தஞ்சாவூர் வந்த காஞ்சி பிரசாதம்

புதிதாக நமக்கு அறிமுகமான ஒருவரைப் பார்த்த சில நிமிடங்களில், ‘இவர் நல்லவரா? கெட்டவரா? என்று நாம் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

நல்லவர் என்றால், நட்பைத் தொடரலாம்.

தீயவர் என்றால், திரும்பியே பார்க்க வேண்டாம்.

சம்பந்தப்பட்ட நபரின் முகத் தோற்றம், செயல்பாடுகள், பிறரிடம் பேசுகின்ற தொனிஇவற்றை வைத்து ஓரளவு அலசி ஆராய்ந்து நல்லவரா, கெட்டவரா என்று முடிவு செய்கிறோம்.

எது இத்தகைய முடிவை எடுக்கிறது?

நம் மனம்தான் இந்த முடிவை எடுத்து அமல்படுத்துகிறது.

ஆக, மனித மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

தீர்மானிப்பது மட்டுமல்ல. எந்தெந்த வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அடுத்தவரிடம் எப்படிப் பேச வேண்டும், வீட்டுக்குள் இருந்து கொண்டேஇல்லை என்று சொல்லலாமாஇப்படி எல்லாவற்றையும் மனம்தான் தீர்மானிக்கிறது.

ஒருவர் மனதுக்குள் நல்ல எண்ணங்கள் இருந்தால், அவர் நல்லவராக அடையாளம் காணப்படுகிறார். தீய எண்ணங்கள் இருந்தால், அவர் தீயவராகத் தெரிகிறார்.

இப்படி எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அற்புதமான மனதுக்குள் மகா பெரியவாளை நாம் உட்கார்த்தி வைத்து விட்டால், எல்லாமே மகா பெரியவாதானே!

அவரே நமக்குள் இருந்து எடுக்கும் எல்லா முடிவுகளும் நிச்சயம் நல்ல முடிவுகளாகத்தானே இருக்கும்?!

எனவே, மகா பெரியவா பக்தி நம்முள் வேரூன்றி விட்டால், எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவர் நமக்கு நல்லதையே செய்வார். நல்லதையே அடையாளம் காட்டுவார்.

அப்பேர்ப்பட்ட பக்தி கொண்ட ஒரு தம்பதியர் தஞ்சாவூரில் வசித்து வந்தனர்.

மகா பெரியவாதான் இவர்களுக்கு எல்லாமே!

இவர்கள் வீட்டு பூஜையறையில் மகா பெரியவாளின் அற்புதமான ஒரு படம் இருக்கும். கண்ணாடி ஃப்ரேம் போட்டது. தத்ரூபமாக மகா பெரியவாளே கண்களுக்கு நேராகக் காட்சி தருவது போல் இருக்கும்.

வீட்டில் எத்தகைய நிகழ்வு நடந்தாலும் சரிஎன்ன செய்தியாக இருந்தாலும் சரிஅந்தப் படத்தின் முன் நின்று நடந்ததை அப்படியே சொல்லி விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள் இந்தத் தம்பதியர்.

பெரியவா பக்தி பரிபூரணமாக இருந்தும், இவர்களுக்கு இருந்த ஒரே ஒரு குறைபுத்திர பாக்கியம் வாய்க்கவில்லை.

நமக்கும் அமையும் என்று திருமணமான காலத்தில் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் தங்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லை போலிருக்கிறதுஇனிமேலும் வாய்க்காது என்று தெளிந்து, மகா பெரியவா பக்தியை மேலும் தீவிரப்படுத்தினார்கள்.

சென்னையில் இருக்கின்ற மகா பெரியவா அத்யந்த பக்தர்கள்கூட வாரம் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று அந்த மகானை அன்றைக்குத் தரிசித்தார்களா என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

ஆனால், தஞ்சாவூரில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டு வாரம் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று தரிசித்துத் திரும்புவது இவர்களின் வழக்கம்.

காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சென்றதும், மகா பெரியவா அமர்ந்து கொண்டிருக்கிற இடத்தைத் தேடிச் செல்வார்கள். அங்கே போனதும், மகா பெரியவா அமர்ந்திருக்கின்ற திருச்சந்நிதிக்கு முன்னால், இரு கைகளையும் கூப்பிக் கொண்டு நெகிழ்வுடன் அமர்ந்திருப்பார்கள்.

