“அவசரம்னு சொல்லி ஆத்துக்கு அனுப்பு”

காருண்யமூர்த்தி, கருணா சமுத்திரம் என்று எத்தனை வார்த்தைகளைச் சொன்னாலும், அது மகா பெரியவாளுக்கு முற்றிலும் பொருந்தும்.

அந்தக் காலத்தைய கறுப்பு/ வெள்ளைப் புகைப்படங்களில் மகா பெரியவாளின் கருணை ததும்பும் விழிகளைப் பாருங்கள்பார்த்துக் கொண்டே இருங்கள்என்ன தோன்றுகிறது? ‘எதற்கு கவலைப்படாதேஉனது வலிகளையும், வேதனைகளையும் போக்கவே நான் இந்த அவதாரம் எடுத்திருக்கிறேன்உனக்கு என்ன குறை? தயங்காமல் என்னிடம் சொல் என்று நம்மைப் பார்த்து ஆதரவுடன் கேட்பதைப் போல் இருக்கும்.

அன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்த பக்தகோடிகள் அவரை நமஸ்கரித்து, பரவசப்பட்டுத் தங்களது குறைகளை, பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை அவரிடம் கொட்டினார்கள். தன் கருணைப் பார்வையை ஒரு புன்னகையோடு அவர்கள் மீது திருப்பி, ஆசிர்வதித்து வழியனுப்பி வைப்பார்

மகானின் பார்வை தங்கள் மீது பட்டவுடன்கஷ்டங்கள் அனைத்தும் தங்களை விட்டுத் தொலைந்ததாக பக்தர்கள் உணர்ந்தார்கள். நெகிழ்ந்தார்கள்.

அந்தக் கருணைக் கடல் இன்றைக்கும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரை உணர்ந்து கொள்ளக் கூடிய பக்குவமும் பக்தியும் நமக்கு வர வேண்டும்.

மகா பெரியவாளின் புகைப்படத்தின் முன்னாலோ, விக்கிரகத்தின் முன்னாலோ, அவர் குடி இருக்கும் சந்நிதிகளின் முன்னாலோ நின்று கொண்டு, நம்மிடம் பொதிந்து கிடக்கிற குறைகளை, ஏக்கங்களை அவரிடம் கொட்டினால், மனம் கசிந்து ஆனந்தமாக அருளாசி வழங்குவார். அதன் பிறகென்னகதிரவனைக் கண்ட பனி போல் எல்லா துன்பமும்பட் பட்டென்று விலகி விடும்.

எங்கெல்லாம் அந்த மகானுக்கு ஆராதனைகள் நடக்கின்றனவோ, எங்கெல்லாம் வேதம் ஒலித்துக் கொண்டிருக்கிறதோ, எங்கெல்லாம் பசுக்களுக்குப் பாதுகாப்பு இருந்து வருகிறதோ, எங்கெல்லாம் ஏழைகளின் துயர் துடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ, எங்கெல்லாம் நேர்மையும் நியாயமும் நிலவி வருகிறதோ, எங்கெல்லாம் சாஸ்திர சம்பிரதாயம் துளியும் பிசகாமல் பின்பற்றப்பட்டு வருகின்றனவோ, அங்கெல்லாம் மகா பெரியவா சத்திய சொரூபமாக இருந்து வருகிறார்.

ஆத்மார்த்தமான பக்தி நம்மிடம் இருந்தால், எல்லா இடங்களிலும் அவரது இருப்பை உணர முடியும்.

தற்போது நான் சொல்லப் போகிற இந்த சம்பவம் நடந்து சுமார் அறுபது வருடங்களுக்கு மேல் இருக்கலாம்.

மகா பெரியவா அப்போது கும்பகோணத்தில் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் முகாமிட்டிருந்தார்.

ஒவ்வொரு நாளும் திருவிழா போல் ஸ்ரீமடத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

காவிரி ஸ்நானம், காளஹஸ்தீஸ்வரர் தரிசனம், கும்பேஸ்வரர் தரிசனம் என்று திரளான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து கும்பகோணத்தில் குவிந்தார்கள்.

தரிசிக்க வருகின்ற பக்தர்கள் தினம்தோறும் அதிகாலையில் மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனம், அதன் பின் சந்திரமௌளீஸ்வர பூஜை, தீர்த்தப் பிரசாதம், பெரியவா நிகழ்த்துகிற உபன்யாசம், ஸ்ரீமடத்தில் நடக்கிற அன்னதானம் என்று அனைத்திலும் பங்கு கொண்டு பரமாச்சார்யாளின் பரிபூரண கிருபையைப் பெற்றுச் சென்றார்கள்.

அன்றைய தினமும் வழக்கம் போல் கூட்டம்.

மகா பெரியவாளுக்கு முன்னால் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி விட்டு, அவரிடம் இருந்து பிரசாதம் பெற்றுச் செல்வது எப்போதும் நடந்து வருகிற வழக்கம்.

ஜமுனா என்கின்ற பெண்ணும் (வயது 19) அப்போது ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தாள். இவள் வசித்தது காவிரியை ஒட்டிய சோலையப்பன் தெருவில்.

