தெய்வங்களின் சந்நிதிக்கோ மகான்களின் சந்நிதிக்கோ செல்கின்றோம் என்றால், தரிசிக்கச் செல்பவரின் மனம் ஏங்கித் தவிக்க வேண்டும். அதாவது, ‘இப்பேர்ப்பட்ட இறை இன்பத்தில் மூழ்கித் திளைக்க இருக்கின்றோமே…’ என்று தரிசிக்கச் செல்பவரின் மனம் குதூகலமாக இருக்க வேண்டும்.
ஏதோ முனுசாமி, ராமசாமியைப் பார்க்கச் செல்வது மாதிரி போகக் கூடாது.
மனிதர்களைப் பார்ப்பது வேறு.
மகான்களைத் தரிசிப்பது வேறு.
மனிதர்களைப் பார்ப்பதால் கிடைக்கும் லாபம் அப்போதைக்கு வேண்டுமானால் நலம் தரலாம்.
ஆனால், மகான்களின் தரிசனத்தால் கிடைக்கும் லாபம் மனதுக்கு நிரந்தர இதம் தரும். வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத பல நல்ல மாற்றங்களை நம்முள் ஏற்படுத்தும்.
அதனால்தான், தெய்வங்களை – மகான்களைத் தரிசிக்கச் செல்கின்றோம் என்றால் மனம் ஏங்க வேண்டும்.
‘இவர் தரிசனம் கிடைக்காதா… இவரது ஆசி கிடைக்காதா… இவர் நமக்கு ஏதேனும் உபதேசம் அருள மாட்டாரா… இவரது தரிசனம் நமது பாவங்களைப் போக்காதா?’ என்றெல்லாம் மனம் ஏங்க வேண்டும்.
ஓட்டலுக்குச் செல்லும்போது பசியோடு செல்கிறோம் அல்லவா?
உல்லாச டூர் செல்லும்போது சகல வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்று பணத்தோடு செல்கிறோம் அல்லவா?
அதுபோல் தெய்வங்களையும் மகான்களையும் தரிசிக்கச் செல்லும்போது மனதில் ஆத்மார்த்தமான பக்தியோடு செல்ல வேண்டும்.
மகான்களை – தெய்வங்களை தரிசிக்க நாம் நினைத்த மாத்திரத்தில் நமக்கு அனுமதியும் ஆசியும் கிடைத்து விடாது. இதற்கெல்லாம் பூர்வ ஜன்ம பலமும், யோகமும் அமைந்திருக்க வேண்டும்.
அதனால்தான் மகா பெரியவா காஞ்சி மடத்தில் இருந்தபோது அவரைத் தரிசிக்க வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மிகவும் ஆத்மார்த்தமாகப் பயணப்பட்டு வருவார்கள். சொந்த வேலை, அலுவல் வேலை என அனைத்தையும் மறந்து, இரண்டு மூன்று நாட்கள் மடத்திலேயே தங்கி இருந்து அந்த நடமாடும் தெய்வத்தை நெகிழ்வோடு தரிசிப்பார்கள்.
பெரியவா தரிசனம் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள்.
‘சங்கரா… பெரியவா…’ என்று அந்த மகானைக் கண்ட பின் ஆனந்தக் கூத்தாடுவார்கள்.
இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான ஒரு பக்தர் இருந்தார். வயது சுமார் ஐம்பது இருக்கும். மிகவும் நேர்மையானவர். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார். வசதி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. மிக மிக சாதாரண வர்க்கம்.
அவருக்குத் திடீரென்று ஒரு பண முடை. எல்லாம் நல்ல காரியத்தை முன்னிட்டுத்தான். அவரது வீட்டில் நிகழ இருக்கின்ற ஒரு சுப காரியத்துக்கு அந்தப் பணம் தேவைப்பட்டது.
பணம் என்றால், சுமார் முந்நூறு நானூறு ரூபாய் தேவை. அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய தொகை. இவ்வளவு தொகை அவரிடம் இல்லை. எங்கும் கடன் வாங்க முடியாது. இவரை நம்பிக் கடன் தருவாரும் இல்லை.
அந்த சுப காரியத்துக்கான தினமும் நெருங்கிக் கொண்டிருந்தது. பொழுது விடிந்தாலே அவருக்கு இந்த பண நினைப்புதான். ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.
