இந்த மாருதி ஸ்வாமி யார் தெரியுமா?

ந்த சம்பவம் நடந்து சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்.

மகா பெரியவா அப்போது சென்னைக்கு விஜயம் செய்திருந்தார். சென்னைக்கு எப்போது வந்தாலும் மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் அவரது பிரதான முகாம் இருக்கும். அங்கு இருந்தபடி வெளியே பல இடங்களுக்கு (சென்னைக்குள்) யாத்திரை சென்று வருவார்.

இப்படி மயிலாப்பூரைத் தாண்டிச் செல்லக் கூடிய யாத்திரை பல நேரங்களில் ஒரு சில நாட்களைத் தாண்டியும் அமைவதுண்டு.

அதுபோன்ற ஒரு யாத்திரை அப்போது அமைந்தது. திருவல்லிக்கேணி பகுதியில் யாத்திரை செய்த மகா பெரியவா அங்கே ஒரு சில நாட்கள் தங்கப் போவதாக அறிவித்தார். திருவல்லிக்கேணிவாசிகளின் சந்தோஷத்துக்குக் கேட்பானேன்! எல்லோருக்கும் ஆனந்தம் தாங்க முடியவில்லை. ‘ஆஹாபெரியவா நடத்துற பூஜையை தினமும் பார்க்கலாம்; பெரியவா கையால தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கலாம் என்று பெருமிதப்பட்டுக் கொண்டார்கள்.

திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் மகா பெரியவா தங்கி, பூஜைகளை நடத்துவதாகவும், பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதை அடுத்து மளமளவென்று வேலைகள் நடந்தன. மகா பெரியவா ஸ்நானத்துக்கு, பூஜைக்கு, சிப்பந்திகள் தங்குவதற்கு, பக்தர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதற்கு, சமையலுக்கு என்று எல்லா ஏற்பாடுகளும் கனகச்சிதமாக நடந்து முடிந்தன.

வசந்த மண்டபத்தில் முதல் நாள் தரிசனம் துவங்கியது.

மகா பெரியவாளின் சென்னை வருகை பற்றி முன்பே அறிந்திருந்த ஏராளமான பக்தகோடிகள் திருவல்லிக்கேணிக்குத் திரண்டு வந்தனர்.

சந்திரமௌளீஸ்வரருக்கு மிக விஸ்தாரமாக பூஜை நடந்து, வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கினார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பக்தகோடிகள் மத்தியில் பெரியவா அருளுரை வழங்கினார்.

இதைத் தவிர பிரபலமான பாகவதர்களின் நாமசங்கீர்த்தனங்கள், பிரபலமான சொற்பொழிவாளர்களின் உபன்யாசங்கள் என்று திருவல்லிக்கேணியே திமிலோகப்பட்டது.

மகா பெரியவாளைத் தரிசிக்க பெரும் பணக்காரர்கள் அதிகம் வந்திருந்தனர் திருவல்லிக்கேணிக்கு. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு பாரம்பரிய உடையில்அதாவது பஞ்சகச்சம்மடிசார் போன்றவற்றை அணிந்து வந்திருந்தனர்.

மகா பெரியவா முகாம் இருந்த வசந்த மண்டபம் பகுதிக்குள் இத்தகைய பணக்காரர்களின் வாகனங்கள் நுழைந்ததுமே மடத்துச் சிப்பந்திகள் ஒரு சிலர் வலிய ஓடிப் போய் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். இவர்களை மிகவும் மரியாதையுடன்கீழே கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கக் கூடிய பக்தர்களைக் கொஞ்சம் விலகச் சொல்லிக் குரல் கொடுத்தபடியேமகா பெரியவா அமர்ந்திருக்கின்ற இடம் நோக்கி அழைத்துச் சென்றனர். பெரியவாளுக்கு அருகே தோதான ஓரிடத்தில் இவர்களை அமர வைத்தனர்.

பணக்காரர்கள் மீது மடத்துச் சிப்பந்திகள் ஒரு சிலர் காட்டும் இப்படிப்பட்ட கரிசனம் சாதாரணமான நிலையில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைத்தது.

நாமும் மகா பெரியவாளைத் தரிசிக்கத்தானே வந்திருக்கிறோம். கையில் நிறைய காசு இருந்து கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா டிரஸ் பண்ணிண்டு, நிறைய நகை நட்டுகளைப் போட்டுண்டு வந்துட்டா அவர்கள் எல்லோரும் மகா பெரியவா பக்தர்கள் ஆகி விட முடியுமா? மகானை ஆத்மார்த்தமாகத் தரிசிக்கக் கூடிய உள்ளம் எங்களுக்கு அல்லவா இருக்கிறது?! என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இவர்களின் பொருமலும் ஒரு வகையில் நியாயமானதே! பெரும்பாலான பணக்காரர்கள் எதை எதிர்பார்த்து மகா பெரியவாளிடம் வந்திருப்பார்கள்?

தங்களது வியாபாரமும் தொழிலும் நன்றாக நடக்க வேண்டும்லாபம் நன்றாகக் கொட்ட வேண்டும் என்பதற்காக மகா பெரியவாளிடம் ஆசி வேண்டி வந்திருக்கலாம்.

ஆனால், ஒன்றுக்குமே வழி இல்லாத ஏழைகள் எதற்காக வந்திருப்பார்கள்?

பொருளாசை அவர்களுக்கு இருக்காது. இருக்கின்ற பொருளாதார நிலைமையைத் தக்க வைப்பதே அவர்களுக்குப் பெரும் சவால்.

அன்றன்றைய தேவையைப் பூர்த்தி செய்து விட்டால், அதுவே அவர்களுக்குப் போதும். பணம் மற்றும் பொருளைச் சேமித்து வைக்கின்ற எண்ணமோ, ஆசையோ அவர்களுக்கு இல்லை. அதற்கான வழியே இல்லை.

அப்படி என்றால், எதை எதிர்பார்த்து வருகிறார்கள்?

அந்த மகானின் கருணை பொங்கும் விழியைப் பார்ப்பார்கள். அதிலேயே அவர்களுக்கு ஒரு பரவசம் கிடைத்து விடும்.

