எல்லோருக்கும் எல்லாமும் பிடித்து விடுவதில்லை. எல்லோரையும் பிடித்து விடுவதில்லை
எல்லோருக்கும் எல்லாமும் பிடித்து விடுவதில்லை. எல்லோரையும் பிடித்து விடுவதில்லை.
சிலருக்குக் கொய்யாப்பழம் பிடிக்கும்.
சிலருக்கு கொய்யா என்றாலே, அலர்ஜியாக இருக்கும்.
சிலருக்கு சப்பாத்தி பிடிக்கும்.
சிலர், ‘சப்பாத்தியா…’ என்று பயந்து ஓடுவார்கள்.
சிலருக்கு பஸ் பயணம் பிடிக்கும்.
சிலருக்கு பஸ் பயணம் சரிப்பட்டு வராது.
‘மிகவும் நல்லவர்‘ என்று ஒருவரால் பாராட்டப்படக் கூடியவர் இன்னொருவரால் விமரிசனம் செய்யப்படலாம்.
ஆக, மனிதர்களில் பல நிறங்கள் உண்டு.
ஒருவருக்குப் பிடிக்கின்ற விஷயம், இன்னொருவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.
ஆனால், மகான்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா?
மகான்களுக்கு நமஸ்காரம் செய்ய மாட்டேன் என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
மகான்களைக் கண்டால், ‘அவர்களை இருக்கிற பக்கம் நான் எட்டிப் பார்க்கவே மாட்டேன்‘ என்று முரண்டு பிடித்தவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
அதிலும், குறிப்பாக எந்த மகான் மீது?
காஞ்சி மகா பெரியவா!
‘காஞ்சி மகா பெரியவாளை தரிசிக்க மாட்டேன்… அவருக்கு நமஸ்காரம் செய்ய மாட்டேன்‘ என்கிற கொள்கையோடு ஒரு இளம்பெண் வாழ்ந்து வந்தார் ஒரு காலத்தில்.
இந்த சம்பவம் நடந்து சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும்.
கருணைக் கடல், நடமாடும் தெய்வம், கலியுக கடவுள் என்றெல்லாம் போற்றப்படும் காஞ்சி மகா பெரியவாளை தரிசிக்க மாட்டேன் என்று ஒரு இளம்பெண் – அதுவும் பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறார், அந்தக் காலத்தில்!
இதற்கு அந்த இளம்பெண் அப்போது சொன்ன காரணம் சில நேரங்களில் – சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம்.
‘மனிதர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களும் நம்மைப் போலத்தானே… அதனால் அவர்களை நான் ஏன் வணங்க வேண்டும்? என்னைப் பெற்றவர்கள், என் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர்களை நான் வணங்குவது என்பது ஒரு மரியாதை நிமித்தமாக அமையும். ஆனால், கருவறையில் இருக்கின்ற ஒரு தெய்வத்துக்கு செலுத்த வேண்டிய வழிபாட்டை, ‘மகான்‘ என்ற போர்வையில் இருக்கும் மனிதர்களுக்குச் செலுத்த மாட்டேன்.’ – இதுதான் அந்த இளம்பெண்ணின் வாதம்.
ஆனால், அதே இளம்பெண் பின்னாளில் காஞ்சி மகா பெரியவாளால் ஆட்கொள்ளப்பட்டு, மகானின் தீவிர பக்தை ஆனார் என்பது வேறு கதை.
யார் அந்த இளம்பெண்? எந்த ஊர்?
அந்த இளம் பெண்ணின் பெயர் பங்கஜம். சொந்த ஊர் தஞ்சாவூர். நல்ல அந்தஸ்தில் விளங்கிய மிகவும் ஆசாரமான ஆன்மிகக் குடும்பம் அது.
ஒட்டுமொத்த குடும்பம் முழுக்க மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள். தஞ்சாவூர் மேல வீதி சங்கர மடத்தில் மகா பெரியவா முகாமிட்டால், பங்கஜத்தின் குடும்பம் முழுக்க அங்கே போய் பழியாய்க் கிடக்கும்.
மகா பெரியவா நடத்தும் சந்திரமவுலீஸ்வரர் பூஜையை தரிசித்து விட்டு, மகான் தரும் தீர்த்த பிரசாதம் வாங்கிய பின்தான் அங்கிருந்து அனைவரும் இல்லம் திரும்புவார்கள். குடும்பத்தில் அனைவருமே மகா பெரியவா தரிசனத்துக்குச் சென்றிருந்தாலும், பங்கஜம் மட்டும் இதில் கலந்து கொள்ள மாட்டார்.
ஏன், இளம் பருவத்தில் உள்ள பங்கஜத்துக்கு பக்தி என்பது கிடையாதா?
பக்தி உண்டு பங்கஜத்துக்கு. யாத்திரை, வழிபாடு எல்லாமே உண்டுதான்!
குடும்பத்தினர் எந்த ஒரு ஆலயம் சென்றாலும், அவர்களுடன் சென்று வழிபடுவது பங்கஜத்தின் வழக்கம்.
தஞ்சாவூரில் ஸ்ரீபிரஹதீஸ்வரர் (பெரிய கோயில்), ஸ்ரீகொங்கணேஸ்வரர், ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன் என்று எந்த ஒரு ஆலயத்துக்கு பங்கஜம் சென்றாலும், அந்தந்த தெய்வத்தின் சந்நிதியின் முன்னால் நின்று மனமுருகித் தனக்குத் தெரிந்த ஸ்லோகங்களைப் பாடி வழிபடுவார் பங்கஜம். எந்த ஒரு குறையும் இல்லை.
