வேதபாடசாலையும் ஜட்ஜ் கமாலுதீனும்

காஞ்சி மகா பெரியவாளை இன்று உலகமே போற்றித் துதிக்கிறதுபல தரப்பட்ட பக்தர்களும்பெரியவா பெரியவாஎன்று அவரைக் கொண்டாடுகின்றனர் என்றால், அதற்கு முக்கியமான காரணம்எவரிடமும் பேதம் காட்டாமல், மிக எளிமையோடு பழகிய மகான் அவர் என்பதால்தான்.

தன்னைத் தேடி வருகின்ற பக்தகோடிகளிடம் காஞ்சி மகா பெரியவா வெளிப்படுத்துகிற அன்பும் கருணையும் அவரது இதயத்தில் இருந்து அமுதசுரபியாய் வெளிவருபவை.

தன் வாழ்நாளின் பெரும்பாலான காலத்தை யாத்திரையில் கழித்தவர் மகா பெரியவா. அப்படி யாத்திரையாகக் கிராமங்களின் வழியே பக்தர்கள் கோஷ்டியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது வயல் வரப்புகளில் உழவு சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற கூலித் தொழிலாளர்கள் மகா பெரியவாளைப் பார்த்து விட்டு, வேலைகளை அப்படியே போட்டு விட்டு கைகால்களை சுத்தம் செய்து கொண்டுசாமீசாமீ…’ என்று இவரைத் தேடி வந்து நமஸ்கரித்து வணங்குவார்கள்.

தான் நடந்து கொண்டிருக்கும் அந்த வயல் வரப்பிலேயே நின்று கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்குவார் மகா பெரியவா.

தரிசனம் ஆன பின்னும், காஞ்சி பெரியவாளை விட்டு அகலாமல் கருணை பொங்கும் அவரது விழிகளையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நிற்பார்கள் கிராமத்து ஜனங்கள். புன்னகையுடன் அவர்களுக்கு மீண்டும் ஆசி வழங்கி விட்டு நடக்கத் துவங்குவார்.

எப்படி கருவறையில் இருக்கின்ற தெய்வம் விசேஷ காலங்களில் ஆலயத்தை விட்டுப் புறப்பட்டுத் தன் ஊரில் வசிக்கின்ற பக்தர்களுக்கு தரிசனம் தருகிறதோ, அதுபோல் காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது இது போல் காஞ்சி மடத்தை விட்டு யாத்திரை கிளம்பி, ஊர் ஊராகப் போய் தன் பக்தகோடிகளைப் பார்த்து ஆசிர்வதிப்பார்.

இவரும் சர்வேஸ்வர அவதாரம்தானே! எனவேதான் பூத கணங்கள் போன்ற தன் பரிவாரங்களுடன் யாத்திரை புறப்பட்டுப் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

எத்தனையோ இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் காஞ்சி ஸ்ரீமடம் வந்து மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளதை, அந்த மகானின் சரிதத்தில் இருந்து காண முடியும். மகா பெரியவா தரிசனம் தங்களுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தின என்பது பற்றி மாற்று மதத்தினரே தங்கள் அனுபவங்களை விவரித்து எழுதி இருக்கிறார்கள்.

கடவுள் இல்லைஎன்று அந்தக் காலத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நாத்திக அன்பர்கள், தெய்வங்களையும் சந்நியாசிகளையும் சகட்டுமேனிக்கு விமரிசித்துப் பேசுவார்கள். ஆனால், அவர்களில் எவரும் மகா பெரியவாளைப் பற்றி விமரிசித்துப் பேசியதாகத் தகவல் இல்லை. காரணம்இவர் கடைப்பிடித்து வந்த மனிதநேயம் மனிதர்களிடம் மட்டுமல்லஇந்த உலகில் வசித்து வருகின்ற அனைத்து ஜீவராசிகளிடமும் கருணை காட்ட வேண்டும்என்பதுதான் சந்நியாசிகளின் கொள்கை. இதை அப்படியே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் மகா பெரியவா.

பாகனால் அடக்க முடியாத மதம் பிடித்த யானை, இவரைப் பார்த்ததும் பணிந்தது. கண்ணீர் சொரிந்தது.

மகா பெரியவா திருக்கரங்களால் தினமும் உணவு சாப்பிட்டு வந்த ஒரு நாய், ஒரு கட்டத்தில் ஏனோ சிலரால் மடத்தில் இருந்து கண்காணாத இடத்தில் கொண்டு விடப்பட்டது. ஆனால், ஒரு சில நாட்களுக்குப் பின் பலரும் ஆச்சரியப்படும்படி மீண்டும் மகானிடமே வந்து சேர்ந்து வாலை ஆட்டியது அந்த நாய்.

தன் கால்கள் மீது ஏறி, ‘சுருக் சுருக்கென்று கடித்த எறும்புகளுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல், கால்களைக் கொஞ்சமும் அசைக்காமல் அப்படியே வைத்தபடி, மேலும் அவை தன் காலில் ஊர்ந்து கடிப்பதற்கு அனுமதித்தார்.

பூச்சிகளைக் கொல்வதற்கு தான் இருந்த முகாமுக்குள் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொண்டு வந்த ஊழியர்களைப் பார்த்து, ‘ஏண்டாஅதுங்களோட எடத்துல நாம வந்து உக்காந்து அதுங்களை அழிக்கறது நியாயமில்லையேஎன்று மருந்து அடிப்பதற்கு அனுமதி வழங்கவே இல்லை.

கொசுக்கள் தன் மேல் அமர்ந்து நிதானமாகக் கடிக்கும்போது அவற்றை விரட்ட முற்படாமல், புன்னகையோடுரத்த தானம்செய்தவர்.

கோசாலையில் இருக்கின்ற ஒரு பசுவுக்கு வயிற்று வலி என்று ஊழியர் ஒருவர் கவலையுடன் சொன்னபோது, தன் வயிற்று வலிக்காக வைத்தியர் கொடுத்த ஆயுர்வேத மருந்தை அப்படியே அந்த கோசாலை ஊழியரிடம் கொடுத்து, ‘ஒரு வெல்லத்துக்குள்ள இந்த மருந்தை வெச்சு அப்படியே கொண்டு போய் அந்த பசுவுக்குக் கொடு. வயித்து வலி தானா பறந்துடும்என்று தன் வலி பற்றிக் கவலைப்படாமல் இருந்தவர்.

இப்படி மிக நீளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் மகா பெரியவா பக்தர்என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. அந்த மகான் சொன்ன உபதேசங்களைகருத்துக்களை நம் வாழ்க்கையில் மெள்ள மெள்ளக் கடைப்பிடிக்க முன்வர வேண்டும். எந்த ஒரு நல்ல மாற்றமும் உடனே நிகழ்ந்து விட முடியாது. எனவே, மிகவும் பொறுமையாக நம் வாழ்க்கையைத் தர்மம் சொல்கிறபடி அமைத்துக் கொண்டால், அதுதான் அந்த மகானுக்கு நாம் செய்கிற மிகப் பெரிய நன்றி!

பசுக்கள் நம் தெய்வங்கள். அவற்றுக்கு எந்த ஒரு காலத்திலும் தீங்கு செய்யக் கூடாதுஎன்றார் காஞ்சி பெரியவா.

பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். வணங்க வேண்டும். பசுக்களுக்கு நேர்கின்ற இன்னல்களில் இருந்து அவற்றை மீட்க வேண்டும்.

வேதங்கள் பாரதத்தின் மிகப் பெரிய சொத்து. காலாகாலத்துக்கும் இவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமைஎன்பார் மகா பெரியவா.

வேத பாடசாலைகள் பெருகுவதற்கும், வேதம் கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை பெருகுவதற்கும் நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அவற்றை எல்லாம் பண வசதி படைத்தவர்கள் செய்ய வேண்டும். இறைவன் உன்னிடம் நிறைய பணம் கொடுத்திருக்கின்றான் என்றால், நீ நிறைய தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றைத் தந்துள்ளான் என்பதை மறக்கக் கூடாதுஎன்பார் மகா பெரியவா.

பொருள் நிறைந்தவர்கள் பிறருக்கு உதவுவதை ஒரு பேறாக நினைத்துச் செய்ய வேண்டும்.

ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் மகா பெரியவா என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.

அவரை நாம் இழந்து விட்டோம் என்று சொல்லக் கூடாது. மகான்களுக்கு அழிவில்லை. மகா பெரியவா இன்றைக்கும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எப்படி மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர் தான் மறைந்த பிறகும் 700 வருடங்களுக்கு உடன் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருப்பேன் என்று அருளினாரோ, அதுபோல்தான் எல்லா மகான்களும்!

மகா பெரியவா இன்றைக்கும் நம்மிடையே இருந்து வருகிறார்; நடமாடி வருகிறார்; உண்மையான பக்தர்களின் குறைகளைக் களைவதற்கு அவர் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறார்.

இதுதான் உண்மை. சத்தியம். நிதர்சனம்.

வேதங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சுமார் 55 வருடங்களுக்கு முன் – 1960-களில் காஞ்சி மகா பெரியவா கும்பகோணத்தில் நிகழ்த்திய மாபெரும் ஒரு அற்புத நிகழ்வைக் காண்போமா?