அந்த மகான் தங்களை அழைத்துஎந்த ஊர்? வெவசாயமா? ஸ்கூல் உத்தியோகமா? பால் வியாபாரமா? என்று அனுசரணையுடன் கேட்கிற ஒரு சில கேள்விகளிலேயே தங்களை இழந்து விடுவார்கள்.

கிளம்பும்போது அவர் தருகிற பிரசாதம்அது விபூதியாக இருந்தாலும் சரிஆனந்தம்!

மகா பெரியவா இந்த வசந்த மண்டபத்துக்கு வந்து இன்றைக்கு மூன்றாவது நாள்.

முதல் தினத்தை விட பக்தர்கள் வரத்து இன்றைக்கு அதிகமாகவே காணப்பட்டது.

பணக்காரர்கள் அதிகம் கூடி இருக்கின்ற இந்த முகாமில் வசதி இல்லாதசாதாரண வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் எளிய உடைகளோடு, எளிய காணிக்கைப் பொருட்களைக் கைகளில் வைத்துக் கொண்டு ஆங்காங்கே காணப்பட்டனர். ‘இவற்றை எப்படியாவது மகானிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் அவர்கள் முகத்தில் தென்பட்டது

ஏழைகளால் மெள்ள முன்னேறிச் சென்று, மகா பெரியவாளின் அருகே அன்றைய தினம் அந்த வேளையில் செல்ல முடியவில்லை.

ஒரு சிலர் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே தரிசித்து விட்டுப் புறப்பட்டனர். ‘மகானை எங்கிருந்து தரிசித்தால் என்ன? நாம் அவரைப் பார்ப்பதை விட அவரது பார்வை நம்மேல் விழுந்தாலே போதும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது.

தவிர, அன்றைக்கு வேறு ஏதோ ஒரு விசேஷமும்கூட. அதனால், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

இதற்கு முந்தைய நாட்களைப் போலவேமகா பெரியவாளுக்கு முன்னால் இருந்த இடத்தைப் பணக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு, பெரியவாளைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் காணப்பட்டனர்.

மகா பெரியவா தனக்கு உரிய ஆசனத்தில் சிவ சொரூபமாக அமர்ந்திருந்தார்.

இன்னும் பூஜை துவங்கவில்லை. இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறது. இதைத் தரிசிக்கத்தான் இத்தனை கூட்டமும்!

தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பக்தகோடிகளை இப்படியும் அப்படியும் தன் கருணைப் பார்வையால் ஸ்கேன் செய்தார். மிகவும் நிதானமாக பக்தகோடிகளைப் பார்த்துக் கொண்டே வந்தார். மகா பெரியவா பார்வை எங்கோ ஓரிடத்தில் தள்ளி நிலைகுத்தி நின்றது.

ஆகா! மகா பெரியவாளின் பார்வை பட்ட பக்தருக்கு அடித்தது யோகம்!

தன் அருகில் இருந்த ஒரு சிப்பந்தியை கைவிரல் சொடுக்கில் அழைத்தார் மகா பெரியவா. மகான் தரப் போகும் உத்தரவை நிறைவேற்றுவதற்காகக் குடுகுடுவென்று ஓடி வந்து பவ்யமாக நின்றார் அந்த சிப்பந்தி.

பூஜை முடிகின்ற மதிய வேளை வரை மகா பெரியவா மவுனம் என்பதால், ஒரு பேப்பரையும் பேனாவையும் கொண்டு வரும்படி அந்த சிப்பந்திக்கு சைகை மூலம் தெரிவித்தார்.

அந்த சிப்பந்தி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பேப்பரும் பேனாவுமாகப் பெரியவாளிடம் திரும்பினார்.

அந்த பேப்பரை வாங்கிய மகா பெரியவா, அதில்மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியர் என்று எழுதி, அவர்களை உடனே இங்கே கூட்டிண்டு வா என்பதற்கான ஒரு உத்தரவை சைகையால் பிறப்பித்தார்.

பெரியவா பெயர் எழுதிக் கொடுத்த பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு, அந்தக் கூட்டத்தின் மையப் பகுதிக்கு வந்த சிப்பந்தி, ”எல்லாரும் அமைதியா இருங்கோ. இன்னும் சித்த நேரத்துல மகா பெரியவா பூஜையை ஆரம்பிக்கப் போறா. ஆனந்தமா அவா அவா இருக்கிற இடத்துல இருந்து தரிசனம் பண்ணுங்கோ என்று பொத்தாம்பொதுவாகப் பேசி விட்டு அதன் பின், ”இங்கே வந்திருக்கிற பக்தாள்ல மாருதி ஸ்வாமி, சாரதா அப்படீங்கிற பேர் உள்ள தம்பதிகள் எங்கே இருக்கா? என்று பெரிய குரலில் அழைப்பு விடுத்தார். அதன் பின் நாலா பக்கமும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்.

ஆகாமடத்தோட சிப்பந்தி இப்படி ஒரு பேரைச் சொல்லிக் கூப்பிட்டா அது பெரியவா கூப்பிடறதாத்தானே அர்த்தம்யார்னு தெரியலயேஅவாளுக்கு இன்னிக்கு அதிர்ஷ்டம்தான் என்று ஆளாளுக்குஇவர்கள் யாராக இருக்கும்? என்று இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

கூட்டத்தின் கடைசியில் இருந்து ஒரு கணவனும் மனைவியும் சிரமப்பட்டு எழுந்து, ”நான்தான் மாருதி ஸ்வாமி. தோ, இருக்கறவ என் மனைவி. பேரு சாரதா என்றார்.

ஒட்டுமொத்தமாகக் கூடி இருந்த கூட்டம் அவர்கள் நின்றிருந்த பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியது.

சிப்பந்தி அவர்களைப் பார்த்து, ”அப்படியே முன்னால வாங்கோ. மகா பெரியவா ஒங்க பேரைச் சொல்லி வரச் சொல்லி இருக்கார் என்றார்.