ஓரிரு நாட்கள் யோசனைக்குப் பின் இறுதியில் அவர் தீர்மானித்தது – ‘காஞ்சிபுரம் சென்று நடமாடும் தெய்வம் மகா பெரியவாளைத் தரிசித்தாலே போதும்… இதற்குத் தீர்வு கிடைத்து விடும்‘ என்று தெளிந்தார்.
ஆபத்பாந்தவன்… அநாதரட்சகன் மகா பெரியவாளை தரிசிக்க தான் மட்டும் காஞ்சிபுரம் செல்லலாம் என்று தீர்மானித்தார். இரண்டு மூன்று நாட்கள் அந்த நடமாடும் தெய்வத்தை மடத்தில் தங்கி இருந்து தரிசித்தால், ஒருவேளை நாம் எதிர்பார்க்கிறபடி முந்நூறு நானூறு ரூபாய் கிடைக்கும் என்று நம்பி, ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு நண்பரிடம் கைச்செலவுக்குக் கொஞ்சம் பணத்தை யாசகம் வாங்கிக் கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டார்.
பிறரிடம் பணம் கடன் கேட்பது என்றால், சிலருக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. கொஞ்சமும் யோசிக்கவோ தயங்கவோ மாட்டார்கள். தன் சந்தோஷம்தான் முக்கியம் என்பது மாதிரி அடுத்தவரிடம் கொஞ்சமும் கூச்சமில்லாமல், கடன் கேட்பார்கள். அதை வாங்கிய பிறகு, வாக்குக் கொடுத்தபடி உரிய காலத்தில் அந்தக் கடன் தொகையைத் திருப்பித் தந்து விடுவாரா என்றால், அது சந்தேகமே!
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அடுத்தவரிடம் ஏதேனும் யாசகம் கேட்க வேண்டிய நிலை தங்களுக்கு வந்து விட்டது என்றால், அவர்கள் மனம் படும் பாடு இருக்கிறதே… ‘கடவுளே… ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்? அடுத்தவரிடம் எந்த ஒரு காலத்திலும் கையேந்தக் கூடிய நிலை எனக்கு வரக் கூடாது என்று நித்தமும் பிரார்த்திக்கிறேனே‘ என்று கடவுளிடம் மன்றாடுவார்கள்.
மேலே சொன்ன நபர் இரண்டாவது வகை. பிறரிடம் ‘டைம் என்ன?’ என்று கேட்பதற்குக்கூடத் தயங்குவார். எதிராளி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்வதையும் ஒரு யாசகமாகத்தான் கருதினார்.
இப்பேர்ப்பட்டவர் தன் குடும்பத்தில் ஏற்பட்ட பணத் தேவை அகல்வதற்கு யாரிடம் செல்வார்? யாரிடம் கையேந்துவார்? அதான் ஒரு செட் மாற்றுத் துணியையும் எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் வந்து விட்டார், மகா பெரியவாளை தரிசிப்பதற்காக!
அன்று அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, மகா பெரியவாளை தரிசிக்க வந்தார். அன்றைக்குக் கூட்டமான கூட்டம்.
எனவே, மடத்தின் ஒரு மூலையில் – தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மகா பெரியவாளையும் பார்க்கும்படியான இடத்தில் அமர்ந்து அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று ஓரமாக அமர்ந்து விட்டார்.
மனம் நிறைய மகா பெரியவா தவிர, வேறு எந்த சிந்தனையும் இவரிடம் இல்லை. ஆனந்தமாக தெய்வத்தை தரிசித்துக் கொண்டிருக்கும்போதே, தான் எதற்காக வந்தோம் என்பதையே மறந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
மதிய வேளை வந்தது. கூடவே, பசியும் வந்தது. ‘மடத்தினுள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே… நாம் வெளியே போய் ஓட்டலில் சாப்பிட்டுக் கொள்ளலாம். நம்மை விட வசதி குறைவானவர் யாரேனும் மடத்தில் நடக்கின்ற இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிடட்டும்‘ என்கிற நல்ல எண்ணத்துடன் வெளியே வந்தார்.
சாலையில் நடந்தார். ‘மைசூர் ஆர்ய பவன் ஓட்டல்‘ அவர் கண்களில் பட்டது.
சாப்பிட்டு முடித்து மடத்துக்குத் திரும்பினார். மகா பெரியவா ஓய்வுக்குச் சென்றிருந்தார். எனவே, பக்தர்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
எந்த இடத்தில் அமர்ந்து மகா பெரியவாளை தரிசித்துக் கொண்டிருந்தாரோ, அதே இடத்திலேயே ஒரு மூலையில் சாய்ந்து ஓய்வெடுத்தார் நம்மவர். உடல் அசதியும், உண்ட உணவும் அவரைக் கண் அசரச் செய்தது.
