திருமணத்துக்கு அருளிய திருமாங்கல்யம்

ன்னை தரிசிக்க வருகின்ற ஆத்மார்த்தமான பக்தன் எதை எதிர்பார்த்து வருகிறானோ, அதை அருளாமல் சம்பந்தப்பட்ட பக்தரை எப்போதுமே மகா பெரியவா திருப்பி அனுப்பியதில்லை.

இந்த மகானை சரண் புகுந்தால், எண்ணியது ஈடேறும் என்ற நம்பிக்கையுடனும் திடமான குரு பக்தியுடனும் வந்த பக்தகோடிகள், எந்நாளும் ஏமாற்றப்பட்டதில்லை.

இதற்கு உதாரணமாக எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்ல முடியும்.

அவற்றில் இருந்து ஒரு சம்பவம்:

கருணைக் கடலான மகா பெரியவாளை நம்பி விட்டால், எதைப் பற்றியும் கவலை வேண்டாம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது இந்த நிகழ்வு.

மகா பெரியவா அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார்.

ஏழை பிராமணர் ஒருவர் தன் மனைவியுடன் மகா பெரியவா தரிசனத்துக்காக மடத்துக்கு வந்திருந்தார்.

அன்றைய தினம் பெரியவா தரிசனத்துக்கு அவ்வளவாக பக்தர்கள் கூட்டம் இல்லை. சொற்ப பக்தர்களே சந்நிதியில்அங்கும் இங்குமாக அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கி, உத்தரவு தந்து அனுப்பி விட்டார் மகா பெரியவா.

ஏழை பிராமணத் தம்பதி மட்டும் மடத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.

தாங்கள் எதிர்பார்த்து வந்திருப்பது இங்கு கிடைக்குமா என்ற ஏக்கம் அவர்களது முகத்தில் தெரிந்தது.

மகா பெரியவா பார்வையில் இருந்து இவர்கள் தப்ப முடியுமா?

தனக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஒரு அன்பரிடம் தம்பதியரை அடையாளம் காட்டி, “அவாளை என்கிட்ட கூட்டிண்டு வா என்றார் பெரியவா.

கைங்கர்யம் செய்து வந்த அன்பர் ஏழை பிராமணத் தம்பதியரிடம் ஓடிப் போய், “பெரியவா ஒங்களை வரச் சொல்றா. வாங்கோ என்றார்.

சந்தோஷம் தாங்க முடியவில்லை. மகா பெரியவாளின் அனுக்ரஹமே கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இருவரும் எழுந்து, விறுவிறுவென்று வந்தார்கள்.

மகானுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டு கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றார்கள்.

தம்பதியரைப் பார்த்து, ‘என்ன விஷயமா வந்திருக்கேள்? என்பது போல் ஜாடையில் கேட்டார் பெரியவா.

அவ்வளவுதான்இதற்கென்றே காத்திருந்தது போல் மடமடவென்று கொட்டினார் அவர்.

பெரியவாஎன்னோட பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணத்துக்கு நாளும் குறிச்சு பத்திரிகையும் அடிச்சாச்சு. எல்லோர்க்கும் போஸ்ட்ல அனுச்சாச்சு. பந்துக்களுக்கு நேர்ல போயும் குடுத்தாச்சு. அடுத்த வாரம் கல்யாணம்.

எனக்குப் பெரிய உத்தியோகமெல்லாம் கிடையாது. ஏதோ அன்றாடம்காய்ச்சிதான். என் சக்திக்கு ஏத்த மாதிரி எடம் அமைஞ்சுது. நல்ல புள்ளையாண்டான் மாப்பிள்ளையா அமைஞ்சிருக்கான். என்னோட நிலைமையைப் புரிஞ்சு தெரிஞ்சவா, தெரியாதவாஇப்படி யார் யாரெல்லாமோ ஹெல்ப் பண்ணா. அதை வெச்சுண்டு கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணியாச்சு. ஆனா, பாருங்கோதாலி மட்டும் இன்னும் அமையல. நானும் யார் யார்கிட்டயோ கேட்டுப் பாத்துட்டேன். அமையல. அதனால, என் பொண்ணுக்கு திருமாங்கல்யம் அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்னா என்று மிகவும் தயக்கத்துடன் அந்த ஏழை பிராமணர் கேட்ட விதத்தைப் பார்த்தால், எவருக்கும் இரக்கப்படத்தான் தோன்றும்.

தன்னிடம் பொருள் இல்லை என்றாலும், பிறரிடம் யாசிக்கும்போது (கேட்கும்போது) எந்த அளவு நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டுமோ, அந்த அளவுக்கு நாசூக்காக இந்த ஏழை பிராமணர் கேட்ட விதம், பார்க்கின்றவர்களின் விழிகளில் கண்ணீரைத்தான் வரவழைத்தது.

தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் ஏழை பிராமணத் தம்பதியை அண்ணாந்து பார்த்தார் மகா பெரியவா.

