வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ சம்பவங்களை தமிழகம் சந்தித்துள்ளது. அத்தகைய சம்பவங்களுள் சோகமும் உண்டு. சுகமும் உண்டு.
சோகத்தை மட்டுமே சுமந்து நிற்கிற ஒரு சம்பவம் எத்தனை நூற்றாண்டுகள் போனாலும், நம்மால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட துயரமான சம்பவங்களுள் ஒன்றுதான் – 1964 ஆம் வருடம் டிசம்பரில் ஏற்பட்ட தனுஷ்கோடி புயல்.
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சுமார் 19 கி.மீ. தொலைவு.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி எல்லாமே தீவுதான். எங்கு திரும்பினாலும் கடல்.
ஒருபக்கம் சாது போன்ற அமைதியான வங்கக் கடல். மறுபக்கம் கொந்தளித்துக் குமுறுகிற இந்தியப் பெருங்கடல். இதனிடையே ஒரு பெரிய நகரமாகவும், துறைமுகப் பட்டினமாகவும் ஒரு காலத்தில் பிஸியாக இருந்த இடம்தான் தனுஷ்கோடி.
தமிழகத்தில் இருந்து இலங்கை செல்வதற்கான கப்பல் பயணத்தை தனுஷ்கோடியில் இருந்து சுலபமாக மேற்கொள்ளலாம், அந்த நாட்களில். இலங்கையின் முக்கிய ஊரான தலைமன்னார் தனுஷ்கோடியில் இருந்து 29 கி.மீ. தொலைவு மட்டுமே!
வரலாற்றுப் புத்தகத்தில் தனுஷ்கோடியின் சரித்திரத்துக்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 1964-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாள் இரவு கொட்டிய பேய் மழையின் தொடர்ச்சியாக பெரும் சூறாவளிப் புயல் புறப்பட்டது. ஒட்டுமொத்த தனுஷ்கோடியையே உருக்குலையச் செய்தது. அங்கு வசித்த மக்கள், அவர்களின் கனவுகள், உடைமைகள் அனைத்தையும் கபளீகரம் செய்தது. விளைவு – இன்றைக்குத் தனுஷ்கோடி ஒரு நினைவுச் சின்னமாக, மாபெரும் சோகத்தின் சாட்சியாக மயான அமைதியுடன் விளங்கி வருகிறது.
இந்த டிசம்பர் சூறாவளியின் உச்சகட்ட சோகம் என்ன தெரியுமா?
பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி ரயில் நிலையத்துக்குப் புறப்பட்ட ஒரு பாசஞ்சர் வண்டி தனுஷ்கோடியை நெருங்குவதற்கு சில மீட்டர் தொலைவு முன்னதாக சூறாவளியால் அலைக்கழிக்கப்பட்டுக் கவிழ்ந்து அதில் பயணித்த 110 பயணிகளும், 5 ரயில்வே ஊழியர்களும் மாண்டு போனார்கள். மனதைப் பிசைய வைக்கும் சோகம் இது.
சூறாவளியின் சொல்லொணாத் தாக்குதலில் இன்னொரு சோகமும் அரங்கேறியது.
நிலப் பகுதியான பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இருந்த ஒரே பாதையான ரயில் பாலமும் பாதிப்புக்குள்ளானது (தற்போது கடல் மேல் நாம் காணும் பாம்பன் சாலைப் பாலம் அப்போது கிடையாது. பின்னாட்களில் போடப்பட்டது).
அலைகளின் சீற்றமும், மழையின் தாக்கமும் மிரட்டுகிற அளவுக்கு இருந்ததால், சூறாவளி சமயத்தில் பாம்பனில் இருந்து எந்த ஒரு படகும் ராமேஸ்வரம் செல்ல முடியாத நிலை.
ஆக, ஒட்டுமொத்தத்தில் ராமேஸ்வரம் தனித்துத் துண்டிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தின் எந்த ஊரில் இருந்தும் ராமேஸ்வரம் செல்ல முடியாது என்கிற நிலை.
இருக்கின்ற ஒரே போக்குவரத்துத் தடமான ரயில் பாலத்தை சீர் செய்தால்தான், ராமேஸ்வரம் செல்ல முடியும் என்கின்ற நிலை.
கடலின் மேல் அமைந்திருக்கிற ஒரு ரயில் பாலத்தை – அதுவும் விஞ்ஞான வசதிகள் அதிகம் வந்திராத 1964-ல் அவ்வளவு சுலபத்தில் சரி செய்து விட முடியுமா?
