மருத்துவமனை வந்து பணம் கட்டிய மஹான்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள விநாயகர் ஆலயத்தோடு தொடர்பில் இருந்தவர் ராஜகோபால். பாலக்காடு பூர்வீகம்.

தெய்வ பக்தியிலும், நாமசங்கீர்த்த பஜனையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சரளமாகப் பாடுவதற்கு ஏற்ற நல்ல குரல் வளம் கொண்டவர்.

உருக்கமாக நாமசங்கீர்த்த பஜனை நடந்து கொண்டிருக்கும்போது தன்னையும் மறந்து இறைவனோடு ஐக்கியமாகி விடுவார்.

தவிர, பல நேரங்களில் பிறர் பாடும் பாடலுக்கு ஏற்றபடியும், அல்லது தான் பாடும் பாடலுக்கு ஏற்றபடியும் அபிநயங்கள் பிடித்து மிகவும் மென்மையாக அற்புதமாக ஆடுவார் ராஜகோபால். இவரது நெற்றியில் பொட்டு போல் ஒரு இடத்தில் புடைப்பாகக் காணப்படும். இதுதான் இவருக்கு அடையாளம்.

நாம சங்கீர்த்தன பஜனைகளில் பாடல்களின் வரிகளுக்கேற்ப குதித்துக் குதித்து இவர் ஆடுவது, பார்ப்பவர்களைப் பரவசம் கொள்ளச் செய்யும். பகவானின் நாமாக்களையும் தங்களையும் அறியாமல் உச்சரிக்கச் செய்யும்.

பொருளாதாரத்தில் பெரிய வசதி என்றெல்லாம் சொல்ல முடியாது. நடுத்தர வர்க்கம்தான். ராஜகோபாலின் மகன்கள் சொற்ப சம்பளத்தில் உத்தியோகத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

பாலக்காடு பூர்வீகம் என்பதால் இவருக்குத் தெய்வம் என்றால் அது குருவாயூரப்பன்தான். அவரை விட்டால், அடுத்த தெய்வம் காஞ்சி மகா பெரியவா.

எதுவாக இருந்தாலும், இந்த இருவரும்தான் ராஜகோபாலுக்கு எல்லாமே!

ஒரு முறை ராஜகோபாலுக்கு வயிற்றில் லேசான வலி ஏற்பட்டது. ஏதோ, அஜீரணக் கோளாறால் வலிக்கிறது என்று கைவைத்தியமாக எதையோ செய்து விட்டுப் பேசாமல் இருந்து விட்டார். ஆனால், பின்னாட்களில் இந்த வயிற்று வலியானது பெரிய அளவில் தொந்தரவு தர ஆரம்பிக்கஏகத்துக்கும் தவித்துப் போனார் ராஜகோபால். வலி வாட்டி எடுக்க ஆரம்பித்தது.

போதிய பொருள் வசதி இல்லை என்றாலும், ஒரு சில நண்பர்களின் அறிவுரையின்பேரில் சென்னையில் பிரபலமாக உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ராஜகோபால் இவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்து பார்த்த மருத்துவர்கள் குழு, உடனடியாக வயிற்றுப் பகுதியில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் இது பிற்காலத்தில் நிறைய சிரமங்களைக் கொடுத்து விடும் என்றும் சொன்னார்கள்.

அப்போதெல்லாம் மருத்துவமனையில் சேருவதற்கு முன்னாலேயே பணத்தைக் கட்டுகிற வழக்கமெல்லாம் கிடையாது. எனவே, சிகிச்சைக்காக ராஜகோபால் அனுமதிக்கப்படும்போது அவரிடம் இருந்து ஒரு நயா பைசாகூட வாங்கவில்லை மருத்துவமனை நிர்வாகம்.

ஆபரேஷனும் நல்லபடியாக நடந்து முடிந்தது. சாதா வார்டில் படுக்க வைக்கப்பட்டார் ராஜகோபால்.

இரண்டு மூன்று நாட்கள் பரிபூரண ஓய்வுக்குப் பிறகு ராஜகோபால் முற்றிலும் குணமாகி விட்டார். வயிற்றில் வலி இல்லை. எல்லாமே அவருக்கு நார்மலாகி விட்டது.

அன்றைய தினம் காலை அவரைப் பரிசோதனை செய்து பார்க்க வந்த டாக்டர், சோதனைகளை முடித்து, ”யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட் என்று ராஜகோபாலைப் பார்த்து ஒரு புன்னகையுடன் சொல்லி விட்டு, ‘இவரை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்கிற குறிப்பையும் கேஸ் ஹிஸ்டரியில் எழுதி வைத்தார்.

