காஞ்சி மகா பெரியவாளின் பரமகுரு மற்றும் பரமேஷ்டி குருவின் ஜீவ சமாதிகள் (66 மற்றும் 67-வது காஞ்சி பீடாதிபதிகள்) வேலூர் மாவட்டத்தில் கலவை என்கிற ஊரில் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும், வேலூரில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவிலும் கலவை அமைந்துள்ளது. அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான – புனிதமான திருத்தலம் இது.
மகா பெரியவா காஞ்சி ஸ்ரீமடத்தில் இருக்கும்போதும், அல்லது வேறு எங்காவது வெளியூர்களில் முகாமிட்டிருக்கும்போதும் பல்வேறு ஆலயங்களில் இருந்து பிரசாதம் வருவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக – காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன் கோயில், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி ஆலயம், திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயம் மற்றும் மேலே சொன்ன கலவை அதிஷ்டானங்கள் போன்ற இடங்களில் இருந்து வரும்போது நெகிழ்வுடன் அந்தப் பிரசாதங்களை எடுத்துக் கொள்வாராம் மகா பெரியவா.
காரணம் – இந்த ஊர்கள் எல்லாம் மகா பெரியவாளோடு மிக அதிகம் தொடர்புடையவை. அதாவது, தன் யாத்திரையில் அதிக காலம் அங்கே முகாமிட்டு பூஜைகள் செய்திருப்பார். அல்லது அந்த ஆலயத்துக்கு ஸ்ரீமடத்தின் சார்பாக ஏதேனும் கைங்கர்யம் நடந்திருக்கும். அங்குள்ள பக்தகோடிகளின் அன்பையும் பக்தியையும் மகானால் மறக்க முடியாமல் இருக்கும். இப்படி ஏதேனும் ஒரு காரணம் இந்த நெகிழ்வின் பின்னால் இருக்கும்.
தனக்கு முந்தைய ஆச்சார்ய புருஷர்களின் அதிஷ்டானம் அமைந்துள்ள இடம் என்பதால், மகா பெரியவா தனக்கு சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் தியானம் செய்ய வேண்டி கலவையில் முகாமிடுவது வழக்கம்.
அப்படி ஒரு முறை மகா பெரியவா கலவையில் முகாமிட்டிருந்தார். அன்றைய தினம் மாலை வேளையில் கலவை முகாமில் இருந்து வெளியே நடந்து செல்ல ஆரம்பித்தார் மகா பெரியவா. மகான் எங்கே போனாலும், அவரைத் தனியே விடாமல் கைங்கர்யம் செய்யும் சிப்பந்திகளும் உடன் தொடர்ந்து செல்வது ஸ்ரீமடத்தின் வாடிக்கை.
சில நேரங்களில் இத்தகைய சிஷ்யர்களை ‘நீங்க யாரும் என்னோட வர வேண்டாம்‘ என்று சொல்லி விடுவார் மகா பெரியவா. அப்படிப்பட்ட வேளைகளில் அந்த உத்தரவை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் சிஷ்யர்கள்.
பல நேரங்களில் எதுவும் சொல்ல மாட்டார். அத்தகைய சூழ்நிலைகளில் சிஷ்யர்கள் பெரியவாளுடன் செல்வது வழக்கம்.
அன்றைய தினம் வீதியில் இறங்கி வெளியே நடக்க ஆரம்பித்தவர், தன் திருப்பாதங்கள் போன போக்கில் கலவை ஊரைத் தாண்டி வயல்வெளி ஓரமாக நடக்க ஆரம்பித்தார்.
சூரியன் மெள்ள மறையப் போகும் நேரத்தில் பச்சைப்பசேல் என்று நெல்லும், கரும்பும், வாழையும் நிரம்பியுள்ள பக்கம் நடந்து சென்று கொண்டிருந்த மகா பெரியவா, தன்னுடன் வந்து கொண்டிருக்கும் ஐந்தாறு சிஷ்யர்களை மெள்ளத் திரும்பிப் பார்த்தார்.
சிஷ்யர்கள் எல்லோரும் இளைஞர்கள். பெரியவா நடைக்கு ஈடு கொடுத்து இவர்களும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.
பெரியவா எதற்கோ தங்களை அழைக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்த சிஷ்யர்கள் ”பெரியவா…” என்று நடையின் வேகத்தை அதிகரித்து அவருக்கு முன்னால் மிகுந்த பவ்யத்துடன் வந்து நின்றனர்.
