மூங்கில் தட்டு முழுக்க பணம்

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராமம்திருப்புறம்பயம். மண்ணியாறு மற்றும் கொள்ளிடம் இந்த ஊரின் இரு திசைகளில் பாய்ந்து வளம் பெருக்கியது ஒரு காலம்!

இந்தக் கிராமத்துக்கு என்ன சிறப்பு என்றால், முக்கியமான இரண்டு விஷயங்களை சொல்லலாம்.

ஒன்றுவரலாற்றில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய போர் இங்கே நிகழ்ந்தது. பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த அந்தப் போரில் பாண்டியர்கள் தோற்றார்கள். பல்லவர்கள் வென்றார்கள்.

இரண்டாவதுஇங்குள்ள ஸ்ரீசாட்சிநாதர் ஆலயம். சைவ நால்வராலும் பாடல் பெற்றது. திருவிளையாடற் புராணம் நடந்த ஊர். ‘பிரளயம் காத்த விநாயகர் எனும் சிறப்பு தேனபிஷேக பிள்ளையார் இங்கே அருள் பாலித்து வருகிறார்.

திருப்புறம்பயத்தில் சிவாலயம் தவிர விஷ்ணு ஆலயம், மாரியம்மன் ஆலயம், திரவுபதி ஆலயமும் உண்டு.

இங்குள்ள மாரியம்மன் ஆலயம் 1980-கள் வாக்கில் ரொம்பவும் சிதிலமடைந்து போயிருந்தது. சுற்றுப்புறச் சுவர்களும், ஆலய மண்டபங்களும் இடிந்த நிலையில் காணப்பட்டன. ஏராளமான செடிகளும் கொடிகளும் புதர்களும் மண்டிக் காணப்பட்டன.

இந்த நிலையைப் பார்த்த உள்ளூர் அன்பர்கள்எப்பாடு பட்டேனும் மாரியம்மன் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தி விட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்குண்டான பணிகளைத் துவக்கினர். ‘இறைவன் நற்பணி மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருப்பணிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டனர்.

ஆனால், ஏனோ பணிகள் மளமளவென்று நடக்காமல், நன்கொடைகளும் அதிகம் வராமல் சிரமப்பட்டனர். அப்போது இந்த ஆலயக் கும்பாபிஷேகத்துக்குத் தேவையான தொகையே ஒரு லட்ச ரூபாய்தான் (1984-ல்). ஆனால், அன்றைக்கு இது பெரிய தொகை.

அப்போதுதான் இந்தஇறைவன் நற்பணி மன்ற பொருளாளரான குருமூர்த்திக்குஒரு முறை காஞ்சி மகா பெரியவாளை நேரில் போய் தரிசித்து, அவரிடம் இந்த செய்தியைக் காதில் போட்டு விட்டால் கும்பாபிஷேகம் குறித்த காலத்துக்குள் நடந்து முடிந்து விடும் என்று தோன்றியது.

அப்போது காஞ்சி ஸ்ரீமடத்திக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தவரும், மாயவரத்தில் வக்கீலாக இருந்தவருமான சி.ஆர். குஞ்சிதபாதத்தையும் அழைத்துக் கொண்டு மகா பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் புறப்பட்டார் குருமூர்த்தி. இரவு வேளையில் புறப்பட்ட இவர்கள் மறுநாள் காலை காஞ்சிபுரத்தை அடைந்தனர்.

அன்றைக்குக் கூட்டமான கூட்டம். இருவரும் மகா பெரியவாளைத் தரிசிக்கக் காத்திருந்தனர். வந்திருந்த பக்தர்களை ஒவ்வொருவராகப் பார்த்து, விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

இவர்களது முறை வந்தபோது, தாங்கள் கொண்டு சென்ற காணிக்கைகளை மகா பெரியவா திருச்சந்நிதி முன் சமர்ப்பித்து விட்டு ஒரு நமஸ்காரம் செய்தனர்.