ராஜகோபால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. அந்த டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தார்கள்.

ஆபரேஷன் செலவுக்கு சுமார் ஐயாயிரம் ரூபாய் ஆகலாம் என்று குத்துமதிப்பாக நினைத்து, இதைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார் ராஜகோபால். இந்த சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இது பெரிய தொகை.

எனவே, ராஜகோபாலின் மகன்களுள் ஒருவன் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்துக்குப் பணம் கட்டப் போனான். ”எவ்வளவு கட்ட வேண்டும்? என்று கேட்டவனுக்கு அவர்கள் சொன்ன தொகை அதிர்ச்சி அளித்தது.

முப்பத்திரண்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அனைத்து பில்களையும் பார்த்து விட்டுச் சொன்னவர்களை இயல்பான ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு, சமாளிக்கும் விதமாகஇதோ, கொஞ்ச நேரத்துல வந்துடறேன் என்று அங்கிருந்து வெளியே வந்தான். தந்தை படுத்திருக்கும் வார்டுக்கு வந்தான்.

ஆஸ்பத்திரியில் கட்ட வேண்டிய தொகையைச் சொன்னதும், ராஜகோபாலுக்கு அதிர்ச்சி. அவ்வளவு பணம் அவரிடம் இல்லை. இந்தப் பணத்தை வீட்டிலோ அல்லது வங்கியில் இருந்தோ எடுத்து வரும் அளவுக்கு செழிப்பும் இல்லை.

என்ன செய்வது என்று யோசித்தவருக்கு மகா பெரியவா நினைவுக்கு வந்தார். கருணை தெய்வமான அவரை ஒரு கணம் நினைத்து மனமாரப் பிரார்த்தித்தார்.

கையில் இருப்பதோ ஐயாயிரம் ரூபாய். தேவைப்படுவதோ, முப்பத்திரண்டாயிரம் ரூபாய். இருபத்தேழாயிரம் ரூபாய்க்கு எங்கே போவது?

சட்டென்று ராஜகோபாலின் நினைவுக்கு வந்ததுஉடன் அவருடன் நாமசங்கீர்த்தனத்தில் இருக்கக் கூடிய அன்பர்கள். திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள ஊர்கேட்டவரம்பாளையம். இந்த ஊரில் நடக்கிற பஜனோத்ஸவம் வெகு பிரபலம். இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பலரும் சென்னையில்தான் வசித்து வருகிறார்கள். நல்ல நிலையில் இருந்து வருபவர்கள். இவர்களை அணுகி, உதவி கேட்டால் நிச்சயம் செய்வார்கள் என்ற எண்ணம் ராஜகோபால் மனதில் தோன்றியது. உடனே, தன் மகன்களை அழைத்து, ‘நீ உடனே இவரைப் போய் வீட்டுல பாருஇவரு இங்கதான் இருக்கார். நீ போய் அவரைப் பாரு என்று தன் மகன்களுக்கு உத்தரவிட்டார்.

தன் கைவசம் இருக்கக் கூடிய நாலைந்து பிரபலமான ஆசாமிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களது முகவரியைக் கொடுத்து மகன்களை அனுப்பி வைத்த பின், வீட்டினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்: ”பசங்க திரும்பி வரும்போது எப்படியும் பணத்தோடதான் வருவாங்க. பணத்தைக் கட்டிட்டு நாம பொறப்பட்டுடலாம்.

அடுத்து வரக் கூடிய ஒவ்வொரு நிமிடமும் தவிப்பாகவே போனது ராஜகோபாலுக்கு. பின்னேஉடல் குணமான பின் மருத்துவமனையிலேயே சும்மா தங்கி இருப்பதற்கு எவருக்குத்தான் மனம் வரும்?

பசங்கள் வரும்போது பணத்துடன் திரும்ப வேண்டும் என்று மகா பெரியவாளிடம் பிரார்த்தனை செய்தார்.

சுமார் நான்கு மணி நேரம் ஓடியது.

பணம் தேடி வெளியே போன பையன்கள் சோகமான முகத்துடன் ஆஸ்பத்திரி திரும்பி, அப்பாவுக்கு எதிரில் தலை குனிந்தபடி நின்றார்கள்.

தேடிப் போன எவருமே அவரவர்களது வீடுகளில் இல்லையாம். காரணம்கேட்டவரம்பாளையத்தில் பஜனோத்ஸவம் துவங்கி விட்டதால், எல்லோரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்ப சமேதராக முன்கூட்டியே கிளம்பி விட்டார்களாம்.

சுரத்திழந்து போனார் ராஜகோபால். அடுத்து என்ன செய்வது என்பது புரியவில்லை அவருக்கு.