கோயில் நகரம்என்றே அறியப்பட்ட கும்பகோணத்தில் பிரதானமான வழிபாட்டு இடங்கள் என்று எடுத்துக் கொண்டால்கும்பேஸ்வரன் கோயில், மகாமகக் குளம், சாரங்கபாணி கோயில் என்று பட்டியல் இடுபவர்கள்ராஜா வேத காவ்ய பாடசாலையையும் சேர்த்துதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு கும்பகோணம் என்றாலே, இந்தப் பாடசாலைதான் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வரும். கி.பி. 1542-ல் உருவாக்கப்பட்டது இந்தராஜா வேத காவ்ய பாடசாலை‘.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களிடம் பிரதான அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர்தான் இந்தப் பாடசாலையைத் துவக்கினார். நாயக்க மன்னர் தன் எடைக்கு எடை கொடுத்த தங்கத்தை, தனக்கு வந்த சொத்தாகக் கருதாமல், இவை அனைத்தையும் கும்பகோணம் நகரின் ஆன்மிக வளர்ச்சிக்கென்றே அர்ப்பணித்தார் கோவிந்த தீட்சிதர். கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ள பல ஆலயங்களுக்குத் திருப்பணி நடத்தி, குடமுழுக்கும் செய்து வைத்தார்.

கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் அருகே சக்கரபாணி வடக்கு வீதியில் அமைந்துள்ளதுராஜா வேத காவ்ய பாடசாலை‘. இங்கு வேதம் பயின்றவர்கள் இன்றைக்குப் பெரிய பெரிய வித்வான்களாக விளங்கி வருகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இவர்கள் இருந்து வருகின்றனர்.

இப்பேர்ப்பட்ட ராஜா வேத காவ்ய பாடசாலை 1960-களின் துவக்கத்தில் தன் பொலிவை இழக்க ஆரம்பித்தது. அதாவது, இந்தப் பாடசாலை மென்மேலும் வளர வேண்டும் என்றால், இதன் நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் பல திருத்தங்கள், மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமாகி விட்டது. ஆனால், இதற்கான நடவடிக்கைகளில் எவருமே ஈடுபடவில்லை.

கற்றறிந்த பண்டிதர்கள் பலர் இந்தப் பாடசாலையின் போக்கு குறித்து வேதனைப்பட்டனர். பாடசாலையின் செயலாக்கம் கும்பகோணம் நகர மக்களுக்கே பெரும் அதிருப்தி.

யார் இதற்குப் பொறுப்பேற்பார்கள்?

கோவிந்த தீட்சிதரால் பெரும் பொருட்செலவோடும் எண்ணற்ற கனவுகளோடும் துவக்கப்பட்ட பாடசாலை இப்படிப்பட்ட நிலைக்குச் செல்லலாமா என்று கவலைப்பட்டார், அப்போது கும்பகோணத்தில் சப் ஜட்ஜ் ஆக இருந்த அன்பர் ஒருவர். கும்பகோணம் நீதிமன்றத்தில் 1961 முதல் 1963 வரை இவர் இந்தப் பணியில் இருந்தார்.

இந்த சப் ஜட்ஜ், பாடசாலையின் போக்கு குறித்து மிகவும் கவலைப்பட்டு கும்பகோணத்திலேயே மிகவும் பிரபலமானலலிதா பார்மசிஎன்ற ஆயுர்வேத வைத்தியசாலையை நடத்தி வந்த லட்சுமிகாந்த சர்மா என்பவரை ஒரு நாள் அழைத்தார்.

சப் ஜட்ஜை சந்திக்கும் வரை ஏன் அவர் தன்னை அழைக்கின்றார் என்பது லட்சுமிகாந்த சர்மாவுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், ‘அரசு சார்ந்த முக்கிய பணியில் இருக்கின்றவர் நம்மை அழைக்கின்றாரே…’ என்று மதிப்பு தந்து அவரை சந்திக்கச் சென்றார்.

ஆகாஅந்த சப் ஜட்ஜ் பெயரை இன்னும் சொல்லவில்லையே?!

அவர் பெயர்கமாலுதீன்!

கும்பகோணம் சப் ஜட்ஜ் கமாலுதீன்டாக்டர் லட்சுமிகாந்த சர்மா சந்திப்பு இனிதே நிகழ்ந்தது.

தன் அழைப்பை ஏற்று வந்த சர்மாவை (டாக்டர் லட்சுமிகாந்த சர்மாவை இனிசர்மாஎன்றே சுருக்கமாக அழைப்போம்) மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தார் கமாலுதீன். பொதுவான சில விஷயங்களைப் பற்றிப் பேசிய பிறகு கமாலுதீன் நேராக விஷயத்துக்கு வந்தார்.

கும்பகோணத்தில் நிறைய தர்ம ஸ்தாபனங்கள் இயங்கி வருகின்றன என்பது அந்தணரான உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இத்தகைய தர்ம ஸ்தாபனங்கள் என்ன காரணங்களுக்காக தர்மவான்களால் பல ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்டதோ, அந்தக் காரணங்கள் இன்று நிறைவேற்றப்படவில்லை என்பது பெரும் சோகம்.

பொருள் வசதி நிறைந்த அந்த தர்மவான்கள் வகுத்துக் கொடுத்தபடி இந்தப் பாடசாலைகள் செயல்படவில்லை. இதில், பழம் பெருமை வாய்ந்த ராஜா வேத காவ்ய பாடசாலையும் அடக்கம்.

இன்றைக்கு நல்ல காரியங்களை செய்ய முனைபவர்கள்புதிதாகத் துவக்குபவர்கள் எண்ணிக்கை குறைவாகி விட்டது. அதே சமயம் ஓரளவுக்கு இயங்கி வருகின்ற தர்ம ஸ்தாபனங்கள் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதும் அவசியம் ஆகிறது. அப்படி நடந்தால்தான், இவற்றைத் துவக்கி வைத்த தர்மவான்களுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் ஏற்படுத்தும். எனவே, வேத பாடசாலை செயல்படும் இடங்களில் இருந்து வரும் குளறுபடிகளை எல்லாம் சீர்திருத்தும் பணியில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும்என்று தெளிவாகநிதானமாகப் பேசினார் கமாலுதீன்.

பேசி முடித்த கமாலுதீனை சந்தோஷமாகவும் அதே நேரம் குழப்பத்துடனும் பார்த்தார் சர்மா.

சந்தோஷத்துக்குக் காரணம்இஸ்லாமியர் ஒருவர், இந்து வேத பாடசாலைகள் நன்றாக இயங்க வேண்டுமே என்று கவலைப்படுவது.

குழப்பத்துக்குக் காரணம்இதற்குத் தான் எந்த வகையில் உதவ முடியும் என்கிற எண்ணம்.

கமாலுதீனை மிக ஆழமாகப் பார்த்து விட்டு, ”தயவுசெய்து மன்னிக்கவும். தாங்கள் என்னை அழைத்துப் பேசியது மிகுந்த சந்தோஷம் தருகிறது. தங்களது எண்ணம் எனக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகிறது. ஆனால், தாங்கள் சொல்வது போன்ற பொதுக் காரியங்களில் ஈடுபடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அதற்கான நேரமும் இல்லைஎன்று முடித்தார் சர்மா.

சர்மா சொன்ன பதிலைக் கேட்டு, சற்று ஏமாற்றமான கமாலுதீன் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு, ”ஒரு நல்ல பணிக்காகத்தான் உங்களை நான் அழைக்கின்றேன். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள்பொதுவாக உங்களைப் போல் சமூகத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் (அப்போது சர்மா கும்பகோணத்தில் பிரபலமான ஆயுர்வேத மருத்துவர்), இதுபோன்ற பணிகளை ஏற்றுக் கொள்ள மறுப்பது வருத்தத்துக்குரியது.

சரி, இத்தகைய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிப்பது என்பது அவரவர்கள் மன நிலையைப் பொறுத்தது. போகட்டும்அதே நேரம் இது போன்ற சமூகப் பணி செய்பவர்களின் நடவடிக்கையில் ஏதாவது குற்றம் குறை தென்பட்டால் மட்டும், அதைப் பற்றி விமரிசித்துப் பேசியே பொழுதைக் கழித்து விடுகிறார்கள் பலர்என்று பொத்தாம்பொதுவாகப் பேசினார்.

சர்மாவுக்கு ஏதோ சுருக்கென்று பட்டது.

கமாலுதீன் மிகவும் தன்மையாக, ”நான் என் மனதில் உள்ளதை உங்களிடம் பேசி விட்டேன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களை எனக்குப் பழக்கம் இல்லை. இருந்தாலும், ஆண்டவன் தூண்டுதலால், உங்களை அழைத்துப் பேசினேன். ஒன்று மட்டும் நிச்சயம்இந்தப் பாடசாலை சம்பந்தப்பட்ட பணியில் தாங்கள் முக்கிய பொறுப்பு எடுத்துக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் பாவத்துக்கும் பழிக்கும் நீங்கள்தான் பொறுப்பாக வேண்டி இருக்கும்என்று அன்புடனும் கண்டிப்புடனும் கூறினார்.

யார் என்கிற அறிமுகமே இல்லாமல் இந்த அளவுக்குத் தன்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு கமாலுதீன் பேசியதும், சர்மாவின் மனம் மீண்டும் இப்படியும் அப்படியும் ஊசலாட ஆரம்பித்தது. ‘இவர் சொல்வது போல் வேத பாடசாலை சம்பந்தப்பட்ட பொறுப்புகளை எடுத்துக் கொள்ளலாமா, அல்லது எதுவும் பேசாமல் ஒதுங்கி விடலாமா?’ என்று யோசித்தார். ஆனால், தெளிவான ஒரு தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.

எனவே கமாலுதீனைப் பார்த்து, ”தாங்கள் சொன்ன கருத்துகள் மிகவும் முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை. தாங்கள் இதை என்னிடம் சொன்ன விதம் நிரம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்துச் சொல்கிறேன்என்று கமாலுதீனிடம் சொல்லி விட்டுப் புன்னகைத்தபடி எழுந்தார் சர்மா.