ஆனால், குடும்பமே காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைத் தரிசிக்கப் பயணப்படும்போதும் சரி… தஞ்சாவூருக்கு மகா பெரியவா வந்திருந்தபோதும் சரி… எத்தனையோ முறை வருந்தி வருந்தி குடும்பத்தில் அழைத்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பங்கஜம் மசிகிற வழியாகக் காணோம். ”நான் வரலே… நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க” என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு, மகளிர் கிளப், அந்த சங்கம், இந்த அமைப்பு என்று பெண்களுக்கே உண்டான சில சேவைப் பணிகளுக்கென்று கிளம்பி விடுவார் பங்கஜம்.
பெற்றோருக்கு, ‘கலியுக தெய்வமாக, கண்கண்ட தெய்வமாக – அதை எல்லாம் தாண்டி நம் சமூகத்துக்கு குருவாக விளங்கி வருகிற மகா பெரியவாளைத் தரிசிக்க இவள் வர மாட்டேன் என்கிறாளே‘ என்று மனதில் ஒரு வருத்தம்.
அதையும் மீறி, சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்கக் குடும்பத்துடன் இவர்கள் கிளம்பும்போது, ”இந்த முறையாவது வாயேன்” என்று பங்கஜத்தை நைச்சியமாக அழைத்துப் பார்ப்பார்கள். எப்போதும் சொல்லும் பதிலையே பங்கஜமும் சொல்வார்: ”நீங்க எல்லாம் போயிட்டு வாங்கோ. எனக்கு ‘கிளப்‘ ஆக்டிவிட்டீஸ் நிறைய இருக்கு.”
குடும்பமே இப்படி காஞ்சி பெரியவாளின் பக்தியில் இருக்கும்போது மகளான பங்கஜம் மட்டும் ஏன் இப்படி?
மகா பெரியவா மட்டும்தான் என்றில்லை.
மனிதர்களாக இந்த மண்ணில் அவதரித்த எந்த ஒரு மகானையும் தரிசிப்பதற்கு பங்கஜம் தயார் இல்லை. காரணம் – ‘அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே… அவர்கள் என்ன தெய்வங்களா?’ என்ற எண்ணம்தான்!
‘தெய்வங்கள் மட்டுமே நமக்கு அனுக்ரஹம் செய்ய அவதாரம் எடுத்தவை. மகான்கள் எல்லோரும் சாதாரணமான மனிதர்களே… தெய்வத்தின் நிலையில் இருந்து அவர்களால் நம்மை ஆசிர்வதிக்க முடியாது.
எனவே, தெய்வத்தின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வேன். மகான்களை தரிசனம் செய்ய மாட்டேன். அவர்களைப் பார்க்க நேர்ந்தாலும் மற்றவர்களைப் போல் அவர்களுக்குத் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்ய மாட்டேன்.’ – இதுதான் பங்கஜத்தின் நிலைப்பாடு!
அதே சமயம் – தான் சார்ந்திருக்கிற ‘கிளப்‘ போன்ற அமைப்புகள் மூலம் எண்ணற்ற நற்காரியங்களையும், சேவைகளையும் இந்த சிறு வயதிலேயே ஆர்வமுடன் செய்து வந்தார் பங்கஜம்.
சிறு வயது என்பதாலும், வசதியான குடும்பம் என்பதாலும் தன்னை அலங்காரம் செய்து கொள்வதிலும், டாம்பீகமாக வலம் வருவதிலும் பங்கஜத்துக்கு அப்போது விருப்பம் அதிகம்.
‘கூப்பிட்டால் பக்தி சிரத்தையுடன் கோயிலுக்கெல்லாம் வருகிறாள்… கஷ்டப்படுகிற பலருக்கு நற்சேவை செய்கிறாள்… இவளது சேவையைப் பாராட்டிப் பலரும் நம் காதுபடப் பேசுகிறார்கள்‘ என்று பங்கஜத்தை அதற்கு மேல் வற்புறுத்தாமல் அதோடு விட்டு விட்டனர் அவரது பெற்றோர்.
அதே சமயம், தாங்கள் நித்தமும் வணங்கும் காஞ்சி மகா பெரியவாளிடமே, ‘பெரியவா… இவ உங்க சந்நிதிக்கு முன்னால உருகி நிக்கணும். கண்கள் கலங்க தரிசனம் பண்ணணும். உங்க ஆசி இவளுக்கு என்னிக்கும் வேணும். அதுக்கு என்ன பண்ணணுமோ, அதை நீங்கதான் பண்ணி அவளோட மனசை மாத்திக் காட்டணும்‘ என்று காஞ்சி மகா பெரியவாளிடமே மானசீகமாக ஒரு பிரார்த்தனை வைத்தார்கள்.
இருந்த இடத்தில் இருந்தபடியே வைக்கின்ற பிரார்த்தனைகளையும் அந்த மகான் செவிமடுத்துக் கேட்கின்றார் என்பது இவர்கள் விஷயத்தில் நிரூபணம் ஆனது.
ஆம்! பங்கஜத்துக்கு மகா பெரியவா அருள் மழை பொழிகின்ற வேளையும் வந்தது.
பங்கஜத்தின் உறவினர் ஒருவர் இல்லத் திருமணம் கல்கத்தாவில் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக பங்கஜம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து கல்கத்தா பயணப்பட வேண்டும். கல்கத்தா பயணத்தின்போது சென்னையில் வசிக்கும் தன் தோழியான ராஜலட்சுமியின் இல்லத்தில் ஒரு நாள் தங்கி, அதன் பின் பயணத்தைத் தொடரத் தீர்மானித்தார் பங்கஜம்.