ஆஸ்பத்திரியில் பணம் கட்டாமல்ஒரு வாரம் கழிச்சுக் கட்டறேன் என்று ஏதேனும் சால்ஜாப்பெல்லாம் சொல்லி டிஸ்சார்ஜ் ஆவது உசிதமாகப் படவில்லை ராஜகோபாலுக்கு. ஒத்தை நயா பைசாகூட பாக்கி வைக்காமல் முழுக்கப் பணத்தைக் கட்டிவிட்டுத்தான் வெளியே போக வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

மருத்துவமனையில் என்ன வைத்தியம் செய்தார்கள்? இதற்கு உண்மையிலேயே இவ்வளவு தொகை ஆகுமா என்றெல்லாம் ராஜகோபால் யோசிக்கவே இல்லை. எப்பவுமே இதுபோல் கேட்கத் தெரியாது அவருக்கு. இருந்தாலும், தற்போது இருக்கிற குழப்பத்தில் இருந்து எப்படி மீள்வது என்கிற சிந்தனை குதிரை கட்டிப் பறந்து கொண்டிருந்தது அவரது மனசுக்குள்.

ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி யோசித்தவருக்கு சட்டென்று ஒரு ஐடியா மனதுக்குள் எழுந்தது.

தனது மகன்களைப் பார்த்தார். ”அடேய் பசங்களாநம்மகிட்ட இப்ப பணம் இல்லை. அப்படியே கட்டுக் கட்டா பணத்தை எடுத்திட்டுப் போய் உடனே கட்றதுக்கு உண்டான சூழ்நிலை இப்ப அமையலை. இந்த நேரத்துல எனக்கு ஒரே ஒரு ஐடியா தோணுது. இதன்படி நடந்துட்டோம்னா உடனே பணம் கட்ட வேண்டாம். நமக்கும் ரெண்டு மூணு நாள் அவகாசம் கிடைக்கும் என்றார் உற்சாகமாக.

என்னப்பா ஐடியாசொல்லுங்க – தந்தையை ஆவலுடன் நோக்கினர் மகன்கள்.

இதுவரை என்னைப் பாடா படுத்திட்டிருந்த வயத்து வலி இப்ப என்கிட்டேர்ந்து போயிடுச்சு. அதனால, டிஸ்சார்ஜ் பண்றேன்னு சொல்லிட்டாங்க. ஆனா, பணத்தைக் கட்டிட்டு டிஸ்சார்ஜ் ஆகறதுக்கு உண்டான சூழ்நிலை இப்ப இல்லே. இப்படிப்பட்ட நிலைல ஒரே ஒரு டிராமா போட்டாத்தான் எல்லாம் சரிப்படும் என்றார் ராஜகோபால்.

சொல்லுங்கப்பாஎன்னவோ டிராமா அது இதுன்னு சொல்றீங்க – மகன்கள் குழம்பினார்கள்.

மீண்டும் எனக்கு வயத்து வலி வந்தது மாதிரி நான் ஒரு டிராமா பண்ணப் போறேன். அதாவது இன்னும் கொஞ்ச நேரத்துலஐயோ, வயத்தை வலிக்குதுவயத்தை வலிக்குதுனு நான் கதற ஆரம்பிப்பேன்.

நீங்கல்லாம் என்ன பண்றீங்கன்னா, படபடப்போட ஓடிப் போய் டாக்டர்ஸ்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு அவங்களைக் கூட்டிட்டு வரணும். டாக்டர்ஸும் பதட்டத்தோட ஓடி வருவாங்க. ‘என்னடாதுஇப்பதான் இவருக்கு ஆபரேஷன் பண்ணி வயித்து வலியை சரி பண்ணினோம். இப்ப மீண்டும் எப்படி வலி?னு யோசிப்பாங்க. இதை அடுத்து, ‘சரி, ரெண்டு நாள் இங்கியே இருங்கனு சொல்லிடுவாங்க. இந்த ரெண்டு நாள் அவகாசத்துக்குள்ள பேலன்ஸ் பணத்தை எப்படித் தயார் பண்றதுன்னு யோசிச்சிடலாம் என்று சொல்லி நிறுத்தினார்.

மூத்த பையன் சற்றே சோகத்துடன் சொன்னான்: ”அப்பாரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்கு வந்த வயத்து வலியை இப்பதான் சரி பண்ணி இருக்காங்க. இப்ப மீண்டும் வயத்து வலின்னு நீங்க ஒரு டிராமா பண்றதைக்கூட எங்களால தாங்க முடியாதுப்பா. வேணாம்ப்பா இந்த விஷப் பரீட்சை.

