ஒருமுறை மகா பெரியவாளைத் தரிசிக்க விஸ்வநாதன் என்ற பக்தர் காஞ்சிபுரம் வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடியாபட்டியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அப்போது நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். இவரது தகப்பனார் உட்பட குடும்பமே மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள்.
தான் அமர்ந்து கொண்டிருக்கிற இடத்தின் எதிரே மிகுந்த பக்தியுடன் வந்து நிற்கும் விஸ்வநாதனைப் பார்த்து, ”வாப்பா விஸ்வநாதா… வாத்தியார் பிள்ளைதானே?” என்று வரவேற்றார்.
தன்னை அடையாளம் கண்டுகொண்ட சந்தோஷத்தில் மகா பெரியவாளைப் பார்த்து, ”ஆமாம் பெரியவா” என்று சொல்லி, நமஸ்காரம் செய்தார்.
”பிரம்ம வித்யா சமுத்திரம்தானே ஒன் ஊர்?” என்று கேட்டார் மகா பெரியவா.
விஸ்வநாதனுக்கு ஆச்சரியம். கடியாபட்டிக்கு இப்படி ஒரு பெயரும் உண்டு. ஆனால், பலரும் இந்தப் பெயரைப் பயன்படுத்த மாட்டார்கள். ‘மகா பெரியவா எவ்வளவு பெரிய ஞானக் கடல்‘ என்று வியந்து, பவ்யமாக நின்று கொண்டிருந்த விஸ்வநாதனைத் தனக்கு முன்னால் அமரச் சொன்னார்.
”நீ ஜட்ஜ்தானே?” என்று கேட்டார் பெரியவா
ஆமா பெரியவா” என்று அடக்கமாக பதில் சொன்னார்.
”சரி… ஒன்கிட்ட ஒண்ணு கேக்கறேன். நீதிபதிங்கறவர் கடவுளுக்குச் சமமானவர்தானே!”
மகா பெரியவா இப்படிக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது விஸ்வநாதனுக்கு. ”நிச்சயமா பெரியவா… நீதிபதிங்கறவர் எல்லா தரப்பையும் விசாரித்து, நியாயமான தீர்ப்பை வழங்கணும். அதைத்தான் பெரியவா ஆசியோட பண்ணிண்டு இருக்கேன்.”
”ஒனக்குச் சொல்லணும்கிறது இல்லை. இந்த லோகமே நீதி தேவதையோட அனுக்ரஹத்தாலதான் இயங்கிண்டு இருக்கு. ஒன்கிட்ட எத்தனையோ வழக்குகள் விசாரணைக்கு வரும். பாதிக்கப்பட்டவா எல்லாரும் தங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பி கோர்ட் படி ஏறுறா. அதனால, வர்ற வழக்குகளை கம்ப்ளீட்டா அலசி ஆராய்ஞ்சு நியாயமா நீதி வழங்கிண்டு இருக்கோல்லியோ?!”
”ஆமா பெரியவா. நீதி தேவதையோட கண்கள்ல எந்த ஒரு காலத்திலும் கண்ணீர் வராம பாத்துப்பேன்” என்று மிகவும் நெகிழ்வோடு கண்களில் நீர் பனிக்கச் சொன்னார் விஸ்வநாதன்.
ஒரு துறவி என்பவர் உலகத்தின் நலனை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மகா பெரியவா!
தன்னை நம்பி வருகின்ற பக்தர்களின் நேர்மையான – நியாயமான பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவர்தான் உண்மையான துறவி.
மகா பெரியவா தன்னை நம்பி வந்த அனைவரின் பிரச்னைகளையும் தீர்த்து வைத்தார்.
மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவரது பக்தர்கள் ஏதேனும் பிரச்னை என்றால், நீதிமன்றத்துக்கோ, காவல்நிலையத்துக்கோ சென்றதில்லை. பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிற ஒரே இடமாக மகா பெரியவா இருக்கின்ற திருச்சந்நிதியைத் தேடி வந்தார்கள்.
அடுத்து விஸ்வநாதனைப் பார்த்து மகா பெரியவா, ”ஏண்டா விஸ்வநாதா… தெனமும் நான் பூஜை எல்லாம் பண்றேன். முடிச்ச பிறகு எல்லாருக்கும் பிரசாதம் தர்றேன். வரிசைல நின்னு என்கிட்ட பிரசாதம் வாங்க வரவா பல பேரு என்னென்னவோ கோரிக்கைகளை வைக்கிறா.
நல்ல உத்தியோகம், பொண்ணுக்குக் கல்யாணம், வியாதி வெக்கைப் பிரச்னை – இப்படி எல்லாத்துக்கும் வேண்டிக்கறா. அடுத்த தடவை அவா திரும்பி வர்றப்ப, ‘ஒங்ககிட்ட வேண்டிண்டேன் பெரியவா. எல்லாம் சரியாச்சு‘னு கையெடுத்துக் கும்பிடறா. அனுதினமும் நான் வணங்கற காமாட்சிதான் இவாளோட கஷ்டங்களை சரி பண்றா. வாஸ்தவமா பார்த்தா இவா கும்பிடெல்லாம் அந்தக் காமாட்சிக்குத்தான்டா போகணும்!” என்று மகா பெரியவா சொல்லி முடித்தபோது, விஸ்வநாதனின் கண்கள் பனித்து விட்டன.
என்னே ஒரு அடக்கம்!
தன் கருணைப் பார்வையால் தனது பக்தர்களுக்குக் கிடைத்த அருட் கடாட்சத்தை, காமாட்சிக்கு அர்ப்பணிக்கின்றாரே இந்தக் காஞ்சி மகா பெரியவா!
நடமாடும் தெய்வம் என்றால், இன்றைய காலத்தில் இவரைத் தவிர வேறு எவரை அடையாளம் காட்ட முடியும்?!