மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகளும், அறிஞர்களும், கல்வியாளர்களும் – இப்படி சமுதாயத்தின் முக்கிய அங்கத்தினர்களாக இருக்கின்ற பலரும் மகானோடு நல்ல பரிச்சயம் கொண்டிருந்தார்கள்.
தங்கள் பகுதிக்கு யாத்திரை வரும்போதோ அல்லது காஞ்சிபுரம் சென்றோ மகா பெரியவாளை அவ்வப்போது தரிசித்து அவரின் ஆசிகளைப் பெறுவது இவர்களின் வழக்கமாக இருந்து வந்தது.
முதலமைச்சர்கள் பக்தவத்சலம், காமராஜர், எம்.ஜி.ஆர்., மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.வி.கிரி,
ஆர். வெங்கட்ராமன், க.ராஜாராம், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் காஞ்சி மகா பெரியவாளைத் தரிசித்திருக்கிறார்கள். உலக நலனுக்காகவும், ஆன்மிகத்தின் வளர்ச்சிக்காகவும் இவர்களது சந்திப்பு அமைந்தது குறிப்பிடத் தக்கது.
1962-67களில் புதுவை (பாண்டிச்சேரி) நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி.) இருந்தவர் சேதுராம செட்டியார். இவர் சம்ஸ்கிருதத்தில் தேர்ந்த வல்லுநரும்கூட.
சம்ஸ்கிருதம் கற்றறிருந்தவர் என்றால், மகானிடம் சுலபமாக நெருங்கி விடலாம். அவர்களிடம் மகானுக்கு ஒரு தனி அன்பு உண்டு.
சம்ஸ்கிருதம் கற்ற பண்டிதர்கள் ஸ்ரீமடத்துக்கு வந்தால், அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதையே விசேஷமானது. அத்தகைய அன்பர்களோடு எண்ணற்ற தகவல்களை சம்ஸ்கிருதத்திலேயே உற்சாகமாகப் பேசுவார் மகா பெரியவா.
அந்த வகையில் சேதுராம செட்டியாரையும் அடிக்கடி தான் இருக்கின்ற இடத்துக்கு வரவழைத்து அவரிடம் அந்த மொழியிலேயே அளவளாவுவது மகா பெரியவாளின் வழக்கம்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எனப்படும் நகரத்தார்கள் வசிக்கும் பகுதியான இளையாற்றங்குடியில் பிரமாண்டமான ஒரு சதஸுக்கு 1962-ல் ஏற்பாடு செய்தார் மகா பெரியவா.
‘சதஸ்‘ என்றால் கலாசாரம், ஆன்மிகம் தொடர்பான விரிவான விவாதக் கருத்தரங்கு என்று சொல்லலாம்.
இசை, கலை, வரலாறு, கல்வெட்டு, சிற்பம், ஓவியம் என்று ஆன்மிகத்தோடு தொடர்பான ஒவ்வொரு துறையையும் எடுத்துக் கொண்டு அதில் வல்லுநர்களாக விளங்கக் கூடியவர்கள் பேருரை நிகழ்த்துவார்கள். அவரது பேருரையைத் தொடர்ந்து இதே துறையில் இருக்கும் பிற வல்லுநர்களும் தங்களது தரப்புக் கருத்துகளை சதஸில் எடுத்துச் சொல்வார்கள். இந்தப் பிரமாண்டமான கருத்தரங்கின்போது நடு நாயகமாக அமர்ந்திருக்கிற மகா பெரியவாளும் சம்பந்தப்பட்ட துறை தொடர்பான பல செய்திகளை அழகாக – தெளிவாக எடுத்துச் சொல்லி எல்லோரையும் ஆச்சரியப்பட வைப்பார்.
இப்படிப்பட்ட ஒரு சதஸ்தான் 1962-ல் இளையாற்றங்குடியில் ‘வியாஸ பாரத ஆகம சில்ப சதஸ்‘ என்ற தலைப்பில் நடந்தது.
விழா நடக்கக் கூடிய இடத்தில் அன்னக்கொடியானது பறக்க விடப்பட்டிருந்தது. ‘அன்னக்கொடி‘ என்பது அன்னபூரணியின் திருவுருவத்தைத் தாங்கி இருக்கக் கூடிய ஒரு கொடி. இந்தக் கொடி எங்கு பறக்க விடப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்தில் அன்னதானம் உண்டு என்று பொருள். அன்னக்கொடி பறந்து கொண்டிருக்கிற அன்னதானப் பந்தலில் என்ன சிறப்பு என்றால், நேரம் காலம் பாராமல் எல்லா வேளையிலும் அங்கே சாப்பாடு கிடைக்கும். தவிர, இங்கே உணவு எடுத்துக் கொள்ள வரக் கூடிய அன்பர்களிடம் ஜாதி, மதம் பார்க்க மாட்டார்கள்.
