குறிப்பிட்ட எவரிடமாவது மகா பெரியவா ஒரு வாக்கு சொன்னால், அது திருவாக்கு. சம்பந்தப்பட்டவர் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும். சாட்சாத் கயிலைவாசனே பூர்வ ஜன்ம புண்ணிய பலன் கருதி நமக்கு அருளியது போல் உணர வேண்டும்.
தங்களது பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காக மகா பெரியவா திருச்சந்நிதிக்குப் பலரும் வருவார்கள். மகானின் திருவாயில் இருந்து ஒரு திருவாக்கு உதிர வேண்டும் என்பதற்காக ஸ்ரீமடத்தில் தொடர்ந்து பல நாட்கள் தங்கிய பக்தகோடிகளும் உண்டு. ஸ்ரீமடத்தில் மகா பெரியவா பார்வையில் படும்படி நித்தமும் அமர்ந்திருக்கின்றபோது ஏதேனும் ஒரு பொழுதில் எப்படியாவது நம்மைக் கூப்பிட்டு அனுக்ரஹிப்பார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டே இருப்பார்கள்.
மகா பெரியவாளைத் தேடி வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் அந்த மகானின் திருவாயில் இருந்து இது போன்ற வாக்குகள் உதிர்ந்து விடாது.
எவரெவர் மகானின் அத்யந்த பக்திக்கு ஆட்பட்டவர்களோ, சத்தியமான நம்பிக்கையுடன் எவரெவர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளார்களோ… அவர்களுக்குத்தான் இப்படி வாய்க்கும்.
விதை விதைத்து, உரமிட்டு, நீரூற்றி கர்ம சிரத்தையுடன் பராமரிப்பவர்களுக்கு மட்டும்தான் நல்ல அறுவடை வாய்க்கும். அதன் பலனை அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்.
அதுபோல் மகா பெரியவாளின் திருநாமத்தை சதா ஜபித்தபடி அந்த மகானின் சிந்தனையுடனும் பக்தியுடனும் வாழ்ந்து வருகிற பக்தர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
அப்படி ஒரு குடும்பம், ஆந்திராவில் வசித்து வந்தது. கணவன், மனைவி. இவர்களுக்கு ஒரு மகன்.
காஞ்சி மகான் எப்போதோ ஒரு முறை ஆந்திராவில் யாத்திரை செய்தபோது இந்தக் குடும்பத்தினர் வசிக்கிற ஊரில் முகாட்டிருந்திருக்கிறார்.
‘கலியுக தெய்வம் மகா பெரியவா இந்தக் கிராமத்தில் எழுந்தருளி இருக்கிறார்‘ என்ற செவிகளுக்கு இனிமையான தகவலைக் கேள்விப்பட்ட அடுத்த கணமே அந்தக் கணவனும் மனைவியும் மகா பெரியவாளைத் தரிசிக்கத் தங்கள் இல்லத்தில் இருந்து புறப்பட்டனர்.
முகாமுக்குள் நுழைந்ததும், இவர்களையும் அறியாமல் ஒரு பரவசமும் நெகிழ்வும் ஆட்கொண்டது. மிகவும் வேண்டப்பட்ட இடத்துக்கு வந்திருப்பது போன்ற ஒரு உணர்வு.
பரமேஸ்வர சொரூபமாக மகான் அமர்ந்திருக்கின்ற திருக்காட்சி கண்டு அவரைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினர் தம்பதியர்.
புன்னகையுடன் இவர்களை நோக்கித் திரும்பிய மகான் வீசிய கருணைப் பார்வையிலேயே இந்தக் குடும்பம் அவரது காலடியில் விழுந்தது.
குடும்பத்தைப் பற்றியும், இவர்களது ஜீவனம் பற்றியும் கேட்டறிந்தார் பெரியவா.
ஆம்! தெய்வம் ஆட்கொண்டு விட்டது. இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுமா, என்ன?!
உள்ளூர் முகாமில் மகா பெரியவா தங்கி இருக்கிற வரை கணவனும் மனைவியும் தினமும் போய் தரிசிக்கிற பேறு கிடைத்தது.
தினமும் வருகின்ற இவர்களைப் பரிவுடன் அழைத்து, ”சாப்டாச்சா?” என்றெல்லாம் விசாரித்தார்.