பெரியவா எப்படியும் தனக்கு அருளி விடுவார் என்ற நம்பிக்கையுடன் கண்களில் ததும்பும் நீருடன், பரப்பிரமத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் ஏழை பிராமணர்.

ரெண்டு மூணு நாட்களுக்கு நீயும் ஒன் ஆத்துக்காரியும் மடத்துலயே தங்குங்கோ என்று அவரை நோக்கிப் பதில் சொல்லி விட்டு மகா பெரியவா எழுந்து தன் இருப்பிடத்தை நோக்கி நகர ஆரம்பித்தார். கைங்கர்யம் செய்யக் கூடிய அன்பர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

மகா பெரியவா சொன்னால், அது தெய்வத்தின் திருவாக்கு. எந்த நிலையிலும் அதை எவரும் மீற மாட்டார்கள்.

ஏழை பிராமணரும் மகா பெரியவா திருவாக்கை அப்படியே ஏற்றுக் கொண்டார். நடந்து செல்லும் மகா பெரியவாளைப் பார்த்து இரு கரம் உயர்த்தி வணங்கினார்.

நல்லவேளையாகத் திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் ஊரில் செய்தாகி விட்டது. இனிமேல் பெரிதாக எந்த ஜோலியும் இல்லை. எனவே, அவரும் அவரது மனைவியும் ஸ்ரீமடத்திலேயே தங்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் போயிற்று.

மகா பெரியவாளிடம் இருந்து அழைப்பு இல்லை.

இரண்டாவது நாள் போயிற்று.

மகா பெரியவாளிடம் இருந்து பதில் இல்லை.

ஏழை பிராமணர் ஸ்ரீமடத்துக்கு வந்த மூன்றாவது நாள். மதிய வேளை.

பிராமணரும் அவரது மனைவியும் ஸ்ரீமடத்தின் ஒரு ஓரமாக மணல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு வாரத்துக்குள் பொண்ணோட கல்யாணத்தை வெச்சுண்டு தாலியை எதிர்பார்த்து இந்த மகான்கிட்ட வந்தோம். பத்திரிகையைக் குடுத்தோம்படிச்சுப் பாத்துட்டு ஆசிர்வாதம் வழங்கினார். ரெண்டு மூணு நாள் தங்கச் சொன்னார். ரெண்டு நாள் ஓடிப் போச்சு. மூணாவது நாளும் வந்தாச்சு. இன்னிக்காவது தாலி கிடைக்குமா கிடைக்காதா? ஏன் நமக்கு இந்த சோதனை? என்று ஏழை பிராமணர் தன் மனைவியைப் பார்த்துப் பேசினார்.

மகா பெரியவாளை நம்பி வந்துட்டோம். அந்த தெய்வத்துக்குத் தெரியாதா, நமக்கு எந்த நேரத்துல குடுக்கணும்னு? நீங்கதானே அடிக்கடி சொல்வேள்அவரை நம்பிட்டா, அதன் பிறகு கவலையே படக் கூடாதுனு. இப்ப ஏன் யோசிக்கறேள்?

அவரது மனைவி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதேஸ்ரீமடத்துச் சிப்பந்தி ஒருவர் இவர்களை நெருங்கினார். “பெரியவா ஒங்களை ஒடனே கூட்டிண்டு வரச் சொன்னார்.

இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. ‘மகா பெரியவா அருள் கிடைக்குமா? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, கருணை வள்ளலிடம் இருந்து அழைப்பு வந்து விட்டதே!

இருவரும் உற்சாகமாக எழுந்தனர்.

சிப்பந்தி முன்னே நடக்க, இருவரும் அவனுக்குப் பின்னால் நடந்தார்கள்.

மகா பெரியவா வீற்றிருக்கக் கூடிய திருச்சந்நிதியில் கொண்டு போய் விட்டான் அந்த சிப்பந்தி.

ஏழை பிராமணரும் அவரது மனைவியும் மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தனர்.

எதிரில் ஒரு இடத்தைக் காட்டி அங்கே அமரச் சொன்னார்.

உட்கார்ந்தார்கள்.

மகா பெரியவாளுக்கு அருகே வடக்கில் இருந்து வந்திருந்த ஒரு மார்வாடி குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.

தவிர, அநேகமாக முப்பது பக்தர்கள் அங்கே இருக்கலாம்.

மிகவும் ஏகாந்தமான சூழ்நிலையில் வந்திருந்த பக்தர்கள் பக்திப் பாடல்களை உருக்கத்துடன் பாடி, மகா பெரியவாளை மெய்மறந்து தரிசித்துக் கொண்டிருந்தனர்.

மார்வாடி தம்பதியை மகா பெரியவா அழைத்து, “ஒங்க கையால இவாகிட்ட குடுத்துடுங்கோ என்று, ஏழை பிராமணரையும், அவரது மனைவியையும் அடையாளம் காண்பித்தார்.

