சேவை மாணவர்களுக்கு சிறப்பு விருந்து

லயங்கள், மடாலயங்கள், சந்நியாசிகள் வசிக்கும் இடங்கள் போன்றவற்றில் பணி செய்வதற்கு நிரந்தர ஊழியர்கள் சிலர் இருப்பார்கள். அன்றாட தினங்களில் இவர்கள் செய்கின்ற பணியானது, நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்கும், வருகின்ற பக்தர்களைக் கவனிப்பதற்கும் போதுமானதாக இருக்கும். இவர்கள் பெரும்பாலும் சம்பளம் வாங்குகின்ற பணியாளர்களாக இருப்பார்கள்.

அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட ஆன்மிக ஸ்தாபனங்களில் ஏதேனும் விசேஷ தினங்கள், அவதார தினங்கள், முக்தி தினங்கள், திருவிழாக்கள் என்றெல்லாம் வரும்போது பக்தர்கள் பெருமளவில் கூடுவதால், நிரந்தர ஊழியர்களின் பணி மட்டும் போதாது. கூடுதலாக சிலரின் உதவியும் அந்த நாட்களில் தேவைப்படும்.

இப்படிக் கூடுதலாகஒரு சில நாட்களுக்கு மட்டும் பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்குத் தருவது போல் சம்பளம் வழங்க முடியாது. எனவே, அது போன்ற காலத்தில் தானாகவே வலிய வந்து உதவும் தன்னார்வத் தொண்டர்களின் (வாலண்டியர்ஸ்) உதவியை நாடுவார்கள் ஆன்மிக ஸ்தாபனத்தினர்.

அத்தகைய விசேஷ தினங்களில் மட்டும் கைங்கர்யம் செய்வதற்கு விருப்பப்படும் தன்னார்வத் தொண்டர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு ஊதியம் போல் எதுவும் இருக்காது. அதே வேளையில் இப்படிப்பட்ட ஆன்மிக ஸ்தாபனத்தில் இறை சேவை செய்வதைப் பெரும் பாக்கியமாக நினைப்பார்கள்.

இதுபோன்ற தன்னார்வத் தொண்டர்களை ஆலய விழாக்களின்போதும், கும்பாபிஷேகத்தின்போதும், பிரபலங்கள் வருகையின்போதும் நாம் பார்த்திருக்கிறோம்.

அதுபோல் மகா பெரியவா எங்கே வெளியூர்களில் முகாமிட்டிருந்தாலும், அவருக்கும் அங்கே வருகின்ற பக்தர்களுக்கும் சேவை புரிவதற்கென்று எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்கள் குவிவார்கள். பெரும்பாலும் இவர்கள் பள்ளிகளில் உயர் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்களாகவும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள்.

மகா பெரியவா 1950-களின் இறுதியில் சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டிருந்தார். இதற்கு உண்டான அனைத்து சவுகரியங்களையும் மகா பெரியவாளின் ஆசிர்வாதத்துக்குட்பட்ட ஆத்திக அன்பர்கள் செய்திருந்தனர். சந்நியாசிகள் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கும் சாதுர்மாஸ்ய விரதமும் இந்த விசிட்டோடு சேர்ந்து கொண்டதால், மகா பெரியவா இங்கே தங்கி இருக்கக் கூடிய காலமானது நீட்டிக்கப்பட்டது. அப்போது சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் மகா பெரியவா மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியிலேயே தங்கி இருந்தார்.

சென்னையின் இதயப் பகுதியாக விளங்கக் கூடிய மயிலாப்பூருக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் குவிவார்கள் என்பதால், வருகின்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்த வாலண்டியர்களை நியமித்தார்கள் விழா அமைப்பாளர்கள். இதற்காக பி.எஸ். ஹைஸ்கூல் மற்றும் ஓரிரு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தகவல் அனுப்பி, தகுதியான மாணவர்களை வரவழைத்தார்கள். இவர்கள் அனைவரும் சுமார் 15-லிருந்து 20 வயதுடையவர்கள்.

இந்தத் தொண்டு புரிகின்ற மாணவர்களுக்கு முக்கியமான வேலை என்ன தெரியுமா? தரிசனத்துக்கு வருகின்ற பக்தர்களைக் கட்டுப்படுத்தி அவர்களை நிதானமாக அனுப்ப வேண்டும். முதியவர்களைப் பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும். சாப்பிடச் செல்லும் அன்பர்களை நன்றாகக் கவனித்து அவர்களை திருப்தியாகத் திரும்ப அனுப்ப வேண்டும். இப்படிப் பல முக்கியமான அறிவுரைகள் இந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டன.