டேய், ஏண்டா கவலைப்படறீங்கஅதான் சொல்லிட்டேன்ல – ‘இது ஒரு டிராமானு. இப்ப இருக்கிற பிரச்னைலேர்ந்து சமாளிக்க எனக்கு வேற எதுவும் தோணலைடா. எல்லாரும் கோ ஆபரேட் பண்ணுங்கடா என்றார் கையெடுத்துக் கும்பிட்டவராக.

அடுத்த விநாடி மூத்த மகன் வெளியேறினான்தகவலைச் சொல்லி டாக்டரை அழைத்து வர.

இந்த இடைப்பட்ட நேரத்தில் வயிற்று வலி வந்தது போல் கதறுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார் ராஜகோபால்.

அடுத்த நிமிடமே குழப்பத்துடன் வேகவேகமாக உள்ளே நுழைந்தார் டாக்டர். ராஜகோபாலுக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் இவர்தான். ஆபரேஷன் முடிந்ததும், அவருக்கு எல்லாவித பரிசோதனைகளும் செய்து விட்டு, ‘எல்லாம் பர்ஃபெக்ட்டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று கேஸ் ஹிஸ்டரியில் குறிப்பு எழுதிக் கொடுத்தவர்.

ஸ்டெதாஸ்கோப் வைத்து சோதித்தார். வயிற்றில் ஒரு சில இடங்களில் லேசாக அமுக்கிப் பார்த்தார். இன்னும் ஒரு சில பரிசோதனைகளையும் செய்து பார்த்தார்.

சும்மா சொல்லக் கூடாது, ராஜகோபால் அதேநிலையில் அப்படியே இருப்பதாகக் காட்டிக் கொண்டார். ‘அங்கதான் டாக்டர்அந்த இடத்துலதான் வலிக்குது என்று இடங்களை மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

டாக்டர் வெகு நிதானமாகச் சொன்னார்: ”மிஸ்டர் ராஜகோபால்ஒங்களுக்கு இனி வயித்து வலிஅதுவும் ஒடனே வர்றதுக்கு சான்ஸே இல்லியேஅதான் யோசிக்கிறேன் என்றவாறு உதட்டைப் பிதுக்கினார்.

ராஜகோபால், ”என்னன்னு புரியலை டாக்டர்திரும்பவும் வயத்து வலி பிராணனை எடுக்கிறது என்று நன்றாகவே நடிக்க ஆரம்பித்தார்.

நோ மிஸ்டர் ராஜகோபால்யூ ஆர் ஆல் ரைட் நவ். உங்களுக்கு இப்ப வலி வர்றதுக்கு சான்ஸே இல்லை. நீங்க தங்கி இருக்கிற இந்த வார்டுக்கு அடுத்த அட்மிஷனும் போட்டாச்சு. புது பேஷண்ட் இங்கே இன்னும் ஒன் ஹவர்ல அட்மிட் ஆகணும்உங்க சைடுலேர்ந்து பணமும் கட்டியாச்சுஇப்ப என்ன பண்றதுன்னு எனக்குப் புரியலை என்று டாக்டர் சொன்னபோது, கடைசியாக அவர் சொன்ன விஷயம் ராஜகோபாலை சட்டென்று ஈர்த்தது.

டாக்டர்என்ன சொன்னீங்கபணம் கட்டியாச்சா? – தடவுவது போல் செயற்கையாக வைத்துக் கொண்டிருந்த தன் கையை வயிற்றில் இருந்து மெள்ள எடுத்தபடியே கேட்டார்.

யெஸ்…. ஸாரி மிஸ்டர் ராஜகோபால்உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். இன்னிக்குக் காலைல வயசான ஒருத்தர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனுக்கு வந்தார். ‘இங்கே வயத்து வலின்னு சொல்லி அட்மிட் ஆகி இருக்கானே, ராஜகோபால்அவன் என் பேரன்எங்கிட்ட கோவிச்சுக்கிட்டு பணம் வாங்காம வந்துட்டான். அவன் கட்ட வேண்டிய முழுப் பணத்தையும் நான் கட்டிடறேன்னு சொல்லிட்டு, சொளையா முப்பத்திரண்டாயிரம் ரூவாயைக் கட்டிட்டுப் போனார். யதேச்சையா அப்ப நான் ரிசப்ஷன்லதான் இருந்தேன் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் டாக்டர்.

ராஜகோபாலுக்கும், அவரது மகன்களுக்கும் பிரமிப்பின் காரணமாக வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

தந்தையும் மகன்களும் ஆச்சரியம் விலகாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் ராஜகோபாலுக்கு அப்படி எந்த ஒரு தாத்தாவும் இல்லை. இல்லாத தாத்தா எப்படி வந்து பணம் கட்ட முடியும்?