பூரண பக்தியின் மூலம் கிடைக்கிற ஆனந்தத்தையும் பரவசத்தையும் அனுபவித்துப் பார்க்கும்போது மட்டுமே உணர முடியும். எழுத்திலோ, அல்லது பிறருக்கு வாய்மூலம் விவரித்தாலோ அந்தப் பரவசம் பிறருக்குப் புரியாமல் போகலாம். அல்லது அனுபவத்தைச் சொல்கிறவரைப் பார்த்து ‘ஏதோ உளறுகிறான்‘ என்று எதிராளி எள்ளி நகையாடவும் கூடும்.
எனவே, மகா பெரியவா சந்நிதியில் தங்களுக்குக் கிடைத்த பரவச அனுபவங்களை இந்தத் தம்பதியர் தங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாக எண்ணி எண்ணி வியந்தார்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நெகிழ்வைப் பரிமாறிக் கொண்டனர்
ஒரு சில நாட்களில் மகா பெரியவா இங்கிருந்து அடுத்த முகாமுக்குக் கிளம்பிப் போய் விட்டார்.
அதன் பின் மகா பெரியவா எப்போது ஆந்திரா பக்கம் வந்தாலும், ‘எங்கே முகாமிட்டிருக்கிறார்?‘ என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு தேடிப் போய் தரிசனம் செய்வார்கள். தவிர, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது காஞ்சிக்கு வந்தும் தரிசனம் செய்வார்கள் தம்பதியர்.
வருடங்கள் ஓடின. இவர்களுடைய மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய வேளை வந்து விட்டது. தங்களது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றது மாதிரி நல்ல குடும்பப் பெண்ணாகத் தேடினார்கள்.
தெரிந்தவர்கள் மூலமாக ஒரு ஜாதகம் வந்து சேர்ந்தது. பொருத்தம் பார்த்தார்கள். இரு வீட்டு ஜோசியர்களும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் பெண் பார்க்கும் வைபவமும், பரஸ்பரம் விசாரிக்கும் நிகழ்வும் நடந்தது.
இருவருக்கும் பிடித்துப் போனது. பிறகென்ன… தாம்பூலம் மாற்ற வேண்டியது, திருமணத்துக்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி.
இரு வீட்டிலும் திருமணக் களை மெள்ள சூடு பிடிக்க ஆரம்பித்தது. கல்யாணத்தை எப்படி விமரிசையாக நடத்துவது என்று இரு வீட்டாரும் தனித் தனியே யோசித்தார்கள்.
அடுத்து நிகழ்ந்த சம்பவத்தை விபரீதம் என்று சொல்வதா? வேதனை என்று சொல்வதா? அல்லது இதுதான் விதியின் விளையாட்டு என்று தீர்மானிப்பதா?
இவர்கள் இருக்கிற ஆந்திர ஊர் பக்கம் மகா பெரியவா அப்போது மீண்டும் ஒரு யாத்திரை வந்தார். அங்கே முகாமிடுவதாகத் திட்டமும் இருந்தது. தங்கினார்.
விஷயம் கேள்விப்பட்ட கணவனும் மனைவியும் சந்தோஷப்பட்டு தம்பதி சமேதராக மகா பெரியவாளைத் தரிசிக்க வந்தனர். புஷ்பம், பழங்கள், கல்கண்டு என்று காணிக்கைத் திரவியங்களைத் தாராளமாக வாங்கிக் கொண்டு வந்து மகா பெரியவா திருச்சந்நிதியில் சமர்ப்பித்தார்கள்.
இவர்களை அடையாளம் கண்டுகொண்டு ஒரு புன்னகையுடன் குடும்ப நலம் விசாரித்தார் மகா பெரியவா. ‘இத்தனை நினைவு வைத்துக் கொண்டு நம்மை இவ்வளவு அக்கறையுடன் விசாரிக்கிறாரே‘ என்று கணவனுக்கும் மனைவிக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை.
கிளம்புவதற்கு முன் மகா பெரியவாளிடம், ”எம் பையனோட கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு பார்த்துப் பேசி இருக்கோம். நிச்சயம் பண்ணிட்டு, கல்யாணத்துக்குத் தேதி குறிக்கணும். பெரியவா அவங்களை ஆசிர்வாதம் பண்ணணும்” என்றார் நம்மவர்.