மாருதி ஸ்வாமிக்கும், சாரதாவுக்கும் நம்பவே முடியவில்லை. அதே திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருக்கின்ற மாருதி ஸ்வாமி, மிகவும் சாதாரணப்பட்டவர். ஏழ்மையான குடும்பம்.

மகா பெரியவா இருக்கின்ற இடத்தில் இருந்து ரொம்ப தொலைவு தள்ளி அமர்ந்திருக்கின்றோமேஇந்த மகான் நடத்துகிற பூஜைகளை நம்மால் நன்றாக தரிசிக்க முடியுமா? ஒரே பணக்காரர்களாக சூழ்ந்திருக்கின்ற இடத்தில் நாம் போய் எப்படி அமர முடியும்? என்றெல்லாம் எண்ணியபடி அமர்ந்திருந்த இவர்களுக்கு மகா பெரியவாளிடம் இருந்து வந்த அழைப்புஅதுவும் பெயரை எழுதிக் கொடுத்து வந்த அழைப்புஇன்னமும் நம்ப முடியாமல்தான் அவர்களுக்கு இருந்தது.

தரையில் அமர்ந்திருந்த கூட்டத்தினரை விலக்கியபடி தம்பதியர் இருவரும் மகா பெரியவா சந்நிதானத்தை நோக்கி முன்னேறினர்.

ஒரு கட்டத்தில் பெயர் சொல்லி இவர்களை அழைத்த சிப்பந்தியே இவர்களுக்கு வழியை தாராளமாக ஏற்படுத்திக் கொடுத்து, மகா பெரியவா அருகே அழைத்துச் சென்றார்.

எந்த தெய்வத்தை தரிசிக்க வந்தோமோ, அந்த தெய்வத்தை இத்தனை அருகில் பார்த்ததும் இவர்கள் இருவரின் கண்கள் பனித்தன. கைகளைக் கூப்பியபடி அந்த நடமாடும் தெய்வத்தை வணங்கியவர்கள், விழுந்து நமஸ்கரித்தார்கள்.

ஒரு புன்னகையுடன் இவர்களைப் பார்த்த மகா பெரியவா, ‘தோ, அங்க உக்காந்துக்கோங்கோ. பூஜை ஆரம்பமாகப் போறது என்று சைகை காட்டதனியாக இவர்கள் இருவரையும் ஸ்பெஷலாக அமர வைத்தார் சிப்பந்தி.

பணக்காரர்கள் மத்தியில் ஏழைத் தம்பதியர் உள்ளே வந்தாயிற்று!

திரளான பக்தகோடிகள் மத்தியில் சந்திரமௌளீஸ்வரர் பூஜையைத் துவக்க முற்பட்டார் மகா பெரியவா.

அதுவரை சலசலவென்று எதையோ பேசிக் கொண்டிருந்த பக்தகோடிகள் அனைவரும் மகா பெரியவா பூஜை துவக்க இருப்பதைப் பார்த்து அமைதியானார்கள். மகா பெரியவா நடத்தப் போகும் பூஜையை பக்தி சிரத்தையுடன் தரிசிக்கத் தயாரானார்கள்.

கயிலையில் இருக்கின்ற சிவபெருமான் தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்?

அந்த சர்வேஸ்வரன் தனக்குத் தானே அலங்காரம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்?

அந்த ஈஸ்வர மூர்த்தி தனக்குத் தானே பிரசாதங்களை நிவேதனம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்?

அதுபோல்தான் மகா பெரியவா நடத்தும் சந்திரமௌளீஸ்வர பூஜையை எண்ணற்ற பக்தர்களும் ஆத்மார்த்தமாகக் கண்டு தரிசிப்பார்கள்.

அதாவது கயிலைவாசன் தனக்குத் தானே செய்து கொள்ளும் பூஜையைப் பார்க்க வேண்டும் என்றால், மகா ஸ்வாமிகள் நடத்தும் இந்த சந்திரமௌளீஸ்வர பூஜையைப் பார்த்தால் போதும் என்பார்கள்.

மகா பெரியவாளே ஈஸ்வர சொரூபம்தான் என்பதற்கு இதைவிட நிரூபணம் தேவையில்லை. காஞ்சி ஸ்ரீமடத்துடன் மிகவும் பரிச்சயம் கொண்டவயது முதிர்ந்த பக்தர்கள் சிலர், ‘ஆகாஅங்கே பாருங்கோஎன்ன ஒரு ஆனந்தமான கோலம்சாட்சாத் சர்வேஸ்வரன் தனக்குத் தானே பூஜை பண்ணிக்கறதைப் பாருங்கோ. இதைப் பாக்கணும்னா நாம கயிலாசம் போகணும். அதுக்கெல்லாம் நமக்குப் பிராப்தம் இருக்கானு தெரில. ஆனா, மகா பெரியவா சொரூபத்துல நமக்கு இதை எல்லாம் பாக்கறதுக்கு பாக்கியம் கிடைச்சிருக்கு என்று தங்களுக்குள் பரவசப்பட்டு இந்த சந்திரமௌளீச்வர பூஜையை தரிசிப்பார்கள். அப்பேர்ப்பட்ட சிறப்பு இந்த சந்திரமௌளீஸ்வர பூஜைக்கு உண்டு.

பூஜையை மகா பெரியவா நடத்துகின்ற வேளையில் பக்தகோடிகளின் உடலும் உள்ளமும் இந்த வழிபாட்டில் மட்டுமே இருக்கும். இதைத் தாண்டி வேறு எங்கும் செல்லாது.

அப்போது அவர்களுக்கு செல்போன் தொந்தரவு இல்லை. .எம்.. கட்ட வேண்டிய அளவுக்குக் கடன் வாங்கவில்லை. அதனால், கவலை இல்லை. தொலைக்காட்சியில் மூழ்க வேண்டிய எண்ணம் இல்லை. ‘பசங்களுக்கு ஹோம் ஒர்க் இருக்கேசீக்கிரம் வீட்டுக்கு ஓடணுமே என்ற நினைப்பும் இல்லை. எனவே, கர்ம சிரத்தையுடன், ‘மகா பெரியவாமகா பெரியவா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு இந்த பூஜையின் ஒவ்வொரு விநாடியையும் தரிசிப்பார்கள்.

