமும் பாலனையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் தென்பட்ட அன்பும் கரிசனமும் பாலனின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதற்கு ஓர் அச்சாரமாக ஆகி விட்டது.
அதுவரை ‘மகான்கள்‘ என்றால், வேப்பங்காயாகக் கசந்த பாலனுக்கு, இப்போது மகா பெரியவா ஒரு தெய்வமாகத் தெரிந்தார்.
தன்னையும் அறியாமல் இரு கைகளையும் உயர்த்தி, முதல் முறையாக அந்த மகானை வணங்கி, அடுத்த கணம் வேரற்ற மரம் போல் மகா பெரியவா திருச்சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்து, ”என்னை மன்னிச்சிடுங்கோ பெரியவா… இதுவரை ஏதோ அஞ்ஞானத்துனால இது மாதிரி உங்களோட திருச்சந்நிதியில தவறுதலா பேசிட்டேன். நான் பேசினது உங்களுக்கு எங்கே கேக்கப் போறதுன்னு நினைச்சேன். ஆனா, நீங்க பரப்பிரம்மம்னு நிரூபிச்சுட்டேள் பெரியவா.
தெய்வத்தோட சந்நிதியில எல்லாரும் சமம்னு நீங்க எனக்கு உணர்த்திட்டேள். என்னை மன்னிச்சிடுங்கோ. எங்காத்துல எல்லாரும் உங்களை தெய்வமா பாக்கறா. ஆனா, நான் மட்டும் உங்களை மதிக்காம அழிச்சாட்டியமா இருந்துட்டேன்” என்று குரல் உயர்த்தித் தேம்ப ஆரம்பித்தார்.
‘எதற்காக இவர் கதறுகிறார்… தவறுதலாக யாரிடம் என்ன பேசினார்…?’ என்பது அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த எண்ணற்ற பக்தர்களுக்கும், மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஒரு சில சிப்பந்திகளுக்கும் எப்படிப் புரியும்? அவர்கள் அனைவரும் பாலனை புரியாத ஒரு புதிராகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சர்வேஸ்வரனான அந்த தெய்வம், தன் வலக் கையை உயர்த்தி ஆசி புரிந்து, பாலனை அனுப்பி வைத்தது.
இந்த அன்பிலும், ஆசியிலும், அரவணைப்பிலும் வெகுவாகக் கவரப்பட்ட பாலன், அதன் பின் மகா பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தற்போது பெங்களூருவில் வசித்துக் கொண்டு வருகிறார் பாலன்!
கருணையின் வடிவமான தெய்வங்களும், சத்தியத்தின் வழி வாழ்ந்து வருகின்ற மகான்களும் தங்களது உண்மையான பக்தர்களை என்றைக்கும் தண்டிக்க மாட்டார்கள்.
தங்களையும் அறியாமல் அந்த பக்தர்கள் தவறு செய்கிறபோது, ஒரு தாய்க்கு உண்டான பரிவுடன் அவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்துகிறார்கள்.
நடமாடும் தெய்வமாக நம்மிடையே இன்றைக்கும் விளங்கி வரும் மகா பெரியவா அப்படித்தான்!
தன் திருச்சந்நிதிக்கு வருகின்ற பக்தர்களின் மனதில் எப்படிப்பட்ட எண்ணம் இருக்கிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் அவர்களை செழுமைப்படுத்துவார்.
உலக நலனுக்காக மகா பெரியவா யாத்திரை செய்த அந்தக் காலத்தில் நாத்திக எண்ணம் பலரிடமும் வேரூன்றி இருந்தது. நாத்திகவாதம் பேசிக் கொண்டிருந்தவர்களைத் தவிர, பாலன் மாதிரியான – நல்ல ஆன்மிகக் குடும்பத்தில் வந்த அன்பர்களும் – காஞ்சி மடத்தின் இந்த பீடாதிபதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். காஞ்சி மடத்தின் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தார்கள்.
மகா பெரியவாளை மதிப்பதில்லை. அவருக்கு உண்டான மரியாதையைத் தருவதில்லை. ‘அவரும் ஒரு சாதாரண மனிதர்தானே!’ என்றெல்லாம் அலட்சியமாகப் பேசி வந்தார்கள்.
ஆனாலும், நாத்திகத்தை மட்டுமே பேசி வந்த அன்பர்கள்கூட மகா பெரியவாளிடம் தனி மதிப்பு வைத்திருந்தார்கள். காரணம் – அப்பழுக்கற்ற துறவு நெறியை இந்த மகான் காலாகாலத்துக்கும் கடைப்பிடித்து வந்ததுதான்!
ஒரு மகானை தரிசனம் செய்வதற்கும், ஒரு திருக்கோயில் சென்று வழிபடுவதற்கும் நமக்குப் பூர்வ ஜன்ம பலம் (முந்தைய பிறவியில் நற்செயல்களை செய்திருத்தல்) வேண்டும். ஒருவேளை வழி தவறி, நம் பாதை மாறி இருந்தால், விதி வசத்தால் அது மாற்றப்பட்டு விடும்.
அதுபோல்தான் மேலே சொன்ன நிகழ்வில், நாத்திக எண்ணம் கொண்ட பாலன் ஆத்திகத்துக்கு மாற்றப்பட்டதும்!
ஒரு மனிதனை அற வழியில் செல்லத் தூண்டுபவை அவனுள் இருக்கின்ற பக்தி எண்ணங்கள்தான். மனதில் நேர்மை, நியாயம், கருணை, அன்பு போன்ற குணங்கள் தெய்வ பக்தியாலே ஏற்படும்.
அதனால்தான் மகா பெரியவாளிடம் அணுக்கத் தொண்டர்களாக – அத்யந்த பக்தர்களாக இருந்த பலரும் நற்குணங்களும் நல்லெண்ணங்களும் வாய்க்கப் பெற்றவர்களாக இருந்தனர்.
ஜாதி, மதம், இனம் கடந்து மகான்கள் பக்தர்களை ஆட்கொள்வார்கள்.
மகா பெரியவாளின் அதி அற்புதமான அனுபவங்களை இன்றைக்கு வியந்து பார்க்கின்றவர்கள், ‘நமது காலத்திலேயே இப்படி ஒரு மகான் வாழ்ந்திருக்கிறாரே…’ என்று எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். நாமும் பெருமைப்பட வேண்டும்.