இருட்டறையில் கிடைத்த அட்சதை ஆசீர்வாதம்

காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமான சிம்ஸன் நீலகண்ட ஐயர் என்கிற பக்தரைப் பற்றி அடுத்துப் பார்க்க இருக்கிறோம்.

வந்தவாசி தாலுகா நெற்குணம் கிராமத்தில் பிறந்தவர் நீலகண்ட ஐயர். தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்தார் நீலகண்டன். அவருக்கு துரையம்மாள் என்று ஒரு தங்கை உண்டு.

கணவர் இறந்த பின் நெற்குணம் கிராமத்தில் இருந்த நீலகண்டனின் தாயார் சுப்புலட்சுமிமகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பலரும் மெச்சும்படி வளர்க்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்கு பணமும் வேண்டும்; நல்ல பள்ளிக்கூடமாகவும் அமைய வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த சுப்புலட்சுமிக்கு அவர்களது குடும்பச் சொத்தாக விளங்கிய நிலம் நினைவுக்கு வந்தது.

அடுத்து ஒரு நல்ல ஆசாமியாகப் பார்த்துத் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விற்றார்.

மகன் மற்றும் மகளுடன் தங்கள் புதிய வாழ்க்கையைத் திண்டிவனத்தில் துவங்கலாம் என்று தீர்மானித்து நெற்குணத்தில் இருந்து திண்டிவனத்துக்கு இடம் பெயர்ந்தார்.

மாதம் இரண்டு ரூபாய் வாடகையில் ஒரு வீட்டைப் பார்த்து முடித்தார். திண்டிவனத்தில் உள்ள அமெரிக்கன் ஆர்காட் ஹைஸ்கூலில் நீலகண்டனைச் சேர்த்தார். இந்தப் பள்ளிக்கு என்ன சிறப்பு என்றால், காஞ்சி மகா பெரியவா இங்குதான் பயின்றார். அந்த வகையில் சுப்புலட்சுமிக்கு ஒரு சந்தோஷம்.

தந்தையார் இல்லாததால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்த நீலகண்டனும் படிப்பின் முக்கியத்துவத்தையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நன்றாகப் படித்தார். ஆசிரியர்கள் மெச்சும் வகையில் நல்ல மாணவனாகவும், படிப்பில் சுட்டியாகவும் விளங்கினார் நீலகண்டன்.

ஆனால், அடுத்த சோகம் பாருங்கள்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி முடித்தார் நீலகண்டன். ஆனால், அந்தத் தேர்வு முடிவுகள் வருவதற்குள்ளாகவே, இவரது தாயாரின் முடிவை எமதர்மன் குறித்து வைத்திருந்தான் போலும்.

ஆம்! மகன் நீலகண்டனையும், மகள் துரையம்மாளையும் விட்டு விட்டு மேலுலகம் சென்று விட்டார் தாயாரான சுப்புலட்சுமி. அடுத்து என்ன செய்வது என்று அண்ணனும், தங்கையும் தவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் திண்டிவனத்துக்கு ஒரு யாத்திரை வந்திருந்தார் காஞ்சி மகா பெரியவா. ‘இந்த மகானைத் தரிசித்தால் தங்களது வாழ்வில் ஒரு பிரகாசம் ஏற்படும் என்று நம்பி, அண்ணனும் தங்கையும் தரிசிக்கப் போனார்கள்.

பக்தர்கள் வரிசையில் கலந்து நின்று, தன் முறை வரும்போது அந்த மகானை நமஸ்கரித்தார் நீலகண்டன். உடன் துரையம்மாளும் நமஸ்கரித்து எழுந்தாள்.

நீலகண்டன் மீது மகா பெரியவாளின் தீட்சண்யமான பார்வை விழுந்தது. தன்னிடம்அபயம் என்று சரண் புகுந்திருக்கும் நீலகண்டனை ஆட்கொள்ள மகா பெரியவா அருள் புரிந்தார்.