வீட்டுக்கு வந்ததும் யோசித்தார் சர்மா. அவரால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. அப்போது சட்டென்று அவரது நினைவில் வந்தவர் காஞ்சி மகா பெரியவா. எத்தகைய ஒரு குழப்பமான மன நிலையில் சர்மா தவித்தாலும், அப்போது மகா பெரியவாளை நினைப்பார். அந்த மகானே ஏதேனும் ஒரு ரூபத்தில் வழியைக் காண்பிப்பார்.

சர்மாவின் இல்லத்துக்கு மகா பெரியவா எழுந்தருளிய நிகழ்வும் ஏராளம் உண்டு. இவரது வீட்டுக்குள் மகா பெரியவா நுழைந்ததும், அங்கு இருக்கின்ற மூலிகைகளை நோட்டம் விடுவாராம். இலைகளையும், கொடிகளையும் தன் கையில் எடுத்துப் பார்ப்பாராம்.

மகா பெரியவாளுக்குப் பல முறை சர்மா வைத்திய முறைகளைச் சொல்லி இருக்கிறார். ஆயுர்வேத மருந்துகளும் தந்திருக்கிறார்.

என்ன செய்வது என்று சர்மா குழம்பிய வேளையில் மகா பெரியவா இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார். ‘கமாலுதீன் நம்மிடம் கேட்ட உதவி, வேத பாடசாலை சம்பந்தப்பட்டது. எதற்கும் மகா பெரியவாளிடம் ஒரு முறை கேட்டு, அவர் என்ன பதில் சொல்கிறாரோ, அதன்படி நடந்து கொண்டால் நமக்கு எந்த சிக்கலும் வராது என்று தீர்மானித்து, இளையாத்தங்குடி முகாமுக்கு ஒரு போன் போட்டார் சர்மா.

மடத்தின் மேனேஜர் விஸ்வநாத ஐயரிடம் இந்த விஷயத்தை சொல்லி, ”இது குறித்து மகா பெரியவா எனக்கு என்ன உத்தரவிடுகிறாரோ, அதன்படி நான் நடந்து கொள்வேன். அவரிடம் கேட்டுச் சொல்லவும். பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்என்றார் சர்மா.

அடுத்த ஒரு சில மணி நேரத்தில் இளையாத்தங்குடி முகாமில் இருந்து சர்மாவின் இல்லத்துக்கு போன். பேசியவர்மேனேஜர் விஸ்வநாத ஐயர். ”கமாலுதீன் சொன்ன பணியை ஏற்றுக் கொள்ளுமாறு பெரியவா உனக்கு உத்தரவு போட்டு விட்டார்என்று சர்மாவிடம் சொன்னார் மேனேஜர்.

இதன் பின் சர்மாவுக்கு நிம்மதி. பெரியவா உத்தரவு கொடுத்து விட்டார் என்றால், அது தெய்வத்தின் உத்தரவு!

மறுநாளே கமாலுதீனை சந்தித்து, ”தாங்கள் சொன்ன பணியை மிகவும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு என் ஆச்சார்யர் உத்தரவிட்டு விட்டார்என்றார்.

கமாலுதீனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அடுத்து, இவர் (சப் ஜட்ஜ்) ஆளுகையின் கீழ் இயங்கி வரும் முக்கியமான சில தர்ம ஸ்தாபனங்களில் சர்மாவையும் ஒரு டிரஸ்டி ஆக்கினார்.

இதை அடுத்து சர்மாவுக்கு ஒரு சந்தேகம். தான் டிரஸ்டி என்றாலும், ஏதேனும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றால் அதற்குப் பிற டிரஸ்டிகளின் ஒத்துழைப்பு தேவை ஆயிற்றேஅது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் எனக்கு உதவாவிட்டால் நான் என்ன செய்வது என்று கமாலுதீனிடம் கேட்க… ”வேத பாடசாலை அபிவிருத்தி செய்வதற்கு உங்களுக்கு எந்த விதமான இடையூறும் வராது. அப்படி வந்தால், அதை நான் எதிர்கொள்கிறேன்என்று தைரியம் கொடுத்தது சர்மாவுக்குப் புதுத் தெம்பை ஊட்டியது.

மகா பெரியவா கொடுத்த உத்தரவு மற்றும் கமாலுதீன் தந்த தைரியம்இவற்றுடன் களத்தில் இறங்கினார் சர்மா.

வேத பாடசாலைக்கு மாணவர்களே சேராமல் இருந்த நிலையை மாற்றி சுமார் 70 மாணவர்களைச் சேர்த்தார் சர்மா. பல காலத்துக்கு வேத முழக்கம் இல்லாமல் இருந்த பாடசாலைகள் வேத கோஷத்துடன் களை கட்ட ஆரம்பித்தன.

வேத பாடசாலைகள் சிறந்து விளங்குவதற்குத் தன் நலன் பற்றிக் கவலைப்படாமல் ஒருவர் உழைக்கின்றார் என்றால், மகா பெரியவாளுக்கு அதை விட ஆனந்தம் வேறு இல்லை. வேத பாடசாலைகளைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு மகா பெரியவா ராஜ்யத்தில் தனி கவனிப்பு உண்டு.

கவனிப்புஎன்றால், விசேஷ ஆசிர்வாதம். இது இருந்தால் போதுமே! வேறு எதுவும் வேண்டாமே!

வேத பாடசாலை பணிகளின் முன்னேற்றம் பற்றி அவ்வப்போது மகா பெரியவாளுக்கு அறிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தார் சர்மா.

ஒரு முறை மகா பெரியவாளை சர்மா தரிசனம் செய்யச் சென்றபோது, ”நான் எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொன்னேன். இப்பவும் சொல்லிண்டு இருக்கேன். இந்துக்கள் முதற்கொண்டு யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால், உங்களது ஜட்ஜ் பிரமாதமாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராமே!” என்று கமாலுதீனை வாய் நிறையப் பாராட்டினாராம்.

ஒரு சில மாதங்களுக்குப் பின் மகா பெரியவா கும்பகோணம் அருகே கல்யாணபுரம் (வேப்பத்தூர் பக்கம்) என்கிற கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அதுவரை மகா பெரியவாளை நேருக்கு நேராகப் பார்த்திராத சப் ஜட்ஜ் கமாலுதீன், மகா பெரியவாளைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.

பெரியவாளை தரிசிக்க நான் வரலாமா?” – ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு இருந்தது கமாலுதீனின் கேள்வி.

சர்மாவுக்கு சட்டென்று என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

காஞ்சி மடத்து சம்பிரதாயம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில், ”ரெண்டு நாள்ல உங்களுக்குச் சொல்றேன்என்று ஜட்ஜிடம் வாய்தா வாங்கிக் கொண்டு, கல்யாணபுரத்துக்குப் போய் இந்த விஷயத்தை மகா பெரியவா காதில் போட்டார்.

கமாலுதீன் தன்னைச் சந்திக்க மகா பெரியவா அனுமதி தருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது சர்மாவுக்கு. ஆனால், சர்மா சற்றும் எதிர்பார்க்காதபடி, ”, வேத சம்ரட்சணம் பண்ற கமாலுதீனா? தாராளமா கூட்டிண்டு வாயேன்என்று சந்தோஷமாக அனுமதி அளித்தார் பெரியவா. சர்மாவுக்கும் பெருத்த சந்தோஷம்.

கும்பகோணம் திரும்பியதும், நேராக கமாலுதீனின் இல்லத்துக்கே போனார் சர்மா. மகா பெரியவா அவரைச் சந்திக்க சந்தோஷமாகச் சம்மதித்து விட்டார் என்ற தகவலைச் சொன்னதும், கமாலுதீன் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

மறுநாளே இருவரும் ஒரு காரில் கல்யாணபுரம் புறப்பட்டனர்.

வேதத்தைப் பாதுகாக்கப் பாடுபடும் ஒரு இஸ்லாமிய நீதிபதியும், சதா சர்வ காலமும் வேதத்தையே தன் மூச்சாகக் கொண்டு வாழும் மகா பெரியவாளும் இன்றைய தினம் சந்திக்க இருக்கிறார்கள் என்ற சந்தோஷமான தகவல் வருண பகவானையே மனம் குளிர வைத்து விட்டது போலும்வானமே பொத்துக் கொண்டது போல் மழை கொட்டிக் கொண்டிருந்தது.

கன மழையில் ஊர்ந்து ஊர்ந்து சென்ற கார் கல்யாணபுரத்தில் மகா பெரியவா முகாமிட்டிருக்கிற இடத்தை அடைந்தது. முகாமுக்குச் சற்று முன்னதாகவே ஒரு மரத்தின் ஓரம் காரை நிறுத்தச் சொன்ன சர்மா, கமாலுதீனை காரிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் மட்டும் கீழே இறங்கினார்.

மழை கொட்டிக் கொண்டிருந்தாலும், பெரியவா தரிசனத்துக்காக அங்கே திரண்டிருந்த கூட்டம் கொஞ்சமும் அசரவில்லை. சாலையின் ஓரத்தில், வீட்டின் வெளியே, அக்கம்பக்கத்து வீடுகளில் என்று கூட்டம் ஆங்காங்கே பிரிந்து காணப்பட்டது.

பெரியவா முகாம் இருக்கும் பிரமாண்டமான அந்தப் பழைய வீட்டை நோக்கி தூறலில் நனைந்து கொண்டே ஓடினார் சர்மா. பெரியவா தங்கி இருந்த இல்லத்துக்குள் நுழைந்தார்.

உள்ளே பார்த்தால்பிரமித்துப் போனார் சர்மா.

கூட்டமான கூட்டம்.