இப்பேர்ப்பட்ட பூஜையை மகா பெரியவா நடத்தும்போது அவருக்கு அருகில் அமர்ந்து இந்தத் திருக்காட்சிகளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?!

மாருதி ஸ்வாமியும், சாரதாவும் கிடைத்தற்கரிய பெரிய பேறு தங்களுக்குக் கிடைத்திருப்பதாக பூரித்து ஆனந்தக் கண்ணீருடன் இந்த பூஜையை தரிசித்துக் கொண்டிருந்தனர்.

அபிஷேக திரவியங்களை சிஷ்யகோடிகள் ஒவ்வொன்றாக அருகே நகர்த்தி வைக்கமகா பெரியவா தன் திருக்கரங்களால் அவற்றை எடுத்து அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.

வேத பாராயணம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.

பெண்கள் தங்களுக்குத் தெரிந்த ஸ்லோக பாராயணத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அபிஷேகம் பூர்த்தியாகி, வாசனை மலர்கள் கொண்டு அலங்காரம் நடந்து, மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை ஆகி, தீப ஆராதனையும் முடிந்தது.

அதுவரை அங்கிருந்து ஒருவர் நகர வேண்டுமேஇருந்த இடத்தை விட்டு எவரும் இப்படி அப்படி அசையக்கூட இல்லை. பின், எங்கே நகர்வது?

மகா பெரியவா நடத்தும் சந்திரமௌளீஸ்வரர் பூஜையை ஆற அமர உட்கார்ந்து தரிசித்தாகி விட்டது. அடுத்து பெரியவா கையால் தீர்த்த பிரசாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். – இதுதான் வந்திருந்த பக்தர்களின் எண்ணம். அதற்காக ஆர்வமாகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

பிக்ஷை (சந்நியாசிகள் சாப்பிடும் உணவை இப்படிச் சொல்வார்கள்) எடுத்துக் கொள்ளும் வரை மகா பெரியவா மவுனத்தில்தான் இருப்பார். அன்றும் அப்படியே! தீர்த்த பிரசாதம் வழங்குவதற்காகத் தயார் ஆகிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தபடியே பார்வையை மட்டும் மாருதி ஸ்வாமி, சாரதா தம்பதியர் அமர்ந்திருந்த பக்கம் திருப்பி அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தார் மகா பெரியவா. ‘பணக்காரர்களை மட்டும்தான் என் அருகே அமர்த்தி வைப்பார்கள் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல் நீங்களும் நினைத்துக் கொண்டிருந்தீர்களேஉங்களைப் போன்ற உண்மையான பக்தி கொண்டவர்கள்பணக்காரரோ, ஏழையோஎத்தகைய நிலையில் இருந்தாலும் அவர்களை என் அருகே அழைத்து அமர வைப்பேன்.

இங்கே பக்திக்குத்தான் முதலிடம் என்று அந்தப் பார்வை சொல்லாமல் சொல்வது போல் பட்டது மாருதி ஸ்வாமிக்கு.

கைகளைக் கூப்பி மகா பெரியவாளை மாருதி ஸ்வாமி தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், அவருக்கு அடுத்து ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்த நடமாடும் தெய்வம், தன் விரலசைவில் ஒரு சிப்பந்தியை அருகே வரவழைத்தது.

அந்த சிப்பந்தி பெரியவாளிடம் ஓடோடி வந்தார். அவரிடம், ‘மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியரை இந்த மேடையிலேயே தனியாக இதோ, இந்த இடத்தில் அமர வைத்து, அவர்களுக்குத் தம்பதி பூஜை நடத்து. இங்கே இருக்கின்றவர்களைக் கொண்டு பூஜை நடத்தச் சொல் என்று சைகையில் சொல்லி அங்கு அமர்ந்திருந்த பணக்காரர்களைக் காட்டினார் மகா பெரியவா.

உத்தரவு பெரியவா என்று அங்கிருந்து நகர்ந்த சிப்பந்தி நேராக மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியரிடம் போய் விவரத்தைச் சொன்னார்.

அவ்வளவுதான்மகா பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹம் தங்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருவதைப் பார்த்து இருவரும் பேச்சு மூச்சற்றுப் போனார்கள். எதுவும் பேச நா எழவில்லை. இருவரும் எழுந்து மகா பெரியவா அருகே வந்து கண்கள் கலங்க அவருக்கு ஒரு நமஸ்காரம் செய்தனர்.

போங்கோபூஜைக்கு உக்காருங்கோ என்பதாக மகா பெரியவா அவர்களுக்கு ஜாடை காண்பித்தார். இருவரும் வந்து அமர்ந்தார்கள். எந்தெந்த பணக்காரர்கள் எல்லாம் மகா பெரியவா முன்னால் அமர்ந்திருந்தார்களோ, அவர்கள் எல்லோரும் மாருதி ஸ்வாமிக்கும், சாரதாவுக்கும் தம்பதி பூஜை செய்வதற்காக நின்று கொண்டிருந்தனர்.

தம்பதி பூஜையை ஆரம்பிக்கும் முகமாக இவர்கள் இருவருக்கும் புது வேஷ்டிபுடவை இத்யாதிகள் வழங்கப்பட்டு, அவற்றை அணிந்து வரச் சொன்னார்கள் மடத்துச் சிப்பந்திகள்.

காஞ்சி மடத்தின் சார்பாக மகா பெரியவா ஆசியுடன் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு திரும்பிய மாருதி ஸ்வாமியும், சாரதாவும் உணர்ச்சிப்பிழம்பாக மகா பெரியவாளுக்கு மீண்டும் நமஸ்காரம் செய்தனர்.