கூப்பிய இரு கைகளுடன் மகா பெரியவாளுக்கு முன் நின்று கொண்டிருந்தார் நீலகண்டன்.

பெரியவா, ”நோக்குப் பாடத் தெரியுமா? என்று கேட்டார்.

தெரியும் பெரியவாஅம்மா இப்ப என்னோட இல்லேன்னாலும் எனக்கு ஓரளவு கத்துக் குடுத்திருக்கா என்றார் நீலகண்டன் நெகிழ்ச்சியுடன்.

எங்கே, ஒனக்குத் தெரிஞ்ச ஒரு பாட்டுப் பாடேன் என்றார் பெரியவா.

உடனே தொண்டையை நன்றாகச் செருமி ஸ்ருதி கூட்டிக் கொண்டு, ஸ்ரீராமபிரான் மேல் ஒரு பாடலை அற்புதமாக அந்தச் சந்நிதியில் பாடினார் நீலகண்டன்.

எத்தனையோ வித்வான்கள் தங்களது வித்வத் திறமையை மகா பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் வெளிக்காட்ட வேண்டும் என்ற துடிப்போடு வருவார்கள். அவர்களில் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைத்து விடாது. ஆனால், படித்து வந்த மாணவனான நீலகண்டனுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது. ஸ்ரீராமபிரானையே தன் நெஞ்சினில் நிறுத்தி, கண்களை மூடி உருக்கமாகப் பாடினார்.

பாடி முடித்ததும் ஒரு புன்னகையோடு நீலகண்டனுக்குப் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா. அதை நீலகண்டன் பெற்றுக் கொள்ளும்போது, ”நீ டிராமால்லாம் ஆடி இருக்கியோ? என்று ஒரு கேள்வி கேட்டார் மகா பெரியவா.

தூக்கி வாரிப் போட்டது நீலகண்டனுக்கு.

டிராமா ஆடி இருக்கியோ? என்றால், ‘நாடகங்களில் நீ நடித்திருக்கிறாயா? என்று பொருள்.

இதற்கு ஏன் நீலகண்டன் குழம்ப வேண்டும் என்று நமக்கெல்லாம் கேள்வி எழுவது இயல்புதான்.

ஆனால், அந்தக் காலத்தில் நாடகங்களில் வேடம் கட்டி ஆடுபவருக்கு அவ்வளவாக மரியாதை இருப்பதில்லை. வேறு எந்த ஒரு வேலையும் ஜீவனமும் இல்லாமல் இருப்பவர்கள்தான் நாடகங்களில் வேடம் கட்டுவார்கள் என்கிற நினைப்பு பலருக்கும் உண்டு.

தான் படிக்கிற பள்ளியில் ஓரிரு முறை வேடம் தாங்கி நடித்த அனுபவம் நீலகண்டனுக்கு உண்டு.

நாடகங்களில் நடித்திருக்கிறேன் என்று உண்மையைச் சொன்னால், தனக்கு அவப் பெயர் வரலாம் என்பது நீலகண்டனின் நினைப்பு.

இல்லைநான் நாடகங்களில் நடித்ததில்லை என்று பொய் சொன்னால், அது மகா பெரியவாளிடம் பொய் சொன்ன பழிக்கு ஆளாகி விடுவோம்.

என்ன பதில் சொல்லலாம் என்று ஒரு சில விநாடிகள் குழம்பிய நீலகண்டன்ஆமாம் என்று ஒற்றை வார்த்தையில் மகா பெரியவாளிடம் பதில் சொல்லி விட்டுத் தன் தங்கையுடன் வெளியே வந்து விட்டார்.