ஒரு புன்னகையுடன் பெரியவா இவர்களைப் பார்த்தார். இந்தக் கனிவான பார்வையை எதிர்பார்த்துதானே பலரும் இங்கே வருகிறார்கள்! குருமூர்த்திக்கும் குஞ்சிதபாதத்துக்கும் சந்தோஷத்தில் கண்கள் பனித்தன.

என்ன விஷயம்? என்பது போல் புருவம் உயர்த்திப் பார்த்தார் மகா பெரியவா.

திருப்புறம்பயத்தில் இருந்து வரோம் பெரியவா என்று குருமூர்த்தி சொன்ன மறு விநாடி அந்தப் பரப்பிரம்மம் திருவாய் மலர்ந்தது.

அங்கே தேனபிஷேகப் பிள்ளையார் இருப்பாரேநன்னா இருக்காரா?

குருமூர்த்திக்கு ஆச்சரியம். இத்தனை துல்லியமாக நம்மூரை அளந்து வைத்திருக்கிறாரே என்கிற பிரமிப்புடன், ”கோயில் நன்னா இருக்கு பெரியவா என்றார்.

அடுத்து மகா பெரியவா, ”அந்தப் பிள்ளையாருக்கு வருஷா வருஷம் தேனபிஷேகம் நடந்துண்டு இருக்கா? என்று கேட்டார்.

கும்பகோணத்தில் இருந்து இன்ன மார்க்கத்தில், இன்னின்ன க்ஷேத்திரங்களுக்கு அருகே உள்ளது திருப்புறம்பயம் என்றெல்லாம் மகா பெரியவாளுக்கு விவரித்துச் சொல்ல வேண்டி இருக்குமோ என்று இவர்கள் நினைத்த நேரத்தில், ‘தேனபிஷேக பிள்ளையார் என்று திருப்புறம்பயத்தின் முக்கியமான தெய்வத்தை இவரே சொல்லி விட்டாரே என்று ஆனந்தம்.

மனதில் மகிழ்ச்சியுடன், ”ஆமா பெரியவாதேனபிஷேக பிள்ளையார்தான் எங்கூர் விசேஷம். அவருக்கு வருஷா வருஷம் தேனபிஷேகம் ரொம்ப நன்னா நடந்துண்டு இருக்கு என்றார்.

இதைக் கேட்ட மகா பெரியவா, அங்கே கூடி இருக்கிற திரளான பக்தகோடிகளைப் பார்த்து, ”இதோ, இவாள்லாம் வந்துருக்காளேகும்மோணம் பக்கத்துல திருப்புறம்பயம்னு ஒரு கிராமம். இவா ஊர்ல சிவன் கோயில் ரொம்ப பிரசித்தம். அப்பா பிரபலமா இருக்கற ஊர்ல அப்பாவோட மூத்த புள்ளையும் ரொம்ப சிறப்பா இருக்கார்.

அப்பானு நான் சொன்னது அந்த ஊர் ஈசன் சாட்சிநாதர். பையன்னு நான் சொன்னது அங்கே இருக்கிற தேனபிஷேக பிள்ளையார். பிரளயம்காத்த விநாயகர்னு இவரைப் பத்தி அந்தூர் தல புராணத்துல நிறைய தகவல் இருக்கு. இந்தப் புள்ளையாருக்கு தெனம் தெனம் அபிஷேகம் கிடையாது. வருஷா வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு மட்டும்தான் அபிஷேகம். அதுவும் எதால அபிஷேகம் தெரியுமா? முழுக்க முழுக்க தேனால பண்ணுவா. சந்நிதிக்கு முன்னால பெரிய அண்டாவைக் கொண்டு வந்து வெச்சுடுவா. பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் கோயிலுக்கு வரவா தேன் கொண்டு வந்து அண்டால சாய்ச்சுட்டுப் போவா.