அதன்படி தஞ்சாவூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு ராஜலட்சுமியின் இல்லத்துக்கு வந்தார் பங்கஜம்.
தோழிகள் இருவரும் நெடுநாள் கழித்துச் சந்தித்துக் கொள்வதால் பல நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். அன்றைய தினம் இரவு கல்கத்தாவுக்குச் செல்ல வேண்டிய ரயில் ஏற வேண்டும் பங்கஜம். ஆனால், பகல் பொழுது முழுக்க இருந்தது.
அப்போதுதான் ராஜலட்சுமி, பங்கஜத்திடம், ”ஏண்டீ… கல்கத்தா போறதுக்கு ஒனக்கு ராத்திரிதானே ரயில்?” என்று கேட்டார் ராஜலட்சுமி.
”ஆமா… ராத்திரி வரைக்கும் என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல” என்றார் பங்கஜம்.
”ஒண்ணும் கவலைப்படாதடீ… எனக்கு காஞ்சிபுரம் போகணும். என்னோட கார்ல வந்துடேன். நாம ரெண்டு பேரும் பேசிண்டே போயிட்டு வந்துடலாம். ஒனக்கு ரயில் ஏறுறதுக்கு டைம் கரெக்டா இருக்கும்.”
சட்டென்று முகம் மாறிய பங்கஜம், ”காஞ்சிபுரமா? எதுக்குப் போகப் போறே?” என்று கேட்டார்.
”காஞ்சிபுரம் எதுக்குடீ போவா… ஒண்ணு பொடவை வாங்கப் போவா. இல்லேன்னா பெரியவாளை தரிசனம் பண்ணப் போவா. சமீபத்துல காஞ்சிபுரம் போனப்ப வேணும்ங்கிற அளவுக்குப் பொடவை எடுத்துட்டேன். மகா பெரியவாளை அன்னிக்கு என்னால தரிசனம் பண்ண முடியலை. அதான்…” என்று இழுத்தபோதே… பங்கஜம் இடைமறித்தார். ”தோ பாருடீ… ஒனக்கே தெரியும் – மகா பெரியவா போன்ற சந்நியாசிகளை நான் தரிசனம் செய்ய மாட்டேன்னு. அப்புறம் எதுக்கு இதுல என்னை இழுக்கறே?”
சட்டென்று மென்மையாகச் சிரித்த ராஜலட்சுமி, ”ஏண்டீ, ஒன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஒன்னை நான் கூப்ட்டேனா? நான் மட்டும் தரிசனம் பண்ணப் போறேன். இந்த சாக்குல கார்ல போறப்ப நாம ரெண்டு பேரும் நிறைய பேசிண்டே போகலாமே… அதுக்குதான் கூப்ட்டேன். நான் கூப்ட்டா வர மாட்டியா?” என்று செல்லமாகக் கோபித்துக் கொள்ளவும்… ஒரு புன்னகை பூத்தார் பங்கஜம்.
”ஓகே ஓகே… மகா பெரியவா தரிசனத்துக்கு என்னை நீ கூப்ட மாட்டேன்னு சொன்னா நோ பிராப்ளம். தாராளமா போவோம். வண்டியை ஏற்பாடு பண்ணு” என்றார் பங்கஜம்.
”என்னோட வண்டிதான். நானே டிரைவ் பண்றேன். நம்ம ரெண்டு பேரும் பழைய விஷயங்களை சந்தோஷமா பேசிண்டு போகலாம்” என்று சொன்னபடி எழுந்தார் ராஜலட்சுமி.
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் புடவை மாற்றிக் கொண்டு தயாராக… அந்த கார், காஞ்சிபுரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
வண்டியை ராஜலட்சுமி ஓட்ட… அவருக்கு அருகே ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்தார் பங்கஜம்.
என்னென்ன காட்சிகள் அரங்கேறப் போகின்றன?
மகானின் திருவுளம் எப்படி கனியப் போகிறது?
சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட பங்கஜமும் ராஜலட்சுமியும் அடுத்த ஒண்ணரை மணி நேரப் பயணத்துக்குப் பின் காஞ்சிபுரத்தை அடைந்தார்கள்.
வண்டியை ஸ்ரீமடத்தின் ஓரமாக நிழலான ஓரிடத்தில் ‘பார்க்‘ செய்து விட்டு, ராஜலட்சுமி மட்டும் உள்ளே சென்றார், மகா பெரியவாளைத் தரிசிக்க.
வண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்தார் பங்கஜம். ‘நேரம் போக வேண்டுமே‘ என்பதற்காக ஏதோ ஒரு பழைய புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
‘காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்கப் போகிறோம்‘ என்ற பேரானந்தத்துடன் ஸ்ரீமடத்தின் உள்ளே பயபக்தியுடன் சென்றார் ராஜலட்சுமி.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மடம் அன்று அமைதியாக இருப்பது போல் ராஜலட்சுமிக்குத் தோன்ற, எதிர்ப்பட்ட ஒரு ஊழியரிடம் விசாரித்தார். அவர், ”அடடே… ஒங்களுக்கு விஷயம் தெரியாதா… மகா பெரியவா இப்ப தேனம்பாக்கத்துல முகாம் இருக்கார். சட்டுன்னு பொறப்படுங்கோ. அங்க போனா ஏகாந்தமா தரிசனம் பண்ணலாம். கார்லதானே வந்திருக்கேள்?” என்று கேட்டார்.
”ஆமாம்” என்றார் ராஜலட்சுமி.