வீட்டுக்கு வந்தபோதிலும் நீலகண்டனின் மனம் சமாதானம் ஆகவில்லை. தான் நாடகங்களில் வேடம் தாங்கி ஆடி இருக்கிறோம் என்று மகா பெரியவாளிடம் சொல்லி விட்டோம்மகா பெரியவா நம்மை மரியாதைக் குறைவாக நினைத்து விடப் போகிறார் என்று ஒரு எண்ணம் அவருக்குள் வந்து கொண்டே இருந்தது. இதற்கு ஒரே தீர்வுமகா பெரியவாளிடமே மீண்டும் போய், ‘என்ன காரணத்தினால் என்னிடம் அப்படிக் கேட்டீர்கள் பெரியவா என்று கேட்டு விடலாம் என்று தோன்றியது.

அன்று அந்தி சாய்கிற நேரத்தில் மகா பெரியவா முகாமிட்டிருக்கும் இடத்துக்கு நீலகண்டன் தனியே சென்றார்.

மகா பெரியவா மிகவும் ஏகாந்தமான சூழ்நிலையில் நிஷ்டையில் இருப்பதாக அங்கு இருந்த பக்தர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் ஒரு சிஷ்யரைத் தைரியமாக அணுகி, தான் அவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னார் நீலகண்டன்.

அதற்கு அந்த சிஷ்யர், ”இப்போது பார்க்க முடியாதுப்பா. நிஷ்டையில் இருக்கிறார். இதோ, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கும் பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்நீ பார்க்கவில்லையா? என்று நீலகண்டனிடமே திருப்பிக் கேட்டார்.

நான் தரிசனத்துக்கு வரவில்லை. சித்த முன்னாடி வந்து மகா பெரியவாளை தரிசித்து விட்டேன். என்னை ஒரு பாட்டுகூடப் பாடச் சொன்னார். பாடிக் காண்பித்தேன். அது சம்பந்தமான ஒரு விளக்கத்தைச் சொல்ல மறந்து விட்டேன். தற்போது அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்ளோதான் என்று பவ்யமாகச் சொன்னார் நீலகண்டன்.

கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் சிப்பந்தி இதை ஏற்பதாக இல்லை. தலையை மட்டும் இட வலமாக ஆட்டி மறுத்து விட்டார்.

ஆனால், நீலகண்டனும் விடாக்கண்டனாக சிஷ்யரைப் பார்த்து, ”நீங்க பெரியவாகிட்ட போய்இன்னிக்கு இங்கே வந்து பாட்டுப் பாடின பையன் திரும்ப வந்திருக்கான்னு சொல்லுங்கோ. அவர் என்னைக் கூப்பிட்டா பாக்கறேன். இல்லேன்னா இப்படியே திரும்பிப் போயிடறேன் என்று சொல்லநீலகண்டனின் நிலைமையைப் பார்த்துப் புரிந்து கொண்ட அந்த சிஷ்யர், ”சித்த இருபெரியவாகிட்ட கேட்டுட்டு வரேன் என்று உள்ளே நகர்ந்தார்.

போன சூட்டிலேயே வெளியே வந்த சிஷ்யர், ”பெரியவா ஒன்னைக் கூப்பிடறார் என்றார்.

அவ்வளவுதான்ஓட்டமும் நடையுமாக நீலகண்டன் மட்டும் ஓடினார்.

பெரியவாளின் நிஷ்டை கலைந்திருந்தது. நீலகண்டனை எதிர்கொண்டு புன்னகைத்த பரப்பிரம்மம், ‘என்ன? என்று ஜாடையில் கேட்டது.

அந்த அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. ஒரே ஒரு தீபம் மட்டும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

இருட்டில் தட்டுத் தடுமாறி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் நீலகண்டன். பிறகு, மகா பெரியவாளைப் பார்த்து, ”பெரியவாஎனக்கு நீங்க பிரசாதம் குடுக்கறச்சே, ‘டிராமால்லாம் ஆடி இருக்கியோ?னு ஒரு கேள்வி கேட்டேளேஅதுக்கு உண்டான பதிலை ஒங்ககிட்ட சொல்லிட்டாலும் ஒரு விளக்கத்தைச் சொல்லாம போயிட்டேன். அதை சொல்றதுக்காக இப்ப வந்திருக்கேன் என்றார்.