அப்போது மயிலாப்பூரில் பி.எஸ். ஹைஸ்கூலில் படித்து வந்த மாணவன்ரகோத்தமன். ‘ராவ் எனப்படுகிற கன்னட பிராமண வகுப்பினர். மயிலை லஸ் அருகே உள்ள வீரப்பெருமாள் கோயில் தெருவில் தந்தையாருடன் வசித்து வந்தான் ரகோத்தமன் (தாயார் இல்லை).

(ரகோத்தம ராவ் தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 74.)

ரகோத்தமனையும் இவனது வயதை ஒத்த சுமார் 20 மாணவர்களும் இந்தத் தன்னார்வப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மகா பெரியவா மீது தனிப்பட்ட பக்தி அதுவரை இல்லை என்றாலும், மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்தது இல்லை என்றாலும் இந்த மகானைப் பார்த்த மாத்திரத்தில் நெக்குருகிப் போனான் மாணவனான ரகோத்தமன். மகானின் திருக்கண்களில் தெரிந்த ஒரு ஈர்ப்பு, காந்தம் போல் இழுத்தது. மகா பெரியவாளுக்கு சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாக எண்ணினான் ரகோத்தமன். உடன் இருக்கும் சக மாணவர்களுடன் ஓடியாடி எல்லா விதமான பணிகளையும் செய்தான் ரகோத்தமன்.

நடமாடும் தெய்வமான மகா பெரியவாளுக்குச் சேவை புரியும் மாணவர்களுக்கென்று அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களில் சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டிருந்தது. மகா பெரியவா சேவைக்கு மாணவர்களை அனுப்புவதைப் பெரும் கவுரமாக எண்ணினார்கள் அன்றைக்கு இருந்த பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள்.

மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் மகா பெரியவா முகாமிட்டிருந்த வேளையில் தினமும் ஏராளமான பக்தர்கள் வரவால் திமிலோகப்பட்டது. எந்நேரமும் முகாம் பரபரப்பாகவே காணப்பட்டது.

கலியுக தெய்வமான மகா பெரியவாளைத் தரிசனம் செய்வதற்கும், சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தரிசித்துப் பெரியவா கையால் தீர்த்தப் பிரசாதம் வாங்குவதற்கும் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட ஆரம்பித்தார்கள்.

தரிசனத்துக்காக பக்தர்கள் வருகின்ற வரிசையை ஒழுங்குபடுத்துவது, நண்பகல் சாப்பாடு நடக்கின்ற இடத்துக்கு இவர்களை முறையாக அனுப்புவது, உள்ளே இடம் பார்த்து அமர வைப்பது என்று பலவற்றுக்கும் ரகோத்தமன் உள்ளிட்ட இந்த மாணவர்களின் சேவை விழா அமைப்பாளர்களுக்குப் பயன்பட்டது.

மகா பெரியவா அருள் பாலித்துக் கொண்டிருக்கும் திருச்சந்நிதி அருகே பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குக் கைங்கர்யம் செய்ய நமக்கு ஒரு அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே என்று ரகோத்தமன் உட்பட மற்ற மாணவர்கள் அனைவரும் உற்சாகமாகப் பணி புரிந்தனர்.

தெய்வத்தின் அருகே நின்று சேவை செய்யக் கூடிய பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுமா, என்ன!

மகா பெரியவா நடத்துகிற விஸ்தாரமான பூஜை முடிந்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கிய பின் பக்தர்கள் சாப்பிடப் போகும் வரை ரகோத்தமன் உட்பட இந்த மாணவர்களுக்கு வேலை பெண்டு கழன்று விடும்.

வயதான பக்தர்கள் உணவு அருந்தச் செல்லும்போது இந்த மாணவர்கள்தான் அவர்களைப் பத்திரமாகக் கூட்டிச் சென்று உணவு அருந்தும் இடத்தில் அமர வைப்பார்கள். அவர்கள் உணவு அருந்தி முடித்ததும், பத்திரமாக வெளியே அழைத்து வர வேண்டும்.