மகா பெரியவா ஒரு சில விநாடி இவரையும், உடன் வந்த மனைவியையும் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையில் ஏனோ ஒரு அனுக்ரஹம் இல்லை. மாறாக, ஒரு வித்தியாசம் தெரிவதை நம்மவர் உணர்ந்தார்.
கணவன், மனைவியைப் பார்த்தார். மனைவியும் கணவனைப் பார்த்தார். இருவருக்கும் குழப்பம்.
”பெரியவா… எம் மகனுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க. கல்யாணம் ஆகப் போற எம் மகனுக்கு உங்க ஆசிர்வாதம் கட்டாயம் வேணும். ஒங்களோட தரிசனத்துக்கு அப்புறம்தான் என் வாழ்க்கையில ஏராளமான நல்ல மாற்றங்கள் நடந்திச்சு. இன்னிக்கு நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு ஒங்க ஆசிதான் காரணம்” என்று கைகளைக் கூப்பினார்.
”கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணியாச்சா?” – நிதானமாகக் கேட்டார் மகா பெரியவா.
”இன்னும் நிச்சயம் பண்ணலை பெரியவா. ஆனா, ரெண்டு குடும்பத்தாரும் கலந்து பேசி தீர்மானம் பண்ணிட்டோம். இவனுக்கு அவள், அவளுக்கு இவன்னு வார்த்தை அளவுல பேசி முடிச்சி வெச்சிருக்கோம். திருமண ஏற்பாடுகளைக் கவனிச்சிட்டு இருக்கோம்” என்று நம்மவர் சொல்லும்போது வார்த்தைகளில் ஒரு தடுமாற்றம்.
அவரது மனைவி குழம்பியபடியே பெரியவாளையும் தன் கணவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
”ஒம் பையனோட வம்சம் நன்னா வளரணும். இந்த ரெண்டு ஜாதகமும் பொருந்தாது. வேற எடம் பாத்துக்கோ” என்று ரத்தினச்சுருக்கமாகச் சொல்லி, எழுந்து உள்ளே போய் விட்டார் மகா பெரியவா.
மகான்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் பேச்சு என்பது மிகவும் நிதானமாக – அதே சமயம் ஆழமாக இருக்கும். எதைச் சொல்ல வேண்டுமோ, அதை வெகு நாசூக்காகவே நமக்கு உணர்த்தி விடுவார்கள். அதைப் புரிந்து கொண்டு வாழத் துவங்கினால் அதிர்ஷ்ட தேவதை உட்பட அனைத்து தேவதைகளும் நம் பக்கம் இருப்பார்கள். ஒருவேளை உதாசீனப்படுத்தி விட்டால், எதற்கும் உத்தரவாதம் கிடையாது.
‘வேற எடம் பாத்துக்கோ‘ என்று சொல்லி விட்டு மகா பெரியவா உள்ளே போனதும், இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உத்தரவாக ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டுச் சென்ற பிறகு, இது குறித்து அவரிடம் பேச முடியாது. இது வியாபாரம் அல்ல. வியாபாரம் என்றால், மீண்டும் மீண்டும் பேசலாம். இது வாழ்க்கை ஆயிற்றே!
உள்ளே சென்ற மகா பெரியவா வருவார் என்ற நப்பாசையுடன் ஒரு அரை மணி நேரம் கணவனும் மனைவியும் அங்கு காத்திருந்தனர். ஆனால், உடனடியாகத் திரும்பி வருவதற்கான முகாந்திரம் தெரியவில்லை.
இதற்கு மேல் ஒன்றும் தோன்றாமல், குழம்பிய நிலையில் அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
‘கல்யாணத்துக்குத் தேதி குறிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த வேளையில் மகா பெரியவா சொன்ன வார்த்தைகளுக்கு எப்படி மதிப்பு தருவது?