வீட்டில் இருந்து நடந்தே மடத்துக்கு வந்து விடலாம் என்பதால், ஜமுனா மட்டும் தனியாக மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தாள். வீட்டில் இவளது தங்கை கங்காவும் (வயது 2) இவளது பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் இருந்தனர் (ஜமுனாவுக்கும் கங்காவுக்கும் 17 வருடம் வித்தியாசம்).

மகா பெரியவாளுக்கு மிகவும் பரிச்சயமானநெருக்கமான அய்யாதுரை ஐயர் என்பவரின் மருமகள்தான் இந்த ஜமுனா. கும்பகோணத்தில் அய்யாதுரை ஐயர் வசிக்கின்ற தெரு வழியே மகா பெரியவா செல்லும்போதெல்லாம் அவரை அழைத்து பல விஷயங்களையும் பேசுவாராம். அய்யாதுரை ஐயருக்கு அப்படி ஒரு பாக்கியம் கிடைத்திருந்தது.

ஸ்லோகம் போன்ற பாராயணம் செய்வதென்றால், ஜமுனாவுக்கு அவ்வளவு குஷி. நிறைய கற்றுக் கொண்டிருந்தாள். மகா பெரியவாளைத் தரிசித்து ஆசிர்வாதம் பெறச் சென்ற ஜமுனாவுக்கு அங்கே ஒரு ஜாக்பாட் அடித்தது.

அதாவது அந்த நடமாடும் தெய்வத்தின் முன் அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்லக் கூடிய பெரும் வாய்ப்பு கிடைத்தது. ‘அய்யாதுரை ஐயரோட மருமாள் என்ற அறிமுகம் வேறு இவளுக்குக் கூடுதல் கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.

எனவே, மகா பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்து தனியே லலிதா சஹஸ்ரநாமம், அன்னபூர்ணாஷ்டகம், ராஜராஜேஸ்வரி அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லி முடித்த பிறகு புன்னகையோடு ஜமுனாவை ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த ஜமுனா, ”பெரியவாஎனக்கு இந்திராக்ஷி சிவ கவசம் பாராயணமா தெரியும். நான் இங்கே சொல்லலாமா? என்று கேட்டாள்.

எல்லாம் சொல்லலாம். தப்பு இல்லாம சொல்லணும். மந்திரத்தோட உச்சரிப்பு ஸ்பஷ்டமா (சுத்தமா) வரணும். நீதான் எல்லாம் நன்னா சொல்றியேசொல்லேன் என்று உத்தரவு கொடுத்தார் மகா பெரியவா.

அதன் பின் பலரும் சொல்வதற்குக் கஷ்டமானஇந்திராக்ஷி சிவ கவசத்தை மகா பெரியவாளும், எண்ணற்ற பக்தர்களும் கூடி இருக்கக் கூடிய சபையில் அட்சர சுத்தமாகச் சொல்ல ஆரம்பித்தாள் ஜமுனா.

மகா பெரியவா தரிசனத்துக்காகக் கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ஜமுனா சொல்லக் கூடிய அழகையும், பாங்கையும் பார்த்து வியந்தார்கள். தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே ஜமுனாவை வாழ்த்தினார்கள்.

இந்த ஸ்லோகம் பாராயணம் செய்தால், நோய் நொடி போன்ற எதுவும் நம்மை அண்டாது.

ஜமுனா இந்தக் கவசம் முழுவதையும் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், மகா பெரியவா செவி மடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனந்தம்!

எல்லாம் பூர்த்தி ஆயிற்று. மகா பெரியவாளின் ஆசிர்வாதமும் பிரசாதமும் கிடைத்தாயிற்று.

மதிய சாப்பாட்டுக்கு ஸ்ரீமடத்தில் இலை போடப்பட்டு விட்டது. எனவே, ஸ்லோகம் சொல்லி முடித்த கையோடு, சாப்பாட்டுக் கூடத்துக்கு ஓடி விட்டாள் ஜமுனா. தனியாகத் தான் மட்டும் வந்திருந்ததால், சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்கிற எண்ணமும் இவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

ஸ்ரீமடத்தில் விஸ்தாரமான இடத்தில் இலை போடப்பட்டு பக்தர்கள் அனைவரும் சாப்பிடத் தயாராக அமர்ந்திருந்தார்கள்.

பாயசம் துவங்கி அனைத்து பதார்த்தங்களும் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.

எல்லா அயிட்டங்களும் பரிமாறிய பின், வேத அந்தணர்கள் மந்திரம் சொல்லி வணங்கியதும் எல்லோரும் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

இலையில் விழுகின்ற உணவு அயிட்டங்களின் மீது பார்வை போவதும், அதன் பின் அடுத்து வரும் அயிட்டம் என்னவாக இருக்கும் என்று தொலைவில் வருபவர் மீது பார்வை செல்வதும் பசியுடன் இருப்பவர்களுக்கு இயல்பாக இருந்தது.

இதே வேளையில் மகா பெரியவா தன் அருகே இருந்த ஒரு சிப்பந்தியைசொடக்கு போட்டு அழைத்தார்.