அடுத்த விநாடி மார்வாடி தம்பதியர் எழுந்து கொண்டனர்.

தங்களைத்தான் மகா பெரியவா குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட ஏழை தம்பதியும் எழுந்து நின்றனர்.

மகா பெரியவாளுக்கு முன்னால் ஒரு தட்டில் இருந்த தாலியைத் தன் வலக் கையில் எடுத்துக் கொண்ட மார்வாடி, ஏழை பிராமணர் இருக்கும் இடம் அருகே ஒரு சில அடிகள் நடந்து சென்று, “இதை வாங்கிக்குங்கோஒங்க மகளோட கல்யாணம் ரொம்ப நல்லா நடக்கட்டும் என்று உணர்ச்சிப்பெருக்குடன் சொல்லஏழைத் தம்பதியர் என்ன ஏதென்று புரியாமல் மகா பெரியவாளைப் பார்த்தனர்.

ஒரு புன்னகையுடன்வாங்கிக்கோ என்பதாக மகா பெரியவா ஜாடை காட்டஏழைத் தம்பதியர் நன்றிப் பெருக்குடன் அதைப் பெற்றுக் கொண்டனர்.

பிராமணர்களின் சம்பிரதாயப்படி அமைந்த தாலி. சுமார் மூன்று பவுன் இருக்கும்.

இதை வாங்கிய ஏழைத் தம்பதியர், அப்படியே மீண்டும் மகா பெரியவாளிடம் கொண்டு வந்து வைக்கஅதில் சிறிதளவு குங்குமத்தைப் போட்டு ஆசிர்வதித்து, “எடுத்துக்கோ என்றார் முகம் மலர.

வடக்கில் இருந்த மார்வாடி தம்பதியர் எதற்கு இந்த ஏழைத் தம்பதிக்குத் தாலி தர வேண்டும்?

இந்த மார்வாடிக் குடும்பம், மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள். அவர்கள் வசிக்கிற ஊருக்குப் பெரியவா ஒரு முறை போனபோது ஆசி பெற்றிருக்கிறார்கள். அதுதான் மார்வாடி குடும்பத்தை மிக நல்ல நிலையில் இன்றைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது.

நான்கு மாதங்களுக்கு முன் மார்வாடிக்குத் திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. எத்தனையோ மருத்துவமனை ஏறி இறங்கி சிகிச்சை பார்த்தாகி விட்டது. ஆனால், பலன் இல்லை.

வீட்டுக்கு வந்தால் படுத்த படுக்கை ஆகிப் போனார். இயல்பு நடவடிக்கை அனைத்துமே பாதித்து விட்டது. வீட்டுக்கு வந்து பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், ‘உயிர் பிழைப்பது சிரமம்எல்லாம் பகவான் விட்ட வழி என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

அப்போதுதான் மார்வாடியின் மனைவி தன் வீட்டு பூஜையறையில் மகா பெரியவா படத்துக்கு முன் போய் நின்று வேண்டி இருக்கிறாள். ‘என் கணவர் இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு, குணமாகி விட்டார் என்றால், மூன்று பவுனில் ஒரு தாலியைத் தயார் செய்து உங்களிடம் அர்ப்பணிக்கிறேன். ஒரு ஏழையின் கழுத்தில் தாலி ஏறட்டும். எனக்கு தாலி பாக்கியத்தை வழங்குங்கள் என்று பிரார்த்தித்திக்கிறார்.

இதன் பலனாக, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அடுத்த நாளே மார்வாடி எழுந்து உட்கார்ந்து, இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாராம். ஒரே நாள் பொழுதில் பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்து விட்டார் பெரியவா.

நேர்ந்து கொண்ட பிரார்த்தனையை செய்து முடிக்க குடும்பத்துடன் புறப்பட்டு வந்து விட்டார்களாம். தாங்கள் தயார் செய்து கொண்டு வந்த தாலியையும் மகா பெரியவாளிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான், ஏழைத் தம்பதியரை வரவழைத்திருக்கிறார் மகா பெரியவா.

என்னே ஒரு கருணை

என்னே ஒரு ஞான திருஷ்டி!

மகா பெரியவா திருச்சந்நிதியில் தாங்கள் சமர்ப்பித்த தங்கத் தாலி, உடனுக்குடன் உரியவரைச் சேர்ந்து விட்டது என்பதை அறிந்ததும், மார்வாடி தம்பதியருக்கு அத்தனை சந்தோஷம்.

அதுவும், தாங்கள் இருக்கும்போதே மகா பெரியவா அருளுடன் சேர்ப்பிக்கப்பட்டதில் கூடுதல் மகிழ்ச்சி.

மார்வாடி தம்பதியர் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.

தாலியைப் பெற்றுக் கொண்ட தம்பதியர், மகளது திருமணமே பூர்த்தியான சந்தோஷத்தில் புறப்படுகின்றனர்.

இதுதான் மகா பெரியவாளின் குருவருள்.