பிரபலமான வித்வான்கள், பண்டிதர்கள், தொழில் துறை அன்பர்கள்இப்படி ஏராளமான வி..பி.க்கள் அந்த இல்லத்தில் கூடி இருந்தனர். அவர்களுக்கு முன்னால், மகா பெரியவா அமர்ந்து ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி இவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். புன்னகை ததும்பும் திருமுகத்தோடு கைகளை இப்படியும் அப்படியும் அசைத்தபடி மகா பெரியவா சொல்கிற விஷயத்தை அனைவரும் செவி மடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த அருமையான சத் சங்கம் நடந்து கொண்டிருக்கிற இடத்துக்குள் தான் நுழையலாமா என்கிற ஒரு தயக்கம் சர்மாவுக்கு. மழைத் தூறலில் நனைந்தபடி வேகமாக உள்ளே வந்தவர், அதற்கு மேல் ஓரடி கூட எடுத்து வைக்காமல் தான் நின்ற இடத்தில் அப்படியே நின்றார்.

கொட்டும் மழையில் வெளியே காருக்குள் கமாலுதீன் காத்துக் கொண்டிருக்கிறார். அவரும் முக்கியமான வி..பி.! அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து வருபவர். அந்த உயர்ந்த மனிதரை வெளியே காக்க வைக்கலாமா?’ என்கிற கேள்வியும் சர்மாவின் மனதில் சட்டென்று எழுந்தது.

ஆனால், உள்ளே திரளான கூட்டத்தின் இடையே மகா பெரியவா தற்போது இருக்கிற மும்முரத்தைப் பார்த்தால், பெரியவாளை நெருங்கி, ‘கமாலுதீன் தங்களை சந்திக்க வந்திருக்கிறார்என்று சொல்வது முறைதானா என்றும் ஒரு கேள்வி எழும்பியது.

இந்த நேரத்தில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சர்மாவால் தீர்மானிக்க முடியவில்லை.

ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

இத்தனை பக்தகோடிகளின் முன்னால் நடுநாயகமாக அமர்ந்திருக்கிற மகா பெரியவா, முகாமின் வாசல் அருகே தயக்கத்துடன் நின்றிருக்கிற சர்மாவைப் பார்த்து விட்டார்.

விரல் மூலம் சைகை காண்பித்து சர்மாவைத் தன் அருகே அழைக்கலாம் மகா பெரியவா.

அழைக்கவில்லை.

ஒரு சிப்பந்தியை அனுப்பி, சர்மாவைத் தன் அருகே கூட்டி வரச் சொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கலாம்.

உத்தரவிடவில்லை.

சர்மாவைக் கொஞ்ச நேரம் காத்திருக்குமாறு தகவல் அனுப்பலாம்.

சொல்லவில்லை.

அப்படி என்றால், சர்மாவைப் பார்த்தவுடன் அந்தப் பரப்பிரம்மம் என்ன செய்தது தெரியுமா?

தான் எந்த முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாரோ, அதை அப்படியே விட்டு விட்டு சட்டென்று எழுந்தார். சர்மா நின்று கொண்டிருக்கும் திக்கு நோக்கி விறுவிறுவென்று நடந்தார்.

அங்கே கூடி இருந்த பண்டிதர்களுக்கும், பிரபலங்களுக்கும் ஆச்சரியம். ‘என்னதுபெரியவா திடீரென்று எழுந்து போகிறார்? எங்கே போகிறார்? அப்படி என்ன அவசரம்?’ என்று அனைவரும் பெரியவா போன திக்கில் பார்வையைத் திருப்பினர்.

மகா பெரியவாளே தன்னை நோக்கி வருகிறார் என்பது தெரிந்து சர்மா விதிர்விதிர்த்துப் போய் விட்டார். நடமாடும் தெய்வமே தன்னிடம் வருவதா? கைகளை உயரே தூக்கிப் பெரிதாகக் கும்பிட்டு, பெரியவா வரும் திசைக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார்.

தனக்கே உரித்தான வேகத்துடன் நடந்து சர்மாவை அடைந்த மகா பெரியவா, ”ஜட்ஜைக் கூட்டிண்டு வந்துட்டியா? அவர் எங்கே இருக்கார்?” என்று வார்த்தைகளும் சமிக்ஞையும் கலந்து ஒரு குழந்தை போல் கேட்டார்.

பெரியவா, அவர் கார்ல இருக்கார். மழை கொட்றதுஎன்று கார் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார் சர்மா.

நீ அவரை பத்திரமா மழைல நனையாதபடிக்கு பக்கத்து கிரஹத்துக்கு அழைச்சுண்டு வந்துடுஎன்று சொல்லி விட்டு, ஸ்ரீமடத்தின் மேனேஜரைத் தன் அருகே கூப்பிட்டு, அவருக்கு ஓரிரு உத்தரவுகளைப் பிறப்பித்தார் மகா பெரியவா.

மகா பெரியவாளிடம் இருந்து புறப்பட்டு சர்மா வெளியே வந்தார். இன்னும் மழை விடவில்லை.

கார் அருகே போய் கமாலுதீனிடம் விஷயத்தைச் சொல்லி, ”வாங்கோஎன்றார். யாரோ ஒரு அன்பர் தந்த குடையை விரித்து கமாலுதீன் மழையில் நனையாதபடி அவரை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்தபோதுஏறக்குறைய நனைந்தே விட்டார்கள்.

தன் கையில் அழகாக மடித்து வைத்திருந்த ஒரு சிறு டவலால் ஈரமான தலையைத் துவட்டிக் கொண்டார் கமாலுதீன்.

அந்த வீட்டில் யாருமே இருந்ததாகத் தெரியவில்லை. மகா பெரியவா வருகைக்கென்று அந்த இல்லம் சுத்தப்படுத்தப்பட்டு ஸ்ரீமடத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இல்லத்தின் கூடத்தில் (கிராமத்து வீடுகளில் கூடம், தாழ்வாரம் என்றெல்லாம் உண்டு) மகா பெரியவா அமர்வதற்கென்று ஒரு ஆசனம் போடப்பட்டிருந்தது.

அந்த ஆசனத்தின் அருகே கமாலுதீனும், சர்மாவும் நின்றபடியே மகா பெரியவாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

அடுத்து, ஒரு நிமிடம்கூடக் கடந்திருக்காது.

அதிவேகமாக நடந்து மழையில் நனைந்தபடியே மகா பெரியவா என்கிற தெய்வமும் இந்த வீட்டுக்குள் நுழைந்தது.

குடை இல்லை. சிஷ்யர்கள் இல்லை. எந்த விதமான ஆரவாரமும் இல்லை. தனியே வந்தார் மகா பெரியவா.

முகத்தில் ஒரு புன்னகையோடு கமாலுதீனையும், சர்மாவையும் பார்த்துத் தன் வலக்கையை உயர்த்தியபடி வந்தார்.

கண்களில் நீர் பெருக சர்மா இரு கரங்களையும் உயர்த்திக் கும்பிட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

கண்களில் ஆனந்தத்துடன் இரு கைகளையும் கூப்பி மகா பெரியவாளுக்கு தன் வணக்கத்தைச் சொன்னார் கமாலுதீன்.

மகா பெரியவாளின் கால்கள் முழுக்க சேறும் சகதியுமாக இருந்தது. அணிந்திருந்த வஸ்திரத்தில் ஆங்காங்கே சேற்றின் துகள்கள் ஒட்டி இருந்தன.

ஒரு உயர்ந்த மனிதர் கமாலுதீனுக்கு தரிசனம் தருவதற்காகஅவரைக் காக்க வைக்க விரும்பாமல்சேறும் சகதியுமாக வந்த கோலத்தைப் பார்த்ததும் சர்மாவின் கண்கள் பனித்தன.

கமாலுதீன் கூப்பியபடியே நின்று கொண்டிருந்தார்.

கமாலுதீனை நெருங்கி, ஏற்கெனவே மிகவும் பழக்கப்பட்டவர் போல் அவரிடம் நலம் விசாரித்தார்.

கமாலுதீனின் பெற்றோர், உறவினர்கள், குடும்பம் பற்றி எல்லாம் மிகவும் நிதானமாக மகா பெரியவா விசாரித்தார்.

நெகிழ்வோடு பதில் சொல்லிக் கொண்டிருந்த கமாலுதீனை கூப்பிய கரங்களை மட்டும் விலக்கவே இல்லை. அவ்வப்போது அவரது கண்களில் இருந்து நீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

சர்மா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாரே தவிர, எதுவும் பேசவில்லை.

வேத பாடசாலை பற்றியோ, கமாலுதீனின் நற்காரியங்கள் பற்றியோ பெரியவா எதுவுமே அவரிடம் பேசவில்லை. மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

பதினைந்து இருபது நிமிடம் போயிருக்கும். சொல்லி வைத்தாற்போல் மடத்து சிப்பந்தி ஒருவர் மூங்கில் தட்டில் எதையோ வைத்து பெரியவா அருகே மிகவும் பவ்யமாகக் கொண்டு வந்தார்.

அதை வாங்கி கமாலுதீனுக்குக் கொடுத்தார் மகா பெரியவா. அதில், ஒரு சில பழங்களும் உயர்ரக பட்டு உடையும் இருந்தது.

பிரசாதம் தரும்போது, ”நல்ல காரியங்களை செய்து கொண்டு க்ஷேமமா இருஎன்று ஆசிர்வாதம் செய்து விட்டு, சர்மா பக்கம் திரும்பி, ”அவரை பத்திரமா கூட்டிண்டு போறியா?” என்று கேட்டார்.

சர்மாவும்உத்தரவு பெரியவாஎன்று தலை அசைத்தார்.

அவ்வளவுதான். அந்த நடமாடும் தெய்வம் எந்த வேகத்தில் சேறும் சகதியுமாக உள்ளே வந்ததோ, அதே வேகத்தில் இங்கிருந்து திரும்ப ஆரம்பித்தது.

மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக திரளான பக்தர்கள் வெளியே காத்திருப்பது இங்கிருந்தே தெரிந்தது.

