தெய்வங்களுக்கு அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்து, அதை தரிசித்து பரவசப்படுவதும் ஆனந்தப்படுவதும் பக்தகோடிகளின் வழக்கம்.
எனவேதான், தெய்வத் திருமேனிகளுக்கு விதம் விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்துகிறார்கள். பால், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்களைக் காணும்போது மனம் நெகிழும்.
தெய்வங்கள் அணிந்திருக்கிற வஸ்திரங்களை (ஆடைகளை) அடிக்கடி மாற்றுகிறார்கள்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை விதம் விதமான ஆபரணங்களைக் கொண்டு தெய்வ விக்கிரகங்களை அழகுபடுத்துகிறார்கள்.
அதிலும் பெண் தெய்வம் என்றால், ஆபரணங்களுக்குக் கேட்க வேண்டுமா? தங்கமும், வைரமுமாக இழைத்து வைப்பார்கள்.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி என்று அம்மன் திருமேனிகளைத் தரிசிக்கும்போது சந்நிதியை விட்டு வெளியே வர மனமே வராது.
சென்னை மாநகரில் மயிலாப்பூரில் அமைந்துள்ள பிரதான ஆலயம் ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம்.
அன்னை கற்பகாம்பாளைத் தரிசிக்க அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த அம்மனுக்கு எத்தனையோ ஆபரணங்கள் இருந்தாலும், அவற்றுள் தங்கத்தினால் அமைந்த லலிதா சஹஸ்ரநாம காசு மாலை வெகு சிறப்பு. அம்மனே கேட்டு வாங்கிய காசு மாலை என்பதால், இதற்கு வெகு சிறப்பு.
இந்தக் காசுமாலைக்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. கதையின் நாயகன் காஞ்சி மகா பெரியவா!
வாருங்கள், காலங்களைக் கடந்தும் நம்மை வியக்க வைக்கும் அற்புதமான அந்த நிகழ்வைப் பார்ப்போம்.
சிவன் என்றால், சிவ சஹஸ்ரநாமம் விசேஷம்.
விஷ்ணு என்றால், விஷ்ணு சஹஸ்ரநாமம்.
அம்பாள் என்றால், லலிதா சஹஸ்ரநாமம்.
அம்மன் ஆலயத்தில் அமர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் படிப்பது, கேட்பது பூர்வ ஜன்ம புண்ணியம்.
மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கக் கூடிய பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு ‘கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி‘ என்கிற அமைப்பு 1950-ஆம் ஆண்டு துவங்கியது.
இந்த கோஷ்டியின் உறுப்பினர்கள் அனைவரும் தினமும் மாலை ஆலயம் வருவார்கள். கற்பகாம்பாளையும், கபாலீஸ்வரரையும் தரிசித்து விட்டு, ஆலயத்தில் தற்போது சொற்பொழிவு மண்டபம் அமைந்துள்ள இடம் அருகே – பக்தர்கள் எவருக்கும் தொந்தரவு தராத வண்ணம் அமர்வார்கள். அதன் பின் ஸ்ரீகற்பகாம்பாளை மீண்டும் ஒரு முறை மனதார பிரார்த்தித்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது வழக்கம். இங்கே அமர்ந்து கொண்டு பாராயணம் செய்யும்போது அவ்வப்போது அம்மனையும் பார்த்து தரிசிக்கலாம்.
இந்தக் குழுவின் தலைவியாக முத்துலட்சுமி அம்மாள் என்கிற குரு பாட்டியும், செயலாளராக ஆனந்தவல்லியும் இருந்தனர். அப்போதே சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உண்டு.
தினமும் பாராயணம் செய்வது தவிர, ஆலயத்தில் அவ்வப்போது நடக்கும் உத்ஸவங்களின்போது தங்களால் ஆன கைங்கர்யத்தையும் இந்த ‘லலிதா சஹஸ்ரநாம கோஷ்டி‘ செய்து வந்தது. அதாவது ஆலய அபிஷேகத்துக்குத் தேவையான திரவியங்களை சேகரிப்பது, மலர் மாலைகளைத் தொடுத்துத் தருவது – இப்படி எத்தகைய ஒரு பணியிலும் ஆத்மார்த்தமாக இருந்தனர்.
இந்தக் குழுவினர் லலிதா சஹஸ்ரநாமத்தை மாலை வேளையில் பாராயணம் செய்வதைக் கேட்பதற்கென்றே பக்தர்கள் பலரும் சிரத்தையுடன் அமர்ந்திருப்பார்கள்.
அன்னை கற்பகாம்பாளின் கருணையால் இந்தப் பாராயணம் எந்த ஒரு நாளும் தடைபட்டதே இல்லை. குழுவில் இருக்கக் கூடிய ஒரு சிலர் ஏதோ பணிகள் காரணமாக ஆலயத்துக்கு வர முடியவில்லை என்றாலும், ஒருவருக்கு ஒருவர் தகவல் தெரிவித்து, மற்றவர்கள் வந்து பாராயணத்தை நடத்தி விடுவார்கள்.
இந்தக் கோஷ்டி துவங்கி சுமார் 20 வருடங்கள் கழித்து – அதாவது 1970-ஆம் ஆண்டு ஒரு நாள் குரு பாட்டியின் கனவில் அன்னை கற்பகாம்பாள் எழுந்தருளினாள்.
குரு பாட்டிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. கற்பகாம்பாளை நமஸ்கரித்தார். இரண்டு கன்னத்திலும் விரல்களால் மாறி மாறி அறைந்து கொண்டு, கண்களில் நீர் வழிய… காட்சி தந்த அன்னையை ஆராதித்தார்.
அதன் பின் கற்பகாம்பாள், ”நீயும் உன்னோட கோஷ்டியினரும் தினமும் என் சந்நிதிக்கு முன்னால லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணிண்டு இருக்கேள். ரொம்ப சந்தோஷம். விசாலாட்சிக்கும் காமாட்சிக்கும் இருப்பது போல எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசு மாலை வேணும். செஞ்சு போடறியா?” என்று கனவில் கேட்டிருக்கிறாள்.
ஆடிப் போனார் குரு பாட்டி. அம்பாளே கனவில் வந்து இப்படிக் கேட்டவுடன், ”போடறேன் தாயே… கற்பக விருட்சம் போல நீ கூட இருக்கறப்ப எங்களுக்கு என்ன கவலை… தாராளமா பண்ணிப் போடறோம். எவருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கியே!” என்று குரு பாட்டி உற்சாகமாகச் சொன்னதும், அம்பாள் பொசுக்கென்று மறைந்து போனாள். கனவு கலைந்தது.
அடுத்த நாள் தன் கோஷ்டியைச் சேர்ந்த அனைவரையும் ஆலயத்தில் சந்தித்து, முந்தின நாள் தான் கண்ட கனவைப் பற்றி விஸ்தாரமாகச் சொன்னார் குரு பாட்டி.
ஆனந்தவல்லி உட்பட குழு உறுப்பினர்கள் அனைவரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ”இருபது வருஷமா அம்பாளுக்கு முன்னால லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிண்டு இருக்கோமே… நம்மளோட இந்த பக்திக்கு இன்னிக்குத்தான் அம்பாள்கிட்டேர்ந்து பரிபூரண அனுக்ரஹம் நமக்குக் கெடைச்சிருக்கு. காசு மாலை பண்றதுக்கு அம்பாள் நம்மளைத்தான் செலக்ட் பண்ணி இருக்கா. அதனால, நாம எல்லோரும் எப்பாடு பட்டாவது தங்கத்துல லலிதா சஹஸ்ரநாம காசுமாலை பண்ணிப் போட்டே ஆகணும்” என்று ஒரு பெண்மணி குரல் தழும்பச் சொல்ல… அனைவரும் அதை ஆமோதித்தனர்.
”அம்பாள் நம்மகிட்ட கேட்டிருக்கிறது சாதாரணமான காசு மாலை இல்லை. லலிதா சஹஸ்ரநாம காசு மாலை. இதைத் தயார் பண்ண ஆயிரம் காசு வேணும். அதுல, சஹஸ்ரநாமத்தைப் பொறிக்கணும். இது பெரிய வேலை. பலரோட பங்களிப்பும் இதுல இருக்கணும்” என்று குரு பாட்டி சொன்னார்.
”ஆமாம்… நல்ல மனசு கொண்டவா பல பேரு இந்தக் கற்பகாம்பாளுக்குப் பக்தர்களா இருக்கா. அவாளுக்கும் நம்மைப் பத்தி நன்னா தெரியும். அவாளை எல்லாம் நாம பார்த்து, காசு மாலை விவரம் சொல்லி நன்கொடை கேக்கணும். இந்தக் காசு மாலையை நன்னா பண்ணி, அம்பாளுக்கு சார்த்தணும்” என்றார் ஆனந்தவல்லி உருக்கமாக.
எல்லா உறுப்பினர்களும் ஏக மனதாக ஆமோதித்து, அடுத்து வந்த நாள் முதல் நன்கொடை வசூலிக்கும் பணி துவங்கியது. ஆனால், இவர்களுக்குத் தேவையான தொகை சேரவே இல்லை. அசராமல் உழைத்தார்கள். ஓடினார்கள். ஆனால், பலன் இல்லை.
வருடங்கள் ஓடின. கனவு வந்து எட்டு வருடங்கள் முழுமையாக ஓடியும், இவர்களால் காசு மாலைக்குத் தேவையான தங்கத்தைச் சேர்க்க முடியவில்லை.
காரணம் – இதில் இருக்கின்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களால் பெரும் தொகையை நன்கொடையாக வழங்க முடியாது. குடும்பச் சூழல் அப்படி!
தவிர, எவர் எவர்களிடம் இருந்து பொருளுதவி தாராளமாகக் கிடைக்கும் என்று இவர்கள் திட்டமிட்டார்களோ, அங்கிருந்தெல்லாம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
”என்னது… அம்பாள் உத்தரவு கொடுத்து இத்தனை வருஷம் ஓடியாச்சு… தேவையான அளவுக்குப் பணமும் பொன்னும் சேரலை. ஒருவேளை ‘இந்தக் காரியம் கைகூடாது‘னு நாமெல்லாம் மெத்தனமா இருக்கோமோனு தோணுது. காசு மாலை ப்ராஜெக்ட் நிறைவேறுவதற்கு ஏதேனும் ஒரு வழி பண்ணியே ஆகணும்” என்று ஒரு உறுப்பினர் சொன்னார்.
கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசவில்லை.
ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் ஒரு உறுப்பினர், ”இந்தக் காசுமாலையை கற்பகாம்பாளுக்கு நாம சமர்ப்பிக்க முடியுமா, முடியாதானு சொல்ல ஒருத்தராலதான் முடியும்” என்றார் ஆணித்தரமாக.
சற்றுத் துவண்டு போயிருந்த உறுப்பினர்கள் அனைவரும், ”அப்படியா… யார் அவர்? யார் அவர்? சொல்லு, நாம எல்லோருமே போய் அவரைப் பார்த்துக் கேட்டுடலாம்” என்று கோரஸாகக் குரல் எழுப்பினர்.
”நம்ம குழப்பத்துக்கு சரியான பதில் தரக் கூடிய அந்த ஒருத்தர் – காஞ்சி மகா பெரியவாதான்” என்று அந்த உறுப்பினர் சொல்ல… எல்லோரது முகமும் பிரகாசமானது.
”வாஸ்தவம்தான். காஞ்சி மகா பெரியவாகிட்ட போனா அவர் சந்நிதியில நிச்சயம் நமக்கு ஒரு உத்தரவு கெடைக்கும். அந்த மகானோட தீர்க்க தரிசனத்துல நமக்கு நல்ல பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கு” என்று குரு பாட்டி சொன்னார்.
அனைத்து உறுப்பினர்களும் இதை ஆமோதித்தனர்.
காஞ்சிபுரம் செல்வதற்கு உண்டான நாளையும் நேரத்தையும் அதே இடத்தில் தீர்மானித்தனர்.
காஞ்சி சென்று மகா பெரியவாளைத் தரிசிப்பதற்குக் குறிக்கப்பட்ட தினம்.
அன்றைய தினம் குரு பாட்டி, ஆனந்தவல்லி மற்றும் சில உறுப்பினர்கள் இணைந்து காஞ்சிபுரம் சென்றனர்.
அன்றைக்கென்று பார்த்துக் காஞ்சி ஸ்ரீமடத்தில் கூட்டமான கூட்டம். மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி வாங்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்களில் ஒரு சில பக்தர்கள் இரண்டு மூன்று நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்தது.
குரு பாட்டிக்கும், ஆனந்தவல்லிக்கும் ‘இன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க முடியுமா… நாம் வருவது குறித்து ஏற்கெனவே தகவலும் அனுப்பவில்லை… நமக்கு முன்னே வந்த எண்ணற்ற பக்தர்கள் பெரியவா தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்… இவர்களைத் தாண்டி நமக்கு எப்படி அனுக்ரஹம் கிடைக்கும்?‘ என்று பலமான யோசனை. சிப்பந்திகள் மூலமாக மகா பெரியவாளுக்குத் தகவல் அனுப்பி தரிசிக்கலாம் என்றால், அதுவும் இந்த வேளையில் சாத்தியம் இல்லாமல் போயிற்று.
பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்த இவர்கள் அன்னை கற்பகாம்பாளையும், மகா பெரியவாளையும் பிரார்த்தித்துக் கொண்டிருந்த வேளையில் – அந்த அதிசயம் நடந்தது.
மடத்துச் சிப்பந்தி ஒருவர் இவர்களை நெருங்கி, ”பெரியவா உங்களை உடனே வரச் சொன்னா… வாங்கோ” என்று அழைக்க… எவருக்கும் நம்ப முடியவில்லை.
குரு பாட்டிக்கும் ஆனந்தவல்லிக்கும் விழியோரம் ஈரம் கசிந்தே விட்டது. ”எங்களையா வரச் சொன்னா… எங்களையா வரச் சொன்னா…” என்று மீண்டும் இவர்கள் கேட்டபோது, ”பெரியவா ஒங்க அடையாளம் எல்லாம் சொல்லித்தான் என்னை அனுச்சிருக்கார். உடனே வாங்கோ” என்று வார்த்தைகளில் அவசரம் காட்டினார்.
இதை அடுத்து அந்தச் சிப்பந்தி முன்னால் நடக்க… அனைவரும் பின்தொடர்ந்து சென்றனர்.
குரு பாட்டி, ஆனந்தவல்லி மற்றும் இவர்களுடன் வந்த ‘கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி‘ உறுப்பினர்கள் அனைவரும் மகா பெரியவா அமர்ந்து அருள் பாலித்து வரும் திருச்சந்நிதியைப் பரவசத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கும் முன்னால் வந்த எத்தனையோ பக்தகோடிகள் ‘பெரியவா தரிசனம் கிடைக்குமா? அந்த மகானின் பார்வை நம் மீது திரும்புமா?‘ என்று ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் எத்தனையோ மணி நேரங்களாகக் காத்துக் கிடக்கின்றனர்… ஆனால், எங்கோ பின்னால் நின்று கொண்டிருந்த இவர்களுக்கு உத்தரவாகி, இதோ மகா பெரியவாளுக்கு முன்னால் அழைத்து வரப்பட்டு அந்த மகானுக்கு முன்னால் பரவசத்துடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.
மகா பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் பலரும் உணர்ச்சி மேலீட்டின் காரணமாக வைத்த கண்களை எடுக்காமல் பார்த்து மாறி மாறி கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தனர்.
கயிலையில் இருந்து சர்வேஸ்வரனே காஞ்சியில் எழுந்தருளி அமர்ந்தது போல் அப்படி ஒரு சாந்தமான தோற்றம். கயிலையைக் காக்கும் பூத கணங்களைப் போல் இங்கே ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் மகா பெரியவாளைச் சுற்றி நின்று கர்மமே சிரத்தையாகக் காணப்பட்டனர்.
மகானது கண்ணசைவுக்கும், விரலசைவுக்கும், முக அசைவுகளுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அவரது திருமுகத்தையே பார்த்தபடி அடுத்தடுத்து வரப் போகும் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
என்னென்னவோ சோகங்களை மனதில் சுமந்து, தீர்வுக்காக அபயக் கரம் நாடி வந்தவர்களுக்கு அருள் வழங்கும் விதமாக மகானின் இரு திருக்கரங்களும் அப்படியும் இப்படியும் பக்தர்களைப் பார்த்து ஆசிர்வதித்தபடி இருந்தன.
கருணையும் அன்பும் ததும்பும் இந்தப் பார்வை தங்கள் மேல் திரும்பாதா என்கிற ஏக்கத்துடன் இரு கரம் கூப்பிய நிலையில் எத்தனையோ பக்தர்கள், மகா பெரியவாளுக்கு முன்னால் விழிகளின் ஓரம் ஈரம் கசிய நின்று கொண்டிருந்தார்கள்.
மகா பெரியவாளுக்கு வெகு அருகே நின்று கொண்டிருக்கும் குரு பாட்டி, ஆனந்தவல்லி குழுவினர் தங்களை எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்று ஆளாளுக்கு யோசித்து, வார்த்தைகளை மனசுக்குள் மெள்ளக் கோத்துக் கொண்டிருந்த வேளையில், அதற்குக் கொஞ்சமும் அவகாசமே தரவில்லை நடமாடும் தெய்வம்.
‘கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி‘ பக்தைகள் அனைவரையும் தன் கருணை விழிகளால் கூர்ந்து பார்த்து விட்டு, மகா பெரியவா சொன்ன வார்த்தைகள் அனைவரையும் வியக்க வைத்தது.
”வாங்கோ… மயிலாப்பூரா…? காசுமாலை தயார் பண்றதுக்குப் போதிய பணமும் பொருளும் இன்னும் சேரலியோ?”
– மகா பெரியவா வெகு சாதாரணமாக இப்படிக் கேட்டதைப் பார்த்து விட்டுப் பிரமித்துப் போனார்கள் குரு பாட்டியும் ஆனந்தவல்லியும்.
எந்த விஷயத்தை மகானிடம் சொல்ல வேண்டும் என்று சென்னையில் இருந்து ஆர்வத்துடன் கோஷ்டி சேர்த்துக் கொண்டு புறப்பட்டு வந்தார்களோ, அந்த விஷயத்தை காஞ்சி பெரியவாளே பட்டென்று உடைத்து ஆரம்பித்து விட்டார்.
இதை அடுத்து இவர்கள் பேசுவதற்கு வார்த்தைகள் வராமல் தவித்தபடி கைகளைக் கூப்பியபடியே நடமாடும் தெய்வத்தைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.
இவர்களின் மவுனத்தைப் பார்த்த மகா பெரியவா, ”நீங்க எதுக்காகக் கவலைப்படணும்? அம்பாள்தானே ஆசைப்பட்டு ஒங்ககிட்ட கேட்டிருக்கா… இது அவளோட கார்யம். அதுக்கு அவளே ஒங்களுக்கு அருள் பண்ணுவா” என்று இவர்கள் மனதில் உள்ளதை அப்படியே மகா பெரியவா எடுத்துச் சொன்னபோது, குரு பாட்டியின் கனவில் கற்பகாம்பாள் வந்து சொன்னது உண்மைதான் என்று நிரூபணம் ஆனது.
சஹஸ்ரநாம கோஷ்டி உறுப்பினர்களின் முகத்தில் ஒரு சந்தோஷம். ‘ஆஹா… இந்தக் காசு மாலை பணிகள் எங்கே தடைபடுமோ என்று பயந்தோம். நல்லவேளை… கற்பகாம்பாள் அனுக்ரஹம் நமக்கு இருக்கிறது…‘
குரு பாட்டி, ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்கள் ஏதும் பேசாமல் இருப்பதைப் பார்த்த மகா பெரியவா, ”மயிலாப்பூர் கற்பகாம்பாளுக்கு நீங்க செஞ்சு போடப்போற காசு மாலை இருக்கே… அது ரொம்ப ஒசத்தியானது. காஞ்சிபுரத்துல காமாட்சிக்கும் காசில விசாலாட்சிக்கும் இருக்கறது பணக்காரா பண்ணிப் போட்ட காசு மாலை. ஆனா, நீங்க கற்பகாம்பாளுக்குப் பண்ணிப் போடப் போற காசு மாலை ஒங்க அத்தனை பேரின் பக்தி, அன்பு, உழைப்பு – இவை எல்லாம் கலந்து அர்ப்பணிக்கப் போற அற்புதமான மாலை” என்று புன்னகையுடன் சொன்னார்.
இதைக் கேட்டதும் உறுப்பினர்கள் அனைவரும் நெகிழ்ந்தனர். ”சத்தியம் பெரியவா… சத்தியம் பெரியவா” என்று அதை ஆமோதித்தனர்.
அடுத்து மகா பெரியவா குரு பாட்டியையும், ஆனந்தவல்லியையும் ஆழ்ந்து பார்த்தார். ”நீங்கள்லாம் ஒண்ணு பண்ணுங்கோ… ‘கற்பகம் சுவாசினி சங்கம்‘னு பேர் வெச்சு நிறைய சுவாசினி பூஜை பண்ணுங்கோ. பாலா திரிபுரசுந்தரிக்கும் நிறைய பூஜை பண்ணுங்கோ. அம்பாள் கேட்டது எல்லாம் தானா நடக்கும்” என்று சொல்லி இவர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கி, பிரசாதம் தந்தார்.
பிறகென்ன… அம்பாள் கனவில் சொன்னதை காஞ்சியில் பரமேஸ்வர சொரூபமாக – நடமாடும் தெய்வமாக விளங்கி வரும் மகா பெரியவா ஆமோதித்து விட்டார்.
மயிலாப்பூர் திரும்பினார்கள்.
பெரியவா உத்தரவுப்படி ‘கற்பகம் சுவாசினி சங்கம்‘ உதயமானது. மகா பெரியவா அனுக்ரஹத்துடன் காசு மாலை பணிக்குப் பொன்னும் பொருளும் மெள்ள மெள்ள வர ஆரம்பித்தன.
இத்தனை வருடங்களாகத் தேங்கி இருந்த பணி, மீண்டும் சூடு பிடித்து விட்டது. போதிய அளவு நிதி சேர்ந்ததும், 1982-ல் காசு மாலை தயார் செய்யும் பணி ஆரம்பமானது. சென்னையில் பிரபலமான ஒரு நகைக் கடையினரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
தங்கக் காசின் ஒரு புறம் ஒவ்வொரு நாமாவும் (லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒரு நாமம்), மறுபக்கம் மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்தின் முத்திரையும் – அதாவது மயில் வடிவில் அம்பாள் சிவ பூஜை செய்வது போலவும், பின்னணியில் கற்பகாம்பாளே காட்சி தருவது போலவும் பொறிக்கத் துவங்கினர்.
லலிதா சஹஸ்ரநாமம் என்பது அம்மனின் ஆயிரம் திருநாமங்கள். இவற்றை முறையாக வரிசைப்படி ஒவ்வொரு நாமமாகப் பொறிக்கும் பணி துரிதமானது.
காஞ்சி மகா பெரியவாளும் அவ்வப்போது இந்த அமைப்பினரைத் தொடர்பு கொண்டு, ‘காசு மாலைப் பணிகள் எந்த மட்டில் இருக்கு?‘ என்றும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதோடு, காஞ்சி மடத்தின் வேத பண்டிதர்களை அவ்வப்போது சென்னைக்கு அனுப்பி வைத்து, இந்தப் பணிகளை மேற்பார்வையிடச் சொன்னார்.
ஆயிரம் திருநாமங்களும் பொறிக்கப்படும்போது அவை பிழை இல்லாமல் இருக்கிறதா, திருநாமங்கள் வரிசைப்படி இருக்கிறதா என்பதை எல்லாம் இந்த வேத பண்டிதர்கள் சரிபார்த்து, குரு பாட்டிக்கும், ஆனந்தவல்லிக்கும் உதவினர்.
எந்த விதமான தொய்வும் இல்லாமல் மளமளவென்று பணிகள் நடந்து, காசு மாலையும் ஒரு பூர்த்தி நிலையை எட்டியது.
லலிதா சஹஸ்ரநாமங்கள் மற்றும் மயிலாப்பூர் ஆலய முத்திரை அனைத்தும் பொறிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் இருக்கும் காசு மாலையைப் பார்த்த பக்தகோடிகள் வியந்தனர்.
குரு பாட்டி, ஆனந்தவல்லி மற்றும் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் காசு மாலையை கற்பகாம்பாளுக்கு அணிவிக்கப் போகும் அற்புதமான தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆலய நிர்வாகத்தினரும், சஹஸ்ரநாம கமிட்டி அன்பர்களும் கூடிப் பேசினர். அன்னை கற்பகாம்பாளுக்கு இந்த லலிதா சஹஸ்ரநாம காசு மாலையை 26.2.1986 அன்று அர்ப்பணிப்பது என்று தீர்மானமானது.
இதை சாதாரணமாக அம்மனுக்கு அர்ப்பணிக்காமல் ஒரு திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்து, விமரிசையாக ஏற்பாடு செய்தார்கள். குறிப்பிட்ட அந்த தினத்தன்று சிறப்பு அபிஷேகம், புடவை சார்த்துதல் என்று தடபுடலாகத் திட்டமிட்டனர்.
எந்த ஒரு நல்ல காரியமும் பகவானின் ஆசியோடு விரைந்து நடைபெறும்போது அதற்கு ஒரு முட்டுக்கட்டையோ தடையோ எதிர்பாராத இடத்தில் இருந்து வரும். இது பலரது வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற ஒரு பிரச்னை இந்த லலிதா சஹஸ்ரநாம கமிட்டியினருக்கும் வந்தது.
கமிட்டியின் செயலாளரான ஆனந்தவல்லியின் கணவர் வெங்கடேசனுக்குத் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. திடீரென அவருக்குக் கைகால்கள் செயலிழந்து, பேச்சும் நின்று போனது.
ஆனந்தவல்லி அதிர்ந்து போனார். காசு மாலையைக் கற்பகாம்பாளுக்கு அர்ப்பணிக்கும் விழாவுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற சூழ்நிலையில் அவள் ஏன் என்னை இப்படிச் சோதிக்க வேண்டும் என்று ஆலய சந்நிதியிலேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டார்.
குரு பாட்டி உட்பட மற்ற உறுப்பினர்களுக்கும் இந்த செய்தி இடி போல் இருந்தது. ‘ஆனந்தவல்லியின் கணவர் வெங்கடேசனுக்கு ஏதேனும் ஒன்று ஆகி விட்டால், இந்த விழா என்னவாகும்? அப்படியே நடந்தாலும், அதில் ஒரு உற்சாகம் இருக்காதே‘ என்பதே அனைவரின் கவலையாக இருந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடேசனின் உடல்நிலை மேலும் மோசமானது. மனித உடலின் பெரும்பாலான செயல்பாடுகள் நின்று போயின. எனவே நம்பிக்கை இழந்த மருத்துவர்கள் ஆனந்தவல்லியின் கணவர் வெங்கடேசனின் உயிருக்கு அதிகபட்சம் 48 மணி நேர கெடுவை விதித்து விட்டனர்.
அதாவது, ‘இரண்டு நாள் இவரது உயிர் தாங்குவது சிரமம்‘ என்று சொல்லி விட்டு, மனதைத் திடப்படுத்திக் கொள்ளுமாறு ஆனந்தவல்லிக்கும் அவரது உறவினர்களுக்கும் மருத்துவமனை சார்பில் சொல்லப்பட்டது.
யோசித்துப் பாருங்கள்… ஆனந்தவல்லியின் கணவர் வெங்கடேசனுக்கு மருத்துவர்கள் 48 மணி நேர கெடு விதித்து விட்டார்கள். அவரது உயிர் இரண்டு நாட்களைத் தாண்டுவதே சிரமம் என்பது மருத்துவர்கள் கணிப்பு.
இத்தகைய சூழ்நிலையில் ஆனந்தவல்லியின் மன நிலை எப்படி இருக்கும்?
அவர் சார்ந்திருக்கும் லலிதா சஹஸ்ரநாம கமிட்டி உறுப்பினர்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும்?
இன்னும் ஒரு சில நாட்களில் லலிதா சஹஸ்ரநாமம் பொறிக்கப்பட்ட தங்கக் காசு மாலையை அன்னை கற்பகாம்பாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அம்பாளிடம் இருந்து உத்தரவாகி எத்தனையோ வருடங்கள் கடந்தும், தற்போதுதான் அதற்கான வேளை பிறந்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டுதல்படி இந்தக் காசு மாலை 26.2.1986 அன்று அம்பாளுக்கு சார்த்தப்பட உள்ளது.
தேதி குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தாலும், இதற்கெல்லாம் முக்கிய காரணகர்த்தாக்களுள் ஒருவராக இருக்கும் ஆனந்தவல்லியின் குடும்பத்தில் இப்படி ஒரு சோகம் சூழ்ந்துள்ளதே..?
நினைவு திரும்பாமல், கைகால்கள் செயலிழந்து மருத்துவமனையில் இருக்கும் ஆனந்தவல்லியின் கணவர் வெங்கடேசனுக்கு ஏதேனும் ஒன்று ஆகி விட்டால், ஆனந்தவல்லியால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது. தவிர, இந்தக் காசு மாலை அர்ப்பணிப்பு விழா நடக்குமா, தள்ளிப் போகுமா? இது போன்ற பல கேள்விகள் கமிட்டி அன்பர்களின் மனதில் எழுந்தன.
ஒருவேளை ஆனந்தவல்லியின் கணவருக்கு அசந்தர்ப்பவசமாக ஏதேனும் ஒன்று ஆகி விட்டால், குறிப்பிட்ட தேதியில் நடக்கப் போகிற இந்த வைபவத்தில் கலந்து கொள்கிற உற்சாகம் எப்படி கமிட்டி உறுப்பினர்களிடம் இருக்கும்?
இப்படிப் பலவாறு குழம்பி சஹஸ்ரநாம கமிட்டி உறுப்பினர்கள் அனைவருமே தவித்துப் போனார்கள். விழாவுக்குக் குறித்திருந்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், சஹஸ்ரநாம காசு மாலை தயாராகி குரு பாட்டியிடம் வந்து சேர்ந்தது. அனைத்து நகாசு வேலைகளும் பூர்த்தியான இந்த மாலையை ஒரு முறை எடுத்துப் போய் மகா பெரியவாளிடம் காட்டி விட்டு வந்து விடலாம் என்று குரு பாட்டி எண்ணினார். குறிக்கப்பட்ட தேதியில் சஹஸ்ரநாம மாலையை கற்பகாம்பாளுக்கு சார்த்துகிறோமோ இல்லையோ… இதை எடுத்துப் போய் மகா பெரியவாளிடம் காட்டி விட்டு வந்தால், எல்லாம் சுபமாக முடிந்து விடும் என்ற நம்பிக்கை குரு பாட்டிக்கு.
அப்போது காஞ்சி மகா பெரியவா தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார். எனவே கமிட்டி உறுப்பினர்கள் சிலர் மற்றும் கபாலீஸ்வரர் ஆலயம் தொடர்பான முக்கிய பிரமுகர்கள் சிலருடன் ஒரு நாள் தேனம்பாக்கம் புறப்பட்டார் குரு பாட்டி.
தேனம்பாக்கம் முகாமில் அன்றைக்கு அவ்வளவாக பக்தர்கள் கூட்டம் இல்லை. சர்வேஸ்வர சொரூபமாக மகா பெரியவா அமர்ந்திருந்தார். ஒரு சில சிப்பந்திகள் பெரியவா அருகே நின்று கொண்டு அவருடைய கைங்கர்யத்தில் இருந்தனர்.
சஹஸ்ரநாம கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கொண்டு சென்ற பழங்கள், புஷ்பங்கள் போன்றவற்றை மகா பெரியவா திருச்சந்நிதி முன்னால் வைத்து விட்டு, ஒரு பெரிய மூங்கில் தட்டில் காசு மாலையை பத்திரமாக எடுத்து வைத்தனர். அதன் பின் அனைவரும் மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, மகானைப் பார்த்துக் கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தனர்.
அதுவரை இவர்களைப் பார்த்து ஏதும் பேசாமல் இருந்த மகா பெரியவா, அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு, ”ஏன்… உங்க செகரட்டரி இன்னிக்கு வரலியா?” என்று கேட்டாரே பார்க்கணும்!
குரு பாட்டி உட்பட அனைவரும் வியப்புடன் மகா பெரியவாளையே பார்த்தனர். ‘ஆனந்தவல்லியின் பெயரை மகானே ஆரம்பித்து விட்டாரே… இனியும் தாமதிக்கக் கூடாது… விஷயத்தைச் சொல்லி விட வேண்டியதுதான்‘ என்று தீர்மானித்து, கலங்கும் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு குரு பாட்டி, மகா பெரியவாளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.
”பெரியவா… ஆனந்தவல்லியோட கணவருக்குத் திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல ஆஸ்பிட்டல்ல இருக்கார். டாக்டர்ஸ் இவருக்கு 48 மணி நேரம் கெடு வெச்சுட்டா… வீட்டு பூஜையறையே கதின்னு உக்காந்து ஆனந்தவல்லி அழுதுண்டிருக்கா. ‘காசு மாலை சார்த்த முடியுமா… பணம் சேருமா?‘னு ஒரு காலத்துல கவலைப்பட்டுண்டு இருந்தோம். இப்ப எல்லாம் தயாராகி, இதைக் குறிப்பிட்ட தேதியில சார்த்த முடியுமானு கவலைப்பட்டுண்டு இருக்கோம். இப்ப குறிச்சு வெச்சிருக்கிற தேதி தாண்டிப் போனாலே, அதை ஒரு நல்ல சகுனமா எடுத்துக்க முடியாது பெரியவா… ஆளாளுக்கு ஒவ்வொண்ணு பேசுவா. அதான் எங்க கவலை” என்று நீளமாகச் சொல்லி முடித்தார் குரு பாட்டி.
உடன் வந்த அன்பர்கள் அனைவரும், இதற்கு மகா பெரியவா என்ன பதில் சொல்வார் என்று அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் தன் முன் வைக்கப்பட்டிருக்கும் காசு மாலையைப் பார்வையிட்ட மகா பெரியவா, குரு பாட்டியைப் பார்த்தார். பிறகு, ”லலிதா சஹஸ்ரநாம தங்க காசு மாலை ரொம்ப நன்னா வந்திருக்கு. கற்பகாம்பாள் ஒன் கனவுல வந்து கேட்டதை நீங்க எல்லாருமா சேர்ந்து பூர்த்தி பண்ணிட்டேள். இந்தக் காசு மாலையை நீங்க தீர்மானம் பண்ண தேதில கற்பகாம்பாளுக்குப் போடறதுக்கு ஒங்க செகரட்டரியும் கூட இருப்பா. கவலைப்படாம சந்தோஷமா கௌம்புங்கோ” என்று அனைவரையும் ஆசிர்வதித்தார், இரு கரங்களையும் உயர்த்தி.
‘ஏற்கெனவே குறிக்கப்பட்ட தேதியில் இந்தக் காசு மாலை கற்பகாம்பாளுக்கு அணிவிக்கப்படும்‘ என்ற தகவலை நடமாடும் தெய்வமான மகா பெரியவாளின் திருவாயால் கேட்ட குரு பாட்டி மற்றுமுள்ள அனைவரும் ஆனந்தப்பட்டனர். அதுவும் செகரட்டரியான ஆனந்தவல்லியும் உடன் இருப்பார் என்று நேரடியாகச் சொல்லி, ஆசியும் வழங்கி விட்டார்.
எல்லோரும் மீண்டும் மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள். அனைவருக்கும் பிரசாதங்கள் தந்து விடை கொடுத்தார். ஆனந்தவல்லிக்கும் தனியே பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.
மனம் நிறைய சந்தோஷத்தையும், கை நிறைய பிரசாதத்தையும் எடுத்துக் கொண்டு தேனம்பாக்கத்தில் கிளம்பிய இவர்கள் நேராக வந்து இறங்கியது ஆனந்தவல்லியின் வீட்டில்!
குரு பாட்டி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் வீட்டுக்குள் நுழைந்து ஆனந்தவல்லியைத் தேடினார்கள்.பூஜையறையில் சோகமே உருவாக அமர்ந்திருந்த ஆனந்தவல்லி இவர்கள் அனைவரையும் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, ”வாங்கோ” என்று பொத்தாம்பொதுவாக