அவர்களை ஆசிர்வதித்த மகா பெரியவா, முதல் தீர்த்த பிரசாதத்தை இந்த இருவருக்கும் வழங்கினார். அதைப் பெற்றுக் கொள்ளும்போது இருவரின் கைகளும் நடுங்கஉதடுகள்மகா பெரியவாமகா பெரியவாமகா பெரியவா என்று உச்சரித்தபடி வலது உள்ளங்கையில் வாங்கிய தீர்த்தத்தை உட்கொண்டு தலையிலும் தெளித்துக் கொண்டனர்.

தம்பதி பூஜை நிமித்தம் மாருதி ஸ்வாமிக்கும், சாரதாவுக்கும் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ, அவற்றை அங்கிருந்த பணக்கார அன்பர்கள், மகா பெரியவா சொன்ன அறிவுரைப்படி செய்தனர்.

பதினைந்து நிமிடங்களில் தம்பதி பூஜை முடிந்து அவர்களுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின் இருவரையும் சாப்பிட அழைத்துச் செல்லுமாறு தன் சிப்பந்திகளுக்கு சைகை காட்டினார் பெரியவா.

இவர்கள் இருவரையும் சமையல்கூடத்துக்குள் அழைத்துச் சென்ற சிப்பந்திகள் தனியாக இவர்களை அமர வைத்தனர். அமர்வதற்கு ஆசனம் போடப்பட்டு, நுனி இலை விரிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. எக்கச்சக்க அயிட்டங்கள்.

பூஜையைத் தரிசிக்க வந்த பணக்கார வீட்டுப் பெண்மணிகள் வரிந்து கட்டிக் கொண்டு இவர்களுக்கு உணவு பரிமாறினர்.

மாருதி ஸ்வாமிக்கும், சாரதாவுக்கும் கண்களில் ஜலம் புரள ஆரம்பித்தது. ‘நடமாடும் தெய்வம் என்று இவரை அழைக்கின்றோமேஇந்த தெய்வம் நம் மனதில் உள்ள ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, ஏழ்மை நிலையில் உள்ள என்னைக் கவுரவிக்க வேண்டும் என்று தன் அருகே அழைத்து, நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தை இன்றைக்கு வழங்கி இருக்கிறதே என்று மாருதி ஸ்வாமி நினைத்து நினைத்து மருகினார்.

இங்கே இவர்கள் இருவர் மட்டும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கஅங்கே மகா பெரியவா பக்தகோடிகளுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். அனைவரும் மிக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

சிலருக்குத் தீர்த்த பிரசாதம் கொடுத்து விட்டு, அவர்களது குடும்ப நலனையும் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

மாருதி ஸ்வாமியும், சாரதாவும் சாப்பிட்டு முடித்து விட்டு, மகா பெரியவா தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்த இடம் அருகே வந்தனர். மகா பெரியவா தான் இருந்த இடத்தில் இருந்தபடியே இவர்களது சந்தோஷமான முகம் பார்த்துத் தானும் மனம் பூரித்தார்.

தீர்த்த பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் கொடுத்து முடித்தவுடன், பிக்ஷை எடுத்துக் கொள்வதற்காக மகா பெரியவா தண்டத்தை ஏந்திக் கொண்டு கிளம்பினார். தீர்த்த பிரசாதம் வாங்கிய ஏனைய பக்தகோடிகளும் சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலுக்குள் நுழைந்தனர்.

பிக்ஷை எடுத்துக் கொண்டு மகா பெரியவா வந்தவுடன், அவரிடம் சொல்லி விட்டு உத்தரவு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, எவருமே இல்லாத அந்த இடத்தில் மாருதி ஸ்வாமியும், சாரதாவும் அமர்ந்தனர்.

பிக்ஷை முடித்து விட்டு வரப் போகிற மகா பெரியவா வருகைக்காகக் காத்திருந்தனர்.

பிக்ஷை முடித்து வரப் போகும் மகா பெரியவாளை மீண்டும் தரிசிக்க வேண்டும்அந்த திருமுகத்தை இன்னொரு முறை கண்ணாரக் கண்டு பரவசப்பட வேண்டும் என்பதற்காக ஒரு சில பக்தர்கள் மதிய உணவும் உட்கொள்ளப் போகாமல் தாங்கள் ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்திலேயே காத்திருக்கத் தொடங்கினார்கள்.

மதிய உணவு சாப்பிடப் போன ஏராளமான பக்தர்கள், பெரியவா பிக்ஷை முடித்து விட்டு வருவதற்குள் தாங்களும் வந்து அமர வேண்டும் என்பதற்காகஇலைகளில் பரிமாறப்பட்டதை அவசரம் அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.

மகா பெரியவாளை ஏற்கெனவே தரிசித்த அத்தனை பக்தர்களும் மீண்டும் ஏன் இங்கே வந்து காத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பிக்ஷை முடித்த பின்னர்தான் மகா பெரியவா மவுனம் துறப்பார். எனவே, மவுனத்தைப் பூர்த்தி செய்த பின் அந்த மகானின் திருவாயில் இருந்து வரக்கூடிய நல்வார்த்தைகளைக் கேட்க வேண்டும்; ஓரிரு வார்த்தைகளோடு கூடிய அவரது நல்லாசிகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே மண்டபத்தை விட்டுப் புறப்படாமல் மீண்டும் இங்கே அமர்ந்திருக்கின்றனர்.

மகான்களுக்கு ஆகாரம் என்பது ஒரு சம்பிரதாயத்துக்கு. காஞ்சி மகான் பிக்ஷை எடுத்துக் கொள்ளாமலேயே பல காலம் தொடர்ந்து இருந்திருக்கிறார்.

ருசி, பசி எல்லாம் நமக்குத்தான். இன்னதுக்கு இதைத் தொட்டுக் கொள்ள வேண்டும். இன்னதுக்கு இதுதான் சேரும் என்றெல்லாம் நாம் நாக்கை வளர்த்துக் கொண்டு விட்டோம்.

உணவின் ருசிக்கு அடிமையாகிப் போன நாக்கை மீட்டெடுத்து வருவது சிரமம் என்பதால், மகான்கள் உணவு விஷயத்தில் புலன்களைக் கட்டுப்படுத்தி விடுவார்கள்.