இப்படிக் காலையில் துவங்கி மதியம் உணவு அருந்துகிற வேளை வரை ஏராளமான பணிகளில் இந்த மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால், மதிய சாப்பாட்டுக்கென உணவுக் கூடத்துக்கு இவர்கள் செல்லும்போது பெரும்பாலான அயிட்டங்கள் காலியாகி விடும்.

எத்தனையோ பக்தர்களை அழைத்துச் சென்று உணவு அருந்த உதவிய இந்த மாணவர்கள் சாப்பிடுவதற்குப் பல அயிட்டங்கள் இருக்காது. பக்தர்களுக்குப் பரிமாறுவதற்கென்று பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட வடை, பாயசம், ஸ்வீட்இப்படிப்பட்டவை மருந்துக்குக்கூட இருக்காது. சாதம், சாம்பார், ரசம், ஏதோ ஒரு கறி (பொரியல்) இவைதான் ஏனோதானோ என்று மிச்சம் இருக்கும். அதுவும் சூடாக இருக்காது.

இதுவாவது பரவாயில்லை. சில தினங்களில் பத்துப் பேர் சாப்பிடுகிற உணவு மட்டுமே சமையலறையில் மிச்சம் இருக்கும். அதை சேவை செய்த இந்த இருபது மாணவர்கள் பகிர்ந்து சாப்பிட வேண்டும். என்றாலும், முகம் சுளிக்காமல் அதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்.

சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கின்ற பரிசாரகர்கள் சிலர் பரிதாபப்பட்டு, ”பசங்களாசித்த உக்கார்றேளாஒங்களுக்கு வேறு ஏதாவது சூடா தயார் பண்ணித் தர்றேனே என்று கரிசனத்துடன் கேட்பார்கள்.

ஆனால், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விதம் விதமாகச் சமைத்துப் போட்ட அந்தப் பரிசாரகர்களது முகத்தில் தென்படும் களைப்பைப் பார்த்து விட்டு, ”பரவாயில்லை மாமாஇதுவே எங்களுக்குப் போதும். நாங்க ஷேர் பண்ணிச் சாப்பிட்டுக்கிறோம். பெரியவா பிரசாதமான இந்த சாப்பாடே தேவாமிர்தமா இருக்கு என்று அனைவரும் சந்தோஷமாகச் சொல்லி, இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். பரிசாரகர்களுக்கு அந்த வேளையில் சிரமம் தருவதை எந்த மாணவருமே விரும்புவதில்லை.

கிடைத்ததை உண்டு முடித்து விட்டு வெளியே வரும்போது, ரகோத்தமன் உட்பட இந்த மாணவர்கள் அனைவரும்நாம் வந்திருப்பது இங்கே சாப்பிடுவதற்கு அல்லமகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யத்தானேஎனவே நமக்கு உணவு ஒரு பொருட்டல்ல என்று தங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால், வாய்க்கு வக்கனையாகச் சாப்பிடத் தூண்டும் இந்த சிறிய வயதில் இப்பேர்ப்பட்ட ஒரு தியாக மனப்பான்மை கொண்ட மாணவர்களைப் பற்றி சர்வ வியாபியான மகா பெரியவாளுக்குத் தெரியாமலா இருக்கும்?!

ஒரு நாள் கைங்கர்யம் எல்லாம் முடித்து, வழக்கம்போல் கிடைத்த உணவைச் சாப்பிட்டு விட்டுத் தங்கள் வீடுகளுக்குப் புறப்படுவதற்காக வெளியே வந்தார்கள் மாணவர்கள்.

சம்ஸ்கிருதக் கல்லூரியின் வாசல் வரை வந்து விட்ட ரகோத்தமன் மற்றும் அவனுடன் வந்த மாணவர்களை நோக்கி மடத்துச் சிப்பந்தி ஒருவர் வேகமாக ஓடி வந்தார். ரகோத்தமனைப் பார்த்து, ”ஒங்க எல்லாரையும் பெரியவா கூட்டிண்டு வரும்படி சொன்னா. எங்கூட வாங்கோ என்றார்.

ரகோத்தமனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ‘தினமும் பெரியவா அருகில் இருந்து சேவை செய்கிறோம்என்றாலும், இதுவரை அந்த மகான் நம்மை அருகே அழைத்து ஒன்றும் பேசவில்லையேஅவ்வப்போது ஒரு புன்முறுவல் மட்டும் பூக்கிறாரே என்று இந்த மாணவர்கள் மனதுக்குள் இருந்த ஏக்கத்துக்கு, இதோ ஒரு முற்றுப்புள்ளி!