”இங்கேர்ந்து அரை மணி நேரத்துல தேனம்பாக்கம் போயிடலாம். வெளில போயி ரைட்ல திரும்பினா ஒரே நேர் ரோடு” என்று வழியும் சொன்னார்.
தேனம்பாக்கத்தை நோக்கிய கார் பயணம் தொடங்கியது.
செல்லும் வழி எங்கும் நெல்லும் வாழையும் ‘எங்கள் ஊருக்கு வா வா‘ என வரவேற்பது போல் தங்கள் தலையை இப்படியும் அப்படியும் அசைத்துக் கொண்டிருந்தன. எங்கெங்கு காணினும் பச்சைப்பசேல் என்று வளம் பரப்பிக் கொண்டிருந்தது இயற்கை.
அடுத்த அரை மணி நேரத்தில் – தேனம்பாக்கம்!
‘சிவாஸ்தானம்‘ என்று சொல்லக்கூடிய அந்த தேனம்பாக்கத்தில் மகா பெரியவா முகாமிட்டிருக்கக் கூடிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்குச் சற்று முன்னாலேயே காரை நிறுத்தினார் ராஜலட்சுமி.
”நீ கார்லதானே இருக்கப் போறே?” என்று ஒரு முறை ராஜலட்சுமி கேட்டதும், ”ஆமாமாம். என்னைப் பத்திதான் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே… நீ போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வா. கார்லய உக்காந்துண்டு இருக்கேன்” என்றார் பங்கஜம் அழுத்தமாக.
ராஜலட்சுமியின் கார் தவிர அங்கே ஏழெட்டு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மகா பெரியவா இங்கு முகாமிட்டிருப்பதால், அவரைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் தங்கள் கைகளில் பழங்கள், பூக்கள், இன்னபிற காணிக்கைப் பொருட்களை ஏந்தியபடி மகானைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்கள்.
சாலை ஓரமாக அமர்ந்து பூ, பழம் போன்றவற்றை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் போனாள் ராஜலட்சுமி. ஒரு டஜன் ரஸ்தாலி பழத்தையும், நாலு முழம் மல்லிகைப்பூவையும் வாங்கிக் கொண்டு தேனம்பாக்கம் முகாமுக்குள் நுழைந்தாள் ராஜலட்சுமி.
சுமார் இருபத்தைந்து, முப்பது பக்தர்கள் ஆண்களும் பெண்களுமாக – மகா பெரியவாளுக்கு முன்னே அமர்ந்திருந்தார்கள். தவிர ஒரு சில பக்தர்கள் ஓரமாக நின்று மகா பெரியவாளை தரிசித்துக் கொண்டிருந்தனர்.
அதிக அதிர்வுகளை ஏற்படுத்தாமல் ராஜலட்சுமி மெள்ள உள்ளே நுழைந்தார். மகா பெரியவாளின் பார்வை தன் மேல் படும்படியான ஓர் இடத்தில் மிகவும் பவ்யமாக நின்று கொண்டார்.
யாரோ ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வந்து, தங்கள் கிரஹத்தில் நடக்க இருக்கிற திருமணத்துக்கு உண்டான முகூர்த்தப் பத்திரிகையை மகா பெரியவாளிடம் சமர்ப்பித்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். கணவனும் மனைவியுமாக சேர்ந்து மகா பெரியவாளுக்கு மூன்று நமஸ்காரங்கள் பண்ணி எழுந்து நின்றார்கள்.
மகா பெரியவாளிடம் இருந்து தங்களுக்குப் பிரசாதம் கிடைக்கும்வரை அவர்கள் இருவரும் கூப்பிய கரங்களுடனேயே இருந்தார்கள். ஒரு சில நிமிடங்கள் கரைந்தன.
தம்பதிகளுக்கு அட்சதையும், குங்குமமும் அள்ளிக் கொடுத்து ‘எல்லாம் நன்னா நடக்கும், போ‘ என்று ஆசி வழங்கி அனுப்பினார் மகா பெரியவா. இந்த அனுக்ரஹ வார்த்தைகளை எதிர்பார்த்துதானே அனைவரும் மகா பெரியவா சந்நிதிக்குப் படை எடுத்து வருகிறார்கள்?! அத்தகைய ஆசிர்வாதம் அவரிடம் இருந்து கிடைத்த பிறகு தம்பதியர் பூரித்து, மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, கைப்பைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.
அதன் பின் மகா பெரியவாளின் பார்வை அப்படியே வலப் பக்கம் திரும்பி, ‘பெரியவாளின் கடைக்கண் பார்வை தன் மேல் விழாதா?’ என்று ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்த ராஜலட்சுமியின் மீது பட்டது.
காந்தம் போன்ற சுண்டி இழுக்கக் கூடிய அந்தப் பார்வை தன் மீது ஒரு கணம் விழுந்தவுடன், ராஜலட்சுமி சிலிர்த்துப் போனாள். ‘சர்வேஸ்வரா…’ என்று ஒரு விநாடி தன்னையும் மறந்து மகா பெரியவாளைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
ராஜலட்சுமியைப் பார்த்துத் தனது வலது ஆட்காட்டி விரலை மட்டும் அசைத்து, ‘இங்கே வா‘ என்பது போல் சைகை செய்தார் மகா பெரியவா.
தரையில் அமர்ந்திருந்த ஒரு சிலரை வார்த்தைகளாலும், வலக்கையாலும் விலக்கியபடியே மகா பெரியவா அருகே நெகிழ்வுடன் சென்று நின்றார் ராஜலட்சுமி. தன் கைகளில் வைத்திருந்த பழங்கள் மற்றும் மல்லிகைப்பூவை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டுக் கண்கள் பனிக்க, நமஸ்காரம் செய்வதற்காகக் குனிய முற்பட்டார்.