பெரியவா எதுவும் பேசாமல் மவுனமாக நீலகண்டனைப் பார்த்தார்.

நான் ஸ்கூல்ல படிக்கறச்சே எங்கூட படிக்கிற பசங்களோட சேர்ந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு நிதி திரட்டினோம். அப்ப ஒரு நிகழ்ச்சிக்காக டிராமால ஆடி இருக்கேன் என்று தான் ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் நடித்திருக்கிறேன் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் நீலகண்டன்.

அதைக் கேட்டுப் புன்னகைத்த மகா பெரியவா, ”இதுல ஒண்ணும் தப்பு இல்லையேஒன்னை ஒரு பாட்டுப் பாடச் சொன்னேன்ராமர் சம்பந்தமான ஒரு பாட்டை ஏழரைக் கட்டை ஸ்ருதில பாடினேடிராமால ஆடினால்தான் அந்த ஸ்ருதில பாட முடியும். அதனாலதான் அப்படிக் கேட்டேன் என்று வெகு இயல்பாகச் சொன்னவர், ”நீ இப்ப என்ன பண்ணிண்டு இருக்கே? என்று கேட்டார்.

எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணிட்டேன் பெரியவா. ஒரு தங்கை என்கூட இருக்கா. அப்பா சின்ன வயசுலயே எங்களை விட்டுட்டுப் போயிட்டார். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணிட்டேன்கிற தகவலைக் கேக்கறதுக்கு முன்னாடியே என்னோட அம்மாவும் போய்ச் சேர்ந்துட்டா. இப்ப நான் ஏதாவது வேலைக்குப் போனாத்தான் என் தங்கையை நன்னா கவனிச்சுக்க முடியும். நிராதரவா நின்னுண்டு இருக்கேன் பெரியவா. நீங்கதான் எனக்கு அனுக்ரஹம் பண்ணணும் என்றார் நீலகண்டன், கண்கள் கலங்க.

உன் கையை நீட்டு என்றார் மகா பெரியவா.

உடனே தன் வலக் கையை நீட்டினார்.

அது இருட்டறை என்பதால், மகா பெரியவா தன் இடக் கையால் நீலகண்டனின் வலக் கையைப் பிடித்துக் கொண்டு, சிறிது அட்சதையை உள்ளங்கையில் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார்.

மகா பெரியவாளின் திருக்கரம் தன் கை மீது பட்ட மறுவிநாடியே தனக்குள் மிகப் பெரிய அதிர்வலைகள் ஏற்படுவதாக உணர்ந்தார் நீலகண்டன். ஒரு சில விநாடிகளுக்குத் தன்னையே உணர முடியவில்லை அவருக்கு.

மகா பெரியவாளின் பரிபூரண ஆசிக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்ட அந்த அட்சதையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினார். மீண்டும் ஒரு முறை சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

தெனமும் முந்நூறு காயத்ரி மந்திரம் ஜபிச்சுண்டு வா. நீ அமோகமா இருப்பே என்று ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

புதுத் தெம்பும், புது சக்தியும் பெற்றது போல் அங்கிருந்து தன் வீட்டுக்கு வந்தார் நீலகண்டன். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் மகா பெரியவாளின் பரிபூரண ஆசிக்கு சான்றாக இருந்தது. எல்லாமே ஏறுமுகம்தான்!

அடுத்து வந்த ஒரு சில மாதங்களில் வேலை தேடுவதற்காக திண்டிவனம் ஜாகையைக் கலைத்து விட்டு சென்னையை அடைந்தார். மகா பெரியவாளின் திருக்கையால் ஸ்பரிசம் பெற்றதோடு, அட்சதையும் பெற்ற பாக்கியத்தால் அந்த நாளில் சென்னையின் மிகப் பெரும் ஸ்தாபனமாக விளங்கிய சிம்ஸனில் ஓரிரு நாட்களிலேயே வேலைக்குச் சேர்ந்தார்.