ஆஹாகருணை தெய்வத்திடம் இருந்து இன்று நமக்கு அழைப்பு வந்து விட்டது என்று ரகோத்தமனும் மற்ற மாணவர்களும் நெகிழ்ந்து, அந்தச் சிப்பந்தியைத் தொடர்ந்து நடந்தார்கள்.

மகா பெரியவா அமர்ந்திருந்த திருச்சந்நிதி முன்னால் கொண்டு வந்து விட்டு விட்டு, பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்த சிப்பந்தி, சற்றுத் தள்ளி நின்றார்.

ரகோத்தமன் உட்பட அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தனர். கைகளைக் கூப்பிக் கொண்டு எழுந்து நின்றனர். அனைவரின் கண்களிலும் ஒரு பரவசம் தெரிந்தது.

இருபது மாணவர்களையும் மகா பெரியவா ஒரு புன்னகையுடன் பார்த்தார். ரகோத்தமனைப் பார்த்தார். ”எல்லாரும் சாப்டுட்டேளா? என்றார்.

சாப்டாச்சு பெரியவா என்று மாணவர்கள் அனைவரும் கோரஸாகச் சொன்னார்கள்.

பிறகு அனைவரையும் ஆழ்ந்து பார்த்து விட்டு, ”எல்லா அயிட்டமும் ஒங்களுக்கு தெனமோமும் கிடைச்சிண்டிருக்கா என்று வாத்ஸல்யத்துடன் கேட்டார் மகா பெரியவா.

என்ன பதில் சொல்வதென்று எவருக்கும் புரியவில்லை

ரகோத்தமன் உட்பட அனைத்து மாணவர்களும் அதிர்ந்து போனார்கள்.

வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு சமையல்கட்டில் கடைசிப் பந்தியில் அமர்ந்து கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறோம். இதனால், ஸ்பெஷலாகத் தயார் செய்த இனிப்புகள் உட்பட ஒரு சில அயிட்டங்கள் நம் இலையில் விழுவதில்லைதான். உண்மை. ஆனால், இது மகா பெரியவாளுக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு துல்லியமாகக் கேட்கிறாரே என்று வியந்தார்கள் மாணவர்கள்.

மகன் மீது பாசத்தையும் பரிவையும் பொழியும் ஒரு தாயன்பு போல் மகா பெரியவாளின் கேள்வி அமைந்திருந்தது.

எல்லா அயிட்டங்களும் உங்களுக்குக் கிடைச்சிண்டிருக்கா? என்று மகா பெரியவா கேட்டதன் பொருள், முதல் பந்தியில் பரிமாறப்பட்ட அனைத்தும் உங்களுக்கும் சாப்பிடக் கிடைக்கிறதா என்று அர்த்தம்.

ரகோத்தமனுக்குப் பதில் சொல்லத் தயக்கம். காரணம், உண்மையான பதிலை மகானிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று சின்ன யோசனை.

கிடைக்கிறது என்று சொன்னால் அது பொய்.

கிடைக்கவில்லை என்று சொன்னால், சபை நாகரிகம் தெரியாதவர்களாக ஆகி விடுவோம். காரணம், அப்போது மகா பெரியவாளைச் சுற்றி ஏராளமான பக்தர்களும் சில வி..பி.க்களும் காணப்பட்டனர்.

ரகோத்தமன் மட்டுமல்லஅவனைச் சுற்றி நின்றிருந்த எந்த ஒரு மாணவனும் இதற்குப் பதில் சொல்லவில்லை.

பெரியவா மீண்டும் இவர்களை ஒரு முறை இடதும் வலதுமாகப் பார்வையைத் திருப்பிப் பார்த்து விட்டு, ஒரு புன்னகையுடன் அனைவரையும் பார்த்துச் சொன்னார்:

நேக்கு (எனக்கு) எல்லாமும் தெரியும்.

ரகோத்தமன் வியப்புடன் மகா பெரியவாளைப் பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்து இவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் இருந்தது.