நமஸ்காரம் செய்ய முற்பட்ட ராஜலட்சுமியைத் தடுக்கும் விதமாக, ”ஒரு நிமிஷம்…” என்ற மகா பெரியவாளின் கம்பீரமான குரல், அவரை அப்படியே நிமிர வைத்தது. அதிர்ச்சியுற்றார்.
‘என்னது… நமஸ்காரம் பண்ணப் போகிற வேளையில் ஒரு நிமிஷம் என்கிறாரே… நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா… இத்தனை பேர் இருக்கின்ற இடத்தில் இப்படி என்னை மட்டும் தடுத்து நிறுத்துகிறாரே… என்னவாக இருக்கும்?’ என்று ஏகத்துக்கும் குழம்பிய ராஜலட்சுமி, நிமிர்ந்து மகா பெரியவாளை ஏக்கத்துடன் பார்த்தார்.
‘பயப்படாதே… உன் செயலில் எந்தத் தப்பும் இல்லை‘ என்பது போல் அந்த நடமாடும் தெய்வம் ராஜலட்சுமியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு அடுத்துக் கேட்டதுதான் அவரைத் திகைக்க வைத்து விட்டது.
”ஒன் நமஸ்காரத்தை அப்புறமா ஏத்துக்கறேன். போகட்டும். இப்ப நீ மட்டும் உள்ளே என்னைப் பாக்க வந்துருக்கியே… ஒங்கூட ஒருத்தி வந்தாளே… அவ எங்கே?”
– நடமாடும் தெய்வம் சட்டென்று இப்படிக் கேட்கவும் திக்குமுக்காடிப் போனாள் ராஜலட்சுமி. ‘என்னுடன் இன்னொருத்தியும் (பங்கஜம்) வந்திருக்கிற விஷயம் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்‘ என்று யோசித்தவள், ”பெரியவா… அவ கார்லயே உக்காந்துண்டிருக்கா” என்றார் திக்குத் திணறி.
”அவளையும் இங்க வரச் சொல்லணுமே…” என்றார் மகா பெரியவா உத்தரவாக.
‘பெரியவா…” என்று ஆரம்பித்த ராஜலட்சுமி, பங்கஜம் பற்றிய விஷயத்தை மகா பெரியவாளிடம் எப்படிச் சொல்வது என்று சிந்தித்தவள், ‘சரி, தெய்வ சந்நிதியில் பொய் சொல்லக் கூடாது. எனவே, உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்‘ என்று தீர்மானித்தவளாக, ”அவ இங்கே வர மாட்டா பெரியவா… ரொம்ப வருஷமாவே அவ இப்படித்தான்…..” என்று ராஜலட்சுமி தான் சொல்ல வந்த வாக்கியத்தைச் சொல்லி முடிக்கவில்லை.
அதற்குள் வேறு பக்கம் திரும்பிய மகா பெரியவா தனக்கு சேவை செய்து கொண்டிருந்த வேத பாடசாலைப் பையன் ஒருவனை அருகே அழைத்தார். அதிகம் போனால் அந்தப் பையனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும்.
அவனிடம் மகா பெரியவா, ”வெளில ஒரு கார் (என்ன கலர் என்று பெரியவா அடையாளம் சொன்னதுதான் வியப்பிலும் வியப்பு) இருக்கும். அந்த காருக்குள்ள பச்சைப் புடவை, பச்சை கலர்ல ரவிக்கை போட்டுண்டு ஒருத்தி உக்காந்துண்டிருப்பா. அவாகிட்ட, ‘பெரியவா உங்களைக் கூப்ட்டார், வாங்கோ‘னு கையோட இங்கே அழைச்சுண்டு வா” என்றாரே பார்க்கணும்.
ராஜலட்சுமிக்கு சப்தநாடியும் அடங்கிப் போனது.
‘மகா பெரியவா கண் கண்ட தெய்வம் என்று சொல்வார்களே… இந்த தெய்வம் நம் எதிரிலேயே அதை நிரூபிக்கிறதே… வெளியே ஏழெட்டு கார்கள் நிற்கின்றன… அதில் என்னுடைய காரின் கலரை இங்கே உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே துல்லியமாகச் சொல்கிறாரே… தவிர, காருக்குள் இருக்கிற பங்கஜம் பச்சைப் புடவை கட்டிண்டு இருக்கானும் சொல்றாரே… தெய்வமே‘ என்று மகா பெரியவாளைப் பார்த்து ‘சர்வேஸ்வரா…’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்கினார் ராஜலட்சுமி.
கூடி இருந்த பக்தர்களுக்கு இந்த சம்பாஷணைகளைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ஆனால், இன்னும் சில நிமிடங்களில் இங்கே ஏதோ ஒரு அற்புதம் நிகழப் போகிறது என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது.
ராஜலட்சுமிக்குள் ஆயிரம் கவலை. ‘இந்தப் பாடசாலைப் பையன் பங்கஜம்கிட்டப் போய் ‘பெரியவா ஒங்களைக் கூட்டிண்டு வரச் சொல்றாரு‘னு சொல்வான். அதுக்கு அவ என்ன பதில் சொல்லப் போறாள்னு தெரியலயே… ஏதாவது ஏடாகூடமா பதில் சொல்லிட்டா, தரிசனம் பண்ண வந்த இடத்துல தர்மசங்கடம் ஆயிடுமே‘ என்று தவித்தார்.
