‘மாமருத்துவர்‘ என்றால் ஆன்மிகத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவானைக் குறிக்கும். மகாவிஷ்ணுவின் ஓர் அவதாரம்தான் இந்த தன்வந்திரி பகவான்.
நம்மை நோய் அணுகாமல் இருப்பதற்கு இவரை வேண்டிக் கொண்டால், நற்பலன் நிச்சயம். தன்வந்திரி பகவானுக்கென்று பிரத்தியேகமாக அமைந்த கோயில்கள் குறைவு. அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஓர் ஆலயம் வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை மதுராவில் ‘ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்‘ என்ற பெயருடன் அமைந்துள்ளது. வைத்தியக் கடவுளான இவர் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டிக் கொண்டு, மருத்துவர்கள் அணியும் ஒயிட் கோட் அணிந்து திருக்காட்சி தருவார்.
அதுபோல் நடமாடும் தன்வந்திரி பகவானாக சமீப காலத்தில் நம்மிடையே வாழ்ந்தவர் – இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பவர் – காஞ்சி மகா பெரியவா.
இந்த மகான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல… இன்றைக்கும் தன்னை பரிபூரணமாகச் சரண் புகும் பக்தகோடிகளுக்கு அவர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகிறார். நோய்களைக் குணமாக்கி வருகிறார்.
மிக மிக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வே இதற்குக் கண் கண்ட உதாரணம்.
சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் சுகந்தி. இவரது கணவர் பெயர் விஸ்வநாதன்.
சுகந்தியின் வயிற்றில் மிக்ஷீக்ஷீவீtணீதீறீமீ ஙிஷீஷ்றீ ஷிஹ்ஸீபீக்ஷீஷீனீமீ என்கிற ஒரு பிரச்னை இருந்து வந்தது.
இது வயிறு சம்பந்தமான ஒரு வியாதி.
இந்தப் பிரச்னை இருந்தால் உடலுக்கு என்ன ஆகும்?
என்ன சாப்பிட்டாலும், சாப்பிட்டதற்கு உண்டான ஒரு திருப்தி ஏற்படாது.
எது சாப்பிடாலும் அது ஜெரிமானம் ஆகாமல், மேலே எதிர்த்துக் கொண்டு வருவது போல் இருக்கும். ஏப்பம் ஏப்பமாக வரும்.
வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் காணப்படும்.
காரம், உப்பு தவிர்க்கப்பட வேண்டும். எதையும் வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.
படுக்கையை விட்டு எழுந்தால் தலை சுத்தல் வரும்.
வயிறு முழுவதும் நிறைந்திருக்கக் கூடாது. அதாவது, அதிகமான உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஜெரிமானம் ஆகாத காரணத்தால், உணவை மூன்று வேளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஆறு வேளை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் சுகந்திக்கு அறிவுறுத்தி இருந்தார்கள்.
–மேலே குறிப்பிடப்பட்ட அத்தனையையும் படித்தாலே நமக்குத் தலை சுற்றுகிறது. இப்படிப்பட்ட ஒரு பிரச்னை எவர் ஒருவருக்கு இருந்தாலும், அவரது நிலை பரிதாபத்துக்குரியதுதான்.
ஆனால், சுகந்தி இவற்றை எல்லாம் அனுபவித்து வந்திருக்கிறார்.
அதுவும் ஒரு வருடமா, ரெண்டு வருடமா என்றால், கொஞ்சநஞ்சமில்லை. சுமார் பதினாறு வருடங்களாக இந்தப் பிரச்னையுடன் போராடி இருக்கிறார். ஒரு விசேஷத்துக்குப் போனால் வயிறு நிரம்பச் சாப்பிட முடியாது. பிடித்த அயிட்டமாக இருக்கிறதே என்று ஓரிரு பீஸ் எக்ஸ்ட்ரா எடுத்தும் சாப்பிட முடியாது.
இவை எல்லாம் சாதாரணமான வயிற்றுப் பிரச்னை என்ற நினைப்பிலேயே அதிக காலத்தை ஓட்டி இருக்கிறார் சுகந்தி. இப்படி வித்தியாசமான ஒரு பெயர் கொண்ட வியாதி தனக்கு இருப்பது வெகு நாட்களாக சுகந்திக்குத் தெரியவே இல்லை. ‘எல்லாம் சாதாரணமான அஜீரணக் கோளாறாகத்தான் இருக்கும்… போகப் போக சரியாகி விடும்‘ என்றே ஒவ்வொரு நாளையும் கழித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வலியைப் பொறுக்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் ஒரு நாள் மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செய்து பார்த்தபோதுதான் இது என்ன பிரச்னை என்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் இந்த நோயின் பெயரைச் சொல்லி, அதற்குண்டான விளக்கத்தைச் சொன்னபோது ஆடிப் போய் விட்டார் சுகந்தி.