தனித்து விடப்பட்ட ராமேஸ்வரத்தில் அந்த நாளில் அதிக அளவில் கடைகள் கிடையாது. உள்ளூர் மக்களின் உணவுத் தேவைக்கும், ஊரில் இருக்கின்ற ஓட்டல்களின் உணவுத் தேவைக்குமான அரிசி உள்ளிட்டவை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சாலை வழியே பாம்பன் வரை பயணிக்கும். அதன் பின், ரயிலிலோ அல்லது படகிலோ இந்தப் பொருட்கள் அனைத்தும் ராமேஸ்வரம் எடுத்துச் செல்லப்படும்.
அப்படி என்றால் இந்த சூறாவளி சோகத்தில் சிக்கி, ராமேஸ்வரத்தில் வசிக்கின்ற உள்ளூர்வாசிகள், அங்கே யாத்திரையாக வந்து சேர்ந்து மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் – இவர்களுக்கு அன்றாட உணவு எப்படிக் கிடைக்கும்?
‘சரி, மகா பெரியவர் தொகுப்பில் இந்த வரலாற்று சோகத்தை ஏன் பதிவிட வேண்டும்?‘ என்று இதைப் படிக்க நேரிடுகிற உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா?
இருக்கிறது. விஷயத்துக்கு வருகிறேன்.
பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதையை சீரமைத்தால் மட்டுமே ராமேஸ்வரத்துக்கு அரிசி உள்ளிட்டவை கொண்டு செல்ல முடியும் என்கின்ற நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராமேஸ்வரத்தில் கையிருப்பில் இருக்கின்ற அரிசி மூட்டைகள் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்?
பேய் மழையும், பெருத்த நாசமும் ஏற்பட்ட சூழ்நிலையில் பொருட்களை காசு கொடுத்து வாங்க எவரிடம் பணம் இருக்கும்?
அரசு ஹெலிகாப்டரில் நிவாரணமாக உணவுப் பொட்டலங்களைப் போட்டாலும், அது அங்கு வசிக்கின்ற அத்தனை பேருக்கும் தினமும் மூன்று வேளைக்குப் போதுமானதாக இருக்குமா?
மேலிருந்து போடப்படும் உணவுப் பொட்டலங்களை உடலில் வலு நிறைந்தவர்கள் பாய்ந்து எடுத்துச் செல்ல முடியும். வயதான மற்றும் உடல் நலிவுற்றவர்கள் எப்படி சாப்பிடுவார்கள்?
ராமேஸ்வரத்தில் வசிக்கின்ற சில பணக்காரர்களே அப்போது, ”என்னிடம் பணம் இருக்கிறது. வசதியும் இருக்கிறது. ஆனால், என் வீட்டில் கையிருப்பில் இருந்த அரிசி செலவாகி விட்டது. தற்போது சாப்பிடுவதற்கு அரிசி தேவை. ஆனால், சோகத்தின் பிடியில் உருக்குலைந்து போயிருக்கிற ராமேஸ்வரத்தில் விலை கொடுத்து எங்கே வாங்க முடியும்? என் பசிக்குப் பணத்தைத் தின்ன முடியுமா?” என்று வெதும்பித் தீர்த்திருக்கிறார்கள்.
பெரிதும் பாதிக்கப்பட்ட பாம்பன் பாலம் ஒரு சில மாதங்களுக்குப் பின் போர்க்கால நடவடிக்கையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர்தான், அரிசி உள்ளிட்ட பொருட்கள் ராமேஸ்வரத்துக்குள் வர ஆரம்பித்தன.
இந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு இருக்கிற அனைவருக்கும் யார் உணவு போட்டார் என்றால், கலியுக தெய்வமான மகா பெரியவா சாப்பாடு போட்டிருக்கிறார்.
மகா பெரியவாளின் ஒரு தீர்க்க தரிசனப் பார்வை, ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இப்படி ஒரு சோகம் கூடிய விரைவில் நிகழப் போகிறது என்பதை உணர்த்தி, சோகம் நிகழ்வதற்கு முன்பிருந்தே ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாக வந்து சேரும் அரிசி மூட்டைகளை ராமேஸ்வரம் சங்கர மடத்தில் சேர்த்து வைக்கச் சொல்லி இருக்கிறார். அப்படி அங்கே பாதுகாக்கப்பட்ட எண்ணற்ற அரிசி மூட்டைகள் பலரது பசிப் பிணியைப் போக்கி, பலரது உயிரையும் காப்பாற்றி இருக்கிறது.
1964 டிசம்பரில் இந்த சோகம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அரிசி மூட்டைகளை ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாகச் செலுத்த வருகிறார் என்றால், அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசிர்வதித்து அனுப்புவார் பெரியவா. அதன் பின் அந்த மூட்டைகளை ஸ்ரீமடத்து மேனேஜரைக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு அனுப்புமாறு உத்தரவு கொடுத்து விடுவார்.
ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாக அரிசி மூட்டைகள் வந்தால் அவற்றைத் தான் இருக்கின்ற அந்த இடத்திலேயே சேர்த்துக் கொண்டு அன்னதானம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது மகா பெரியவா வழக்கம். ஆனால், அந்த 1964-களின் துவக்கத்தில் காணிக்கையாக வரும் அரிசி மூட்டைகளை மகா பெரியவா ஏற்றுக் கொண்டு, மேனேஜர் மூலமாக அவற்றை எல்லாம் ராமேஸ்வரம் சங்கர மடத்துக்கு அனுப்பச் சொன்னார். அதன்படி, மகா பெரியவா கேம்ப்புக்கு வந்து சேர்கின்ற அரிசி மூட்டைகள் அடுத்தடுத்து ராமேஸ்வரம் மடத்துக்கு அனுப்பப்பட்டன.
தவிர, மகா பெரியவாளே மடத்துக்கு நெருக்கமான சில விவசாயிகளிடம், ”அறுவடை முடிஞ்சவுடனே ஒரு மூட்டை அரிசியை ராமேஸ்வரம் சங்கர மடத்துக்கு அனுப்பி வெச்சுடு” என்றும் சொல்லி வைத்திருந்தார்.
சிறிய ஊரான ராமேஸ்வரத்தில் இருக்கின்ற சங்கர மடத்தில் எத்தனை அரிசி மூட்டைகளை ஸ்டாக் வைக்க முடியும்? மடத்தில் வைத்தது போக ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலய நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோயில் பிராகாரத்திலும் மூட்டைகளை ஸ்டாக் பண்ண ஆரம்பித்தார் மடத்தின் மேனேஜர்.
இதற்கு மேல் ராமேஸ்வரத்தில் அரிசி மூட்டைகள் ஸ்டாக் பண்ண இட வசதி இல்லாததால் ஒரு முறை புறப்பட்டு வந்து மகா பெரியவாளையே நேரில் சந்தித்தார், ராமேஸ்வரம் மடத்தின் மேனேஜர்.
”பெரியவா… ராமேஸ்வரத்துக்குத் தாங்கள் அனுப்பச் சொன்னதா தினமும் ஒண்ணு, ரெண்டுன்னு அரிசி மூட்டைகள் வந்துண்டே இருக்கு. இவற்றை எல்லாம் பத்திரமாக ஸ்டாக் பண்ணிண்டு வரேன். இனிமே ஸ்டாக் பண்ண இடம் கிடையாது. அதனால, ஓரளவு அரிசி மூட்டைகளை மட்டும் கையிருப்பா வெச்சுண்டு மத்த மூட்டைகளை வியாபாரிகள்கிட்ட வித்துட்டு, ஸ்ரீமடத்தோட பேங்க் அக்கவுண்ட்ல பணத்தைச் சேர்த்துடட்டுமா?” என்று கேட்டார்.
அதற்கு, ”வேண்டாம்… அரிசி மூட்டைகளை ராமேஸ்வரத்துல எங்கெங்கு ஸ்டாக் பண்ணி இருக்கியோ, அங்கேயே இருக்கட்டும். எலிகள் வந்து மூட்டைங்களைக் கடித்துக் குதறி சாப்பிட்டாலும் பரவாயில்லை” என்று சொன்னார் மகா பெரியவா.
இதைக் கேட்ட மேனேஜர், ”பெரியவா… அப்படியானால் இனிமேல் வரப் போகிற அரிசி மூட்டைகளைக் கடல்லதான் கொட்ட வேண்டி இருக்கும். ஸ்டாக் பண்றதுக்கு இடமே இல்லை” என்று வெகு சாதாரணமாகச் சொன்னார்.
”எல்லாவற்றையும் கடல், தானே சுவீகரித்துக் கொள்ளும்” என்று பொத்தாம் பொதுவாக – இன்னும் ஒரு சில மாதங்கள் கழித்து என்ன நடக்கப் போகிறது என்பதையும் உணர்த்தி இருக்கிறார் மகா பெரியவா.
அது அப்போது மேனேஜருக்கும், மற்றவர்களுக்கும் புரியவில்லை.
பின்னாட்களில் ராமேஸ்வரத்தில் வியாபாரிகளிடமும் கடைகளிலும் கையிருப்பில் இருந்த எல்லா அரிசி மூட்டைகளும் காலியான பின், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போகிறோம் என்று ஆளாளுக்குக் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அப்போது, ஸ்ரீமடத்தில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பயன்படுத்தப்பட்டன.
ராமேஸ்வரம் இயல்பு நிலைக்குத் திரும்புகிற வரை மகா பெரியவா முன்கூட்டியே அனுப்பி வைத்த அரிசி மூட்டைகள் ராமேஸ்வரம் மக்களுக்கும் தனுஷ்கோடிவாசிகளுக்கும் சாப்பாடு போட்டதாம்!
கலியுக தெய்வமாக – நடமாடும் தெய்வமாக நம்மிடையே இருந்த மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை என்னவென்று சொல்வது!