ஜட்ஜ் செய்து வரும் காரியங்கள் பற்றி விரிவாக அவரிடம் விசாரிக்கவில்லை.

அவரது செயல்பாடுகளுக்குப் புகழாரம் சேர்க்கவில்லை.

ஒருவரைப் பற்றிப் புகழ வேண்டும் என்றால், அவரிடம் தனியாகச் சொல்லக் கூடாது.

பலரும் நிறைந்த சபையில் புகழ வேண்டும். அதுதான் சம்பந்தப்பட்டவருக்குப் பேரானந்தம் தரும்.

அதையும் மகா பெரியவா கூடிய விரைவிலேயே நிகழ்த்திக் காட்டினார்.

ஒருவரிடம் இருக்கின்ற குறைகளைச் சுட்டிக் காட்டும்போது எவரும் இல்லாத வேளையில் அவரிடம் தனியே தெரிவிக்க வேண்டும். அதே வேளையில் ஒருவரிடம் இருக்கின்ற நல்ல குணங்களைப் பாராட்டுகிறோம் என்றால், பலரும் கூடி இருக்கின்ற வேளையில் பாராட்ட வேண்டும்.

நடமாடும் தெய்வமான மகா பெரியவா, கல்யாணபுரத்தில் தன்னை சந்தித்த கமாலுதீனின் ஆன்மிக நற்பணிகளுக்கு எந்த விதமான பாராட்டையும் தெரிவிக்கவில்லை. வெறுமனே அவரைப் பார்த்துக் குடும்பம் பற்றியும், உத்தியோகம் பற்றியும் கனிவுடன் விசாரித்து அனுப்பி விட்டார்.

இதே கமாலுதீனை மகா பெரியவா பின்னர் வந்த ஒரு நாளில் பாராட்டினார். எப்படி தெரியுமா?

ஐயாயிரம் பேர் கூடி இருந்த ஒரு சபையில் தானே அவருக்கு ஒரு அறிமுகம் கொடுத்து, இஸ்லாமியர்களின் இறைப்பணிக்கு உதாரணமாக ஒரு பழைய சம்பவத்தையும் சொல்லி, கமாலுதீனை ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளினார் மகா பெரியவா.

ப்படிப் புகழ்ந்தது எந்த நிகழ்ச்சியில் என்று சொன்னால், அது இன்னும் பரவசமாக இருக்கும்.

எந்த கமாலுதீன் வேதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தி, அதன் வளர்ச்சிக்கு வித்திட்டாரோ, அதே வேதம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் இந்தப் புகழுரை வழங்கினார்!

வேதபாஷ்யக் கல்லூரி துவங்குவது குறித்தான ஒரு பிரமாண்ட கூட்டம் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் 1963-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்கென்றே கும்பகோணம் ஸ்ரீமடத்தில் முகாமிட்டிருந்தார் வேத நாயகனான மகா பெரியவா.

மகா பெரியவா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது தெரிந்ததும், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கூடி விட்டனர். சுமார் ஐயாயிரம் பேருக்கு அந்த விழாப் பந்தலில் திரண்டு, மகானை தரிசிக்க ஆர்வமாக இருந்தனர்.

வேதம் தொடர்பான பணிகளில் வெகு முனைப்புடன் இருந்த லட்சுமிகாந்த சர்மா இந்தப் பிரமாண்ட கூட்டத்தில் உணர்ச்சிமயமாக வரவேற்புரை வாசித்தார். அப்போது ஜில்லா நீதிபதியாக இருந்த நரசிம்மனும், சப் ஜட்ஜ் கமாலுதீனும் இந்த வைபவத்தில் சிறந்து அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டுக் கவுரவம் செய்யப்பட்டனர்.

அன்றைய விழாவில் திடீர் ஹீரோ அந்தஸ்து, கமாலுதீனுக்கு மகா பெரியவாளால் வழங்கப்பட்டது.

மேடையில் சப் ஜட்ஜ் அமர்ந்திருந்தார். அப்போது விழா மேடையில் வரவேற்புரை வாசித்துக் கொண்டிருந்த சர்மாவுக்கு ஒரு ஜாடை காண்பித்துத் தன் அருகே அழைத்தார் மகா பெரியவா.

தன் உரையைப் பாதியில் நிறுத்தி விட்டு மிகவும் பவ்யமாகத் தன் வலக்கை விரல்களால் மரியாதை நிமித்தம் வாயைப் பொத்தியபடி மகா பெரியவா அருகே போய் நின்றார் சர்மா.

சர்மாவை அண்ணாந்து பார்த்து விட்டு, ”தோ உக்காந்துண்டிருக்காரே இந்த சப் ஜட்ஜ்இவரை நமக்கெல்லாம் தெரியும். ஆனா, இந்தக் கூட்டத்துல இருக்கறவா எல்லாருக்கும் தெரியுமானு சொல்ல முடியாது. இவர் யாரு, என்ன ஜாதி, என்னென்ன கைங்கர்யம் பண்ணிண்டுருக்கார்னு கூட்டத்தினருக்குச் சொல்லுஎன்றார் பெரியவா உத்தரவாக.

அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்த சப் ஜட்ஜ் கமாலுதீனை அங்கே அன்றைக்குக் கூடி இருக்கும் ஐயாயிரம் பேருக்கும் தெரியுமா என்றால், சந்தேகம்தான். கும்பகோணத்திலேயே மிக முக்கிய உயர் பொறுப்பிலும், பதவியிலும் இருப்பவர்கள் வேண்டுமானால், தங்களின் உத்தியோகம் பொருட்டும், வழக்கு விவகாரங்கள் பொருட்டும் இவரைத் தெரிந்து வைத்திருக்கலாம்.

ஆனால், அன்றைக்கு எண்ணற்ற தொழிலதிபர்களும், பல்துறை வித்தகர்களும், வேதத்தில் கரை கண்ட பண்டிதர்களும், அரசுத் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் திரளாகக் கூடி இருக்கின்ற ஒரு வேளையில் கமாலுதீனின் நற்செயல்கள் பலருக்கும் தெரிய வேண்டும் என்று மகா பெரியவா தீர்மானித்தார்.

அதனால்தான் சர்மாவிடம், ”இந்த சப் ஜட்ஜ் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று இங்கே கூடி இருக்கும் கூட்டத்தினரிடம் சொல்லுஎன்றார் மகா பெரியவா.

சர்மாவுக்கு ஒரு தயக்கம். நீதித்துறையில் இருக்கின்ற ஒருவரைப் பற்றி, அவர் என்ன ஜாதி என்பதை, சாமான்யனான தான் எப்படி மேடையில் சொல்ல முடியும் என்கிற பயம். இப்படிச் சொல்லுமாறு உத்தரவிட்டவர் மகா பெரியவாதான் என்றாலும், இதை எப்படிச் சொல்வதுஎப்படி ஆரம்பிப்பது என்று சர்மா தடுமாறியபோதுஅந்த அற்புதம் நிகழ்ந்தது.

கமாலுதீன் பற்றிய அறிமுகத்தைத் தானே தர வேண்டும் என்று மகா பெரியவா முடிவெடுத்தார் போலும்.

மேடையில் இருந்தவர்களுக்கு மகா பெரியவா ஜாடை காட்டஅவருக்கு முன்னால் மைக் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

கூடி இருந்த ஐயாயிரம் பேரும் ஒரே நேரத்தில்ஜய ஜய சங்கரகோஷத்தை எழுப்பஆன்மிக அலை பேரலையாக எழும்பி, மெள்ள அடங்கியது.

கூடி இருந்த பக்தகோடிகளைப் பார்த்து, ”தோ, உக்காந்துண்டிருக்காரே இந்த சப் ஜட்ஜ்இவர் யார், பாத்திருக்கேளா? என்ன ஜாதின்னு தெரியுமா?” என்று துவங்கி, கமாலுதீனைப் பற்றி அறிமுகம் செய்து விட்டு, அவரைப் பற்றி உயர்வாகப் பேச ஆரம்பித்தார் மகா பெரியவா. கமாலுதீனின் கண்கள் லேசாக பனிக்கத் துவங்கின.

இதை அடுத்து சுமார் இரண்டு மணி நேரம், பல நல்ல செய்திகளைக் கலந்து ஒரு அருளுரை வழங்கினார் மகா பெரியவா. ஒட்டுமொத்தக் கூட்டமும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் அப்படியே அசையாமல் காணப்பட்டது.

மகா பெரியவா தன் அருளுரையை முடித்ததும் தண்டத்தை எடுத்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பிக்ககூட்டமும் மெள்ள நகர ஆரம்பித்தது.

திடீரென்று மகா பெரியவா என்ன நினைத்தாரோ, தெரியவில்லைதான் நடந்து சென்ற பாதையில் மீண்டும் அப்படியே ஒரு யூ டர்ன் போட்டுத் தான் எந்த இடத்தில் அமர்ந்து பேசினாரோ, அதே இடத்தில் வந்து அமரகூட்டம் மொத்தமும் திகைத்தது.

மேடையில் மகா பெரியவா அமர்ந்ததும், மெள்ள களைய ஆரம்பித்த கூட்டம், மீண்டும் அப்படியே அமர ஆரம்பித்தது. கூட்டத்தினரைப் பார்த்து, அனைவரும் அவரவர் இடத்தில் அமருமாறு சைகை செய்தார் பெரியவா. ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும், தன்னார்வத் தொண்டர்களும் இந்தக் கூட்டத்தை மீண்டும் அமர வைத்தனர்.

அடடாபுறப்பட்டுப் போன இந்த மகான் மீண்டும் வந்து அமர்ந்திருக்கிறார் என்றால் ஏதோ முக்கியமான விஷயத்தை நமக்குச் சொல்லப் போகிறார் போலிருக்குஎன்று ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் அமைதியானது. என்ன பேசப் போகிறார் என்பதை செவிமடுத்துக் கேட்கத் தயாரானது.