மகா பெரியவா சொன்னார்: ”நேக்கு தெரியும்என்னை தரிசனம் பண்ண வர்ற பக்தாளை வரிசைப்படி அனுச்சு வெச்சு, பிரசாதம் வாங்கி முடிச்சவாளை எல்லாம் சமையல்கட்டுக்குப் பத்திரமா அனுப்பி, சாப்பிட்டு முடிச்சவாளை வெளியே அனுச்சுட்டு, சாப்பிடக் காத்துண்டு இருக்கறவாளை மீண்டும் உள்ளே அனுப்பிஇப்படி எல்லாத்தையும் கவனிச்சப்பறம் நீங்கல்லாம் சமையல்கட்டுக்குப் பசியோட சாப்பிடப் போறப்பஅங்கே பல அயிட்டங்கள் காலி ஆயிடறது. இல்லியா? வாய்க்கு ருசியான பதார்த்தங்கள் எல்லாம் சின்ன வயசுப் பசங்களான ஒங்களுக்குக் கிடைக்க மாட்டேங்கிறது என்று விஸ்தாரமாகச் சொல்லி முடித்தார்.

எப்படித் தங்கள் மனசுக்குள் இருப்பதை அப்படியே மகா பெரியவா கொட்டுகிறார் என்று ரகோத்தமன் உட்பட மாணவர்கள் அனைவரும் ஆச்சரியமாக மகா பெரியவாளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சின்ன வயசுப் பசங்கள்அதுவும் மகா பெரியவாளுக்கு சேவை செய்கிறவர்கள் சரியாக சாப்பிட முடியவில்லையே என்று தெரிந்ததும், அங்கே அமர்ந்திருந்தவர்கள் ஒரு பரிதாபத்தை முகத்தில் தேக்கிக் கொண்டு மாணவர்களைப் பார்த்தனர்.

இதை அடுத்து அருகில் இருந்த ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே வரவழைத்தார் மகா பெரியவா.

அந்த சிப்பந்தி மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டு அவர் இடப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார்.

ஒரு பெண்மணியின் பெயரைச் சொல்லி விட்டு, அவரை உடனே தன்னிடம் அழைத்து வருமாறு சிப்பந்திக்கு உத்தரவிட்டார்.

சிப்பந்தி அங்கிருந்து ஓடினார். போன சுவடு தெரியாமல் மகா பெரியவா அழைத்து வரச் சொன்ன பெண்மணியுடன் திரும்பினார்.

அந்தப் பெண்மணிக்கு வியப்பு தாங்க முடியவில்லை. முகாமில் இருந்து தன் இல்லத்துக்குத் திரும்ப இருந்த வேளையில் இந்த ஆனந்தமான அழைப்பு. மிகவும் நெகிழ்ந்து போய் விட்டார்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, கைகளைக் கூப்பியபடி அந்தப் பரப்பிரம்மத்தையே கருணையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பெண்மணி.

பெண்மணியின் பக்கம் மகா பெரியவா பார்வை திரும்பியது. ”இங்கே பக்கத்துத் தெருவுலதானே உன் வீடு இருக்கு? என்று கேட்டார்.

ஆமா பெரியவா. இதோ, இங்கேர்ந்து கூப்பிடு தூரத்துலதான் இருக்கு என்றார்.

ஒரு உபகாரம் பண்ணுவியா? என்று பெரியவா அந்தப் பெண்மணியின் முகத்தை ஏறிட்டார்.

மகா பெரியவா இப்படிக் கேட்டதும், பெண்மணிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ”சொல்லுங்கோ பெரியவாநான் என்ன ஒத்தாசை பண்ணணும். எதுவா இருந்தாலும் காத்துண்டுருக்கேன் என்றார்.

தன் அருகே நின்று கொண்டிருந்த ரகோத்தமன் மற்றும் மாணவர்களைக் கைகாட்டிப் பேசினார் மகா பெரியவா. ”தோ நின்னுண்டு இருக்காளேஇந்தப் பசங்க எல்லாம் தெனமும் இங்க வந்து கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கா. ஜோலி எல்லாம் முடிஞ்சு மதியானம் சாப்பிடப் போறப்ப சமையல்கட்டுல ஒண்ணும் இருக்க மாட்டேன்கிறது. பெரும்பாலான பாத்திரங்கள் காலி ஆயிடறது. இந்த சின்ன வயசுல, அதுவும் மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சு முடிச்ச பிறகு மதியானம் வயித்தைக் காயப் போட்டுண்டு இங்கேர்ந்து போறா. இந்த விஷயத்தை என்கிட்டகூட சொல்லாம இருக்காஇவா தினமும் மதியானம் வயிறார சாப்பிடணும். நன்னா வாய்க்கு ருசியா சாப்பிடணும். அதனால…. – மகா பெரியவா சற்று நிறுத்த

அந்தப் பெண்மணி கூப்பிய திருக்கரங்களோடு பெரியவாளை ஏறிட்டார். ”சொல்லுங்கோ பெரியவா. நான் என்ன பண்ணணும்?