வடக்கே பல சந்நியாசிகள் உணவு எடுத்துக் கொள்ளாமலே தொடர்ந்து பல வருடங்கள் இருக்கிறார்கள். தண்ணீரையும் எடுத்துக் கொள்ளாத மகான்கள் இருந்து வருகிறார்கள்.

மாருதி ஸ்வாமிகளும் சாரதாவும் மகா பெரியவாளை மீண்டும் ஒரு முறை தரிசித்து விட்டு, அவரிடம் உத்தரவு பெற்றுச் செல்ல வேண்டும் என்பதற்காககாலையில் தாங்கள் எந்த இடத்தில் அமர்ந்தார்களோ, அதே இடத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

மகா பெரியவா தரிசனத்துக்காகக் காலையில் வந்த எந்த ஒரு பக்தரும் இந்த மண்டத்தை விட்டுக் கிளம்பியதாகத் தெரியவில்லை. கூட்டம் அப்படியே இருக்கிறது. சொல்லப் போனால், காலையில் இருந்ததை விட தற்போது பக்தர்கள் கூட்டம் கூடியது மாதிரிதான் தெரிகிறது.

அதோ, மகா பெரியவா வருகிறார்.

பிக்ஷை முடிந்து, தண்டம் சுமந்து வரும் சர்வேஸ்வரனைப் பார்த்து அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே நமஸ்கரித்தனர்.

அனுஷ்டானங்கள், ஜபம், சந்திரமௌளீஸ்வரர் பூஜை, தீர்த்த பிரசாதம், பக்தர்களிடம் விசாரிப்புகள், அவசரமாகக் கவனிக்க வேண்டிய மடத்து அலுவல்கள் என்று மகா பெரியவா அதிகாலையில் இருந்து படு பிஸி என்றாலும், அவரது முகத்தில் கொஞ்சமும் அசதி தெரியவில்லை. சலிப்பு தெரியவில்லை. சுறுசுறுப்பு, சந்தோஷம், நிறைவுஇவையே அந்த மகானின் முகத்தில் நிரம்பிக் காணப்பட்டது.

மண்டபத்தில் தான் ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்தை மகா பெரியவா நெருங்கியதும், தரையில் அமர்ந்திருந்த பக்தகோடிகள் அனைவரும் மடார் மடாரென்று கன்னத்தில் போட்டுக் கொண்டுஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்தை உணர்ச்சிப் பெருக்குடன் முழங்க ஆரம்பித்தார்கள்.

இதோ, அன்பையும் வாத்சல்யத்தையும் தன் முகத்தில் ஏந்தி, நடந்து வந்த கருணைக் கடல் தன் ஆசனத்தில் அமர்ந்தது.

மகா பெரியவாமகா பெரியவாமகா பெரியவா என்று அவரது திருமுகத்தை தரிசித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர் பக்தர்கள்.

தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களை இடமும் வலமுமாகப் பார்த்துக் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த மாருதி ஸ்வாமி மற்றும் சாரதா தம்பதியரை அருகே வருமாறு சைகை செய்தார் மகா பெரியவா.

ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் எழுந்தனர். நடையில் வேகம் கூட்டி மகா பெரியவா அருகே வந்தனர். அவருக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுக் கைகளைக் கூப்பிய வண்ணம் அமர்ந்தனர்.

மகா பெரியவா இப்போது பேசப் போகும் விஷயத்தைச் செவி மடுத்துக் கேட்க வேண்டும் என்று பக்தகோடிகள் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

மாருதி ஸ்வாமியின் பக்கம் திரும்பி, ”குடும்ப ஜீவனம் எப்படிப் போயிண்டுருக்கு? என்று சன்னமாக விசாரித்தார் மகா பெரியவா.

விழிகளின் ஓரத்தில் நீர் பிரவாகம் பெருக, ”மகா பெரியவா அனுக்ரஹத்துல ஜீவனம் நன்னா போயிண்டிருக்கு என்று மாருதி ஸ்வாமி அங்கே ஒரு தடுமாற்றத்துடன் சொன்னாலும், உண்மை நிலையை சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவாளைத் தவிர யார் அறிவர்?!

மகா பெரியவாளின் இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கின்ற இடத்தில்சங்கர சொரூபம் பிரத்தியட்சமாகஒரு சாட்சியாக அமர்ந்திருக்கின்ற இடத்தில்மாருதி ஸ்வாமி தெரிந்தே ஒரு பொய் சொல்லி இருக்கிறார்.

ஆம்! ‘மகா பெரியவா அனுக்ரஹத்துல ஜீவனம் நன்னா போயிண்டிருக்கு.

ஆனால், உண்மையில் மாருதி ஸ்வாமியின் ஒவ்வொரு நாள் ஜீவனமும் மிகுந்த சிரம தசையில்தான் சென்று கொண்டிருந்தது. மகா பெரியவாஜீவனம் எப்படிப் போயிண்டிருக்கு? என்று கேட்டவுடன், இருக்கின்ற நிலைமையைஇத்தனை பக்தகோடிகள் பார்த்துக் கொண்டிருக்கிறபோதுஅப்படியே சொல்லி விட முடியுமா? அதனால்தான், சபை நாகரிகம் கருதிநன்னா போயிண்டிருக்கு என்று சொல்லி இருக்கிறார் மாருதி ஸ்வாமி.

தாயிடமும், குருவிடமும் பொய் சொல்லக் கூடாது. காரணம்இந்த இருவருமே குழந்தைகளின் நலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.

குருவின் குருவாக விளங்கக் கூடிய மகா பெரியவாளிடம் பொய் பேச முடியுமா? ஒருவேளை பொய்யே பேசினாலும் அந்தப் பொய்யும் எடுபடுமா?

மாருதி ஸ்வாமி தம்பதியைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தார் மகா பெரியவா. பிறகு, அங்கே கூடி இருக்கின்ற பக்தர்களை ஒருமுறை நோட்டம் விட்டார்.

