கலியுக தெய்வமாக இன்றைக்கும் நம்மிடையே வாழ்ந்து வருகிற காஞ்சி மகா பெரியவா, நூறு ஆண்டுகள் இந்த பூலோகத்தில் நடமாடினார்.
1894-ஆம் ஆண்டில் அவதரித்த இந்த மகான் 1994-ல் தன் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு காஞ்சி மாநகரில் ஸ்ரீசங்கர மடத்தில் திருச்சமாதி கொண்டார். மகா பெரியவா சமாதி கொண்டிருக்கும் புனிதமான இடத்தை ‘பிருந்தாவனம்‘ என்று அழைக்கின்றோம்.
1990-க்குப் பிறகு வயோதிகம் மற்றும் உடல் அசவுகரியம் காரணமாக மகா பெரியவா எங்கும் செல்லவில்லை. தன் தரிசனம் தேடி வரக் கூடிய பக்தர்களுக்கு காஞ்சி ஸ்ரீமடத்தில் – ஓரிடத்தில் அமர்ந்தபடி – வேறு எங்கும் நகராமல் தரிசனம் தந்தார்.
முக்கிய பிரமுகர்கள் எவரேனும் ஸ்ரீமடத்துக்கு மகா பெரியவா தரிசனத்துக்கு வந்தால் அவர்களை மகா பெரியவா அருகே அழைத்துச் சென்று அமர வைப்பார்கள்.
தரிசனத்துக்கு வருகின்ற பக்தகோடிகள் மகா பெரியவா இருக்கின்ற இடத்தில் இருந்து சுமார் பத்தடி, பதினைந்து அடி தள்ளி வரிசையில் சென்றபடி தரிசிக்கும் முறை ஏற்பாடு செய்யப்பட்டது.
மகா பெரியவா ஸித்தி ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அவரைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வந்திருந்தார்.
மகா பெரியவாளைத் தரிசித்து விட்டு அதன் பின் லண்டனுக்குப் பயணமாக இருந்தார் வாரியார். அங்கே சொற்பொழிவுக்கு ஏற்பாடு ஆகி இருந்தது. 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி லண்டனுக்குப் பயணமாக இருந்தார் வாரியார்.
வாரியார் வந்த தினத்தன்று காஞ்சி சங்கர மடமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ‘நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டும்… அவரது கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டும்‘ என்று எண்ணற்ற அன்பர்கள் காஞ்சி மடத்தில் குவிந்திருந்தனர்.
வாரியார் சுவாமிகளை ஸ்ரீமடத்துக் காரியஸ்தர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, மகா பெரியவா இருந்த இடத்துக்கு அருகே அமர வைத்தார்கள்.
சிவ பூஜை செய்பவர் என்பதாலும், தீவிரமான சிவ பக்தர் என்பதாலும் தன் கழுத்தில் சிவலிங்கத்தைக் கோர்த்த ஒரு மாலையை அணிந்திருப்பார் வாரியார். சாதாரணமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யும்போது ஒருவர் கழுத்தில் தவழ்கிற சங்கிலியானது தரையில் புரள்வது இயல்பு. அதுபோல் வாரியார் தனக்கு நமஸ்காரம் செய்தால் அவரது கழுத்தில் மாலையோடு இருக்கிற சிவலிங்கம் தரையில் படக் கூடும்… அப்படி நடக்கக் கூடாது. அது சிவனுக்கு செய்கிற அபசாரம் என்று மகா பெரியவா உணர்ந்து பல வருடங்களுக்கு முன்னரேயே ‘வாரியார் எப்போது என்னை தரிசிக்க வந்தாலும் அவர் எனக்கு நமஸ்காரம் செய்யக் கூடாது. நீங்கள் அனைவரும் இதைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்‘ என்று ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளுக்கு மகா பெரியவா உத்தரவே போட்டிருந்தார்.
வாரியார் ஸ்ரீமடத்துக்கு வரும்போதெல்லாம் மகா பெரியவாளின் இந்த உத்தரவு கவனமாகப் பின்பற்றப்பட்டது. மகா பெரியவாளைப் பார்த்தவுடன் சைகை மூலமும், வார்த்தைகள் மூலமும் தன் நமஸ்காரத்தைத் தெரிவிப்பார் வாரியார்.
அன்றைய தினமும் நடமாடும் தெய்வமான மகா பெரியவாளுக்குத் தன் நமஸ்காரத்தை கரங்களின் மூலமாகவும், கண்களின் மூலமாகவும் தெரிவித்து விட்டு வெகு பவ்யமாகத் தரையில் அமர்ந்திருந்தார் வாரியார் சுவாமிகள்.
சொற்பொழிவு நிமித்தமாக வாரியார் லண்டன் செல்ல இருக்கும் விஷயத்தை ஸ்ரீமடத்து அணுக்கத் தொண்டர் ஒருவர் மகா பெரியவாளின் காது அருகே உரக்கச் சொன்னார்.