இந்த நேரத்தில், காரில் பங்கஜம் காத்துக் கொண்டிருக்கின்ற இடத்துக்கு நாமும் செல்லலாமா? அங்கே என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே!
மகா பெரியவாளின் உத்தரவை கர்மசிரத்தையாக ஏற்றுக் கொண்ட பின் அந்தப் பாடசாலைப் பையன் வேக வேகமாக சாலைக்கு ஓடி வந்து நின்றான். அங்கே நின்று கொண்டிருக்கிற கார்களின் வண்ணங்களை ஆராய்ந்தான்.
ஆச்சரியம் பாருங்கள்..! பெரியவா அடையாளம் சொன்ன நிறத்தில் ஒரே ஒரு கார்தான் நின்று கொண்டிருந்தது. அதுதான் ராஜலட்சுமியின் கார்!
இங்கே ஏழெட்டு கார்கள் நின்று கொண்டிருந்தபோதும் ராஜலட்சுமிக்கு சொந்தமான காரின் நிறம் வேறு எந்த வண்டிக்கும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே, கொஞ்சமும் குழப்பம் இல்லாமல் பங்கஜம் அமர்ந்து கொண்டிருந்த காரின் அருகே சென்று நின்றான் பாடசாலைப் பையன்.
காருக்குள் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்த பங்கஜம், ஒரு சிறுவன் பக்கத்தில் வந்து நின்றதும், கவனம் திசை திருப்பப்பட்டு அவன் பக்கம் திரும்பினார்.
பட்டை பட்டையாக விபூதி. உச்சியில் ஒரு சிறு குடுமி. கழுத்தில் கறுப்புக் கயிறுடன் கூடிய ஒற்றை ருத்திராட்சம். இடுப்பில் வேஷ்டி. மேலுக்கு ஒரு துண்டு.
தெய்வாம்சமாக இருந்த அந்தப் பையனைப் பார்த்ததும், சிநேகமாக ஒரு புன்னகை பூத்தார் பங்கஜம். பையனும் சிரித்தான். பிறகு சொன்னான்: ”மகா பெரியவா ஒங்களை உள்ளே கூட்டிண்டு வரச் சொன்னார்.”
புருவத்தைச் சுருக்கிக் கொண்டு தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே மூடி வைத்து, ”என்ன சொன்னேப்பா?” என்று அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார் பங்கஜம்.
”மாமீ… மகா பெரியவா ஒங்களைக் கூட்டிண்டு வரச் சொன்னார். ஒடனே கீழே இறங்குங்கோ” என்றான்.
பங்கஜத்துக்கு சட்டென்று எப்படி ‘ரியாக்ட்‘ செய்வது என்று புரியவில்லை. ஒரு சில விநாடிகள் கடந்த பின், ”அம்பீ (பிராமணச் சிறுவர்களை பொதுவாக ‘அம்பி‘ என்று அழைப்பது ஒரு வழக்கம்)… நீ தவறுதலா என்னைக் கூப்பிடுறே போலிருக்கு… மகா பெரியவா வேற யாரையாவது கூட்டிண்டு வரச் சொல்லி இருப்பா. நீ கொஞ்சம் விசாரிச்சுப் பாரு” என்று சொல்லி விட்டு, மீண்டும் தான் விட்ட இடத்தில் இருந்து புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார்.
அந்தப் பையன் ஓரடிகூட நகரவில்லை. ”இல்லே மாமீ. பெரியவா சரியாத்தான் சொல்லி இருக்கா. நானும் சரியாத்தான் வந்து நிக்கறேன். வாங்கோ” என்றான் விடாப்பிடியாக.
குரலில் சற்றுப் பொறுமையுடன், ”இல்லேடா அம்பீ… பெரியவா சரியா அடையாளம் சொல்லி இருப்பார். இங்கே பாரேன். ஏழெட்டு கார்கள் நின்னுண்டு இருக்கு. நீ கார் மாறி வந்து என்னைக் கூப்பிடலாம், இல்லியா?” என்றார் பங்கஜம்.
”மாமீ… காரோட கலர் மட்டுமில்லை… காருக்குள்ள இருக்கிற நீங்க கட்டிண்டு இருக்கிற பொடவை கலரையும் எனக்குச் சொல்லி அனுப்பி இருக்கா… நான் சரியாத்தான் கூப்பிடறேன். வாங்கோ. பெரியவா தேடிண்டு இருப்பா” என்றான் கறாராக.
பங்கஜத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘காரோட கலர்… நான் கட்டிண்டு இருக்கிற பொடவையோட கலர் – எல்லாவற்றையும் சொல்லி அனுப்பி இருக்கிறாரா… உள்ளே ராஜலட்சுமி போனாளே… அங்கே ஏதாவது நிகழ்ந்திருக்குமோ?’ என்று யோசித்து ‘இதற்கு மேலும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது‘ என்று காரில் இருந்து இறங்கினார்.
பையன் முகத்தில் மலர்ச்சியுடன் விறுவிறுவென்று நடக்க… ஒரு விதமான தயக்கத்துடன் அவனைப் பின்தொடர்ந்தார்.
பங்கஜம் தன் பின்னால் வந்து கொண்டிருக்கிறாரா என்பதை அவ்வப்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான் பையன்.
மகா பெரியவா முகாமுக்குள் நுழைந்தாகி விட்டது. நேருக்கு நேராக மகா பெரியவா அமர்ந்திருக்கிறார்.