கமாலுதீனை சிநேகமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, மகா பெரியவா ஒரு சம்பவத்தைக் கூறலானார்.

அந்த சம்பவத்தின் சாராம்சம் இதுதான்:

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் மகா பெரியவா சேலம் பகுதியில் ஒரு யாத்திரை போய்க் கொண்டிருந்தார். அவருடன் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும், எண்ணற்ற பக்தர்களும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் மகா பெரியவா ஒரு பகுதிக்குள் செல்கின்றார் என்றால், அங்கு வசிக்கின்ற பக்தகோடிகளுக்கும், ஊர்க்காரர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக குதிரையின் மேல் ஒருவர் அமர்ந்துநகராஎன்ற தோல் இசைக்கருவியை அடித்துச் செல்வது வழக்கம் (மத்தளம் போல் இருக்கும் இந்த வாத்தியத்தை ஆலயத் திருவிழாக்களின்போதும் இசைப்பார்கள்).

அதன்படி, ‘மகா பெரியவா வந்து கொண்டிருக்கிறார்என்கிற தகவலைச் சொல்லிக் கொண்டே இந்த வாத்தியத்தை முழங்கியபடி குதிரையின்மேல் ஒருவர் அமர்ந்து போய்க் கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு சாலையில் இப்படிச் சொல்லிச் சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஒரு மசூதி குறுக்கிட்டது.

மசூதியைக் கடக்கும்போது இந்த வாத்தியத்தை அடித்தபடி சென்றதால், அங்கே மசூதியின் வாசலில் இருந்த ஒரு இஸ்லாமியத் தோழர், குதிரையின் கழுத்தில் இருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தார். குதிரை அதற்கு மேல் நகர முடியவில்லை. அதற்குள் அங்கே மசூதிக்குள் இருந்த மேலும் சில இஸ்லாமியத் தோழர்களும் கூடி விட்டனர்.

அப்போது, ”மசூதியைக் கடந்து செல்கிறபோது இப்படிப்பட்ட வாத்தியம் இசைப்பதை நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று குதிரை மேல் அமர்ந்திருந்தவரிடம் கேட்டிருக்கிறார், கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த இஸ்லாமியத் தோழர்.

இதற்குள் இரு தரப்பாரும் அங்கே கூடசிறு சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் மகா பெரியவா அந்த வழியே வராமல், வேறு தெருக்கள் வழியே அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த மசூதிக்கு வெகு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் மகா பெரியவாளுக்கு முகாம் ஏற்பாடானது.

அதே தினம் இரவு அந்த முகாமுக்குத் திடீரென ஒரு இஸ்லாமியர் வந்தார். அவர் யார் என்றால், அன்றைய தினம் பகல் பொழுதில் ஏற்பட்ட திடீர் சலசலப்பின்போது உடன் இருந்தவர்.

மகா பெரியவா முகாமிட்டிருந்த இடத்தின் அருகே வந்தவர், அங்கே நின்று கொண்டிருந்த மடத்தின் பிரதான அதிகாரியை அணுகினார். இவர் யார் என்கிற விவரமும் அந்த அதிகாரிக்குத் தெரியும்.

இவர் ஏன் இங்கே வந்திருக்கிறார்?’ என்று அந்த அதிகாரி குழம்பி நின்றபோது, அவர் சொன்ன பதில் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வந்த இஸ்லாமியத் தோழர், தான் மகா பெரியவாளை சந்திக்க வேண்டும்அதுவும் தனியாக சந்திக்க வேண்டும் என்று மடத்து அதிகாரியிடம் சொன்னார்.

அன்றைய தினம் பகல் பொழுதில் நடந்த சம்பவத்தை மனதில் கொண்டு, ஏதேனும் விபரீதம் ஆகி விடப் போகிறது என்று பயந்து, ”அப்படி எல்லாம் தனியாக சந்திக்க முடியாது. வேண்டுமானால், மடத்தில் எல்லோரும் இருக்கும்போது பெரியவாளை சந்திக்கலாம்என்று சொன்னார்.

இதற்கு அந்த இஸ்லாமியத் தோழர் உடன்படவில்லை. அங்கிருந்து நகரவே இல்லை. எப்படியேனும் மகா பெரியவாளைப் பார்த்து விட வேண்டும் என்ற தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்.

அதே நேரம் அவர் கோபமோ பதட்டமோ அடையவில்லை. மடத்து அதிகாரியைப் பார்த்து, ”நீங்கள் அப்படி மறுக்கக் கூடாது. எனக்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே போதும். உங்கள் குருவை தனியே சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்என்றார் விடாப்பிடியாக.

தான் பிடித்த பிடியிலேயே இருக்கிறாரேஇவருக்கு சமாதானமாக என்ன பதில் சொல்வது, எப்படி இங்கிருந்து அனுப்புவது?’ என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் மடத்து அதிகாரி. பிறகு, ”உங்களது விருப்பம் மகா பெரியவாளிடம் தெரிவிக்கப்படும்அவர் சொல்கிற முடிவை உங்களிடம் பின்னர் தெரிவிக்கிறோம்என்பது போல் பூசினாற்போன்ற ஒரு பதிலைச் சொல்லி விட்டு, அந்த இஸ்லாமியத் தோழரை மிகவும் மரியாதையாக அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதன் பின்தான் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் மடத்து அதிகாரி.

அந்தக் கரடுமுரடான கிராமத்துச் சாலையில் தன் பார்வையில் இருந்து அவர் மறையும் வரை முகாம் வாசலிலேயே நின்று விட்டு, அதன் பின் உள்ளே அடி எடுத்து வைத்தார் மடத்து அதிகாரி. ‘எதற்கும் இந்த விஷயத்தைப் பெரியவா காதில் போட்டு வைப்போம். அவருக்குத் தெரிவிக்கவில்லை என்ற கெட்ட பேர் வரக் கூடாதுஎன்று தீர்மானித்து, முகாமில் மகா பெரியவா தங்கி இருந்த கொட்டகை அருகே சென்றார். அந்த மகானுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, இந்த நிகழ்வை அப்படியே சொன்னார்.

சிரத்தையாகக் கேட்டுக் கொண்டார் மகான். ஒரு சில விநாடிகளுக்குப் பதில் பேசவில்லை. என்னவோ யோசித்தார்.

மகா பெரியவா திருவாய் மலர்ந்து, என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை செவி மடுக்கத் தயாரானார் மடத்து அதிகாரி.

அந்தக் கலியுக தெய்வம் திருவாய் மலர்ந்த அடுத்த கணம் உதிர்த்த முதல் கேள்வி: ”ஏன் அவரை அனுப்பிட்டே?”

மடத்து அதிகாரிக்கு லேசான பயம், தான் தவறு செய்து விட்டோமோ என்று.

ஸ்ரீமடத்து அதிகாரியின் கண்களில் தெரிந்த பயத்தையும் தவிப்பையும் பார்த்த மகா பெரியவா வெகு சாதாரணமாக, ”என்னை சந்திக்கணும்னு ஒருத்தர் வந்து கேட்டா என்னோட அனுமதியைக் கேக்க மாட்டேளோ? நீங்களா ஏதானும் முடிவெடுத்து பதில் சொல்லிடறதா?” என்று கேட்ட மகா பெரியவா தொடர்ந்து, ”அவரை இப்பவே (இன்று இரவே) நேர்ல போய்ப் பார்த்து, நாளைக்குக் கார்த்தால நான் வரச் சொன்னேன்னு சொல்லு. அதோட, அவர் விருப்பப்பட்ட மாதிரியே யாரும் இல்லாத சூழ்நிலைல தனியா சந்திக்கிறேன்னும் சொல்லிடு.

அப்றம் இதோ, இந்த முகாமுக்கு எதிர்த்தாப்ல ஒரு வீடு இருக்கோல்லியோஅங்கே அவரை வரச் சொல்லிடு. அந்த வீட்டுல நான் அவரைத் தனியா பாத்துடறேன்என்ற மகா பெரியவா, ”நன்னா கேட்டுக்கோங்கோடாநாளைக்குக் கார்த்தால நானும் அவரும் பேசறப்ப நீங்க யாரும் எதானும் காரணத்தைச் சொல்லிண்டு உள்ளே வந்து ஒட்டிண்டுடப் படாதுஎன்று அங்கு இருந்த ஒரு சில சிப்பந்திகளைப் பார்த்துப் பெரியவா கறாராக உத்தரவிட்டார்.

மகா பெரியவா பேச்சுக்கு எவரும் மறுபேச்சு பேசுவதில்லை என்பதால், மடத்தின் அதிகாரி உட்பட எவரும் அன்றைக்கு எதுவும் பேசவில்லை.

இஸ்லாமியத் தோழருக்குத் தகவல் தெரிவிக்க மடத்து அதிகாரி அந்த இருள் வேளையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போனார்.

அடுத்த நாள் காலை. ஸ்ரீமடத்து அதிகாரி சொன்ன நேரத்துக்கு அந்த இஸ்லாமியர் முகாமுக்கு வந்து விட்டார்.

முகாமுக்கு எதிரில் காலியாக இருந்த ஒரு இல்லத்தில் அவரைக் காத்திருக்குமாறும், மகா பெரியவா சற்று நேரத்தில் அங்கே வர இருப்பதாகவும் தகவல் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

முகாமில் இருந்து மகா பெரியவா வெளியே வந்தார். ஸ்ரீமடத்து அதிகாரிகள் மிகுந்த கலவரத்துடன் காணப்பட்டனர். ‘பெரியவா அந்த இஸ்லாமியரைத் தனியாகச் சந்திக்கத்தான் வேண்டுமா? நேற்றைய தினம் மசூதியின் வாசலில் தேவை இல்லாமல் ஒரு விவாதம் வேறு நடந்துள்ளது. இவரது தற்போதைய வருகைக்கும் நேற்றைய சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குமா?’ – இதுதான் அவர்களின் கலவரத்துக்குக் காரணம்.