தேன் மட்டும்தான் இந்தப் பிள்ளையாருக்கு அபிஷேகம். இவர் கிளிஞ்சல்னால ஆன பிள்ளையார். இந்த லோகத்தையே காத்துண்டு இருக்கிறவர் என்று விஸ்தாரமாக பெரியவா சொன்னதும், பக்தர்கள் பரவசப்பட்டனர்.

ஏதோ அந்த க்ஷணத்தில் அந்தப் பிள்ளையாரையே நேருக்கு நேர் தரிசித்து விட்டதாக அங்கே கூடி இருந்த பக்தர்களுக்கு ஒரு பரவசம்.

அதன் பின் மகா பெரியவா, குருமூர்த்தியின் பக்கம் திரும்பி, ‘என்ன விஷயமா வந்துருக்கேள்? என்று ஜாடையில் கேட்டார்.

குருமூர்த்தி சொன்னார்: ”பெரியவாஎங்கூர்ல ஒரு மாரியம்மன் கோயில் இருக்கு. ரொம்பவும் பாழடைஞ்சு போயிருக்கு. அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணணும்னு ஊர்ல கூடிப் பேசி திருப்பணி வேலைகளை ஆரம்பிச்சோம். ஆனா, மளமளனு ஓட மாட்டேங்குது. பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.

எல்லாம் நன்னா நடக்கும். அம்பாளே எல்லாதையும் நடத்தி முடிப்பா என்று திருவாய் மலர்ந்தருளி, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

இத்தனை பக்தர்கள் திரண்டிருக்கக் கூடிய கூட்டத்தில் நமது ஊரைப் பற்றி இவ்வளவு தகவல்களைச் சொல்லி, தேனபிஷேகம் இன்றும் நடந்து வருகிறதா என்று ஆர்வத்துடன் விசாரித்திருக்கிறாரே என்று நெகிழ்ந்து பேசிக் கொண்டு ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தனர் குருமூர்த்தியும், குஞ்சிதபாதமும்.

பெரியவா பற்றிய நினைவுகளுடன் ஊருக்குத் திரும்பினர்.

அடுத்து ஒரு சில மாதங்களுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் சென்றார் குருமூர்த்தி. இந்த முறை இவர் மட்டும்.

குருமூர்த்தியின் முறை வரும்போது மகா பெரியவாளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு, ”திருப்புறம்பயம் பெரியவாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விஷயமா சில மாசங்களுக்கு முன்னால் வந்தேன் என்று நினைவுபடுத்தினார்.

ஒரு தெய்வீகப் புன்னகை மட்டும் பெரியவாளின் அதரங்களில் இருந்து வெளிப்பட்டது. குருமூர்த்தியைப் புரிந்து கொண்டு விட்டார் என்பதை அது உணர்த்தியது. பிறகு கேட்டார்:

மாரியம்மன் கும்பாபிஷேக வேலைகள் நடந்துண்டுருக்கா?

உங்க கிருபைல போயிண்டுருக்கு பெரியவா.

எல்லாம் நன்னா நடக்கும் என்று வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்து விட்டு, பிரசாதம் கொடுத்தார்.

பெரியவா தரிசனம் தந்த பரவசத்தை எண்ணி, ஸ்ரீமடத்தில் இருந்து பூரிப்புடன் வெளியே வந்தார் குருமூர்த்தி.

அப்போது திடீரென்று மடத்தின் உள்ளிருந்து குடுமியுடன் இளைஞர் ஒருவர் ஓடி வந்து, ”நீங்க திருப்புறம்பயம்தானே? என்றார்.

ஆமா என்றார் குருமூர்த்தி.

பெரியவா உங்களைக் கூட்டிண்டு வரச் சொன்னார் என்றார் படபடப்பாக.

ஆகாபெரியவா மீண்டும் நம்மை அழைக்கிறாரேமாரியம்மன் அனுக்ரஹமா? என்று வியந்து அவரைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றார்.