மகா பெரியவா ஒரு புன்னகையுடன், ”ஏண்டா, நான் எங்கே போனாலும், நீங்கல்லாம் எம் பின்னாடி வந்துண்டே இருக்கேளே? சின்ன வயசுதானேடா ஒங்களுக்கு. ஏன், இந்த சந்நியாசி பின்னால சுத்தறேள்? கேம்ப்லயே இருந்தா வாய்க்கு ருசியா சாப்பிடலாமேடா” என்று சொன்னார்.
மகா பெரியவா எந்த கிராமத்தில் – எந்த நகரத்தில் முகாமிட்டிருந்தாலும், வருகிற பக்தகோடிகளுக்கு வேளா வேளைக்கு விதம் விதமாக சமைத்துப் பரிமாறுவது வழக்கம். மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்கிற சிஷ்யர்கள், பணி புரியும் சிப்பந்திகள், உள்ளூர்வாசிகள், தரிசிக்க வருகின்ற பக்தர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் சமைத்துப் போடுவதற்கு மிகவும் தேர்ந்த சமையல் கலைஞர்கள் அப்போது ஸ்ரீமடத்தில் இருந்தார்கள்.
மகா பெரியவா தங்களிடம் சொன்னதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் சிஷ்யர்கள் அமைதியாக இருக்க… மகா பெரியவா மீண்டும், ”எங்கூட வராம முகாம்லயே இருந்தா, அங்கே வர்ற பக்தாளுக்குத் தயார் பண்ற சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளியஞ்சாதம், தயிர்சாதம்னு வெரைட்டியா சாப்பிடக் கிடைக்குமேன்னு சொன்னேன்டா” என்றார், சிஷ்யர்களைப் பார்த்து ஒரு புன்னகையுடன்.
சிஷ்யர்கள் அனைவரும், ”பெரியவா… ஒங்க கூட நடந்து வந்து ஒங்களுக்கு சேவை பண்றதே எங்களுக்குப் பெரிய விருந்து. இதைவிட எங்களுக்குச் சாப்பாடெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது பெரியவா” என்றனர் ஒருமித்தக் குரலில்.
– இப்படிச் சொல்லியபடி சுமார் பத்தடி தூரம்கூட நடந்திருக்க மாட்டார்கள் எதிர்த் திசையில் உள்ளூரைச் சேர்ந்த ஒரு மிராசுதார் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் நடந்து வந்து பெரியவாளை நெருங்கினார். அருகே வந்ததும், தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார்.
தரையில் இருந்து எழுந்தவர், ”பெரியவா… நாளைக்கு மத்தியானம் இங்க பக்கத்துல இருக்கிற கோயில்ல மகேஸ்வர பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம். சிவ கைங்கர்யம் செய்யறவாளுக்குத்தான் முதல் மரியாதை. சாட்சாத் நடமாடும் சர்வேஸ்வரனான ஒங்களுக்குச் சேவை பண்ணிண்டு இருக்கற இந்த சிஷ்யாளை எல்லாம் அவஸ்யம் அனுப்புங்கோ. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளியஞ்சாதம், தயிர்சாதம்னு தயார் பண்றோம். ஒங்க சிஷ்யாளுக்கு மொதல்ல போஜனம் (சாப்பாடு) போட்டுட்டுத்தான் மத்தவாளுக்கு சாப்பாடு” என்று சொன்னாரே, பார்க்கணும்!
சிஷ்யர்கள் கண்களில் இருந்து ஜலம் பெருகியது. தற்போதுதான் பேசி முடித்தார் மகா பெரியவா. உடனேயே அவர் மனதில் இருக்கிற ஆசைக்கு ஒரு தீர்வு கிடைத்து, இளைஞர்களின் ஒப்பற்ற கைங்கர்யத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டது.
மிராசுதார் தரையில் விழுந்து நமஸ்கரித்த மாதிரியே இந்த சிஷ்யர்களும் பொத் பொத்தென்று மண்தரையில் விழுந்து மகா பெரியவாளை நமஸ்கரித்தார்கள்.
மிராசுதாரைப் பார்த்தார் மகா பெரியவா. ”கவலைப்படாம போயிட்டு வாங்கோ…. நாளைக்கு எல்லாரும் டாண்ணு பன்னண்டு மணிக்கு ஆஜராயிடுவா. சொன்னபடி சாப்பாட்டு அயிட்டங்கள்லாம் தயாரா இருக்கட்டும்” என்று புன்னகையுடன் சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்.
பிறகு சிஷ்யர்களைப் பார்த்து, ”என்னடா… நாளக்கி சரியா போயிடறேளா எல்லாரும்?” என்று கேட்டார்.
கலவைக்கு வந்த மகான், தன் சிஷ்யர்களுக்குக் கலவை சாதம் தந்த அற்புதம்தான் என்னே!