மகா பெரியவாளின் திருப்பார்வை பக்தர்கள் திரளான அமர்ந்திருந்த பகுதி எங்கும் பயணித்து விட்டு வாரியார் அமர்ந்திருந்த இடத்தின் மீது வந்து நின்றது.
‘எப்படி இருக்கே?‘ என்பதாக சைகையின் மூலமே விசாரித்தார் மகா பெரியவா.
இருந்த இடத்தில் இருந்தபடி எழுந்து கைகளைக் கூப்பி நடமாடும் தெய்வத்தை வணங்கினார் வாரியார். ”எம்பெருமான் முருகப் பெருமான் அருளால குறை எதுவும் இல்லாமல் இருக்கேன்” என்றார்.
தான் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி எதையோ தேடினார் மகா பெரியவா. பிறகு, தனக்கு அருகே தென்பட்ட ஒரு வெண்பட்டு வஸ்திரத்தை எடுத்துத் தருமாறு சிப்பந்தியிடம் ஜாடை காட்டினார்.
வெண்பட்டு மகா பெரியவா திருக்கரங்களுக்கு வந்தது. அதைக் கைகளில் வாங்கி ஒரு பந்து போல் சுருட்டி, வாரியாருக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு அன்பரை நோக்கி தூக்கி வீசினார் பெரியவா.
அந்த அன்பரும் மகா பெரியவா தன்னைக் குறி வைத்து இதை வீசுகிறார் என்பதை உணர்ந்து, பறந்து வரும் வெண்பட்டு வஸ்திரத்தை அப்படியே லாகவமாகப் பிடித்தார். இந்த அன்பரின் பெயர் ‘குண்டு‘ ரகு.
அந்தக் காலத்தில் ஸ்ரீமடத்தில் ஒரே பெயரில் இரண்டு மூன்று நபர்கள் பொறுப்பில் இருந்தால், அவரது பெயர்களுக்கு முன்னால் ஒரு அடைமொழி சேர்ந்து கொள்ளும். அப்போதுதான் அவர்களை அழைப்பதற்கு ஏதுவாக இருக்கும். பொத்தாம்பொதுவாக வெறும் பெயரை மட்டும் சொல்லி அழைத்தால், அந்தப் பெயர் கொண்டவர்கள் அனைவரும் திரும்பிப் பார்ப்பார்கள். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவே அடைமொழிகள்.
ரகு என்ற பெயரில் ஒருவருக்கு மேல் ஸ்ரீமடத்துக் கைங்கர்யத்தில் இருந்ததால், இந்த ரகுவுக்கு ‘குண்டு‘ என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது. காரணம், இவர் சற்று குண்டாகக் காணப்படுவார்.
மகா பெரியவா தன் மேல் வீசிய புத்தம் புது வெண்பட்டு வஸ்திரத்தை ரொம்ப பவ்யமாகக் கையில் வைத்துக் கொண்டு, அடுத்து மகா பெரியவா இடப்போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார் குண்டு ரகு.
‘அந்த சால்வையை அவருக்கு (வாரியாருக்கு) போர்த்து‘ என்பதாகத் தான் இருந்த இடத்தில் இருந்தபடி சைகை செய்தார் பெரியவா.
சால்வையைப் போர்த்தி வாரியாரை வணங்கினார் குண்டு ரகு.
அடுத்து, மகா பெரியவா ஒரு ருத்திராட்ச மாலையைத் தன் வலக் கையில் வைத்துக் கொண்டு ஜபம் செய்யத் துவங்கினார். பெரியவா ஜபம் செய்யத் துவங்கியதைப் பார்த்ததும், அங்கே பெரும் அமைதி நிலவியது.
சுமார் அரை மணி நேரம் கழித்து, மகா பெரியவா கண்களைத் திறந்தார். தான் அதுவரை வலக் கையில் வைத்து ஜபம் செய்த ருத்திராட்ச மாலையை, வெண்பட்டு வஸ்திரத்தை எப்படித் தூக்கி வீசினாரோ, அதுபோல் குண்டு ரகுவிடமே மீண்டும் வீசினார்.
‘சட்‘டென்று அதையும் பிடித்து, சர்வ ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டு பெரியவா இடப் போகும் உத்தரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் குண்டு ரகு.
அதற்கேற்றாற் போல் மகா பெரியவாளின் பார்வை குண்டு ரகுவின் மீது திரும்பியது. ‘அந்த ருத்திராட்ச மாலையை அவர் (வாரியார்) கழுத்துல போடு.‘
வாரியாருக்கு ஸ்ரீமடத்து மரியாதையாக ருத்திராட்ச மாலை அணிவிக்கப்பட்டது.
அடுத்து, மகா பெரியவா ஒரு மாதுளம் பழத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து சுமார் பத்து நிமிடங்கள் வைத்திருந்தார்.
அதன் பின் அந்த மாதுளம்பழத்தை குண்டு ரகுவை நோக்கி வீசினார். அதையும் கீழே விழாமல் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டார் ரகு.
மகா பெரியவா தரப் போகும் உத்தரவுக்காக அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் ரகு.