ஏதேனும் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தைச் சொல்லி, மகா பெரியவாளுடன் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த ஓரிரு சிப்பந்திகளை உடன் இருக்குமாறு செய்து விடலாம் என்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், மகா பெரியவா இவர்கள் அனைவருக்கும் எந்த வேலையும், யோசனையும் வைக்காமல் விறுவிறுவென்று முகாமில் இருந்து நடந்து வந்து, அந்த இல்லத்தின் உள்ளே சென்று விட்டார்.

மடத்து அதிகாரிகள் ஒரு சிலர் வேகமாக மகா பெரியவாளைப் பின்தொடர்ந்து சென்றபோது, அடுத்த அதிரடியும் நடந்தது.

தன்னை சந்திக்க இஸ்லாமியர் காத்திருந்த அந்த இல்லத்துக்குள் மகா பெரியவா நுழைந்தவுடன், வேறு எவரும் உள்ளே வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், அந்த வெளிவாசல் கதவை இறுகச் சாத்தி, உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு விட்டார் மகா பெரியவா.

வெளியே இருந்த மடத்து அதிகாரிகள், சிப்பந்திகள், பக்தகோடிகள் அனைவருக்கும் அதிர்ச்சி.

சரி, இந்த இல்லத்தின் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?

மகா பெரியவா உள்ளே நுழைந்ததும், மரியாதை நிமித்தம் அவரைப் பார்த்து ஒரு புன்னகை பூத்து விட்டுத் தான் கொண்டு வந்திருந்த ஒரு மஞ்சள் பைக்குள் கை விட்டார் இஸ்லாமியர். உள்ளிருந்து ஒரு காகித உறையை எடுத்தார்.

மகா பெரியவா ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். காகித உறைக்குள் இருந்து ஒரு சில காகிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

இது என்ன மொழியில் இருந்தது தெரியுமா?

சம்ஸ்கிருதத்தில்!

இஸ்லாமியர் தன் கையில் வைத்திருந்த காகிதத்தில் சம்ஸ்கிருதத்தில் ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் பெரியவா வியப்புடன் அவரைப் பார்த்தார்.

சாமீஉங்களைப் பாராட்டி சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம். இதை உங்ககிட்ட படிச்சுக் காட்டணும்னு ஆசைப்பட்டேன். அதான் நேத்து ராத்திரி வந்து ஒங்களைப் பாக்க பர்மிஷன் கேட்டேன். மறுத்துட்டாங்க. அப்றம் நீங்களே என்னை வரச் சொன்னதா சொன்னதும், அவ்ளோ சந்தோஷம்என்று கண்கள் கலங்கச் சொன்னவர்… ”சாமீ, நான் இதைப் படிக்கட்டுங்களா?” என்று கையில் அந்தக் காகிதத்தைத் தயாராக வைத்துக் கொண்டு கேட்டார்.

ஒரு புன்னகையுடன் பெரியவா தலையசைத்தார்.

என்னடாதுஉள்ளே மகா பெரியவாளும் ஒரு இஸ்லாமியரும் இருக்கிறார்கள். பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடி விட்டது. உள்ளே என்னதான் நடக்கிறது?’ என்று வெளியே நின்றிருந்த மடத்து பிரமுகர்கள் பதட்டத்தோடு காணப்பட்டனர்.

அந்த இஸ்லாமியர் மிக அழகாகராகத்துடன்தான் கொண்டு வந்திருந்த காகிதத்தைப் பார்த்து, அதில் இருந்த சம்ஸ்கிருதப் பாடலை வாசித்தார்.

இப்படிப்பட்ட ஸ்லோகங்களை வாசிப்பதற்கு சக்ரபந்தம், நாகபந்தம், கருடபந்தம் என்றெல்லாம் பல சாகித்ய மரபுகள் உண்டு. எந்த மரபும் பிசகாமல், மிகவும் உயிர்ப்போடு அந்தப் பாடலைப் பாடி முடித்ததும், மகா பெரியவா மிகவும் வியந்து போய் அவரைப் பார்த்தார்.

ரொம்ப நன்னாவே வாசிச்சேள்இது யார் எழுதின ஸ்லோகம்?”

நானே எழுதுனது சாமீ.”

பலேஒங்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?”

தெரியும் சாமீ. யார் சொல்லிக் கொடுத்தா? என்ன தொழில் பண்ணிண்டு இருக்கேள்?” என்று கேட்டார்.

முகம் நிறைய மலர்ச்சியுடன், ”இதை நான்தான் எழுதினேன். என்னோட அப்பா, அவருக்கு முந்தைய தலைமுறையினர் எல்லாரும் சம்ஸ்கிருதத்தில் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள்கிட்டேர்ந்துதான் நான் இதைக் கத்துண்டேன்என்றாரே, பார்க்கணும்!

பிரமாதம்என்ற மகா பெரியவா, ”நீங்கள்லாம் என்ன தொழில் பண்ணிண்டு இருக்கேள்னு சொல்லலையே?”

அந்த இஸ்லாமியத் தோழர் லேசாகத் தயங்கி, ”சாமீஎன்னோட முன்னோர்கள்லாம் கசாப்புக் கடை வெச்சிருந்தாங்கஎன்று சொன்னார்.

அவருக்குத் தன் வாழ்த்துக்களைச் சொல்லி வழியனுப்பி வைக்கும் விதமாக மகா பெரியவாளே அந்த உள்தாழ்ப்பாளைத் திறந்தார்.

வெளியே திரளான பக்தர்களும், மடத்துச் சிப்பந்திகளும் இந்த மகானின் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர்.

ஸ்ரீமடத்து அதிகாரியை ஜாடை காட்டி அழைத்தார். ”இவரைப் பத்திரமா அவரோட வீட்டுல கொண்டு விட்டுட்டு வாங்கோஎன்று இஸ்லாமியத் தோழருக்கு ஒரு புன்னகையுடன் விடை கொடுத்தார் மகா பெரியவா.

இந்த நினைவை அப்படி டவுன் ஹைஸ்கூலில் நடந்த விழாவில் விஸ்தாரமாகச் சொல்லி விட்டு, கமாலுதீனை சிநேகத்துடன் பார்த்தார்.

பிறகு மேடையில் மகா பெரியவா பேசினார்: ”எவரையும் நாம் வெறுக்கக் கூடாது. எவரைப் பற்றியும் தவறாக எடை போடக் கூடாது. எல்லா ஜாதியிலும் நல்லொழுக்கமும் உயர்ந்த பண்பும் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

அதுபோல் இந்த கமாலுதீன் இஸ்லாமியராக இருந்தாலும், வேதம் தழைக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவைஎன்று இஸ்லாமியர்களைப் பற்றியும் உயர்வாகச் சொல்லி விட்டு எழுந்தார் மகா பெரியவா. விழா நிறைவடைந்தது.

ஸ்ரீமடத்தின் சார்பாக கமாலுதீனை பத்திரமாக அவரது இல்லத்தில் விட்டு விட்டு வருமாறு சர்மாவுக்கு உத்தரவிட்டார் மகா பெரியவா.

மதம் எந்த ஒரு காலத்திலும் மனிதர்களைப் பிரிக்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர் மகா பெரியவா.

பக்திக்கும் மனிதாபிமானத்துக்கும் ஜாதி, மதம் கிடையாது. இதைத்தான் மகா பெரியவா தன் உபதேசங்களில் பெரிதும் வலியுறுத்தினார்.

எத்தனையோ இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்களாக இருந்துள்ளனர். இன்றைக்கும் இருந்து வருகின்றனர். மகா பெரியவாளை ஒரு நடமாடும் தெய்வமாக தரிசித்து வருகிறார்கள்.

காஞ்சியில் அமைந்த தனது பிருந்தாவனத்தில் (ஜீவ சமாதி) விளங்கி, அந்த மகான் நாம் சொல்லும் பிரார்த்தனைகளைக் கேட்டு, நமது வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு நம்மை ஆசிர்வதித்து வருகிறார் என்பது கண்கூடு. அனுபவப்பட்டவர்கள் மட்டுமே இதை உணர முடியும். தினம் தினம் அந்த மகானின் திருச்சந்நிதிக்கு வரும் திரளான பக்தர்களே இதற்கு சாட்சி!

மகா பெரியவா என்கின்ற ஒப்பற்ற தெய்வத்தின் மேல் பரிபூரண பக்தி கொண்டு, அவரை சரண் அடைந்தவர்கள் இன்றைக்கு எட்ட முடியாத உயரத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் எண்ணியது, பிரார்த்தித்தது எல்லாம் ஈடேறப் பெறுகிறார்கள்.

கும்பகோணத்தில் வேதம் கம்பீரமாக ஒலிப்பதற்கும், அறப் பணிகள் பெருகுவதற்கும் ஒரு காலகட்டத்தில் கமாலுதீன் முக்கியமான காரணமாக இருந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. அவரது பணிகளுக்கு உடன் இருந்து கைங்கர்யம் செய்தவர் லட்சுமிகாந்த சர்மா.

வேதம் படிக்கின்ற மாணவர்களுக்கு அப்போது மாதம்தோறும் அறுபது ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ‘இந்தத் தொகை மட்டும் போதாது. அவர்களுக்குக் கூடுதலாக இன்னும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்என்று சர்மாவிடம் வலியுறுத்தினார் கமாலுதீன். ‘இப்போதுள்ள சிக்கலான சூழ்நிலையில் இது சாத்தியமில்லை. இன்னும் சில மாதங்கள் சென்ற பிறகு வேண்டுமானால், வேதம் படிக்கின்ற மாணவர்களுக்கு ஏதேனும் கூடுதலாக வழங்க முயற்சிக்கலாம்என்று சர்மா திடமாகச் சொன்னதைக் காதில் வாங்கவில்லை கமாலுதீன்.