சுகந்தியை ஆறுதல்படுத்தி, ”விரைவில் குணமாக்கி விடலாம். கவலைப்படாதீர்கள்” என்று சொல்லி, சிகிச்சைகளும் ஆரம்பமாயின.
‘இத்தனை வருடங்களாக இந்த வியாதியுடன் இருந்திருக்கிறோமே… என்ன பிரச்னை என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைகள் துவங்கி இருக்கின்றன… இந்த நிலையில் நான் எப்போது பூரண நலம் பெறுவது?‘
– இதைப் பற்றி யோசித்த சுகந்திக்கு மகா பெரியவாதான் தன்வந்திரி பகவானாகத் தெரிந்தார். ‘அவரை விட்டா நமக்கு வேறு யாரும் கிடையாது‘ என்று நம்பி, தினமும் தான் வணங்கும் மகா பெரியவாளிடம் இந்தப் பிரச்னை பற்றிச் சொல்லி மனமுருகப் பிரார்த்தித்திருக்கிறார்.
தன் உண்மையான பக்தகோடிகளுக்கு இன்றைக்கும் மகா பெரியவா கற்பக விருட்சமாக – காமதேனுவாக அருளி வருகிறார்.
அதுபோல் தன் ஆத்மார்த்த பக்தையான சுகந்தியின் பிரச்னைக்கும் மகா பெரியவாளே அற்புதமான தீர்வை அருளினார்.
எப்படி அருளினார்?
கனவின் மூலம்!
ஒரு நாள் நள்ளிரவு சுகந்தி நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது அவரது கனவில் மகா பெரியவா எழுந்தருளினார். நடமாடும் தெய்வம் தன் கனவில் தோன்றியவுடன் பயபக்தியோடு நமஸ்கரித்து வணங்கினார்.
அதன் பின் இது நாள் வரை சுகந்தி தவித்துக் கொண்டிருக்கும் இந்த வயிற்று உபாதை பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கொடுத்தார்.
என்ன தீர்வு?
வயிற்று வலி என்று பெயர் சொல்ல முடியாத ஒரு வியாதியோடு அவஸ்தைப்பட்டிருக்கும் சுகந்திக்கு, ஒரு பரிபூரண நிவாரணமாக அது அமையும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சுகந்தியின் கனவில் மகா பெரியவா அருளிய வார்த்தைகள் இவைதான்…
‘ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள ஆலயத்துக்குச் சென்று விளக்கேற்றி விட்டு வா. இந்த ஆலயத்துக்கு அருகில் ஒரு காளி கோயில் இருக்கும்.
உன் மேல் வயிற்றில்தான் பிரச்னை. உன்னுடைய பிரச்னை இந்த ஆலயத்துக்கு விளக்கேற்றுவதன் மூலம் தீர்ந்து விடும்‘ என்று கூறி மறைந்து விட்டார்.
‘ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவில் என்றால், எந்தத் திக்கு? ராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் நிறைய கோயில்கள் இருக்கின்றனவே? எப்படிக் கண்டுபிடிப்பது? அருகில் ஒரு காளி கோயில் இருக்கும் என்று சொன்னாரே… பிரபலமான காளி கோயில் எதுவும் ராமநாதபுரத்துக்கு அருகில் இருக்கிறாற்போல் தெரியவில்லையே?‘
– இப்படி ஏகத்துக்கும் குழம்பினார் சுகந்தி.
வியாதியின் வலியைப் போக்க வழி தெரிந்தாயிற்று. ஆனால், வலியைப் போக்குவதற்கு உண்டான ஆலயம் செல்லும் வழி எது என்று தெரியாமல் தவித்தார் சுகந்தி.
தனக்குத் தெரிந்தவர்களிடம் விவரம் சொல்லி, ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பித்தனர், சுகந்தியும் விஸ்வநாதனும்.
ஆனால், மகா பெரியவா சொன்ன குறிப்புடன் கூடிய கோயில் எது என்று அவ்வளவு சுலபத்தில் தெரிய வரவில்லை.
ஒரு சில நாட்கள் கழித்து ஒரு ஆன்மிக அன்பர் மூலம் மகா பெரியவா கனவில் சொன்ன ஆலயம் எங்கு இருக்கிறது எனத் தெரிய வந்தது, சுகந்தியின் நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்.
‘ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ள ஊர் என்றால், அது உத்தரகோசமங்கையாகத்தான் இருக்க வேண்டும். அங்கே மரகத நடராஜர் இருக்கின்ற ஆலயத்தில் வயிறு சம்பந்தமான பிரார்த்தனைக்கு வந்து விளக்கேற்றும் வழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறதாம். அதுவும் தவிர, நீங்கள் சொன்னது போலவே இந்த ஆலயத்துக்கு அருகே ஒரு சின்ன காளி கோயிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்‘ என்று அந்த அன்பர் விசாரித்து விட்டுச் சொல்லி இருக்கிறார்.