அந்த தெய்வமும் ஒரு கட்டத்தில் இவர்கள் மேல் பார்வையைத் திருப்பி, ஒரு புன்முறுவலுடன் இவர்களை அழைத்துப் பக்கத்தில் அமர வைத்து, ஓரிரு வார்த்தைகள் பேசி அனுப்பும்.

கிடைத்த இந்த ஆனந்தத்தில், தங்களுக்கு ஜன்ம சாபல்யமே கிடைத்து விட்டதாகக் கணவனும் மனைவியும் பூரித்துப் போவார்கள்.

தரிசனம் தந்த பரவசத்திலேயே பஸ் ஏறி, தஞ்சாவூர் திரும்புவார்கள்.

ஒரு முறை கணவனுக்கு உடல்நிலை சரியில்லை. ஏதோ ஒரு சின்ன உடல்நலக் கோளாறில் ஆரம்பித்து, ஏகப்பட்ட குழப்பத்தில் கொண்டு போய் விட்டது.

கவலையோடு தஞ்சாவூரிலேயே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார் மனைவி.

உடனடியாக அனுமதிக்கச் சொன்னார்கள். எல்லா விதமான பரிசோதனைகளையும் செய்தார்கள். ஒரு சில மணி நேரம் கழித்து, ‘உங்கள் கணவருக்கு எண்ணற்ற பிரச்னைகள் இருக்கு. உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும் என்று சொல்லி விட்டு, மருந்து மாத்திரைகளை இவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் கொண்டு வந்து குவித்தார்கள்.

கணவரின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் என்னென்னமோ டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்கிறார்களேஉண்மையில் அவருக்கு என்னதான் பிரச்னை? என்று மனைவிக்குப் புரியவில்லை.

கூட இருந்து இவற்றை எல்லாம் புரியும் விதத்தில் சொல்வதற்கு அக்கம்பக்கத்தில் பெரிய நட்பு ஏதும் கிடையாது. கூப்பிட்டால், ஓடி வரக் கூடிய சொந்த பந்தங்களும் இவருக்கு இல்லை. எனவே, ஏகத்துக்கும் குழம்பினார். ஆனாலும், ‘இவற்றை எல்லாம் தாண்டி கணவர் நல்லபடியா வீடு திரும்பணுமே என்று கவலைப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட அன்றைக்கு மதியம் கணவனுக்கு சாப்பாடு எடுத்து வருவதற்காக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தார் மனைவி.

ஒரு அவசரக் குளியல் போட்டு விட்டு, பூஜையறையில் மகா பெரியவா படத்தின் முன் நின்றுவெனப் புலம்பினார் மனைவி.

எனக்கு என் கணவரை விட்டா யார் இருக்கா? அவருக்கு ஏதானும் ஒண்ணுன்னா என்னால எப்படித் தாங்க முடியும்? இப்படி ஒரு சோதனையை எனக்குக் கொடுத்துட்டு நீங்க பாத்துண்டு இருக்கேளேஎங்களுக்கு உங்களை விட்டா யாரு கதிஎங்களுக்குப் புத்திர பாக்கியம் இல்லேன்னு தெரிஞ்சுடுத்து. ஒங்ககிட்ட அதைக்கூட நாங்க கேக்கலியேவிதின்னு விட்டுட்டோம். இப்ப என் கணவருக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது, ஆமாம்சொல்லிட்டேன் என்று அன்புடன் மிரட்டுவது போல் குரல் உயர்த்திச் சொன்னார்.

கண்களைத் துடைத்துக் கொண்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தார். சாப்பாடு சுமந்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டார் மனைவி.

இதுவே ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. நித்தமும் சாப்பாடு எடுக்க வீட்டுக்குப் போவதும், மற்ற நேரங்களில் ஆஸ்பத்திரியில் கணவனுடன் இருப்பதும் என வாழ்க்கை மாறலாயிற்று

ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள் ஆயிற்று. ஆனால், டாக்டர்கள் எந்த விதமான நல்ல பதிலும் தரவில்லை. இந்த மனைவி எப்போது போய்க் கேட்டாலும், ‘அந்த பிராப்ளம்இந்த பிராப்ளம்இப்ப எதுவும் சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் சோகமான முகத்தையே காண்பித்தார்கள்.

ஒரு வாரம் ஓடியே போயிற்று.

வழக்கம்போல் இரவு ஆஸ்பத்திரியில் கணவருக்கு உதவியாகத் தங்கிய மனைவி, காலையில் வீட்டுக்குப் போய் குளித்து விட்டு, மகா பெரியவா படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி விட்டு, சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்தார்.