இதுவரை மகான்களை – நேருக்கு நேர் – இவ்வளவு அருகில் தரிசித்திராத பங்கஜத்துக்கு மகா பெரியவாளைக் கண்டதும், இனம் புரியாத ஒரு உணர்வு ஆட்கொண்டது. அது பக்திப் பரவசமா, தயக்கத்தின் வெளிப்பாடா என்று புரியவில்லை.
நமஸ்காரம் செய்யவில்லை. கைகளையும் கூப்பி வணங்கவில்லை. ஒரு புன்னகையும் இல்லை. எதுவும் பேசாமல் உள்ளே அங்குமிங்கும் தன் பார்வையைச் சுழற்றியபடி ராஜலட்சுமியின் அருகே அமைதியாக நின்று கொண்டார் பங்கஜம்.
கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ‘பெரியவா எதற்காக இவரை (பங்கஜத்தை) இங்கே வரச் சொல்லி இருக்கிறார்?’ என்று புரியாமல், அதற்குப் பதில் வேண்டித் தவித்துக் கொண்டிருந்தார்கள். தன்னை ஏன் உள்ளே வரச் சொன்னார் என்பது பங்கஜத்துக்கும் புரியவில்லை.
அனைவரது குழப்பத்துக்கும் விடை தரும் விதமாகத் தன் திருவாய் மலர்ந்தார் மகா பெரியவா.
சற்றுத் தள்ளி நின்றிருந்த ஸ்ரீமடத்தின் மேனேஜர் பெயர் சொல்லித் தன் அருகே அழைத்தார்.
மேனேஜர் ஓடோடி வந்து மகா பெரியவா முன்னால் நின்றார்.
”ஏண்டா… மடத்தோட வாகனம் ஏதாவது இங்கே இருக்கா?” என்று கேட்டார் பெரியவா.
”இருக்கு பெரியவா. கார் ஒண்ணு ஆத்திர அவசரத்துக்கு வெளியே நின்னுண்டு இருக்கு.”
”தோ நிக்கறாளே (பங்கஜத்தையும் ராஜலட்சுமியையும் காட்டி), இவா ரெண்டு பேரையும் மடத்தோட கார்ல காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குக் கூட்டிண்டு போ. அங்கே நன்னா தரிசனம் பண்ணி வை. பிரசாதம் வாங்கிக் கொடு. அதன் பிறகு இங்கே (தேனம்பாக்கம்) கூட்டிண்டு வா” என்றார் மகா பெரியவா.
மகா பெரியவாளின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பங்கஜத்துக்கும் ராஜலட்சுமிக்கும் கட்டுப்படுத்த முடியாத சந்தோஷம்.
இவ்வளவு தொலைவு சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் வந்த இவர்களுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போகிற எண்ணம் இல்லை. மகா பெரியவாளே அதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தருகிறாரே!
”உத்தரவு பெரியவா” என்று சொன்ன மேனேஜர் இவர்கள் இருவரிடம் வந்தார். ”நீங்க யாரு, என்னனு தெரியலை. ஆனா, பெரியவாகிட்டேர்ந்து உத்தரவு ஆகி இருக்கு. நீங்கள்லாம் பாக்கியசாலிகள். வாங்கோ, காமாட்சி அம்மனை தரிசனம் பண்ணிட்டு இங்கே வரலாம்” என்றார்.
மூவரும் வெளியே வந்தார்கள். ஸ்ரீமடத்து வண்டி ஒன்றில், மேனேஜர் முன்னால் அமர்ந்து கொள்ள… பங்கஜமும் ராஜலட்சுமியின் பின்ஸீட்டில் அமர்ந்து கொள்ள… டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் முன்னால் இருந்தார்கள்.
மேனேஜர் உள்ளே அழைத்துச் செல்ல… இவர்களுக்கு பிரமாதமான தரிசனம். ஆரத்தி காண்பித்து பிரசாதமும் வழங்கப்பட்டது. அங்கிருந்து மீண்டும் நகர மனமே வரவில்லை. காமாட்சி அந்த அளவுக்கு ஈர்த்து விட்டாள்.
காமாட்சிக்கு வெகு அருகே நின்று தரிசிக்கும்போது பங்கஜமும் சரி… ராஜலட்சுமியும் சரி… ஏகத்துக்கும் பரவசமாகி விட்டனர். ‘இதுவரை இது போன்ற தரிசனம் எங்களுக்குக் கிடைத்ததே இல்லை‘ என்று மேனேஜரிடம் சொல்லிச் சொல்லிச் மாய்ந்து போனார்கள்.
தரிசனம் முடிந்து வண்டி தேனம்பாக்கம் புறப்பட்டது. அடுத்த அரை மணியில் வந்தாயிற்று!
‘இனி நாம் எதற்கு உள்ளே போக வேண்டும்‘ என்ற யோசனையுடன் பங்கஜம் லேசாகத் தயங்கி வெளியிலேயே நிற்க முற்பட… விடவில்லை மேனேஜர். ”வாங்கோ உள்ளே… காமாட்சி தரிசனம் முடிச்சுட்டு உங்களை உள்ளே கூட்டிண்டு வரச் சொல்லி எனக்கு உத்தரவு” என்று அதிகாரத்துடன் சொல்ல… பங்கஜமும் உள்ளே நுழைந்தார்.
ஏற்கெனவே இருந்த பக்தர்களோடு தற்போது கூடுதலாக மேலும் பல பக்தர்கள் காணப்பட்டார்கள்.
மகா பெரியவா ஒரு பக்தரிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜலட்சுமியையும் பங்கஜத்தையும் பார்த்ததும், அந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.