ஜாதகம் பொருந்தவில்லை என்கிறாரே? ஆனால், இரண்டு வீட்டு ஜோதிடர்களும் பொருந்தி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களே..? பையனுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் நன்றாகவே பிடித்துப் போய் விட்டது. இந்த நிலையில் அடுத்து என்ன செய்யலாம்‘ என்று கணவனும் மனைவியும் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
”ஏங்க… ஒரு பொண்ணா இருந்து சொல்றேன். ஒரு குடும்பத்துல பொண்ணு பாத்து, ஜாதகம் பாத்து, எல்லாருக்கும் புடிச்சு, கல்யாணத்துக்குத் தேதி குறிக்கிற ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இப்ப திடீர்னு பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட போய், ‘இந்தக் கல்யாணம் வேணாம். ஜாதகம் சரியில்லே‘னு சொன்னா நல்லா இருக்காதுங்க. அப்புறம் ஒங்க இஷ்டம்” என்று அவரது மனைவி சொல்லி விட்டுக் கணவனின் பதிலை எதிர்நோக்கினார்.
”சரிடீ… நீ சொல்றதை ஒப்புக்கறேன். நாம வணங்கற தெய்வமும், குருவா நமக்கு இருக்கிற மகா பெரியவாளும் எப்படியும் நம்மளைக் கைவிட மாட்டாங்க அப்படீங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. இருந்தாலும், அவர் சொன்ன ஒரு வாக்கை மதிக்காம நாம நடந்தோம்னா, அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்னு யோசிச்சுப் பாக்கறேன்… அதான்…” என்று இழுத்தார் கணவர்.
மனைவி சொன்னார்: ”ஒண்ணும் கவலைப்படாதீங்க… நம்ம வீட்டு பூஜையறைல மகா பெரியவாளோட படம் இருக்கு. ‘சாமீ… நீங்க சொன்னதை இந்தக் கட்டத்துல எங்களால கேக்க முடியல. எங்களை மன்னிச்சிடுங்க… எங்களோட மகன் – மருமகள் நல்லா வாழணும். அவர்களோட வம்சம் தழைக்கணும்‘னு ஒரு பிரார்த்தனை வெச்சுட்டு, ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்.”
இது ‘சரி‘யெனப் பட்டதால், கணவர் தலையசைத்தார். அதன் பின், ‘இந்த விஷயம் நம் இருவரைத் தவிர, வேறு யாருக்கும் தெரியவே கூடாது‘ என்று தீர்மானித்துக் கொண்டனர்.
மகா பெரியவா படத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு அடுத்த கட்டப் பணிகளைக் கவனிக்கத் துவங்கினர்.
மகனுடைய கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. உற்றாரும் உறவினர்களும் வந்து வாழ்த்து விட்டுச் சென்றனர்.
என்றாலும், மகா பெரியவா சொன்ன வார்த்தைகள் அசரீரி போல் பெற்றோரின் மனதில் அவ்வப்போது ஒலிக்கத் தொடங்கியது. எப்போதெல்லாம் இந்தக் குரல் அவர்களுக்குக் கேட்கின்றது மாதிரி எண்ணம் வந்ததோ, அப்போதெல்லாம் இருவரும் பூஜையறைக்குள் போய், மகா பெரியவாளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். ‘எங்களது வம்சம் தழைக்க வேண்டும்… அதற்கு நீங்கள்தான் அருள வேண்டும். எங்களது தவறை மன்னித்து விடுங்கள்‘ என்று அந்த மகானிடமே பிரார்த்தித்தனர்.
வருடங்கள் ஓடின. மருமகள் கர்ப்பமானாள். ‘வம்சம் விருத்தி ஆகாது என்று பெரியவா சொன்னார்… ஆனால், மருமகள் கருத் தரித்திருக்கிறாளே‘ என்று இவர்கள் இருவருக்கும் சந்தோஷம்.
உரிய வேளையில் ஒரு மகன் பிறந்தான். செல்லக் குழந்தையை எல்லோரும் சீராட்டி வளர்த்தார்கள்.
அடுத்து ஒரு சில வருடங்களில் மருமகள் மீண்டும் கர்ப்பமானாள். குடும்பமே குதூகலமானது.
அனைவரும் ஆச்சரியப்படும்படி இன்னொரு மகன் பிறந்தான்.
மகா பெரியவா அருள் பெற்ற பக்தர்களான தாத்தா – பாட்டிக்கு (இனி, இவர்களை தாத்தா பாட்டி என்றே பார்ப்போம்) சந்தோஷம் பிடிபடவில்லை. ‘ஒருவேளை மகா பெரியவா கருணையினால் தங்களுக்கு இந்த ஆசிர்வாதம் கிடைத்திருக்கிறது போலும்‘ என்று பூரித்துப் போனார்கள்.