டாக்டர்கள் அந்த அதிர்ச்சித் தகவலை அப்போதுதான் சொன்னார்கள். ”அம்மாமனசைக் கொஞ்சம் திடப்படுத்திக்குங்கஒங்க கணவரோட உடல் நிலை ரொம்ப மோசமாயிடுச்சு. நாங்க எதுக்கும் உத்தரவாதம் தர முடியாது. இனிமே அவர் பொழைக்கறது எல்லாம் கடவுள் விட்ட வழி.

துடித்துப் போய் விட்டார். அழ நினைக்கிறார். தான் அழுதால், தனக்கு ஆறுதல் சொல்வதற்குக்கூடப் பக்கத்தில் சொந்த பந்தம் யாரும் இல்லையே என்கிற யதார்த்தம் புரிந்து, கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

படுக்கையில் கணவர் படுத்துக் கொண்டிருந்தாரே தவிர, அவரிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. சைகையும் இல்லை. சின்ன அசைவும் இல்லை.

மனைவியை அடையாளம் கண்டு கொள்கிறாரே தவிர, ஏதும் பேச முடியவில்லை. தான் ஏதோ ஒரு அபாயக் கட்டத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் கணவனுக்குப் புரிந்திருக்கிறது.

அன்றைய தினம் முழுவதும் ஆஸ்பத்திரியில்மகா பெரியவாமகா பெரியவா என்று அவரது திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தார் மனைவி.

அடுத்த நாள் காலை வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார். குளித்தார். சமையல் செய்தார். கணவனுக்கு உணவு தயார் செய்து வைத்தார்.

ஆஸ்பத்திரிக்குக் கிளம்புவதற்கு முன்னால், கண்கள் கலங்க மகா பெரியவா படத்தின் முன்னால் போய் நின்றார் மனைவி.

இப்போது பெரியவா மேல் பக்தி வரவில்லை. பதிலாக கோபம் வந்தது.

அதுவும் சாதாரணமான கோபம் அல்ல!

தன் கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பது புரிந்தவுடன் கண்ணகிக்கு வந்ததே கோபம், அது போன்ற ஒரு வேகம்.

இந்த மனைவியின் மனதில் இருக்கின்ற கோபம் முழுக்க வார்த்தைகளாக வெடித்து வெளியே விழுந்தன.

மகா பெரியவா படத்துக்கு முன்னால் நின்று கொண்டு, அவரைப் பார்த்து வார்த்தைகளைக் கொட்டினார்.

தினம் தினம் ஒங்ககிட்ட இப்படிக் கத்தறேனேகதறுகிறேனேகாதுல விழறதில்லியா? எனக்கு ஆதரவா இருக்கிற எம் புருஷனைக் காப்பாத்துன்னுதானே கேக்கறேன். வேற ஏதானும் சொத்து கேக்கறேனாசுகம் கேக்கறேனா? நகை நட்டுக்கு ஆசைப்படறேனா? இதைக்கூட நீங்க செய்ய முடியலேன்னா, அப்பறம் ஒங்க மேல எனக்கு எதுக்கு பக்தி? என்னோட மாங்கல்யம் நிலைச்சு, கணவர் எனக்கு நோய் நொடி இல்லாம வேணும். இதெல்லாம் ஒங்க காதுல விழறதா, இல்லியானே புரியலை. எனக்கு என்ன செய்யணும்னு ஆசைப்படறேளோ, அதைச் செய்ங்கோ என்று குரல் உயர்த்திச் சொல்லிக் கொண்டிருந்தபோது, யாரோ வாசல் கதவைமடார் மடார் என்று யாரோ தட்டுகின்ற ஓசை கேட்டது மனைவிக்கு.

புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘ஆளே இல்லாத வீட்டுக்கு யார் வந்து கதவைத் தட்டுவா? என்ற நினைப்பில் முகத்தை முந்தானையால் மீண்டும் துடைத்துக் கொண்டு, இயல்பான நிலைக்குத் திரும்பி வாசல் கதவைத் திறக்க

வெளியே

சிவப்பழமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

பஞ்சக்கச்சம் அணிந்து, திருநீறு தரித்து அறுபது வயதுள்ள நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். முகத்தைப் பார்த்தாலே அப்படி ஒரு சாந்தம்!

அவருடைய கையில் ஒரு மஞ்சள் பை.