பெரியவா என்று நமஸ்காரம் செய்து விட்டு நிமிர்ந்தார் அந்த சிப்பந்தி.

அவரைப் பார்த்த பெரியவா, ”இப்ப இந்திராக்ஷி கவசம் சொல்லிட்டுப் போனாளே ஒரு கொழந்தைஅய்யாதுரை ஐயரோட மருமாள்அவ அங்கே சாப்பிட உக்காந்துண்டுருப்பாரொம்ப அவசரம்னு சொல்லி அவளை சீக்கிரமா ஆத்துக்கு (வீட்டுக்கு) கிளம்பச் சொல்லு என்றார்.

அவ்வளவுதான்இதைக் கேட்ட அந்த சிப்பந்தி தன் நடையைத் துரிதப்படுத்தி, சாப்பாடு நடைபெறும் இடத்துள் புகுந்தார்.

இந்திராக்ஷி சிவ கவசத்தை ஜமுனா சொல்லிக் கொண்டிருந்த வேளையில் மகா பெரியவாளுக்கு அருகே இருந்து கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர் இந்த சிப்பந்தி என்பதால், அவருக்கு ஜமுனாவை அடையாளம் தெரியும்.

சாப்பாட்டுக்கு அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஜமுனாவைக் கண்டுபிடித்து விட்டார். அவளை நோக்கி வேகமாகச் சென்றார். மகா பெரியவா சொன்ன விவரத்தை அப்படியே சொன்னார்.

அதிர்ந்தாள் ஜமுனா. நல்லவேளையாக இன்னமும் சாப்பாட்டில் கை வைக்கவில்லை.

சத்திய சொரூபமான மகா பெரியவா சொன்னால், அது வேத வாக்கு. எனவே, யாரிடமும் சொல்லிக்காமல் கொள்ளாமல் எழுந்தாள். மகா பெரியவா இருக்கக் கூடிய திருச்சந்நிதியைப் பார்த்து மானசீகமாக ஒரு நமஸ்காரம் தெரிவித்து, ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தாள்.

விறுவிறுவென்று சாலையில் இறங்கினாள்.

சோலையப்பன் தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வீட்டில் ஏதாவது பிரச்னையா?

யாருக்கேனும் ஏதாவது ஆபத்தா?

பாட்டியைத் தனியாக விட்டு விட்டு வந்தோமே..

இப்படி இன்னது என்று தெரியாமல் பல குழப்பங்கள் மனதுள் ஓடிக் கொண்டிருந்தன.

சாலையில் ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தபோது ஜமுனாவின் அத்தை அதே ஓட்டமும் நடையுமாக எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்தார்.

பரபரப்புடன் வந்து கொண்டிருக்கும் அத்தையைப் பார்த்ததும், மகா பெரியவா உடனே தன்னை அனுப்பியதன் காரணத்தை ஓரளவு யூகிக்க முடிந்தது ஜமுனாவுக்கு.

ஜமுனாவை நெருங்கியதும், அத்தையின் முகத்தில் கொஞ்சம் நிம்மதி.

என்ன அத்தைஇவ்ளோ வேகமா வந்திண்டிருக்கேஎன்னைத் தேடியா?

ஆமாம்டீஉன்னைத் தேடித்தான் வந்திண்டு இருக்கேன். ஒந் தங்கை இருக்காளே கங்காஅவ அரப்புப் பொடியை அள்ளி எடுத்து முழுங்கிட்டாடீ என்று ஓவென அழ ஆரம்பித்தார் அத்தை.

ஜமுனாவின் தங்கை கங்கா, வீட்டில் யாரும் இல்லாத இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தவள், குளியலின்போது தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் அரப்புத் தூள் டப்பாவை எடுத்து, ‘நாட்டுச் சர்க்கரையாக்கும் என்று நினைத்து அள்ளி வாயில் போட்டுக் கொண்டு விட்டாளாம்.

பிடி அரப்புத் தூளை அள்ளி வாயில் போட்டுக் கொண்டதால், குழந்தையால் மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். பக்கத்தில் இருந்த அத்தை அப்போதுதான் கங்காவைக் கவனித்திருக்கிறாள். என்ன செய்வது, ஏது பண்ணுவது என்று தெரியாமல் ஜமுனாவைத் தேடி ஓடி வந்திருக்கிறாள்.

இதைக் கேட்டதும் ஜமுனாவின் வேகம் இன்னும் அதிகமானது. வீட்டில் தவித்துக் கொண்டிருந்த கங்காவைத் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு டாக்டரிடம் ஓடினாள்.

நல்லவேளைகொஞ்சம் லேட்டா வந்திருந்தா, குழந்தைக்கு மூச்சுத் திணறல் மேலும் அதிகமாகி, ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சொன்ன டாக்டர், கங்காவைக் காப்பாற்றி விட்டார்.

அதன் பிறகுதான் எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

தன்னை நம்பிய ஒரு பக்தையின் குடும்பத்தில் ஒரு ஜீவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறதே என்று இந்த மகானுக்கு எப்படித் தெரியும்?

இருந்த இடத்தில் இருந்தே அந்தக் கருணாசமுத்திரத்தை வணங்கினாள் ஜமுனா.