நேரம் எப்படி ஓடியதோ, தெரியவில்லை. ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் கன ஜோராக முழங்கிக் கொண்டிருந்ததைக் கேட்டபோது திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். பக்தர்கள் மெள்ள கூட ஆரம்பித்திருந்தனர்.
தன் கைப்பையை எடுத்துக் கொண்டு குழாயடிக்கு வந்தார் நம்மவர். முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டார். நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டார். மீண்டும் அதே இடத்துக்கு வந்து சந்தடி இல்லாமல் அமர்ந்தார்.
சற்று நேரத்தில் சிவ ரூபமாக மகா பெரியவா வந்து அமர்ந்தார். காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வர… அவர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அந்த மகானை மொய்த்தபடி ஏராளமானோர் காணப்பட்டனர். அதில் பணக்காரர்கள் அதிகம் தென்பட்டனர். ‘மகா பெரியவாளுக்கு நான் மிகவும் நெருக்கமானவன்‘ என்பதைப் பிறருக்குப் பறை சாற்றும் விதத்தில் ஒரு சிலர் அடமாக மகானுக்கு அருகே உட்கார்ந்திருப்பது போல் பட்டது.
தரிசித்த பக்தர்கள் பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே செல்வதும், புதிதாக பக்தர்கள் காணிக்கைப் பொருட்களைக் கைகளில் ஏந்திக் கொண்டு உள்ளே நுழைவதுமாக இருந்தனர்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நம்மவர் மகா பெரியவா அருகிலே செல்லவே இல்லை. தள்ளி இருந்தபடியே தரிசனம் ஆயிற்று.
இரவும் கூட்டம் அதிகம் என்பதால், மடத்தினுள் சாப்பிட அவர் மனம் ஒப்பவில்லை. காலையில் சாப்பிட்டு வந்த மைசூர் ஆர்ய பவன் ஓட்டல் சுவை அவரை இழுத்தது.
அடுத்த நாளும் இதேபோல்தான் கழிந்தது.
அதற்கு அடுத்த நாளும் இதேபோல்தான்!
மூன்று நாட்கள் முழுமையாக முடியப் போகின்றன.
மகா பெரியவாளை நம்மவர் இன்னும் நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. எல்லாம் இந்தத் திடீர் கூட்டம் படுத்திய பாடு. இந்தக் கூட்டத்தில் ஊர்ந்து போய் மகா பெரியவாளை தரிசிப்பதில் நம்மவருக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. ‘உங்களை தரிசிப்பதற்காக நானும் வந்திருக்கிறேன்‘ என்று மற்றவர்களைப் போல் தன் வருகையைப் பதிவு செய்ய நம்மவர் விரும்பவில்லை. தவிர, தான் பணம் யாசகம் பெறுவதற்காகத்தான் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்பதை பிறர் அறிய சொல்லும்படியாகவும் இந்த தரிசனம் அமைந்து விடக் கூடாது என்பதும் அவரது எண்ணம்.
மூன்றாம் நாள் இரவு. ‘இன்னும் சற்று நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு விடலாம். மூன்று நாள் முழுமையாக மகா பெரியவா சந்நிதியில் இருந்து விட்டோம். இந்தப் புண்ணியம் நம்மைக் காப்பாற்றும். நம் இல்லத்து சுப காரியம் எப்படியும் நிறைவேறும்‘ என்று மனபூர்வமாக நம்பி, கிளம்பலாம் என்று முனைந்தபோது, அந்த அதிசயம் நடந்தது.
அப்போது மடத்தின் உக்ராண கைங்கர்யத்தில் (சமையல்கட்டு பணிகள்) இருந்தவர் தியாகு என்கிற அடியவர் (இப்போது இவர் தியாகு தாத்தா என அழைக்கப்படுகிறார். மகா பெரியவா கிருபையால் 94 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்).
மகா பெரியவா அழைத்ததன்பேரில் அவரிடம் வந்து பவ்யமாக நின்று கொண்டிருந்தார் தியாகு.
தியாகுவிடம் மகா பெரியவா, ”தோ, கடைசீல ஒருத்தன் சுவத்துல சாஞ்சுண்டு உக்காந்துண்டு இருக்கானே… அவனை எங்கிட்ட கூட்டிண்டு வாயேன்” என்றார், நம்மவரை அடையாளம் காண்பித்து.