பல தேசங்களில் இருந்து அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்து இளையாற்றங்குடி சதஸில் பங்கேற்றனர். கலாசாரம், ஆன்மிகம் தொடர்பான அனைத்துத் துறைகளைச் சேர்ந்த உலகப் பிரபலங்களும் இதில் கூடினார்கள்.
உதாரணத்துக்கு இந்த சதஸில் பாண்டிச்சேரி இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக் கழகத் தலைவரும் பிரெஞ்சுக்காரருமான டாக்டர் ஜா பில்லியோஸா கலந்து கொண்டார். அவர் தனது உரையில், ‘தாய்லாந்து, ஜாவா முதலிய நாடுகளில் இந்திய ஆகம சிற்பங்களின் வளர்ச்சி‘ என்ற தலைப்பில் தக்க ஆதாரங்களையும் காட்டிப் பேசினார்.
தாய்லாந்து தூதுவரான மேன்மை தாங்கிய கூகிக் நிர்மன் ஹேமிந்தா என்பவர் நமது பண்பாடு குறித்துச் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த சதஸ் நடந்த காலகட்டத்தில் ஆலயங்களில் சிற்ப வேலைகள் செய்யும் ஸ்தபதிகளுக்கு வேலையே இல்லாமல் போனது. காரணம் – அப்போது இருந்த தமிழகக் கோயில்களில் புனருத்தாரணப் பணிகளோ, குடமுழுக்கோ எதுவும் நடைபெறவில்லை. இதனால், இதை மட்டுமே நம்பி வாழும் ஸ்தபதிகளுக்கு வேலையே இல்லாமல் போய் அவர்களது குடும்பங்கள் மிகவும் கஷ்ட ஜீவனத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
பல ஸ்தபதிகளின் குடும்பங்களில் ஒரு வேளைச் சாப்பாட்டுகே சிரமம் என்கிற சோகமான நிலை. ஏதாவது கோயில் வேலை செய்தால்தான் வருமானம் கிடைக்கும்… ஆனால், எந்த ஒரு கோயிலிலும் வேலை இல்லையே! பாழடைந்த கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் அப்படியே கிடக்கின்றன. அதை எடுத்துப் போட்டுப் பணி செய்ய எவரும் முன்வரவில்லை. என்ன செய்வார்கள் ஸ்தபதிகள்?
அப்போது கோயில் வேலை செய்யும் இந்த ஸ்தபதிகளை சினிமா துறை காந்தம் போல் இழுக்க ஆரம்பித்தது. ‘தற்போது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை… சினிமாவுக்குப் போய் விடக் கூடாது. என்றேனும் ஒரு நாள் கோயில்கள் எல்லாம் குடமுழுக்குக்குத் தயார் ஆகிற நேரம் வரும்‘ என்று நம்பிக் கொண்டிருக்கிற ஸ்தபதிகள் சிலர் சினிமா பக்கம் எட்டிப் பார்க்க விரும்பவில்லை.
மேலும், இள வயது கொண்ட சில ஸ்தபதிகள் சினிமா துறைக்குச் செல்லத் தயாராக இருந்தார்கள்.
ஸ்தபதிகளுக்குக் கோயில் வேலைகள் நிறைய கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், இளையாற்றங்குடி சதஸுக்குத் தமிழ்நாடு முழுக்க இருக்கிற ஸ்தபதிகளை அழைத்திருந்தார் மகா பெரியவா. கோயில்கள் புனருத்தாரணத்துக்கும், குடமுழுக்குக்கும் மகா பெரியவா இந்தக் கூட்டத்தில் வித்திட்டார். ஸ்தபதிகள் வாழ்க்கையில் நேர இருந்த ஒரு திருப்புமுனையை மகா பெரியவா தன் அருள் திறனால் திருப்பி விட்டார். பிறகென்ன… அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் ஸ்தபதிகள் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது.
நாம் மீண்டும் சேதுராம செட்டியாரிடம் வருவோம்…
சம்ஸ்கிருதம் கற்றவர் என்பதாலும், ஸ்ரீமடத்து பக்தர் என்பதாலும் இவருக்கும் இந்த சதஸில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு சென்றிருந்தது. எனவே, இளையாற்றங்குடி வந்திருந்தார் சேதுராம செட்டியார். தன்னுடன் புதுவை கோபாலய்யர் என்கிற அன்பரையும் அழைத்து வந்திருந்தார்.
அன்றைய தினம் சதஸ் நிறைவடைந்த பின், இரவு பதினோரு மணி வரை சேதுராமனுடன் சம்ஸ்கிருதம் தொடர்பான பல சமாசாரங்களை அலசிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.அடுத்த நாள் பகல் வேளையில் சேதுராம செட்டியாருக்கும் கோபாலய்யருக்கும் புதுவையில் ஒரு அவசர வேலை இருந்தது. எனவே, இருவரும் அன்றைய இரவே ஊருக்குத் திரும்பத் தீர்மானித்திருந்தார்கள்