மூத்த மகன் கேட்டான். ”ஏம்ப்பாஆஸ்பத்திரிக்கே வந்து பணம் கட்டிட்டுப் போற அளவுக்கு உங்களுக்கு ஒரு தாத்தா இருக்கார்னு இதுவரைக்கும் நீங்க எங்ககிட்ட சொல்லவே இல்லியே?

ஏதேதோ சிந்தனைவயப்பட்ட ராஜகோபால், ”அதான்டா நானும் யோசிக்கிறேன் என்று சொன்னவர், டாக்டரைப் பார்த்து, ”சார், என்னோட தாத்தா ஆஸ்பத்திரி ரிசப்ஷனுக்கே வந்து பணம் கட்றதை நீங்க பார்த்தீங்க இல்லியா? என்று கேட்டார்.

ஆமாநான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.

டாக்டர், அவர் எப்படி இருந்தார்?

ஒரு சில விநாடிகள் எடுத்துக் கொண்ட டாக்டர், ”குள்ளமா இருந்தார். முகத்துல நரைச்சுப் போன தாடிகாவி வேஷ்டி மாதிரி ஏதோ கட்டி இருந்தார் என்று மெள்ள நினைவுபடுத்தி அடையாளம் சொல்லவும், மேலும் குழம்பினார் ராஜகோபால்.

யாராக இருக்கும்? என்று ராஜகோபால் யோசித்துக் கொண்டிருக்கடாக்டர் சட்டென்று உரக்கக் கத்தினார்.

ராஜகோபால் சார்உங்களோட தாத்தாவை உங்களுக்கே அடையாளம் தெரியலியா? இதோ, உங்க தலைமாட்டுல தாத்தாவோட படத்தை நீங்க வெச்சிட்டிருக்கீங்களேஇவர் யாருன்னு தெரியாமத்தான் வெச்சிருக்கீங்களா? என்று கிண்டலுடன் கேட்கடாக்டர் அடையாளம் காட்டிய இடத்தில் ராஜகோபால் பார்வை திரும்பியது.

அங்கேசிறு படமாக மகா பெரியவா திருக்காட்சி தந்து கொண்டிருந்தார். இந்தப் படத்தை வெகு காலமாகத் தன்னுடன் வைத்திருப்பது ராஜகோபாலின் வழக்கம்.

வீட்டை விட்டு எங்கே வெளியே போனாலும், வெளியூர்களுக்கு நாமசங்கீர்த்தன பஜனை நிமித்தம் கிளம்பினாலும், சதா சர்வ காலமும் அவருடன் இருக்கும் இந்தப் படம்.

டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார் ராஜகோபால். ”டாக்டர், என்ன சொல்றீங்கஇவரா ஆஸ்பத்திரிக்கு வந்து பணத்தைக் கட்டினார்? இவரா இங்கே ரிசப்ஷன் வரைக்கும் வந்து என்னைப் பேரன்னு சொன்னார்? என்று குரலில் ஒரு கேவலுடன் கேட்டார்.

ஆமா சார். இவரேதான். இவர் உங்களோட தாத்தாவா? பாக்கறதுக்கு சந்நியாசி மாதிரி இருக்கார். அவ்ளோ பணம் அவர்ட்ட எப்படி? ஏதாச்சும் பிஸினஸ் பண்றாரா? – இது டாக்டர்.

ராஜகோபால் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

டாக்டர் மிரண்டு போனார். ”ஸாரி மிஸ்டர் ராஜகோபால் சார்நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?

டாக்டர்இவரை நீங்க பார்த்ததே இல்லியா? இந்த தெய்வத்தை காஞ்சிபுரத்துல தரிசனம் பண்ணியது கெடையாதா?

இதுவரைக்கும் பார்த்ததில்லைசரி, யார் இவர்? என்று டாக்டர் கேட்டதும், ஆதியோடு அந்தமாக மகா பெரியவாளைப் பற்றி டாக்டருக்கு விளக்கினார் ராஜகோபால்.

அந்த நாளில் மகா பெரியவாளைப் பார்த்திராதவர்கள் அதிகம். அவரது புகைப்படமும் எல்லோரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவேதான், டாக்டருக்கு அதுவரை மகா பெரியவாளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

டாக்டரது விழிகளில் இப்போது நீர் கோர்க்க ஆரம்பித்தது. ”ராஜகோபால் சார்இப்படியும் ஒரு சந்நியாசி இருக்க முடியுமா? உங்களது தேவை பற்றி அறிந்து, அவரே இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து இத்தனை பெரிய தொகையைக் கட்டி விட்டுப் போயிருக்கிறார் என்றால், என் வாழ்க்கையில் நான் பார்த்திராத மிகப் பெரிய அற்புதம் என்று ராஜகோபாலின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.