பின் தன் திருவாய் மலர்ந்தார். ”தோ, நம்ம கூட ஒக்காந்துண்டு இருக்காரேஇவர் பேர் மாருதி ஸ்வாமி. பக்கத்துல அவரோட தர்ம பத்தினி. ‘இவாளுக்கு இன்னிக்கு இந்த இடத்துல இவ்ளோ கவுரவம் கெடைச்சிருக்கேஇவா யாரு?ங்கிற கேள்வி ஒங்க எல்லாரோட மனசுலயும் இருக்கும். இவா யாருன்னு இப்ப சொல்லப் போறேன்.

தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி ராஜா நமக்குத் தெரியும். இந்த மன்னனோட காலத்துல நிறைய ஆலயங்களுக்குத் திருப்பணிகள் நடந்தது. கோயில்களை நன்னா கவனிச்சிண்டவர் இந்த ராஜா. இந்த சரபோஜி ராஜாவோட ராஜகுருவா இருந்தவர் சேதுபாவா ஸ்வாமி.

அந்த சேதுபாவா ஸ்வாமியோட இளைய மகன்தான் இதோ இன்னிக்கு நம்மகிட்ட ஒக்காந்துண்டு இருக்கிற இந்த மாருதி ஸ்வாமி.

மாருதி ஸ்வாமியோட தர்ம பத்தினி சாரதா (கையை நீட்டி அடையாளம் காண்பித்து) யார் தெரியுமோல்யோ?

அவாளும் ரொம்ப ஒசந்த பரம்பரை. மகாலிங்க ஸ்வாமி க்ஷேத்திரம் இருக்கற திருவிடைமருதூர் ஒங்களுக்குத் தெரியும். அங்கே வாழ்ந்த மிராசுதார் சுவாமிநாத நாயக் அவர்களோட புதல்விதான் சாரதா.

விவரம் தெரியாத சிறு வயதிலேயே இவர்களுக்குத் திருமணம் நடந்து விட்டது. இந்தத் திருமணம் நடக்கும்போது இவா ரெண்டு பேரோட குடும்பமுமே ரொம்ப சுபிட்சமாசகல விதமான வசதிகளோடும் இருந்தது. திரும்பினா வேலையாள் வந்து நிப்பா. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நிறைய பேர் இருந்தா.

ஆனா, காலம் போகப் போக பொருளாதார ரீதியா மிகவும் பாதிக்கப்பட்டு, இவாளோட குடும்பம் ஒரு பின்னடைவுக்கு வர ஆரம்பிச்சுடுத்து. ஒவ்வொரு நாளும் ஜீவனம் நடத்தறதே ரொம்ப கஷ்டமா போயிடுத்து இவாளுக்கு என்று மகா பெரியவா பேசிக் கொண்டிருக்கும்போது, மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியர் கலங்கிய கண்களுடன் அந்த மகானைப் பார்த்து வணங்கியபடியே இருந்தனர்.

இன்றைக்கு ஏழைகளாகக் காட்சி தரக்கூடிய இந்த இருவரும் ஒரு காலத்தில் ஓகோவென்று செல்வச் செழிப்போடு இருந்தவர்களா? என்கின்ற ஆச்சரியமும், பிரமிப்பும் முகத்தில் தென்படஅடுத்து மகா பெரியவா சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்கத் தயாரானார்கள்.

அடுத்து மகா பெரியவா, ”இவா இன்னிக்கு இருக்கிற இந்த நிலைமையைக் கேள்விப்பட்டவாஇவாளைப் பத்தி நன்னா தெரிஞ்சவா சில பேர்எப்படி இருந்த குடும்பம்இவா இன்னிக்கு இப்படிக் கஷ்டப்படலாமா? நாமதான் எப்படியும் கைதூக்கி விடணும்னு இவாளுக்கு உதவறதுக்கு முன்வந்தா. ஆனா, பிறத்தியார் தங்களுக்கு செய்யற எந்த உதவியையும் ஏத்துக்கக் கூடாதுன்னு இவரோட மனசுக்குள் அப்படி ஒரு வைராக்கியம். அதனால, உதவறேன்பேர்வழி வந்தவா எல்லாரையும் பார்த்துக் கைதூக்கி நன்றியை மட்டும் சொல்லிட்டு, அவாளை அனுச்சு வெச்சுட்டா. அவாளும் அதுக்கு மேல இவாளை வற்புறுத்த வேண்டாம்னு ஒதுங்கிண்டுடுட்டா.

ஜீவனம் நடக்கணுமேபகவான் வயிறுன்னு ஒண்ணைக் கொடுத்துட்டானேதினமும் ரெண்டு வேளையோ, மூணு வேளையோ போஜனம் ஆகணுமேஅதனால் இவர் (மாருதி ஸ்வாமியைக் காட்டி) என்ன பண்ணினார் தெரியுமா? ஒரு வேலையில் சேர்ந்தார்.

பெரிய குடும்பத்துல பொறந்தவா, சூழ்நிலை கருதி பின்னாட்கள்ல ஒரு வேலைல சேர்றது ஒண்ணும் தப்பில்லே. ஆனா, இவர் என்ன கடையில வேலைக்குச் சேர்ந்தார், தெரியுமா?

ஒரு செருப்புக் கடையில.

இப்பவும் செருப்புக் கடையில வேலை பாத்துண்டுதான் குடும்பத்தை ஓட்டிண்டு வர்றார் என்று மகா பெரியவா சொல்லி முடித்து நிறுத்தினார்.

ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமே அதிர்ச்சியானது.

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

நேற்றைய நிலை இன்றைக்கு இருக்குமா?

தெரியாது.

இன்றைய நிலை நாளைக்கு நீடிக்குமா?

தெரியாது.

நாளைய நிலை அதற்கு அடுத்த நாள் நீடிக்குமா?

தெரியாது.

இப்படி வாழ்க்கையில் பல விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கிறபோது, ‘எல்லாமே எனக்குத் தெரியும் என்று பலரும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தெரியாதுதெரியாது என்று நாம் பதில் சொல்கிற பல கேள்விகளுக்கு விடை, நமக்கும் மேலே உள்ள ஒருவனிடம் உள்ளது.