பெண்மணியைப் பார்த்து விட்டு, ”நான் காஞ்சி ஸ்ரீமடத்துலேர்ந்து வரேன். மகா பெரியவா ஒங்ககிட்ட பிரசாதம் குடுத்துட்டு வரச் சொல்லி அனுச்சிருக்கா. உள்ளே வரலாமா? என்று அவர் கேட்டபோது, பெண்மணிக்கு நம்ப முடியவில்லை.

இப்போதுதான் திட்டி முடித்தோம். அடுத்த விநாடியே வாசலில் இப்படி ஒரு ஆச்சரியமாதான் சத்தியமான தெய்வம் என்று மகா பெரியவா நிரூபிக்கிறாரோ என்று வியந்து நின்றார்!

வாசலில் நின்று கொண்டிருக்கும் ஸ்ரீமடத்து அன்பர், இந்த வீட்டுப் பெண்மணியிடம் இருந்து எந்த விதமான ரியாக்ஷனும் வராததால், விரல்களை இப்படியும் அப்படியும் அசைத்து, அவரது கவனத்தைத் திசை திருப்பினார்.

மெள்ள சுய நினைவுக்கு வந்த மனைவி, இவரைக் கனிவுடன் பார்த்தார். ”மன்னிக்கணும்என்னவோ குழப்பத்துல இருந்துட்டேன். பெரியவாகிட்ட பிரார்த்தனை பண்ணிண்டிருந்தேன். திடீர்னு வந்து நீங்க கதவைத் தட்டிக் கூப்பிட்டதுல எனக்கு என்னனு புரியலை என்றார்.

பரவால்லை. பிரசாதம் குடுக்கணும். உள்ள வரலாமா?

ஆஹா, காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து வந்திருக்கும் இவரை வீட்டுக்குள் அழைக்க மறந்து போனேனேவாசலில் நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறேனே என்பது நினைவுக்கு வந்தவராக, ”வாங்கோவாங்கோ. உள்ள வாங்கோ என்று இரு கரங்களையும் நீட்டி அவரை உள்ளே அழைத்தார் பெண்மணி.

உள்ளே வந்தவர், வீட்டில் நாலா பக்கமும் ஒரு பார்வை பார்த்தார். பிறகு, ”மகா பெரியவா பிரசாதம் தந்துடறேன். வாங்கிக்குங்கோ என்றவர் வேத மந்திரங்களைச் சொல்லித் தன் கையில் இருந்த தட்டை பெண்மணியிடம் கொடுத்தார். ”மகா பெரியவா ஒங்ககிட்ட இந்தப் பிரசாதத்தைச் சேர்ப்பிக்கச் சொல்லி, என்னைக் காஞ்சிபுரத்துலேர்ந்து அனுச்சிருக்கார். நேத்திக்கு ராத்திரி கௌம்பினேன் என்று சொன்னவர், ”ரொம்ப சந்தோஷம். நான் வந்த வேலை முடிஞ்சிடுத்து. பொறப்படறேன் என்று கிளம்பும் விதத்தில் வாசலை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார்.

உடனே, ”அவ்ளோ தொலைவுலேர்ந்து வந்திருக்கேள். ஏதானும் சாப்ட்டுட்டுப் போங்கோ என்றார் பெண்மணி கனிவுடன்.

பரவால்லை என்றவர் வாசல் பக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பெண்மணிக்குத் திருப்தி இல்லை. அவருக்கு ஏதாவது வெகுமதி கொடுத்து அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். ”ஒரு நிமிஷம் இருங்கோ என்று அவரது நடையைத் தடுத்து நிறுத்தி, அவசரம் அவசரமாக ஓர் அறைக்குள் சென்றார். திரும்பும்போது கையில் கொஞ்சம் பணம் இருந்தது. அந்தத் தொகையை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்து அவரிடம் நீட்டினார்.

ஸ்ரீமடத்துச் சிப்பந்தி ஒரு புன்னகையுடன் தட்டை வாங்க மறுத்தார். ”பரவால்லை. பெரியவா பிரசாதத்தை உரிய நேரத்துல உங்ககிட்ட சேக்கறது மட்டும்தான் எனக்கு முக்கியம். நான் பொறப்படறேன் என்று சொல்லி விட்டு, சாலையில் இறங்கிக் கலந்தார்.

சாட்சாத் மகா பெரியவாளே தன் இல்லம் எழுந்தருளி, பிரசாதம் தந்து விட்டுச் சென்றதாக பூரித்தார் பெண்மணி.