தினமும் மதிய வேளையில இவாளோட கைங்கர்யம் இங்கே முடிஞ்சதும், இவா அத்தனை பேரையும் உங்காத்துக்குக் கூட்டிண்டு போகணும். அங்கே இவாளுக்கு எந்தக் குறையும் இல்லாம வடை, பாயசத்தோட சாப்பாடு போடணும். போடுவியா? என்று மகா பெரியவா கேட்டதும், சந்தோஷத்தில் பெண்மணிக்குப் பேச்சே எழவில்லை.

பெரியவாஉங்க திருவாயால எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை எனக்குக் கொடுத்திருக்கேள். சந்தோஷமா போடறேன் பெரியவா. தினமும் மதியானம் இங்கேர்ந்து எங்காத்துக்குக் கிளம்பறப்ப, இவா அத்தனை பேரையும் கூட்டிண்டு போயிடறேன். இவாளுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டு நன்னா கவனிச்சுக்கிறேன் என்று சொல்லி விட்டு, கைகளைக் கூப்பி வணங்கி விட்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டு கண்ணீர் மல்க நமஸ்காரம் செய்தார் பெண்மணி.

அந்தப் பெண்மணியை ஆசிர்வதித்த மகா பெரியவா, ரகோத்தமனையும் மற்ற மாணவர்களையும் பார்த்து, ”நாளைலேர்ந்து ஒங்க அத்தனை பேருக்கும் இவா ஆத்துல விருந்து சாப்பாடு என்று சொல்லிப் புன்னகைத்தார்.

ரகோத்தமனும் மற்ற மாணவர்களும் உற்சாகமாகத் தலையை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

பிறகென்னஅடுத்த நாள் மதியத்தில் இருந்து, மகா பெரியவா அடையாளம் காட்டிய அந்தப் பெண்மணியின் வீட்டில் தடபுடல் விருந்து.

எல்லாமே சுடச் சுட

சுவையான இனிப்புகள் என்னபட்சணங்கள் என்ன

ரகோத்தமனும் மற்ற மாணவர்களும் திக்குமுக்காடிப் போனார்கள்.

சம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் முடிகின்ற நாளில் ரகோத்தமனையும் மற்ற மாணவர்களையும் ஸ்பெஷலாக அழைத்து, அவர்களைப் பற்றித் தனித் தனியே விசாரித்து, ஆசி வழங்கினார் மகா பெரியவா. அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு கிராமில் தங்கக் காசும் வழங்கினார்.

இன்றைக்கு 74 வயதான ரகோத்தம ராவ் இதைச் சொல்லும்போது அவரையும் அறியாமல் அவரது கண்கள் பனிக்கின்றன.

மகா பெரியவா சொல்லி எங்களுக்கு தினமும் சாப்பாடு போட்டா அந்த மாமி. ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை வெரைட்டிஎன்ன ஒரு உபசரிப்புஆகாருசியான அந்த சாப்பாட்டை இன்னிக்கு நினைச்சுப் பார்த்தாலும் என் கண்கள்ல ஜலம் தளும்பறது. மகா பெரியவா கண்ணுக்கு முன்னால் வர்றார். சாப்பாடு போட்டு எங்க வயத்தை மட்டும் நிறைக்கலை. மனசையும் நிறைச்சுட்டார் என்ற ரகோத்தம ராவ் ஒரு சிறு இடைவெளி விட்டார்.

பிறகு, ”வாலண்டரி சர்வீஸுக்காகப் போய், அவர் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுத்து. மகா பெரியவாதான் எல்லாம்னு என் வாழ்க்கை மாறிப் போச்சு. அவர் கண்கண்ட தெய்வம்னு சொன்னா, அதுல எள்ளளவும் சந்தேகமில்லை. இன்னிக்கும் என் குடும்பத்தைக் காப்பாத்திண்டு வர்றார் என்றவர் மிக சமீபத்தில் அந்த மகான் தன் குடும்பத்தில் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிச் சொன்னார். அடுத்த அத்தியாயத்தில் இதைப் படிக்கலாமா?