அவரைப் பார்என்னமா வாழ்ந்தார் ஒரு காலத்துலஇன்னிக்கு அவர் படற சிரமத்தை இனி எதிர்காலத்துல எவருமே படக் கூடாது.

நேத்திக்கு அவன் எப்படி வாழ்ந்தான் தெரியுமா? ஒண்டுக்குடித்தன வீடு. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சவன். இன்னிக்கு பகவான் அவனை எத்தனை பெரிய உசரத்துக்குக் கொண்டு வெச்சிருக்கார்னு பாத்தியா?

ஒருவர் தன் நிலை இழந்தாலும், இந்த உலகம் விமரிசிக்கும்.

ஒருவன் ஓகோ என்று உயர்ந்தாலும், பொறாமையால் விமரிசிக்கும்

பொருளாதார நிலையில் ஒருவருக்கு ஏற்றத் தாழ்வுகள் வரலாம்; போகலாம்.

ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலும் சுய கவுரவத்தை மட்டும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது.

பணம் சம்பாதிப்பதற்காகஜீவனம் நடத்துவதற்காகதர்மத்துக்கும் சத்தியத்துக்கும் கட்டுப்பட்டு எந்த ஒரு பணியையும் செய்யலாம்.

அதைத்தான் இந்த மாருதி ஸ்வாமி கவுரவம் பார்க்காமல் செய்து வருகிறார் என்று இத்தனை பக்தர்கள் கூடி இருக்கிற இடத்தில் மகா பெரியவா அவரைப் பற்றி வெகு உயர்வாய் திருவாய் மலர்ந்தார்.

இன்றைக்கு எவரது உதவியையும் ஏற்றுக் கொள்ளாமல், தன் ஜீவனம் ஓட வேண்டுமே என்பதற்காக ஒரு செருப்புக் கடையில் இந்த மாருதி ஸ்வாமி வேலை பார்க்கிறார் என்று மகா பெரியவா நேரடியாகச் சொல்லி முடித்தபோது மாருதி ஸ்வாமியாலும், சாரதாவாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

செருப்புக் கடையில் வேலை பார்க்கிறார் என்று சொன்னதற்காக கூனிக் குறுகவில்லை. இதைச் சொன்னதுசாட்சாத் கலியுக தெய்வமாயிற்றே!

மகா பெரியவா சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பின், ‘தனது இன்றைய நிலையை இந்தப் பரப்பிரம்மம் அறிந்து வைத்திருக்கிறதே? என்று நெகிழ்ந்து, மனமுருகி அந்த மகானை நோக்கி கரங்கள் உயர்த்தி வணங்கினார்கள் மாருதி ஸ்வாமியும் சாரதாவும்.

கண்களில் இருந்து வடியும் நீரை கணவன்மனைவி இருவராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை.

தன் முன்னால் கலங்கிய கண்களுடன் எதுவும் பேச முடியாமல்வார்த்தைகள் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியரை மீண்டும் ஆசிர்வதித்து விட்டு, அங்கு கூடி இருக்கிற பக்தர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார் மகா பெரியவா.

இன்னிக்குத் திடீர்னு ஒரு தம்பதியைக் கூட்டி, பக்கத்துல உக்காத்தி வெச்சு, எல்லோரையும் கூப்பிட்டு தம்பதி பூஜை பண்ணச் சொன்னேனேநீங்கள்லாம் பூஜை பண்ண அந்த தம்பதி எப்படிப்பட்டவானு உங்க எல்லோருக்கும் தெரியணும்கறதுக்காகத்தான் நான் இங்கே இவாளோட கதையைச் சொன்னேன்.

இருக்கறதுலே மிகப் பெரிய கைங்கர்யம் எதுன்னாஅடுத்தவா கஷ்டப்படறானு நமக்குத் தகவல் தெரிஞ்ச உடனே யாரும் கூப்டாம நாமளா ஓடிப் போய் அவாளுக்குப் பண்ற ஹெல்ப்தான். இதுக்கு ஈடு இணை இல்லே.

இங்கே தனவந்தர்கள் பலரும் கூடி இருப்பேள். ஒங்ககிட்ட பணமும் இருக்கும். உதவணும்கிற மனசும் இருக்கு.

மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியைப் போல இன்னிக்கு சமுதாயத்துல பல பேரு மிக உசந்த நிலைல வாழ்ந்து, திடீர் விதிங்கிற ஒரு சறுக்கல் காரணமா கஷ்ட ஜீவனம் நடத்திண்டு இருக்கலாம். நேர்மையா வாழற அவாளுக்கு வசதி படைச்சவா உதவணும்.

ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கஷ்டப்படறவா பல பேர் இருக்கா. இப்படிப்பட்டவா குடும்பம் இதற்கு மேலும் நொடிச்சுப் போகாம இருக்கஇவாத்து குழந்தைகள் படிக்கறதுக்கும், இவாத்துப் பெரியவர்களுக்கு ஒரு நோய் நொடின்னா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போறதுக்கும், இவா கிரஹத்து குழந்தைகளுக்கு ஒரு கல்யாணம்னா ஓடிப் போய் உதவறதுக்கும் பணக்காரா முன்வரணும்.

கஷ்டம் எங்கே இருக்குன்னு தெரிஞ்சாலும், அவாளுக்கு ஓடிப் போய் உதவி செய்யற மனசை அன்னை காமாட்சி ஒங்களுக்குக் கொடுக்கட்டும். இன்னிக்குக் காமாட்சியோட உத்தரவுப்படி இவாளை இங்கே கவுரவிச்சேன் என்று சொல்லி மாருதி ஸ்வாமிசாரதா தம்பதியருக்கு உத்தரவு கொடுத்தார் மகா பெரியவா.

இருவரும் மகா பெரியவாளுக்கு மீண்டும் நமஸ்காரம் செய்து விட்டு பிரசாதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

கூடி இருந்த பக்தர்கள் அனைவருமே அவர்களைப் பார்த்து இரு கரம் உயர்த்து, தங்களது அன்பையும் மரியாதையையும் தெரிவித்தனர்.