ஒரு நீதிபதிக்கென்று இருக்கும் சுய அதிகாரத்தின் மூலம் தானே நடவடிக்கையில் இறங்கினார். வேதம் படிக்கின்ற மாணவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஒரு மூட்டை நெல் கொடுக்கும்படி உத்தரவிட்டார் கமாலுதீன்.

காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது கமாலுதீன் பற்றி விசாரித்துத் தெரிந்து, அவருக்குத் தன் ஆசிகளைச் சொல்வார். கும்பகோணம் பக்கம் வரும்போதோ அல்லது வெளியூர்களிலோ இவர்களது சந்திப்பு அநேகமாக மாதம் ஒரு முறையாவது நிகழும். மகா பெரியவா மீது அளவு கடந்த பக்தி கமாலுதீனுக்கு ஏற்பட்டு விட்டது.

ஒரு முறை வெளியூரில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை சர்மா தரிசனம் செய்யச் சென்றபோது கமாலுதீன் பற்றியும் பேச்சு வந்தது. அவரது நலன் பற்றி பெரியவா விசாரித்தார்.

அப்போது சர்மா, ”பெரியவா, இப்படி நான் கேக்கறதுக்கு மன்னிக்கணும். ஜட்ஜுக்கு (கமாலுதீன்) உங்க மேல அதீத பக்தி இருக்கு. ஸ்ரீமடத்துக்கு ரெகுலரா வர்ற ஒரு உள்ளூர் பக்தரைவிட இவருக்கு இருக்கக் கூடிய பக்தி அதிகம்னுதான் சொல்லணும். தர்மம் நன்னா நடக்கணும்கறதுக்காக மெனக்கெடறார். ஆனாலும்…” என்று மெள்ள இழுத்தார் சர்மா.

அந்த அறையில் அப்போது மகா பெரியவாளும் சர்மாவும் மட்டுமே இருந்தனர்.

சர்மாவையே உற்று நோக்கினார் மகா பெரியவா. ‘சொல்ல வந்ததைச் சொல்என்பது போல் ஜாடை காண்பித்தார்.

இல்ல பெரியவாஜட்ஜ் ஒங்ககிட்ட நன்னா பேசுறார்மரியாதை பண்றார்ஆனா, இதுவரைக்கும் அவர் ஒங்களுக்கு நமஸ்காரம் பண்ணதே இல்லியேஅதான்…” என்று சர்மா இழுத்தார்.

மகா பெரியவா பெரிதாகச் சிரித்தார். பிறகு, ”நீ தப்பா புரிஞ்சுண்டு இருக்கேஅவர் எனக்கு நமஸ்காரம் பண்ணி இருந்தால், அவர் மேல எனக்கு மரியாதை ஏற்பட்டிருக்காது. தரிசனம் கொடுத்திருக்க மாட்டேன்என்றார்.

சர்மா ஒன்றும் புரியாமல் பெரியவாளைப் பார்த்தார்.

என்னநோக்கு ஒண்ணும் புரியலயாஅவரோட மதக் கொள்கைப்படி ஆண்டவனைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கக் கூடாது அப்படின்னு இருக்கு. அதை அப்படியே அவர் கடைப்பிடிப்பதால்தான் எனக்கு அவரிடம் அன்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் தனது மதத்துக்கும், மதக் கொள்கைக்கும் புறம்பாக எனக்கு நமஸ்காரம் செய்து இருந்தால் நான் அவருக்கு தரிசனம் கொடுத்திருக்க மாட்டேன்என்று மிகத் தெளிவாகப் பேசினார் மகா பெரியவா.

சர்மா மிகவும் நெகிழ்ந்து போய், மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து, ”இப்படிக் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடுங்கோ பெரியவாஎன்று வருத்தம் தெரிவித்தார்.

நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்தால், அது பிறரது கண்களை உறுத்தும் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். அதுபோல், ‘கமாலுதீனும் சர்மாவும் இணைந்து இத்தனை நற்பணிகள் செய்து வருகிறார்களே…’ என்று பொறாமைப்பட்ட சில துஷ்ட சக்திகள் இருவரைப் பற்றியும் மேலிடத்துக்குப் புகார்கள் அனுப்பின. அதோடு, இருவரைப் பற்றியும் துஷ்பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். இவை எல்லாம் விசாரணைக்கும் வந்தது.

இந்த விஷயம் கமாலுதீன் காதுகளுக்கும் வந்தது. ஆனால், அவர் கவலைப்படவே இல்லை. ‘தர்மம் என்பது உண்மையானால் அது நம்மைக் காக்கும்என்று சர்மாவிடம் சொல்லி, ”மகா பெரியவாளிடம் போய்ச் சொல்லுங்கள். அது ஒன்றே நமக்குப் போதுமானதுஎன்றாராம் நம்பிக்கையோடு.

அதன்படி ஒரு நாள் சர்மா மட்டும் காஞ்சிபுரம் புறப்பட்டுப் போய் மகா பெரியவாளைத் தனிமையில் தரிசித்தார். பெரியவா அப்போது தரையில் சாய்ந்து படுத்திருந்தார். சர்மா சொல்கிற விஷயங்கள் அனைத்தையும் படுத்திருந்த வாக்கிலேயே கேட்ட பின் எந்த ஒரு பதிலும் சொல்லாமல், சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். பிறகு, தினமும் தான் பூஜை செய்யும் மண்டபத்துக்குச் சென்றார்.

ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர், ஸ்ரீகாமாட்சியின் திருப்பாதங்களில் அன்றைய தினம் தான் பூஜை செய்த குங்குமத்தை வலக் கையால் அள்ளி ஒரு மரத் தட்டில் போட்டுக் கொண்டார். அதோடு, சந்திரமவுலீஸ்வரர் திருமேனியில் இருந்த ஒரு மகிழம்பூ மாலையையும் எடுத்து மரத் தட்டில் வைத்தார். மெள்ள மண்டபத்தில் இருந்து இறங்கி சர்மாவிடம் வந்தார்.

மரத் தட்டின் ஒரு புறத்தைத் தான் பிடித்துக் கொண்டு சர்மாவிடம் நீட்டி, ”இந்த மரத் தட்டைப் புடிச்சுக்கோஎன்று சொல்லி விட்டு அவரைப் பார்த்தார்.

தானும் ஜட்ஜும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மகா பெரியவா பிரார்த்திக்கும் இந்தக் காட்சிகளை உணர்ச்சிப்பெருக்குடன் பார்த்துக் கொண்டிருந்தார் சர்மா. தனக்காக பெரியவா நடத்துகிற இந்த வழிபாடுகளைப் பார்த்து அவரது கண்களில் இருந்து அருவியாக ஜலம் வழிந்து கொண்டிருந்தது.

அப்போது மகா பெரியவா சொன்னார்: ”உன்னையும் ஜட்ஜையும் ஒருவராலும் ஒண்ணும் பண்ண முடியாது. என்னுடைய பரம அனுக்ரஹம் ஒங்களுக்கு இருக்கு. கவலைப்படாம ஊருக்குப் போஎன்று தீர்க்கமாகச் சொல்லி பிரசாதத் தட்டை அவரிடம் கொடுத்தார்.

யாருக்குக் கிடைக்கும் இது போன்ற ஆசிர்வாதம்!

தர்மத்தை ஒருவர் முறைப்படி செய்து வந்தால், மகா பெரியவா என்கிற கவசம் நிச்சயம் அவரைக் காப்பாற்றும் என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?!

மகா பெரியவா திருக்கரங்களில் இருந்து இந்தப் பிரசாதத் தட்டை வாங்கியவுடன், அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ”பெரியவாநீங்க கொடுத்த இந்தப் பிரசாதமே எங்களுக்கு மிகப் பெரிய கவசம்என்று உணர்ச்சிவசப்பட்டு உரக்கச் சொல்லி விட்டார் சர்மா.

இதைக் கேட்டதும் மகா பெரியவா தன் கழுத்தில் இருந்த இன்னொரு மகிழம்பூ மாலையைத் தானே கையில் எடுத்து, ”இதோ, உனக்குக் கவசமே போடறேன்என்று சொல்லி அந்த மாலையை அவரது கழுத்தில் போட்டார்.

நெகிழ்ந்து போய் இரு கைகளையும் இணைத்து, தலைக்கு மேல் உயர்த்தி மகா பெரியவாளைக் கும்பிட்ட சர்மாவுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

உடனே நீ ஊருக்குக் கிளம்பு. இங்கே ஒரு விநாடிகூட இருக்காதேஎன்று சர்மாவுக்கு விடை கொடுத்து விட்டு, தன் அறைக்குள் போய் ஓய்வெடுக்கத் துவங்கினார் பெரியவா.

அதன் பின் தான் ஆயிரம் மடங்கு பாதுகாப்புடன் இருப்பதாக சர்மா உணர்ந்து, காஞ்சி மடத்தில் இருந்து கும்பகோணத்துக்கு நிம்மதியாகப் புறப்பட்டார்.

ஊர் திரும்பியதும் கமாலுதீனைப் பார்த்து மகா பெரியவாளைத் தரிசித்துத் திரும்பிய விவரத்தை விஸ்தாரமாகச் சொன்னார்.

கமாலுதீன் எதற்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, ”தர்மம் காப்பாற்றும்என்றார்.

இந்த இடத்தில் எது தர்மம்?

மகா பெரியவாதான் தர்மம்!ஆம்!