வலது ஆட்காட்டி விரலை மட்டும் அசைத்து, ‘இந்தப் பழத்தை அவரிடம் தா‘ என்பது போல் வாரியாரைக் காண்பித்துச் சொன்னார் பெரியவா.
மாதுளம்கனியும் இடம் மாறியது.
இதைக் காண நேர்ந்த பக்தர்கள் ஆனந்தப்பட்டார்கள். ”தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தனக்கு சன்மானமாக வருகிற பெரும்பாலான தொகையை ஆலயங்களின் கும்பாபிஷேகத்துக்காகச் செலவிடும் உயர்ந்த பண்பாளர் வாரியார் சுவாமிகளுக்கு மகா பெரியவாளின் அனுக்ரஹம் ரொம்ப விசேஷமானது” என்று சொல்லி பூரித்தார்கள்.
அதன் பின் ஸ்ரீமடத்துப் பிரசாதமாக விபூதி, குங்குமம், கல்கண்டு அனைத்தும் வழங்கப்பட்டது.
உத்தரவு பெற்றுப் புறப்படுவதற்காக வாரியார் எழுந்தார். மகா பெரியவாளைப் பார்த்துக் கண்கள் கலங்கக் கைகளைக் கூப்பியவாறு நின்றார்.
மகா பெரியவா ஆசிர்வதித்தார்.
எப்படித் தெரியுமா?
வழக்கமான பாணியில் அந்த ஆசி இல்லையாம்.
குண்டு ரகு நம்மிடம் சொன்னார்: ”பெரியவா தன்னோட வலக் கையை லேசா மார்பளவுக்குத் தூக்கி – உள்ளங்கை கீழிருக்கும்படியா வெச்சுண்டு – விர்ருன்னு மேலே போற மாதிரி நாப்பத்தஞ்சு டிகிரில நகர்த்தி – அப்படியே வலக் கையைத் தன் தலைக்கு மேல கையைத் திருப்பி வெச்சுண்டார். இதுக்கான அர்த்தம் அப்ப யாருக்குமே புரியல. வாரியார் சுவாமிகளும் அடுத்த ஒரு சில நாட்கள்ல லண்டனுக்குக் கிளம்பிப் போனார்.
லண்டன்ல இருக்கறச்சே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சையும் எடுத்துண்டார். முழுக்க கியூர் ஆகலை. 1993-ஆம் வருடம் நவம்பர் 6-ஆம் தேதி லண்டன்ல இருந்து மும்பை வந்தார். மறுநாள் 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு மும்பைலேர்ந்து சென்னை வர்ற விமானத்துல பயணம் செய்தார். பாவம், விமானம் சென்னை வந்து இறங்குவதற்குள் வாரியாரின் உயிர் விமானத்திலேயே பிரிந்து விட்டது. முருகப் பெருமான் அவரை ஆட்கொண்டு விட்டான்.
அந்த நாள்ல சொல்லுவா – ‘வாரியார் சென்னை வந்த விமானம் திருச்செந்தூர் செந்திலாண்டவன் ஆலய ராஜகோபுரத்துக்குப் பல ஆயிரம் அடிகள் மேலே பயணித்தபோது முருகப் பெருமானே அவரைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டு விட்டான்‘ என்று.
இந்த சோகமான நிகழ்ச்சிக்குப் பிறகுதான் வாரியார் சுவாமிகளுக்கு மகா பெரியவா அன்று ஏன் அப்படி ஆசி வழங்கினார் என்பது அனைவருக்கும் புரிந்தது. ‘நீ விமானத்தில் போய்க் கொண்டிருக்கும்போதே முருகப் பெருமான் உன்னைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டு விடுவான்‘ என்ற அர்த்தத்தில் விமானம் போவது போல் சைகை செய்து உணர்த்தி இருக்கிறார்” என்றார் குண்டு ரவி.
தனது இறப்பு பூலோகத்தில் கிடையாது என்பதை வாரியாரும் சூசகமாக டிரைவர் ஒருவரிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார் என்பதும் வியப்புக்குரியது.
வாரியார் ஒரு முறை சொற்பொழிவுக்காக மும்பை சென்றிருக்கிறார். அப்போது இவருக்கு டிரைவராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர் பெயர் கந்தசாமி. ஒரு நாள் காரில் வாரியார் சென்று கொண்டிருக்கும்போது டிரைவரைப் பார்த்து, ”யப்பா கந்தசாமி… ஒன்னை முருகப் பெருமான்தான் எனக்கு சாரதியா அனுச்சிருக்கான் போலிருக்கு. என்னோட இறப்பு பூலோகத்தில் நிகழாது. ஆகாசத்துல பறந்திட்டிருக்கும்போது என் உயிர் பிரிந்து விடும். முருகன் பெருமான் மயில் வாகனம் அனுப்பி என்னைக் கூட்டிட்டுப் போயிடுவான்” என்றாராம் ஒரு புன்னகையுடன்.
மகா பெரியவாளின் ஞான திருஷ்டியும், வாரியார் சுவாமிகளின் கணிப்பும் ஒன்று கூடியது இறையருளே!