சாதாரண பணியில் இணைந்தாலும் தன் அயராத உழைப்பினாலும், நேர்மை குணத்தாலும் மெள்ள மெள்ள உயர்வு பெற்றார்.

மகா பெரியவாளைத் தரிசித்து சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரிய பதவி, கார், பங்களா என்று வசதியாக சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார் நீலகண்டன்.

அப்போது மகா பெரியவா சென்னைக்கு யாத்திரை வந்திருந்தார். கோபாலபுரம் பகுதியில் நீலகண்டன் வசித்துவ் வரும் தெரு வழியாகவே பட்டணப் பிரவேசம் (நகர்வலம்) வந்து கொண்டிருந்தார்.

நடமாடும் தெய்வத்துக்குப் பூர்ணகும்பம் கொடுத்துத் தங்கள் இல்லத்தில் எழுந்தருள அழைக்க வேண்டும் என்று எண்ணற்றோர் அந்த வீதியில் காத்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு நீலகண்டனும் கலந்துமகா பெரியவாமகா பெரியவா என்று துதித்தபடி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கும் மகா பெரியவாளைப் பார்த்ததும் பரவசமாகி கண்கள் குளமாக நின்றிருந்தார் நீலகண்டன்.

மகா பெரியவாளை நோக்கி இவர் இரண்டடி எடுத்து வைக்கஅந்த மகான் நான்கடி நீலகண்டனை நோக்கி வைத்தார்.

பகவானை நோக்கி நாம் இரண்டடி எடுத்து வைத்தால், பகவான் நான்கடி எடுத்து வைத்து நம்மிடம் வருவார் அல்லவா?

அந்த வீதியில் மகா பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்த நீலகண்டன், ”வந்தவாசி தாலூகா நெற்குணம் கிராமம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்விதமாக ஆரம்பிக்க… ”நீதான் இருபத்தைந்து வருடத்துக்கு முன் திண்டிவனத்தில் இருட்டறையில் பார்த்த பையனோ? என்று கேட்கஉடைந்தே போய் விட்டார் நீலகண்டன்.

என்னே ஒரு நினைவுத் திறன்

என்னே ஒரு ஆட்கொள்கிற பாங்கு!

ஆமா பெரியவாதிண்டிவனம் இருட்டறை பையன்தான்.

இதான் உங்க அகமா (வீடா)? என்று பெரியவா நீலகண்டன் வீட்டை அடையாளம் காண்பித்துக் கேட்க… ”ஆமாம் பெரியவா என்று உணர்ச்சிப்பெருக்குடன் சொன்னார் நீலகண்டன்.

எந்த முன்னறிவிப்புமின்றி அந்த இல்லத்துக்குள் நுழைந்தார் பெரியவா. கூடத்தில் தென்பட்ட ஊஞ்சலில் தானே அமர்ந்தார். மெள்ள ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே நீலகண்டனைப் பார்த்து, ”இப்ப நீ என்ன பண்றே? என்று கேட்டார்.

மிகுந்த பவ்யத்துடன், ”சிம்சன் கம்பெனில இருக்கேன் பெரியவா என்றதும், ”நன்னா இரு என்று ஆசிர்வதித்து அடுத்து ஒரு சில நிமிடங்களில் வெளியே வந்து பட்டணப் பிரவேசத்தில் கலந்து நடக்க ஆரம்பித்தார்

நீலகண்டனது மகன் அனந்தராமகிருஷ்ணன், தந்தையார் பற்றின நினைவுகளை இப்போது பகிர்ந்து கொள்ளும்போதும் அவரது கண்கள் கலங்குகின்றன.