சம்பந்தப்பட்ட நோயாளி தான் பணம் கட்டவில்லை என்கிறார். ஆனால், நோயாளியின் தாத்தா என்று சொல்லிக் கொண்டு ஒரு கிழவனார் ஆஸ்பத்திரிக்கே வந்து பணத்தைக் கட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.

பெற்ற தந்தைக்காக சொந்த மகனே உதவ முன்வராத இந்தக் காலத்தில் யாரோ ஒரு பெரியவர் தன்னைதாத்தா என்று சொல்லி எப்படி ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜகோபாலுக்காகப் பணம் கட்ட முடியும்? அதுவும் அனுமதிக்கப்பட்டிருக்கும்  பேரனை ஆஸ்பத்திரிக்குள் வந்து பார்க்காமல் அப்படியே திரும்பிச் சென்று விட்டாரேஎப்படி இது சாத்தியமாகும்?

இப்படியெல்லாம் டாக்டரின் மனதுக்குள் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில்தான் ஒரு திடீர் சந்தேகமும் வலுத்தது அவருக்கு.

இங்கு தங்கி சிகிச்சை செய்து கொண்ட பேஷண்ட் ராஜகோபால், முப்பொழுதும் தான் வணங்கும் குருவே தனக்காக மருத்துவமனைப் படிகள் ஏறிப் பணம் கட்டி விட்டுச் சென்றதாக நம்புகிறார்மகா பெரியவா என்கிற மகானை இதுவரை நான் பார்த்ததில்லை. ராஜகோபால் நம்புவது போல் இதெல்லாம் நிஜமாகத்தான் இருக்குமா? ஒருவேளைபிளாக் மேஜிக் என்ற பெயரில் நிறைய படிக்கிறோமேஅதுபோல் ஆகி விட்டால், இந்தப் பெரியவர் ஆஸ்பத்திரிக்கும் வந்ததும் மாயையா? அப்படியானால் அந்த முப்பத்திரண்டாயிரம் ரூபாயும் ரிசப்ஷன் கல்லாவில் அப்படியே இருக்குமா? அல்லது மறைந்து போயிருக்குமா?

இதுதான் டாக்டருக்கு வந்த விபரீதமான சந்தேகம்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பணம் அதிகம் வந்தாலும் பத்தும் பறந்து போகும்.

ராஜகோபால் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் இருந்து டாக்டர் கிடுகிடுவென ஓட ஆரம்பித்தார்.

என்னாச்சு சார்? திடீர்னு கிளம்பறீங்க? நான் ஆஸ்பத்திரியில் இருந்து பொறப்படலாமா? இங்கே எவ்வளவு தொகை கட்டணுமோ, அதைக் கட்டியாச்சுனு நீங்களே சொல்லியாச்சுபொறப்படட்டுமா? என்று ராஜகோபால் கேட்டுக் கொண்டிருக்கும்போது, ”ஒரு நிமிஷம் இருங்க, இதோ வரேன் என்று பதட்டமாகச் சொல்லி விட்டு ஓடினார் டாக்டர்.

நேராக ரிசப்ஷனுக்குப் போய் நின்றார். அங்கிருந்த ஒரு பணியாளரிடம், ”இன்னிக்குக் கார்த்தால வயசானவர் ஒருத்தர் வந்து ராஜகோபால்ங்கிற பேஷண்ட்டுக்காக முப்பத்திரண்டாயிரம் ரூபாய் கட்டினாரே? அந்தப் பணம் எங்கே இருக்கு? என்றார் படபடப்பாக.

எதற்கு டாக்டர் இப்படிப் பரபரப்பாகக் கேட்கிறார்? என்கிற விஷயம் தெரியாத அந்த ஊழியரும், மேஜை டிராயருக்குள் கைவிட்டு அந்த முப்பத்திரண்டாயிரத்தை அப்படியே ஒரு பெரிய கத்தையாக எடுத்து, டாக்டரிடம் நீட்டினார்.

அதைக் கையில் வாங்கிய டாக்டர், கண்களில் ஒற்றிக் கொண்டு கடகடவென்று எண்ண ஆரம்பித்தார்.

சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் அமைதியாக ஓடியது. ‘யப்பாடீநல்லவேளைபணம் அப்படியே இருக்கு. தொகையும் சரியா இருக்கு என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர், ”வெச்சுக்கோப்பா என்று அதை அப்படியே பணியாளரிடம் கொடுத்து விட்டு ராஜகோபால் இருக்கும் வார்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

மூச்சிரைக்க டாக்டர் உள்ளே வந்ததும், ”என்ன டாக்டர்கூப்பிடக் கூப்பிட ரொம்ப அவசரமா ஓடினீங்களேதிடீர்னு என்ன விஷயம்நான் டிஸ்சார்ஜ் ஆகலாமா? என் வீட்டுக்குப் புறப்படலாமா? இன்னும் பதிலே சொல்லலியே என்று கேட்டார்.

நீங்க இந்தக் கேள்வியைக் கேப்பீங்கனு தெரியும். அதுக்குப் பதில் சொல்றதுக்குத்தான் நான் ஓடினேன். ரிசப்ஷன்ல இருக்கிற கேஷ் கவுண்ட்டர்ல நீங்க சொன்ன சந்நியாசி மகா பெரியவா கட்டின முப்பத்திரண்டாயிரம் ரூபா அப்படியே இருக்கு என்று நீண்ட பெருமூச்சுடன் சொன்னவர், ”இனிமே நீங்க தாராளமா உங்க வீட்டுக்குக் கௌம்பலாம். ஆஸ்பத்திரி ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஓவர் என்றார்.

அப்போதுதான் விஷயம் ராஜகோபாலுக்குப் புரிந்தது. ”மாபெரும் குருவாக விளங்கக் கூடிய மகா பெரியவாளே இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பணம் கொடுத்திருக்கார்னு சொன்னவுடனே, அந்தப் பணம் அப்படியே இருக்காஇல்லேன்னா மாயமா மறைஞ்சு போயிடுத்தானு பாக்கறதுக்காகத்தான் இப்படி மூச்சிரைக்க ஓடினீங்களா? என்று கேட்டு விட்டுக் கடகடவென்று சிரித்தார்.

பின்னேஅதற்காகத்தான் ஓடினேன். நீங்க டிஸ்சார்ஜ் ஆனபிறகு அந்தப் பணம் கேஷ் கவுண்ட்டர்லேர்ந்து மாயமா மறைஞ்சு போயிடுச்சுன்னா இந்த மருத்துவமனை நிர்வாகம் என்னை அல்லவா கேள்வி கேட்கும். நானும் ஒரு விதத்தில் விசாரிக்கப்படுவேன் அல்லவா. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கையாகத்தான் என்று அந்த டாக்டரும் உண்மையைச் சொன்னார்.

அடுத்து ராஜகோபாலுக்குப் பளிச்சென்று ஒரு விஷயம் தோன்ற… ”நீங்க இந்த அளவுக்கு ஓடிப் போய் அந்தப் பணம் அப்படியே இருக்காஅவை எல்லாம் நல்ல பணமா, கள்ளப் பணமா என்பது வரைக்கும் பாத்துட்டு வந்திருக்கீங்கநான் இப்ப ஒங்களை ஒரு கேள்வி கேக்கறேன்.

ஒங்க ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்கிற ஒரு பேஷண்ட்டோட டிஸ்சார்ஜுக்காகஅவரை சார்ந்த உறவினரோ நண்பரோ வந்து பணத்தைக் கட்டுறார்னு வெச்சுப்போம். அந்த நேரத்துல ஆஸ்பத்திரி ரசீதுப் புத்தகத்துல பணம் கட்டுனதுக்கு அத்தாட்சியா அவர்கிட்டேர்ந்து ஒரு கையெழுத்து வாங்கறது வழக்கம்தானே டாக்டர்? என்று கேட்டார்.

நிச்சயமாபணத்தை விட அந்தப் பணத்தை யாரு கொண்டு வந்து கட்டறாங்க அப்படீங்கறதும் நிர்வாகத்துக்கு முக்கியம். நிச்சயம் கையெழுத்து வாங்குவோம்.

ஆனா, எங்க குரு மகா பெரியவா எந்த பேப்பர்லயும் கையெழுத்தே போட மாட்டாரேகாஞ்சி பீடத்தில் பீடாதிபதிகளா இருக்கிறவங்க யாருமே கையொப்பம் போடுறதில்லை. காஞ்சி சங்கர மடத்துலஸ்ரீகார்யம் என்று சொல்லப்படக் கூடிய மேனேஜர்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அவர்தான் எல்லாவற்றிலும் மடத்தின் சார்பாகவும், மகா பெரியவா சார்பாகவும் கையெழுத்து போடுவார். பணத்தைக் கட்டின மகா பெரியவா எப்படிக் கையெழுத்து போட்டிருப்பார்?