‘ஆகா… வயிற்று உபாதை தீர்வதற்குக் கனவில் மகா பெரியவா சொன்ன கோயில் எங்கே என்று கண்டுபிடித்தாயிற்று. அடுத்து அங்கே போய் விளக்கேற்ற வேண்டியதுதான்‘ என்று சுகந்தியும் அவரது கணவர் விஸ்வநாதனும் கடந்த 2015ம் வருடம் நவம்பரில் தயாரானபோதுதான் சென்னையை விட்டு எங்கும் நகர முடியாத பெரும் அவலம். கடும் மழை பெய்து, சென்னையே உருக்குலைந்த சோகத்தை எவரும் மறக்க முடியாது. எனவே, சென்னையில் இருந்து எந்த ஒரு ஊருக்கும் நகரவே முடியாத சூழல். போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டது.
என்றாலும், மகா பெரியவா சொன்ன தீர்வை உடனடியாகச் செய்து விட வேண்டும் என்று அந்த நேரத்திலும் துடியாய்த் துடித்தார் சுகந்தி.
‘ஆபத்துக்குப் பாவம் இல்லை. நாம் நேரில் போய் செய்யா விட்டால் என்ன… நம் சார்பாக வேறு யாரையேனும் செய்யச் சொல்லலாமே?‘ என்று தீர்மானித்தார் சுகந்தி.
அந்த வேளையில்தான் தன் கணவர் விஸ்வநாதனின் சகோதரி கமலாவின் நினைவு வந்தது.
கமலா வசிப்பது சிவகங்கையில். அங்கிருந்து அவர் உத்தரகோசமங்கை செல்வது எளிது. ‘நாம் இப்போது செல்ல முடியாததால், நம் சார்பாக கமலாவை அனுப்பி உத்தரகோசமங்கை ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்லுவோம். நாம் இங்கிருந்தபடியே பிரார்த்தித்துக் கொள்வோம்‘ என்று தீர்மானித்து, சிவகங்கையில் வசிக்கும் கமலாவுக்குத் தகவல் சொன்னார். அவரும், இதற்குச் சம்மதித்தார்.
ஒரு நல்ல நாளில் உத்தரகோசமங்கைக்கு கமலா சென்று, ஆலயத்தில் விளக்கேற்றி, சுகந்திக்காக வேண்டிக் கொண்டார்.
ஆலயத்தில் கொடுத்த விபூதி, குங்குமப் பிரசாதங்களை சுகந்திக்கு அனுப்பி வைத்தார் கமலா. இந்தப் பிரசாதங்களை எடுத்துக் கொண்ட பின், சுமார் 16 வருடங்களாக சுகந்தியை வாட்டிக் கொண்டிருந்த வயிற்று உபாதை, முற்றிலுமாக நீங்கி விட்டது என்பது, மகா பெரியவா இன்றைக்கும் நிகழ்த்தி வருகிற அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதில் இன்னொரு அதிசயமான விஷயத்தையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
உத்தரகோசமங்கை ஆலயத்தில் கமலா விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தபோது அந்த ஆலயத்தின் அர்ச்சகர் சொன்னாராம்:
”மகா பெரியவாளே உங்க உறவுக்காரா கனவுல வந்து சொன்னாரா… அவர் கண் கண்ட கடவுளாச்சே… அவர் கனவுல வந்து சொன்ன இந்தப் பிரார்த்தனை இந்த ஆலயத்துல ரொம்ப விசேஷமான ஒண்ணு. சுமார் நாப்பது, அம்பது வருஷங்களுக்கு முன்னால இந்தப் பகுதியில இருந்த ஒரு இஸ்லாமிய அன்பரோட மனைவிக்கு தாள முடியாத வயிற்று வலி. அப்ப அந்த இஸ்லாமிய அன்பர் இந்த ஆலயம் வந்து விளக்கேற்றி வழிபட்டிருக்கிறார். அதன் பின் அவரது மனைவிக்கு இருந்த வயிற்று வலி போயிடுத்து. இதற்கான ஒரு கல்வெட்டுகூட இந்த ஆலயத்துல இருக்கு.”
ஆக, மகா பெரியவா என்கிற நடமாடும் தெய்வம் தன் பக்தர்களை எப்படி எல்லாம் காப்பாற்றி வருகிறார் என்று தெரிய வருகிறபோது, அவரது திருப்பாதம் பணிந்து நாமும் சரண் புகுந்து பிரார்த்தனை செய்வதைத் தவிர, வேறு வழி இல்லை.