மகா பெரியவா அருகே கொண்டு போய் விட்ட அந்த வாலிபர், சற்றே ஒதுங்கி நின்று கொண்டார்.

பெரியவா மீண்டும் நம்மை அழைத்தது ஏன்? என்று புரியாமல் மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

குருமூர்த்தியை ஆழ்ந்து நோக்கினார் மகா பெரியவா. பிறகு, ”உள்ளூர் மாரியம்மனுக்கு கும்பாபிஷேக திருப்பணி பண்ணிண்டு இருக்கோம்னு சொன்னேளேரசீது புத்தகம் கொண்டு வந்துருக்கேளா? என்றார்.

உற்சாகத்துடன், ”இருக்கு பெரியவா. ரசீது புத்தகத்தை எப்பவும் கையோடவே வெச்சிண்டிருப்பேன் என்றவர் ஒரு பைக்குள் கைவிட்டு, இரண்டு ரசீது புத்தகத்தை எடுத்து பெரியவாளிடம் நீட்டினார்.

ஒன்றுஐந்து ரூபாய் நன்கொடைக்கானது. இன்னொன்றுபத்து ரூபாய் நன்கொடைக்கானது.

எந்த வாலிபர் குருமூர்த்தியை வாசலுக்குப் போய் அழைத்துக் கொண்டு வந்தாரோ, அந்த வாலிபரைப் பார்த்து, ”இந்த ரசீது புத்தகத்தை வாங்கிக்கோ. இங்கே இருக்கிறவாகிட்ட இதைக் காண்பிச்சு, யார் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ, அவாகிட்ட வசூல் பண்ணிண்டு, பேர் அட்ரஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணி இவர்கிட்ட கொண்டு வந்து கொடுத்துடு என்று உத்தரவிட்டார்.

அங்கே தரிசனத்துக்காக அமர்ந்து கொண்டிருக்கக் கூடிய பெரும்பாலான பக்தர்களுக்கும் மகா பெரியவா சொன்னது தெளிவாகக் கேட்டது.

ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு ரசீது புத்தகத்தை வாங்கினார்கள். தங்கள் பெயர், அட்ரஸ் இவற்றை அதில் குறிப்பிட்டு விட்டு ஐந்தும், பத்துமாகக் கொடுத்தார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் ஆன பிறகு, நிரப்பப்பட்ட ரசீது புத்தகம் மற்றும் ஒரு மூங்கில் தட்டு முழுக்கப் பணத்துடன் வந்து மகா பெரியவாளுக்கு முன்னால் வைத்தார் அந்த வாலிபர்.

எவ்ளோ இருக்கு? எண்ணிப் பார். – பெரியவா.

வாலிபர் பத்து ரூபாய் தாள்களைத் தனியே பிரித்தார். ஐந்து ரூபாய் தாள்களைத் தனியே பிரித்தார். எண்ணிப் பார்ப்பது சுலபமானது. ஐந்து நிமிடம் கழித்து, ”சரியா எண்ணூறு ரூபா பெரியவா என்றார்.

அதை அப்படியே அவர்கிட்ட குடுத்துடு என்று குருமூர்த்தியை பெரியவா கைகாட்டதட்டு இடம் மாறியது.

குருமூர்த்திக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பெரியவா தரிசனத்துக்கும், ஆசிர்வாதத்துக்கும் வந்த இடத்தில் திருப்பணிகளுக்காக எண்ணூறு ரூபாய் வரவு! அப்போது இது மிகப் பெரிய தொகை!

1989 செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திருப்புறம்பயம் மாரியம்மனுக்கு மகா பெரியவா ஆசியுடன் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

அடுத்த கும்பாபிஷேகம் நடத்த தற்போது பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது. அப்போது இருந்த அதே குருமூர்த்தியே தற்போதும் இந்தத் திருப்பணியில் இருக்கிறார்மகா பெரியவா ஆசியுடன்!