இல்லியேகையெழுத்து போட்டுருக்காரேரிசப்ஷன்ல கேட்டு உறுதி செய்து விட்டேனே

உறுதி செய்திருக்கலாம்கையெழுத்து போட்ட இடத்தை உற்றுப் பார்த்தீர்களா? என்று ராஜகோபால் சந்தேகத்தைக் கிளப்பமீண்டும் ஓடினார் அந்த டாக்டர்.

ரிசப்ஷனுக்குப் போய் முப்பத்திரண்டாயிரம் ரூபாயைச் செலுத்திய பெரியவர் கையெழுத்து போட்ட ரசீதுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தார் டாக்டர்.

அவரது கண்களை அவரால் நம்ப முடியவில்லை!

கையெழுத்து இட வேண்டிய இடத்தில் எந்தக் கிறுக்கலும் காணப்படவில்லை. வெறுமனே வெள்ளையாககாலியாக இருந்தது.

ரசீதுப் புத்தகத்தை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார் டாக்டர். அதில் கையெழுத்து இருந்தால்தானே தென்படும்?

பணியில் இருந்த ஊழியரைப் பார்த்து, ரசீதுப் புத்தகத்தையும் காண்பித்து, ”ஏம்ப்பாமுப்பத்திரண்டாயிரம் கட்டின பெரியவர்கிட்ட இதுல ஒரு கையெழுத்து வாங்கினீல்ல..? என்று கேட்டார்.

ஆமாம் சார். ஒரு புன்னகையோட கையெழுத்து போட்டுக் குடுத்தாரே? என்று சொன்ன ஊழியர் மீண்டும் ரசீது புத்தகத்தில் தன் பார்வையைத் திருப்பஅவருக்கும் அதிர்ச்சி!

இதற்குள் மெள்ள ராஜகோபாலே படிகளில் இருந்து இறங்கி, ரிசப்ஷனுக்கு வந்து விட்டார். அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கும் டாக்டரை நெருங்கி, ”என்ன சார்கையெழுத்து இருக்கா? காமிங்கோமகா பெரியவாளோட கையெழுத்தை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை என்று ஆர்வத்துடன் கேட்டார்.

ஆனால் டாக்டர் உதட்டைப் பிதுக்கி, ‘எல்லாம் அவனுக்கே வெளிச்சம் என்பது போல் ஆகாசத்தை நோக்கிக் கைகளைக் கூப்பினார். ரசீதுப் புத்தகத்தையும் ராஜகோபாலிடம் நீட்டினார்.

மகான்களும், தெய்வங்களும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உண்மையான பக்தர்களுக்கு உதவுவார்கள் என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இருந்து கொண்டிருக்கிறார் நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவா.

ஏதோ ஒரு மூலையில் இருந்தபடி தன்னை ஆத்மார்த்தமாகப் பிரார்த்திக்கும் எந்த ஒரு பக்தனையும் மகா பெரியவா கைவிட்டு விடுவதில்லை. என்ன உதவி எப்போது தேவைப்படுகிறதோ, அவற்றை வழங்கி ஆட்கொள்கிறார்.

வியாதிகள் குணமாக வேண்டினால், அவற்றை வேரோடு அறுத்தெறிகிறார். மருத்துவர்கள் வியக்கிறார்கள்.

நியாயமான வழக்குகளில் வெற்றி நம் பக்கம் நிலைக்கப் பிரார்த்தித்துக் கொண்டால், நீதியை வழங்குகிறார்.

காஞ்சி மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் மட்டும்தான் இத்தனை அற்புதங்களும், அதிசயங்களும் என்று இல்லை. நிகழ்காலத்திலும் இதுபோன்ற அற்புதங்கள் நடந்து வருகின்றன. எதிர்காலத்திலும் நடக்கும்.

மகான்களுக்கும், தெய்வங்களுக்கும் கால தேச வர்த்தமானங்கள் கிடையாது. அனைத்தையும் கடந்தவர்கள்.

காஞ்சி மகா பெரியவா ஜீவ சமாதி கொண்டு, கண் கண்ட தெய்வமாக உறைந்து வரும் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் செல்லுங்கள். அங்கே பிருந்தாவனத்தில் திருக்காட்சி தரும் அந்த மகானிடம் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்யுங்கள்.

ஒருவரது நியாயமான எந்த ஒரு பிரார்த்தனையும் வீண்போவதில்லை.

தங்களது எல்லா நலன்களுக்கும் இவரையே பரிபூரணமாக நம்பி, இவரது சந்நிதிக்கு வந்து முறையிடும் பக்தகோடிகள் இன்று பல்லாயிரக்கணக்கானோர்.

எல்லோரையும் ஆட்கொண்டு காத்து அருள்பாலித்து வருகிறார் மகா பெரியவா.