சட்டசபையில் வாசித்த இரங்கல் தீர்மானம்

1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.58 மணிக்கு பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனார் மகா பெரியவா.

கடைசி நிமிடம் வரை உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அன்றாட அலுவல்களையும் விசாரித்திருக்கிறார். அரை நொடிக்குள் அவர் அமரர் ஆகி விட்டார் என்றனர், அன்றைய தினத்தில் அவருக்கு சேவை செய்தவர்கள்.

காஞ்சி மகா பெரியவா ஸித்தி ஆன தகவல் ஒரு சில மணி நேரத்துக்குள் உலகம் முழுக்கப் பரவியது. நாலா திசைகளில் இருந்தும் காஞ்சியை நோக்கி வாகனங்கள் சாரி சாரியாகப் பயணிக்க ஆரம்பித்தன.

காஞ்சி மாநகரமே ஜன சந்தடியால் திணற ஆரம்பித்தது. தங்களது ஊரில் வாழ்ந்த கருணை மகான் மறைந்தார் என்ற செய்தி கேட்டு காஞ்சி நகரத்து வியாபாரிகள் அனைவரும் தாங்களும் அஞ்சலி செலுத்துவதற்காகஎவரும் சொல்லாமல்எந்த விதமான அடக்குமுறையும் இல்லாமல் கடைகளை அடைத்தனர்.

நாளிதழ் கடைகள், டீகாபி, பூக்கடைகள்இவை மட்டும் விதிவிலக்கு.

இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், வெளிநாட்டு அன்பர்கள், பொதுவாழ்வில் இருந்து வரும் பிரபலங்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், முதியவர்கள், இளைய தலைமுறையினர், மாணவர்கள்என மகானுக்கு அஞ்சலி செலுத்த திரண்டிருந்தவர்கள் நின்றிருந்த வரிசை சுமார் இரண்டரை கி.மீ.க்கு மேல் நீண்டிருந்தது.

பிரதமர் நரசிம்ம ராவ் உட்பட டெல்லி மற்றும் பல மாநிலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலிக்கு வந்தனர்.

வேதம், தேவாரம், நாமசங்கீர்த்தனம், திருப்புகழ், சஹஸ்ரநாம பாராயணம் என்று மகா பெரியவாளின் பூதவுடலைச் சுற்றி பக்தி மணம் கமழ்ந்தது.

எம் பொண்ணுக்கு இவருதானே தன் கையால தாலி எடுத்துக் கொடுத்தாரு…. இனிமே இவரை எப்ப பாக்கப் போறேன்?’ – ஐம்பது வயது தாயார்.

எனக்கு ஒரு குறைன்னா இவர்ட்ட வந்து சொல்லுவேன். துந்நூறு தந்து அனுப்புவாரு. இனிமே யார்ட்ட எங்குறையைச் சொல்லுவேன்?’ – அறுபத்தைந்து வயது கிராமப் பெண்மணி.

நாங்க என்ன தப்பு பண்ணாலும் கோவிக்க மாட்டாரேஒருவேளை கோபம் வந்தாலும் அடுத்த நிமிஷமே நம்மளைப் பாத்துச் சிரிச்சுப் பேசுவாரேஇவருக்கு சேவை பண்றதுக்காகவாவது மேலுலகத்துக்கு என்னையும் கூப்டுண்டு போப்பா இறைவா.’ – மகா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த அறுபது வயது அன்பர்.

இவர்களுக்கெல்லாம் இன்றைக்குப் பதில் சொல்லி வருகிறது மகா பெரியவா பிருந்தாவனம்.

ஆம்! ‘பிருந்தாவனத்துள் இருந்து 700 வருடம் என் பக்தர்களைக் காப்பேன்என்றார் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்.

இந்தக் காஞ்சி மகா பெரியவாளும் அதுபோல் தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காப்பாற்றி வருகிறார் என்பது அங்கே தினம் தினம் கூடும் பக்தர்களே சாட்சி!