வம்சம் நன்னா வளரணும்… இந்த இடம் வேண்டாம். வேறு ஜாதகம் பார்த்துக் கொள் என்று மகா பெரியவா சொன்னாரே… காலத்தின் கட்டாயத்தாலும் அப்போது இருந்த சூழ்நிலையாலும் மகா பெரியவா வாக்கை நிறைவேற்ற முடியாமல் அதே பெண்ணைத் திருமணம் செய்து வைத்தோமே… ஆனால், அந்த மகானின் கருணையும் ஆசிர்வாதமும் நம் குடும்பத்துக்கு என்றென்றும் இருந்து வருகிறது போலும். அதான், தற்போது இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர்‘ என்று வியப்புடன் பேரன்களை வளர்த்து வந்தனர் தாத்தாவும் பாட்டியும்.
மகான்களின் வாக்கு தேவ வாக்கு… எந்த நாளிலும் அவற்றை உதாசீனப்படுத்தக் கூடாது என்பதை நிரூபிப்பது போன்ற ஒரு விஷயம் அடுத்து வந்த ஒரு சில மாதங்களில் நடந்தது.
ஆம்! இரண்டாவது மகன் வளர வளரத்தான் தெரிந்தது, அவன் ‘ஸ்பெஷல் சைல்டு‘ (மன நலம் பாதிக்கப்பட்டவன்) என்று.
மூத்த பேரனைப் போல் இளைய பேரனால் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை. இளைய பேரனின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விரக்தியான தாத்தாவுக்கு அப்போதுதான் மகா பெரியவா சொன்னது பசுமரத்தாணி போல் நினைவுக்கு வந்தது. இருந்தாலும், ‘மூத்த பேரன் நன்றாக இருக்கிறானே… படுசுட்டியாக விளங்குகின்றானே‘ என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டார். குடும்பத்தினர் அனைவரும் எந்த விதமான பேதமும் பார்க்காமல் இரு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.
வருடங்கள் உருண்டோடின. காலம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
மூத்தவன் பள்ளிப் படிப்பை நன்றாக முடித்து, டாக்டருக்குப் படித்தான். முடித்ததும், டாக்டர் தொழிலைத் துவங்கினான்.
பிஸியான டாக்டர் ஆனான். நன்றாகவே இருந்தது அவன் வாழ்க்கை. அதைப் பார்த்து அவனது பெற்றோரும் தாத்தா – பாட்டியும் பூரித்துப் போனார்கள்.
டாக்டர் மகன் ஒரு முறை வெளியூருக்கு டூர் போனான். போன இடத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஹார்ட் அட்டாக் வந்து… இறுதியில் வந்து சேர்ந்த செய்தி ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சோகக் கடலில் தள்ளியது.
ஆம்! ஆசை ஆசையாக வளர்த்த டாக்டர் மகன், திடீரென வந்த இதய நோய்க்கு அநியாயமாக பலி ஆனான்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அப்போதுதான் மகா பெரியவா அன்றைக்கே தீர்க்க தரிசனமாகச் சொன்னது, கல்வெட்டு எழுத்து போல் மனத் திரையில் ஓடியது.
மூத்தவன் டாக்டர் இறந்து விட்டான். பாவம், அடுத்தவன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றான். இந்த நிலையில் தன் மகனுக்குப் பிறகு வம்சம் தழைக்காமல் போய் விட்டதே என்று வேதனைப்பட்டனர் தாத்தாவும் பாட்டியும்.
ஒரு முடிவு, பதில், வாக்கு – மகானின் திருவாயில் இருந்து வருகிறது என்றால், எப்பாடு பட்டேனும் அதற்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்பது பலருக்கும் அந்த வேளையில் உறைக்காமல் போகிறது. கெட்ட பின் ஞானம் என்பது பலனையும் கொடுக்காது. ஆறுதலையும் கொடுக்காது.
மகான்கள் சொல்லக் கூடிய வாக்கை, தெய்வங்களின் திருவாக்காக மதிக்க வேண்டும்.
தன் மகனுக்குத் திருமணமாகி சுமார் முப்பது வருடங்கள் கழித்து இந்த சோகத்தைக் காணும்படி நேரிட்டது அந்த தாத்தாவுக்கும் பாட்டிக்கும்.