மேனேஜர் மகா பெரியவா அருகில் வந்து, அவர் இட்ட உத்தரவை பூர்த்தி செய்து விட்டதாகவும், இவர்கள் இருவரும் இங்கே நின்று கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.
இருவரையும் அருகில் வரவழைத்தார். கீழே உட்காரச் சொல்லி ஜாடை காட்டினார்.
இது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பது போல் ராஜலட்சுமி சட்டென்று கைகளைக் கூப்பிய வண்ணம் பெரியவா முன் அமர்ந்தார்.
அதன் பின் ஒரு வித தயக்கத்துடன் அமர்ந்தார் பங்கஜம்.
மகா பெரியவாளின் பார்வை பங்கஜத்தின் மீது திரும்பியது. ”காமாட்சியை தரிசனம் பண்ணிட்டியா?” – பங்கஜத்தைப் பார்த்துப் பெரியவா கேட்ட முதல் கேள்வி.
”தரிசனம் ஆச்சு…” – பங்கஜத்தின் குரலில் முழு உற்சாகம் இல்லை.
”எல்லாம் சரி… நீ தஞ்சாவூர்ல பங்காரு காமாட்சி அம்மனை தரிசிக்கப் போறப்ப, அங்கே அவ சந்நிதிக்கு முன்னால் உக்காந்துண்டு ஒரு ‘காமாட்சி பாட்டு‘ பாடுவியே… அதை ஏன் இந்த காஞ்சி காமாட்சிக்கு முன்னால பாடலை?” – இதுதான் பங்கஜத்தைப் பார்த்து மகா பெரியவா கேட்ட இரண்டாவது கேள்வி.
கேள்வி கேட்டு முடித்த பின் – ஒரே ஒரு விநாடிதான்!
சர்வமும் நொறுங்கிப் போனது பங்கஜத்துக்கு.
ராஜலட்சுமியும் அங்கே அமர்ந்திருந்த பிற பக்தர்களும் இந்தக் காட்சிகளை பிரமிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்த சந்நிதிக்குள் நுழைந்தபோது இருந்த பங்கஜத்தின் இறுகின முகம், மெள்ள இளகின முகமாக மாறத் துவங்கியது. தன்னையும் அறியாமல் பங்கஜத்தின் கண்கள் மெள்ள கலங்கின.
ராஜலட்சுமி இதை அதிசயமாகப் பார்த்தார். ‘மகா பெரியவாளைப் பார்க்கவே மாட்டேன் என்று அடமாக வண்டிக்குள் அமர்ந்திருந்த பங்கஜமா, இப்போது கண்ணீர் சொரிவது?’ என்று நம்ப முடியாமல் பங்கஜத்தையும், மகா பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பங்கஜம் பதில் ஏதும் சொல்லாமல் தேம்பியவாறு இருக்க… ‘என்ன பதில்?’ என்று மகா பெரியவா மீண்டும் ஜாடையாலே கேட்டார்.
சட்டென்று எழுந்த பங்கஜம் மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்தார். கைகளைக் கூப்பியபடி அந்த நடமாடும் தெய்வத்தைப் பார்த்தார்.
கண்கள் கலங்க, குரல் கரகரக்க, ”ஆமா பெரியவா… தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு முன்னால் எப்பவும் நான் பாடுற பாட்டை இங்கே பாடலை. அது ஏன்னு தெரில… தரிசனம் முடிஞ்சு பிரசாதம் வாங்கிண்டு வெளியே வந்துட்டேன்” என்றவர், மீண்டும் ஒரு முறை கலியுக தெய்வத்தை நமஸ்கரித்தார்.
”உங்க குடும்பமே பக்தில சிறந்து விளங்குற குடும்பம். நீ மட்டும் ஏன் வித்தியாசமா இருக்கே… கிளப், என்டர்டெயின்மெண்ட் – இதை எல்லாம் குறைச்சுண்டு, நிறைய சத் காரியங்கள்ல கான்சன்ட்ரேட் பண்ணு. வந்த வேலையை விட்டுட்டு சொந்த வேலையைப் பாத்துண்டு இருக்கியே” என்று மகா பெரியவா பிரசாதம் எடுக்க… மூன்றாவது முறையாக ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, அதைப் பெற்றுக் கொண்டார்.
ராஜலட்சுமியும் பங்கஜமும் வெளியே வந்தனர்.
பங்கஜம் பேச ஆரம்பித்தார்: ”நான் தஞ்சாவூர் பங்காரு காமாட்சி கோயிலுக்கு அடிக்கடி போவேன்னு இவருக்கு எப்படித் தெரியும்? அங்கே காமாட்சி ஸ்லோகம் பாடுவேன்னு எப்படித் தெரியும்? அதை காஞ்சி காமாட்சி முன்னால பாடலேனு எப்படித் தெரியும்? கிளப் சம்பந்தமான ஆக்டிவிட்டீஸ்ல அதிகம் ஈடுபாட்டோடு இருக்கேன்னு எப்படித் தெரியும்…”
ராஜலட்சுமி சொன்னார்: ”அதான்டீ மகா பெரியவா. தன்னை நம்பிண்டு இருக்கிற பல லட்சக்கணக்கான குடும்பங்களையும் இந்த மகான் தன்னோட கண்காணிப்புல வெச்சுண்டு இருக்கார்.”
பின்னாட்களில் இந்த பங்கஜம், மகா பெரியவாளின் அத்யந்த பக்தை ஆகி, அதோடு திருவண்ணாமலை விசிறி சாமியாரின் பக்தை ஆகி, சத் விஷயங்களில் நாட்களைக் கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது!