“ஊர்ல எல்லாரும் ஒத்துமையா இருக்காளா?”

ழம் தரும் மரங்கள் தங்களிடம் வருபவர்கள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் சுவையான கனிகளை வழங்குகின்றன. பழம் பறிக்க வருபவர்கள் இந்த ஜாதி, இந்த மதம் என்கிற பேதம் பார்த்துக் கனிகளை வழங்குவதில்லை.

தன் மடியில் பால் கறக்க வருகிற எவருக்கும் வற்றாத காமதேனு போல் பாலை வழங்குகின்றன பசுக்கள். பால் கறக்க வருகிறவர் இந்த ஜாதி, இந்த மதம் என்று வித்தியாசம் பார்த்து அவர்களை விரட்டுவதில்லை.

மணம் வீசும் மலர்களான நாங்கள் இன்னார் இன்னாருக்குத்தான் சொந்தம்இவர்களைத் தவிர வேறு எவரும் எங்களிடம் வந்து பூக்களைப் பறிக்கக் கூடாது என்று செடிகளோ கொடிகளோ அனுமதி மறுப்பதில்லை. தன்னிடம் வந்து மலர் கொய்ய முற்படும் அனைவருக்குமே தலை சாய்க்கின்றன.

இதுவேதான் தெய்வங்கள் மற்றும் மகான்கள் இயல்பு.

தன்னைத் தரிசிக்க வரும் பக்தனிடம் எந்த விதமான பேதமும் பார்ப்பதில்லை தெய்வங்கள்.

ஒரு மகானைத் தரிசிக்க அவரது திருச்சந்நிதி செல்கின்ற எவருக்கும் எந்த விதமான பேதமும் இல்லை.

குருவும் தெய்வமும் இணைந்த வடிவம் மகா பெரியவா. எனவே தன்னைத் தரிசிக்க வருகின்ற பக்தர்கள் எவராக இருந்தாலும், அவர் மனதில் இருக்கின்ற ஆழமான பக்தியை மட்டுமே கவனித்து அருள் வழங்கி வருகிறவர் மகா பெரியவா.

தன்னை தரிசிக்க வருகிற மனிதர்களிடம் எந்த விதமான பேதமும் பார்ப்பதில்லை. இவர் இன்ன ஜாதி, இவர் அந்த ஜாதி என்கிற எண்ணமோ, பேச்சோ, வெளிப்பாடோ மகா பெரியவா சந்நிதியில் என்றைக்குமே நிலவியதில்லை என்பதே அந்த மகானை இன்றைக்கும் நாம் போற்றி வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான காரணம்.

இந்த பிரபஞ்சத்தில் அவதரித்த அனைத்து ஜீவ ராசிகளையும் ஒரே நிலையில் வைத்து பாவித்தவர் மகா பெரியவா.

மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வருகின்ற பணக்காரர்களும் சரிஏழைகளும் சரிஇரு தரப்பினருமே இவரது சந்நிதியில் ஒரே விதமாகத்தான் நடத்தப்பட்டார்கள்.

மகா பெரியவா வழங்குகின்ற தீர்த்த பிரசாதத்தை அருந்தி தங்களது வாழ்க்கைக் கணக்கில் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ள வரிசையில் நிற்கின்ற பக்தர்கள் அனைவருமே ஒரே ஜாதிதான். அதுதான்பக்தன் என்ற ஜாதி.

காஞ்சி மகா பெரியவா எந்த ஒரு குக்கிராமத்துக்கு யாத்திரை போனாலும், அங்கே வசிக்கின்ற அனைத்துத் தரப்பு மக்களையும் ஆர்வத்துடன் சந்தித்து அவர்களது நல்லது கெட்டதுகளை விசாரித்து விட்டு தரிசனம் தருவார். நல்லாசிகளை நல்குவார்.

தான் இருக்கின்ற இடம் தேடி வரும் அனைத்து ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பாரபட்சம் இல்லாமல் தனது நல்லாசிகளை வழங்கி இருக்கிறார்.

தான் யாத்திரை சென்றிருக்கும் சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆசி வழங்கி ஆனந்தப்பட்டிருக்கிறார்.

இதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை மகா பெரியவா வாழ்க்கையில் இருந்தே எடுத்துச் சொல்லலாம்.

முதல் சம்பவம் திருக்கோவிலூர் அருகே நிகழ்ந்தது.

ஒரு முறை மகா பெரியவா விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்திருக்கிறார். பல்வேறு கிராமங்களின் வழியே பயணப்பட்டுக் கொண்டிருந்தவர் அங்கே வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சாதாரண வர்க்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை அழைத்து அவர்களின் நலன் குறித்து விசாரித்தார்.

அந்தக் கூலித் தொழிலாளிகளுக்கு அத்தனை சந்தோஷம். ‘அடநமக்கு சம்பளம் குடுக்கிற மொதலாளிகூட இப்படி நம்மளை விசாரித்ததில்லை. இந்த சாமீ நம்மளை இப்படி விசாரிக்கிறாரே என்று அவரை உணர்ச்சிப்பெருக்கோடு வணங்கி இருக்கிறார்கள்.

அந்த யாத்திரையின் ஒரு கட்டமாக காட்டுப்பையூர் என்ற கிராமத்துக்கும் மகா பெரியவா சென்றார்.

அப்போது அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி, மகா பெரியவாளைத் தங்களது ஊருக்குப் பூர்ண கும்ப மரியாதையோடு அழைத்திருக்கிறார்கள்.

இந்த ஊரில் வசித்து வருகின்ற பல தரப்பட்ட ஜாதியினரும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது, மகா பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டு மகா பெரியவா தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இதை நிரூபிக்கும் விதமாக மகா பெரியவாளுக்கு ஊர் எல்லையில் வரவேற்பு கொடுத்த தினத்தில் ஏராளமான அன்பர்கள் திரண்டு வந்திருந்தனர். இதில் அனைத்து ஜாதியினரும் அடக்கம்.

காட்டுப்பையூர் கிராமத்தில் வசிக்கக் கூடிய ஒரு அன்பரது மிகப் பெரிய இல்லத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார். அங்கே கூடி இருந்த பக்தர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்.

அப்போது முகாமுக்குப் பொறுப்பாக விளங்கக் கூடிய அன்பர் ஒருவர் பரபரப்போடு மகா பெரியவாளை நெருங்கி நின்றார். அவரை அண்ணாந்து பார்த்து, ‘என்ன? என்று ஜாடையில் கேட்டார் மகா பெரியவா.

இந்த ஊர்ல வசிக்கிற தாழ்த்தப்பட்டவா நிறைய பேர் உங்களைத் தரிசனம் பண்றதுக்காக வாசல்ல காத்துண்டுருக்காநீங்கல்லாம் அவாளுக்கு தரிசனம் தருவேளானு ஏக்கத்தோட நின்னுண்டு இருக்கா என்று சொல்லி நிறுத்தினார்.

அதுவரை உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம் தான் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அப்படியே பாதியில் விட்டு விட்டு தண்டத்தை சுமந்து கொண்டு எழுந்தார். தகவலை மகா பெரியவாளுக்குத் தெரிவித்த முகாம் பொறுப்பாளரும், மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து வருகின்ற சிப்பந்திகளும் எழுந்தார்கள்

மகா பெரியவா வெளியே வந்தார். சிஷ்யர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

வெளியே வந்தால்சுமார் எழுபது, எண்பது பேர் கைகளைக் கூப்பியபடி சாலையை அடைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.

தாங்கள் வந்து நின்று தகவல் அனுப்பிய அடுத்த நிமிடமே மகா பெரியவா வந்து நின்றதைப் பார்த்ததும், அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

மகா பெரியவா வாசலில் வந்த மறுகணம், தலையில் முண்டாசு போல் கட்டி இருந்த துண்டை எடுத்து உதறி, மரியாதை நிமித்தம் இடுப்பில் சுற்றிக் கொண்டனர்.

உழைத்து உழைத்துக் களைத்துப் போனகாய்த்துப் போன சுவடுகள் அவர்களது முகத்தில் தெரிந்தன.

கண்களில் இனம் புரியாத ஒரு ஏக்கம் தெரிந்தது.

இந்தக் குடிசைவாசிகள் கூட்டத்தில் இருக்கின்ற ஒரு அன்பர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து மகானை நமஸ்கரித்து எழஅந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் உடனே பொத்பொத்தென்று தரையில் விழுந்து நமஸ்கரித்தனர். மெய் மறந்து அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களது அமைதியைக் களையும் விதமாக மகா பெரியவாளே திருவாய் மலர்ந்தார்: ”என்ன, நீங்கல்லாம் இதே ஊரா (காட்டுப்பையூர்)? என்று கேட்டார்.

ஆமா சாமீ – குரலில் உற்சாகத்துடன் சொன்னார்கள்.

ஒங்களோட விவசாய ஜோலி எல்லாம் நன்னா போயிண்டு இருக்கா?

நல்லாவே இருக்கு சாமீ. அதான் எங்க வயல்கள்ல இருந்து விளைஞ்சதை ஒங்களுக்குக் காணிக்கை குடுக்கலாம்னு எடுத்துட்டு வந்திருக்கோம். இதை எல்லாம் எஜமான் ஏத்துக்கணும் என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டார், இவர்களுக்கு லீடர் போல் இருந்த ஒருவர்.

கருணை முகம் மலர்ந்தது. இதழ் பிரித்துப் பெரியவா சிரித்தார்.

இவர்களது காணிக்கை வைக்கப்பட்டிருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தார். பெரியவா நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகே ஒரு மூலையில் பெரிய பெரிய கோணிகளைக் கீழே போட்டு விட்டு அதன் மேல், அரிசி மூட்டைகள், காய்கறிகள், பழங்கள், இளநீர், தேங்காய், நார்த்தங்காய், எலுமிச்சம்பழம், வாழைத்தார்கள், வாழையிலைக் கட்டுகள், நிலக்கடலை என்று விளைபொருட்களின் அணிவகுப்பு நீண்டது.

மகா பெரியவா பின்னால் திரும்பிப் பார்த்து மேனேஜரை சொடக்குப் போட்டு அழைத்தார்.

இதெல்லாம் அன்போட இவா கொண்டு வந்து குடுத்த காணிக்கை. இதை எல்லாம் ஒண்ணு விடாம எடுத்து பத்திரப்படுத்து. அன்னதான கைங்கர்யத்துக்குப் பயன்படுத்திக்கோ என்று உத்தரவிட்டு விட்டு, ”இவா எல்லாருக்கும் பிரசாதம் தரணும் என்று சொல்லி, அங்கேயே திண்ணையில் அமர்ந்தார். ஒரு சிஷ்யன் மூலம் பிரசாதத்தை அவர்களிடம் சேர்ப்பித்துக் கொண்டே இருந்தார்.

அதன் பின் ஊர்க்காரர்கள் அனைவரையும் பார்த்து, ”காட்டுப்பையூர் கிராமத்துல உங்க எல்லாரையும் இப்படி ஒத்துமையா பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னிக்கும் இந்த ஒத்துமையோட இருக்கணும். நீங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம இருக்கணும் என்று ஆசி வழங்கி அருளினார்.

மகா பெரியவா திருவாயால் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதும், காட்டுப்பையூரில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.

இந்தக் கிராமத்தில் வசிக்கின்ற ராஜாமணி ஐயர் என்பவர், காஞ்சி ஸ்ரீமடத்துக்கு அடிக்கடி சென்று வரக் கூடிய பக்தர். மேலே சொன்ன நிகழ்ச்சி நடந்தபோது அதற்கு சாட்சியாக அப்போது உடன் இருந்தவர் இவர்.

பின்னர் வந்த காலங்களில் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு ராஜாமணி ஐயர் செல்லும்போதெல்லாம், ”என்ன, காட்டுப்பையூர்தானே? என்று இவரை அடையாளம் கண்டுகொள்ளும் மகா பெரியவா, ”இன்னமும் ஒங்க ஊர்ல எல்லாரும் ஒத்துமையாத்தானே இருக்கா? என்று அன்புடன் விசாரிப்பது வழக்கமாம்.

சமத்துவத்தை வலியுறுத்தும் இரண்டாவது சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.

மகா பெரியவா சென்னையில் யாத்திரை மேற்கொண்டிருந்த காலம். மயிலாப்பூரில் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம் இருந்தார்.

ஒரு நாள் அதிகாலை மயிலாப்பூர் ஆலய தரிசனத்துக்காகத் தன் பரிவாரங்களுடன் வந்திருக்கிறார் மகா பெரியவா.

ஸ்ரீகபாலீஸ்வரர்ஸ்ரீகற்பகாம்பாள் தரிசனம் முடிந்து மகா பெரியவா வெளியே வந்ததும், அவரைத் தரிசிப்பதற்காக கடற்கரைக் குப்பங்களில் வசித்து வரும் அன்பர்கள் சுமார் ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தனர்.

பெரியவாளைப் பார்த்ததும் கும்பிட்டபடியே, ”சாமீநாங்க வசிக்கிற வூடுகளுக்கும் நீங்க வந்து பாக்கணும் என்றனர் வெள்ளந்தியாக.

ஸ்ரீமடத்துச் சிப்பந்தி ஒருவர், அவர்களை நைச்சியமாக அனுப்பப் பார்த்தார். ஆனால், மகா பெரியவா புன்னகையுடன் அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார்.

அடுத்த நாள் அதிகாலை காலை சம்ஸ்க்ருதக் கல்லூரி முகாமில் மகா பெரியவாளைக் காணவில்லை.

சிப்பந்திகளும், பக்தர்களும் பதைபதைத்து அங்குமிங்கும் ஓடித் தேடினார்கள். பெரியவா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் ஒரு பக்தர் ஓடி வந்து, ”இங்கே இருக்கிற மீனவக் குப்பத்தில் மகா பெரியவா இருக்கிறார் என்று சொல்லஅனைவரும் ஓடினார்கள்.

அதற்குள் குப்பத்து பக்தர்கள் வசிக்கின்ற இடத்துக்கு நேரில் சென்று ஆசிர்வதித்த மகா பெரியவா தனியே திரும்பிக் கொண்டிருந்தார்.

சிப்பந்திகள் கவலையுடன் கேட்டபோது, ”ஆமாண்டாஒங்ககிட்ட நான் சொல்லிட்டுப் போனேன்னா நீங்கல்லாம் ஆயிரம் கேள்வி கேப்பேள். அவாளும் மனுஷாதாண்டா. அனுக்ரஹம் பண்ணப் போனேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.

மகான்களுக்கு எல்லோரும் ஒன்றுதான்.மனிதர்களில் சிலர்தான் இதை ஏற்க மறுக்கிறார்கள்