மகா பெரியவா பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அந்த இரங்கல் தீர்மானத்தில், ‘காஞ்சி பெரியவர் ஸித்தி அடைந்த செய்திகுறிப்பாக, தமிழகத்துக்கும் உலகின் பல பகுதியினருக்கும் பெரும் துயரம் அளிக்கும் செய்தியாகும். காஞ்சி பெரியவர் தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த எளிமையும், ஏழை, எளியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து ஆசிர்வதித்த தன்மையும் எல்லோராலும் போற்றிப் பாராட்டப்பட்டவை ஆகும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு ஆசி வழங்கியது, தானே கடைசி வரை கதர் அணிந்தது, வரதட்சணையை வெறுத்து ஆடம்பரம் இல்லாத திருமணங்களை செய்வித்தவை போன்றவை அவரது அரும் செயல்களில் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கும் நம் தாய்நாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பாத யாத்திரையாகத் தன் சுற்றுப்பயணத்தை அமைத்துக் கொண்டு மக்களை ஆசிர்வதித்த தன்மை வேறு எந்த ஆன்மிக பெருந்தகைக்கும் இல்லாது பரமாச்சார்யர் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பு ஆகும்என்று அந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்.

அப்பழுக்கற்ற துறவிக்கு செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலி.

காஞ்சி மகா பெரியவா தொடர்பான செய்திகளையோ, ஒலிஒளிக் காட்சிகளையோ இன்று நாம் படிக்கிறபோது, பார்க்கிறபோது பலரும் வியக்கின்ற விஷயம் என்ன தெரியுமா?

அவரது எளிமை. உணவுக் கட்டுப்பாடு. பேச்சுக் கட்டுப்பாடு (மௌனம்)

அடுத்தது, மிக முக்கியமாகபுலனடக்கம்!

ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல்தெரியாமல் நாமெல்லாம் படாத பாடு படுகிறோம்.

நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல், கண்டதையும் தின்று விட்டு அவஸ்தைப்படுகிறோம்.

வாயை அடக்க முடியாமல், இஷ்டத்துக்குப் பேசி விட்டு பலரது விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்கிறோம்.

கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல், பார்க்கின்றனவற்றின் மீது மோகம் கொண்டு, அடைய முடியாமல் ஏங்குகிறோம்.

ஆனால், துறவிகள் என்பவர்கள், அனைத்தையும் துறந்தவர்கள்.

அனைத்தையும் என்றால்..?

ஐம்புலன்கள் மட்டுமல்ல.

ஜாதி.
மதம்.
சொந்த பந்தம்.
விருப்புவெறுப்பு.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதை நம் சமூகத்துக்குப் பெருமளவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய புத்தபிரான் சொல்வார்: ”துறவிகளுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது. சமூகம் இவர்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்க முடியாது.”

ஆம்!

மகா பெரியவா அனைத்தையும் கடந்தவர்.

அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கக் கூடாது. ஒரு உத்தமமான யோகியை பிராமணர் என்று ஒதுக்கி விடுவது புத்தியுள்ளவன் காரியம் ஆகாது.

பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும். அவரது பெருமை இன்றைக்குத் தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போக வேண்டும்என்று 1973-ல் தனதுஅர்த்தமுள்ள இந்து மதம்தொடரில் மகா பெரியவாளைப் பற்றி நெகிழ்ந்து எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

அவர் எழுதி, 42 வருடங்கள் ஓடி விட்டன. இப்போது மகா பெரியவா பற்றிய சிந்தனை பலரிடத்திலும் காண முடிகிறது. அவரது தாக்கம் பலரிடத்திலும் உணர முடிகிறது

அவர் சொன்ன உபதேசங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற வேகம் இளைய தலைமுறையினரிடம் தெரிகிறது.

தங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவரின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்வது போல் அந்த மகானின் படத்தைத் தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்வதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். இவர் நம்மிடம் இருந்தால், வழித்துணை பயம் இல்லை. வாழ்க்கை குறித்த அச்சம் இல்லை என்கிற தெளிவு மகா பெரியவா பக்தர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

மகா பெரியவா வழிபாடு இன்றைக்கு உலகெங்கும் வியாபித்திருக்கிறது. அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் அவருக்கு பிரமாண்டமான மணிமண்டபம் கட்டி வருகிறார்கள்.

துபாய், அபுதாபி, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா என்று பல்வேறு தேசங்களில்அனுஷதின வழிபாடு கோலாகலப்படுகிறது.

மகா பெரியவா அவதரித்த திருநட்சத்திரம்அனுஷம்!

பிறந்த நட்சத்திரம், ஒருவருக்குப் பெருமை சேர்க்கும்.

ஆனால், அனுஷத்துக்கு மகா பெரியவா பெருமை சேர்த்திருக்கிறார்.

அனுஷம்என்றாலே இன்றைக்கு மகா பெரியவாதான் பலருக்கும் நினைவுக்கு வருகிறார்.