வாசல் கதவை மீண்டும் தாள் போட்டு விட்டு, மகா பெரியவா படம் இருக்கும் பூஜையறைக்கு வந்தார் பெண்மணி. ஆனந்தக் கண்ணீர் பெருக, அன்பர் கொடுத்த பிரசாதத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அதில் இருந்த விபூதி, குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டார். மல்லிகைப்பூவைத் தலையில் சூடிக் கொண்டார்.

மகா பெரியவா திருவுருவப் படத்தின் முன் நின்று, அவரைப் பார்த்து, ”உங்க காதுல விழலையானு உங்களோட படத்துக்கு முன்னாடி நான் நின்னு அழுது புலம்பி கோபத்தோட கேட்டது ஒங்க காதுல விழுந்துடுத்து போலிருக்கு. அதான் அடுத்த நிமிஷமே பிரசாதத்தைக் கொடுத்து அனுப்பி, ‘நா ஒங்கூடவே இருக்கேன்னு சொல்லாம சொல்லி இருக்கேள். இதையே ஒரு நல்ல சகுனமா எடுத்துக்கறேன் பெரியவா. உங்களோட ஆசிர்வாதத்தால என் கணவர் எப்படியும் பொழச்சுடுவார்னு நம்பிக்கை இருக்கு. டாக்டர்களுக்கும் மேல பெரிய டாக்டரா நீங்க இருக்கேளேநீங்க இருக்கறச்சே எனக்கு என்ன பயம்?! என்று மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுத் தன் கண்ணீரையே நன்றிக் காணிக்கை ஆக்கினார்.

சமையல்கட்டுக்குள் சென்று சாப்பாட்டை எடுத்துக் கொண்டார். கூடவே, ஸ்ரீமடத்தில் இருந்து வந்த பிரசாதத்தையும் மறக்காமல் எடுத்துக் கொண்டார்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டார்

மருத்துவமனைக்குள் கால் வைத்ததுமே, முந்தின நாள் மருத்துவர்கள் தன் கணவருக்குக் கெடு வைத்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே அவருடைய மனதுக்குள் ஒலிக்கத் துவங்கின. இவை நினைவுக்கு வந்ததும், பெண்மணியின் முகம் பிரகாசத்தை இழந்தது.

இருந்தாலும், ‘மகா பெரியவாமகா பெரியவா என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டே, கலங்குகிற கண்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைவதற்காக வராந்தாவில் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தார். அப்போது பணியில் இருந்த ஒரு நர்ஸ் இவரிடம் வந்தார்.

நர்ஸ், ”வாங்கம்மாஉங்களைத்தான் எதிர்பார்த்திட்டு இருக்கேன். நீங்க வந்த உடனே சீஃப் டாக்டர் ஒங்களை வரச் சொன்னார். பாத்துட்டு அப்பறமா உங்க கணவரோட ரூமுக்குப் போங்க என்றவள், இங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

உடனே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது பெண்மணிக்கு. ‘என்னவாக இருக்கும்? என்று மனம் இல்லாததையும் யோசிக்க ஆரம்பித்தது.

மனதில் கவலையைச் சுமந்து சீஃப் டாக்டர் அறைக்குள் வேகமாக நுழைந்தார்.

இவரைப் பார்த்ததும் வரவேற்று, எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார் அவர்.

என்ன சொல்லப் போகிறாரோ, ஏது சொல்லப் போகிறாரோ என்ற தவிப்புடன் டாக்டரைப் பார்த்தார் பெண்மணி.

நீங்க வந்ததும், உடனே உங்களை வரச் சொன்னேன். ஒரு குட் நியூஸ் என்றார் சீஃப் டாக்டர் சுற்றி வளைக்காமல்.

அதுவரை கவலையோடு இருந்த பெண்மணியின் முகம் சட்டென்று மலர்ச்சியானது. ”என்ன டாக்டர்சொல்லுங்க என்றார் விழிகள் விரிய.

ஒங்களோட கணவருக்கு ஒரு கெடு விதிச்சிருந்தோம் இல்லியா? அது அவரது உடல்நிலையைப் பல்வேறு கோணத்துல சோதனை பண்ணி நாங்க சொன்ன ரிப்போர்ட்.

ஆனா இன்னிக்குக் காலைல, அபாயக் கட்டத்தில் இருந்து அவர் மீண்டு விட்டாராங்கறதுக்காக அவரை எல்லா விதமான சோதனைக்கும் உள்ளாக்கிப் பார்த்தோம். வாட் மிராக்கிள்நேத்திக்கு சோதனை பண்ணினதுக்கும், இன்னிக்குப் பண்றதுக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள். எல்லாமே எதிர்பாராத நல்ல மாற்றங்கள். யெஸ்இன்னிக்கு அவரை நாங்க சோதனை பண்ணிப் பாத்தப்ப, அவரோட உடல்நிலை ரொம்பவே நல்லா இருக்கறதா சோதனை முடிவுகள் சொல்லுது.

இப்ப அவர் பேசுறார். நல்ல நினைவு வந்திடுச்சு. ரொம்ப நார்மலா இருக்கார். இப்படி ஒரு அதிசயம்அதுவும் இருபத்துநாலு மணி நேரத்துக்குள் நடக்கறதுக்கு எங்க மருத்துவ முடிவுகள்படி சாத்தியமே இல்லை என்று சீஃப் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தபோது, இருந்த இடத்தில் இருந்தபடியேமகா பெரியவாமகா பெரியவா என்று இரு கைகளையும் கூப்பி வணங்க ஆரம்பித்தார் பெண்மணி.

அடுத்து டாக்டர் ஏதோ பேசத் துவங்குவதற்கு முன், பெண்மணி குறுக்கிட்டு, ”டாக்டர்எல்லாமே நான் கும்பிடற கலியுக தெய்வம் காஞ்சி மகா பெரியவாளோட அற்புதம் டாக்டர். இன்னிக்குக் காலைல அந்த தெய்வத்துக்கிட்டேர்ந்து என் வீட்டுக்குப் பிரசாதம் வந்தது. அது என் கைக்கு வீட்டுக்கு வந்த நேரத்துலதான் இங்கே இத்தனை மாற்றங்கள் நடந்திருக்கு. அந்த மகான்தான் என் கணவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்திருக்கார். இதுல எள்ளளவும் சந்தேகமில்லை என்று பெண்மணி அழுத்தமாகவும் ஆனந்தமாகவும் சொன்னார்.

சீஃப் டாக்டர், ”நிச்சயமாஅதான் நானே சொல்லிட்டேனேமிகப் பெரிய சக்திதான் அவரைக் காப்பாத்தி இருக்கு. இனிமே நீங்க கவலைப்படத் தேவையில்லை. நாளைக்கே அவரை டிஸ்சார்ஜ் பண்ணி, வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம் என்று கைகளைக் கூப்பி சந்தோஷப்பட்டார் சீஃப் டாக்டர்.

தன்னையே நம்பி இருப்பவர்களுக்கு மனிதர்கள் உதவுகிறார்களோ இல்லையோஅவர்கள் வணங்குகிற காஞ்சி மகா பெரியவா போன்ற மகான்கள் நிச்சயம் உதவிக்கு வருவார்கள். காப்பாற்றுவார்கள். கண்ணீரைத் துடைப்பார்கள்.

இது இந்த தஞ்சாவூர் பெண்மணியின் வாழ்வில் நிரூபிக்கப்பட்டு விட்டது.

இதுபோல் எத்தனையோ குடும்பங்கள், வியாதிமருத்துவமனை என்று கண்ணீருடன் நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது அத்தகைய குடும்பங்களைக் காப்பாற்றியது மகா பெரியவாளின் பிரசாதமும் அருளும்தான்!

மண்ணை ஆள்வதை விட, மண்ணில் வாழ்பவர்களுக்கு சகல தேவைகளையும் எவர் ஒருவர் நிறைவேற்றுகிறாரோ, அவரே காலங்கள் கடந்தும் போற்றப்படுகிறார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஆதி சங்கரருக்கு இன்றைக்கும் விழா எடுக்கிறோமே!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமானுஜருக்கு ஆராதனைகள் செய்கிறோமே!

காஞ்சி மகா பெரியவா இன்றைக்கு ஸித்தி ஆகி விட்டாலும், அவரிடம் நாம் வைக்கின்ற ஒவ்வொரு கோரிக்கையையும், பிரார்த்தனையையும் அந்த மகான் செவி மடுக்கிறார். தன் பக்தனைக் காத்து வருகிறார்.

அவரை ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கையோடும் வணங்கி வருகிற அவரது பக்தர்கள் இன்றைக்கும் அடைந்து வருகிற ஆனந்தம்சந்தோஷம்நிம்மதிஇவற்றுக்கு எத்தனை விலை கொடுத்தாலும் வெளியே கிடைக்காது.

நம்பிச் சரண் புகுந்தால்எத்தகைய காலத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும், உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஓடி வந்து காப்பார் மகா பெரியவா!