மகா பெரியவா காட்டிய திசையில் தியாகு கவனித்தார். நம்மவர் அங்கே சம்மணமிட்டு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். ‘அவரைத்தான்‘ பெரியவா அடையாளம் காண்பிக்கிறார் என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்திக் கொண்டு, கூட்டத்தினிடையே நீந்திச் சென்றார் தியாகு.
”மகா பெரியவா உங்களைக் கூப்பிடுறார். ஒடனே வாங்கோ” என்றார் தியாகு, நம்மவரிடம்.
நம்மவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தியாகு வந்து சொன்னதைக் கொஞ்சமும் நம்ப முடியாமல், ”என்னையா கூப்ட்டார்? என்னையா வரச் சொன்னார்?” என்று ஆனந்தத்தில் கண்கள் கலங்க… குரல் தேம்ப… கேட்டுக் கொண்டே இருந்தார்.
குரலில் சற்று பதட்டத்தைக் கூட்டிக் கொண்ட தியாகு, ”ஒங்களைத்தான். வாங்கோ… பெரியவா கூப்டறார். பெரியவா ஓய்வுக்குப் போகணும்” என்று அவசரப்படுத்தினார்.
பிறகு, சூழ்ந்திருக்கிற பக்தர்கள் கூட்டத்தை மெள்ள விலகச் சொல்லி விட்டு, நம்மவருடன் பெரியவா திருச்சந்நிதியை நோக்கி நடக்கும்போது, ”நீங்க யாரு என்னன்னு எனக்குத் தெரிலை. ஆனா, ஒங்களோட யோகம் – பெரியவாகிட்டேர்ந்து உத்தரவு வந்தாச்சு. ஒங்களோட கஷ்டம் இந்த கணமே போயாச்சுன்னு நினைச்சுக்கோங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று நம்மவரைக் கொஞ்சம் துரிதப்படுத்தினார் தியாகு.
தியாகு முன்னால் நடக்க… நம்மவர் பின்னால் நடக்க… இருவரும் மகா பெரியவா இருந்த இடம் நோக்கி கூட்டத்திலே நீந்திச் சென்றார்கள்.
‘பெரியவா சந்நிதிக்கு வர வேண்டும் என்று நினைத்தோம். புறப்பட்டு வந்து விட்டோம். இவரது திருச்சந்நிதியில் இரண்டு மூன்று நாட்கள் தங்கினாலே நமது மன பாரம் இறங்கி விடும் என்று மனபூர்வமாக நம்பினோம். மூன்று நாள் பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. இப்போது பெரியவா நம்மை அழைக்கவும் செய்து விட்டார். பெரியவாளிடம் நம் இல்லத்து விசேஷத்தைச் சொல்லி பணம் கேட்கலாமா? அல்லது ஆசிர்வாதம் மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பலாமா?’ என்கிற சிறு யோசனை அவர் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.
பெரியவாளைத் தரிசிக்க நடந்து செல்கின்ற அந்த நேரத்தில் தன் மனதில் திடீரென்று தோன்றிய அல்ப யோசனையை உதறித் தள்ளினார். ‘போயும் போயும் பெரியவாளிடம் பணத்தையா கேட்பது? அவர் ஆசி வழங்கினாலே போதுமே… அனைத்தும் நமக்குக் கிடைத்து விடுமே!’ என்று தனக்குத் தானே தலையை ஆட்டிக் கொண்டு தெளிந்தார்.
இந்த பக்தரை காஞ்சி மகா பெரியவா முன் கொண்டு போய் நிறுத்தினார் தியாகு.
நம்மவருக்குக் கண்கள் உடைந்தன என்றே சொல்ல வேண்டும். தாரை தாரையாக நீர் வடிந்து கொண்டே இருந்தது. கூப்பிய இரு கைகளையும் பிரிக்கவே இல்லை.
மகா பெரியவா நம்மவரை ஊடுருவிப் பார்த்தார். பிறகு கேட்டார்: ”மடத்துக்கு வந்திருக்கியே… மூணு நாளா தங்கி இருக்கியே..? எங்கே சாப்டே?”
என்னே ஒரு ஞான திருஷ்டி… என்னே ஒரு உபசாரம்!
ஒரு பக்தர் தனது திருச்சந்நிதியில் மூன்று நாட்களாக இருக்கிறார்… இந்த மூன்று நாட்களும் அவர் எங்கே சாப்பிட்டார் என்று கலியுக தெய்வம் மகா பெரியவா கேட்கிறார்.
மகா பெரியவாளின் இந்தக் கேள்வி நம்மவருக்குப் புளகாங்கிதத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ… தியாகுவுக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘பக்தன் சாப்பிட்டானா… எங்கே சாப்பிட்டான் என்கிற கவலை படைத்தவனுக்கு அல்லவா இருக்கும்? தன் பக்தன் ஒருவன் பசியோடு இருப்பதை மகா பெரியவா தாங்க முடியுமா?’ என்று பூரித்துப் போனார்.
”சாப்ட்டேன் பெரியவா…”
”எங்கே சாப்டே? மடத்லயா? வெளீலயா?”
”வெளீல… ஓட்டல்ல.”
”எந்த ஓட்டல்?”
”மைசூர் ஆர்ய பவன்.”
மகா பெரியவா தியாகுவைப் பார்த்தார். ‘ஏதோ உத்தரவிடப் போகிறார்‘ என்று பெரியவா அருகே சென்று வலக் கையால் வாயைப் பொத்திக் கொண்டு பவ்யமாக நின்றார் தியாகு.
”மேனேஜர்கிட்ட போய் ஐந்நூறு ரூபா வாங்கிண்டு வா.” – இதுதான் பெரியவா இட்ட உத்தரவு.
தியாகு ஓட்டமாக ஓடினார், அந்த மடத்தில் மேனேஜர் இருக்கும் இடத்தைத் தேடி.
ஐந்தே நிமிடத்தில் ஐந்நூறு ரூபாயோடு திரும்பி வந்தார். ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெரியவாளிடம் காட்டி தகவல் சொன்னார்.
”இதோ நிக்கறானே… இவன்கிட்ட இந்த ரூபாயைக் குடு” என்று நம்மவரைச் சுட்டிக் காட்டியவர், ”அவன் கிரஹத்துல ஒரு சுப விசேஷம். பாவம் அந்த விசேஷத்தை நன்னா நடத்தறதுக்கு அவனுக்கு இப்ப வசதி இல்லை. அந்த விசேஷம் நன்னா நடக்கறதுக்கு மடத்தோட கைங்கர்யமா நானூறு ரூபா இருக்கட்டும்.” – பெரியவா சொல்லி நிறுத்தினார்.
பெரியவாளின் திருவாயில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட நம்மவரின் மன நிலையைச் சொல்ல வேண்டுமா? உதடுகள் துடிக்க… கைகள் நடுங்க… ”சர்வேஸ்வரா… சர்வேஸ்வரா” என்று இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி, தடுமாறி வணங்கினார்.
தியாகுவுக்கு ஒரு சந்தேகம். விசேஷத்துக்கு நானூறு ரூபாய். அப்படி என்றால், எக்ஸ்ட்ராவாக நூறு ரூபாய் எதற்கு? அவரது மனதுக்குள் இந்தக் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே, ”அந்தக் கொசுறு நூறு ரூபா ஏன் தெரியுமா? மூணு நாளா மடத்துக்கு வந்துட்டு வெளீல போய் ஓட்டல்ல சாப்ட்டிருக்கான் இல்லையா… அவன் ஓட்டலுக்கு செலவழிச்ச காசுதான் அந்த நூறு ரூபா” என்று சொல்லி விட்டு, தன் வலக் கையை உயர்த்தி, நம்மவரை ஆசிர்வதித்து விட்டு பரப்பிரம்மம் தன் குடியிருப்பை நோக்கி விறுவிறுவென்று நடந்தது.
ஐந்நூறு ரூபாயை ஒரு தாம்பாளத்தில் வைத்து, ஒரு சில பழங்களுடன் நம்மவரிடம் கொடுத்து விட்டு, பெரியவா செல்லும் பாதையில் அவரைப் பின்தொடர்ந்து வேக வேகமாக ஓட ஆரம்பித்தார் தியாகு.
மகா பெரியவாளின் இந்த அனுக்ரஹம் பற்றிக் கேள்விப்பட்டு நம்மவர் அருகே நின்றிருந்த சில பக்தர்கள் பிரமித்துப் போனார்கள்.
அந்த மகான் சென்ற திசையை நோக்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு ஊருக்குப் புறப்பட்டார் நம்மவர்.
‘தேடித் தேடி அனுக்ரஹம் செய்யும் தெய்வம்‘ என்று பக்தர்கள் மகா பெரியவாளைக் கொண்டாடுவார்கள். மகா பெரியவாளை பரிபூரணமாக நம்பி அவரைத் தரிசிக்க வருகின்ற எந்த ஒரு பக்தரும் ஏமாற்றப்பட்டதில்லை.
எந்த ஒரு பிரார்த்தனையை மனதில் சுமந்து வருகின்றாரோ, அதை மகா பெரியவாளிடம் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தன் ஞான திருஷ்டியால் அந்த மகானே உணர்ந்து, தன் பக்தனைக் கையேந்த விடாமல், மடிப் பிச்சை கேட்க விடாமல் அதை அருளி சந்தோஷமாக அனுப்புவார். இது இன்றைக்கும் சத்தியம் என்பதை மகா பெரியவா அதிஷ்டானத்தில் (ஜீவ சமாதி) மனமுருகி பிரார்த்திக்கிற பக்தர்களிடம் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
மகா பெரியவா காஞ்சிபுரத்திலோ அல்லது வேறு எந்த ஊரிலோ முகாம் இட்டிருந்தாலும் சரி… அங்கே வேளா வேளைக்கு அன்னதானம் இடையறாது நடந்து கொண்டிருக்கும்.
தான் தரிசனம் தருகின்ற இடத்துக்கு எத்தனையோ சிரமங்களையும் தாண்டி வருகின்ற எந்த ஒரு பக்தனும் உணவு உட்கொண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். இது மகா பெரியவாளின் எழுதப்படாத உத்தரவு.
எனவே, மகா பெரியவா எங்கு முகாமிட்டிருந்தாலும், அந்த இடத்தில் அவரைத் தரிசிக்க வருகிற பக்தர்களுக்கு இலை போட்டு உணவு பரிமாறப்படும். இதற்கென்றே விசேஷமான சமையல் கலைஞர்கள் பலர் தங்களது ஊழியர்களோடு வந்து மடத்துக்கு கைங்கர்யம் செய்து வந்தனர் (இன்றைக்கும் பிரபலமான சமையல் கலைஞர்கள் பலர் மகா பெரியவாளைப் பிரதானமாகக் கொண்டுதான் தங்கள் தொழிலை நடத்தி வருகிறார்கள். இவர்களது கேட்டரிங்கில் மகா பெரியவா படம் பிரதானமாக வைக்கப்பட்டிருக்கும்).
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்கிற பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ‘வேடல்‘ என்கிற ஊர், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே வரும். இங்கு காஞ்சி மடத்தின் சார்பாக ஒரு வேத பாடசாலை இயங்கி வருகிறது.
நெடுஞ்சாலையை ஒட்டி பிரமாண்ட தட்சிணாமூர்த்தி சுதை வடிவம் காணப்படும். ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும். இதுதான் அடையாளம், பாடசாலைக்குச் செல்ல.
இந்தப் பாடசாலையில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா?
காஞ்சி மகா பெரியவா காலத்தில் அவர் பயன்படுத்திய பல பொருட்களை (பல்லக்கு, தண்டங்கள், மரக் குவளைகள், வஸ்திரங்கள், மூக்குக் கண்ணாடிகள் – இப்படிப் பல) ஒரு மியூஸியம் போல் பாதுகாத்து வருகிறார்கள். காஞ்சி மகா பெரியவாளின் அரிய புகைப்படங்கள் இங்கே பக்தர்களின் தரிசனத்துக்குக் கிடைக்கின்றன.
இந்த மியூஸியத்தில் மகா பெரியவா காலத்தில் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பிரமாண்டமான பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சாம்பார் மற்றும் ரசம் வைக்கப் பயன்படும் சில பாத்திரங்கள், சாதம் வடிக்கப் பயன்படுத்தப்படும் சில குண்டான்கள் – மனிதர்கள் உயரத்துக்கு இணையாக இருப்பது (அதாவது சுமார் ஐந்தடி உயரம்) கவனிக்கத் தக்கது. இதுபோல் ஏராளமான பாத்திரங்கள், கரண்டிகள், தட்டுகள் போன்றவை இங்கே உள்ளன.
இந்தப் பாத்திர அணிவகுப்பைப் பக்தர்கள் தாராளமாக தரிசிக்க முடியும். இந்தப் பாத்திரங்களைப் பார்க்க நேரிடுகிற ஒவ்வொருவருக்கும், பிரமிப்புதான் ஏற்படும். மகா பெரியவா காலத்தில் அவர் யாத்திரை சென்ற இடங்களில் எப்பேர்ப்பட்ட அன்னதானங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை நம்மால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடியும்.
மகா பெரியவாளை சாட்சாத் அன்னபூரணியின் சொரூபமாகவே பக்தர்கள் தரிசித்தார்கள்.